சில அதிர்ச்சித் தரவுகள்
- நிஷா
பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன.
அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதை எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையில் அவர்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருகிவிடுகின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ஐ. நா. மற்றும் உலக உணவு ஸ்தாபனம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சித் தரவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம், 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்தில், 500 பேர் பெண்களாக இருக்கின்றனர். 510 பெண்கள் பிறந்திருக்க வேண்டிய இடத்தில் 500 பெண்கள் இருக்கின்றனர்.
10 பேர் பாலியல் தேர்வு காரணமாக தாயின் வயிற்றிலேயே அழிக்கப் பட்டிருக்கின்றனர். 500 பெண்களில் 30 பெண்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 167 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வகையான வன்முறையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றார்கள். 100 பேர் தமது வாழ்நாளின் ஏதோவொரு கட்டத்தில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெண்களும் சனத்தொகையும்
உலகின் சனத்தொகையில் 49.7 சத வீதமானவர்கள் பெண்கள். சமூக அமைப்புகளில் ஆண்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றது. அது மாத்திரமின்றி, பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதைக் கருவிலேயே அறிந்து கொள்ளக் கூடுமாகையால், அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதாலும், பாலியல் தேர்வினாலும் உலகின் பல்வேறு சமூகங்களில் இருந்து சுமார் 60 மில்லியன் பெண் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.
குடும்பத்தில் வன்முறை
குடும்ப வன்முறைகள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அடித்தல், உதைத்தல் என்பனவற்றிலிருந்து, உள ரீதியான பாதிப்புகள் வரை குடும்ப வன்முறைகள் வேறுபடுகின்றன. பெண்ணை அவளது உறவினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தல், பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்தலும், கட்டுப்படுத்தலும், தொடர்ச்சியான உடல் உள வன்முறைகளாகக் காணப்படுகின்றன.
உலகம் பூராகவும் நிலவும் நிலை
* மூன்று பெண்களில் ஒருவர் தான் நன்கு அறிந்தவர்களாலேயே அல்லது தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே அடித்துத் துன்புறுத்தப்பட்டோ, கட்டாயப் பாலுறவுக்குத் தள்ளப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றாள்.
* கொலை செய்யப்படும் பெண்களில் 70 சதவீதமானவர்கள், அவர்களது கணவனாலேயே கொல்லப்படுகிறார்கள்.
* கென்யாவில், ஒவ்வொரு கிழமையும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தமது துணைவர்களால் கொல்லப்படுகிறார்கள்.
* எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் திருமண வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துத் துன்புறத்தப்படுகின்றனர்.
* கனடாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாராமரிப்புக்கென வருடாந்தம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப் படுகின்றது.
* அமெரிக்காவில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு பெண் தனது கணவனாலோ, துணைவனாலோ அடித்துத் துன்புறுத்தப்படுகின்றாள்.
* பாகிஸ்தானில் 42 சதவீதமான பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர்.
* ரஷ்யாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் தமது கணவரால் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.
* ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 5 நாட்களுக்கு 1 தடவை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.
பாலியல் வன்முறைகள்
* ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதே, பாலியல் வன்முறையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகின்றது. விருப்பமில்லாத கருத்தரிப்பு, எச். ஐ. வி/ எயிட்ஸ் உட்பட்ட பாலியல் நோய்களின் தொற்றுகை என்பனவற்றோடு, பாலியல் வல்லுறவு நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது. தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு விட்டோம் என்பது வெளியே தெரியவந்தால் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தாலேயே, தமக்கு நேர்ந்த அவலத்தை பல பெண்கள் வெளியே சொல்வதில்லை.
* தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவனை சட்டத்தின் முன் நிறுத்துவதுமில்லை. இது ஆணை தண்டனையின்றியே தப்பித்துக் கொள்ளவும், மேலும் குற்றம் செய்யும் தூண்டுகின்றது.
உலகில்...
* ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார்.
* அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றாள்.
* பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் 25,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
* துருக்கியில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானவர்கள் தமது கணவனாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றார்கள்.
யுத்தமும் பெண்களும்
யுத்தங்களின்போது பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு உள்ளாக நேர்கின்றது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறக் காரணம், பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் கருதுவதுதான். பல யுத்தங்களின்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகின்றார்கள்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர் களிலும் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவு இருக்கின்றார்கள்.
* அகதிகளில் 80 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாக உள்ளனர்.
* இவ்வுலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் பல மில்லியன் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
* யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.
* கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.
* உகண்டாவில் 1994 இல் இடம்பெற்ற பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.
* சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்களில் 94 சத வீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.
* ஈராக்கில் 2003 இல் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாக குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8 வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம்.
* கமரூஜ் ஆடசிக் காலத்தில் கம்போடியாவில் 250,000 கம்போடிய பெண்கள் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்.
* பொஸ்னியாவிலும் ஹெஸ்ஸகோவின்னாவிலும், 1992 இல் 5 மாதங்களே நீடித்த யுத்தத்தில் 20,00மும் 50,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.
* கொசோவோவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள், சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தப்பட்டடனர்.
தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள்
உலகில் உள்ள எல்லாக் கலாசாரங்களும் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை வழக்குகளை கொண்டிருக்கின்றன. ‘கலாசார நடைமுறைகளாக’ அவை பார்க்கப்படுவதால், பலருக்கும் தவறெனத் தெரியவில்லை.
உலகம் முழுவதிலும்
* உலகம் முழுவதிலும் 135 மில்லியன் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 2 மில்லியன் பெண்கள் அவ்வாறான நடைமுறைகளைப் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.
* தற்போது 10 முதல் 17 வயது வரையுள்ள 82 மில்லியன் சிறுமிகள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
* ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள 28 நாடுகளில் விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாய வழக்குகள் நடைமுறையில் உள்ளன.
* நைகரில் 76 சதவீதமான வறிய பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்கின்றனர.
* எகிப்தில் திருமணம் முடித்த 15 வயது முதல் 49 வயதான பெண்களில் 97 சத வீதத்தினருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது.
* ஈரானில் 2003 ஆம் ஆண்டில், இரண்டு மாதங்களில் மாத்திரம், 45 பெண்கள் தங்கள் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காகக் கொல்லப்பட்டனர்.
* விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாயபூர்வ வழக்கு இந்தியா, இந்தோனேஷியா, மலேஷிய, இலங்கை போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.
* இந்தியாவில் சுமார் 15,000 பெண்கள், வருடாந்தம் சீதனக் கொடுமையினால் கொல்லப்படுகின்றனர்.
* பெரும்பாலும் அவ்வாறான மரணங்கள் சமையல் எரிவாயு வெடித்ததால் ஏற்படுபவையாக சித்தரிக்கப்படுவதனால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றனர்.
குற்றமிழைப்போருக்குத் தண்டனை இல்லை
பெண்களுக்கெதிரான வன்முறைகள் பதிவு செய்யப் படுவதில்லை. அதனால் குற்றமிழைப்வோர் தண்டனை எதுவுமின்றி இலகுவில் தப்பித்துக் கொள்ள முடிகின்றது. பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படாமைக்குப் பல காரணங்கள். பழிவாங்கப்படலாமென்ற அச்சம், போதிய பொருளாதார வசதிகளின்மை, பிறரில் தங்கி வாழுதல், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாமென்ற அச்சம், சட்டநிவாரணங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றி அறியாதிருத்தல் என்பனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.
உலகில்...
* சிலியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 3சத வீதமானோர் மாத்திரமே, அதுபற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.
* அமெரிக்காவில் இது 16 சதவீதமாக இருந்தது. ஆனால், தம்மைப் பற்றிய விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுமிடத்து, தம்மீதான வன்முறைகளுக்கு எதிராக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய, பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சதவீதமானவர்கள் தயாராக உள்ளனர்.
* அவுஸ்திரேலியாவில் 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் எவரும் அதனை வெளியே சொல்லவில்லை.
* பங்களாதேஷில் 68 சதவீதமான பெண்கள் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப் படுவதை எவருக்கும் சொல்வதில்லை.
* ஒஸ்ரியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த 20 சதவீதமான பெண்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
சட்ட நிவாரணங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்து விடுகின்றார்கள். இவ்வன்முறைக்கு எதிரான சட்டங்கள் எவையும் சில நாடுகளில் இல்லை. சில நாடுகளில் சில வன்முறைகளுக்கு எதிராக மட்டுமே சட்டங்கள் அமுலில் உள்ளன. பெண்கள் மீதான எல்லாவிதமான வன்முறைகளை எதிர்த்தும் சட்டங்கள் இருந்தாலும் பல நாடுகளில் இவை ஒழுங்காக அமுல்படுத்தப் படுவதில்லை.
* 2003 இல் பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து 54 நாடுகள் சட்டமியற்றின.
* 79 நாடுகள் வீட்டு வன்முறைகளை எதிர்த்து எந்தவிதமான சட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.
* திருமண பந்தத்திலும் பெண்ணின் விருப்பின்றி உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 51 நாடுகள் அங்கீகரித்தன. விஷேடமாக பாலியல் பலாத்காரம் தொடர்பில், 16 நாடுகளே சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.
எச். ஐ. வி. / எயிட்ஸ்
பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பது, பாரிய சுகாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. வன்முறைகள் பெண்ணின் இனப்பெருக்க சுகாதாரத்தைப் பாதித்திப்பதோடு, உடல், உள நலனோம்புகையையும் பாதிக்கின்றது. பெண்கள் மீதான வன்முறைகளால் எச். ஐ. வி/ எயிட்ஸ் போன்ற நோய்த்தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பும் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிகமானதாக இருக்கின்றது.
உலகில்
* உலகில் எச். ஐ. வி/ எயிட்ஸ் தொற்றுக்குள்ளானோரில் 51 சத வீதமானவர்கள் பெண்கள்.
* புதிய எச். ஐ. வி. தொற்றுக்கள், 15 முதல் 24 வயது வரையானோருக்கே ஏற்படுகின்றன. அவ்வயதுப் பருவத்தில் எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானோரில் 60 சத வீதமானவர்கள் பெண்கள்.
* தினமும் தொற்றுக்குள்ளாகும் 16,000 பேரில் 55 சத வீதமானவர்கள் பெண்கள்.
* ஐரோப்பா, வட மெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களிடையே ஏற்படும் மரணத்துக்கு எச். ஐ. வி/ எயிட்ஸே காரணமாகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக