29 ஆகஸ்ட், 2011

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 1

இந்து மதம்தான் தேசபக்தியென்றும், மற்ற மதங்களெல்லாம் தேச விரோதமென்றும், சிறுபான்மை மத மக்களெல்லாம் வெளிநாடுகளின் பால் பற்று கொண்டவர்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அப்பட்டமாக பிரச்சாரம் செய்கிறது. மக்களது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் எளிய நிகழ்வுகளைக்கூட இவர்கள் தங்களது பாசிச பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுப்புத்தியில் இவர்கள் விதைக்கும் விஷம் ஆழமானது. அவற்றை வேரறுத்து புதிய கலாச்சரம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. அந்த கட்டுரைகளை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

மத மாற்றம் என்பது வெறும் கடவுளை மட்டும் மாற்றிக் கொள்ளும் விசயமல்ல. அது ஒரு தேசிய மாற்றம். இந்து மதத்திலிருக்கும் போது வணக்கம்சொன்னவர், முசுலீமாக மாறும்போது அஸ்ஸலாமு அலைக்கும்என்கிறார்.

கிறித்தவர் தோத்திரம்அல்லது குட்மார்னிங்என்கிறார். வேட்டி மாறி பேண்ட்டோ, லுங்கியோ நிரந்தர உடையாக மாறுகிறது. பெண்கள் பூச்செடி, பொட்டு வைத்து, கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றுவது நின்று போகிறது. தேங்காய் உடைத்து, குத்துவிளக்கு கற்பூரம் ஏற்றி பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கப்படுகிறது. பிறந்த நாட்களுக்குக் கோவிலுக்குப் போகும் பழக்கம் மாறி கேக் வெட்டும் பழக்கம் வருகிறது.

ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடு மாறி பலதாரமணம், விவாகரத்து செய்வதுமான கலாச்சாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பாரதத்தில் உள்ள புனித ஸ்தலங்கள் மறந்து விதேசங்களிலுள்ள மெக்கா, மெதினா, வாடிகன், கான்ஸ்டாண்டிநோபிள், ஜெருசலேம்புனித நகரங்களாகக் கருதப்படுகின்றன. முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளை முட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளர்கிறது. சித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடியது போய் ஜனவரி 1 கொண்டாடப்படுகிறது.

மொத்தத்தில் ஆன்மீக நாட்டம் நொடிந்து லோகாயதவாதம் பெருகி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற எண்ணற்ற குற்றங்கள் பெருகி வளர்கின்றன. மதமாற்றத்தில் ஏற்படும் தேசிய மாற்றங்களுக்கு இவை ஒரு சில உதாரணங்களே.
- இந்து முன்னணி வெளியிட்டிருக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்?’ என்ற வெளியீட்டில் இருந்து.
____________________________________________________________________________

) நமஸ்காரம் போய் குட்மார்னிங், தோத்திரம், அஸ்ஸலாமு அலைக்கும்.

ணக்கம் என்ற வார்த்தை பார்ப்பன இந்துப் பண்பாடல்ல என்பது முதல் விசயம். ‘நமஸ்காரத்தை’ ஒழித்து தமிழகத்தில் ‘வணக்கத்தை’க் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தின் முயற்சியாகும். அது மட்டுமல்ல, க்ஷேமம் நலமாகவும், அபேட்சகர் வேட்பாளராகவும், பொதுக்கழிப்பிட ஸ்திரீ – புருஷன், ஆண் – பெண்ணாகவும், இன்னும் ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டு மக்களுக்கு உதவி புரிந்தன. ஆனால், இன்றும் ஆர்.எஸ்.எஸ்.- இல் இருக்கும் இளித்தவாய்த் தமிழர்கள் கூட ‘நமஸ்தே ஜீ’ எனக் கூற வேண்டும் என்பதுதான் அவர்கள் மரபு.
அடுத்து, ‘குட் மார்னிங்’ சொல்பவர்களெல்லாம் கிறித்தவரா? வெள்ளையர்கள் கொண்டு வந்த மரியாதை குறித்த சொற்களும் பழக்கங்களும்தான் இந்தியாவில் பரப்பப்பட்டன; அநேக நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. அரசு அதிகார வர்க்கத்தில் தொடங்கிய இந்த ஆங்கில மரியாதையை அனைவருக்கும் பரப்பி விட்டதே ‘அவாள்’தான். இன்று ‘குட்மார்னிங்’ பழைய சம்பிரதாயமாகி, ”ஹாய், ஹல்லோ” தான் நகரங்களில் கொடிகட்டிப் பறக்கின்றது. இதைப் பரப்பிவிட்டவர்கள் பாதிரியார்களா என்ன?
தோத்திரம் என்ற சொல் ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருதச் சொல்தான். பார்ப்பனர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறியோது சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இது. அதிலும் ‘ஸ்’-ஐ உருவிவிட்டு வெறும் தோத்திரமாக்கியது தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களே.
கிறித்தவர்களின் கை குலுக்கவும், இசுலாமியர்களின் ஆரத் தழுவும் முறையும், பார்ப்பனியத்தைவிட நாகரீகமான பழக்கங்களாகும். நமஸ்காரம் என்பது கை கூப்பி, தலை தாழ்த்தி முழு உடலையும் கிடத்தி வணங்கும் முறையாகும். அதுவும் கடவுள், பார்ப்பனர்கள், மன்னர்கள், மடாதிபதிகள், மேல்சாதியினர், தற்போது தலைவர்கள் – அதிகாரவர்க்கம் – மந்திரிகள் போன்றோருக்குச் செலுத்தப்படும் அடிமைத்தனமாகும்.
மக்களுக்குள் மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி விசாரித்தல் என்பது இந்து மரபிலேயே இல்லை. பார்ப்பனியத்தின் கறைபட்ட தமிழின் ‘வணக்கமும்’ இதற்கு விதி விலக்கல்ல. முக்கியமாக நமஸ்காரம் யாரையும் தொட வேண்டிய அவசியமில்லாமல், தீண்டாமையை க்ஷேமமாகப் பாதுகாக்கிறது.
ஆக கிறித்தவ, இசுலாமிய மேலை நாட்டுப் பண்பாட்டின்படி சகமனிதனைக் கைகுலுக்கி, ஆரத்தழுவும் முறையையே நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும். இம்முறையில் தீண்டாமை ஒழிப்பும் உள்ளது. எனவே அவமரியாதையின் பிறப்பிடமான பார்ப்பனப் பண்பாட்டின் சொந்தக்காரர்களுக்கு மரியாதை குறித்துப் பேசும் அருகதையில்லை.

) வேட்டி போய் பேண்ட், லுங்கி

ந்துப் பண்பாட்டின்படி வெளி ஆடைகள் மட்டுமல்ல, உள் ஆடைகளும் மாறியிருக்கிறதா என்று ஏன் ஆராயவில்லை? கோவணம், லங்கோடு அணியாதவர்கள் எப்படி ‘இந்து’க்களாக இருக்க முடியும்? ஏதோ குர்ஆனிலும், பைபிளிலிலும் சொல்லப்பட்டிருப்பதுபோல லுங்கி இசுலாத்திற்கும், பேண்ட் கிறித்தவத்திற்கும் சொந்தமானது என்பது முழு முட்டாள்தனமாகும். அரேபியாவில் எந்த முசுலீம் லுங்கி உடுத்துகின்றான்? உடைகள் என்பது வர்க்கம், தொழில், தட்பவெப்ப நிலை சம்பந்தப்பட்டதுதான். பேண்ட் உலகத்திற்கும், லுங்கி ஆசியாவுக்கும் பொதுவான உடைகள்தான்.
உழைக்கும் மக்களுக்கு லுங்கி உடுத்தினால் வேலை செய்ய வசதியாக இருக்கிறது. லுங்கி உடுத்துபவர்கள் எல்லாம் முசுலீம்கள் என்றால் இந்துக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாகிவிடும். சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? அவ்வளவு ஏன்? ஷாகாவில் பயிற்சி பெரும் ஸ்வயம் சேவக குண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை, பெல்ட் ஷூ எல்லாம் இந்துப் பண்பாடா? இன்னும் இராணுவம், போலீசு, கமாண்டோ எல்லாருக்கும் வேட்டி, மரச்செருப்பை மட்டும் போட வைத்து பாரதப் பண்பாட்டைக் காப்பாற்றுங்கள்.  டெண்டுல்கருக்கு பஞ்சக்கச்சம் உடுத்துங்கள். பி.டி.உஷாவிற்கு மடிசார் கட்டி ஓடச் சொல்லுங்கள்.
இவற்றைவிட சட்டை, பேண்ட் துணி தயாரிக்கும் விமல், அர்விந்த், ஜே.சி.டி, குவாலியர், ரேமண்ட்ஸ், மதுரா கோட்ஸ், லட்சுமி மில் போன்ற இந்து பனியா முதலாளிகளிடம் அதை நிறுத்திவிட்டு, வேட்டி, கோவணம் லங்கோடு மட்டும் தயாரிக்க ஆணையிடுங்களேன்.

) பெண்கள் பூச்சூடி, பொட்டு வைத்து கோலமிட்டு, குத்து விளக்கு ஏற்றுவது நின்று போகிறது

வீடு வாசல் தெளித்து கோலமிட வேண்டுமென்றால் முதலில் வீடும் வாசலும் வேண்டும். அப்படியே இருந்தாலும் ‘அழகு படுத்துவது’ என்பது வர்க்கம், வசதிக்கேற்பவே மாறுகிறது. மீனவப் பெண் வீட்டின் முன் கருவாடும், விவசாயப் பெண்ணின் வீட்டில் தானியமும், குயவர் பெண் வீட்டில் களிமண் சேறும், கால்நடை வளர்க்கும் பெண்வீட்டில் புழுக்கைகளும் நிறைந்திருக்கும்.
ஆனால், பார்ப்பன – மேல்சாதி  – மேல்தட்டுப் பிரிவினரின் வீடுகள் முன் பெரிய வாசல், துளசி மாடம், சிறு கோவில், தோட்டம் எல்லாம் இருக்கும். ஏதோ உலகிலேயே இந்து வீடுதான் சுத்தமாக இருப்பது போலவும் ஏனைய வீடுகள் பன்றித் தொழுவமாக இருப்பதாகவும் இவர்கள் கூறுவது பிதற்றல். குத்து விளக்கு வகையறாவெல்லாம் என்றைக்குமே ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் பயன்படுத்தியது கிடையாது; முடியாது. முதலில் அகல் விளக்கு, காடா விளக்கு, சிம்னி, அரிக்கன் என்றுதான் மாறியது. தற்போதுதான் குத்துவிளக்கு அறிமுகமாகியது என்றாலும் அது இல்லாத வீடு  இந்து வீடில்லை என்றால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள்.
அதேபோல பட்டுச் சேலை உடுத்தி, தலை நிறைய பூச்சூடி, உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிவது மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டும்தான். உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரை இப்பேர்ப்பட்ட அலங்காரங்களெல்லாம் வெகு அரிது. மேலும் இந்த அழகுக் கலைகளெல்லாம் பெண்களைப் போகப் பொருளாக்கி நுகர்வதற்காக ஆணாதிக்கமும், மதமும், முதலாளித்துவமும் உருவாக்கிய அடிமைத்தனம்தான். எனவே அனைத்து மதங்களும் பெண்ணைப் போக பொருளாக வைப்பதற்கு விதித்திருக்கும் பூ, பொட்டு, பர்தா போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறோம். தற்போது சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் தொடங்கி ஏகப்பட்ட இந்து அப்சரஸ்கள் உலக அழகி பட்டங்களை வென்று பாரத மாதாவின் புகழை எட்டுத் திக்கும் பரப்பி வந்தாலும், அவர்கள் அழகை வளர்த்த விதமே ‘கிறித்தவ’ப் பாணியிலான மேற்கத்திய அலங்கார முறைகளில்தான்.
இது குறித்துக் கவலைப்படும் இந்து மதவெறியர்கள், இந்துப் பண்பாட்டின்படி அழகிகளை உருவாக்கி உலகை வீழ்த்துவதற்கு, காமசூத்திரம், சௌந்தர்யலகரி, கனகதாரா ஸ்தோத்திரம், ஜெயதேவரின் அஷ்டபதி போன்ற பக்தி ரசம் சொட்டும் இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வைத்துக் கல்லூரிப் பெண்களிடம் விநியோகிக்கலாம்.
அவ்வாறு செய்தால், பெண்களே இவர்களை செருப்பாலடித்து ‘ஈவ் டீசிங்’ கேஸில் பிடித்துக் கொடுப்பார்கள்.

) பாரதப் பண்பாட்டின்படி ஆரம்பிக்கப்படும் காரியங்கள் மறைந்து போதல்

விமானத் தாங்கிக் கப்பல்களோ, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளோ, அணுகுண்டு வெடிப்போ அனைத்தையும் நாள் நட்சத்திரம் பார்த்து, யாகம் வளர்த்து, கற்பூரம் – குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்துத்தான் இன்றும் இயக்கி வைக்கின்றார்கள். அன்னியச் செலாவணித் தட்டுப்பாடோ, பணவீக்கமோ என்றால் ரிசர்வ் வங்கியில் உடனே ஒரு பூசை செய்கிறார்கள். குடமுழுக்கிற்கு மட்டுமல்ல, தேர்தல் நாளையே சங்கராச்சாரிதான் குறிக்கிறார். பெரும் நிறுவனங்கள் வருடந்தோறும் தமது அலுவலகங்களை வாஸ்து சாஸ்திரப்படி கன்னாபின்னாவென்று இடித்து மாற்றுகின்றன. இந்தியா என்பது ‘பாம்பாட்டிகளின் தேசம், பண்டாரங்களின் நாடு’ என்று பெயர் வருவதற்குக் காரணமே இந்தப் பார்ப்பன முட்டாள்தனங்கள்தான்.
அறிவியல், பகுத்தறிவு, மதச்சார்பற்ற நோக்கில் முன்னேறிவரும் வாழ்க்கைக்கு மதச் சடங்குகள் தேவையில்லை. ஏனென்றால் இம்மூன்றும் வளருவதற்குத் தடைவிதித்ததே மதங்கள்தான். எனவே, இலட்சக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டு ‘பாரத பண்பாட்டின்படி’ ஆரம்பிக்கப்படும் காரியங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இவைகளுக்கு ரிப்பன் வெட்டுவது எவ்வளவோ மேல். அதிருக்கட்டும். துவக்க விழாக்களில் ‘இந்து’ குத்துவிளக்கை ‘கிறித்துவ’ மெழுதுவர்த்தியால்தான் கொளுத்துகிறார் அத்வானி. பாரதப் பண்பாட்டின்படி அவர் கையில் தீவிட்டியைக் கொடுத்து விடலாமே! பொருத்தமாகவும் இருக்கும்.

) ஒருவனுக்கு ஒருத்திஎன்ற பண்பாடு பலதாரமணம், விவாகரத்து போன்ற சீரழிவுகளுக்கு மாறுகிறது.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது இந்துப் பண்பாடல்ல. ‘ஒருத்திக்கு ஒருவன்தான்’ இந்துப் பண்பாடாகும். அதாவது ஆணுக்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவனாக முடியும். மேலும் இந்தப் பண்பாடு உலகெங்கிலும் இருக்கும் ஆணாதிக்கப் பண்பாடுதான்.
பலதாரமணத்தை ஒழித்து ‘ஒருவனுக்கு ஒருத்திதான்’ என்பதை 1950-இல் அம்பேத்கார்தான் சட்டமாகக் கொண்டு வந்தார். அதை மட்டுமல்ல, குழந்தை மணத்தடை, விதவை மறுமணம், விவாகரத்து அனைத்தையும் இந்துமத வெறியர்கள்தான் எதிர்த்தார்கள்; முசுலீம்கள் அல்ல. எனவே சமீபகாலம் வரை ஒருவன் பல பெண்களை வைத்திருப்பதுதான் இந்துப் பண்பாக இருந்தது. 7-ஆம் நூற்றாண்டிலாவது நபி நாயகம் 4 மனைவிக்கு மேல் மணக்கக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார். ஆனால், இந்து மதத்தில் 20-ம் நூற்றாண்டு வரை அந்தக் கட்டுப்பாடு கூட இல்லை என்பதே முக்கியம்.
விவாகரத்து என்பது மேற்கிலிருந்து வந்த சாபக்கேடு என்கிறார்கள். இல்லை, அது ஒரு ஜனநாயக உரிமையாகும். இந்து தர்மப்படி புல்லாகப் பொறுக்கியாக இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, விவாகரத்து ஒரு பெண்ணுக்குரிய உரிமைகளைக் கொடுக்கின்றது. எனவே, மேற்கோ, கிழக்கோ சரியான பண்பாடு எங்கிருந்து வந்தாலும் முதலில் மரியாதை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்து மத இலக்கியங்களில் தெய்வங்களும் பார்ப்பனர்களும் மாறுவேடம் பூண்டு கள்ள உளவு கொள்வது, கற்பழிப்பது என்பது சாதாரண விசயம். இத்தகைய ‘உரிமைகள்’ இன்று பறிபோன நிலையில்தான் இந்து மத வெறியர்கள், குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். இந்தக் கொடுமைகள் பெருமளவு இல்லாமல், விவாகரத்து, மறுமணம் போன்றவை நம்நாட்டு உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருந்தது. இதை எண்ணித்தான் நாம் பெருமைப்பட வேண்டும்.

) பாரத புனித ஸ்தலங்களை மறந்து விதேச புனித நகரங்களை நினைப்பது

தன்படிப் பார்த்தால் இந்துக்களின் புனித இடங்களான பசுபதிநாத் நேபாளத்திலும், கைலாயமும் மானசரோவரும் சீனாவிலும் இருக்கின்றது. இவ்விடங்களுக்குச் செல்லும் இந்துக்கள் இந்தியாவின் தேசவிரோதிகள் என்றே கருத வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவின் புத்த கயா புனிதமான இடமென்பதால், அவர்கள் அந்தந்த நாடுகளின் தேச விரோதிகளா?
அதேபோல் இந்தியாவில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகள், மொரீஷியஸ், மாலத்தீவு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் குடியேறி வாழ்கிறார்கள். இன்று அந்நாடுகளின் குடிமக்களாக, ஏன் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள். இந்தியா மறந்து போனாலும் மதம் என்ற அடிப்படையில் இங்குள்ள புனித இடங்கள்தான் அவர்களுக்கும் புனிதம். இதனால் இவர்களைத் தேசத்துரோகி என்று அந்நாடுகள் அடித்துத் துரத்தலாமா?
வாடிகனும், பெத்லஹேமும், மெக்கா, மெதினாவும் உலக கிறித்தவ, முசுலீம் மக்கள் அனைவருக்கும் புனிதமான இடங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி உலகிலுள்ள மற்ற கிறித்தவ, முசுலீம் நாட்டு மக்களுக்கு தேசபக்தி இல்லை என்றாகிறது. அல்லது உலகில் ஒரு கிறித்தவ நாடும், ஒரு முசுலீம் நாடும் மட்டும்தான் இருக்க வேண்டும். ஏன் அப்படி இல்லை? அப்படி இருக்க முடியாது என்பதைத்தான், ஒரு தேசத்தையோ, தேசபக்தியையோ ஒரு மதத்தால் உருவாக்க முடியாது என்ற உண்மை நமக்கு உணர்த்துகிறது. தேசம் உருவாக அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி, பண்பாடு – போன்றவைதான் காரணமாக முடியும். மத நம்பிக்கையும், புனித நகரங்களும் யாருக்கும் தேசபக்தியை உருவாக்க வக்கற்றவையே!
பார்ப்பன, மேல் சாதியினரைத் தவிர்த்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தீர்த்த யாத்திரைகளெல்லாம் கிடையாது. நாட்டுப்பற்று என்றால் என்ன? ஸ்வயம் சேவகர்கள் பாரத மாதா போட்டோவுக்குப் பூசை செய்வது அல்ல. நாட்டு மக்களைச் சுரண்டல், ஒடுக்கு முறை, பிற்போக்கு அனைத்திலும் இருந்து விடுவிக்க தளராமல் போராடுவதுதான் நாட்டுப்பற்றைக் குறிக்கும். இது காசிக்கோ, மெக்காவுக்கோ யாத்திரை செல்வதால் வருவதல்ல.

) முன்னோர்கள், தாத்தா, பாட்டிகளைமுட்டாள்கள், அறிவிலிகள் என்று கருதும் எண்ணம் வளருகிறது

”கங்கைக் கரையிலும், காவிரிக் கரையிலும் அரிசியை உணவாக உட்கொண்டு வாழும் சில ஜந்துக்கள், வேதத்திலேயே எல்லாம் கண்டுபிடிச்சாச்சாக்கும் என்று மமதையுடன் பிதற்றுவதை” புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார். வேதம் மட்டுமல்ல அனைத்துப் பிற்போக்குத் தன்மைகளையும் முதியோருக்குக் கட்டுப்படல் என்ற இன்னொரு பிற்போக்கின் மூலம்தான் பார்ப்பனியம் வாழையடி வாழையாகத் தொடருகின்றது. அதனால்தான் எல்லாப் பிரிவினரிடமும் உள்ள புதுமையும், துடிப்பும் கொண்ட இளைய பிரிவினர்கூட இத்தகைய முட்டாள் முதியவர்களால் விரைவில் முதியவராக்கப்படுகின்றனர்.
எனவே முதுமை, இயலாமை, ஓய்வு என்ற அளவிலே மட்டும்தான் முதியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஒரு சமூகத்துக்கு இருக்கவேண்டும். அதேநேரத்தில்  அவர்களது முட்டாள் தனங்கள் பிற்போக்குக் குணங்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்குப் போராடுவதையும் அதே சமூகம் செய்ய வேண்டும் என்கிறோம்.

) சித்திரைபோய் ஜனவரி கொண்டாடுதல், ஆன்மீகம் அருகில் லோகாயதம் சீர்கேடுகள் பெருகுதல்

இந்துப் பஞ்சாங்கத்தின்படியே எல்லா இந்துக்களுக்கும் ஒரே வருடப்பிறப்பு என்பது கிடையாது. தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வடகிழக்கு போன்று பல வருடப் பிறப்புக்கள் கொண்டாடப்படுகின்றன. வழக்கம்போல இவையும் பார்ப்பன மேல்சாதி – மேல் தட்டினர் கொண்டாடுபவைதான். வாழ்நாள் முழுதும் ஏழ்மையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு பழைய – புதிய என்ற வருடப் பிரிவினைக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை.
ஜனவரி ஆரம்பத்தை – கிறித்தவ மதத்தினர் மட்டுமல்ல, உலகமே கொண்டாடி வருகின்றது. கோவிலில் போய் அர்ச்சனை செய்து புத்தாண்டு கொண்டாடுவது நடுத்தர வர்க்க மக்களின் பழக்கமாக ஏற்பட்டு விட்டது. பல இசுலாமிய நாடுகளிலும் இத்தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பிறந்த நாளுக்குக் கோவிலுக்குப் போவதோ, கேக் வெட்டுவதோ முக்கியமல்ல. அப்படி ஒரு நாள் இருப்பதே தெரியாமல்தான் சாதாரண மக்கள் வாழுகின்றனர். மேலும் ‘ஜன்ம நட்சத்திரம்’ என்ற கடவுளர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் ஆகியோரது தினங்கள்தான் இந்துக்களுக்கு முக்கியமாகும்.
மற்றபடி பொதுமக்கள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவது ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பண்பாடு. இதையும் காசு உள்ள நடுத்தர வர்க்கம்தான் கொண்டாடுகிறது. கேக்கோ, பாயசமோ எல்லாம் நுகர்வுக் கலாசாரத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம் தருமே ஒழிய, மக்களுக்கல்ல. சர்வதேச மூலதனச் சுரண்டலுக்கு மத லேபிளெல்லாம் கிடையாது. ‘லோகாயதம் பெருகி அராஜகங்கள் வளருவது’ என்று, சாரத்தில் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களைத்தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது சாதி, தீண்டாமை எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆதரவு, தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய போராட்டங்கள்தான் அவர்களுக்குக் கலிகாலத்தை உணர்த்துகின்றது.
மற்றபடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மதமாற்றத்தினால் நடக்கிறது என்றால் எதைச் சொல்லி அழ? பிரேமானந்தா, சந்திராசுவாமி, சாயிபாபா, ஜெயா – சசி கும்பல், அர்ஷத்மேத்தா, ஜெயின் சகோதரர்கள், சம்பல் கொள்ளையர்கள், இன்டர்நெட் விபச்சாரி பிரகாஷ் போன்றோர்களெல்லாம் ரகசியமாக மதம் மாறியவர்களா? இதற்கு இராம.கோபாலனைப் போட்டு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன்!

கருத்துகள் இல்லை: