05 ஜூன், 2011

பெரும் இன அழிப்பு

பெரும் இன அழிப்பு என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான ஹாலோகோஸ்ட் (Holocaust) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அக்காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் (நாஸி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள் என்போரும் அடங்குவர். பல அறிஞர்கள் பெரும் இன அழிப்பு என்னும் போது மேற்படி எல்லாப் பிரிவினரையும் சேர்த்துக் கொள்ளாமல் யூதர்களின் படுகொலையை மட்டுமே குறிப்பர். ஜேர்மன் அரசு இதனை "யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு" என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இத் தொல்லைகளும் படுகொலைகளும் ஜேர்மனியின் அரசினால் பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் குடிமக்கள் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய ஜெர்மனி, சிறப்புப் படையணிகள் மூலம், யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர்வண்டிகள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். அக்கால ஜேர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக் கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது என ஓர் அறிஞர் குறிப்பிட்டார்.
மே/ஜூன் 1944 இல் ஆஸ்ச்விட்ஸ் வதைமுகாமில் "தேர்வு" நடைபெறுகிறது. வலப்பக்கம் உள்ளவர்கள் அடிமை வேலைக்கும், இடப்பக்கத்தில் உள்ளவர்கள் வாயு அறைக்கும் அனுப்பப்படவுள்ளனர். இப்படம் ஹங்கேரியிலிருந்து யூதர்கள் கொண்டுவரப்படுவதைக் காட்டுகிறது. ஏர்ன்ஸ்ட் ஹாப்மன் அல்லது பேர்னாட் வால்ட்டர் பிடித்த படம்.[1]


கருத்துகள் இல்லை: