29 ஆகஸ்ட், 2011

பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். அல்ஜசிரா உட்பட உலக ஊடகங்கள் அனைத்தும் வரும் நாட்களில் இதையே பேசிக்கொண்டிருக்கும். சமீப காலமாக ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்ற பின்னணியில் வந்திருக்கும் இந்த அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன? ஆப்கானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை பலிகொடுத்து, சில ஆயிரம் மக்களைக் கொன்று வரும் அமெரிக்க இராணுவம் அங்கே வெற்றியைப் பெறவில்லை. கூடவே வீரர்களை குவித்தும் நிலைமையை தக்கவைக்க முடியவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஈராக், ஆப்கான், போன்ற புதை குழியில் சிக்கியிருக்கும் அமெரிக்கா தற்போது லிபியாவிலும் ஆக்கிரமிக்கத் துவக்கியிருக்கிறது. தனது ஆக்கிரமிப்பு போர்களின் சிக்கலை தீர்ப்பதற்கு மேலும் மேலும் ஆக்கிரமிப்பு போர்களை அதிகரிப்பதே அதன் முன் உள்ள தீர்வு.
பின்லேடன் உள்ளிட்ட இசுலாமிய பயங்கரவாதம் என்பதை இறைவன் தோற்றுவிக்கவில்லை. அமெரிக்காதான் தோற்றுவித்தது. இது குறித்த வரலாற்றுப் பார்வையை இந்தக் கட்டுரை வழங்குவதோடு எல்லா பயங்கரவாதங்களும் ஏகாதிபத்தியங்களாலும், உள்நாட்டு பிற்போக்கு அரசுகளாலும் பராமரிக்கப்படுவதையும் விளக்குகிறது. மதம் போர்த்தியிருக்கும் இந்த மாயத் திரையை அறுப்பதினூடாகத்தான் மூன்றால் உலக நாடுகளின் மக்கள் தங்களை சுரண்டி வரும் உள்நாட்டு, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியும். பின்லேடன் மறைவு குறித்த செய்திகள், பின்னணிகள் முதலானவற்றை பொறுத்திருந்து பார்த்துவிட்டு விரிவான கட்டுரை வெளியிடுகிறோம். அதற்கு முன்னுரையாக இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு அடிப்படை புரிதலை ஏற்படுத்தும். பின்லேடனை பிடிப்பதற்காக ஆப்கனிலும், பாக்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போது பின்லேடன் கொல்லப்பட்டதனால் அந்த துயரம் குறைந்து விடுமா? இல்லை என்றுதானை தோன்றுகிறது.
பின்லேடனை வைத்து முசுலீம்கள் அனைவரும் பயங்கரவாதிகள், பாக்கிற்கு அடித்து விரட்டப்படவேண்டியவர்கள் என்று இந்துமதவெறியர்கள் ஏற்கனவே செய்து வந்த பிரச்சாரத்தை இப்போது வலுவுடன் செய்வாகள். ஆனால் பின்லேடனை விட பலமடங்கு ஆபத்தான இந்த இந்துத்வ பயங்கரவாதிகள் இந்தியாவில் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அதனால் இவர்களை நாம் சட்டத்தின் மூலம் அல்ல உழைக்கும் மக்களை அணிதிரட்டித்தான் ஒழிக்க முடியும். அது குறித்தும் இந்தக்கட்டுரை விளக்குகிறது.
_______________________________________________________
பின்லேடன்
பின்லேடன் கொலை - படம் அல்ஜசீரா
ஏதோ சில முட்டாள் முல்லாக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்கு காரணமென பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற மதங்களை விட உணர்ச்சிப்பூர்வமாகவும், கட்டுப்பாடாகவும், ஒரு இயக்கம் போலவும் இசுலாமிய மதம் பின்பற்றப்படுவது உண்மைதானென்றாலும், இந்தப் பலவீனத்தை முதலீட்டாக்கி அரசியல் சூதாட்டங்களுக்கும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி இசுலாமிய நாடுகளிலிருக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஆளும்வர்க்கங்கள் சுரண்டிக் கொழுப்பதற்குக் காரணகர்த்தா அமெரிக்காதான்.
வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து பாலைவனமான அப்பகுதி ஏகாதிபத்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தப் பாலைவன நாடுகளின் அரசியல் திசைவழியை ஏகாதிபத்திய நாடுகள் தமது நலனுக்கேற்ப அமைத்துக் கொண்டன. குறிப்பாக இங்கிலாந்தும், பின்னர் அமெரிக்காவும் அரபு நாடுகளின் எண்ணைய் தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டு அதற்குத் தோதான பிற்போக்கு சக்திகளை நாடாள அனுமதித்தன.
அப்போது பரவிவந்த கம்யூனிச ‘அபாயத்திற்கு’ எதிராகவும், தேசிய விடுதலைப் போராட்டங்களை திசை திருப்புவதற்கும் அரபு நாடுகளின் இசுலாமிய மதவாதிகளை அமெரிக்கா ஆதரித்தது. இன்று வரை அரபு நாடுகளில் மன்னராட்சி தொடர்வதற்கும் முழு நாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஷேக்குகளின் கையில் இருப்பதற்கும் அமெரிக்க ஆதரவுதான் அடிப்படை. இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் பற்றி பாடம் நடத்தும் அமெரிக்கா சவுதி நாடுகளில் மட்டும் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியை சந்தர்ப்பவசமாக ஆதரிக்கிறது. இதற்கு நன்றிக்கடனாக ஷேக்குகள் பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் எண்ணெய் தொழில் நடத்துவதும், கிடைக்கும் அபரிதமான பணத்தை இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதும் என பரஸ்பரம் உறவு தொடர்கிறது.
உள்நாட்டில் எல்லாப் பிற்போக்குத்தனங்களையும் அமல் படுத்தும் ஷேக்குகள் சொந்த நாட்டு மக்களைச் சுரண்டுவதற்கு இசுலாத்தின் காவலர்களாக நடிக்கின்றனர். மதத்தின் உணர்ச்சியைக் கிளறிவிட்டு தமது செல்வத்தைக் காப்பாற்றும் இந்த ஷேக்குகள் உலகம் முழுவதும் இசுலாமிய மதவாத அமைப்புக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் புரவலர்களாகவும் இருக்கின்றனர். இசுலாமிய மதம் எந்த அளவுக்கு மக்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு இலாபமுண்டு என்பதை இவர்கள் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர். ஷேக்குகளின் கையிலிருக்கும் வரை அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை உறிஞ்சலாம் என்பதால் அமெரிக்காவும் இந்த அணுகுமுறையை அனுமதிக்கிறது.
இப்படித்தான் அரபுநாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் கம்யூனிஸ்ட்டுகளும், ஜனநாயக சக்திகளும், தேசிய வாதிகளும் கொடுராமாக ஒடுக்கப்பட்டனர். மக்களின் விடுதலைப் பெருமூச்சை எழுப்பி விட்ட இச்சக்திகள் ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடம் மதவாதத்தால் நிரப்பப்பட்டது.
ஈராக்கில் இப்படித்தான் கம்யூனிஸ்டுகளைக் கொடுரமாக அழித்துவிட்டு சதாம் உசேனின் பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. வளைகுடா நாடுகளில் ஈராக்கை ஒரு வட்டார அடியாளாக உருவாக்கும் பொருட்டு அமெரிக்கா சதாம் உசேனை எல்லா வகையிலும் ஆதரித்தது. அதே காலத்தில் ஈரானில் ஷா மன்ன்னது சர்வாதிகார ஆட்சியையும் அமெரிக்கா ஆதரித்தது. மற்ற கட்சிகளெல்லாம் பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்டதால் அமெரிக்க எதிர்ப்புக்கும் இசுலாமிய மதம்தான் பயன்படும் என்பதை கொமெனி புரிந்து கொண்டார். அப்படித்தான் ஈரானில் ஷா ஆட்சி தூக்கியெறியப்பட்டு கொமெனியின் தலைமையில் இசுலாமிய மதவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். இதனால் கொமெனியின் ஈரானைத் தாக்கி அழிக்க சதாம் உசேனை அமெரிக்கா பயன்படுத்தியது. அவருக்கு ஆயுத உதவியை அபரிதமாக வழங்கி ஈராக்- ஈரான் போரை அமெரிக்கா துவக்கியது. இருதரப்பிலும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட இந்தப் போர் சில ஆண்டுகள் நீடித்தது. அமெரிக்கா வழங்கிய ரசாயன வாயுவின் மூலம் பல ஈரானிய வீரர்கள் கொடுரமாகக் கொல்லப்பட்டதெல்லாம் பின்னாளில் அம்பலமாயின. அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட இசுலாமிய மதவாதம் ஈரானில் மட்டும் அமெரிக்காவை எதிர்ப்பதாகக் கருக்கொள்ள ஆரம்பித்தது.
இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் இசுரேல் உருவாக்கப்பட்டது. பின்னாளில் யூதவெறி இசுரேல் அரசால் பாலஸ்தீன மக்கள் அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக மாறினர். மத்திய கிழக்கில் இசுரேலை ஒரு வலிமையான அடியாளாக உருவாக்குதற்கு தேவையான எல்லா உதவிகளையும் அமெரிக்கா அன்றும் செய்தது. இன்றும் செய்து வருகிறது. ஆரம்பத்தில் தமது தாயகத்திற்காக போராடத்துவங்கிய பாலஸ்தீன மக்களின் போராட்டத்தில் மதம் இருக்கவில்லை. பின்னாளில் துரோகமிழைத்த யாசர் அராபத்தின் பி.எல்.ஓ இயக்கம்கூட மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் அன்று போராடியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை மதச்சார்பானதாக மாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயன்று வந்தது.

பாலஸ்தீன், ஈரான் இரண்டு நாடுகளிலும் மக்கள் மதத்தின் துணை கொண்டு அமெரிக்காவை எதிர்த்து வந்தாலும் மொத்தத்தில் இசுலாமிய மக்கள் மதத்தின் பால் கட்ட்டுண்டு கிடப்பது அமெரிக்காவுக்கு சாதகமாகத்தான் இருந்த்து. மதத்தின் பெயரால் நடத்தப்படும் தேசிய விடுதலைப் போரட்டங்களையெல்லாம் தனிமைப் படுத்தி முடக்கவும், அதே மதம் பயன்படுகிறது என்பதால் மொத்தத்தில் அமெரிக்காவிற்கு இந்த மதவாத அணுகுமுறை ஆதாயமாகவே இருந்தது. அரபு ஷேக்குகளுடன் ஒரு புறமும், மறுபுறம் இசுரேல் எனவும் அமெரிக்காவின் மத்தியக் கிழக்கு கொள்கை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் சோவியத் யூனியன் என்ற சமூக ஏகாதிபத்தியம் ( சொல்லில் சோசலிசம், செயலில் ஏகாதிபத்தியம் ) 1979 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. அமெரிக்கா, சோவியத்யூனியன் இரண்டு நாடுகளும் அன்று கெடுபிடிப்போரின் உச்சத்தில் இருந்தன. உலக மேலாதிக்கத்திற்காக மறைவுக் கெடுபிடிப் போர்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டன. அன்று உலக நாடுகள் எந்தப் பிரச்சினையென்றாலும் இரண்டில் ஒன்றை சார்ந்து இருக்குமளவுக்கு பிரிந்திருந்தன. இப்படி ஆப்கானில் போலிக் கம்யூனிசம் நஜிபுல்லாவின் தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா சோவியத் யூனியனை அங்கிருந்து விரட்டுவதற்கு முயற்சிகளை ஆரம்பித்தது. பின்னர் 1989இல் சோவியத் யூனியன் ஆப்கானிலிருந்து வெளியேறும் வரை அமெரிக்கா தன் முயற்சிகளை விடவில்லை.
ஆப்கானில் நாத்திகர்களும் சாத்தானின் வாரிசுகளுமாகிய கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்கா அவர்களை விரட்டுவதற்கு புனிதப்போர் துவங்குமாறு இசுலாமிய மதவாதிகளை அணிதிரட்ட ஆரம்பித்தது. இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து புனிதப்போர் நடத்தும் பயங்கரவாதிகள் இப்படித்தான் தோற்றுவிக்கப்பட்டனர். முஜாகிதீன்களுக்கான ஆயத உதவி முதல் பணம் வரை எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாயின. அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின் ஆசிய வானொலிச் சேவைகள் இந்தப் புனிதப் போருக்கான மதப்பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டன. இசுலாமிய நாடுகளிலிருந்து போராளிகள் மதத்தைக் காப்பாற்றுவதற்கென்றே இறக்குமதி செய்யப்பட்டனர். இப்படித்தான் பின்னாளில் அல்கைய்தா ஆரம்பித்த பின்லேடன் சவுதியிலிருந்து ஆப்கானுக்கு இடம்பெயர்ந்தார்.
இதற்கான மையமாக பாக்கிஸ்தான் பயன்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் எல்லா மாநிலங்களிலும் அமெரிக்கா அளித்த பிச்சைக்காசின் உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் திறக்கப்பட்டன. டாலரின் தயவில் குர்ஆன் வியந்தோதப்பட்டது. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானுக்கு அனுப்பப்பட்டனர். இந்த வேலைகளை பாக்கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமெரிக்காவின் ஆணைக்கேற்ப ஒருங்கிணைத்தது. இந்த அடியாள் வேலைக்காகவே பாக்கின் இராணுவ சர்வாதிகார ஆட்சிகளை அமெரிக்கா முழுமனதுடன் ஆதரித்தது. இன்றைக்கும் பாக்கின் ஜனநாயக அரசாங்கம் உண்மையான அதிகாரமின்றி பொம்மை ஆட்சி நடத்துமளவுக்கு இராணுவமும், உளவுத் துறையும் சூத்திரதாரிகளாக இருக்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கவின் ஆசிதான்.
பின்னர் ஆப்கானில் சில ஆயிரம் வீரர்களை பலிகொடுத்து சோவியத் யூனியன் தன் படைகளை விலக்கிக் கொண்டது. ஆதரவின்றி தத்தளித்த நஜிபுல்லா முஜாகிதீன்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியிலிருந்த ஆப்கானில் கல்வி, பெண்ணுரிமை, போன்ற நலத்திட்டங்களெல்லாம் அமல்படுத்தப்பட்ட போது அவை இசுலாத்திற்கு விரோதமென அமெரிக்காவால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்கள் அமெரிக்க ஆசியுடன் களத்தில் இறங்கினர். ஆப்கானில் இத்தகைய முட்டாள் மதவாதிகள் ஆட்சியிலிருப்பது தனக்குப் பல விதங்களில் உதவியாக இருக்குமென எதிர்பார்த்த அமெரிக்காவும் இதற்குத் துணைபுரிந்தது. மேலும் மத்திய ஆசியாவின் கனிம வளத்தை குறிப்பாக எண்ணெய் எரிவாயுவை குழாய் மூலம் ஆப்கான், பாக் வழியாக துறைமுகங்களுக்கு கொண்டு செல்லும் தேவையை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் உணர்ந்திருந்தன. அந்த வகையில் ஆப்கானின் இருப்பிடம் செயல்தந்திர ரீதீயாக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.
ஆப்கானில் புகுந்த தாலிபான்கள் நஜிபுல்லாவைக் கொன்று தெருவில் தொங்கவிட்டனர். காட்டுமிரண்டித்தனமான ஒழுங்குகளெல்லாம் இசுலாத்தின் பெயரில் அமல்படுத்தப்பட்டன. பர்தா அணியாத பெண்கள், கல்வி கற்ற பெண்கள், எல்லோருக்கும் கல்லடி கிடைத்தது. புரதான பெருமை வாய்ந்த புத்தர் சிலையும் இடிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அமெரிக்கா தாலிபானை கைவிடவில்லை என்பது இங்கே முக்கியம்.தாலிபானின் ஆட்சியை உலகநாடுகள் அங்கீகரிக்கவில்லையெனினும் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவுதி, பாக்கிஸ்தான் நாடுகள் மட்டும் அங்கீகரித்தன. இயற்கை எரிவாயுக் குழாய் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக தாலிபான் பிரதிநிதிகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு அழைத்து வந்தன. ஆரம்பத்தில் முஜாகிதீன்களின் வருவாய்க்காக கஞ்சா உற்பத்தியை பெரும் பரப்பளவில் பயிரிடுவதற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் உதவியிருந்தது. ஏழை நாடான ஆப்கானில் தாலிபானின் முக்கிய வருவாயாக கஞ்சா உற்பத்தி திகழ்ந்தது. இதை மேற்குலகின் சந்தைக்கு கொண்டு செல்லத் தேவையான வழிகளையும் சி.ஐ.ஏ ஏற்படுத்திக் கொடுத்தது.
இக்காலத்தில் ருமைலா எண்ணெய் வயலின்மூலம் தனது எண்ணெய் வளத்தை குவைத் நாடு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் உதவியோடு ஆக்கிரமிக்க  முயன்றதால் சினமடைந்த சதாம் உசேன் குவைத் மீது போர் தொடுத்தார். தான் வளர்த்த ஒரு சர்வாதிகாரி தனக்கே எதிராகத் திரும்பியதைக் கண்ட அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்தது. சதாம் உசேனைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு பொம்மை ஆட்சியைக் கொண்டு வர அமெரிக்கா எத்தணித்தது. ஏற்கனவே பாலஸ்தீன், ஈரான் பிரச்சினைகளில் இருந்த இசுலாத்தின் அமெரிக்க வெறுப்பு இப்போது ஈராக்கிற்கும் பரவியது. தான் உரமிட்டு வளர்த்த இசுலாமிய மதவாதம் தனக்கே எமனாகத் திரும்புமென அமெரிக்கா அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. சில அசட்டு மதவாதிகள் என்ன செய்துவிட முடியுமென மேற்குலகம் மெத்தனமாக இருந்தது.
சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த வரை அமெரிக்காவால் தோற்றுவித்து வளர்க்கப்பட்ட இசுலாமிய மதவாதம் அமெரிக்காவை இரட்சகனாகக் கருதிவந்தது. சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு இருவரும் தமது நலன்களால் பிரிவுகொள்ளும் சூழ்நிலை வந்தது. முதல் வளைகுடாப் போரும், இசுரேலின் அடாவடித்தனங்களும் பொதுவில் இசுலாமிய மக்களை சினம் கொள்ள வைத்தது. இந்தப் பின்னணியில்தான் பின்லேடனின் அல்கைதா தனது முன்னாள் ஏஜமானனை எதிரியாக அறிவித்து 90களின் பிற்பகுதியில் சில நாடுகளிலிருந்த அமெரிக்க தூதரகங்களை குண்டுவைத்துத் தாக்கியது. அமெரிக்காவின் கட்டளையோடு பாக்கின் பங்களிப்போடு உருவான தாலிபான்களும் அல்கைதா பக்கம் சாயத்துவங்கினர். சன்னி பிரிவின் கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்களை பாக்கின் இராணுவ அதிகார வர்க்கம் ஆதரித்து வந்தாலும் அமெரிக்காவை எதிரியாகக் கருதும் தாலிபான்களை மாற்ற முடியாமல் திணற ஆரம்பித்தது.
மதவாதிகளை அறிவுப்பூர்வமாக ஏமாற்ற முடியாமலும், உணர்ச்சிப் பூர்வமாக சமாளிக்க முடியாமலும் இருந்த நேரத்தில்தான் 2001 உலக வர்த்தக மையம் அல்கைதாவால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் அமெரிக்காவிற்கு தெரியாமல் நடந்திருக்க முடியுமா என்பதையும் உத்திரவாதம் செய்ய முடியாது. இதை தெரிந்து வேண்டுமென்றே நடக்கவிட்டு மக்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவுடன் ஆப்கானையும், ஈராக்கையும் ஆக்கிரமிப்பதற்கென்றே கூட இது அனுமதிக்கப்பட்டிருக்கலாம். பயங்கரவாதத்திற்கெதிரான போர் என அறிவித்து இருநாடுகளையும் பின்னாளில் ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை இராணுவ பலத்தை அந்நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்க்கவேண்டும். இன்னொரு கோணத்தில் டாலரால் ஊட்டி வளர்க்கப்பட்ட இசுலாமியத் தீவிரவாதம் தனது தர்க்கபூர்வமான வளர்ச்சியில் சுயேச்சையாக அமெரிக்காவை எதிர்க்கும் இயல்பான நிலைக்கு வந்ததையும் மறுக்க முடியாது. அதே சமயம் இந்த இரண்டு முரண்பட்ட நிலைகளையும் அமெரிக்கா தனது நலனுக்காக பயன்படுத்துகிறது என்பதுதான் எல்லவற்றையும் விட முக்கியமானது. பின்லேடன் பிடிபடாத வரைக்கும் அவர் அமெரிக்காவைப் பொறுத்தவரை பொன்முட்டையிடும் வாத்துதான். பிடிபட்டாலும் புதிய வாத்துக்கள் உருவாக்கப்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு தொடரும்.
இன்று ஈராக்கில் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு சதாம் உசேனும் அமெரிக்க சதியால் தூக்கிலிடப்பட்டுவிட்டார். ஆப்கானிலும் அதே நிலைமை உருவாகிவிட்டது. ஆனாலும் போர் இன்னமும் முடியவில்லை. ஆப்கான் பாக் எல்லைப் பகுதியில் இருக்கும் அல்கைதா, தாலிபானை ஒடுக்குவதற்காக போரை தீவிரப்படுத்துவேன் என புதிய அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். அடுத்தது ஈரான் அணுகுண்டு பூச்சாண்டி காட்டுவதாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் பட்டியலில் வருவதற்குக் காத்திருக்கிறது. இத்தகைய சூழலில் இதுவரை அமெரிக்காவின் அடியாளாகச் செயல்பட்ட பாக்கிஸ்தானில் குழப்பமான சூழ்நிலை தொடர்கிறது.
இந்தியாவைப் போல அல்லது இன்னமும் அதிகமாக ஏழை நாடாக இருக்கும் பாக்கிஸ்தான் அமெரிக்காவின் சூதாட்டத்தில் ஏராளமாக இழந்திருக்கிறது. முதல்பலி ஜனநாயகம். பாக்கின் இராணுவ சர்வாதிகாரிகளை அமெரிக்கா நிபந்தனையின்றி ஆதரித்தற்கும் ஆப்கான் பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாகும். மேலும் முன்னர் இந்திரா காந்தி காலம் வரை இந்தியா சோவியத் முகாமில் இருந்ததால் அமெரிக்கா தனது இயல்பான கூட்டாளியாக பாக்கை மாற்றிவந்தது. சோவியத் ஆக்கிரமிப்பு இந்த உறவை உறுதி செய்தது. இதற்குப் பொருத்தமாக இராணுவ சர்வாதிகாரம் பாக்கில் நிலை கொண்டது. இராணுவ அதிகார வர்க்கமே பாக்கில் சொத்துக்களையும், தொழில்களையும் கையில் வைத்திருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான தேசபக்த உணர்ச்சியில் மக்களை மூழ்கடித்துவிட்டு இந்த இராணுவ சர்வாதிகாரிகள் செல்வத்தில் திளைத்தார்கள். பின்னர் முஜாகிதீன்களுக்காக மதரசாக்கள் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த ஏழை நாட்டின் மக்கள் மதவாத வெறிக்கும் பலியாகினர். இதற்கு முன்னர் இசுலாத்தில் மதவாதம் மட்டுமே இருந்தது என்றால் சி.ஐ.ஏ தயவில் உருவாக்கப்பட்ட இந்த மதரசாக்கள் இசுலாமிய கடுங்கோட்பாட்டு வாதத்தை முதன்முறையாக உருவாக்கின.
தாலிபான் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த மதரசாக்களுக்கான அமெரிக்க, சவுதி புரவலர்கள் கையை விரித்தாலும் மதவாதம் வீறு கொண்டு எழும் வண்ணம் ஈராக், செசன்யா, காஷ்மீர், பாலஸ்தீனம், லெபனான் என பல தீர்க்க முடியாத பிரச்சினைகள், ஏகாதிபத்தியங்களால் தீர்வு தடை செய்யப்பட்டிருக்கும் பிரச்சினைகள் உதவி செய்தன. மேலும் பாக்கின் ஐ.எஸ்.ஐ உளவுத் துறை தனது அமெரிக்கா எஜமானின் உதவியோடு இந்த வேலைகளை இதுவரை செய்து வந்தவர்கள் இப்போது அதே வேலைகளுக்கு எதிராக செய்யவேண்டுமெனும்போது பிரச்சினை வருகிறது. ஐ.எஸ்.ஐ அமைப்பில் இப்பொது அமெரிக்க ஆதரவு, தாலிபான்-அல்கைதா ஆதரவு, அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட காஷ்மீர் அமைப்பு ஆதரவு என பல குழுக்கள் பல போக்குகள் இருக்கின்றன. இராணுவமும் அதே மனநிலையில்தான் இருக்கிறது. ஆப்கான் பாக் எல்லையில் அமெரிக்காவின் கட்டளைக்கேற்ப இசுலாமிய தீவிரவாதிகளுக்கெதிராக போரிடும் பாக் இராணுவம் இதுவரை 2000 வீரர்களை இழந்திருக்கிறது. இந்தப் போரை தொடரும் மனநிலையில் துருப்புக்கள் இல்லை என்பதும் முக்கியம். பாக்கின் சிவில் அரசாங்கம் அமெரிக்காவின் கட்டளையை முழுமனதுடன் ஆதரித்தாலும் இராணுவமும், உளவுத் துறை அமைப்பும் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இன்று பாக்கிஸ்தான் யார் கட்டுப்பாட்லும் இல்லை என்று சொன்னால் மிகையல்ல.
மதவாதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாட்டில் இன்று அதே மதவாதத்தை எதிர்க்கவேண்டுமென்றால் எப்படிச் செய்வது? பாக்கின் ஆளும்வர்க்கம் அமெரிக்காவின் அடிவருடி என்பதால் அவர்களையும் இந்த மதத் தீவிரவாதிகள் தாக்கத்தான் செய்கிறார்கள். பெனாசிர் புட்டோ முதல் பலரும் அதில் பலியாயிருக்கிறார்கள். ஜூலை 2007 முதல் இன்று வரை பாக்கில் நடந்த நூற்றுக்கணக்கான தற்கொலைத் தாக்குதலில் 1200பேர் இறந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்தியாவை விட இசுலாமிய பயங்கரவாதத்தால் அதிகம்பேரை பலி கொடுத்திருப்பது பாக்கிஸ்தான்தான். இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் லஷ்கர் இ தொய்பா பாக்கிலும் தடை செய்யப்பட்ட இயக்கம்தான். இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளும் மசூரின் ஜெய்ஷி முகம்மது இயக்கம் பாக்கிலும் ஆட்சியாளர்களைக் குறிவைத்து பல தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது. இப்படி ஏகாதிபத்தித்தினாலும், மதத் தீவிரவாதத்தினாலும் நெருக்கடியின் உச்சத்திலிருக்கும் ஒரு நாட்டிலிருந்ததுதான் மும்பைத் தாக்குதலுக்கான குழு வந்திருக்கிறது.
இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றது. ஆப்கான் எல்லையில் போரிடும் பாக்கின் இராணுவத்தை விடுவிக்கவேண்டுமென  பாக் இராணுவத்திலும், ஐ.எஸ்.ஐ யிலும் சிலர் நினைத்திருக்கலாம். அவர்களே அப்படி நினைக்காவிட்டாலும்  இந்தியாவுக்கும் பாக்கிற்கும் ஒரு பதட்டத்தை தோற்றுவித்தால் தங்கள் மீது போர் தொடுத்திருக்கும் பாக் இராணுவத்திலிருந்து தற்காலிகமாக விடுதலை பெறலாம் என்று இசுலாமியத் தீவிரவாதிகள் நினைத்திருக்கலாம். இதை காஷ்மீருக்காக போராடும் சில மதவாதக் குழுக்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது அமெரிக்காவே இந்தத் தாக்குதலை தெரிந்திருந்தும் அனுமதித்து அதன்மூலம் தனது பயங்கரவாத எதிர்ப்பு போருக்கு இந்தியவை இன்னமும் அதிகமாக பயன்படுத்தலாம் என்று நினைத்திருக்கலாம். ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் சிக்கியிருக்கும் உலகில் எல்லாப் பிரச்சினைகளும் நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிமையாக புறத்தோற்றத்தில் இருப்பதில்லை. நண்பன் யார், எதிரி யார், காரணம் எது, விளைவு என்ன, என்பதெல்லாம் இங்கு சுலபமாகத் தெரிவதில்லை.
இன்று இந்தியா பாக் மீது போர் தொடுக்க வேண்டுமென சில ‘தேசபக்தர்கள்’ வலியுறுத்துகிறார்கள். பாக்கிலிருக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளும் அப்படித்தான் விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் வரும் பட்சத்தில் இருநாட்டு மக்களும் அடையப்போகும் அழிவிற்கு முன்னால் இது ஒரு அணு ஆயுத யுத்தமாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இன்று பாக்கிலிருக்கும் அணு ஆயுதத்தின் மீது யாருக்கு கட்டுப்பாடு இருக்கிறது என்பதை அறுதியிட முடியாது. எனவே பாக்கிஸ்தானை போரிலிருந்து தவிர்ப்பதற்கு யாரையும் விட இந்தியாவுக்குத்தான் அவசியம் அதிகமிருக்கிறது. இரு நாட்டு தேசபக்தி வெறியை கிளறி விட்டு இருநாடுகளுக்கும் ஆயுதம் விற்று இலாபம் பார்த்திருக்கும் அமெரிக்காவும் இத்தகைய போர் அபாயத்தை கட்டுப்படுத்தும் வழியை யோசிப்பதை விட அதனால் கிடைக்கும் ஆதாயத்தையே முதன்மையாக வைத்து செயல்படுகிறது. இந்தியாவின் பதட்டத்தை தணிப்பதும், பாக்கை கட்டுப்படுத்துவதும் அவர்கள் இதன் பொருட்டே செய்கிறார்கள். இந்த குழப்பமான நிலையை அமெரிக்க எதிர்பப்பிற்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதே இசுலாமிய தீவிரவாதிகளின் நிலை. இத்தகைய சதிகளும், சூழ்ச்சிகளும் நிறைந்த காலத்தில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் சிக்கிக் கொண்டிருப்பது இன்றைய காலத்தின் அவலம்.
இசுலாமிய பயங்கரவாதத்தை இசுலாமிய மக்களில் பெரும்பான்மையினர் கண்டிக்கவே செய்கிறார்கள். ஆனால் அம்மக்களை மதவாதத்தில் மூழ்கடிக்கும் மதவாதிகள், அவர்கள் பயங்கரவாதத்தைக் கண்டிப்பவர்களாக இருந்தாலும் மதவாதம் என்ற முறையில் சித்தாந்தம் என்ற நிலையில் பயங்கரவாதிகளோடு ஒன்றுபடவே செய்கிறார்கள். உலகம் முழுவதும் இசுலாத்தின் ஆட்சி வரப்போவதாகவும், ஷரியத்தின் சட்ட ஒழுங்கில்தான் உலகம் அமைதி பெறமுடியுமென்றும், மனித குலத்திற்கு இசுலாம் மட்டுமே விடுதலை அளிக்கப் போவதாகவும் நம்புகிறார்கள். இதை காந்திய வழியில் செய்வதா, அல்கைதா வழியில் செய்வதா என்பதில்தான் வேறுபாடு. ஆனால் இந்த மதப்புனிதம் இசுலாம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை நிலவியதில்லை என்பதோடு இனியும் நிலவ முடியாது என்பதுதான் உண்மை.
ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது. அதை வைத்து இருபத்தியோராம் நூற்றாண்டின் மனித குலப்பிரச்சினைக்கு தீர்வு காண நினைப்பது அடி முட்டாள்தனம். அது இசுலாமிய மக்களுக்கு எந்த விடுதலையையும் வழங்க முடியாது என்பதோடு அவர்களது அவல வாழ்க்கையை மதம் என்ற உணர்ச்சியில் மூழ்கடிப்பதற்குத்தான் பயன்படும். அதைத்தான அரபு ஷேக்குகளும், இசுலாமிய நாடுகளிலிருக்கும் ஆளும் வர்க்கங்களும் செய்து வருகிறார்கள். மதத்தின் பெயரால் விரிக்கப்பட்டிருக்கும் இந்த மாயவலையிலிருந்து இசுலாமிய மக்கள் வெளியேற வேண்டும். இதன் பொருள் இசுலாமிய மதத்தை துறப்பது என்பதல்ல. எந்த மதமும் ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்வில் மட்டும் பின்பற்றப்படவேண்டிய விசயம். அம்மதம் அவனது அரசியல், சமூகப், பொருளாதார வாழ்வில் இடம்பெறக்கூடாது என்பதைத்தான் இங்கு வலியுறுத்துகிறோம்.
இசுலாமிய நாடுகள் பல இருந்தாலும் அவை மதத்தான் ஒரு சகோதர உணர்வைப் பெறவில்லை. இனம், மொழி, இன்னும் பல பிரிவினைகளோடுதான் இசுலாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஷியா, சன்னி மதப் பிரிவுகள் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் பல நூறு மக்கள் இன்றும் கொல்லப்பட்டுத்தான் வருகின்றனர். ஈரான், ஈராக் போர் இசுலாமிய சகோதரவத்துவத்தால் நடை பெறாமல் போகவில்லை. ஈராக் முசுலீம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவையான எல்லா வசதிகளையும் முசுலாம் நாடுகளான சவுதியும், குவைத்தும்தான் செய்து வருகிறது. அரபு மன்னர்களும், ஷேக்குகளும் தமது நாட்டு செல்வத்தை அமெரிக்காவில்தான் முதலீடு செய்திருக்கின்றனர். அப்பாவிப் பெண்களை பர்தா போடவில்லையென்றால் தண்டிக்க வேண்டும் என்று வாதாடும் மதவாதிகள் எல்லா ஒழுக்கக்கேடுகளையும் வைத்துக் கொண்டு வாழும் ஷேக்குகளை கண்டிப்பதில்லை. தஸ்லிமா நஸ்ரீன் என்ற பெண்ணிற்கு எதிராக வாளைச் சுழற்றும் மதவாதிகள் எவரும் இந்த ஷேக்குகளுக்கு எதிராக பத்வாவைப் பிறப்பிக்கவில்லை.
பிலிப்பைன்சைச் சேர்ந்த சிறுமி சாரா தன்னை பாலியல் வன்முறை செய்த கிழட்டு ஷேக்கை தற்காப்பிற்காகக் கொன்றபோது அவளுக்கு மரணதண்டனை வழங்கியதுதான் ஷரியத்தின் இலட்சணம். ஐதராபாத்தைச் சேர்ந்த ஆமினாவைப் போன்ற ஏழைச்சிறுமிகளை பலதாரமுறை என்ற பெயரில் அரபு நாடுகளுக்கு கடத்துவதுதான் இசுலாம் வழங்கியிருக்கும் மதச்சுதந்திரம். ஷாபானு என்ற முதிய பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கக்கூடாது என்று போராடியதுதான் இந்தியாவின் இசுலாமிய மதவாதிகளின் உரிமையாக அறியப்பட்டது. சாரத்தில் ஏழைகளுக்கும், பெண்களுக்கும் இசுலாமிய மதவாதிகள் செய்திருக்கும் அநீதிகள் பல. ஏழை இசுலாமிய நாடுகளிலிருக்கும் வறிய மக்களின் வர்க்க கோரிக்கைகளுக்காக தமது சுண்டு விரலைக்கூட அசைத்திராத இந்த வீரர்கள்தான் மதம் என்ற பெயரில் இன்றைக்கும் பல பிற்போக்குத்தனங்களுக்காக போராடுகிறார்கள். இசுலாமிய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இந்த அடிப்படைவாதத்தை எதிர்த்துப் போராடும்போதுதான் உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக போராடும் வல்லமையை அவர்கள் பெற முடியும். கண்மூடித்தனமான பயங்கரவாதத்திற்கு சலிக்காமல் சப்ளை செய்யும் இளைஞர்களை தடுப்பதும் அப்போதுதான் சாத்தியம்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தேசியவாதிகள் என்று பலரும் இருக்கின்றனர். ஆனால் இசுலாமிய மக்கள் மட்டும்தான் மதத்தின் பெயராலும் எதிர்க்கின்றனர். இது நிச்சயமாக ஆரோக்கியமான போக்கல்ல, அதற்கான அடிப்படையை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியிருந்த போதும். ஏனெனில் பாலஸ்தீன், ஈராக், காஷ்மீர் போராட்டங்களெல்லாம் தேசிய இனப் போராட்டங்களாகத்தான் இன்னமும் இருந்து வருகிறது. அவற்றை மதம் என்று குறுகிய வட்டத்தில் அடைப்பதால் அந்தப் பலனை ஏகாதிபத்தியங்கள்தான் அடைகின்றனவே தவிர இசுலாமிய மக்களல்ல. மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலினால் இசுலாம் மட்டுமல்ல பல மதங்களைச்சேர்ந்த மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்களை வர்க்க உணர்வுதான் இணைக்கவேண்டுமே ஒழிய மதம் அல்ல. அப்படி மதத்தால் பிரிக்கப்பட்டால் நாம் போராடுவதற்கான தோழமைகளை இழந்து போகிறோம் என்பதுதான் கண்ட பலன்.
இசுலாமிய மக்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அவர்கள் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுவதும், வாடகைக்கு வீடு கூட கிடைக்காது என்ற நிலையில் சமூக வாழ்க்கையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலைமைக்கு அந்த மக்கள் காரணமல்ல என்றாலும் அப்போதும் அவர்கள் மதவாதத்திலிருந்து விலகி இருக்கவேண்டும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம். மசூதிக்கு செல்வதும், அல்லாவைத் தொழுவதும் நமக்குள்ள தனிப்பட்ட உரிமைகள், அதைத்தாண்டி நமது சமூக வாழ்க்கைக்கு அந்த உரிமைகளை பயன்படுத்துவதில் பலனில்லை என்பதையே இசுலாமிய மக்கள் உணரவேண்டும். இந்த விதி இசுலாத்திற்கு மட்டுமல்ல எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம்.
மும்பைத் தாக்குதலைச் செய்த பயங்கரவாதிகளை வினவு கண்டிக்கவில்லை என சில நண்பர்கள் பின்னூட்டமிட்டிருந்தார்கள். வினவு நிச்சயாமாகக் கண்டிக்கிறது. ஆனால் நமது கண்டிப்பு அம்புகளுக்கு மட்டுமல்ல அவற்றை எய்த கைகளுக்கும் சேர்த்தே போகவேண்டும். அந்தக் கைகளில் அமெரிக்காவின் கையே முக்கியமானது என்பதை இந்தத் தொடரின் மூலமாக இயன்ற அளவு விளக்கியிருக்கிறோம். இந்தியாவில் இருப்பவர்கள் முக்கியமாக இந்து மதவெறியர்களை கண்டிப்பதும், காஷ்மீர் போராட்டத்தினை ஆதரிப்பதும் செய்யும்போதுதான் இசுலாமிய பயங்கரவாதத்தையும் கண்டிக்க முடியும். முன்னதை தவிர்த்துவிட்டு பின்னதை மட்டும் கண்டிப்பதில் பயனில்லை. அது வெறுமனே தேசபக்தி என்ற பெயரில் இந்திய ஆளும்வர்க்கங்கள் உருவாக்கும் மற்றொரு மதவாதம்தான்.
மும்பைத் தாக்குதலினால் இசுலாமிய பயங்கரவாதிகள் மக்களைக் கொன்றது போக பல தீங்குகளை நாட்டு மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். காஷ்மீரில் சுய நிர்ணய உரிமைப் போராட்டம் மீண்டும் மக்களை அணிதிரட்டி வளர்ந்து வரும் நிலையில் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் அதைக் கொச்சைப் படுத்தி அவதூறு செய்கிறது. ஏற்கனவே இனப்படுகொலை செய்யும் இந்துமதவெறியர்களின் பாசிச வேட்கையையும் அதற்கான நியாயத்தையும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் இலவசமாக வழங்கியிருக்கிறது. பொடாவை விட அதிக அடக்குமுறைகள் கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு மசோதா பாரளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. இனி சிறுபான்மை மக்களும், இந்திய அரசை எதிர்த்துப் போராடும் புரட்சிகர அமைப்புகளும் இந்த சட்டத்தால் கேள்வி முறையின்றி வேட்டையாடப்படுவார்கள். ஈழத்திற்காக குரல் கொடுப்பவர்களைக்கூட இந்தச் சட்டப்பிரிவின் மூலம் ஒடுக்க முடியும். அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கச் சுரண்டல்களுக்கெதிராக போராடும் உலக மக்களின் அரசியலை பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் மூழ்கடித்து திசைதிருப்புகிறது.
இந்தியாவில் இந்துத்வமும், பாக்கில் இசுலாமிய அடிப்படைவாதமும் பாரிய அளவில் தீங்கிழைத்திருக்கின்றன. இரு நாட்டு மக்களும் இந்த இரு அடிப்படைவாதங்களையும் எதிர்த்துப் போராடும்போதுதான் இந்தியத் துணைகண்டத்தில் நடக்கும், நடைபெறப்போகும் பயங்கரவாதங்களை தடுக்கமுடியும். இந்த போராட்டத்தில் எந்த அளவுக்கு முன்னேறுகிறோமோ அந்த அளவு அமெரிக்கா நடத்தும் ஆக்கிரமிப்பு சூதாட்டங்களையும் தடுக்க முடியும். மதத்தை வைத்து ஏகாதிபத்தியங்கள் நடத்திவரும் பதிலிப்போரிலிருந்து நாம் விடுபடுதோடு உண்மையான வர்க்கப் போரை அறிவிக்கவும் முடியும். இவை எதுவும் நிறைவேற முடியாத கனவல்ல. ஏனெனில் இறுதியில் நம் செயல்பாட்டை மதம் தீர்மானிப்பதில்லை, நம் சமூக வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது. அந்த உண்மையிலிருந்து கற்றுக்கொண்டு இந்துத்வப் பயங்கரவாதம், இசுலாமிய பயங்கரவாதம், அமெரிக்க பயங்கரவாதம் என எல்லா பயங்கரவாதங்களையும் எதிர்த்துப் போராடுவோம்.
___________________________________________________________________________________________________
மும்பை 26/11 தாக்குதலை ஒட்டி வினவில் வெளிவந்த தொடர் கட்டுரையின் இறுதிப்பகுதி (முதல் பதிப்பு 18-12-2008 )

கருத்துகள் இல்லை: