கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 மார்ச், 2012

கார்ட்டூன்களின் மரணம்-கார்ட்டூனிஸ்ட் பாலா

தோராயமாக 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸின் அடர்ந்த வனப்பகுதியிலிருந்த குகை ஒன்றுக்குள் மனிதக்கூட்டம் ஒன்று பதட்டத்தோடு கூடியிருந்தது. அவர்களுக்கு முன் குகையின் சுவரில் ஒருவன்(ள்) கற்களால் எதையோ கிறுக்கி கொண்டிருந்தான்(ள்). அந்த கிறுக்கல் முடிந்திருந்த போது அது ஒரு பயங்கர மிருகத்தின் உருவமாக இருந்தது. தன்னை விரட்டிய ஒரு பயங்கர மிருகத்தைப் பற்றி தன் சகாக்களுக்கு எச்சரிக்கை செய்ய குகையின் சுவரில் முதன் முதலில் கிறுக்கிய அந்த ’மிஸ்டர் எக்ஸ்’ தான் இந்த உலகின் முதல் கார்ட்டூனிஸ்ட். `கார்ட்டூன்களின் அடிப்படையான விசயத்தை எளிமைப்படுத்தி சொல்வது’ என்பதின் மூலமே குகை ஓவியங்கள் தான்.




இந்தியாவுக்குள் நுழைந்த வெள்ளையர்கள் போலவே கார்ட்டூன் கலைவடிவமும் வெளிநாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் உட்பட பலர் இருந்தாலும் பிரிட்டிஷ் கார்ட்டூனிஸ்ட் `டேவிட் லோ’ தான் அரசியல் கார்ட்டூன்களின் தந்தையாக பார்க்கப்படுகிறார். அவரின் கார்ட்டூன்கள் ஹிட்லரை தூங்க விடாமல் செய்தன. டேவிட் லோவை கொலை செய்ய ஹிட்லர் உத்தரவிடும் அளவுக்கு இருந்தன அவரின் கார்ட்டூன்கள். வட இந்திய பத்திரிகைகள் வெளிநாட்டு பத்திரிகைகளில் இருந்த அந்த கார்ட்டூன் வடிவத்தை பயன் படுத்த ஆரம்பித்தன. அப்படித்தான் பாரதியும் தமிழ் இதழியலுக்கு கார்ட்டூனை அறிமுகப்படுத்தினார். ஆனால் சுதந்திரம் வாங்கும் வரை ஒன்று பட்டு வெள்ளையர்களுக்கு எதிராக வீராவேசமாக எழுதிக்கொண்டிருந்த ஊடகங்கள் பிற்பாடு சுதந்திரம் ஜனநாயக மன்னர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டப்பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆனது. அதோடு சேர்ந்து கார்ட்டூன்களும் காணாமல் போனது.



இந்தியாவில் உங்களுக்குத் தெரிந்த கார்ட்டூனிஸ்ட்டுகளின் பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்டால், சங்கர், ஆர்.கே.லக்ஷ்மண் என்று ஆரம்பித்து நீஙகள் சொல்லப்போகும் பெயர்களின் எண்ணிக்கையை பத்து விரல்களுக்குள் அடக்கி விட முடியும். நூற்றிப் பத்துகோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில் கண்ணில் விளக்கெண்ணையை விட்டு எண்ணினால் கூட மொத்த கார்ட்டூனிஸ்ட்டுகளின் எண்ணிக்கை வெறும் 250க்குள் முடிந்து விடும். ஏன் இந்த தொழிலில் மட்டும் இவ்வளவு குறைவானவர்கள் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தால், முடிவில் ஜனநாயக மன்னர்களின் அடாவடி அரசியலும், நான்காவது தூண்களின் களவாணித்தனமும் பல்லிளித்துக் கொண்டிருப்பதைக் காண முடியும்.



இந்தியாவின் நான்காவது தூணாக பத்திரிகைத் துறை வர்ணிக்கப்படுவது என்பதே பயங்கர காமெடியானது. இந்திய ஊடகங்கள் ஒன்றும் பெரிய புரட்சிகரமான சிந்தனையோடு செயல்பட்டதில்லை. இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான சாதி என்ற அசிங்கத்தின் அடிப்படையில், கல்வி அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே சொந்தம் என்று பிரம்மன் எழுதித் தொலைத்துவிட்டதன் அடிப்படையில் கல்வியறிவு பெற்ற அந்த சாதியினர் மட்டுமே ஊடகத்துறைக்குள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இன்று வரை நிலை அது தான். ஊடகத்தின் பலம் என்ன என்பதை நன்கு அறிந்தவர்களும் அவர்கள் மட்டுமே. அதனால் தான் வெள்ளையர்களுக்கு எதிராக தேசப்பற்றுடன் எழுதியவர்கள் சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்கள் பற்றியோ, இந்து மதவெறியர்களால் வேட்டையாடப்படும் சிறுபான்மையினர் குறித்தோ அக்கறை கொண்டு செய்திகள் வெளியிடுவதில்லை.



முன்பெல்லாம் ஒரு பத்திரிகையை தொடங்குபவர்கள் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவராகவும், ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் இருப்பார்கள். அவர்களே ஆசிரியராகவும் முதலாளிகளாகவும் இருப்பது அந்த பத்திரிகையின் வெற்றிக்கு கூடுதல் சிறப்பைத் தந்தது. ஆனால் பிற்பாடு பத்திரிகை ஒரு பிஸினஸ் ஆன பிறகு அது ஒரு கம்பெனி போல் செயல் பட ஆரம்பித்தது. விளைவு பத்திரிகையாளர்களின் பணி என்பது எட்டு மணிநேரம் பணிபுரியும் ஒரு கிளார்க் வேலை போல் மாறியது. எல்லாம் வியாபாரமயமானது. விற்பனையும் விளம்பரமும் மட்டுமே பெரிதாக கவனத்தில் கொள்ளப்பட்டது. நேர்மை என்பது காமெடியானது. சமூக அக்கறை கொண்டவர்கள் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு பதிலாக பத்திரிகையாளனாக மாறினால் காசு பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் பத்திரிகையாளர்களானார்கள். இன்று கிராமப்புறங்களில் பத்திரிகை படிக்கும் சாதாரண ஒரு வாசகரிடம் கேட்டால் கூட, பத்திரிகையில் செய்தி வருவதற்கு நிருபருக்கு `கவர்’ கொடுக்க வேண்டும் என்று கூறுவார். அந்தளவுக்கு பத்திரிகைத் துறை கறை பட்டுப்போனது. பத்திரிகையாளனின் நேர்மை காணாமல் போகும் பட்சத்தில் அந்த பத்திரிகையின் வீரியமும் காணாமல் போகும். அந்த வகையில் ஒரு பத்திரிகையின் வீரியங்களில் ஒன்றான தலையங்கமும், கார்ட்டூன்களும் காணாமல் போகும்.



ஒரு நாளிதழில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான எழுத்துகளுக்கு நடுவில் ஒரு கருப்பு கட்டத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு கோடுகள் ஒரு வாசகனை ஈர்த்து விடக்கூடிய வல்லமைக் கொண்டது. வாசகன் தலையங்கத்தையோ, ஏதாவது ஒரு செய்தியை கூட படிக்கத் தவறலாம். ஆனால் ஒரு கார்ட்டூனை பார்க்காமல் இருக்க மாட்டான். அந்தளவுக்கு பலம்வாய்ந்தது . படிக்காத பாமர மக்களுக்கு கூட எளிதாக அரசியலை புரிய வைக்கக் கூடிய எளிமையான ஊடக வடிவம் அது. பக்கம் பக்கமாக தலையங்கத்தில் எழுதி சொல்லும் விசயத்தை ஒரு நான்கு கோடுகளில் ஒரு கார்ட்டூனிஸ்ட் சொல்லிவிட முடியும். அதனாலயே கார்ட்டூனை அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் உன்னிப்பாக கவனிப்பதுண்டு.



ஒரு பத்திரிகையில் தலையங்கம் மன்னர் என்றால் கார்ட்டூன் என்பது அவருக்கு பக்கபலமாக வரும் தளபதி போன்றது. ஒரு வாசகனுக்கு ஒரு விசயத்தை எளிமைப்படுத்தி சொல்ல வேண்டுமானால் சொல்பவருக்கு குறைந்த பட்ச விசயம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும், காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்தாளருக்கும் எப்படி அரசியல் பார்வை இருக்க வேண்டுமோ அதே போல் ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கும் அரசியல் பார்வை இருக்க வேண்டும். அரசியலையும், அதன் ஒவ்வொரு உள்ளரசியல்களையும் தெரிந்து கொள்ள அவர்கள் தொடர்ச்சியாக படிக்க வேண்டும். சித்தாந்தத் தெளிவு வேண்டும். சித்தாந்தமற்றவர்களால் கார்ட்டூனிஸ்ட்டாக முடியாது. வெறும் ஓவியர்களாகலாம். ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பவன் தான் வரைந்த அந்த கருப்பு கட்டத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் தான் மட்டுமே சொந்தக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் முன்பும் இப்போதும் பெருவாரியாக தமிழக பத்திரிகைகளில் கார்ட்டூனுக்கான ஐடியாக்களை அந்த பத்திரிகைகளின் ஆசிரியரும் ஆசிரியர் குழுவினரும் டிஸ்கஷன் செய்து அதை ஓவியரிடம் சொல்லி வரைந்து கார்ட்டூன் என்ற பெயரில் வெளியிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. தனித்துவமான கார்ட்டூனிஸ்ட்டுகள் தமிழ் இதழியல் சூழலில் அதிகம் வராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.



பிரஷை பிடித்து படம் வரைவதால் கார்ட்டூனிஸ்ட்டும் ஓவியர்களும் ஒன்று என பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் `படம் வரைய தெரிந்த ஒரு பத்தி எழுத்தாளர் தான் கார்ட்டூனிஸ்ட்’. வெறும் பத்தி எழுத்தாளர் எழுத்துகளை பக்கங்களில் நிரப்புகிறார். ஆனால் கார்ட்டூனிஸ்ட் தான் எழுத வேண்டிய எழுத்துகளை கோடுகளாக்கி சொல்ல வேண்டிய விசயத்தை இன்னும் எளிமைப்படுத்துகிறார் என்பதே உண்மை.



கலை மக்களுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய பெருவாரியான ஓவியர்களும், நவீன ஓவியர்களும் கலை கலைக்கானது என்ற பெயரில் ’கான்வாஸ் பிசினஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். கார்ட்டூனிஸ்ட்டுகளையும், இந்த வியாபாரிகளையும் ஓவியர்கள் என்ற ஒரு புள்ளியில் இணைப்பதே அபத்தமானது. மக்கள் பிரச்னையைப் பேசாத ஓவியர்கள் கொண்டாடப்படுவார்கள். விருதுகள் குவியும். ஆனால் கார்ட்டூனிஸ்ட்டுகளின் நிலை அப்படி அல்ல. அவர்கள் மக்கள் பிரச்னையை பேசுவதால் அதிகாரவர்க்கத்தினருக்குப் பிடித்தமானவர்களாக இருப்பதில்லை. எல்லோரையும் விமர்சிப்பதால் யாரும் அவர்களை கொண்டாடுவதுமில்லை. ஓவியங்கள் புரியவில்லை என்றாலும் அலங்காரத்திற்காகவும், வியாபாரத்திற்காகவும் வாங்கி வீட்டில் மாட்டி வைப்பார்கள். ஆனால் கார்ட்டூன்களை யாரும் வாங்க மாட்டார்கள். கலை கலைக்காக என்று கூவும் ஓவியர்களுக்கு, கலை மக்களுக்கானது என்று செயல் படும் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்குமான வித்தியாசம் இது தான்.



கார்ட்டூன்களால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எரிச்சலடைவார்கள். முந்தைய தலைமுறை தலைவர்கள் ஓரளவுக்கு அரசியல் நாகரீகம் கொண்டவர்கள் என்பதால் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. அதுவுமில்லாமல் அப்போது பத்திரிகைகளில் புகைப்படங்கள் வருவது என்பது பெரிய விசயம். அந்தச் சூழலில் கார்ட்டூனிலாவது தனது முகம் வருகிறதே என்ற உள்ளூர மகிழ்ச்சியும் அவர்களுக்கு இருந்திருக்க கூடும் என்பதால் கார்ட்டூன்களில் வெளிப்படும் விமர்சனங்களைத் தங்களுக்கான விளம்பரமாக பாவித்திருக்க கூடும். ஆனால் இப்போது அதிகாரத்திலிருப்பவர்கள் விமர்சனங்களைத் தாங்கக் கூடியவர்கள் அல்ல. உடனே பத்திரிகை அலுவலகத்துக்கு டாடா சுமோக்களை (எவ்வளவு நாட்களுக்குத் தான் ஆட்டோ என்று எழுதுவது) அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஒரு ஜோக்குக்குக் கைது செய்யப்பட்டதெல்லாம் இந்த அடிப்படையில் தான். இந்த மாதிரியான அதிகாரத்தின் மிரட்டல்களினால் ஏற்பட்ட அச்சத்தின் அடிப்படையிலேயே கார்ட்டூன்கள் என்பது ஒரு சம்பிரதாயமான பக்கமாக மாற்றப்பட்டது. அதன் வீரியம் காயடிக்கப்பட்டு மொன்னையாக்கப்பட்டது.



அதனால் தான் இன்று ”எதுக்குங்க வம்பு” என்று பெருவாரியான பத்திரிகைகளில் கார்ட்டூன்கள் வருவதில்லை. அதற்கு பதிலாக ஜோக்குகளை அதிகளவில் வெளியிடுகிறார்கள். (விகடனில் மதன் சாரின் `ஜோக்குகள்’ மட்டும் பிரமாதமாக இருந்ததற்குக் காரணமும் இது தான்.) அப்படியே இருந்தாலும், எங்கள் பத்திரிகையிலும் கார்ட்டூன்கள் வருகிறது என்பதைக் காட்டுவதற்காக போனால் போகிறது என்று ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அதிலும் ஒரு மொக்கையான கார்ட்டூனும் இருக்கும். வெறும் சிரிப்பு தான் கார்ட்டூன் என்று ஒரு தப்பான கற்பிதம் இருக்கிறது. கார்ட்டூனில் ரௌத்ரம் இருக்க வேண்டும். அந்த மாதிரியான கோடுகள் மட்டுமே மக்களை மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக தீப்பந்தங்களைத் தூக்க வைக்கும்.



பத்திரிகையில் எழுத்துத் துறை மட்டுமல்லாது ஓவியத்துறையிலும் ஆதிக்கச்சாதியினரே கொடிகட்டிய நிலை இப்போது கொஞ்சம் மாறி இடைநிலை சாதியினரும் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்களின் சிந்தனை ஆதிக்கச்சாதியின் சிந்தனையை ஒத்ததாகவே இருக்கிறது. அதே போல் பத்திரிகையின் தலைமைப் பொறுப்பு என்பது எப்போதும் ஆதிக்கச்சாதியினர் வசமே இருந்து வருகிறது. இவையெல்லாம் ஒரு நேர்மையான ஊடகங்கள் உருவாவதற்கான தடைக்கற்கள்.



ஆர்.கே.லக்ஷ்மனைத் தவிர்த்து இந்திய கார்ட்டூன் வரலாறை எழுத முடியாது. அவரது பொது ஜனத்திற்குப் பூனாவில் சிலை வைத்திருப்பது என்பது மட்டுமே இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட்டுக்குக் கிடைத்த அதிகபட்ச கவுரவம். அதுவும் கூட அவர் ஆங்கில ஊடகத்தில் இருந்ததால் மட்டுமே சாத்தியமானது. தன்னுடன் சக கார்ட்டூனிஸ்ட்டாகக் கார்ட்டூன் வரைந்து கொண்டிருந்த பால்தாக்ரேவை லக்ஷ்மன் கார்ட்டூன் வரைந்து கடுப்பேற்றியிருக்கிறார் என்பதே சுவராஸ்யமானது.



அவர் போட்ட ஒரு பாக்கெட் கார்ட்டூன் தான் இன்று பாரத ரத்னாவுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும் சச்சினை சிக்கலில் மாட்டிவிட்டது. இப்படி லக்ஷ்மன் கார்ட்டூனுக்கானப் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். புதிய கார்ட்டூனிஸ்ட்டுகள் யாரும் லக்ஷ்மன் பாதிப்பில்லாமல் வரமுடியாது. ஆனால் பிற்பாடு தங்களுக்கான ஒரு தனித்தன்மையை உருவாக்குவதில் தான் ஒரு கார்ட்டூனிஸ்ட் முழுமையடைய முடியும்.



தமிழகத்தில் எனது சீனியர்கள் மதன், மதி உள்ளிட்டோரின் கார்ட்டூன்கள் ரசிக்கக் கூடியவைகளாக இருந்தாலும், தமிழகத்தில் கார்ட்டூன் போராளி என்று ஒருவரை குறிப்பிட வேண்டும் என்றால் அது நிச்சயமாக `கார்ட்டூனிஸ்ட் உதயன்’ மட்டுமே. அவரது கோடுகள் சமரசமற்று எல்லோரையும் விமர்சித்தன. அவரின் கோடுகள் அழகற்றவையாக சிலருக்கு தோன்றலாம். ஆனால் அழுத்தமானவை, வீரியமானவை. மக்களுக்கானவை. உதயனின் அகால மறைவு என்பது தமிழ் பத்திரிகை உலகத்திற்குப் பெரும் இழப்பு. அவர் இன்றிருந்திருந்தால் என்னைப்போன்ற ஜூனியர்களுக்குப் பெரும் உற்சாகமாக இருந்திருக்கும்.



கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கான மாநிலம் என கேரளாவைச் சொல்லலாம். புதிய தலைமுறையும் பழைய தலைமுறையும் அவ்வளவு ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். இந்தியா முழுக்க ஆங்கில இதழ்களில் அந்த மாநில பத்திரிகையாளர்கள் போலவே கார்ட்டூனிஸ்ட்டுகளும் பரவலாக பரவிக்கிடக்கிறார்கள்.



கார்ட்டூன்களின் நிலை இந்தியாவின் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மிக மோசமாக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணமாக அரசியல்வாதிகள் கட்சி தொடங்கிய கையுடன் ஒரு பத்திரிகையும் டிவி சேனலையும் ஆரம்பித்து விடுவது, அல்லது பத்திரிகைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவது. அப்புறம் எங்கிருந்து பத்திரிகையாளர்கள் உருப்படுவது? அரசியல்வாதிகள் ஆரம்பிக்கும் பத்திரிகையில் எப்படி ஒரு நேர்மையான கார்ட்டூனிஸ்ட்டுக்கு வேலை கிடைக்கும்? தமிழகத்தில் தினமணியைத் தவிர்த்து தலையங்கமும், கார்ட்டூனும் வெளிவரும் நாளிதழ் வேறு எதுவும் இல்லை.



தமிழகத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கான பத்திரிகையாக மாறிக்கொள்ளும், எவரைக்கண்டும் பயப்பட வேண்டிய அவசியமில்லாத, பெரும்பான்மையான மக்கள் படிக்கும் தினத்தந்தியில் கார்ட்டூன் வராமலிருப்பதே கார்ட்டூன்களைக் கண்டு அதிகாரத்திலிருப்பவர்கள் எவ்வளவு எரிச்சலடைகிறார்கள் என்பதற்கு உதாரணம். முன்பு கருத்துப்படம் என்று போட்டுக்கொண்டிருந்தார்கள். வெறும் செய்திகளை சொல்லும் ஓவியமாக அதைப் பார்க்கலாமே தவிர அது கார்ட்டூனாகாது. கார்ட்டூன்களில் செய்தியைத் தாண்டிய விமர்சனம் இருக்க வேண்டும்.



ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் கோடுகள் என்பது ஒரு வரலாற்றின் பதிவுகளாகும். கார்ட்டூன் வரைவது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. படிப்பறிவற்ற ஓவியத்தொடர்பு அற்ற ஒரு குடும்பத்திலிருந்து வெளிவந்த முதல் தலைமுறையான நானே கார்ட்டூனிஸ்ட் ஆகும் போது மற்றவர்கள் ஆக முடியாதா என்ன?



பத்திரிகைகளின் அழிவிலிருந்தே கார்ட்டூன்களின் அழிவும் தொடங்குகிறது என்பதால் அடுத்த தலைமுறையினருக்குக் கார்ட்டூன்களைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்த பெயரை எடுக்க வேண்டுமா என்று யோசிக்கிற நிலையில் தான் இன்றைய கார்ட்டூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். ஏதோவொரு கார்ட்டூனிஸிட்டுகளின் மரணம் போலன்று கார்ட்டூன்களின் மரணம். அது வரலாற்றின் கருத்துச் சுதந்திரத்திற்கான மரணமாக பார்க்கப்படவேண்டும்.



04 ஜனவரி, 2012

காந்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த மாபெரும் துரோகம்

காந்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த மாபெரும் துரோகம்

http://www.vimaladhasan.wordpress.com/




“தங்களுக்கு அரசியல் பாதுகாப்புகள் அளிக்கப்படவேண்டுமென்ற தீண்டப்படாதவர்களின் கோரிக்கைகளை வட்டமேசை மாநாட்டில் திரு காந்தி எதிர்த்தார். தீண்டப்படாதவர்களின் குறிக்கோளை முறியடிக்க அவர் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார். அவர்களது கோரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள வாத வலிமையை பலவீனப்படுத்துவதற்கும் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் முஸ்லீம்களை தமது பக்கம் ஈர்ப்பதற்கு முஸ்லீம்களது 14 அம்சக் கோரிக்கைகள் முழுவதையும் ஏற்க முன்வந்தார். சிறுபான்மையினர் துணைக்குழுக் கூட்டத்தில் பேசும்போது திரு காந்தி பின்வருமாறு கூறினார்: “குழு தனது அங்கீகாரத்தை அளிக்குமானால் தீண்டப்படாதோரின் கோரிக்கையை எதிர்க்க நான் தயார்.” என்றார். ஷெட்யூல்டு வகுப்பினரின் கோரிக்கைகளை எதிர்ப்பதற்கு பிரதியாக முஸ்லீம்களின் 14 அம்சக் கோரிக்கைகளை முற்றிலுமாக ஏற்பதற்கு முன்வந்து சிறுபான்மைக்குழுவின் முடிவை முறியடிப்பதற்கு திரு காந்தி முயன்றார். இது திரு காந்தி செய்த மிகப்பெரிய தவறாகும்.



இதில் அவர் மிகவும் சூட்சுமான சூழ்ச்சி முறையை கையாண்டார். ஒன்று தங்களது 14 அம்சக் கோரிக்கைகளை ஏற்க திரு காந்தி முன்வந்ததை ஏற்று, தீண்டப்படாதவர்களின் கோரிக்கைக்கு அளிக்கும் ஆதரவை முஸ்லீம்கள் திரும்பப் பெறவேண்டும். அல்லது தீண்டப்படாதவர்களுடன் சேர்ந்துகொண்டு தமது 14 அம்சக் கோரிக்கைகளை இழக்க வேண்டும் என்ற கடினமான சோதனையை முசல்மான்கள்முன் அவர் வைத்தார். முடிவில் திரு காந்தியின் சூழ்ச்சி படுதோல்வி அடைந்தது. முசல்மான்கள் தங்களது 14 அம்சக் கோரிக்கைகளை இழக்கவுமில்லை. தீண்டப்படாதவர்களும் தங்களது குறிக்கோளில் தோல்வியடையவுமில்லை. எனினும் இந்த நிகழ்ச்சி திரு காந்தியின் நயவஞ்சகத்திற்கு ஒரு கண்கண்ட சாட்சியாக அமைந்து உள்ளது.



ஒருவர் மற்றவருக்கு அளித்த வாக்குறுதியை மீறும்படி பண்பற்ற முறையில் தூண்டும் ஒரு மனிதரை, ஒருவரை நண்பர் என்று அன்போடு, பரிவோடு அழைத்துவிட்டு பின்னர் அவர் முதுகில் குத்துவதற்குத் திட்டமிடும் ஒருவரை வேறு எந்தமுறையில் வர்ணிக்கமுடியும்? இத்தகைய ஒருவரை நேர்மையானவர், நாணயமானவர் என்று தீண்டப்படாதவர்கள் எப்படி கருதமுடியும் ? தீண்டப்படாதோருக்கு தனிப்பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே காந்தி எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து அதைத் தடுத்துவிட்டார். “



பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர்.



(நூல் தொகுப்பு 10)

04 டிசம்பர், 2011

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000


நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.


மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.



கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)


கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.
— with Zia Ul Haq.

08 நவம்பர், 2011

"இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது"-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

இந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் சூழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது. மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது? இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது? இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும்? சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.' நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா'க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும்? பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.

பவுத்த மதத்தில் 75 சதவிகித பிக்குகள் பார்ப்பனர்களாக இருந்தார்கள். 25 சதவிகிதம் சூத்திரர்களும் மற்றவர்களும் இருந்தனர். ஆனால், புத்தர் சொன்னார் ‘பிக்குகளே! நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். அந்தந்தப் பகுதிகளில் ஓடும் ஆறுகள் தனித்தனியாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அவை கடலில் சங்கமிக்கும்போது, தங்களின் அடையாளத்தை இழந்து விடுகின்றன. அவை ஒன்றாகக் கலந்து விடுகின்றன. பவுத்த சங்கம் கடலைப் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமம். எல்லாரும் கடலில் கலந்த பிறகு கங்கை நதி தண்ணீரையோ, மகாநதி தண்ணீரையோ தனியாக அடையாளப்படுத்திப் பார்க்க முடியாது. அதேபோல, நாம் பவுத்த சங்கத்தில் சேர்ந்த பிறகு நாம் நம்முடைய சாதிகளை இழந்து சமமாகிறோம்.' இத்தகைய சமத்துவத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தை மாமனிதர் புத்தர் மட்டுமே செய்தார்.

சிலர் என்னைக் கேட்கிறார்கள்: மதம் மாறுவதற்கு இவ்வளவு நாட்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மதத்தை வலியுறுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது தனி ஒரு மனிதனின் பணியும் அல்ல. மதத்தைப் பற்றி சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். உலகில் யாரும் சுமக்காத அளவுக்கு நான் பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், நான் திட்டமிட்ட இந்தப் பணியை முடித்தே தீருவேன். ஒரு மகர் பவுத்தராக மாறினால் என்ன நடக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறு கேட்கக் கூடாது. அது ஆபத்தானது. உயர்ந்த வசதியான வகுப்பினருக்கு மதம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பெரிய பங்களாக்களும், அவர்களுக்கு வேலை செய்ய வேலையாட்களும், பணமும், சொத்தும், மரியாதையும் கிடைக்கும். இத்தகைய மனிதர்கள் மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஏழை மனிதன் நம்பிக்கையில்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையின் வேரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அவன் இழக்க நேரிட்டால், அவனுடைய வாழ்க்கை என்னவாகும்? மதம் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயப்படாமல் இருக்க, நம்பிக்கையான வாழ்க்கையை அளிக்கிறது. எனவேதான் ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள், மதத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.


(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)

தலித்தியத்தை ஒடுக்கும் தமிழ் தேசிய உள்ளடக்க அரசியல்

"ஹிந்து ஹிந்துஸ்த்தான்"  "திராவிட திராவிடர் திராவிடநாடு" "தமிழ் தமிழர் தமிழ் தேசியம்"  எனும் பெயரில் ஆதிக்க ஜாதிகள் நடத்தும் ஆதிக்க வெறி அரசியல். நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாக்கியர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல. நாங்கள் தனி சமூகம் என்று சொன்ன போது, நீங்களும் இந்துக்கள் தான், நீங்கள்  ஒடுக்கப்பட்ட இந்துக்கள் உங்களை தனித்து பார்ப்பது இந்து சமூகத்தை பிரிப்பது என்று ஜாதி இந்துக்கள் இந்து மத ஒற்றுமையை பேசினார்கள்.ஹிந்து ஹிந்துஸ்தான்  தேசியத்தை எதிர்த்தவர்களை ஆங்கிலேயர்களின் அடிவருடிகள் தேச துரோகிகள் என்று பட்டம் கட்டி ஒடுக்கினர். ஜாதி இந்துக்களே கோயில் நுழைவு போராட்டம் நடத்தி சாக்கிய (தலித்) மக்களை இந்துக்களாக ஆக்கினார்கள். கோயில் நுழைவு போராட்டம் நடத்த அழைப்பு விட்டபோது, இந்துக்களே அல்லாத எங்களுக்கு கோயில் நுழைவு எதற்கு என்று கேட்டார்கள் சாக்கிய தலைவர்கள். கோயில் நுழைவு போராட்டம் நடத்தி வீரர்கள் ஆனார்கள் ஹிந்து மத பெரியார்கள். ஜாதி இந்துக்கள் தங்களை திராவிடர்கள் தமிழர்கள் என்று இன அரசியல் பேசியபோது நாங்கள் தமிழர்கள் அல்ல திராவிடர்கள் அல்ல அவர்களுக்கும் மூத்த குடிகள் என்று திராவிட தமிழ் இன வெறி அரசியலுக்கு எதிர் குரல் எழுப்பினார்கள் சாக்கிய மக்கள். திராவிட தமிழ் இன வெறியை எதிர்த்து குரல் கொடுத்தவர்களை இன துரோகிகள் என்றும் ஆரிய அடி வருடிகள்  என்றும் முத்திரை குத்தி அவர்களை அவமானப்படுத்தினர். மூத்த குடிகள் எனும் அர்த்தத்தில் சொல்லப்பட்ட ஆதிதிராவிடர்கள் ஆதிதமிழர்கள் எனும் வார்த்தைகளை. மூத்த தமிழர்கள் உண்மை தமிழர்கள் எனும் அழகிய வர்ணனைகளை உருவாக்கி ஹிந்து (மத) திராவிட (இன) தமிழ் (மொழி) எனும் பாசிச முகாம்களுக்குள்ளே அடைத்தனர். "ஹிந்து ஹிந்துஸ்த்தான்"  "திராவிட திராவிடர் திராவிடநாடு" "தமிழ் தமிழர் தமிழ் தேசியம்" எனும் பெயரில் ஆதிக்க ஜாதிகள் நடத்தும் ஆதிக்க வெறி அரசியலுக்கு ஒத்து போனவர்கள் எல்லாம் ஆதிக்க ஜாதியினரால் பெருமை படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் தான் உண்மையான சமூக போராளிகள் என்று பட்டங்கள் கொடுத்து பெருமைப்படுத்தப்படுகின்றனர். இன மொழி மத தேசியங்களுக்கு எதிரான, ஜன நாயகம், வர்க்க போராட்டம், ஜாதி எதிர்ப்பு என்பதெல்லாம் இந்திய தேசியம் அடைஞ்ச பிறகு நாமக்குள் பேசி தீத்துக்கொள்ளலாம் என்று சொல்லி சாக்கிய இயக்கத்தை ஒடுக்க்கியது போல தமிழ் தேசியம் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கின்றனர். ஹிந்து-திராவிட-தமிழ் எனும் உள்ளடக்க அரசியலில் சாக்கிய மக்களுக்கு சமபங்கு கிடைக்காது என போராடுபவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் பட்டங்கள் பிரிவினை வாதிகள், ஜாதிய வாதிகள், இன துரோகிகள், ஆங்கிலேயர்க்கும், ஆரியருக்கும். அடிவருடிகளான பச்சோந்திகள். ஆனாலும் இந்து திராவிட தமிழ் அரசியலில் சரணடையாத தலித்தியம் தனித்துவத்துடன் உயித்திருக்கிறது...

22 அக்டோபர், 2011

சோசலிஷம் எதற்காக? (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.
விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.
இரண்டாவதாக, சோசலிஷமானது ஒரு சமூக–அறநெறி முடிவை நோக்கி (towards social-ethical end) நெறிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், விஞ்ஞானத்தால் முடிவுகளை உருவாக்க முடியாது. மேலும் முடிவுகளை மனிதர்களுக்குள் புகட்ட அதைவிடவும் முடியாது. விஞ்ஞானம், அதிகப் பட்சமாக, சில முடிவுகளை எட்டுவதற்கான சாதனங்களை வழங்க முடியும். ஆனால் இத்தகைய முடிவுகள் தம்மளவில், உன்னத அறநெறி இலட்சியங்களைக் கொண்டுள்ள தலைவர்களின் சிந்தனையில் உருவானவையே ஆகும். சாராம்சமான, உந்துசக்தி மிக்க இந்தக் கருத்துகள் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டவுடனே, சமுதாயத்தின் மெதுவான பரிணாம வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற மக்கள் திரள் அக்கருத்துகளை ஏற்றுக் கொண்டு, முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் தங்களை அறியாமலேயே இதில் ஈடுபடுகின்றனர்.
இந்தக் காரணங்களினால், மானுடப் பிரச்சினைகள் என்று வரும்போது, விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான வழிமுறைகளைப் பற்றி அதிகமாக எடைபோட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமுதாய அமைப்பினைப் பாதிக்கின்ற பிரச்சினைகளின் மீது வல்லுநர்கள் மட்டுமே கருத்துக் கூறும் உரிமை பெற்றவர்கள் என நாம் கருதிவிடக் கூடாது.
மனித சமுதாயம் ஒரு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது, அதன் நிலைப்புத் தன்மை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது என்று அண்மைக் காலமாக எண்ணற்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தனிமனிதர்கள் தாம் சார்ந்த குழுவின்பால் – அது சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் – வெறுப்பும், பகைமையும் காட்டுவது இயல்பாய் உள்ளது. என்னுடைய கருத்தை விளக்கும் பொருட்டு என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் அண்மையில், அறிவாளியான சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒருவருடன், இன்னொரு போர் வருவதற்கான அபாயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கருத்தில் இன்னொரு போர் என்பது மனிதகுலத்தின் இருப்புக்கே மிக மோசமான ஆபத்தினை விளைவிக்கும். தேசங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு ஒன்றினால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்த மனிதர் மிகவும் அமைதியாக, நிதானமாக என்னிடம் சொன்னார்: ”மனித இனம் அழிந்து போவதை இவ்வளவு ஆழமாக எதற்காக நீங்கள் எதிர்க்கிறீர்கள்?”
ஒரு நூற்றாண்டு அளவிலான மிகக் குறுகிய காலத்துக்கு முன்னால் இதைப்போன்ற ஒரு கூற்றை இவ்வளவு அக்கறையின்றி எவரும் கூறியிருக்க முடியாது என என்னால் நிச்சயமாகக் கூற முடியும். தனக்குள்ளேயே ஒரு சமநிலைத் தன்மையை அடைவதற்கு வீணே போராடி, ஏறத்தாழ வெற்றி பெறுவதில் நம்பிக்கையை இழந்துவிட்ட ஒரு மனிதனின் கூற்றாகும் இது. வலிமிகுந்த தனிமையில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒருவரின் மன வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் யாது? இதிலிருந்து மீள்வதற்கு வழியுண்டா?
இத்தகைய கேள்விகளை எழுப்புவது எளிது. ஆனால், அக்கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையுடன் விடையளிப்பது கடினம். நமது உணர்வுகளும் முயற்சிகளும் எப்போதுமே முரண்பட்டும் தெளிவற்றும் உள்ளன. அவற்றை எளிய, சாதாரணச் சூத்திரங்களில் விளக்கிவிட முடியாது. இந்த உண்மையை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், என்னால் முடிந்த அளவுக்கு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில்கூற முயல்கிறேன்.
மனிதன் என்பவன் ஒரே நேரத்தில் தனிமனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். தனிமனிதன் என்ற நிலையில், அவன் தன் சொந்த விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டும், தன் உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும், அவனுடைய வாழ்க்கையையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறான். சமூக மனிதன் என்ற நிலையில், அவனுடன் வாழும் மனிதர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் பெறவும், அவர்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய துயரத்தில் பங்கு கொள்ளவும், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் விரும்புகிறான். இத்தகைய, வேறுபட்ட, அடிக்கடி மோதிக் கொள்ளும் முயற்சிகள் இருப்பதே ஒரு மனிதனின் தனிச்சிறப்பான பண்புக்குக் காரணமாக அமைகிறது. இவற்றின் குறிப்பிட்ட சேர்க்கையே ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு அகச் சமன்நிலையை அடைய முடியும், சமுதாயத்தின் நலனுக்குப் பங்காற்ற முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு உந்து சக்திகளின் ஒப்பீட்டுப் பலம், பிரதானமாக மரபு வழியில் நிர்ணயிக்கப்படுவது சாத்தியமே. ஆனால், ஒரு மனிதனில் முடிவாக வெளிப்படும் ஆளுமை, அவனுடைய வளர்ச்சியின்போது அவன் வாழ நேர்ந்த சூழல், அவன் வளர்ந்த சமுதாயத்தின் கட்டமைப்பு, அந்த சமுதாயத்தின் மரபு, அந்தச் சமுதாயம் குறிப்பிட்டவகை நடத்தை பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு ஆகியவற்றாலேயே பெருமளவு உருவாக்கப்படுகின்றது. தனிமனிதனைப் பொறுத்தவரை “சமுதாயம்” என்கிற அருவமான கருத்துருவின் (abstract concept) பொருள், அவனது சமகால மனிதர்களோடும், முந்தைய தலைமுறைகளின் அனைத்து மக்களோடும் அவன் கொண்டுள்ள நேரடியான மற்றும் மறைமுகமான உறவுகளின் ஒட்டு மொத்தத்தையே குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. “சமுதாயம்” என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பலகோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாகவுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது.
எனவே, தனிமனிதன் சமுதாயத்தின் மீது சார்ந்துள்ள தன்மையானது இயற்கையின் உண்மை என்பது வெளிப்படையாகும். எறும்புகள், தேனீக்கள் விஷயத்தில் நடந்ததைப் போல இந்த உண்மையை அழித்துவிட முடியாது. என்றாலும், எறும்புகள், தேனீக்களுடைய மொத்த வாழ்க்கையின் நிகழ்வுப்போக்கும் மிக நுண்ணிய அசைவுகள் வரைக்கும், கறாரான, பரம்பரை ரீதியான உள்ளுணர்வுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதே வேளையில், மனிதர்களின் சமூகப் பாங்கும், பரஸ்பர உறவுமுறைகளும் மிகவும் வேறுபட்டவையாகவும் மாறக்கூடிய இயல்புடையனவாகவும் இருக்கின்றன. நினைவிருத்தல், புதிய சேர்க்கைகளை உருவாக்கும் திறன், பேச்சுவழித் தகவல் தொடர்பென்னும் கொடை ஆகியவை மனிதர்களிடையே வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. இவை உடலியல் ரீதியான தேவைகளால் ஆட்டுவிக்கப்படுவதில்லை. இத்தகைய வளர்ச்சியின் அடையாளங்கள் மரபுகளிலும், சமூக நிறுவனங்களிலும், அமைப்புகளிலும், இலக்கியத்திலும், விஞ்ஞான, பொறியியல் செயல்பாடுகளிலும், கலைப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இது, ஒருவகையில், மனிதன் தன் சொந்த நடத்தை மூலமாக அவனுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதும், இந்த நிகழ்வுப் போக்கில் உணர்வு பூர்வமான சிந்தனையும், போதாமையும் ஒரு பங்கு வகிக்க முடிவதும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது.
மனிதன் பிறப்பின்போது, மனித இனத்துக்கே உரிய இயற்கையான வேட்கைகளுடன் பரம்பரை வழியான உடல் கட்டமைவைப் பெறுகிறான். இவற்றை நிலையானதென்றும் மாற்ற முடியாதது என்றும் நாம் கருத வேண்டும். அதோடுகூட, அவனுடைய வாழ்நாளில் தகவல் தொடர்பு மற்றும் பிற வகையான பல்வேறு தாக்கங்கள் மூலமாகச் சமுதாயத்துடன் தகவமைத்துக் கொள்வதிலிருந்து ஒரு கலாச்சாரக் கட்டமைவைப் பெறுகிறான். காலத்தின் ஓட்டத்தில் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய இந்த கலாச்சாரக் கட்டமைவுதான் தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுமுறையை மிகப் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றது. நடப்பிலுள்ள கலாச்சாரப் பாங்குகளைப் பொறுத்தும், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அமைப்பின் வகைகளைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை மிகப்பெரும் அளவுக்கு வேறுபட முடியும் என்பதை புராதனக் கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுவனவற்றை ஒப்பீட்டாய்வு செய்ததன் மூலம் நவீன மானிடவியல் நமக்குக் கற்பித்துள்ளது. மனித குலத்தை மேம்படுத்த முயன்று வருவோர் தமது நம்பிக்கைகளை இதன்மீது ஊன்றலாம்: மனிதர்கள் அவர்களுடைய உடல்கூறு அமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கவோ, கொடூரமான, தாங்களே விதித்துக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதற்கோ சபிக்கப்படவில்லை.
மனித வாழ்க்கையைச் சாத்தியமான வரையில் திருப்திகரமானதாக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு, சமுதாயத்தின் கட்டமைப்பும், மனிதனின் கலாச்சார அணுகுமுறையும் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமானால், சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்க முடியாதவாறு உள்ளன என்னும் உண்மையை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, எந்த வகையில் பார்த்தாலும், மனிதனின் உடலியல் ரீதியான இயல்பு, மாற்றத்துக்கு உட்படாதது. அதற்கும் மேலாக, கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூகநிலை வளர்ச்சிகள் இங்கே நிலைத்து நிற்கக் கூடிய நிலைமைகளை உருவாக்கி வைத்துள்ளன. தமது தொடர்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்கள் தேவைப்படுகின்ற, சற்றே நெருக்கமான மக்கள் தொகை கொண்ட சமுதாய அமைப்பில் தீவிரமான உழைப்புப் பிரிவினையும் மிக அதிகமாக மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையும் கட்டாயத் தேவையாகும். தனிமனிதர்களோ, ஓரளவு சிறிய குழுக்களோ முழுமையான தன்னிறைவுடன் வாழ முடிகின்ற காலம் – திரும்பிப் பார்த்தால் சொர்க்கமாய் இருந்த அந்தக் காலம் – போயே விட்டது. மனிதகுலம் இப்போதும்கூட உற்பத்தி மற்றும் நுகர்வு சார்ந்த பூமிவாழ் சமூகத்தையே கொண்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது.
என்னைப் பொறுத்தவரை நமது காலத்து நெருக்கடியின் சாராம்சம் என்ன என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் இப்போது வந்துவிட்டேன். அது தனிமனிதருக்கு சமுதாயத்தோடுள்ள உறவுநிலை பற்றியதாகும். தனிமனிதர் சமுதாயத்து மீதுள்ள தனது சார்புத் தன்மையை முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக உணர்கிறார். ஆனால், இந்தச் சார்புத் தன்மையை ஒரு சாதகமான அனுகூலமாகவோ, ஓர் இயற்கையான பந்தமாகவோ, ஒரு பாதுகாப்பான சக்தியாகவோ அனுபவத்தில் அவர் உணரவில்லை. மாறாக, அவருடைய இயல்பான உரிமைகளுக்கும் அவருடைய பொருளாதார வாழ்வுக்குமேகூட ஓர் ஆபத்தாகவே கருதுகிறார். மேலும், சமுதாயத்தில் அவர் வகிக்கும் இடம், அவரின் உள்ளார்ந்த ’தான்’ என்னும் தன்முனைப்பு உந்துதலை எப்போதும் வலியுறுத்துகின்ற நிலையிலேயே உள்ளது. அதே வேளையில், அவருடைய சமுதாய ரீதியான உந்து சக்திகள் இயல்பாகப் பலவீனமாகவே உள்ளன, படிப்படியாக நசிந்து வருகின்றன. அனைத்து மனிதர்களுமே, அவர்கள் சமுதாயத்தில் எத்தகைய அந்தஸ்தில் உள்ளவராயினும், இத்தகைய நசிவுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை அறியாமலேயே தமது சொந்தத் தன்னகந்தையின் கைதிகளாக இருக்கும் இவர்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும், தனித்து விடப்பட்டுள்ளதாகவும் உணர்கின்றனர். சூதுவாது இல்லாத, எளிய, பகட்டில்லாத முறையில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை குறுகியதாகவும் ஆபத்தானதாகவும் இருந்த போதிலும், மனிதன் சமுதாயத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண முடியும்.
[இன்றைய மனித சமூகத்தின்] கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க விடாமல் ஒருவர் மற்றவரைத் தடுப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர் என்பதை நம் கண்முன்னால் காண்கிறோம். பலாத்காரத்தின் மூலமாக அல்ல, மொத்தத்தில் சட்டப்படி நிலைநாட்டப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே இதனைச் செய்து வருகின்றனர். இந்தவகையில், உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அதாவது, நுகர்வுப் பண்டங்களையும் அதோடுகூட மூலதனப் பண்டங்களையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒட்டுமொத்த உற்பத்தி சக்தி அனைத்தும் சட்ட ரீதியாகவே தனிநபர்களின் தனிச்சொத்தாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
இனிவரும் விவாதத்தில், எளிமை கருதி, உற்பத்தி சாதனங்களின் உரிமையில் பங்கில்லாத அனைவரையும் “தொழிலாளர்கள்” என்று அழைக்க இருக்கிறேன், வழக்காற்றில் இச்சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை என்றபோதிலும். உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகின்ற நிலையில் உள்ளார். உழைப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளி உற்பத்தி செய்யும் புதிய பண்டங்கள் முதலாளியின் உடைமையாக ஆகின்றன. இந்த நிகழ்வுப்போக்கு பற்றிய சாராம்சமான கருத்து என்னவெனில், தொழிலாளி உற்பத்தி செய்த பொருள், அவருடைய கூலி இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். இரண்டும் உண்மை மதிப்பின் மூலமே அளவிடப்படுகின்றன. உழைப்புக்கான ஒப்பந்தம் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில், தொழிலாளி கூலியாகப் பெறுவது அவர் உற்பத்தி செய்த பண்டங்களின் உண்மையான மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. தொழிலாளியின் குறைந்தபட்சத் தேவைகள், உற்பத்தி வேலைகளுக்காகப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் முதலாளிக்குத் தேவைப்படும் உழைப்பு சக்தி ஆகியவற்றைக் கொண்டே [தொழிலாளியின் கூலி] நிர்ணயிக்கப்படுகிறது. கொள்கை அளவில்கூட, தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
தனியார் மூலதனம் ஒருசிலரின் கைகளிலேயே குவியத் தொடங்குகிறது. முதலாளிகளுக்கு இடையே நிலவும் போட்டி இதற்கு ஒரு காரணமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைப் பிரிவினையின் அதிகரிப்பும் சேர்ந்து, சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்களை விழுங்கிப் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைவதற்கு உதவுவதும் இன்னொரு காரணமாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் விளைவாக, தனியார் மூலதனத்தைக் கையில் வைத்துள்ள ஒருசிலரின் ஆதிக்க ஆட்சி உருவாகிறது. அதன் அளவிறந்த ஆற்றலை ஜனநாயக ரீதியில் அமைந்த ஒர் அரசியல் சமுதாயத்தால்கூடத் தீர்மானகரமாய்த் தடுத்து நிறுத்த இயலாது. இது உண்மை ஆகும். காரணம், தனியார் முதலாளிகள் பெருமளவு நிதியுதவி அளிக்கின்ற அல்லது பிறவகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் கட்சிகளே சட்டமன்றங்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. எந்த வகையில் பார்த்தாலும், வாக்காளர்களைச் சட்டமன்றங்களிலிருந்து பிரித்து விடுகின்றனர். இதன் விளைவாக, மக்களின் பிரதிநிதிகள் [என்று சொல்லப்படுகின்றவர்கள்] சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவுக்குக் காப்பாற்றுவதில்லை. மேலும், தற்போது நிலவும் சூழ்நிலையில், தனியார் முதலாளிகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ, பிரதான தகவல் சாதனங்களை (பத்திரிகை, வானொலி, கல்வி) தவிர்க்க முடியாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, ஒரு தனிக் குடிமகன் புறநிலையான முடிவுகளுக்கு வருவதோ, தனது அரசியல் உரிமைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதோ மிகமிகக் கடினம், பல நேரங்களில் நிச்சயமாக முடியாததும் ஆகும். மூலதனத்தின் மீதான தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தில் நிலவுகின்ற சூழலை இரண்டு பிரதானக் கோட்பாடுகளின் மூலம் இவ்வாறாக விளக்கலாம்: முதலாவதாக, உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதன் உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானது. என்றாலும், இந்த அர்த்தத்தில், கலப்பற்ற முதலாளித்துவ சமுதாயம் என எதுவும் கிடையாது. குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட கசப்பான அரசியல் போராட்டங்களின் மூலமாக, சில வகையினத் தொழிலாளர்களுக்குச் சற்றே மேம்பட்ட வடிவில் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தம்” பெற்றுத் தருவதில் வெற்றி கண்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இன்றைய பொருளாதாரம், “கலப்பற்ற” முதலாளித்துவத்திலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உற்பத்தியானது இலாபத்துக்காக செய்யப்படுகின்றது, பயன்பாட்டுக்காக அல்ல. வேலை செய்ய முடிகிற, வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் எப்போதும் வேலை கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கின்ற சட்டம் எதுவுமில்லை. எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்ற பயத்திலேயே தொழிலாளி வாழ்கிறான். வேலையற்ற தொழிலாளர்களும் மிகக் குறைவான கூலி பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தைக்கு உதவ மாட்டார்கள். இதன் காரணமாக, நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மிகுந்த இன்னலே இதன் விளைவாகும். தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரின் வேலைச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் மிகுதியான வேலையின்மைக்கே வழி வகுத்துள்ளது. இலாப நோக்கம், முதலாளிகளுக்கு இடையேயான போட்டியுடன் சேர்ந்து, மூலதனக் குவிப்பிலும், அதன் பயனாக்கத்திலும் ஒரு நிலையற்ற தன்மைக்குக் காரணமாக அமைகிறது. இதுவே, மிகுதியான அளவில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. வரம்பிலாப் போட்டி, மிகுதியான உழைப்பு விரயத்துக்கும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தனிமனிதர்களின் சமூக உணர்வு ஆட்டம் காண்பதற்கும் காரணமாகிறது.
தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாயத வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவர்க்கு இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும்.
எனினும், திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிஷம் ஆகிவிடாது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். திட்டமிட்ட பொருளாதாரத்துடன், இயல்பாகவே தனிமனிதனின் முழுமையான சார்புநிலையும் சேர்ந்தே வரலாம். சோசலிஷத்தை அடைய, மிகமிகக் கடினமான சில சமூக – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமாகிறது: தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, அரசியல், பொருளாதார அதிகாரங்களை மையப்படுத்தலை நோக்குகையில், அதிகார வர்க்கம் எல்லாம் வல்லதாகவும், அகங்காரம் மிக்கதாகவும் ஆகிப்போவதைத் தடுப்பது எவ்வாறு சாத்தியம்? தனிமனிதனின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்? அதன்மூலம், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிரீட்டை உறுதி செய்வது எவ்வாறு? [புதிய கட்டத்துக்கு] மாறிச் செல்லும் நமது காலத்தில், சோசலிஷத்தின் நோக்கங்கள் பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் தெளிவு பெறுவது மிகப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய பிரச்சினைகள் பற்றிய சுதந்திரமான, குறுக்கீடில்லாத விவாதம் சக்திமிக்க தடைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்திரிகையைத் தொடங்குவது ஒரு முக்கியமான பொதுச் சேவையெனக் கருதுகிறேன்.
[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]
***** http://marxism.sivalingam.in/articles/whysocialism.htm

மீண்டும் கொல்லப்பட்ட தோழர் இம்மானுவேல் சேகரன்

காரிருள் சூழ்ந்த 1950களின் கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்த மகத்தான போராளி இமானுவேல் சேகரன், ஆதிக்க சாதியினரால் 1957இல் முதலில் கொல்லப்பட்டார். எனினும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் அவர் உயிர்த்துடிப்பாக வாழ்ந்து வருகிறார். நினைவுகளிலும் அவர் வாழ்ந்திருக்கக் கூடாதென அஞ்சும் ஆதிக்க சாதியும் அதன் பாதுகாவலனான அரசும் மீண்டும் மீண்டும் அவரைக் கொன்று சாய்க்கிறது. ஃபீனிக்ஸ் பறவையைப் போல அவர் மறுபடியும் பிறக்கிறார். பிறக்கிறார், பிறப்பார் என்பதை அறியாமல்.
1952இல் இராணுவப் பணியை உதறிவிட்டு மக்களிடம் பணியாற்ற இராமநாதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்த அவரை 6 ஆண்டு காலமே வாழ அனுமதித்தது ஆதிக்க சாதி. அந்த 6 ஆண்டு கால மின்னல் வாழ்க்கையில் அவர் செய்த “குற்றங்கள்” ஏராளம். அவற்றில் சில:_
1. தேவேந்திரகுலச் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளராகி தொலைபேசி மற்றும் வாகன வசதி இல்லாத அந்நாட்களில் ஊர் ஊராகச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாகத் திரட்டினார்.
2. அப்பகுதியின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைக்கும் அடாவடிகளுக்கும் ஆளான எல்லா சாதிகளைச் சேர்ந்த மக்களையும் நேச அணியாக ஒன்றுபடுத்தினார்.
3. பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி முதலான இடங்களில் வணிகர்களை மிரட்டி ‘மாமூல்’ வசூலித்து வந்த கூட்டத்தின் அடாவடிகளை மக்கள் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தினார். வணிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
4. 1953 சித்திரைத் திருநாளில் இராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டைக் கூட்டினார். தென் தமிழகமே அங்கு திரண்டது.
5. பேரையூர் பெருமாள் பீட்டர் அவர்களுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்திடப் பணியாற்றினார்.
6. பண்பாட்டு ஒடுக்கு முறையின் வெளிப்பாடாகத் திகழ்ந்த கிராமப்புறக் கோவில் திருவிழாக்களில் ஊதியமில்லாத தொண்டூழியமாக தாழ்த்தப்பட்ட மக்கள் செய்து வந்த பறையடித்தல், இலவசமாக வைக்கோல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை இலவசமாக வழங்குதல், ஊரைச் சுத்தம் செய்தல் போன்றவற்றை நிறுத்தினார். கோவில் பணிகள் எல்லாவற்றையும் சமத்துவமான முறையில் வேலைப்பிரிவினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதன் காரணமாக பல ஊர்களில் பொதுவிழாக்கள் நின்றன. தாழ்த்தப் பட்டோர் தனி விழாக்கள் நடத்தலாயினர்.
7. இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் நடத்தியதோடு மட்டுமன்றி பலமுறை எச்சரித்தும் கேளாத டீக்கடைகளை மக்களைத் திரட்டிச் சென்று நேரடி நடவடிக்கைகளிலும் இறங்கியது _ சட்ட பூர்வமாக எண்ணற்ற வழக்குகளைப் பல தேநீர்க் கடைகளின் மீது பதிவு செளிணிதது.
8. 1957 மார்ச் பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காத மக்களை _ குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு ஆதிக்க சாதியினர் தாக்கியதைக் கண்டித்து இயக்கம் நடத்தியது,
“முத்துராமலிங்கத் தேவரின் சாயல்குடிக் கூட்டத்திற்குப் பிறகு அரிசனங் களும் காங்கிரசு ஆதரவாளர்களும் முதுகுளத்தூர் மறவர்களின் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். பல கிராமங்களில் சட்டம் ஒழுங்கே இல்லை. உடனடியாகத் தலையிடவும்’’ எனத் தமிழக முதல்வருக்குத் தந்தி அனுப்பினார்.
9. தந்தி அனுப்பிவிட்டுச் சும்மா இருக்கவில்லை. தாக்குதல்களை எதிர் கொண்டு திருப்பித் தாக்க மக்களுக்குப் பயிற்சி அளித்தார். எதிர்த்தாக்குதலால் நிலை தடுமாறிய ஆதிக்க சாதியினர் “பாதுகாப்பு’’ கோரி அரசுக்கு மனுவும் தந்தியும் அனுப்பினர். அந்தத் தந்தியை விட இந்தத் தந்தி அரசை வேகமாக இயக்கி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எல்லாரையும் அழைத்தது.
இப்படி அடுக்கடுக்கான குற்றங்களைப் புரிந்த இமானுவேல் மீது ‘இயல்பாக‘க் கோபம் கொண்டது சாதியம். எல்லாவற்றுக்கும் மேலாக 9 மணி பேச்சுவார்த்தைக்கு சரியான நேரத்துக்கு வந்து காத்திருந்த எல்லா சாதித்தலைவர்களும் தாமதமாக பசும்பொன் முத்துராமலிங்கர் நுழைந்த போது எழுந்து நின்று மரியாதை செய்ய, இமானுவேல் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். பேச்சுவார்த்தையில் முத்துராமலிங்கரின் பேச்சுக்குப் பேச்சு இமானுவேல் பதிலளித்தார். மாவட்ட ஆட்சியர் இறுதியாக சமாதானத்தை வலியுறுத்தி எல்லாத் தலைவர்களும் கையொப்பமிட்ட துண்டறிக்கையை வெளியிடலாம் என்றார். அப்போது உ.முத்துராமலிங்கர் அது பயனளிக்காது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு படிக்கத் தெரியாது என்றார். உடனே தலையிட்ட இமானுவேல் பிற எந்தச் சாதியாரையும் விட அதிகமான படிப்பறிவு கொண்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பதிலளித்தார்.
இவ்வளவு திமிர் 1957இல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவருக்கு எப்படி இருக்கலாம்? ஆகவே மேற்சொன்ன அடுக்கடுக்கான கொடும் குற்றங்களைப் புரிந்த இமானுவேல் சேகரனுக்கு இராமநாதபுரம் மாவட்ட சாதியம் மரணதண்டனை என்று தீர்ப்பு எழுதி ஒரு பஷீமீளியில் பாரதி நினைவு நாள் சொற்பொழிவாற்றி விட்டு வீடு திரும்பிய அவரைப் படுகொலை செளிணிது, தீர்ப்பை உடனே நிறைவேற்றியது.
இன்று 2011ல் கூட ஒரு வரலாற்று நோக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அரசியல் வாழ்க்கையை விருப்புவெறுப்பின்றி சார்பு நிலையின்றி அச்சமின்றி விமர்சித்து எழுதிட முடியாத நிலையே நீடிக்கிறது. எனில் 1957இல் இவ்வளவு துணிச்சலாக எழுந்து நின்ற இமானுவேல் சேகரன், ஒரு பள்ளப்பயலுக்கு இவ்வளவு திமிரா என்கிற கேஷீமீவியோடு கொல்லப்பட்டதில் வியப்பில்லை.
தன் உயிரை எடுத்து வைத்து இமானுவேல் பற்ற வைத்த விடுதலை நெருப்பு பற்றிப்படர்ந்தது. தென் மாவட்டங்களில் எப்பொழுதும் போல தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கலாம், அடிக்கலாம், உதைக்கலாம், வெட்டிச் சாய்க்கலாம் என்கிற கதை முடிவுக்கு வந்து விட்டது. அடித்தால் பதிலடி கிடைக்கும் என்கிற யதார்த்தம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
தஞ்சை மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் மகத்தான தலைவராக செங்கொடியுடன் உயர்ந்த தோழர்.பி.சீனிவாசராவ் முழங்கிய ‘அடித்தால் திருப்பி அடி’ என்கிற முழக்கத்தின் எதிரொலிகளாகவே தென் மாவட்டங்களில் தலித் மக்கள் திருப்பித் தாக்கிய எதிர்வினைகளைப் பார்க்க வேண்டும். இராமநாதபுரத்திலோ தமிழகத்தின் இதர பகுதிகளிலோ ஒரு சீனிவாசராவ் தோன்றும் வரை வரலாறு காத்திருக்காதல்லவா? வரலாறு இமானுவேல் சேகரனையும் பெருமாள் பீட்டரையும் ஜார்ஜ் ஜோசப்பையும் படைத்துத் தந்தது. பிற்காலத்தில் ஜான் பாண்டியனையும் டாக்டர் கிருஷ்ணசாமியையும் தொல் திருமாவளவனையும் படைத்தளித்தது. இத்தலைவர்களில் சிலர் முன்வைத்த முழக்கங்களில் குறிப்பிட்ட சாதிகள் மீதான துவேஷ உணர்வு வெளிப்பட்டிருக்கலாம். அவற்றை நாம் விமர்சிக்கலாம்.
ஆனால் அத்தகைய கோஷங்களுக்குப் பின்னால் ஏன் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அணி திரண்டார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக விடை காண வேண்டுமல்லவா? ஆதிக்க சாதிகளின் வல்லந்தம் தலித் மக்களின் மனங்களில் ஏற்படுத்தியுள்ள வரலாற்றுக் காயங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இத்தலைவர்கள் முன்வைத்த ‘துவேஷ‘ முழக்கங்கள் மருந்தாக அமைந்தன.
பண்பாட்டு ரீதியாகப் பன்னெடுங்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் உயர்சாதியினர் மீதும் சாதிய அமைப்பின் மீதும் தீராக் கோபம் கனன்று கொண்டேதான் இருக்கும். அதை வெளிப்படுத்த முடியாத வன்முறையான புறச்சூழல் நிலவும் போது அது நாட்டுப்புறப் பாடல்களாக கதைகளாக சொலவடைகளாக வெளிப்பட்டு நிற்கும். அத்தனை விதமான நாட்டுப்புற ஆட்டங்களிலும் கதைகளிலும் பிராமணர்கள் கேலிக்கு உள்ளாக்கப்படுவதும் பகடி செய்யப்படுவதும் இன்று வரை தொடர்வதை நாம் இந்தக்கோணத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.
“வெள்ளாளன் போன வழி வெட்டவெளி”
“பிண்டத்துக்கு பிராமணன்
துண்டத்துக்கு துலுக்கன்
தெண்டத்துக்கு சம்சாரி
என்பன போன்ற சொலவடைகளையும் நாம் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபவ வரலாற்றின் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.
இதே எதிர்பண்பாட்டு மனநிலை தான் “இமானுவேல் சேகரன் குரு பூஜை” “தெய்வத் திருமகன் இமானுவேல் சேகரன்” போன்ற சொற் சேகரங்களை தலித் மக்கள் சுவரொட்டிகளிலும், ஃபிளக்ஸ் பேனர்களிலும் எழுதி வைப்பதிலும் ஒளிந்திருக்கிறது என்பதை கருத்தியல் ரீதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த வார்த்தைகள் எவையும் ‘காப்பி ரைட் ‘ வாங்கப்பட்ட வார்த்தைகளுமல்ல. இன்றைய பரமக்குடிப் படுகொலைகளின் பின்னணியில் இத்தகைய வார்த்தைகளுக்கு ஒரு பங்கு இருக்கிறது.
நினைவஞ்சலி, வீரவணக்கம் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்க தலித் மக்களின் ஒரு பகுதியினர் குருபூஜை என்கிற ‘வார்த்தை’யைத் தேர்வு செய்ததற்கும் ஒரு வரலாற்று ரீதியான பின்புலமும் சமூக உளவியலும் இருக்கிறது என்பதைப் பதட்டமின்றி நம் தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் இந்த வார்த்தையைத்தான் தேர்வு செய்ய வேண்டுமா? இந்த வார்த்தையை ஏன் தேர்வு செய்யக் கூடாது? என்கிற இரு கேள்விகளும் இன்று முன் வைக்கப்படுகின்றன. வார்த்தைகள் மொழியிலிருந்து எடுத்தாளப்படவில்லை. வலிமிகுந்த வரலாற்றிலிருந்தும் வஞ்சம் தீர்க்கப்படாத கோபத்திலிருந்தும் எடுத்தாளப் படுகின்றன என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஆனாலும் இந்த ‘வார்த்தைப் போரை நடத்துவது சிறிய பகுதிதான். பெருவாரியான மக்கள் இம்மானுவேல் ‘சாமி கும்பிட‘ப் போவதாகவே பெருவழக்காகப் பேசுகின்றனர். இமானுவேல் சேகரனுக்குப் பால்குடம் எடுத்து விரதம் இருந்து அணியணியாகச் செல்வதை ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகக் கைக் கொண்டுள்ளனர்.யதார்த்த்த்தில் தீராத சாடிய நெருக்கடியை ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படிப் பண்பாட்டு ரீதியான சடங்குகள்,விழாக்கள் மூலம் ஆற்றுப்படுத்திக்கொள்வது உலகெங்கும் உள்ள வழக்கம்தான்.
ஆதிக்க சாதியினரும் நிலைமைக்கேற்ப தமது தந்திரோபாயங்களை மாற்றி வருகின்றனர். ஊரோடு மலையில் ஏறி உட்கார்ந்து கொள்வது அதில் ஒரு வடிவம். தாமே நேரடியாகச் சென்று தாக்குவதை நிறுத்திவிட்டுத் தம் சார்பாகக் காவல்துறையை ஏவிவிடும் நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.. தாமிரபரணிக் கரையில் 17 உயிர்களைக் காவல்துறை பலி கொண்டபோது இமானுவேல் சேகரன் 17 முறை கொல்லப்பட்டதாகவே கருதினோம்.
காங்கியனூரில் வயிற்றில் மிதித்தார்கள். செட்டிப்புலத்தில் தடிகொண்டு தாக்கினார்கள். மதுரை மண்ணில் தலைவர்களைத் தூக்கி எறிந்தார்கள்.. உத்தப்புரத்தில் என்னதான் செய்யாமல் விட்டார்கள்? சாதியம் காத்திடக் காவல்துறையும் அரசும் எடுத்திட்ட முயற்சிகள் தாம் எத்தனை எத்தனை? இவை அத்தனை அடிகளும் இமானுவேல் சேகரனின் மீது விழுந்த அடிகள்தானே?
தென்பகுதி தலித் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து விட்ட இமானுவேல் சேகரனின் சித்திரத்தை தடிகொண்டு அடித்தும் பூட்ஸ் கால்களால் மிதித்தும் எனப் பலவித வடிவங்களிலும் அழிக்க முயன்று தோற்றுப்போன அரசும் காவல்துறையும் இன்று அதே பரமக்குடியில் இமானுவேல் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகிலேயே மீண்டும் ஆறுமுறை இமானுவேல் சேகரனைக் கொலை செய்துள்ளது.
இமானுவேல் சேகரன் ஒரு காங்கிரஸ்காரர். நம்பிய காங்கிரசால் கழுத்தறுக்கப்பட்டவர். அவருடைய துணைவியாரையும் நான்கு பெண் குழந்தைகளையும் கூடப் பராமரிக்கவோ, வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யவோ காங்கிரஸ் முன் வரவில்லை என்பது வரலாறு. அவர் காங்கிரஸ்காரரா கிறித்தவரா மதம் மாறிய இந்துவா பட்டாளத்துக்காரரா என்பது எதுவுமே முக்கியமல்ல. இன்று அவர் தென் தமிழகத்து ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் விடுதலையின் சின்னம். சாதி ஒழிப்புப் போராட்டத்தின் உயிர்த்துடிப்பு.
அவரை ஒரு சாதியின் தலைவராகப் பார்ப்பதை மாற்ற வேண்டும். அதற்கு எல்லா சாதிகளையும் சேர்ந்த ஜனநாயக எண்ணம் கொண்ட மக்கள் அவரை விடுதலையின் சின்னமாக மனதார ஏற்க வேண்டும். அவர் ஒருபோதும் சாதி வெறுப்பை முன் வைத்ததில்லை. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைக்கும் அரசியலையே முன் வைத்தார்.
அம்பேத்கர் தன் வாழ்வில் சாதியத்தின் வடிவமாக பிராமணியத்தை எதிர் கொண்டார். இமானுவேல் சேகரன் இராமநாதபுரத்தில் பிராமணியத்தின் வடிவமாக வேறொரு சாதியை எதிர்கொள்ள நேர்ந்தது. இது வரலாறு.இது அவர் செய்த குற்றமல்ல.
வர்க்கப் போராட்டம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களிலும் நடைபெறுவது. இந்தியாவின் வர்க்க ஏற்பாடான சாதியக் கட்டமைப்புக்கு எதிரான போரும் இம்மூன்று தளங்களிலும் நடைபெறுவதை, நடைபெற வேண்டியதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
அவ்வகையில் சாதி எதிர்ப்புப் போர்த் தியாகிகளெல்லாம் வர்க்கப் போர்த் தியாகிகளாகப் போற்றத்தக்க தியாகிகளல்லவா?
இமானுவேல் சேகரனின் தியாகத்தைப் போற்றுவோம்!
தோழர் இமானுவேல் சேகரனின் தியாகத்துக்கு வீர வணக்கம் செய்வோம்!
(பி.கு. இக்கட்டுரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் அணையா வெண்மணி இதழில் வெளியாகியுள்ளது)
Tamil Selvan

21 அக்டோபர், 2011

அம்பேத்கர் உலகமயமாகிறார்
“பறிக்கப்பட்ட உரிமைகளை, அவ்வாறு பறித்தவர்களின் மனசாட்சியை நோக்கி விடுக்கப்படும் வேண்டுகோள்கள் மூலம் கண்டிப்பாக மீட்டெடுக்க முடியாது. மாறாக, இடையறாத போராட்டத்தின் மூலமாக மட்டுமே மீட்டெடுக்க முடியும்.”
– டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
ஏப்ரல் 14, 2008 அன்று இந்தியா முழுவதும் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த தெர்தாக் திபோர் என்பவரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அவர் எனக்கு அறிமுகமற்றவர். “பள்ளிகளா, கழிவறைகளா, கோயில்களா?” என்ற எனது கட்டுரையை இணையத்தில் படித்துவிட்டு அதைப் பாராட்டி அவர் எழுதியிருந்தார். எனது கட்டுரையில், “ஒவ்வொரு தெரு முனையிலும் நாம் கோயில்களை கட்டியுள்ளோம். ஆனால் அந்த அளவிற்கு கழிவறைகளையோ, பள்ளிகளை÷யா கட்டவில்லை” என ஆதங்கப்பட்டிருந்தேன். தான் ஒரு சமூகவியலாளர் என்றும், ஹங்கேரி நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்றும் குறிப்பிட்டிருந்த திபோர், தற்பொழுது ரோமா சமூகத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ரோமா சமூகத்தினர், “ஜிப்சிக்கள்’ என்று இழிவாக அய்ரோப்பா முழுவதிலும் அழைக்கப்படுகின்றனர்.
பின்னர் தொடர்ந்த மின்னஞ்சல் உரையாடல்கள் ஊடாக, ரோமா சமூகத்தினர் ஹங்கேரியில் சந்திக்கின்ற சிக்கல்களையும் அவர்களது வாழ்க்கை குறித்தும் நான் படிப்படியாக அறிந்து கொண்டேன். அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள தலித்துகளின் நிலை குறித்து அவருக்கு நான் விளக்கி வந்தேன்.
எனக்கு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டிய செய்தி என்னவெனில், தெர்தாக் திபோர், தானும் மற்றொரு ரோமா தலைவரான ஆர்சொஸ் ஜெனோஸ் ஆகிய இருவரும், எவ்வாறு டாக்டர் அம்பேத்கரின் சமூக மாற்றத்திற்கான கொள்கைகளும், தலித்துகளிடையே அவர் மேற்கொண்ட பணிகளும் தங்களுக்குப் பெரும் உந்து சக்தியாக இருக்கிறது என்பதையும், ரோமா சமூகத்தினரின் சம உரிமைக்கானப் போராட்டத்தில் – அம்பேத்கரின் சிந்தனைகளையும் வழிமுறைகளையும் செயல்படுத்த தாங்கள் முயல்வதாகவும் கூறியதுதான்! எப்படி, ஏன் அம்பேத்கர்? திபோர் தற்செயலாக அம்பேத்கர் பற்றிய ஒரு நூலை பாரிசில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அது அவருக்கு புதியதொரு உலகத்தை திறந்து காட்டியது. தலித்துகள் இந்தியாவில் சந்திக்கும் வேற்றுமைக்கும், ரோமாக்கள் அய்ரோப்பாவில் சந்திக்கும் வேற்றுமைக்குமான ஒற்றுமைகளை அவரால் உடனடியாக உணர முடிந்தது.
ரோமாக்கள் கருத்த நிறமுள்ள அய்ரோப்பிய நாடோடிக் குழுவினராகக் கருதப்படுகின்றனர். வட இந்தியாவிலிருந்து வந்திருக்கக் கூடியவர்களாகக் கருதப்படும் இவர்கள் உலகெங்கிலும் ஏறத்தாழ ஒரு கோடியே 20 லட்சம் பேர் இருக்கிறார்கள். அய்ரோப்பாவில் மட்டும் 80 லட்சம் மக்களாக இருக்கும் இவர்கள், அய்ரோப்பாவின் ஆகப் பெரிய சிறுபான்மைக் குழுவாக இருக்கின்றனர். வெள்ளை அய்ரோப்பியர்களால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டும், மறுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், முத்திரை குத்தப்பட்டும் வந்த வரலாற்றினைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஹங்கேரியின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதத்தினராக உள்ளனர்.
அம்பேத்கரைப் பற்றி அறிந்த பிறகு, திபோரும் ஜெனோசும் 2005 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் மகாராட்டிரத்திற்கு வந்திருக்கின்றனர். இந்தியாவின் தலித்துகளுடனும், அம்பேத்கரின் அதிகாரப்படுத்தும் செயல் திட்டத்துடனும் தங்களுக்கு ஆழமான தொடர்பு இருப்பதாக உணர்ந்தனர். ஹங்கேரி திரும்பியவுடன், 2007இல் “ஜெய் பீம்’ குழுவினை அமைத்தனர். பவுத்தத்தைத் தழுவினர். அதோடு டாக்டர் அம்பேத்கர் பெயரில் ரோமா குழந்தைகளுக்கென சஜோகாசா, ஓஸ்த் மற்றும் ஹெகிமென் ஆகிய இடங்களில் 3 மேல்நிலைப் பள்ளிகளை திறந்தனர். ஜெய் பீம் குழுவின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக, இந்தியாவிலிருந்து இளம் தலித் செயற்பாட்டாளர்களை ஹங்கேரிக்கு வரவழைத்து, ரோமா சமூகத்தினருடன் பழகுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்துவதை வைத்திருக்கின்றனர். அண்மையில் அப்படியான ஒரு 3 நபர் குழுவில் நானும் சென்றிருந்தேன். சஜோகாசா கிராமத்தில் ரோமா சமூகத்தினருடன் ஏறத்தாழ ஒரு மாதம் வாழ்ந்திருந்தேன்.
சஜோகாசா மிஸ்கோலேயில் இருந்து வடகிழக்கில் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் அழகிய கிராமம். 3,300 பேரை கொண்ட அக்கிராமத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ரோமா சமூகத்தினர். ரோமாக்களில் பெரும்பான்மையினர், ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான ஓர் இடத்திலேயே வாழ்கின்றனர். அவர்கள் வாழ்கின்ற பகுதியில் குழாய் நீர் இல்லை. தெரு விளக்கு இல்லை. கழிவு நீர் வடிகால் இல்லை. சில மீட்டர்கள் தொலைவில் அருகில் உள்ள ரோமாக்கள் அல்லாதவர்கள் குடியிருக்கும் தெருக்களில், இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் ரோமாக்கள் அனைவரும் அருகில் உள்ள சுரங்கத்தில் வேலை செய்து வந்தனர்.
ஆனால் தற்பொழுது அனேகமாக அனைவருமே வேலையின்றி உள்ளனர். அரசாங்கங்கள் அளிக்கும் கனிவுத் தொகையில் வாழ்கின்றனர். நாங்கள் தங்கியிருந்த காலத்தில், இந்தியாவில் தலித்துகள் அனுபவிக்கும் அதே அளவிற்கு ரோமாக்களும் அன்றாடம் வேற்றுமைகளை அனுபவிக்கின்றனர் என்பதை நாங்கள் உணர முடிந்தது. சஜோகாசாவில் 3 கிறித்துவ கோயில்கள் உள்ளன. ஆனால் ஒரு ரோமா கூட அவற்றில் ஒன்றிற்கும் செல்வதாகத் தெரியவில்லை. இந்தியாவில் இந்து கோயில்களுக்குள் தலித்துகள் நுழைவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டிருந்தும், நடைமுறையில் தடை செய்யப்பட்டிருப்பதை இது நினைவூட்டியது.
ஹங்கேரி ரோமாக்களின் கல்விக்கு உள்ள பெரிய தடை என்னவெனில், ரோமா குழந்தைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தனி வகுப்புகளில் அமர கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற பாழடைந்த கட்டடங்களில், அவர்களுக்கு தனியாக வகுப்புகள் – பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, ஹங்கேரி குழந்தைகள் அனைத்து வசதிகளும் நிறைந்த பொதுப் பள்ளிகளில் பயில்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட ரோமா மாணவர்களுக்கு தனிக் குவளைகளும் தட்டுக்களும் இருந்ததாக திபோர் கூறுகிறார்.
தொடர்ந்து மானுட நிலையிலிருந்து கீழிறக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், ஒதுக்கப்பட்டும், வேறுபடுத்தப்பட்டுமே ரோமா குழந்தைகள் வளர்கின்றனர். அவர்கள் மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் என்று தனியான பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். எந்த அளவுக்கு எனில், இப்படியான சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இப்படியான தரம் பிரித்தல் பள்ளிகளோடு நிற்கவில்லை. 2003 ஆம் ஆண்டு “அய்ரோப்பிய ரோமா உரிமை மய்யம்’ ஹங்கேரியில் மேற்கொண்ட கள ஆய்வில், “ஜிப்சி அறைகள்’ என்று அழைக்கப்பட்ட தனியான பிரசவ அறைகள் குறித்து 44 வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
முத்திரை குத்துதல் என்பது வெறுப்பின் முக்கிய வெளிப்பாடு. வெள்ளையர்களால் ரோமாக்கள் மீது மிகமோசமான முத்திரைகள் குத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுகின்றனர். ஒரு சராசரி வெள்ளை அய்ரோப்பியரை பொருத்த வரையில் “ஜிப்சிக்கள்’ என்றால் நிச்சயமாக ஏமாற்றுபவர்கள், பிச்சைக்காரர்கள், திருடர்கள், பிக்பாக்கெட் அடிப்பவர்கள், நாடோடிகள், அழுக்கான சூழலில் வாழ்பவர்கள், உழைக்கப் பிடிக்காதவர்கள், ரோமாக்கள் பிக்பாக்கெட் அடிக்க வசதியாக தங்களுடைய ஆட்காட்டி விரல்களை வெட்டிக் கொள்வதாக ரோமாக்கள் அல்லாதவர்கள் நம்புகின்றனர். ரோமா குழந்தைகள் நீளமாக மேல் சட்டை அணிவதற்கு காரணமே, வெள்ளையர் வீட்டுக் கோழிகளை திருடிச் செல்வதை மறைக்கத்தான் என்று நம்புகின்றனர். இந்த முன் தீர்மானங்கள் இன்றும் இருக்கின்றன.
அய்ரோப்பாவில் சுற்றுலாவை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள இணைய தளங்களில், “ஜிப்சிக்கள் பற்றிய அறிவுரைகள்’ வழங்கப்பட்டுள்ளன. ஓர் இணைய தளத்தில் “ரோம் நகரில் தனிப்பட்ட பாதுகாப்பு’ என்ற தலைப்பில், “ஜிப்சி குழந்தைகள் உங்களை சூழ்ந்து கொள்ளக்கூடும். நீங்கள் ஆச்சரியப்பட்டு நிற்கையில் வெட்கமின்றி அவர்கள் உங்கள் உடைமைகளை திருடத் தொடங்குவார்கள். பின்னர் அவற்றை பெரிய ஜிப்சி பெண்களிடம் அளித்து விடுவார்கள்…” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ரோமாக்கள் திருடர்கள் என்ற பிம்பம் மிக ஆழமாக பதியப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு எனில், அக்கம்பக்கத்தில் ஏதேனும் குற்றம் நடந்தால் உடனடியாக காவல் துறையினர் இவர்களையே முதலில் வளைத்துப் பிடிக்கின்றனர்.
ஹங்கேரி நாட்டு வெள்ளையர்கள் இட்டுக்கட்டிய மிக பயங்கரமான கதை ஒன்றை நான் அறிய நேர்ந்தது. அது ரோமா பெண்கள் பற்றியது. கடந்த செப்டம்பரில் வடகிழக்கு ஹங்கேரியைச் சேர்ந்த எடிலெனியின் மேயரான ஓஸ்கர் மொல்னர், குழந்தைகளுக்கான கூடுதல் அரசு வசதிகளைப் பெறுவதற்காக, தன்னுடைய நகரத்தில் உள்ள ரோமா பெண்கள் வயிற்றிலிருக்கும் தங்கள் குழந்தைகளை சேதப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். சம உரிமைக்கான ஆணையம் ஓஸ்கர் மொல்னர் மீது வழக்கு தொடுத்தது. முக்கிய எதிர்க்கட்சியான பிடெஸ்சை சேர்ந்த அவர், ஆணையத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகக் கூறியிருக்கிறார்.
அக்டோபர் 11, 2009 அன்று ஹங்கேரி தலைநகரான புடாபஸ்ட்டில் உள்ள மாவீரர்கள் சதுக்கத்தில் 1500 ரோமாக்கள் திரண்டு மேயரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதோடு பள்ளிகளில் மேற்கொள்ளப் பட்டுள்ள தரப்படுத்துதலை எதிர்த்தும், அன்றாட வாழ்வில் காட்டப்படும் வேற்றுமைகளை எதிர்த்தும் தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்தனர். அந்த நிகழ்வில் பிடிக்கப்பட்ட ஒரு பதாகையில் இருந்த வாசகம் என்னைக் கவர்ந்தது! “ஒரு குழந்தையின் தலை ஒரு குடம் அல்ல.. நிரப்புவதற்கு… மாறாக அது ஏற்றப்பட வேண்டிய ஒரு விளக்கு”
ஜெய்பீம் குழுவின் தலைவரான ஜெனொஸ், “நாங்கள் அம்பேத்கரின் பவுத்தத்திற்கு மாறிய பிறகு, மக்கள் எங்களை நோக்கி நீங்கள் எவ்வாறு ஜிப்சிக்களுக்கு பவுத்தத்தை போதிக்கலாம் என கேட்கின்றனர். நாங்கள் செய்வது முற்றிலும் வேறுபட்ட அவர்களுக்கு தெரிவதற்கு காரணம், அய்ரோப்பாவில் பவுத்தம் பெரும்பாலும் நடுத்தர வகுப்பினரின் பொழுது போக்காகவே இருக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு பதில் சொல்வது எளிது. அவர்கள் எங்கள் இனத்தவருக்கு ஒரு நல்ல கல்வியை அளிக்கவில்லை. ஆனால் நாங்கள் வழங்குகிறோம். யார் என்ன சொன்னாலும் சரி, நாங்கள் எங்கள் பணியை தொடர்ந்து செய்கிறோம்” என்கிறார்.
நன்றி : “தி இந்து’ 22.11.09 தமிழில் : பூங்குழலி

23 செப்டம்பர், 2011

குடியும் சாதி நிமித்தமும் - சுகிர்தராணி

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட குஜராத் மாநிலத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் பலியானவர்களின் எண்ணிக்கை நூற்று எண்பதைத் தொட்டுவிட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் இருநூறுக்கும்மேல். அவர்களுள் பெண்களும் அடக்கம். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவும் கூடும். மதுவிலக்கு அமல்படுத்தப்படாத தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விஷச்சாராய உயிரிழப்புகள் சம்பவித்து வருகின்றன என்பது கண்கூடு.

விஷச்சாராயம் அருந்தி பலியானவர்கள் மற்றும் சிகிச்சைபெற்று வருபவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். குஜராத்தின் அண்டை மாநிலங்களிலிருந்து கள்ளச்சாராயத்தைக் கடத்துவதற்காகக் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி இருப்பதுதான் வேதனையிலும் வேதனை. அக்குழந்தைத் தொழிலாளர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய படிப்பறிவற்ற தலித் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்தான். தலித்துகளைக் கொண்டே தலித்துகளின் கண்ணைக் குத்தும் சமூக அவலத்திற்கு இவையெல்லாம் சான்றுகள்.

குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் கள்ளச்சாராயம் பலிவாங்குவது ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்களைத்தான். தலித்துகள் ஏன் குடியை நாடிச் செல்கின்றார்கள்? குடி தலித்துகளின் கலாச்சாரமா? கொண்டாட்டத்திற்குரிய ஒன்றா? போன்ற கேள்விகள் எழாமலில்லை.

o

இந்தியாவில் வேத காலம்தொட்டே மக்களுக்குக் குடிப்பழக்கம் இருந்து வந்திருக்கின்றது. சோமபானமும் சுராபானமும் கடவுளுக்குப் படைக்கப்பட்ட பின் அனைவராலும் அருந்தப்பட்டிருக்கின்றன.

அப்போது ஏறக்குறைய 62 பிரிவுகளாக விளங்கிய இந்து சமயத்தில் வேள்விகளும் சடங்குகளும் மலிந்திருந்தன. சாதிக்கொடுமைகள் வேறு மக்களை வாட்டின. இவற்றிலிருந்து மக்களை விடுவிக்கவே சமணமும் பௌத்தமும் மாற்றுச் சமயங்களாகத் தோன்றின.

பௌத்தம் அனைவரும் சமம் என்னும் கருத்தைப் போதித்ததால், தாழ்த்தப்பட்ட மற்றும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் பௌத்தத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பிற்காலத்தில் இந்து சமயத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக பௌத்தம் வீழ்ச்சியடையத் தொடங்கியதால் புத்தரின் அட்டமார்க்கத்தைப் பின்பற்றி வந்த தாழ்த்தப்பட்ட மக்கள், உடலுழைப்புத் தொழில்களால் உண்டான களைப்பைப் போக்கிக்கொள்ள குடியை நாடத் தொடங்கினர்.

சமூகத்தில் சாதி அமைப்புமுறை தோன்றக் காரணமாக இருந்த, வேதங்களால் போஷிக்கப்பட்ட இந்து மதம் வளர வளரச் சாதியமைப்பும் சாதி இழிவும் இறுகிக்கொண்டே போகின்றன. அதனால்தான் இன்றும் இந்தியாவில் சாதிகள் காணப்படுகின்றன. இன்றும் பௌத்தத்தின் பூர்வ குடிமக்கள் ஊருக்கு வெளியே சேரிகளில் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். மலம் அள்ளுதல், கழிவுகளை அகற்றுதல், பிணங்களை எரித்தல், மூட்டை தூக்குதல் போன்ற தொழில்களை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே தொழில் நிமித்தம் அவர்களுக்குக் குடி தேவைப்படுகிறது.

ஆகவேதான் விலையுயர்ந்த மதுவைவிடத் தம் ஒரு நாள் கூலிக்குள் மலிவாகக் கிடைக்கக்கூடிய கள்ளச் சாராயத்தைத் தலித்துகள் நாடுகின்றனர். எங்கெல்லாம் தலித்துகள் அதிகமாக வசிக்கிறார்களே, அங்கெல்லாம் கள்ளச்சாராய விற்பனையும் கள்ளச்சாராயச் சாவுகளும் இயல்பாக நடைபெறுகின்றன. தமிழகத்தில் தலித்துகள் அதிகமாக வசிக்கின்ற தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற வடமாவட்டங்களில் விஷச்சாராயச் சாவுகள் அவ்வப்போது நிகழ்வதை மறுக்க முடியாது. இது போன்று இந்தியா முழுவதும் நிகழ்வது தொடர்கதையாக இருக்கிறது.

கூர்ந்து நோக்கினால் தீட்டானவை, அருவருப்பானவை எனச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட தொழில்களோடுதான் பெரும்பாலான தலித்துகளின் அன்றாட வாழ்க்கை இருப்பது புலப்படும். அவற்றை மேற்கொள்வதற்கு முன்னும் பின்னும் உள்ள தலித்துகளின் மனோநிலையை ஆதிக்கச் சாதியினராலும் தலித் உணர்வுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளும் அறிவுஜீவிகளாலும் புரிந்துகொள்ள முடியாதுதான்.

தம் மலத்தைத் தாம் பார்ப்பதையே அசூசையாகக் கருதும் மக்களிடையே, எவ்வித விகல்பமுமின்றி மலத்தை அள்ளுதல், சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பெடுத்தல், செத்த விலங்குகளைத் தூக்கிச்சென்று புதைத்தல், நெருப்புச் சூட்டில் வெந்து பிணங்களைப் புதைத்தல், உடல் கூராய்வின்போது பிணங்களை அறுத்தல், திருவிழாக்களிலும் இழவுகளிலும் பறையடித்தல், மூட்டை தூக்குதல், செங்கல் அறுத்தல் போன்ற தொழில்களைச் செய்வதற்குத் தம், முந்தைய அல்லது பிந்தைய மனோநிலையை நனவிலிருந்து நனவிலிக்குக் கடத்த வேண்டியுள்ளது.

அப்படிக் கடத்துவதற்குக் குடியை ஒரு கருவியாகத்தான் தலித்துகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியும் குடிக்கே போதாமையால் தலித் வீடுகளில் ஒருவேளைதான் அடுப்பெரிகிறது. ஆகவே நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள முப் படை வீரர்களுக்கு மலிவுவிலையில் மது வழங்கப்படுவதைப் போல இந்தியாவில் உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தலித்துகளுக்கு அடையாள அட்டை அளித்து, மலிவுவிலையில் தரமான மது வழங்க அரசு ஆவனசெய்ய வேண்டும். குடி ஆரோக்கியச் சீர்கேடு என்றால் கையால் மலத்தை அள்ளுவது அதைவிடச் சீர்கேடு. குடி என்பது தலித்துகளின் கொண்டாட்டத்திற்கு உரியதன்று. எல்லாவற்றிலும் நிறைவுபெற்றிருக்கின்ற ஆதிக்கச் சாதியினருக்குத்தான் குடி கொண்டாட்டமாக விளங்குகிறது.

மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் மேற்கத்திய இசை அதிர அதிர மதுக்குவளையோடு திரிபவர்கள் பெரும்பாலும் தலித்துகளாக இருக்க வாய்ப்புகள் குறைவு. தலித்துகளுக்குக் குடி என்பது தொழில்நிமித்தமாக ஏற்பட்டதேயன்றி சாதிநிமித்தமாக ஏற்படவில்லை. “குடி என்பது தலித்துகளின் கலாச்சாரம்” என்னும் சொல்லாடலை உலவவிடுவது ஒரு ஆதிக்கச் சூழ்ச்சி.

அவ்வாறு கட்டமைத்தல் சாராயம், கள் மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றோடு தொடர்புடைய தலித்துகளைக் குடிகாரர்களாகவும் அசுத்தமானவர்களாகவும் வசவு வார்த்தைகளை வெளிப்படுத்தும் ஆபாசமானவர்களாகவும் சண்டைக் காரர்களாகவும் நிறுவுகின்ற ஒரு திரிபு. ஆகவே, குடியை மாற்றுக் கலாச்சாரமாகத் தலித்துகளின் மீது போர்த்துபவர்களை தலித்துகள் அடையாளம் கண்டுகொண்டு புறக்கணிக்க வேண்டும்.

குடியானது ஆதிக்கச் சாதியினரிடையே ஆதிக்க மனோபாவத்தை ஏற்படுத்துகிறது. குடியே அதைத் தலித்துகளுக்கு எதிராகத் திருப்புகிறது. அதனால்தான் ஆதிக்கச் சாதியினரால் தலித்துகள் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். தலித் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தலித்துகளின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. தலித்துகளின் தலைமை அவர்களைப் பதற்றமடையச் செய்கின்றது.

o

தற்போது இலக்கிய உலகிலும் இந்நோய் பீடித்திருப்பது தலித் படைப்பாளிகளைக் கவலைகொள்ளச் செய்கிறது. ‘தலித் உணர்’ வாளர்களாக அறியப்படுபவர்களின் முகமூடிகள், அவர்களுடைய கொண்டாட்டக் குடியில் உருகி ஓடுவதை எழுத வேண்டியிருக்கிறது.

ஜூன் மாதம் 13,14 தேதிகளில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் சார்பாக, நானும், செல்மா பிரியதர்ஷன், யாழன் ஆதி மற்றும் லீனா மணிமேகலை ஆகியோர் ஒருங்கிணைத்த கவிதை நூல்கள் விமர்சனக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது. முதல்நாள் பிற்பகலில் தொடங்கிய முதல் அமர்வில் பல கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. யவனிகா ஸ்ரீராம் எழுதிய “திருடர்களின் சந்தை” கவிதை நூலின் விமர்சனக் கட்டுரையை மதிவண்ணன் முன்வைத்து விவாதப்புள்ளி ஒன்றைத் துவக்கிவைத்தார்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தைப் பேசுகின்ற யவனிகாவின் ஒரு கவிதையைக் குறிப்பிட்டுவிட்டு, “இதுதான் அரசியல் கவிதை, ஆத்மாநாமுக்குப் பிறகு யவனிகாதான் இத்தகைய அரசியல் கவிதையை எழுதியிருக்கிறார். சர்வதேச அரசியலைப் பேசுகின்ற இத்தகைய கவிதைகளை அனைவரும் எழுத முன்வர வேண்டும்” என்று அ. மார்க்ஸ் கூறுகிறார். அப்படியென்றால் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையிலான சர்வதேசப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினால் மட்டும்தான் அரசியல் கவிதையா? சாதி ஒழிப்பைப் பேசுவது அரசியல் கவிதை இல்லையா? இந்துத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கவிதைகள் அரசியல் கவிதைகள் இல்லையா? நாங்கள் அதைத்தானே எழுதிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கவிதைகள் அரசியல் கவிதைகள் இல்லையா? உள்ளூரில் நடக்கின்ற சாதிக்கொடுமை, சாதி இழிவு போன்றவற்றைப் பதிவுசெய்யாமல் சர்வதேச அரசியலை மட்டும் பேசுவது நியாயமா? யவனிகாவின் கவிதைகள் ஒன்றுகூட அவற்றைப் பற்றிப் பேசவில்லை. இதற்கு நியாயமான பதிலை எதிர்பார்க்கிறேன் என மதிவண்ணன் கேட்டார்.

அதற்கு செல்மா பிரியதர்ஷன் எழுந்து, “யவனிகா தலித் கவிதைகளை எழுதவில்லை என்பதாலேயே அவரைக் கவிஞர் இல்லையென்றோ அவருடைய கவிதைகளை அரசியல் கவிதைகள் இல்லையென்றோ ஒதுக்கிவிட முடியாது. மேலும் எதை எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவன் படைப்பாளி. அது அவனுடைய சுதந்திரம். அவனிடம் ஏன் தலித் கவிதைகளை எழுதவில்லை என்று கேள்வி கேட்க முடியாது” என்று கூறினார்.

மீண்டும் மதிவண்ணன் தன் கேள்விகளைத் தெளிவாக முன்வைத்தார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கரிகாலன் எழுந்து “நாங்களும் தலித் உணர்வாளர்கள்தான், தலித் ஆதரவாளர்கள்தான். நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம். தலித் விஷயங்களைப் பதிவுசெய்து கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

அப்போது கம்பீரன், “நீங்கள் தலித் உணர்வாளர்கள் என்று கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களை வளர்க்கும்போது தலித்துகளைப் பற்றி ஒரு சித்திரத்தை ஏற்படுத்தி, சொல்லிச் சொல்லி வளர்த்திருப்பார்கள். அப்போது ஆதிக்க உணர்வு கொண்டவர்களாகத்தான் நீங்கள் இருந்திருப்பீர்கள். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில்தான் தலித் உணர்வுள்ளவர்களாக மாறியிருப்பீர்கள். அதை நாங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம். ஆதிக்க உணர்விலிருந்து தலித் உணர்வுக்கு மாறிய கணத்தை ஏன் யாருமே இதுவரை பதிவுசெய்யவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

அரங்கத்தில் மீண்டும் சலசலப்பு. யாருமே பதிலளிக்கவில்லை. எனவே நான் எழுந்து “மதிவண்ணனும் கம்பீரனும் நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. நேர்மையான உங்கள் பதிலைத் தெரிவியுங்கள்” என்றேன்.

“பெண்ணியவாதிகளும் தலித்துகளும் அவரவர் பார்வையில் ஒரு பிரதியை அணுகுவது இயல்பானது. அப்படித்தான் அணுக முடியும். மதிவண்ணனும் யவனிகாவின் பிரதியை அவ்வாறே பார்த்துள்ளார். கேள்விகளைக் கேட்கக் கூடாது, தலித்துகளைப் பற்றி தலித்துகளே எழுதிக்கொள்ள வேண்டும் என்பது உங்கள் பதிலாக இருந்தால், எங்கள் எழுத்தை, எங்கள் விடுதலையை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என்றும் தெரிவித்தேன்.

பிறகு அ. மார்க்ஸ் பதில் கூறினார். “யவனிகாவின் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பேசிய விஷயங்களே தீராநதி கட்டுரையிலும் வந்திருந்தன. யவனிகா மட்டும்தான் அரசியல் கவிஞர் என்றோ அவர் கவிதைகள் மட்டும்தான் அரசியல் கவிதைகள் என்றோ குறிப்பிடவில்லை. யவனிகா ஏகாதிபத்தியத்திற்குள் ஊடாடும் அரசியலைக் கவிதையாக்கியிருக்கிறார்” என்று கூறினேன். மேலும் நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது பூரண விமர்சனத்தை முன் வைக்காமல் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. அது அவசியமும்கூட. மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” மேலும் சில கட்டுரைகளின் வாசிப்போடு அவ்வமர்வு முடிந்தது. அமர்வு முடிந்தபின்னர் சிலர் மதிவண்ணன் அ. மார்க்ஸையே கேள்விகேட்டுவிட்டது பற்றித் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

அன்றிரவு என்னை மதுவருந்த அழைத்தார்கள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு என் அறையிலேயே இருந்தேன். அதே தளத்தில் இன்னொரு அறைக்குள் பலர் மதுவருந்திக்கொண்டிருந்தனர். அவர்களில் நட. சிவகுமார் மட்டும்தான் தலித் என்பதைப் பிற்பாடு அறிந்துகொண்டேன்; மற்றவர்கள் ஒதுங்கிக்கொண்டனர். இரவுக் கொண்டாட்டம் எடுக்க இருக்கும் ரூபங்களை முன்னுணர்ந்த சிலர் அவசரமாகக் கிளம்பி வெளியேறிவிட்டனர். கொண்டாட்டச் சத்தத்தால் எனக்குத் தூக்கம் வரவில்லை. அப்போது அவர்களின் பேச்சு தலித்துகளின் பக்கம் திரும்பியது. “நாம் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். நம்மைப் போய் தலித்துகளுக்கு எதிராக எழுதுகிறோம் என்கிறார்கள். ஆதிக்கச் சாதியில் தலித்துகளுக்கு எதிராக யார் எழுதுகிறார்கள்” என்று திரும்பத் திரும்ப யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்த குரல் யாருடையது என என்னால் அறிய முடியவில்லை. குடியால் குரல் மாறியிருக்கலாம். “அவர்கள் கேட்பது நியாயம்தான். தலித்துகளைப் பற்றி நம் மனோநிலையை இதுவரை பதிவுசெய்திருக்கிறோமா? நேர்மையாகப் பதிவுசெய்யாதவரை நாம் எல்லோரும் ஆன்ட்டி தலித் தான், தலித்துகளுக்கு எதிராக யார் எழுதவில்லை என்று முதலில் சொல்லுங்கள். யார் எழுதினார்கள் என்று நான் பிறகு சொல்லுகிறேன்” என்று வாதிட்ட அந்தக் குரல் மட்டும்தான் தலித்துகளுக்கு ஆதரவாக ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தக் குரல் கரிகாலனுக்குரியது.

இருந்தாலும் சுகிர்தராணி எப்படி அப்படிப் பேசலாம் என்றது இன்னொரு குரல். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டச் சத்தங்களுக்கிடையில் மதிவண்ணன் பற்றிய அவ தூறான பேச்சுகள் கேட்டன. அ. மார்க்ஸூக்கு எதிராக அவர் எழுப்பிய கேள்வி பலரை ஆழமாகச் சீண்டியிருந்தது உரையாடலில் வெளிப்பட்டது. எல்லாக் கூட்டங்களிலும் பிரச்சினை செய்பவர் அவர், எனவே அவரைப் பொருட்படுத்த வேண்டாம் என்றெல்லாம் பேசினார்கள். தலித்துகள் பற்றிய இழிவான பார்வை அவ்வுரையாடல்களில் ஊடாடியது. கீழ்த்தளத்தில் தங்கியிருந்த மதிவண்ணன் இவற்றை அறியவில்லை. கொண்டாட்டங்கள் நடந்த மேல்தளத்தில் என் அறைக்குப் பக்கத்து அறையிலிருந்த மதிவண்ணனின் மனைவி இந்த அவதூறுகளைக் கேட்டு இரவெல்லாம் அழுத கண்களுடன் காலை ஆறு மணிக்கு மதிவண்ணனை அழைத்துக் கொண்டு அவ்வரங்கை விட்டு வெளியேறினார். பிறகு என்னுடன் பேசிய மதிவண்ணனைச் சமூகத்தில் எதிர்கொள்ளும் அதே ஆதிக்கச் சாதி உணர்வுகள் இலக்கிய அரங்கிலும் வெளிப்பட்டதில் அவர் மனைவி அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். இவ்வாறு தலித்துகளுக்கு எதிரான மனநிலையைக் கொண்டாட்டத்திற்குரிய குடி அங்கு ஏற்படுத்தியிருந்தது. பெரும்பாலான தலித்துகள் அக்கொண்டாட்டத்தில் இல்லாதபோது அவர்களைப் பற்றி விவாதித்தது நேர்மையற்ற செயலாகவே எனக்குத் தோன்றியது. ஆதிக்கத்தின் நனவிலி மனநிலையையும் தலித்துகளின் நனவு மனநிலையையும் அச்சூழலில் நேர்ப்படுத்த முடியாது என்பதால் அமைதி காத்தேன்.

முழுவதும் மதுவின் பிடியிலிருந்த ‘இளங்கவிஞர்’ ஒருவரின் ஆதிக்க மனோபாவத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கொண்டாட்டச் சூழலில் ததும்பிய தலித் எதிர்ப்பு மனோபாவத்தின் தொடர்ச்சியாக யாழன் ஆதி தங்கியிருந்த கீழ்அறைக்குச் சென்று தலித்துகள் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாமா? கேட்கலாமா? என்று தாயைக் கேவலப்படுத்தும் வார்த்தைகளோடு ஏராளமான ஆபாச வசவுச் சொற்களைக் கொண்டு திட்டியிருக்கிறார் அந்த ‘இளங்கவிஞர்’. யாழன்ஆதி நிதானமாக இருந்ததால் சூழலைக் கருதி அவரும் அமைதி காத்திருக்கிறார்.

சில நாட்களுக்குப் பிறகு லீனா மணிமேகலையும் செல்மாவும் யாழனைத் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசிய ‘இளங்கவிஞரை’ நீங்கள் அடிக்க வேண்டியதுதானே என்று கேட்டிருக்கிறார்கள். கருத்தியல்ரீதியாக இயங்கிக்கொண்டிருக்கும் தலித் படைப்பாளிகளை வன்முறையாளர்களாக மாற்றி, அவர்களைக் காலிசெய்யும் எண்ணத்தின் வெளிப்பாடுதான் அது.

தலித்துகள் இவ்வளவுதான் கேட்க வேண்டும், பேச வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுப்பதும் ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான். ஆகவே தற்போதைய இலக்கியக் கூட்டங்கள் முடிந்ததும் நடந்து வருகின்ற குடி இரவுகள் பெரும்பாலும் சாதியைக் கட்டிக்காக்கின்ற, ஆதிக்கத்தை நிலைநிறுத்துகின்ற, வன்மத்தை வளர்க்கின்ற இரவுகளாக முகம் காட்டுகின்றன. பலரின் ‘தலித் உணர்வு’ போலிமுகத்தையும் தோலுரித்துக்காட்டுகின்றன.

பிறகு ஒருநாள் அந்த ‘இளங் கவிஞர்’ என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டார். தான் தலித்துகளை ஆபாசமாகத் திட்டவில்லை என்றும் அப்படித் திட்டியிருந்தால் என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். நானும் மன்னித்துவிட்டேன். ஆதிக்கச் சாதியினர் தலித்துகளிடம் மன்னிப்பு கேட்பதேகூட தலித் விடுதலையின் அறிகுறிதான்.

கொல்வோம் அரசனை - 2

காதற்ற ஊசிகள்






வேறெப்போதையும்விட உரையாடலின் போது ஒரு தனி மனிதனின் ஆளுமையும் உள்நோக்கங்களும் எளிதில் புரிந்து விடுகின்றன. ஒரு பேராசிரியர் தனது வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் அவர் சென்ற தேசங்களின் நிலவெளிகள் விரியும்படியான கதைகளையெல்லாம் சொல்லி முடித்தப் பின்பு மேலை நாடுகளின் ஆய்வு முறைகளையும் பல்கலைக்கழகங்களையும் பற்றிப்பேசினார். அங்குள்ள மாணவர்கள் படிக்கும் போது மிகுந்த ஆய்வுமனப்பான்மையுடன் இயங்குவதாகவும் படித்து வெளியேறியதும் அவர்களின் அடிப்படைச் சிந்தனையாக இன உணர்வு பீடித்துக்கொள்கிறது என்றும் கூறினார். வெள்ளையின மக்கள் கறுப்பின மக்கள் மீது காட்டும் வெறுப்புணர்வை அநியாயத்துக்குக் கடிந்து கொண்டார். இத்துடன் அவர் முடித்திருந்தாரென்றால் அவரைப்பற்றிய எனது எண்ணம் மாறியிருக்காது. தொடர்ந்து அவர் பேசியது அவரது ஆசிரியப்புலமையை எடுத்தியம்புவதாகவே இருந்தது. இந்தியாவில் சாதிக்கொடுமையென்றெல்லாம் ஏதுமில்லை. அநியாயத்துக்குக் கூப்பாடு போடுகிறார்கள். வேலைப் பாகுபாட்டின் வடிவத்தை சாதிப்பாடுபாடு என்று திரிக்கிறார்கள். நாயர் சமூகத்தைச்சேர்ந்த அவரின் மனக்கொதிப்பு பிரிட்டிஷார் மீது திரும்பி, அவர்களின் துப்பாக்கியால் எப்படி கூட்டம் கூட்டமாக நாயர்களை அவர்கள் கொன்று போட்டனர் எனப் புலம்பிக் கொண்டே வந்தார்.


ஒரே நெடுஞ்சாலையை மட்டும் கொண்டதன்று வரலாறு என்பது. பல கிளைச் சாலைகளையும் பல ஒரு வழிப்பாதைகளையும் கொண்டும் அவை பயணிக்கின்றன. ஆகவே அவர் அறியாத வரலாற்றையும் அவர் அறிய விரும்பாத வரலாற்றையும் நானும் என்னைப்போல பலரும் அறிய முயல வேண்டியிருக்கிறது. இருளடைந்த பக்கங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சவேண்டியிருக்கிறது. அவர் மீது மிகுந்த இரக்கம் ஏற்பட்டதுடன் நீங்கள் பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது என்று எடுத்துச்சொல்லவெண்டியிருந்தது.

மேலை நாட்டு கறுப்பின மக்களின் மீது அபரிமிதமான கரிசனம் காட்டும் அவருக்கு தமது நாயர் மக்களை, சாதி வன்மத்துடனும் அதிகாரத்துடனும் இயங்கிய அவர்களை பிரிட்டாஷார் கோபித்துக்கொண்டது எரிச்சலாக இருக்கிறது. இந்தியாவின் வர்ண பேதத்தை வேலைப்பகிர்வுக்கான ஏற்பாடு என்று தனது அறியாமையை வெளிப்படுத்தும் துணிவைத் தருகிறது. மலம் அள்ளும் வேலையை இவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் விட்டது பிரிட்டாஷார்களின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது.


தமிழகத்தில் பல சுற்று உரையாடல்களும் பிரச்சாரங்களும் ஏற்பட்ட பின்பும் சாதிச்சட்டகத்தின் துலங்காத பக்கங்கள் இன்னும் நிறைய இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை. அரசியலிலும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் அதன் விரிவான செயல்பாடுகளை எடுத்துப் பேசுவற்கான இயந்திரங்கள் செயலிழந்து போய்விட்டதாகவே தோன்றுகிறது. அரசியல் தளத்தின் மூர்க்கமான சக்கரங்களால் அரைபடும் நுண்ணிய உறுப்புகளுடைய வரலாறு பற்றி எவருக்குமே எந்த கவலையுமே இல்லை.





தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றிய புத்தகங்கள் கொண்டிருக்கும் நுண்ணிய மெளன இடைவெளிகள் காட்சிகளாகப் புரிந்து கொள்ள முடியாதவை. மேலும் தோற்றவர்களின் வரலாறுகளுக்கு அரசியலில் இடமில்லை என்பதும் கண்கூடு. இந்நிலையில் அரசு உருவாக்கத்தைக் கண்டு எள்ளி நகையாடாமல் இருக்கமுடியவில்லை. நுண்ணிய பிணக்குகளும் சுணக்கங்களும் கொடிய நஞ்சை நாளுக்கு நாள் இரத்தில் கலக்கும் பண்பாட்டின் விளைவுகள் அல்லாமல் வேறென்ன?


வரலாறு என்பது அரசுடையதும் அரசினைக் காபந்து செய்தவர்களைப் பற்றியதுமாக இருக்கிறது. பேணப்படும் போற்றப்படும் இலக்கியங்களும் அவ்வாறே. மற்றெல்லா சமூகத்தினரும் அரசின் உருவாக்கத்தில் கொள்ளும் பங்கேற்புகள் நேரடியானவை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு விலங்குகளைப்போன்ற இடம் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. அடக்கமுடியாத ஆத்திரங்கள் எல்லாம் அரசனோடும் அரசோடும் நெருக்கமான உறவு கொண்டோருக்கு மட்டுமே இருக்கிறது. அந்த ஆத்திரமும் அரசாங்க அதிகாரத்தில் தனக்கான பங்கு குறித்த சுயநலத்தோடும் பேராசையோடும் எழுந்த குரலாக இருக்கிறது.


தமிழக அரசியல் வீழ்ச்சி காலந்தோறும் ஒரு சீரிய வகையினால் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தத்துவச்செறிவு அற்ற ஒரு அரசு நிறுவப்படுவதும் காலப்பொருத்தமற்ற பாங்குகளுடன் அந்த அரசு இயங்குவதும் அந்த வீழ்ச்சியை நிலைப்படுத்துகின்றது. பிராமணிய எதிர்ப்பை தனது ஒரு நீண்ட கால அரசியல் இலட்சியமாகக் கொண்டிருந்த தமிழகத்தில் இன்று கெட்டிப்பட்டுபோயிருப்பது இடைநிலை சாதிகளின் அதிகாரமயமாக்கமே. சாதி ஒழிப்பு என்பது வெறும் கண்துடைப்பு என்பது புரிந்து விட்டது. பிராமணிய ஆதிக்கம் இவர்களுக்கு எரிச்சலைக்கொடுத்தது அவ்வகையான வன்கொடுமையை தான் இழைக்கும் அதிகாரம் தனக்கு இல்லாமல் போனதால்தான் என்பது வெளிப்படையாகிறது. இந்நிலையில் ஓர் அரசன் மிக எளிதாக முளைத்து விடமுடிகிறது. அவனால் மேற்சொன்ன பேராசிரியரைப்போல தனது அறியாமையைக் காலந்தோறும் கொண்டாடியதைப் போலவே கொண்டாட முடிகிறது. அவர்களின் உரையாடல்களில் எப்பொழுதும் ஒரு புனைவு கைகால்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அது தன்னை அரசனின் சேவகனாக இந்த மண்ணின் மைந்தனாக நாட்டுப்பற்று உடையவனாக அப்படி இருப்பது வெறுமனே ஒரு பழக்கமாக வெளிப்படுத்திக் கொள்கிறது.
இருள் முற்றிப்போன காலங்களையெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உயிர்ப்பான சிந்தனையாலும் பூமியில் புதையுண்ட வேர்களாகவும் எதிர்கொண்டு தங்களைத் தற்காத்துக்கொண்டிருக்கின்றனர். நியாயமாக அரசனைக்கொல்லும் அதிகாரமும் அரசனாகும் அதிகாரமும் இவர்களுக்கு கிடைக்கவேண்டும். இளைத்த அரசர்களாக ஆகிவிட்டனர் அதிகாரவர்க்கத்தினர். அவர்களின் வரலாறும் அரசியலும் பண்பாடும் உரையாடலும் தந்திரங்களால் மலிந்து அவர்கள் நசுங்கிய பிளாஸ்டிக் பொம்மைகளாக இருக்கின்றனர். அவர்களின் உரையாடலில் விரவிக்கிடக்கும் பூடகங்களும் வெளிப்படையான சாமார்த்தியங்களும் தன்னளவில் தான் ஓர் அரசனாகப் பரிணமிப்பதிலேயே இருக்கிறது. அதற்கான எந்த ஒரு தகுதியையும் பண்பாட்டையும் தாம் பெற்றிராமல் அரசியல் வித்தகர்களாக தங்களை மாற்றிக்கொள்ளும் சூழ்ச்சி தொடந்து கொண்டேயிருக்கிறது.
நாம் வேகவேகமாக உரையாடலின் போக்குகளை மாற்றிக் கொள்ளவே வேண்டியிருக்கிறது. நமது சொற்ப வெற்றியால் ஆதிக்க அதிகாரத்தை நாம் கழுத்தைப் பிடித்து நெறித்துவிட்டதாகக் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். அவர்களின் மெளனம் நம்மை அவ்வாறு ஆற்றுப்படுத்துகிறது. ஆனால் அவர்கள் தங்களின் உரையாடல்களை சதிகளாக மாற்றிக்கொண்டார்கள். வரலாற்றின் நுணுக்கங்களைத்தேடிப்பிடித்து புனைவுகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவை கடந்த கால அரசர்களின் வரலாறுகளாக இருக்கின்றன. அந்த அரசர்களின் பராக்கிரமங்களை வல்லமைகளை மீண்டும் ஒருமுறை எழுதிவைக்கத் துடிக்கிறார்கள். அதே அரசர்களின் இடங்களில் தங்களை அமரவைத்துப் பார்த்து எல்லோரின் கழுத்தையும் தாமும் நெறித்துப்பார்க்கும் கற்பனைத்திறன் அவர்களிடம் மிகுதியாக இருக்கிறது. ஒரு வரலாற்றுக் கல்வெட்டையும் கல்தூணையும்கூட அவர்கள் விடுவதாயில்லை. அவற்றின் இடுக்குகளுக்கிடையே ஏதேனும் அரசன் ஒளிந்திருக்கின்றானா எனத் தேடிப்பார்க்கின்றனர். இப்படியாக அவர்கள் தங்களை உறக்கமில்லாமல் வைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு தேடியலையும் காலக்கட்டத்தில் அவர்களுக்கு உணவுப்பற்றாக்குறையே ஏற்படுவதில்லை.


ஒரு நாட்டின் பருவத்தைத்தீர்மானிப்பவனாக அரசன் இருக்க வேண்டியதில்லை. மக்களின் பண்பாடும் சமூக எழுச்சியுமே அதைத் தீர்மானிக்கின்றது என்பதையும் அரசனுக்கு நாம் உணர்த்தவேண்டியிருக்கிறது. ஒடுக்குமுறையை செயல்படுத்தும் ஆண்மை மட்டுமே ஓர் அரசை நிறுவப் போதுமானதென்ற கற்பனை நொறுக்கப்படவேண்டும். அந்த ஆண்மையைக் கட்டமைக்கும் அரச சாதனம் பெரும்பாலும் வரலாற்றிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. அந்த வரலாற்றினால் இன்றைய இந்த மண் உயிர்த்திருக்கவில்லை என்பதை வரலாறாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆண்மையைக் கொன்று பார்க்கலாம் அதற்கு. ஒரு தற்காலிக நெருக்கடியையேனும் அதற்கு கொடுக்கமுடியுமெனில் அது வெற்றி தான். புலம் பெயர்ந்த இலங்கைக்கவிஞர் பானுபாரதியின் கவிதை அதைச்செய்ய முடியுமென சொல்கிறது.



எருமையின் முதுகுதோலில் துளையிட்டு
உட்புகுந்த மழைத்துளிபோல்
எனது வார்த்தைகள்
உனது ஆண்மைக்குள் புகுந்து குடைகிறதென்பதை
நீ தூக்கம் தொலைந்து
இரவுகளை
புகை வளையங்களால் நிரப்பிக்கொள்வதிலிருந்து
புரிந்து கொள்ள முடிகின்றது
எறிகணையின் வலிமையோடு
எறியப்படும் உனதொவ்வொரு வார்த்தைகளும்
தோற்றுப்போய் விழுகின்றன நேர்மை வயப்படாத்தினால்


வானம் நீலமென்கிறாய்
கடல் உப்பென்கிறாய்
முத்தம் இனிப்பென்கிறாய்
வியர்வை சூடென்கிறாய்
விந்து குளிரென்கிறாய்
ஆண்மை அதுவே, அதற்கே அனைத்துமென்கிறாய்

நல்லது
போதனைக்கு நன்றி
ஆண்மை அரியாசனத்திலிருந்து இறங்கிவர
நீ மறுக்கும் ஒவ்வொரு கணமும்
கலவியின் உச்சநிலையில் சோர்ந்து சூம்பிக்கிடக்கும்
ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது

வோட்கா நிரப்பப்பட்ட
உனது கண்ணாடிக்குவளையில்
எலுமிச்சைச்சீவல்கள்
எனது கனவுகளோடு வாழ்வும்
கரைந்து போனதேன் என்ற
எனதொரு கேள்விக்கு உன்னிடமும் விடையில்லை
உன்னைப்படைத்த
உன்னப்பனின் ஆண்மையிடமும்
விடையிருக்கப்போவதில்லை


அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்
சிதறு தேங்காய்போல்
உனதாண்மை நொறுக்கப்படும்போது
வோட்காவிலும் பியரிலும்
கரைந்துபோன கணங்களிலிருந்து
எனக்கான பதில் கண்டடையக்கூடும்

அல்லது
இரத்தமும் வியர்வையும் தெறித்துச்சிதற
ஆண்மையை
அறுத்தெறியும் திராணியுண்டாயின்
வா பேசுவோம்
சுதந்திரமான வார்த்தைகளின் அக்களிப்போடு



குட்டி ரேவதி





நன்றி: உன்னதம் இதழ்

கொல்வோம் அரசனை 1

செங்கோல் தரும் வலி


அரசனின் உருவகங்கள் பூமியில் பெருகிக்கொண்டேயிருக்கின்றன. அவை ஏற்கெனவே இலங்கிய அரசர்களின் பிரதிகளாயோ அல்லது அந்த அரசர்களின் பிரதிகளை தோற்கடிக்கும் நகல்களாயோ துலக்கம் பெறுகின்றன. அரசர்களின் குணநலன்களைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் பெரிய வித்தியாசமிருப்பதில்லை.

வரலாற்றிலும் வாழ்க்கையிலும் அத்தகைய அரசர்களின் உருவகங்களைக் கண்டடையும் முயற்சியையும், அவற்றை விமர்சிக்கும் பண்பாடும், யதார்த்தம் மீறுகையில் அவ்வுருவகங்களைக் களையும் தீரமும் தேவைப்படுவதை புறந்தள்ள முடியாது. ஏனெனில் அரசர்கள் மாய்ந்தாலும் காலங்களுக்குப் பின்னும் அவர்களை அழிக்க முடிவதில்லை. அவர்களின் கொடுஞ்செயல்கள் உறக்கம் பெறுவதில்லை. பூமியின் அதிகார சட்டகத்தில் அரசர்கள் அறையப்பட்ட ஆணிகளாய் ஆகிவிடுகின்றனர்.

வரலாற்றில் முன்னோக்கி நகர்ந்தாலும் பின்னோக்கிச் சென்றாலும் அரசன் எனும் அதிகார பிம்பம் எங்கெங்கும் எதிரொளியாய் நெளிந்து கொண்டிருக்கும். அதிகாரப் பூர்வமான பேரரசுகள் எல்லாமே வீரத்தாலும் தந்திரத்தாலும் பலத்தாலும் வெல்லக்கூடிய ஓர் ஆணால் உருவாக்கப்பட்டதாகவே நமக்குக் கதைகளும் வரலாறுகளும் வழங்கப் படுகின்றன. அத்தகைய ஓர் ஆணே அரசன் எனப்படுகிறான். ஆனால் பேரரசின் எல்லா அறைகளிலும் பாதைகளிலும் மூலை முடுக்குகளிலும் வாசற்படிகளிலும் ஜன்னல் வெளிகளிலும் பெண்கள் இருந்து கொண்டே இருந்தனர் என்றாலும் அரசன் எனும் பிம்பமே காலந்தோறும் உருவாக்கப்பட்டதும் நிறுவப்பட்டதும். பின்னும் அத்தகைய பிம்பங்களுக்கு வார்ப்புகளாகிப் போவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.


அரசன் எனப்படுவோன் இங்கே ஒரு நாட்டை சிற்றரசை பேரரசை ஆட்சி செய்வோனாக மட்டுமில்லை. பலவீனமான மக்கள் குழுமத்தை இன்னும் ஒடுக்கும் அதட்டி சிறுமைப்படுத்தும் ஒரு செங்கோலைக் கொண்டிருப்பவனாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவனுக்கு விதவிதமான எல்லைகள் உண்டு. ஒரு நாட்டின் பூகோளத்தின் வரவெல்லை மட்டுமேயன்றி ஒரு குறிப்பிட்ட பண்புக்கு இயங்கு சக்தியாக இருக்கும் மக்கள் குழுமமே கூட அவனது வரவெல்லை என்றாலும் அவன் செலுத்தும் ஆட்சி சாதாரண பலம் கொண்டதன்று. பல நிலைகளில் நோக்கும்போது ஒரு பெண்ணின் மனவெல்லை கூட அவன் பேராட்சி செய்ய வரைவெல்லையாகிவிடும்.

எனில் அரசன் என்போன் உருவாகும் அரசியலை மானுட வரலாற்றின் வழியாக ஊடுருவிக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அரசன் சார்ந்த சமூகத்தின் குற்றங்கள் எனப்படுபவை அரசனின் அன்றாட வழக்கங்களாயும் மக்களுக்கு அவை தண்டனைகளைப் பெற்றுத்தரும். குற்றவுணர்வை விடாது கிளறிக்கொண்டேயிருக்கும் அசம்பாவிதங்களாகவும் மாறிவிடுகின்றன. அரசனை வரையறுப்பதென்பது தடித்த சப்தங்களுடன் அதிரும் ஆதிக்கக் காலணிகள், எவரோடும் சமதையற்ற அரியணை, இயல்பான உடல் அசைவுகள் வெட்டி நீக்கப்பட்ட தோரணைகள். தலைக்குக் கனமேற்றும் கிரீடம், எல்லோரையும் பொம்மையைப் போல ஆட்டுவிக்கும் செங்கொல் இவற்றுடனான அதிகாரத்திற்கான விசையை உடலாகக் கொண்டிருக்கும் ஒரு மனித உயிர் என்பது.

இப்படியான அரசன் வரலாறு முழுமையும் ஓர் ஆணாகவே இருந்ததன் பொறாமையேதும் நமக்கில்லை. ஆனால் அவன் அதன் வழியாக செதுக்கிக்கொண்ட ஆண் எனும் சமூக உயிரி, ஆணாதிக்கம், அதிகாரம், அரசியல், ஆட்சியெல்லை என்பவை முற்றிலும் பெண்ணினத்துக்கும் நலிந்தோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் எதிராக இருந்து கொண்டேயிருக்கிறது. அடிப்படையில் இப்படியான பேரரசுகளும் பேரரசர்களும் உருவாக பெண்களின் இரக்கமும் உழைப்பும் ஆற்றலும் மிகுந்த பேராசையுடன் குடிக்கப்பட்டிருக்கிறது. அரசர்களின் மறு உற்பத்திக்கு பெண்கள் தாதிகளாக இருக்கப் பணிக்கப்படுகின்றனர். ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். பேரரசின் விரிவாக்கங்களுக்கு பெண்களின் ஆளுமைகளைச் சிதைப்பது என்பது ஒரு தொற்று நோயாக இருந்து கொண்டேயிருக்கிறது.

இத்தகைய பேரரசு உருவாக்கத்தாலும் அவற்றின் விரிவாக்கத்தாலும் பல வருடங்களாகத் தொடர்ந்து ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்கும் ஒற்றைப் படித்தான பெண்களாக நமது மூதாதைப் பெண்கள் மாற வேண்டியிருந்தது. அது குறித்த அவமானத்தையும் ஆற்றாமையையும் சுமக்க வேண்டியிருந்தது. ஓர் அரசனின் மறு உற்பத்திப் பணிக்கெனவும் பாலியல் ஆதிக்கத்தை நிரூபிக்கவும் பெண்களைத் தொடர்ந்து வழங்குவது என்பது கூட அவனது பேரரசின் அதிகாரத்தை மறு உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றே. 1788-ல் ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் நாடு கடத்தப்பட்ட முன்னூற்றுக்கும் மேலான பெண்கைதிகள் கரையிறங்கும்போது அவர்கள் அனைவரும் ஆண்களின் நுகர்வுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படும் விபச்சாரிகளாகவே அணுகப்பட்டனர். அவர்கள் காலிறங்கிய காலனி முழுதும் ஒரு விபச்சார விடுதியாகவே மாறியது. பெண்ணின் விருப்பத்திற்கு எதிரான பாலியல் நடவடிக்கையை இங்கே நாம் விபச்சாரம் என்றே கூறுவோம். ஏற்கெனவே நாடு கடத்தப்பட்ட பெண்கைதிகள் என்ற நிலையிலும் விபச்சாரிகள் என்ற நிலையிலும் இரண்டடுக்கு அதிகார நசிவிற்கும் இழிவிற்கும் பெண்கள் உள்ளாவதை உணர இயலும்.



இவ்வாறு பெண் என்பவள் பேரரசனின் மனைவியாக இருந்தாலும் ஒரு கடைநிலை குடிமகனின் மனைவியாக இருந்தாலும் இரண்டு எதிரெதிர் அதிகார நிலையிலிருக்கும் ஆண்களுக்குமே பெண் என்பவள் கையகப்படுத்தப்படும் ஓர் உயிர்ப்பொருள். அதன் மீது தான் மேலதிகமான உரிமை கொள்ள முடியும் தனது அதிகாரத்தைச் செலுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து வேறுபட்ட சமூக உறவு நிலைகளை மேற்கொண்டு அதாவது தந்தை, கணவன், அதிகாரி, தலைவன், அரசன் என அதிகார நிர்வாகத்தை எடுத்துக் கொள்கிறான். ஓர் அரசன் என்போனும் தந்தை என்போனும் ஆணே என்றாலும் இருவருமே பெண் மீது செலுத்தும் அதிகார முறைகளும் அதன் தொழில் நுட்பமும் வேறு வேறானது என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தான் முழுமையான சமூக மாற்றம் சாத்தியமாகும்.


பெண்ணினத்தை மிதமிஞ்சிய அளவுக்குப் போகிக்கும் பேரரசு வர்க்கமும் அவ்வினத்தின் மீது தமது அதிகாரக் குறியீடுகளாலும் ஆதிக்கக் கருவிகளாலும் வெறுப்பையும் உமிழ்ந்து கொண்டேயிருக்கின்றது. தனது பாலியல் நுகர்வுக்கும், இச்சைக்கும் பலியாகும் பெண்ணை வேசி என்று இழிவு அடையாளம் தருவதும் செவ்வியல் பெண் பிம்பங்களை அவர்கள் வாழ்ந்த காலங்களோடு தொடர்புப்படுத்தி நோக்காது தம் குடிப் பெண்கள் மீது திணிப்பதும் அரசனின் ஆதிக்க சூழ்ச்சிகளாக இருக்கின்றன. அந்த செவ்வியல் பெண்பிம்பங்களே மிகுதியும் போலிமைகளால், அரசனின் கற்பிதங்களால் செதுக்கப்பட்டவளாயிருப்பாள்.


இலங்கைக் கவிஞர் அனாரின் ‘உரித்தில்லாத காட்டின் அரசன்’ எனும் கவிதை அரசனின் கவர்ச்சியான பிம்பத்தையும் அதற்கு இரையாகும் பெண்ணின் பிம்பத்தையும் எதிர் வைத்துப் பேசுகிறது.
”மலைகளுக்கப்பால்
சூரியனுக்குப் பதிலாக நீ எழுந்து
வளர்கிறாய்
பனிமூடிய முகடுகளை
விலக்கி அமர்ந்திருக்கிறாய்
கடும் பச்சை நிற, சுருண்ட தலைகளுடன்
அடர்ந்திருக்கிறது என் காதல் காடு
காட்டின் அரசனாகப் பிரகடனப்படுத்தி
ஒளிர்வுக்கிரணங்களால் நுனி வேர்வரை ஊடுருவி
தழுவிச் சிலிர்க்க வைத்து ஆட்சி செய்கிறாய்
வளைந்த பாதைகளில் நதியைப் போல இறங்கி உருள்கிறேன்
உன்னிடம் இறக்கைகள் இருக்கின்றன
எல்லா இடுக்குகளிலும்
என்னைக் கவ்விப் பறக்கிறாய்
காடு முழுவதிலும் மேய்கின்றன
நம் கவிதைகள்
உள் நுழைந்தவனின்
பிரகாசமும் பாடலும்
ரகசியப் பூட்டுக்களை திறக்கின்றன
இனி
அரசன் கீறிவிட்ட காயங்கள்
என் காடெங்கும் பூப்பெய்யும்
கமழும் அஸ்தமனம் வரை”

இக்கவிதையில் பேசும் பெண்ணின் குரல் காதலால் கவ்வப்பட்ட பெண்ணினுடையது மட்டுமன்று. தன் மீது ஆளுகை செய்யும் ஆணின் கவர்ச்சியை இயற்கை மீது ஏற்றிக்கூறும் நுட்பமும் மிக்கது. இங்கு அரசன், தன்னை அரசனாகவே பிரகடனப்படுத்திக் கொள்வதோடு அத்தகைய ஆட்சிக்கான எல்லா அம்சங்களையும் கூட தன்னகத்தே கொண்டிருக்கிறான்.
’கொல்வோம் அரசனை’ என்ற இக்கட்டுரைப் பயணத்தில், நாம் சிக்குண்டுள்ள அரசனின் கொடுங்கனவுகளிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள தொடர்ந்து முயலலாம். ஏனெனில் நமது சமகாலமும் சமவாழ்வும் கூட அரசனின் பிம்பங்களால் சூறையாடப் பட்டிருக்கின்றன. மேலும் தனது வாரிசுகளை அப்பிம்பத்தின் வார்ப்புகளாகவும் ஆக்கிக் கொள்கிறான் அந்த அரசன்.

அரியணையைச் சூடேற்றுகின்றன அவனது பிட்டங்கள். அவனது சூதாட்டங்களில் இடையறாது வெட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன நமது கனவுகள். நலிந்த, ஆதிக்கச் சுமைகளுக்குக் கீழே அழுந்திய மனிதனை மரணப்படுக்கையில் உறங்கச் சொல்கின்றன அவனது அறிக்கைகள். அவனது செங்கோல் தரும் வலி அளவிலாதது.




குட்டி ரேவதி

நன்றி: உன்னதம் இதழ்