15 ஜூன், 2011

தமிழ்நதி – மிகுபசி கொண்ட உடல்மொழி



தலைப்பின் பொருளை ஒற்றை அர்த்தத்தில் விளங்கிக்கொள்ளவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே! அல்லது அதன் பொருளை இயன்றவரை முழுமையும் விளக்க விரும்பும் என்னுடன் பயணிக்க வரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்! தமிழ்நதி எனும் கவிஞரை முன்வைத்து, அகதியாயும் நாடோடியாயும் வாழப்பணிக்கப்படும் எழுத்துப்பெண்ணைப் புரிந்து கொள்வது தான் இங்கே நமது பணியாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

அம்மா! மண்டையிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே
சிலீரென்றெழும் ஓசையால்
உறக்கமும் குழந்தைமையும்
கலைக்கப்பட்ட
அவ்விரவுகளையும் மீட்டெடுக்க.
2007 – ல் முதன் முறையாக ‘இன்றொரு நாள் எனினும்’ என்ற தமிழ்நதியின் கவிதையில் மேற்குறிப்பிட்ட கவிதைப் பத்தியை வாசித்தது முதல் இன்றும் அது, புதியதோர் உணர்ச்சியின் தொனியாய் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அவ்வரிகள், வெறுமனே அம்மாவிடம் கேட்கும் அனுமதியாக மட்டுமே இல்லை, பாருங்கள்! பிடிவாதமான, ஆனால் தான் செய்யப்போகும், இதுவரை யாரும் செய்திராத புதியதொரு செயலைத் தான் செய்யப்போவதன் அறிவிப்பாகவும் இவ்வரிகள் இருக்கின்றன. இது ஓர் அபூர்வமான தொனி தான்! இம்மாதிரியான தொனிகள் முழுதும் சுயத்திலிருந்தும், தன் ஆளுமையிலிருந்தும் எழும்புபவை. இன்னொரு கவிதைகளில் இருந்து சுடமுடியாதவை! மேலும், இவ்வரிகளில் குறிப்பிடப்படும், ‘சிலீரென்றெழும் ஓசை’, அவ்வோசை யொத்த பிற ஓசைகளை நினைவுப்படுத்துவதுடன், அவ்வோசையை யுத்தநிலத்தில் கேட்ட ஓசையுடன் இணைத்து, களவுபோன உறக்கத்தையும் குழந்தைமையையும் அவர் நேரடியாகச்சொல்லாமல் சொல்வது இக்கவிதை வரிகளின் தாக்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றன. எனக்குப் பிடித்தமான இக்கவிதைத்தொனியைப் பல வருடங்களுக்குப் பின்னும் இன்றும் என்னுள்ளிருந்து பத்திரமாகக் கண்டெடுக்கமுடிந்தது.
கவிதைகள் சார்ந்து நான் எப்பொழுதுமே வலியுறுத்துவது, வேறுபட்ட கருப்பொருள்களுக்கு ஏற்ற, வேறுபட்ட தொனிகளை உள்ளே வைத்திருக்கும் கவிதைகள் தாம் இதயத்தில் நுழையும். நுழைந்த வேகத்தில் வெளியேறாமல் உள்ளேயே கிடந்து, உள்ளத்தின் குகையில் இருட்டிலும் வெளிச்சத்திலும் உழன்று என்னென்னவோ செய்யும். பின், அத்தொனியை, அவரவர் வாழ்வில் கண்டடைவதற்கான வாயில்களை எல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் திறந்து கொண்டே இருக்கும். நல்ல கவிதை என்பதன் செயல்பாடு இதுவாக இருக்கும்!
தமிழ்நதியின் இரண்டு கவிதைத்தொகுப்புகளுமே வேறுபட்ட இரண்டு உலகைச் சித்திரிப்பனவாக இருக்கின்றன. முதல் தொகுப்பு, ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்று மனிதர்களற்ற நிலப்பிரதேசத்தில், அப்பகலைத் தனியே கடக்கவேண்டிய சூரியனின் நிலைக்கு அழுத்தம் கொடுக்கும் தொகுப்பென்றாலும், அகதியாக நாடோடிப் பெண்ணாக, அஞ்ஞாதவாசம் இருக்கும் பெண்ணின் தனி மனித உறவுகளையும் அதுவும் பால்நிலை மையமிட்ட இடத்திலிருந்து நோக்கி, அவதானித்துச் சொல்லும் கவிதைகளாக இருக்கின்றன. எனக்கு இவர் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்த இடத்து, ‘மொழி’ என்பது ஓர் ஆதிக்கக்குறியின் வடிவில் எழும்பி நிற்பதையும், அதைச் சிதைக்க சொற்களைத் தேடிய சுயப்பயணத்தில் இவரின் எழுத்து வேட்டை இருப்பதையும் உணரமுடிந்தது.
பல சமயங்களில் மொழியென்பது, நிலத்தின் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நிறைய பேரரசுகளுக்கு உதவியிருக்கிறது. ஈழத்தைப் பொறுத்தவரை, மொழி கொண்டிருந்த நுண்ணரசியலைப் பேச இவ்வெளியும் காலமும் போதாது. என்றாலும், அம்மொழியின் வழியாகத் தான் விடுதலை என்பதை பெண்கள் விளக்கமுடியும் என்பதை தமிழ்நதியின் எழுத்து தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான ஈரத்தையும், நெகிழ்ச்சியையும், தொடர்ப்பாய்ச்சலையும் கொண்டிருப்பதால், அந்நிலத்தின் தீயை தன் சொற்களால் விளக்குவதாகவும் இருக்கிறது.
ஆண்மை
ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம்
தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது
அன்று விசித்திரப்பிராணியாகிச்
சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன்
ஓடும் பேருந்தில்
திடுக்குற்று விழிதாழ்த்தி
அவமானம் உயிர்பிடுங்க
கால்நடுவில் துருத்தியது
பிறிதொரு நாள்
வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி
இறைச்சிக்கடைமிருகமென வாலுரசிப்போனது
பின்கழுத்தை நெருங்கி சுடுமூச்செறியும் போதில்
ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த
உன் கண்களை நினைத்தபடி
‘குறி’ தவறாது சுடுகிறேன்
இதழ்க்கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள்
என் சின்னஞ்சிறுமியே!
ஆண்மையின் சுடுமூச்சு தன் உடலைத் தொடர்ந்து வரும் வேறுபட்ட தருணங்களை இக்கவிதையில் முன்வைத்திருக்கிறார். இதில், ’குறி’ தவறாது அவ்வாதிக்கக் குறியைச் சுடும் ஒரு தருணத்தை தனக்கானதாகவும் ஆக்கிக்கொள்கிறார். ஆணாதிக்க வேட்கைகள், பெண்கள் மீது திணிக்கப்படுவதினும் அது தொடர்ந்து வழங்கப்படுவதும், கைக்கெட்டுவதாய்க் காட்சிப்படுத்துவதுமென பொதுவெளியில் துருத்திக்கொண்டே தான் இருக்கிறது. வேறு எந்த விடுதலையானதொரு வாய்ப்பினையும் பெறமுடியாத நிலையில், தன் இதழ்க்கடையில் முளைக்கும் பற்களால் தனக்குள் இருக்கும் சின்னஞ்சிறுமிக்குத் தனக்குத்தானே துணிவேற்றிக் கொள்கிறார்!
பாலை நிலப்பெண்ணைப் போல வெப்ப மூச்செறியும் தனிமையைத் தன் பல கவிதைகளில் தமிழ்நதி முன்வைத்துக்கொண்டே இருக்கிறார். நமது சமூகத்தில், தனிமை என்பது கூட்டத்தின் மத்தியிலும், குடும்பத்தின் மத்தியிலும் இருக்கும் பெண்ணுக்குக் கூட அனுபவிக்கத் திணிக்கப்பட்டது. என்றாலும், பொதுவெளிக்கு வரும் பெண்களுக்கு, தனிமை என்பது அங்கங்கள் எல்லாம் முறையாக மறைக்கப்பட்டும், அவசியங்கள் குறித்த அங்கங்கள் வெளிக்காட்டப்பட்டும் அவள் எப்பொழுதுமே அணிந்திருக்க வேண்டிய, ஓர் ஆடையாகத் தான் மாறியிருக்கிறது. இத்தனிமையை, எழுத்துப் பெண்கள் சொற்களால் நிரப்ப இயன்றவர்கள். வேறெந்த இரத்த உறவையும் விட சொற்களின் மீது நம்பிக்கையும் ஈர்ப்பும் கொண்டவர்கள்.
இச்சொற்கள், ஏற்கெனவே அகராதியில் கொடுக்கப்பட்ட அர்த்தங்களிலேயே இவர்களிடம் பொருள்பெறுவதில்லை. இவ்விவ்விடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொடூரமான விதிகளைப் பொருட்படுத்துவதில்லை. புதிய சொற்களுக்குக் கண்கள் திறக்கும் வேலையை இப்பெண்கள் தங்கள் தனிமைகளில் செய்து கொண்டிருக்கின்றனர். குவிக்கப்பட்ட சொற்களுக்கிடையே, தேடி ஏதும் கிடைக்காத தங்களுக்கான சொற்களை, தன் உடலுடன் கொள்ள வாய்த்த தொடர் உரையாடலில் கண்டடைகின்றனர். பின், அவற்றை அடுக்கியும் கலைத்தும் போட்டு தன் விடுதலையைப் பாடுகின்றனர்.
பெரும்பாலும் தமிழ்நதியின் கவிதைகள், கவித்துவம் நிறைந்த பாடல்களாகத்தான் தோன்றுகின்றன. நவீனக் கவிதையின் இறுக்கங்களைத் தளர்த்திக்கொண்ட, ஆனால், தரத்திலும் செறிவிலும் கொஞ்சமும் குன்றாத ஓர் உடல் மொழியின் கூக்குரல்களாகின்றன. தோன்றிய வரியிலிருந்து, பாடலைப் போலவே சீரான வேகத்தில் தொலைவிடம் சேரும் பறவையைப் போலவே சொற்களும் சிறகசைக்கும்.
சொற்களுடனான உறவு
அறைக்கதவைப்பூட்ட
சொற்களின் கதவுகள் திறக்கின்றன
செப்புக்களிம்பு படிந்த
தொன்மத்தின் வாயில்களினூடே
புதைந்துபோன பெண்களின்
அழுகை மிதந்துவருகிறது
பேரிரைச்சலுடன் திறக்கின்றன
வரலாற்றின் கபாடங்கள்
கனவும் நினைவுமான
காதல்வரிகள்
மதுவில் தோய்த்தெடுத்த
கவிஞரின் உளறல்கள்
போர் விழுங்கிய தெருக்களில்
அலைகின்ற பாடல்கள்
வலி பொதிந்த சொற்களிலிருந்து
தப்பித்து ஓடிவிடலாம்
காமமும் காதலும் இணைந்த
கூடலின் உச்சம்
சொற்களுடனான உறவு
வலிந்து மறந்திருக்கிறேன்
சொற்களால் கைவிடப்பட்ட ஒரு மாலையில்
வெளியேறத் தவிக்கும் கதவின் வழியாக
உள்ளே வரவிருக்கும் தனிமையை
---------------------------------------------------------------------------
உடலின் விழிப்பு
சொற்களின் உடுக்கடிப்பில்
உடல் பூக்கிறது சணற்காடாய்
காலம் திரும்பிவருகிறது
கனவின் சுவடுகளில்
முன்னேற்பாடாய்
விலங்கின் கூரியபற்களைப்
பறவைகளின் சிறகுகளுக்குள் பதுக்குகிறோம்
அவரவர் மேன்மைகளைக் காட்சிப்படுத்துகிறோம்
மேலும் தாவர உண்ணிகளாய்
இயற்கை எழில் மற்றும் பிரமிள்
‘சக்கரவாளத்தை’யும்
பேசித்தொலைக்கிறோம்
வலித்து இமை சாத்தியபடி
நடக்குமெல்லையில்
மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன
கரைந்தொரு வெளியில் தொலைந்து
ஈதின்பம் என நீலச்சுடர் கண்டு
முயங்கித் தெளியுமொரு காலை
நீயெழுந்து யன்னல் வழி வெறிப்பாய்
சொற்கள் தீர்ந்துவிட்ட அப்பொழுதில்
காலம் தனதிடம் மீள்கிறது
காதல் காலிடுக்கில் வழிகிறது அன்பே
பெண்ணுக்கு மட்டும் காதல் என்பது, வரையறைகளால் சுட்டமுடியாத உறவு தான். பாலுறவைத் தன் உடலுக்குத் தந்து விட்டாலே, அதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டாலே அது காதல் என்று ஆகிவிடாது. அது ஒரு மிகுபசி! யோனியின் வாயிலை மூடியும் திறந்தும் செயல்படுத்தும் உறவின் வெளிப்பாடு இல்லவே இல்லை அது! உடலையும் உணர்ச்சிகளையும் இணைக்கும், சொற்களைக் கண்டடையும் தீராத பயணம் தான் அது! யோனி என்பது அதற்கு ஒரு விளைநிலமாக மட்டுமே இருக்கமுடியும்! அல்லது சொற்களை உற்பத்தி செய்யும் ஓர் உலைக்களனாக இருக்கமுடியும்!
உடலை விழிப்புறச் செய்து, அதை ஒரு மிகுபசி கொண்ட உடலாய் ஆக்கிக்கொள்ளும் வேலையை பெண்கள் தமக்குத்தாமே தான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகம், பெண்கள் உடலைச் சவப்படுத்தி உறைந்துபோகும் நிர்ப்பந்தங்களைத் தொடர்ந்து திணிக்கும் போது, தன் உடலை விழிப்புறச் செய்வதற்குத் தேவையான உந்துதலை, முடக்கப்பட்ட இவ்வுடலிலுருந்து தானே பெறவேண்டும். அத்தகைய மிகுபசி, அவர் கவிதைகளெங்கும் கனன்று சொற்களை இரையாகப் புசிக்கும் உணர்வைத்தான் நாம் அடைகிறோம். ‘நரிக் கவிதை’ என்ற கவிதையில், இந்த உடல் விழிப்பு என்பது பெண்ணுடலை ஓர் அரசியல் ஆயுதமாக மாற்றும் பரிணாமத்தைச் செய்வதை மிக எளிமையாகவும் நேரடியாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேற்குறிப்பிட்ட, ’உடலின் விழிப்பு’ கவிதையும், கீழே தொடரும், ‘நரிக்கவிதையும்’ பெண்ணுடலை, தன்னுடலை அரசியல்படுத்த முயலும் ஒரு நாடோடிப் பெண்ணின் உணர்ச்சி நிலையையும், சொற்தெறிப்பையும் கொண்டிருக்கின்றன!
நரிக் கவிதை
நீங்கள் என்னிடம் ஒரு கவிதை கேட்டிருந்தீர்கள்
எழுதப்படாத அது
அரூபமாய் கழிப்பறையிலும் உடனிருந்தது.
கடந்தமாதம் எழுதியிருந்தால்
புணர்ந்து தீராத உடலின் ஞாபகத்தை
காதலின் வலியாய் உருமாற்றியிருக்கலாம்.
கடந்த வாரமெனில்
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் தேவதையின்
உதிர்ந்து போன சிறகினைப்பற்றி
ஒப்பாரி பாடியிருப்பேன்
சிலமாதங்கள் முன்புவரை
குருதியலை அடிக்கும் கடல்களை…
பசித்தழும் குழந்தைகளை..
எமது பெண்களின்
இறைச்சியைப் பங்குபோட்டவர்களைக்
குறித்து எழுதும் எண்ணமிருந்தது.
களைத்துப் போய்த் திரும்பி வந்த
இந்த மாலையிலிருந்து
புலிவேஷம் கட்டிய நரியொன்று
என்னுள் ஏறியமர்ந்திருக்கிறது
இந்த நரியைத் தரையிறக்காமல்
எழுதிவிட முடியுமா
ஒரு கவிதையை?
சமீப காலமாக, நிலத்துடனான பெண்களின் உறவு குறித்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எனக்குப் பெண்கள், தாம் காலூன்றும் நிலமாகக் கண்டறியும் வெளி எது எதுவென்று துருவித்துருவித் தேடுகின்றேன். பல பெண்களுக்கு, எழுதும் பெண்களுக்கே கூட உடல் ஒரு பிரதேசமாக மாறாமலேயே படபடப்புப் பெறுகின்றது. இன்னும் சிலருக்கு, யோனியின் உழப்பட்ட நிலத்தைக் குத்தகைக்கு அளிக்காத தீயாய் எரியும் வேட்கை!. சிலருக்கு, தேசம் என்ற தன் குடும்பம், சுற்றம் அவருடனான தன் உறவு, பால்யம், நினைவு வெளி என இதில் இடம்பெற்ற பெளதீக வெளிகளைத் தேடித்தேடித் திரியும் காற்றாடி மனம். இந்நிலையில், வேரறுக்கப்பட்ட தன் நிலத்தை எப்படி தனக்குள் வருவித்துக்கொள்வாள் என்பதற்குத் தான் அற்றைத்திங்கள் கவிதை பதிலளிக்கிறது.
தன் உணர்வைக் கூர்மைப்படுத்தி, செம்மையாக்கி வழங்கும் போதெல்லாம் அதற்கு நேர்மையாக இருக்க அத்தனை சிரமங்களையும் எடுக்கும் போதெல்லாம் உருவாகும் கவிதை என்பது தனிமனிதருக்காகவன்றி, பொதுவான உடைமையாகிறது. இப்படித்தான், தமிழ்நதி தன் நிலத்து மக்களுக்கான பொதுக்குரலாகிறார். இது, ஓர் அசாதாரண நிலையே. தன் நிலத்தில் வாழ அனுமதிக்கப்படாத மக்களுக்காகவெல்லாம் தன் குரல் எழும்பி நிற்க, அவர் என்றுமே தயங்காத படிமங்களும் நிகழ்வுகளும் இவர் கவிதைகளில் சூழ்ந்திருக்கின்றன! ’அடையாளமற்ற நிலை’ என்பது அடையாளங்களைத் தனக்குள் உருவேற்றிக்கொண்டோர் மத்தியில் எந்த அளவுக்கு அதிகாரமும் உரிமையுமற்ற நிலையாக இருக்கிறது என்பதை இக்கவிதையில் உணரமுடியும். காலங்காலமாகப் பெண்கள் நிராதராவாக தன் நிலத்தைப் பார்த்து ஏங்கி நின்று கண்ணீர் கசியும் நிலையையும், ‘அற்றைத் திங்கள்’ எனும் அடைமொழியால் அளிக்கிறார். எந்த ஒரு குடும்பத்திலும் பெண்களுக்குச் சொத்துரிமையை நிறைவேற்றாமல், முழுதுமாய் வேரைப்பிடுங்கி, வேறு தொட்டியிலோ, அல்லது வெட்டவெளியிலோ நடுவதால், அவர்கள் தங்கள் உடலுக்கும் மனதுக்கும் கொஞ்சமும் ஒவ்வாத தட்பவெப்பநிலையை அனுபவிக்க நேர்கிறது. இதே நிலை தான் தாய்நாட்டைப் பிரியநேர்ந்தவருக்கும்!

அற்றைத் திங்கள்
நேற்றொரு சனவெள்ளத்தில் மிதந்தேன்
ஒரு துளிப்புன்னகையுமற்றுக்
கடந்து போகிற மனிதர்கள் வாழும்
அந்நியத்தெருக்களில்
அடையாளமற்றவளாகச் சபிக்கப்பட்டுள்ளேன்
என்னைக்குறித்து அவர்களும்
அவர்கள் குறித்து நானும்
அறியாதொரு மாநகரின் தனிமை
உனது சிகரங்களிலிருந்த படி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே
பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல் பரத்திக்கிடக்கிறது
தொப்பூள் கொடியுமில்லை
தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை
நான் முகமற்றவள்
எந்த மலையிடுக்கிலோ
எந்த நதிக்கரையிலோ
விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க
இல்லாதொழியலாம் எனதிருப்பு
என் போலவே நாடோடியாய் அலையட்டும்
நிறைவுறாத என் பாடல்களும்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே
இரவுகளில் பொழியும் துயரப்பனி
துயரப்பனி பொழியும் இரவுகளில்
எழுத்தின் மெழுகுவர்த்தியை
அறைக்குள் ஏற்றி வைக்கிறேன்
நிலையற்ற இருப்பினை நினைவுறுத்தியபடி
அலைகிறது சுடர்
வேரறுதலின் வலி குறித்த
வார்த்தைகள் தோய்ந்தன
பிறகு தீர்ந்தன
ஈரமற்ற காலம்
ஆண்டுகளை விழுங்கி
ஏப்பமிட்டபடி கடுகி விரைகிறது
திருவெம்பாவாய் எங்குற்றாய்?
இரத்தம் கோலமிடும்
தெருக்களில் இன்னும் மாற்றமில்லை
காத்திருக்கிறோம்…
ஒரு வயலினில் குழைந்து பிறந்து
குரல்கள் இணைந்து இழையத் தொடர்ந்து
சற்றைக்கெல்லாம்
முரசினில் முழங்கி
நரம்புகளில் நடந்து செல்லவிருக்கும்
அந்தப்பாடலுக்காக…
காத்திருக்கிறோம்
சிவந்த நிறத்திலான கொடி
தன்செருக்கில் கிறங்கிக் கிறங்கி
காற்றினில் அலைவுற…
விடுவிக்கப்பட்ட தெருக்களில்
மிதந்து செல்ல…
காத்திருக்கிறோம்
அஞ்ஞாதவாசத்தில் எழுதிய கவிதைகளை
உயிரைச் சலவை செய்யும்
பின்னிரா நிலவில்
மெட்டமைத்துப்பாட…
காத்திருக்கிறோம்
இந்த இரவு
அதிசயமாக விடிந்துவிடலாம்
அதற்கிடையில்
துயரப்பனி கவிந்த இவ்வீட்டில்
அநாதையாய் இறக்காதிருப்பேனாக!
இரவு, பகல் குழம்பியதைப் போன்ற ஒரு மனநிலையை அகதியாய் இருக்கும் ஒரு பெண் பெறுவதாக உணர்கிறேன். தமிழ்நதி, ஈழ விடுதலையின் பெண்குரலாய்த் தன்னை சீர்மைப்படுத்திக்கொண்டவர். விடுதலை இயக்கங்களின் பெண் குரலாய் அதிலும், தீர்க்கமான அரசியல் தெளிவுடனும், செயல்பாட்டுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண்கள் மிகச்சிலரே. அதற்குக் காரணம், எப்பொழுதுமே பெண்கள் தொடர்ந்த களப்பணியிலும் அதற்குண்டான அரசியல் பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பைத் தமக்குத்தாமே வழங்கிக் கொள்வதுமில்லை. அல்லது, அத்தகையதான தெளிவுமிக்க சொற்களால் தன் அரசியல் நிலைப்பாட்டை முன்வைப்பது இல்லை. தமிழ்நதி, இந்தக் குறைபாடுகளை தமிழ்த்தளத்தில் முழுமையும் நீக்கியவர். தொடர்ந்து மக்கள் விடுதலைக்கான சொற்களை அரசியல் திறனுடன் வழங்குபவர். தேசம் கடந்து தேசம் போகும் அவரது நாடோடி மனம், அவருக்கு அளப்பறியா துணிவையும் அரசியல் கூர்மையையும் உடல் என்ற தேசத்தின் எல்லைகளைக் கடக்கும் சிறகுகளையும் தந்திருப்பதாக உணர்கிறேன்.
ஆதிரை என்றொரு அகதி
ஐந்து வயதான ஆதிரைக்கு
ஆழ்கடல் புதிது
எனினும்
புதிதாக மெளனம் பழகியிருந்தாள்
குற்றவாளிகளாய் படகேறிய கரையில்
கிளிஞ்சல்களினிடையில் கிடக்கலாம் கேள்விகள்
துவக்குச் சன்னங்களுக்குப்
பிடரி கூசி
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டியிலும்
படகினின்று உயிர் தளம்பிய அவ்விரவில்
கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்
எனக்கும் மறந்துவிட்டிருந்தன
‘கடல் ஒரு நீர்க்கல்லறை’ என்பதன்றி.
கழிப்பறை வரிசை…
கல் அரிசி….
சேலைத்திரை மறைவில்
புரியாத அசைவுகள்…
காவல் அதட்டல்..
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
பாழ்நகரை ஒத்திருந்தாள்
சுவர் சாய்ந்து
தொலைவனுப்பிய உன் விழிகளுள்
விமானங்கள் குத்திட்டுச் சரிகின்றனவா?
குருதிப் பிசுபிசுப்பு காலொட்டும்
முடிவிலாத் தெருவொன்றில்
நடந்து கொண்டிருக்கிறாயா?
என் சின்ன மயில் குஞ்சே!
போரோய்ந்து திரும்புமொருநாளில்
பூர்வீகம் பிரிய மறுத்து
தனியே தங்கிவிட்ட
என் தாய் மடியில் இளகக்கூடும்
கெட்டித்து இறுகிய உன் கேள்விகள்
“அம்மம்மா! அவையவள் ஏன் என்னை
‘அகதிப்பொண்ணு’ எண்டு கூப்பிட்டவை?”
பெருமூச்செறியும் தொனிகளுடன் விரியும் தமிழ்நதியின் கவிதைகள் நேரடியான அரசியல் பார்வைகளை நெகிழ்ச்சியான மொழியால் வனைந்து தருபவை என்பதால் ஈரம் கசியும் வரிகளை எந்த நேரமும் அவர்கவிதைகளில் நீங்கள் தாண்ட வேண்டியிருக்கலாம்! ஆனால், அந்த ஈரத்திற்காகத் துணிவை இழந்த ஒரு கோழை மனநிலையை நீங்கள் அடையாளம் காணவே முடியாது. ஏனென்றால், அது கீழே உள்ள அதே பிரகடனத்தோடு உங்கள் கண்முன் எந்தவொரு கணமும் தோன்றி நிற்கலாம்!
அம்மா! மண்டையிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே
சிலீரென்றெழும் ஓசையால்
உறக்கமும் குழந்தைமையும்
கலைக்கப்பட்ட
அவ்விரவுகளையும் மீட்டெடுக்க.
----------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: சென்ற கட்டுரையில், தம் கருத்துகளைப் பதிவு செய்த கருணாநிதி, செல்வம் இருவரின் கருத்துகளையும் வாசித்தப்பின் உண்மையிலேயே குற்றவுணர்வில் தாக்குற்றேன். இயன்றவரை இனி இந்த இடறல் நேராதபடிக்குப் பார்த்துக் கொள்கிறேன், நண்பர்களே! மற்ற கருத்துரையாளர்களுக்கும் என் அன்பையும், மகிழ்ச்சியையும், நன்றியையும் இக்கட்டுரையின் வழியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------
சிறு குறிப்பு: தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி. இவர், ‘சூரியன் தனித்தலையும் பகல்’ (2007) மற்றும் ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’ (2009) ஆகிய இரு கவிதைத்தொகுப்புகளை வழங்கியுள்ளார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கனடாவிலும் தமிழ்நாட்டிலும் மாறி மாறி வசிக்கிறார். கவிதை தவிர, பிற இலக்கிய வடிவங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

கருத்துகள் இல்லை: