08 ஜூலை, 2011

தமிழ்நாட்டில் பாளையப்பட்டுகள்


6.2 தமிழகத்தில் மராட்டியர்

    கி.பி. 1675-இல் பீஜப்பூர்ப் படையின் தளபதிகளில் ஒருவராகத்
தஞ்சை நாயக்கர் விஜயராகவருக்கு உதவ வந்த ஏகோஜி எனும்
மராட்டியர், நயவஞ்சகமாக விஜயராகவ நாயக்கரை வீழ்த்தித்
தஞ்சை அரசைக் கைப்பற்றினார். கி.பி. 1675-இல் தொடங்கிய
தஞ்சை மராட்டிய அரசாட்சி சாகாஜி, முதலாம் சரபோஜி, துளஜா I,
பாவாசாகிப்,     சுஜான்பாய், பிரதாப சிம்மன், துளஜா II,
அமரசிம்மன், இரண்டாம் சரபோஜி, சிவாஜி ஆகியோரால்
தொடர்ந்தது. பிரதாபசிம்மன் (கி.பி. 1739 - 1763) காலத்தில் தஞ்சை
மண்ணில் ஆங்கிலேயர் தங்கள் ஆதிக்கத்தைத் தொடங்க
முற்பட்டனர். பிரதாப சிம்மனின் ஆளுகையின் கீழ் இருந்த
தேவிக்கோட்டையை (தீவுக்கோட்டை) லாரன்சு, கிளைவ் முதலான
ஆங்கிலக் கம்பெனி தளபதிகள் கைப்பற்றினர். பின்பு கி.பி. 1787-
1798 வரை தஞ்சை அரசராகத் திகழ்ந்த அமர சிம்மன்
ஆங்கிலேயர்களை எதிர்க்கவே, தங்கள் படை பலத்தால்
ஆங்கிலேயர் அமர சிம்மனை அடக்கினர். தங்களுக்கு அமர
சிம்மன் ஒத்துவராததால் மராட்டிய குடும்பங்களுக்கு இடையே
குழப்பத்தை விளைவித்து, அமர சிம்மனைப் பதவியிலிருந்து
இறக்கி, தங்களுக்குச் சார்புடைய சரபோஜி என்பவரைத் தஞ்சை
மராட்டிய அரசராக 1798-இல் அமரச் செய்தனர். ஓராண்டு
மட்டும் இவரைச் செயல்பட வைத்த ஆங்கிலேயர்கள், 1799- இல்
ரெசிடெண்ட் ஒருவரைத் தஞ்சை ஆட்சியாளராக நியமித்து,
சரபோஜிக்கு, பெயரளவில் மன்னர் என்ற அங்கீகாரம் அளித்தனர்.
கி.பி. 1855-இல் சரபோஜியின் மகன் சிவாஜியின் மறைவுக்குப் பிறகு,
தஞ்சை மராட்டிய அரசு மறைந்து, தஞ்சை ஆங்கிலேயராட்சியின்
கீழ் வந்தது.

(1)
சாகாஜி
1685 - 1712
(2)
அமர சிம்மன
1787 - 1798
(3)
இரண்டாம் சரபோஜி
1798 - 1833
(4)
சிவாஜி
1833 - 1855

6.2.1 தமிழ்நாட்டில் பாளையப்பட்டுகள்

    கி.பி. 17-18 - ஆம் நூற்றாண்டுகளில் தமிழகமெங்கும்
பாளையப்பட்டு ஆட்சிமுறை இருந்தது. மதுரை நாயக்க அரசர்கள்
காலத்திலும். பின்பு ஆர்க்காட்டு நவாப், தஞ்சை மராட்டியர்
ஆட்சிக் காலங்களிலும் இத்தகைய ஆட்சி முறை பரவலாக
இருந்தது. அடிக்கடி ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், மாற்றாரின்
ஆட்சி, கலவரங்கள், போர்கள் ஆகிய காரணங்களாலும், நாயக்கர்
ஆட்சியின் வலுவின்மை, மராட்டியர் போன்ற மற்ற மாநிலத்தவர்
ஆட்சி ஆகியவற்றைச் சாதகமாகக் கொண்டும்,பாளையக்காரர்கள
சிற்றரசர்கள் போன்று நிலை பெற்றனர். திருமலை நாயக்கர்
காலத்தில் மதுரை நாட்டில் மட்டும் எழுபத்திரண்டு
பாளையப்பட்டுகள் இருந்தன.     திருநெல்வேலி,     மதுரை,
இராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல்,
கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இத்தகைய பாளையக்கார்கள்
அதிகம் இருந்தனர்.

    பாளையக்கார்கள் யாவரும் ஒரே குடியினர் அல்லது ஒரே
மொழியினர் என்று     கூறமுடியாது.     திருநெல்வேலி,
இராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்த பாளையக்காரர்கள்
மறவர் குடியினராய் இருந்தனர். மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய
இடங்களில் கள்ளர் குடியினரும், திருநெல்வேலி, திண்டுக்கல்,
கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நாயக்க (தொட்டியர்)
இனத்தவரும் பாளையக்காரர்களாக விளங்கினார். தொட்டிய
நாயக்கர்கள் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளும்
பேசுபவர்களாக இருந்தனர். கி.பி. 1752- இல் தமிழகத்தில் ஏறத்தாழ
60 பாளையக்காரர்கள் இருந்தனர். 18-ஆம் நூற்றாண்டின்
கடைசியில் அவர்கள் 46 பாளையக்காரர்களாகக் குறைந்து
காணப்பட்டனர்.

6.2.2 பாளையப்பட்டு ஆட்சிமுறை

     பாளையக்காரர்களின் உள்நாட்டு ஆட்சியில் நாயக்க அரசோ
அல்ல பிற அரசுகளோ தலையிடுவதில்லை. இவர்கள் நாட்டுப்படை,
காவற்படை வருவாய், நீதி ஆகியவற்றைத்      தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அரசுக்கோ அல்ல பேரரசுக்கோ
உரிய தண்டல் தொகையையும், தேவைப்படும் போது படை
உதவியும் அளிப்பது இவர்களுக்குரிய கடமையாக இருந்தது.
தொடக்க காலத்தில் அரசர்கள் போன்று நீதி வழுவாத ஆட்சியைப்
பேணிய பாளையக்காரர்கள், காலப் போக்கில் பல சமூகச்
சீர்கேடுகளுக்கு வழி வகுப்பவர்களாக விளங்கினர். சமூக ஏற்றத்
தாழ்வுகள், சாதிச்சண்டைகள், கொடுமையான தண்டனை
வழங்குதல், அடிமைமுறைக்கு ஆக்கம் எனப்பல தாழ்வுகள்
பிற்காலத்தில் ஏற்பட்டன.

6.2.3 பாளையக்காரர் முறை ஒழிப்பு

    கி.பி. 1801- இல் சென்னை கவர்னர் எட்வர்ட் கிளைவ்,
பாளையக்காரர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணை
பிறப்பித்தார். பின்னர் பாளையக்காரர்கள் ஜமீன்தார்கள் எனப்
பெயர் பெற்றனர். இம்முறையை அறிமுகப்படுத்திய பிறகு, நாடு
முழுவதும் ஒரே மாதிரியான வரி முறையும் திட்டங்களும்
ஏற்படுத்தப்பட்டன. பாளையக்காரர் என்ற பெயர் மாற்றப்பட்ட
போதும் ஜமீன்தார்கள் பல சலுகைகளை அனுபவித்தனர்.

கருத்துகள் இல்லை: