15 ஜூன், 2011

சுகிர்தராணி – பாலியல் போரின் ஒற்றைச் சிறகு-குட்டி ரேவதி

அதிகமும் காயடிக்கப்பட்ட உடலரசியல் சார்ந்த விவாதங்களை மீண்டும் தொடக்க இடத்திலிருந்தே விவாதிக்கலாம். எல்லோரும் சேர்ந்து இழுத்தப் பின்னரும், அதே இடத்தில் நிற்கப் பணித்தது போல் உறைந்து போய் நிற்கிறது அந்தத் தேர். வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு காரணங்கள் தோன்றி, தேர் நகரவே முடியாது என்று உறுதிப்படும் நிலையில் கூட தேரை வலுவோடு இழுத்து ஊரைச் சுற்றிவருவதற்கான இன்னொரு வாய்ப்பும், மொழியும் பெண் கவிஞர்களுக்கு கிடைத்துவிடும். ஏனெனில், பெண்ணின் உடல் மீது செலுத்தப்படும் வன்முறைகள் அத்தனைக்கு எல்லையற்றவை.
‘பெண்ணின் உடல் ஒரு புதிர்; அது விடுவிக்கப்படக் கூடாது’ என்று பெண்களே வழிமறித்து நிற்கும் போதும், தன் ஒவ்வொரு கவிதையிலும், முன்செல்லும் வண்டியில் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் இடுப்பை நுகர்ந்து தன் காமத்தைச் சொற்களாகப் படைத்து திருப்தியெய்திய ஆண்களே பெண்களுக்கு அந்த அனுமதியை மறுத்த போதும் இன்னும் அதிகமாக பெண் மொழி வலு பெற்றிருக்கிறது. வழிமறிப்புகள் எப்பொழுதுமே பாலியல் ஒடுக்குமுறையாகப் பெண் உடல் மீது தான் நிகழ்த்தப்படுகின்றன. போர்க்களம் என்பது, இந்த விஷயத்தில் பெண்ணின் விரிந்த உடல். காயங்களும் வலிகளும் இழப்புகளும் உடலுக்குத் தந்த வடுக்களை பெண்கள் மொழியாக்கி வைப்பது மூதாதைத்தாயிடமிருந்து வந்த மரபணுப் பழக்கம் இல்லையா?

அதற்கு உதாரணமாக, பெண் உடல் மீது செலுத்தப்பட்ட வன்முறைகளை இங்கு அட்டவணைப்படுத்தலாம் என்று இருக்கிறேன். ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்ணாய் வாழ்வது எத்தனை கொடிய ஆயுள் தண்டனை என்பது புலனாக, இவ்வுதாரணங்கள் உதவக்கூடும். அந்தத்தண்டனை, பெண் என்ற பெயரால் எந்த ஒரு பெண்ணுக்கும் நிகழலாம். தான் அந்தத் தண்டனையை அனுபவிக்க மறுத்து, தற்கொலை செய்து கொண்டால், இன்னொரு பெண் வழியாகவேனும் அத்தண்டனை தொடரும்.

பெண் சிசுக் கொலையில் தொடங்குகிறது, இந்த வன்முறை. நம்மூரில், கள்ளிப்பால் கொடுத்தோ, நெல்முளையை விழுங்கச் செய்தோ அல்லது ஈரத்துணியால் மூச்சடக்கியோ கொல்வதுண்டு. இன்னும் இக்கொடிய முறை சேலத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் உயிர்ப்புடன் இருக்கிறது. சீனப்புரட்சிக்கு முன்பாக, பிரசவத்தின் தயாரிப்புகளில் ஒன்றாக சாம்பல் நிரப்பிய பெட்டி ஒன்றையும் அருகில் வைத்திருப்பார்கள். பிறந்தது பெண் குழந்தையென்றால், அச்சாம்பலில் முகத்தை அழுத்திக் கொன்றுவிடுவர். இத்தகைய வன்முறை, பெரும்பாலும் பெண்ணுக்குத் திருமணம் என்பதே எல்லை, அதற்குப் பொருட்செலவு அதிகமாகும் போன்ற பாமரத்தனமான காரணங்களால் தாம் நிகழ்ந்திருக்கின்றன. இலட்சம் இலட்சமாய்ப் பெண் குழந்தைகள், வலியை உச்சரிப்பதற்கான அழுகுரலுக்குக் கூட வாய்ப்பின்றி மூச்சடைத்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அடுத்தக் கட்டமாக, வளர்ந்த பெண்களின் முக்கியமான பணி, ஆண்களுக்கு பாலிமை இன்பத்தை வழங்கி அவர்களைக் களிப்பூட்டுவதே. இதை நிறவேற்றாத அரசக்குலப்பெண்கள் கூட நீரில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு விநோதமான முறைகள் கூடப் பின்பற்றப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவின் நான்காவது இவான் என்ற மன்னன், தனக்குத் தேவைப்படாத மனைவியை, கனமான கோணிப்பையில் போட்டு மூட்டையாகத் தைத்து பாஸ்பரஸ் ஜலசந்தியில் நீரில் போட்டு மூழ்கடித்துக் கொன்றான்.

இந்து மதத்தில், உடன்கட்டையேறுதல் என்பது தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. பெருங்கோப்பெண்டு என்னும் பெண், கணவன் மாண்ட பின் தான் விதவைப் பெண்ணாய்க் கடைபிடிக்க வேண்டிய கடுமையான விரதங்களினும், அவனுடைய சிதையில் குதித்து எரிந்து போவதே மேல் என்று தீயில் குதித்து எரிந்தாள். கைம்மை எவ்வளவு கைப்பாய் இருந்திருக்கிறது பாருங்கள். உடன் கட்டையேறும் பெண், சொர்க்கத்தில் பலவித இன்பங்களுடன் வாழும் பாக்கியத்தைப் பெறுகிறாள் என்ற கட்டுக்கதைகளும் நிறுவப் பட்டன. இன்றும், சொர்க்கம் என்னும் உலகம், மதநிறுவனங்கள் தம் அதிகாரத்தை, பெண்கள் மீது நிகழ்த்திக் கொள்வதற்கான எக்கச்சக்கமான வாய்ப்புகளை அது எந்த மதமானாலும், அம்மதகுருக்களுக்கு வழங்குகிறது.

பெண்களின் பிறப்புறுப்பைக் கட்டுப்படுத்துவதற்காகவென்றே, இடுப்புப்பகுதி முழுமைக்குமான இரும்பாலான கச்சை ஒன்றைத் தயார் செய்த காலங்களும் உண்டு. இக்கச்சை, கால்களுக்கிடையே இரும்பாலான பட்டை ஒன்றுடன் இணைவதாக இருக்கும். பெண்ணின் சிறுநீர் துளை, பாலுறுப்பு துளை மற்றும் மலவாய் எதையுமே ஆணின் கட்டளையின்றி பயன்படுத்தமுடியாது. ஜெர்மனியில் நிறைய பெண்கள் இக்கச்சைகளுடன் புதைக்கப்பட்டது வரலாற்று ஆவணத்தில் பதிவாகி இருக்கின்றது. தண்டனைகளில் பொதுவானது, கசையடிக் கொடுப்பது. இரத்தம் பீறிடும் வரை கசையடிக் கொடுப்பது!
இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண், தான் பெண் என்று அறியும் முன்னரே எல்லா வித சமூக அமைப்பிற்கும் அவளைக் கட்டுப்பட்டவளாக ஆக்குவது என்பது வழக்கமாக இருக்கிறது. சிறு வயது திருமணங்கள் பெண் குழந்தைகள் பருவம் எய்தும் முன்னரே நடத்தப்பட்டன. அதுமட்டுமன்றி, அத்திருமணங்கள், அந்தப் பெண் இன்னும் கன்னியாக இருக்கிறாள், பிற ஆண்களால் உபயோகப்படுத்தப்படாதவள் என்பதை உறுதி செய்வதற்குமானதாக இருந்தது. இந்தியச் சமூகத்தில், பெண்ணின் பிறப்புறுப்பும் அதன் செயல்பாடுகளும் வேறெந்தச் சமூகத்தையும் விட தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் பெண்கள் தம் பால்நிலை விழைவை எப்படி வெளிப்படுத்துவது? ஆனால், அவ்விழைவைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பே இன்றி அதற்கு வசதியான எல்லா ஊடகங்களிலிருந்தும் புறம் நிறுத்தப்பட்டாள். குறிப்பாக, மொழி என்பதைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைக் கூட அவள் பெற்றிருக்க வில்லை. மொழியும் சொல்லும், பெண்களை மெளனமாக இருக்கவிடாது என்பதை உணர்ந்து தான் ஆணாதிக்கச் சமூகம் பெண்களுக்கு மொழியை, கல்வியை மறுத்தது.

சுகிர்தராணியின் கவிதைகள், மொழியற்ற மெளனத்தால் கட்டிப்போடப்பட்டிருந்த உடலை தனக்குக் கிடைத்த மொழியாலும், அதன் வீச்சாலும் கட்டறுத்து அவிழ்த்துவிடுகிறது. மொழியால் உடலுக்குச் சுகிப்பைத் தரமுடியும் என்பதன் நேரடியான மொழிதல்கள் இவரது கவிதைகள்.

‘பருவ திரவத்தில் தோயாத என்னுடல்’, ‘பருவங்கள் வாய்த்த என்னுடல் காளானைப் போலக் கனிந்து குவிகிறது’, ‘ஒற்றைக்கரை கொண்ட உடல்’, ‘மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்’, ‘வார்களால் இழுக்கப்பட்ட உன் இசைவுகளுக்கேற்ப கட்டப்பட்டிருக்கிறது என்னுடல்’, ‘அவரவர் விரும்பியபடி ஆணிகளால் நிரப்பப்படுகிறது என்னுடல்’, ‘தூர்ந்து போன உடல்’ என பலவகையான உடல்களைக் கண்டடையும் கவிதைகளாக இருக்கின்றன இவருடையவை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பெண்ணின் உடல்கள் தட்டையானதாகவும் ஒற்றைப் பரிமாண அர்த்தத்துடனும் தான் புரிந்து கொள்ளப்படுகின்றன. உழைப்பிற்கான இயந்திரமாயும் நாட்டின் பொருள் உற்பத்திப் பெருக்கத்திற்குப் பயன்படும் ஒன்றாகவே அர்த்தம் பெறுகின்றன. இந்நிலையில், தன்னுடலை முழுதும் தனக்கேயான ஒன்றாக்கி அதன் மற்ற பரிமாணங்களையும் கண்டடையும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார், சுகிர்தராணி.
கடலளவு

இருள் குடித்த புறநகர் ஒன்றின்
கடைசி இரயில் நிறுத்தத்தில்
காத்துக் கொண்டிருக்கிறேன்
அதிவிரைவு வண்டிகள்
என்னைக்
கடந்த வண்ணமிருக்கின்றன
அவற்றிலிருந்து கிழிந்த வெளிச்சமும்
கெட்டித்துப் போன இருட்டும்
புலியின் வரிகளாய்
என் மீது படிந்து நகர்கின்றன
முந்தைய நிறுத்தத்திலிருந்து
கடத்தி வரப்பட்ட காற்று
என் மேலாடையை
அலைக்கழித்த படி செல்கிறது
நான் நிற்பதன் பிரக்ஞையற்று
எதிரும் புதிருமாய்
இயங்குகின்றன பல வண்டிகள்
போதையில் சிக்கிய கண்ணாடி வண்டென
அகப்படாமல்
பறந்து செல்கிறது பச்சையொளி
இரயிலை நிறுத்தும் வழியறியாது
கல்லிருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன்
காலடியில் உறைந்து கிடக்கிறது
கடலளவு இரத்தம்


பெரும்பாலான இவரது கவிதைகளில் தனித்து ஒற்றையாய் இருக்கின்றது இவரது உடல். எதிர்வரும் கற்பனை உருவமோ, இரவோ, காற்றோ, நிகழ்வோ உடலுக்குள் தீராத வினைகளைப் புரியும். அதனால் உண்டாகும் உடலெழுச்சிகள் கவிதைகளாகும். ஆனால், இத்தகைய கவிதைகளாய் இவருடையது மட்டுமே இருப்பது தான் இவருடைய சிறப்பு.
அதுமட்டுமன்றி, சுயம் பொங்கும் தனது உடலை மட்டுமே தொடர்ந்து எழுத்தாக்குகின்றன இவரது கவிதைகள். வன்மத்தைச் சொற்களாக்கும் போது, அவை கோபத்தின் சீற்றத்தோடும் பெருமூச்சோடும் முடிந்து போகும் பிறரின் கவிதைகளுக்கிடையில், சுகிர்தராணி தன் கோபத்தைத் தெளிவான அம்பொன்றாக எய்தத் தெரிந்தவர்.
தமிழில் பாலிமை உணர்வுகள் கவிதை ஆகும் போது, உதாசீனப்படுத்தப்பட்டன. அதற்குக் காரணமாக நான் எண்ணுவது, அதைப் புரிந்து கொள்ள பழக்கப்படாத உளவியலுடன் ஆண்களும் பெண்களும் திரியும் சமூகமிது என்பதே. உடலை விடுதலைக்குத் திறந்து கொடுத்த நிலையில், தன்னகத்தே சிக்கல் ஏற்படாத கவிஞர்களும் இல்லாமல் இல்லை. அதன் எல்லா பிசிறுகளுடனும் தான் உடல் மொழிக்கவிதை உருவாகிறது. பெண் பால் உணர்ச்சியை அதன் அழகு குறையாது, சங்ககாலப் பாடல்களில் பயிலப்பட்டது போல் முனை முறையாது வழங்குவதில் சுகிர்தராணி வல்லவர். இவரது, ‘உடலெழுத்து’ கவிதை, இம்மாதிரியான முதல் கவிதை. இதற்குப் பின்பு, சில பெண் கவிஞர்கள் இம்மாதிரியாக எழுத முனைந்தனர். என்றாலும் இம்மாதிரியான முதல் கவிதை இதுவே.
தன் பாலிமையின் விடுதலையைக் கண்டடையும் பயணத்தில், ஒரு பெண் இன்னொரு பெண்ணின் உடலில் தான் அதற்கான கதவைக் காண்கிறாள். ஒருபாலுணர்ச்சி, அரசியலாகவும் சமூகக் கருத்தாக்கமாகவும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் கவிதையில் அது அழகு பெறும்போது, உடல் மொழியை இயல்பாகவே, உண்மையாகவே விடுதலை செய்கிறது. இரு ஒரேவிதமான துயரங்களை அனுபவிக்கும், ஒரே மாதிரியான உடல்களின் உரையாடலை இக்கவிதை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது.

உடலெழுத்து
வெறுங்கால்களால் கடக்கமுடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக்கோப்பைகள்
பற்றப்பட வாகாய்க் காத்திருந்தன
பணித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத்தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துகள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது
இரவு மிருகம்
பருவப்பெண்ணின் பசலையைப் போல
கவிழத் தொடங்கியிருந்தது இருள்
கதவடைத்து விட்டு
மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்
தனியாக அமர்ந்திருந்தேன்
அப்போது தான் தினமும் விரும்பாத
அதன் வருகை நிகழ்ந்தது
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
என்னை உருவி எடுத்துவிட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே
படித்து முடித்திருந்தேன்
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய்ச் சொல்லியவாறு
சுயப்புணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்.
‘இரவு மிருகம்’ என்ற கவிதை வெளியான காலக்கட்டம் இன்றும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ‘பனிக்குடம்’ இதழில் தான் முதலாக வெளியானது என்று நினைக்கிறேன். மிகவும் சர்ச்சைக்கு உள்ளான கவிதையும் கூட. இரவை மிருகமாக்கி எழுதப்பட்ட கவிதை. கொடிய இரவுகள் தொடரும் பெண்ணின் தனிமை முழுதும், காமவயப்பட்டதாயும், அதனடியில் நிரம்பும் சோகமும் உடைய கவிதை.
என்னைப்பொறுத்த வரை, பெண்ணின் விடுதலை என்பது உரக்க உச்சரிக்கப்படும் புரட்சியான எச்சில் தெறிக்கும் வார்த்தைகளில் இல்லை. அது ஒரு வகையில் இல்லாததைப் பேச முயலும் மனித உளவியலின் எழுச்சி மட்டுமே. ஆனால் சோகமும் துயரமும் வலியும் சொற்களாகும் போது அவை அந்த உடலிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவதற்கான வழியைத் தேடிக்கொள்கின்றன என்று தான் பொருள். உடலிலிருந்து சிறகடித்து வெளியேறத் துடிக்கும் உணர்ச்சிகள், உடலுக்கு ஆசுவாசத்தைத் தருகின்றன. பேராற்றலைத் தருகின்றன. அம்முயற்சியைத் தொடர்ந்து செய்கையில், உடலை உடனுக்குடன் துயரற்றதாக மாற்றும் கமலைகளாக வார்த்தைகள் மாறி நின்று, துயரை வாரி இறைக்கின்றன. அப்பொழுது, அதன் கடைசி வரியில், அல்லது வார்த்தையில், துயரைக் கடந்த பெருங்களிப்பு ஊற்றெடுக்கிறது.
பறக்கடவுள்
சொல்லுகிறீர்கள்
முதுகு விரியக் காய்ந்தால்
அதன் பெயர் பறவெயில்
உலரும் புழுத்த தானியத்தை
அலகு கொத்தி விரையும்
அது பறக்காகம்
கையிலிருப்பதை
மணிக்கட்டோடு
பறித்துச் சென்றால்
அது பறநோய்
நிலத்தை உழுது
வியர்வை விதைத்தால்
அது பறப்பாடு
சகலத்திற்கும் இப்படியே
பெயர் என்றால்
இரத்த வெறியில் திளைக்கும்
எது அந்தப் பறக் கடவுள்
‘பறக் கடவுள்’ கவிதையும், கீழே வரும் ‘ஓட்டம்’ கவிதையும் சாதிய அரசியலை வெளிப்படையாகப் பேசும் கவிதைகள். மலினமானது எதையும் ‘பற…’ என்னும் சொல்லடையுடன் வழங்கும் மனிதனின் சாதிய உளவியலை, ஆதிக்கத்தை, நேரடியான கேள்வியால் கொக்கி போட்டு இழுப்பவை. ‘ஓட்டம்’ கவிதை வரையும் புத்தி விளையாட்டும் அதன் ஓவியமும், ஒடுக்கும் விழைவு கொண்ட எந்த ஓர் ஆதிக்க மனதையும் சவாலுக்கு அழைப்பதுடன், ’நான் இல்லாத போது என் தொடக்க இடத்தில் குவியும் உங்கள் காலடித்தடங்கள்’ என்ற வரியில், எல்லோரின் தந்திரங்களையும் தான் அறிந்திருப்பதை சூசகமாகச் சொல்கிறது.

ஓட்டம்
சிக்கலான விதிமுறைகள்
கொண்டது
என்னுடைய ஓட்டம்
தோற்பவர் எவருமின்றி
வென்றுவிட வேண்டும்
வெல்பவர் எவருமின்றி
தோற்க வேண்டும்
பயணத் தூரத்தை
மனம் தீர்மானித்துக் கொள்ளலாம்
தொடக்க இடத்தில்
கால்கள் குறியிட்டுக் கொள்ளலாம்
பயணிக்க வேண்டிய
பாதையை
நதியோரமோ
வெளிச்சத்தின் சாயல்படாத
வனத்தின் வழியோ
சாம்பல் படிந்த
எரிமலைப் படிவுகளைக் கடந்தோ
ஆதித்தோட்டத்தின் அந்தரங்க வழியோ
கண்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
கடக்க முடியவில்லையெனில்
இடையில் இளைப்பாறிக் கொள்ளலாம்.
காலத்தின் கைகளில்
நிறுத்து கடிகாரம் இல்லை
திரும்பிவரும் தூரம் கூட
முன்னோக்கிய பயணத்தில்
சேர்த்துக்கொள்ளப்படும்
ஓட்டத்தை முடித்துவைக்க
கையசைவுகளோ
கொடியசைப்புகளோ
ஏதுமிருக்காது
பின்
எவை என்னைத்
தீர்மானிக்கும்?
நான் இல்லாதபோது
என் தொடக்க இடத்தில்
குவியும் உங்கள் காலடித் தடங்கள்
யோனிகளின் வீரியம்
பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன் குறி மறைந்து போகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்

‘யோனிகளின் வீரியம்’ என்ற இக்கவிதை, அது சொல்ல வந்திருக்கும் கருப்பொருளால், இத்தலைமுறையின் மிக முக்கியமான கவிதை ஆகிறது. தொடர் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் பெண்ணுடலின் இயல்பான உடற்கூறுகள், நூற்றாண்டுகளாக மாற்றம் பெற்று வந்திருக்கின்றன. உருமாற்றமும், வளர்சிதை மாற்றமும் பெற்றிருக்கின்றன. ‘குடல் வால்’ எனும் உறுப்பு, ஆணுக்கும் பெண்ணுக்கும் பயனற்றுப் போன உறுப்பாக இருக்கிறது. அந்த வரிசையில் ஆணின் குறியும் தேய்ந்து நலிந்து போகும் என்று குறிப்பிடுகிறார். பரிணாம வளர்ச்சியில் அப்படியான ஒரு நிலை என்றால் மானுடத்தின் தோல்வி தான் அது. என்றாலும், வீர்யமுற்றிருக்கும் எம் யோனி எனும் சொற்பதத்தை முத்திரையாக்கி, சொல்லவந்த பொருளை தொடர்நிலையில் வைக்கிறார்.
சுகிர்தராணிக்குப் பின்பாக உருவான பெண் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும், அவர் பேசிய பொருளையே மீண்டும் வேறொரு தொனியில் பேசிப்பார்ப்பதாய் இருக்கின்றனவே அன்றி, அவர் கவிதைகளில் கையாண்ட சுயத்துவத்தைச் சிறிதும் உள்நுகர்ந்ததாய் இல்லை. குறிப்பாக, நான் மேலே சுட்டிக் காட்டிய, ஒரு பாலுணர்ச்சி, சுயப்புணர்ச்சி, தன் உடலின் சுயம் மேலோங்கிய ஆண் புணர்ச்சி என்று பால் உறவின் எல்லா வெளிகளையுமே தமிழ்ச் சூழலில் வேறெவருக்கும் முன்பாகவே பேசத் துணிந்தவர். அல்லது எப்பொழுதோ பேசத் தொடங்கியவர். பாலியல் போருக்கான தன் சிறகுகளைத் தானே அசைத்து எழுந்தவர். மேலும், அது தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்குரலென அடையாளம் பெறுகையில், அது தன் மீது அழுந்தியிருக்கும் எல்லோருடைய குரலையும் துச்சமாகத் தூக்கியெறியும் சக்தியுடன் பீறிட்டிருக்கிறது.
’கைப்பிடித்து என் கனவு கேள்’ என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு சாதாரண மிகுபுனைவுக் குரலாகவே பதிவாயிருந்தது. என்றாலும், வளமான மொழியும் கருப்பொருளும் கொண்ட இவரது இரண்டாம் தொகுப்பு முதலான கவிதைகள், தொடர்ந்த ஒரே மாதிரியான தொனியால் தன் படிமங்களை முன் வைக்கும் போது தொடர் வாசிப்பில் எங்கோ அயர்ச்சியூட்டுகின்றன. எங்கேயோ வாசித்த உணர்வை அவை தருவதையும் தவிர்க்கமுடியவில்லை. விடுதலையின் வேட்கையை வெவ்வேறு தொனியும் மொழியும் கொண்டு வரிகளாக்குகையில், அடுத்தடுத்த அடிகள் இன்னும் அதிகமாய் வேகம் பெற்று முழங்கும். அதற்கான அத்துணை பலமும் கொண்டவர் சுகிர்தராணி என்பதை, அவரது தொடர் கவிதை இயக்கம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

----------------------------------------------------------------------------------------------
சிறு குறிப்பு: ‘கைப்பற்றி என் கனவு கேள்’(2002), ‘இரவு மிருகம்’ (2004), ‘அவளை மொழிபெயர்த்தல்’ (2006), ’தீண்டப்படாத முத்தம்’ (2010) ஆகிய நான்கு கவிதை தொகுப்புகளைப் படைத்துள்ள இவர் தலித் பெண் கவிதையின் முன்னோடிக் கவிஞர். வேலூர் மாவட்டம் அம்மூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
 

கருத்துகள் இல்லை: