பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!
நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ
உமது உயிர்க் கூறு
அரசியல் கடந்த காலம் கொண்டது
உமது சருமம்
அரசியல் படிந்தது
உமது விழிகள்
அரசியல் நோக்கு கொண்டது
- விஸ்வாலா சிம்போர்ஸ்க்கா
சாமானிய மனிதனுக்கு அரசியல் பார்வை இல்லாமலிருக்கலாம் ஆனால் அவனது வாழ்க்கை அரசியலுக்கு உட்பட்டது. அரசியலில் இருந்து தப்ப முடியாதபடி உயிர்மூலங்கள் பிணைக்கப் பட்டிருக்கின்றன. சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், வாழும் மண், காடுகள், சமவெளிகள், இயற்கை, தலைக்கு மேலாக பங்கிடப்படாமல் விரிந்து கிடக்கிற வானம் என எதுவுமே அரசியலில் இருந்து தப்ப முடியாது. அவ்வகையில் மொழியும் அரசியலைப் பேசுகிறது; அரசியலோடு தொடர்ந்து உறவாடுகிறது; அரசியலை நடத்துகிறது. குறிப்பிட்ட மொழியின் இலக்கியங்கள் அந்நிலத்தின் கருப்பொருள் சார்ந்தவைகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ தன் சாட்சியங்களைப் பேசிச் செல்கின்றன. பெண்ணெழுத்தின் வீரியமும் மௌனமும் வெற்றிடமும் பெண்ணின் வாழ்க்கையை, அவளது வரலாறை, அவள்மீது சுமத்தப்பட்ட அரசியலை, அவள் எதிர்த்த அரசியலை, அவளைப் புரட்டிப்போட்ட அரசியலை வெளிப்படுத்தும் சாட்சிகளாக அமைகின்றன.
எழுதப்பட்ட எழுத்துகள் எவற்றை முன் வைக்கின்றனவோ அதற்கு எதிரிடையாக எழுதப்படாத எழுத்துகளின் நிசப்தமும் அரசியலை மொழிக்குள் செலுத்தி வைக்கின்றன. மொழியின் இருமை எதிர்வு குணமானது ஒரு விஷயத்தை ஆதரித்துக் குரல் கொடுக்கும் பொழுதே அதற்கு எதிரான அனைத்தையும் கண்டிக்கும் வன்மையை செலுத்தத் தொடங்கி விடுகிறது. பௌதிகக்காரணிகள் பெண்ணினத்தின் மீதாக வலுவான தாக்கத்தை செலுத்துகின்றன.
உயிர் இயக்கத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிற ஒவ்வொரு உயிரியும் உயிர்த் தொகுப்புகளும் அறிந்தோ அறியாமலோ அரசியலை சுமந்து கொண்டே பயணிக்கிறது. தமிழில் பக்தியிலக்கிய காலத்திற்கு பின்னும் தற்கால இலக்கியத்திற்கு முன்னுமான இடைப்பட்ட காலத்தின் மௌனம் பெண்ணெழுத்தின் மீதான கேள்விகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த மௌனத்தின் உடைப்பை எதிரொளியைத் தற்காலக் கவிதைகளில் காணமுடிகிறது. பிற இலக்கிய வகைமையைக் காட்டிலும் மொழியோடு நெருக்கத்தைக் கொண்டு அகத்தோடு ஊடாடுகிற கவிதைக்களம் பெண் அரசியலின் முன்னெடுப்பை உணர்த்துகிறது.
பெண் வாழ்வியல் எதிர்கொள்ளும் பல் வேறு சிக்கல்களை மீறி ஒடுக்கு முறைகளை மீறி அரசியல், சமூக, பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னகர்வை கவனத்தில் கொள்ள வேண்டியிருப் பதைப் போன்றே அத்தளங்களோடு பயணிக்கிற மொழியின் மூலமான சாத்தியங்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது.
தமிழ்க் கவிதைகளில் பெண்கவிதை மொழி தொட்டுச் செல்லுகிற இடங்கள் மற்றும் விட்டுச் செல்கிற இடங்கள் குறித்த பிரக்ஞை என்பது பெண்வாழ்வின் மீதான அரசியல் தாக்கத்தைப் புரிந்துணர வைக்கிற இடமாகவும் இருக்கிறது.
ஆணாதிக்கம் ஆணி வேரென்றால் பெண் மீதான பொருளாதார, பண்பாட்டு, மத ஒடுக்கு முறைகள் சல்லிவேர்களாக இருக்கின்றன. பண்பாடு, அரசியல், பொருளாதார முன்னேற்றங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டியவை. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. எனினும் இத்தளங்களில் பெண்களுக்கான முன்னேற்றம் குறித்து பேசத்தொடங்கும் பொழுதே தந்தைவழிப் பண்பாட்டின் அடக்கு முறைகளை ஏற்கவும் நேர்கிறது. கல்வியறிவால் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வரும் பொழுதும் பால்ரீதியான பாகுபாடு மறைந்து விடவில்லை. பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குறைந்து விடுவதில்லை. உலக சந்தையில்பெண்களின் உழைப்பை சுரண்டுதல், பெண் உழைப்பு மலிவானதாக பயன் படுத்தப்படுதல் என்பது தொடர்கிறது. பெண்ணுக்கான உரிமைகள் மதிக்கப்படாத நிலையைக் காணமுடிகிறது.
இரண்டாம் பால்களாகக் கருதப்படும் விதத்தால் இங்கு நிலவும் அரசியல் காரணிகளால் வன்முறை செலுத்தப்படுபவளாக உதாசீனப்படுத்தப்படுபவளாக காலந்தோறும் நடத்தப்பட்டு வருகிறாள். இத்தகு புறக்கணிப்பை இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் உருவாகாதது, பெண் படைப்பாளிகள் வாழ்ந்திருந்தாலும் அப்படைப்புகள் ஆவணப்படுத்தப்படாதது, பேசப்படாதது என்கிற கோணத்தில் பார்க்க வேண்டியவையாக இருக்கின்றன. குறிப்பிட்ட மண்சார்ந்த படைப்புகளில் கருப்பொருளாகப் பேசப்படுகிற பெண், பிறகருப்பொருளோடு கொண்டிருக்கும் தொடர்பு குறித்தும் சுமக்கும். அக்கருப்பொருளின்மீது சுமத்தப்படும் சுமைகள் குறித்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட வேண்டியது அவசியம். கருப்பொருளாக பேசப்படுகிற பெண் படைப்பு சக்தியாக உயிர் இயக்கத்தில் இருந்தும் மொழியில் ஆளுமையை செலுத்தி விடாதவாறு நிகழ்ந்திருக்கிற புறக்கணிப்பினை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
சமகாலப் பெண்கவிஞர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டியது குறித்தும், நிலமற்ற நிராதரவான உயிர்வாழ்க்கையின் சவால்கள் குறித்தும், போர் வாழ்க்கை எதிர்கொள்ளச் செய்யும் வன்முறைகள் குறித்தும், உழைப்புச்சுரண்டல் குறித்தும் பேசிவருகின்றன. இவற்றோடு அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பல்வேறு சிக்கல்களையும் வெளிப் படையாகப் பேசுகின்றன. அவை குடும்பம், பணியிடம், பொருளாதாரம் என விரிந்து செல்கின்றன.
ரேஷன் கார்டு
சோதனைக்குப் போனேன்
மக்கள் தொகைக்
கணக்கெடுப்பு எடுத்தேன்
பணியிடைப் பயிற்சி
நேற்றுதான் முடித்தேன்
இன்றைக்கு நான் லீவு
குடும்ப நிகழ்ச்சி
நாளைக்காவது போக வேண்டும்
பாடம் எடுக்க
- தி. பரமேசுவரி
பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் கல்வித்துறையின் பள்ளி ஆசிரியப் பணியில் கற்றல், கற்பித்தல், நிகழ்வுகளோடு தொடர்பற்ற பணிகளையும் செய்ய வற்புறுத்தப்படுகிறது. அரசு இயந்திரங்கள் செய்யவேண்டிய பணிகளை ஆசிரியர்கள் மீது செலுத்தி அவர்களின் கற்பித்தல் பணி முடக்கப்படுகிறது. இவற்றால் பணியையும் கவனிக்க முடியாமல், பணி நேரம் முடிந்து வீட்டிற்குச் செல்ல முடியாமல் உபரி வேலைகளுக்குள் சிக்கிக் கொண்டு உள்ளத்தாலும், உடலாலும் பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பதிவு செய்கிறார். அமைப்புசாராப் பணியாளராயிருக்கும் பெண்களின் நிலையோ விவரிக்க முடியா உழைப்புச் சுரண்டலோடு பெண்களை சக்கையாகப் பிழிகிறது.
தூங்கிக் கொண்டிருக்கும்
உன் முகத்தில்
தோன்றி மறையும்
புன்னகைக்கான கனவு
அதட்டாத அம்மாவைப் பற்றியும்
பதட்டத்திற்கு மேலே பறந்து செல்லும்
பறவைகள் பற்றியும்
இருக்கலாம்
- இளம்பிறை (முதல்மனுஷி)
குழந்தையின் கள்ளமற்றச் சிரிப்புடனான உறக்கத்தைக் கவிதையாக்கும் கவிஞர் பெண்ணாகத் தன்னை உணரும் தருணத்தை கீழ்கண்டவாறு எழுதுகிறார்.
உனக்கு வேலை மட்டுமே வேலை
எனக்கு வேலையும் ஒரு வேலை
- இளம்பிறை (பிறகொருநாள்)
பெண்ணின் உடற்கூறு நீர்மையாய் மாற்றமடையும். அதற்கு இலகுவாய் பெண்ணின் உளவியலும் பொருந்திவிடுகிறது. எனினும் அரவணைப்பையும் ஆறுதலையும் எதிர்பார்க்கிறது. பெண்ணுக்கான கடமைகளுள் ஒன்றாகத் தாய்மை பார்க்கப்படுகிறது. அதனால் கூடுதல் கவனிப்பினை பெண்மீது செலுத்தத் தவறி விடுகின்றனர். அப்பெண்ணை அரவணைக்கும் கைகள் இல்லாமல் ஏக்கத்தைச் சுமக்கிறாள். மகப்பேறு காலத்தில் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை வெண்ணிலாவின் கவிதை பேசுகிறது.
நாளை
உன்னோடு வண்டியில்
முன்நின்று சிரித்துவர
உன் இனிஷியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணி நேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து
கருசுமந்து
குழந்தைத் தவம் இருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை
- வெண்ணிலா (நீரிலலையும் முகம்)
அப்பாவிடம்
சொல்ல வேண்டும்
பெண்
மாநிறமில்லை
நல்ல கருப்பு
என்று சொல்லும்படி
- ஏ. இராஜலட்சுமி (எனக்கான காற்று)
பெண்பார்த்தல் எனும் சடங்கு ஆண்டுகள் மாறினாலும் மாறாதது என்கிற பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது. பெண்ணுக்கான கல்வியறிவு, வேலைவாய்ப்பு, பொருளாதார தற்காப்பு என்பன இருந்தும் போகப் பொருளாக சொத்தாகப் பார்க்கும் பார்வையால் மிகச் சாதாரண உடலியல் காரணிகளை முன்வைத்துப் பெண்களைப் புறக்கணிக்கும்போக்கு குறைய வில்லை.
பேரரசின் சாம்ராஜ்ய சக்ரவர்த்திகள்
மதம் பிடித்தேகி அருவருப்பாய்ப் பிளிற
பலியான ஆத்மாக்கள் பலவும்
தங்களை தேடி அலைகிறது
இன்னும் நிறுத்தப்படாப் போருக்காக
- எஸ். தேன்மொழி (துறவி நண்டு)
உன்னிடம் வரைபடங்கள் உண்டு
சேவகர்களை திரட்டி திசைகாட்டி முட்களையும்
நீயே இரை தேடும் பாதை மட்டும் அறிந்தவள்
எதையும் பதிவு செய்கிறாய்
எனக்கோ சேகரத்தில் சித்தக் குறைவு
உன் மேன்மைக்கான தந்திர விளையாட்டுகளுக்கு
போர் என பெயரிடுவாய்
இறையாண்மை என்ற அழித்தொழித்தலின்
ஆற்றலைத் தகர்ப்பன்
- லீனா மணிமேகலை
இறையாண்மை என்ற பெயரால் நடைபெறும் அழித்தொழித்தல் மட்டுமன்றி இரை தேடுவதை பாதையாகக் கொண்ட பெண் இனத்தால் வழிகாட்டுதலையும் பதிவு செய்தலையும் சரிவர செய்ய முடியாத அவலம் தொடர்வதைக் காட்டுகிறார் லீனா மணிமேகலை. லீனாவின் தூம கிரஹணம் போன்ற கவிதைகள் பெண்ணை இரகசியமற்று வெளிப்படுத்துகின்றன.
ரேவதியின் கவிதைகளும் கவிதைத் தொகுதியின் (முலைகள்) தலைப்பும் இதழின் தலைப்பும் (பணிக்குடம்) பெண்ணுக்கான அரசியலாக வந்திருக்கின்றன. பெண்களைக் கட்டுப்படுத்தும் பண்பாட்டிற்கு எதிராக வினையாற்ற வேண்டியிருப்பதன் தொடர்ச்சியாக மொழியின் மூலமாக உடலரசியல் கருத்துகளை முன்வைத்து பெண் இதைத்தான் எழுதவேண்டும் என்று கருதப்பட்ட கருத்தாக்கத்தைத் தகர்த்து எதையும் எழுதலாம் எனும் முன்னெடுப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பெண்கவிஞர்களின் கவிதைகள் உடலரசியலொடு தேங்கி விட்டதாகக் கருத்துரைகளைக் கேட்க முடிகிறது. இதனைத் தேக்கம் என்று சொல்வதைவிட உடலரசியலைக் கடந்து வெளிவரும் உலகளாவிய, உலகமயமாக்கல் மீதான விமரிசனங்களையும் கவிதைகளில் வைக்கத் தயங்கவில்லை என்பதை முனைவர் ரா. பிரேமா அவர்கள் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் வாசித்த கட்டுரையில் நிறுவியிருப்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் பெண்ணின் வாழ்க்கை சார்புத் தன்மையோடு காலகாலமாக இருந்துவருகிறது.
பெண் சார்புத்தன்மையுள்ள வாழ்வினின்று மீட்டுக்கொள்ள அவளுக்கான நிலம், பொருளாதார சுதந்திரம் இரண்டும் அடிப்படைத் தேவை யாகிறது. சார்பில் உறைந்திருக்கும் பெண்கள் பண்பாடு, அரசியல் தளங்களில் தனக்கான முக்கியத்துவத்தை ஏட்டளவில் இல்லாது நடைமுறைப்படுத்த வேண்டியத் தேவையிருக்கிறது.
ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்கவிஞர்களின் சுயஅனுபம் பொது அனுபவமாக உணரப்படுகிறது. நான் நீ எனத் தொடங்கிய சொல்லாடல்கள் தனிமனுஷியைக் குறித்து மாறி பொதுவில் மாறியது போல பெண் சார்ந்த அனுபவங்களைப் பிறிதொரு பெண்வாசகி படிக்கும் பொழுதுதான் உணர்ந்தது இங்கு கவிதையாகியிருக்கிறதே என்று எண்ணுகிறாள். இது கவிதைக்கான வெற்றி. வாழ்வின் அசல் தன்மையை அனுபவித்து எழுதி வருவதைப் பிரகடனப்படுத்துகின்றன. கலை நயங்களுக்குள்ளும் இன்பங்களுக்குள்ளும் ஒளிந்துகொள்ளும் வடிவமாக கவிதை தேங்கிவிடாமல் ஆற்றல் பொதியாக மாற்றம் பெறத் தொடங்கியது.
குறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதைகளில் தாய், குழந்தை, குடும்பம், பணியிடம், உளச்சிக்கல்கள் என்பனவற்றைக் கடந்து, உடலரசியல், இனஅரசியல், மொழிப்பற்று, மனிதநேயம், தலித்தியம் என்கிற தளங்களில் ஆழந்த புரிதலோடு எழுதி வருகின்றனர். பெண்களுக்கான சட்டம் இயற்றப்பட்டு பெண் சுதந்திரம் சட்ட நூல்களுக்குள் சிறை தண்டனைக் கைதிபோல சிக்கிக் கிடப்பதனின்று விடுபட வேண்டும்.
அரசியல் சமூக, பண்பாட்டுத் தளத்தில் மாற்றம் ஏற்பட்டால் தான் இயற்றப்பட்ட சட்டங் களுக்கும் சட்டப் புத்தகத்தும் பயன் ஏற்படும் பெண்ணுரிமை, பெண்கவிஞர்கள் என்றால் ஆணுக்கு எதிர் நிலையில் வைத்துப் பார்க்கிற மேலை நாடுகளில் நிலவும் பெண்ணிய வகைமையான தீவிரப் பெண்ணிய செயற்பாட்டாளரைப் போலக் கருதுகிற ஒற்றை நோக்கு திருத்தம் பெற வேண்டும். ஆணாதிக்கத்தை எதிர்ப்பதற்கும் ஆண்பாலினத்தை எதிர்ப்பதற்குமான வேறுபாட்டினை உணர வேண்டும்.
பெண் படைப்பாளர்கள் பலர் தங்கள் புகைப் படம் வருவதையோ, தொகுப்பு வெளியிடுவதையோ கூட அச்சத்தோடு மேற்கொள்ளுதலும் நடைமுறையில் இருக்கிறது. ஏனெனில் கவிதையை படைப்பாகக் கருதாமல் பெண் படைப்பாளியின் நாட்குறிப்பென நோக்குதல், இயல்பு வாழ்க்கையை பாதித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இத்தயக்கத்தை உடைத்தால் மேலும் பலநூறு பெண்கவிஞர்களின் இருப்பு வெளிப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவர் பெண்ணாக உணரும் உருமாறும் நிலையில் அவர்களை மூன்றாம் பாலினப் படைப்பாளிகள் என்ற வரையறைக்குள் கொண்டுவருவதா பெண்படைப்பாளிகளின் பட்டியலுக்குள் கொண்டுவருவதாவென்று முடிகொடுக்க வேண்டியிருக்கிறது.
தெரிந்தும் உணர்ந்தும்
கடந்து போகிறாய் என் அந்தரங்கத்தை மிதித்தப்படி....
யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதிபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்
- லிவிங் ஸ்மைல் வித்யா (மூன்றாம் பாலினத்தவர்)
சமூகப் பிரச்சனைகளுக்கு ஏற்ப உடனடியாக சட்டம் இயற்றப்படுவது போலவே பெண் படைப்பாளிகள் மொழியின் மூலம் புதுத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சட்டம் சமூகத்தில் நடைமுறைக்கு உடனடியாக வந்து விடுவதில்லை. அது போலவே பெண்படைப்பாளிகளின் குரல் அடக்குமுறைக்கு எதிராக மானுடத்தைக் காக்க குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. சமூகம் மிகப் பின்தங்கி தொடரமுடியாமல் தேங்கிக் கிடக்கிறது. பாதை போடப்பட்டிருக்கிறது வாகனம் இல்லை என்பதான இப்போக்கு மாற அரசியல், சமூகம், பண்பாடு, மதம் சார்ந்த அனைத்துத் தளங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவற்றிலும் பெண்இனத்திற்கு தேவையான மாற்றங்களும் முன்னேற்றங்களும் உருவாக வேண்டியிருக்கிறது.
பெண் எழுத்தாளர்கள் உலகளாவிய நிலையில் பார்க்கும் பொழுது உரக்கப் பேச முடியாதவர்களாக... பேசுவது பரவலாக போய்ச் சேரமுடியாத அளவு ஒலியடைப்பு செய்யப்பட்ட தாக இருக்கிறது. குரலற்றவர்களாகத் தொடராமல் பெண் படைப்பாளிகள் தங்களுக்குள் கூட்டிணைவோடு செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. உதிரிகளாகப் போய் சக்தியை பலனற்று விரயமாக்காமல் ஒருங்கிணைய வேண்டிய தேவையைப் புரிந்துணர வேண்டும்.
உலகம் முழுவதுமான பண்பாட்டுச் சிதைவு களுக்கிடையில் பெண்ணுக்கான உரிமையை ஓங்கியொலிக்க செய்ய வேண்டியுள்ளது. சூழலியத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிற பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. மனித உரிமைகளோடு பெண்ணுரிமையை இணைத்தே நோக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.
-ச.விசயலட்சுமி
(நன்றி : செம்மலர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக