15 ஜூன், 2011

பொது வெளி-குட்டி ரேவதி


பொது வெளி எது என்பதை ஆண்களை மையமிட்ட சமூகம் தான் தீர்மானிக்கிறது என்பது பழைய தகவல் தான். ஆனால் பெண்களுக்கு அது என்றுமே புதிய செயல்பாட்டைக் கோருவது. அதை முறியடிக்க வேண்டி அவ்வெளியுடன் முதன் முதலாக மோத வேண்டியிருக்கும் பெண்களும், அதை படைப்பாக்க வெளிக்குள் கொண்டு வர வேண்டிய பெண்களும் தாம் போராடவேண்டியிருக்கிறது. இதை ஆண்களின் அறிவுத் திமிர் அல்ல, எல்லாம் அறிந்ததான திமிர்! பெண்ணைக் கேளிக்கைப் பொருளாக்கி வாழ்வதென்பது இன்று நேற்றைய பணி அன்று. ஆக, பொது வெளியை நாம் நமதாக்கலாம்.

பெண்ணுக்குக் கல்வி என்பதே முதல் பொதுவெளியை ஏற்படுத்தித் தந்தது. அது புற அளவிலான வெளியாக இருந்தது போல வாசிப்பு என்பது கற்பனையான அக வெளியாக விரிந்தது. பெண்கள் தம் வாசிப்பிற்கான நூல்களை கண்டடைவது புற வயமான பயணத்தைக் கோருவது. வாசிப்பின் வழியாக தம் எண்ணத்திற்கு ஒத்த சிந்தனைகளைக் கண்டுபிடித்து மொழியாக்குவது அக வயமான பயணமாகும். இவ்வாறு அகவெளியையும் புறவெளியையும் மீறி பொது வெளிக்குள் நுழைவதற்கு சிறிதளவேனும் அதிகாரமும் முயற்சியும் தேவைப்படுவதாகும்.

மரத்தடி, தேநீர்க்கடை, சாலைப் புறங்கள், மைதானங்கள், வரவேற்பறைகள், திரை அரங்கங்கள், கருத்தரங்க வெளிகள் எனப் பொது வெளிகளில் தம்மை இருத்திக் கொள்வதற்கான வசதிகள் இருந்த போதும் வாய்ப்புகளை பெண்கள் பெறுவது சாத்தியமில்லை தான். அந்த அளவிற்கு அறிவாக்கத் துறை பெண்ணின் மீது அளவிலா வெறுப்பைத் திணித்துக் கொண்டிருக்கிறது. அது வெறுமனே போட்டி உணர்வினால் எழுந்தது மட்டுமே என்று தோன்றவில்லை. பெண்களை இயல்பாகவே கேலி செய்யும் மனோபாவமும் உடனுக்குடன் அதைச் செயல்படுத்தும் சுதந்திரமும் ஆண்களுக்கு இனாமாகக் கிடைத்தது. என்பதாலும் பொதுவெளியில் அந்தவெளிக்குள் தன்னை இருத்திக் கொள்ள விரும்பும் பெண் அந்த கேலியின் தாக்குதலுக்கு நேரடியாகத் தன்னை ஒப்படைப்பதாக எண்ணி ஆணின் எல்லாம் அறிந்த மனோபாவம் தன் கேலியை மொழியாக்குகிறது. ஆகவே தான் பெண்கள் தம் மொழியை இருப்பிற்கான அவசியமாக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு மொழி என்பது விடுதலைக்கான ஆயுதம் மட்டுமன்று. அது அறிவாக்கப் பணிக்கான ஆயுதமும். தம் இருப்பின் அடையாளம். தம் திறனைச் செயல்பாடாக்கும் அரசியல். ஆக, இத்தகைய பெண்கள் ஆண்களை வெறுப்பவர்கள் பொத்தாம் பொதுவாக கூறுவதெல்லாம் பொதுவெளியில் பெண்களை கேலியின் நுகர்வாளர்களாக்கி இன்புற்ற ஆண்களின் முழக்கங்கள்.

பெண்கள் பொதுவெளிக்குள் வருவதை ஆர்வத்தோடும் குறுகுறுப்போடும் நோக்கும் கண்களுடையவர்கள், எரிச்சல்களால் இன்புறுகிறார்கள் என்பதே என் உளவியல் புரிதல். நடுத்தர வர்க்கம் இதில் இன்னும் அதிகமாய் ஆரோக்கியமற்ற சிந்தனையுடன் இயங்குகின்றது. அதாவது, தம் வீட்டுப் பெண்களை இப்படித்தான் வைத்திருக்கிறோம் என்ற இறுமாப்பும் அதே இறுமாப்பின் நியதிகளில் மற்ற பெண்களையும் ஒப்பிட்டு நோக்கும் இயல்புடையவர்களாயும் இந்தக் கணவான்கள் இயங்குவார்கள். தம் வீட்டுப் பெண்களை பிற ஆண்கள் கேலி செய்ய நேர்கையில் இயன்றால் ஓர் அடி தம் வீட்டுப் பெண்களையும் அடித்துத் துன்புறுத்துபவர்கள். பொதுவெளி, பாலியல் விஷயங்களை மறைத்து வைப்பதற்கானது என்பதை இவர்கள் தாம் முதலில் பிரசங்கிப்பவர்கள். இன்று அரவாணிகள் பற்றிய விவாதமும் முன்னெடுப்பும் இத்தகைய மனச்சிதைவுற்ற சமூகத்திலிருந்து பிதுங்கி வெளிவந்து துருத்தி நிற்பதற்குக் காரணமானவர்கள். இயல்பான வெளியுடன் தம்மைப் பொருத்திக் கொள்ள எந்த வித நியதியுமற்ற, விடுதலையற்ற ஒரு சமூகத்தின் மீது துப்பப்படும் எச்சிலாகக் கூட இவர்கள் இருக்கலாம். இதற்குப் பதிலாக சமையல் குறிப்புகள் எழுதலாம், நவீன உடைகள் குறித்த அக்கறையில் ஈடுபடலாம், கோலங்கள் எழுதலாம் என்ற சிந்தனைகளை ஒப்புக்காய் ஏற்கும் மனநிலையைப் பெண்களுக்குக் கொடையளிக்கும் மறைமுகமான அறிவார்ந்த பணியை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர் என்பது தான் இதன் அர்த்தம்.

பேருந்துகளில் எல்லோரும் தன்னையே நோக்கிக்கொண்டிருக்கத் தனியே மீண்டும் மீண்டும் பயணம் செய்வது, பெண் ஆரோக்கியம் பற்றிய எந்த அக்கறையுமற்ற ஒரு நாட்டில் பொதுக் கழிவறைகளைத் தேடி அலைவது இவை போன்ற செயல்பாடுகளுடன் ஒரு பெண் இணையத்தள வெளியில் இயங்குவதையும் ஒப்பிடலாம். இன்று வரை ஒரு பெண்ணின் படைப்பாக்கம் ஆரோக்கியத்தைத் தரும் அருமருந்தாக இல்லாமல் ஒவ்வோர் ஆணும் தானும் உள்நுழைந்து, மனம் பிறழ்ந்த விருப்பத்துடன் நோக்கும் உளவியல் நோயுற்று, பின் பொதுவெளியில், ‘அய்யகோ!’ என்று முறையிட்டு அழுவதாகத் தான் இருந்து வருகிறது. காகிதத்திற்கு இருந்த வெறுமனே மலத்தைத் துடைக்கும் உபயோகத்தைப் பெண்கள் மாற்றி வைத்தது கூட காரணமாக இருக்கலாம்.
இவர்களை எல்லாம் யார் அழைக்கிறார்கள் எமது படைப்புகளைப் படிக்க வேண்டி?

கருத்துகள் இல்லை: