12 அக்டோபர், 2012

அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்

வலிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன்


நான் எப்படி பைத்தியமானேன் என்று கேட்கிறீர்களா?

பல கடவுள்கள் பிறப்பதற்கு, நீண்ட நாட்களுக்கு முன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஒருநாள் எழுந்தபோது, என்னுடைய முகமூடிகள் திருட்டுப் போயிருந்ததைக் கண்டேன். என்னுடைய ஏழு பிறப்புகளில் என்னை அலங்கரித்த ஏழு முகமூடிகள் அவை.

‘திருடர்கள், சபிக்கப்பட்ட திருடர்கள்’ என்று கத்திக்கொண்டே தெருவில் இறங்கி ஓடினேன்.

ஆண்களும், பெண்களும் என்னைக் கண்டு சிரித்தனர். சிலர் என்னைக் கண்டு பயந்து வீட்டுக்குள் ஓடினர்.

நான் கடைவீதியை அடைந்தபோது, கூரையில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன், ‘இதோ ஒரு பைத்தியக்காரன்’ என்று என்னைப் பார்த்துக் கத்தினான். அவன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்தபோது, முகமூடியற்ற என் முகத்தை சூரியன், முதல் முறையாக முத்தமிட்டது. என் ஆன்மா ஆழமான காதலில் விழுந்தது. அதுமுதல் எனக்கு முகமூடிகள் தேவைப்படவில்லை. ஆழ்ந்த அமைதியிலிருந்தபடி, ‘திருடர்கள், ஆசிர்வதிக்கப்பட்ட திருடர்கள்’ என்று அழுதேன்.

இப்படித்தான் நான் பைத்தியமானேன்.

என்னுடைய பைத்தியக்காரத்தனத்தில், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் கண்டுகொண்டேன்; தனிமையின் சுதந்திரம் மற்றும் புரிந்துகொள்ளப் படுவதிலிருந்து பாதுகாப்பு; நம்மைப் புரிந்து கொள்வதன்மூலம், நம்மில் எதையோ அடிமையாக்குபவர்களிடம் இருந்து.

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கர்வப்படாமல் இருக்கட்டும். சிறையிலிருக்கும் திருடன்கூட, இன்னொரு திருடனிடமிருந்து பாதுகாப்பாகவே இருக்கிறான்.
*
சூரிய உதயத்தின்போது ஒரு நரி தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக் கொண்டது, ‘இன்று உணவாக ஒரு ஒட்டகத்தை சாப்பிடுவேன்’.

பிறகு, பகல் முழுவதும் ஒட்டகத்தைத் தேடி அலைந்தது.

மதியத்தில் தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக்கொண்டது, ‘ஒரு எலியே போதும்’.
*

நேற்று இரவு ஒரு புதிய சந்தோஷத்தைக் கண்டுபிடித்தேன். அதை முயன்றுகொண்டிருந்தபோது, ஒரு தேவனும், அசுரனும் வேகமாக வந்தார்கள். என் வீட்டுக் கதவருகே சந்தித்துக் கொண்ட அவர்கள், என்னுடைய சந்தோஷத்தைக் கண்டு, சண்டையிடத் தொடங்கினார்கள்; ‘அது மிகவும் புனிதமானது’, ‘இல்லை அது பாவச் செயல்’ என்று.

*

கலீல் ஜிப்ரான் கவிதைகள்.

○ நீ இறக்கும் வரையில் உன் மதிப்பை எங்களால் புரிந்துகொள்ள முடியாது என்று 


ஒரு கவிஞனிடம் கூறினேன்… அதற்கு அவன்,

“ஆம்…. மரணம் உண்மையை உரைக்கக் கூடியது. அப்போது, நான் சொன்னதைவிட செய்தது அதிகம் என்றும், செய்ததைவிட செய்யவிரும்பியது அதிகம் என்றும் தெரியவரும் என்றான்.


○ நினைவு கூர்தலும் ஒருவகை சந்திப்புதான்.


○ மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை… 
அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது..!


○ நான் பேசுவதில் பாதி அர்த்தமற்றவை….
நான் அப்படிப் பேசுவதற்குக் காரணம்….
“மீதிப் பாதியாவது உங்களைச் சென்று அடையவேண்டும்..! என்ற ஆதங்கத்தில் தான்.

○ நேற்றைகளின் கடன்களை அடைக்க நாளைகளிடம் நாம் கடன் வாங்குகிறோம்!

கடவுள் - கலீல் ஜிப்ரான்

ஆதியில், முதல் வார்த்தையின் சுவடு என் உதடுகளை அடைந்தபோது, நான் புனிதமான மலையில் ஏறி கடவுளைப் பார்த்து சொன்னேன் ‘கடவுளே, நான் உங்களின் அடிமை. தங்களின் விருப்பமே என்னுடைய விதி, நான் உங்களிடம் இன்னும் அதிகப் பணிவுடன் இருப்பேன்’.

அவர் எதுவும் பேசாமல், ஒரு புயலைப் போல வேகமாக அங்கிருந்து மறைந்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மலைக்குச் சென்று கடவுளிடம் பேசினேன். ‘என்னை உருவாக்கியவரே, நான் உங்கள் படைப்பு. ஒரு களிமண்ணிலிருந்து என்னைப் படைத்தீர்கள், நான் என்னுடைய எல்லாவற்றின் மூலமும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்’’.

அவர் எதுவும் பேசாமல், ஓராயிரம் சிறகுகள் கொண்டு பறப்பதைப் போல, அங்கிருந்து சென்றார்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புனித மலையில் ஏறி அவரிடம் சொன்னேன். ‘கடவுளே, நான் உங்கள் குழந்தை. அன்பினாலும், கருணையினாலும் நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தீர்கள். அன்பினாலும், பிரார்த்தனையினாலும் உங்கள் ராஜாங்கத்தை அடைவேன்’.

அவர் எதுவும் பேசவில்லை, தூரத்து மலையைப் பனி சூழ்வதைப்போல மெல்ல என்னைவிட்டு நகர்ந்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மலைக்குச் சென்று கடவுளிடம் சொன்னேன். ‘கடவுளே, என்னுடைய இலட்சியமே, நிறைவே! நானே உங்கள் இறந்தகாலம், நீங்களே என் எதிர்காலம். பூமிக்குள்ளிருக்கும் உங்கள் வேர் நான், வானத்திலிருக்கும் என்னுடைய மலர் நீங்கள். சூரியனுக்கு முன் நாம் இருவரும் சேர்ந்து வளர்வோம்’.

கடவுள் என்னை நோக்கிக் குனிந்து இனிமையான வார்த்தைகளை என் காதில் சொன்னார். சொல்லும்போதே நதியை அணைத்துத் தன்னுள்ளே ஓட விடும் கடலைப்போல, என்னை அணைத்துக் கொண்டார்.

நான், மலையிலிருந்து இறங்கி சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும்  அடைந்தபோது, கடவுளையும் அங்கு கண்டேன்.

- கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன் என்ற நூலிலிருந்து