09 செப்டம்பர், 2011

திரும்பி பார்க்க வைக்கும் ‘திருநங்கைகள்’


Imageவழிய வழிய மேக்கப்,தலை நிறைய முழக் கணக்கில் மல்லிகை, நெற்றி நிறையப் பொட்டு, நிமிர்ந்தும் வளைந்தும் நடை..கையைத் தட்டி காசு கேட்கும் கரகர குரல்பேருந்து நிலையங்கள், ட்ராபிக் சிக்னல்கள், கடை வீதிகள் என எங்கும் சர்வ சுதந்திரமாய் உலா...இது தான் அவர்களின் நிரந்தர அடையாளங்களாய் இருந்து வந்தன. ஆனால் இன்று..? நிலைமை மாறத் தொடங்கி இருக்கிறது,

Imageவக்கிரபுத்தி மனிதர்களின் காம இச்சை கருவிகளாய் மட்டுமே அடையாளப்பட்டு வந்த,இனம் புரியாத அந்த இருட்டுச் சமூகம் இப்பொழுது மெல்ல மெல்ல வெளிச்சத்தின் வீதிகளில் உலா வரத் தொடங்கி விட்டது.
இன்று சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆளுமை செலுத்துவோராய் அவதாரம் எடுத்து வருகின்றனர். டிவி.நிகழ்ச்சி தொகுப்பாளர்களாய், சின்னத்திரை நடிகர்களாய், வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றவர்களாய், தேர்தலில் வேட்பாளர்களாய், கணினித் துறையின் வல்லுனர்களாய், கால் சென்டரின் பணியாளர்களாய், மாடல் அழகிகளாய், இப்படி...எல்லாத் துறைகளிலும் மூன்றாம் பாலினம் என்று சொல்லக் கூடிய திருநங்கைகள் தடம் பத்திக்கத் தொடங்கி இருக்கின்றனர்.


இவர்களின் நீண்ட காலப் போராட்டத்திற்கு ஆதரவாய் ஏராளமான அரசு சாரா அமைப்புக்களும், அரசாங்கமும் உதவிககரம் நீட்ட முன்வந்திருக்கின்றன. சமீபத்தில் தமிழக அரசு அவர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆணவச் சான்றிதழான குடும்ப அட்டைகள் வழங்க முடிவு செய்துள்ளது. அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தனியாக ஒரு வாரியமும் அமைக்கப்பட்டுள்ளது.


குறைந்த காலத்துக்குள் மிகப்பெரிய கவனத்துக்கு வந்திருப்பவர் ரோஸ். தமிழ் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக நிகழ்ச்சி நடத்தும் திருநங்கை என்ற பெருமையத் தட்டிச் செல்கிறார். அதற்கான அனைத்து தகுதிகளையும் மற்ற இரு பாலினத்தவரைவிட எந்த விதத்திலும் குறைவு இல்லாமல் வைத்திருக்கிறார். இவரின் சின்னத்திரை முகம் சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் கொஞ்சம் தலை தூக்கி பார்க்க வைத்துள்ளது.


சுய தொழில் செய்வதிலும் அவர்கள் தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர். சொந்த குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட அவர்கள் இப்பொழுது அவர்களுக்கு என்று சமூக அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தவுடன் மெதுவாக குடும்பத்தினரும் சேர்த்துக் கொள்ள முன்வந்திருக்கிறார்கள்.


திருநங்கைகளை திருமணம் செய்துகொள்ளவும், அதற்கு மணமகன் வீட்டாரின் சம்மதமும் கூட கிடைக்க ஆரம்பித்துவிட்டது.


திருநங்கைகளின் அறிவுக் கூர்மை மிகவும் போற்றத்தக்க வகையில் உள்ளது,சமீபத்தில் நடைபெற்ற ஒரு வினாடி-வினா போட்டியில் அவர்கள் உடனுக்குடன் அளித்த சரியான பதில்களைக் கண்டு அனைவரும் வியந்து போயினர்.


மாடலிங், நடனம், அரசியல், கல்வி, வியாபாரம் என அவர்களின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. இந்த மாற்றம் சமீப காலமாய் மிகவும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு போபால் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஷப்னம் மௌசி -முதல் திருநங்கை எம்.எல்.ஏ,என்ற பெருமைக்குரியவராகிறார்.அதேபோல் சில காலண்டர் அட்டைகளிலும் மாடலிங் படங்களுக்கு போஸ் கொடுப்பதிலும் கூட ஷ்ரிதேவி என்பவர் ஈடுபட்டுள்ளார். மேலும் பரத நாட்டியத்தை முறைப்படி கற்று சென்னை மற்றும் மும்பை சபாக்களில் நிழ்கழ்ச்சிகளை நடத்தி வருகிறார் 27 வயதான பத்மினி. இவர் விரைவில் நடிகை குஷ்பூவுடன் சேர்ந்து ஒரு தொலைக் காட்சித் தொடரிலும் நடிக்க உள்ளார்.


மூன்றாம் பாலினம் என்று சொல்லக் கூடிய இவர்களை தனியார் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் தகுதிக்கேற்ப பணியில் அமர்த்த பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.


10 வருடத்துக்கு முன்பு இருந்த நிலைமை எவ்வளவோ மாறிவிட்டது. அவர்கள் மீதான சமூகத்தின் பார்வையும் மாறத் தொடங்கிவிட்டது. கேலி, கிண்டல் , பாரபட்சம் இவைகளை எல்லாம் தாண்டி தங்களையும் இந்த சமுதாயம் மதிக்கத் தொடங்கிவிட்டது என்கிறார் ச்தீஷாகப் பிறந்து அக்கம்மாவாக மாறி இருக்கும் பெங்களூரூ திருநங்கை.


அதை எல்லாம் தாண்டி சொந்த குடும்பத்தினரே ஒதுக்கி வைத்து அல்லது துரத்தி அடித்த காலம் போய் சக குடும்ப உறுப்பினராய் மதிக்கும் மனோ நிலை உருவாகி இருக்கிறது. இப்படி ஒதுக்கி விடப்படும் சம்பவங்கள் சில ஆண்டுகளுக்கு முன் மாதத்திற்கு 100 என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஆனால் இன்று அது வெறும் 10 முதல் 12 என்ற அளவில் குறுகி இருப்பதாக கூறுகிறார் அக்காம்மா.


தமிழக அரசு இவர்களின் வாழக்கை மேம்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கிறது.சமூக அந்தஸ்தை உயர்த்தி இருப்பது அரசாங்கம்தான்.ஒரு காலத்தில் எந்த ஆவணங்களிலும் பதிவு செய்யப்படாதவர்களை இன்று குடும்ப அட்டைதாரர்களாக்கி இந்த சமூகத்தின் சக உறுப்பினர் என்ற பெருமையை தந்திருக்கிறது என்று பூரிப்போடு சொல்கிறார்கள் திருநங்கைகள்.


பிறப்பின் விபத்துக்களாகிப்போன சக மனித உயிர்களை இந்த சமூகம் நேசிக்க்த் தொடங்கி இருப்பது...மனிதத்துக்கான அத்தியாவசிய அடையாளம்.


------அதிகாலை அசோக்http://www.adhikaalai.com
கருத்துரையிடுக