19 ஜூலை, 2011

சினிமா என்பது கணத்திற்கு இருபத்தி நான்கு சட்டகங்களாக சரியும் உண்மைகள்


உலக சினிமா வரலாறு 23
பிரான்சின் புதிய அலை பகுதி ; இரண்டு


தனது சினிமா குறித்த புதிய கோட்பாடுகளை உலகிற்கு அறிவிக்கும்விதமாக 1951ல் “கையேது சினிமா” Cahiers du Cinema எனும் இதழை துவக்கிய அதன் ஆசிரியர் ஆந்த்ரே பஸின் ... இளைய எழுத்தாளர்களை ஆரம்ப இதழ்களில் உள்ளே அனுமதிக்க தயங்கினார். அவர்களிடம் காணப்பட்ட அபரிதமான துடிப்பும் வேகமும் தான் இதற்கு காரணம் . அவர்களது விமர்சனங்கள் காரசாரமாக இருந்தன .. ஆனாலும் எரிக் ரோமர்,கோடார்ட், ரிவெட் , க்ளாத் சாப்ரோல் மற்றும் த்ருபோ போன்ற இளம்படைப்பாளிகள் இதழூக்கான மற்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். .. திரைப்பட இயக்குனர்களை பேட்டி காண்பது .. திரைப்பட விழாக்கள் பற்றி குறிப்பெழுதுவது போன்ற சிறு அள்வில் அவர்களது எழுத்துக்கள் பிரசுரமாகின. ஆனாலும் அதற்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடிக்கொண்டே இருந்தது. ஆந்த்ரே பஸின் ஒரு தந்தையை போல அவர்களை வழி நடத்தினார். குறிப்பாக த்ரூபோ ஆந்த்ரே பஸினின் செல்லபிள்ளையாகவே வளர்ந்தார். ஒருமுறை த்ரூபோ இளம் குற்ற வாளிகளுக்கான சிறையில் காவலர்களால் பிடிபட ஆந்த்ரேபஸின் தான் அவரை அங்கிருந்து மீட்டு வந்து தன்னோடு தங்க வைத்துக்கொண்டார்.
முதன்முதலாக் 1953ல் த்ரூபோ எழுதிய "A Certain Tendency of the French Cinema எனும் கடுமையான விமர்சனம் தாங்கிய கட்டுரையை ஆந்த்ரே பஸின் துணிந்து பிரசுரித்தார் . அக்கட்டுரை எதிர்பாராத விதமாக பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது . ஒரு பக்கம் பிரெஞ்சு சினிமாவின் அக்காலத்திய இயக்குனர்கள் கொதித்தெழ இன்னொருபக்கம் வாசகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு . இக்கட்டுரைக்கு கிடைத்தவரவேற்பை தொடர்ந்து பஸின் கோடார்ட், சாப்ரோல் ,எரிக் ரோமர் என அனைவரையும் எழுதவைத்தார்.. இதழை இளைஞர்களின் எண்ணங்கள் முழுவதுமாக ஆகரமித்தன. சினிமா பற்றிய புதியகருத்துருவாக்கங்கள் உதித்தன. வெறுமனே நாவலில் இருப்பதை அச்சு பிறழாமல் ஸ்டூடியோவில் படம்பிடிக்கும் முறைமையை இவர்கள் கடுமையாக சாடினர்.விதிகளை உடையுங்கள் இவைதான் அவர்களின் கோஷம் சினிமா இயக்குனரின் ஊடகம் அங்கு தயாரிப்பாளனுக்கோ கதாசிரியனுக்கோ நடிகனுக்கோ முக்கியத்துவமில்லை. இயக்குனர் சர்வ சுதந்திரமாக தான் நினைத்ததை காமிராமூலமாக எழுதுகிற போதுதான் சினிமா எனும் கலை உயிர்பெறுகிறது என்பது போன்ற தங்களது கலைகோட்பாடுகளால் பிரெஞ்சு சினிமாவை அதிரவைத்த்னர்.

உலகசினிமாகளை தலைகிழாக புரட்டி தாங்கள் இயக்குனராக அங்கீகரிப்பவரது பட்டியலை வெளியிட்டனர். அமெரிக்காவின் கிரிபித், D.W. Griffith, விகட்ர் ஸ்ட்ரோஜம் ,Victor Sjostrom,பஸ்டர் கீட்டன் , Buster Keaton, சார்லி சாப்ளின்,Charlie Chaplin, எரிக் வான் ஸ்ட்ரோஹிம் Erich von Stroheim போன்றவர்களையும் பிற்காலத்தைய இயக்குனர்களில் ஆல்பிரட் ஹிட்ச்காக் Alfred Hitchcock , ஜான் போர்ட் john ford ஹாவர்ட் ஹாக்ஸ் Howard Hawks ஆர்சன் வெல்ஸ் Orson Welles ஜெர்மனியில் எர்னஸ்ட் லூபிட்ச் , Ernst Lubitsch, ப்ரிட்ஸ் லாங் Fritz Lang முர்னோ . Murnau இத்தாலியின் ரோபர்ட்டோ ரோஸலினி மற்றும் விட்டோரியா டிசிகா ஆகியோர் கொண்ட பட்டியலைமட்டுமே தாங்கள் அங்கீகரிக்கும் முழுமையான இயக்குனர்களாக அறிவித்தனர் . மற்ற்வர்கள் கதை சொல்லிகள் .அவர்கள் ஒருகதைக்குள் மக்களின் ஞாபகங்களை மூழ்கடித்தனர் . ஆனால் இவர்கள் மட்டும சினிமாவின் கலையை கதைகளையும் ரசிகணையும் கடந்து அழைத்து சென்றவர்கள் என அறிக்கை விட்ட்னர் .

எத்த்னை நாள்தான் விமர்சனம் எழுதுவது நமக்கான சினிமாவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்த இந்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக களத்தில் இறங்கினர் .அக்காலத்தில் இயக்குனராவதற்கான வழி முதலில் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளர்களாக சேருவது பின் குறும்படம் எடுத்து அதன் மூலம் பெரிய தயாரிப்பாளர்களை பிடிப்பது. இதுதான் . ஏற்கனவே இவர்கள் மேல் அக்கால இயக்குனர்கள் கடுங் கோபத்தில் இருந்த காரணங்களால் அவர்கள் உதவி இயக்குனராக சேருவது அத்தனை எளிதான காரியமாக இல்லை . ஆளுக்கு வெவ்வேறான துறைகளின்மூலமாகவும் உதவி இயகுனர்களாக தாங்கள் அங்கீகரித்த இயக்குனர்களிடமும் முதலில் சினிமா தொழிலுக்குள் நுழைந்தனர். அத்ன்படி களாவுத் சாப்ரொல் 20 தி செஞ்சுரி பாக்ஸில் நிர்வாக பிரிவிலும் .கோடார்ட் ஒரு திரைப்படத்தின் மக்கள் தொடர்பு பிரிவிலும் நுழைய த்ரூபோ ரோபர்டோ ரோஸலினியிடம் ரிவெட் ரெனுவாரிடமும் உதவி இயக்குனர்களாக துறைக்குள் நுழைந்தனர் . சிலகாலம் பணிபுரிந்த அனுபவத்தின் மூலம் சொந்தமாக தங்களது கைபணத்தை போட்டு படம் எடுக்க துவங்கினர் . அக்காலத்தில் அரசாங்கம குறும்படங்களுக்காக பொருளுதவி செய்தது ஆனால் அத்தகைய படங்களில் இயக்குனரின் வேலை ஸ்டார்ட் கட் சொல்வதாக மட்டுமே இருந்து வந்தது இதனால் தாங்களே சொந்த கம்பெனி துவக்கி படம் எடுத்த்னர். ஒருவருடைய படங்களில் மற்ற்வர்கள் உதவி இயக்குனராக சம்பளம் இல்லாமல் வேலை செய்தனர். அதன்படி முதலில் எரிக் ரோமர் ,மற்றும் ரிவட் ஆகியோர் படமெடுக்க கோதார்த், சாப்ரோல் ஆகியோர் திரைக்கதை எழுதினர். கோதார்த் ஸ்விட்சர்லாந்தில் இருந்த அணைக்கட்டு ஒன்றை ஆவணப்படாமாக முதலில் எடுக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் காசில்லாமல் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அத்ற்கு தெவையான மீத பணத்துக்காக அதே அணைக்கூட்டிலேயே கூலியாளாக வேலை செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு படத்தை முடித்தார் கோதார்த்.. இடைக்காலத்தில் த்ரூபோவுக்கு திருமணம் ஆகியிருந்தது . அவரது மனைவியின் தந்தை சற்று வசதிமிக்கவராக இருந்த காரணத்தால் சொந்தமாக கம்பெனி துவக்கசெய்து அவரது பணத்தின் மூலம த்ரூபோ குறும்படமெடுக்க துவங்கினார். முதல் திரைப்படம் Les Mistons . தொடர்ந்து இரண்டாவதாக அப்போது பிரான்சில் பெய்த அடைமழையை வைத்து மற்றுமொரு குறும்படம் எடுக்க துவங்கினார். ஒருகட்டத்தில் த்ரூபோவுக்கு அப்படத்தை எடுப்பது சிரமமாக இருக்க கோதார்த்திடம் காமிராவை ஒப்படைத்தார். அப்படத்தை தொடர்ந்து இயக்கிய கோதார்த் த்ரூபோவின் திரைக்கதையை பின் தொடராமல் தன்னிச்சையான படமாக எடுத்து படத்தை முடித்தார் . நியூவேவ் எனப்படும் புதிய அலையின் முதல் படமாக வரலாற்று ஆய்வாளர்கள் இப்படத்தையே குறிப்பிடுகின்றனர்.

இச்சூழலில் அரசாங்கத்தின் சில புதிய சட்டங்களின் மூலமாக வும் புதிய தொழில் நுட்பங்களின் மூலமாக சினிமா எடுக்கும் செலவு குறைய்ய துவங்க ஆந்த்ரே பஸின் தலைமையிலான அந்த புதிய இளைஞர் படைக்கு கதவுகளை திறந்து வழிவிட்டார் போலானது. அதுவரை பிரான்சுக்குள் மட்டுமே வீசிய புதிய அலை கரைகள் உடைத்து உலக நாடுகளெங்கும் வீச துவங்கிய காலமும் வந்தது.

புதிய அலை >
அதுவரையிலான விதிகளை உடைத்தெழுந்த புதிய அலை சினிமாக்களின் காலத்தை துவக்கியவர் ரோஜர் வாதிம் .. 28 வயது இளைஞர் அவரது And God Created Woman) (1956) என்ற படம்தான் அந்த பெருமைக்குரிய திரைப்படம் . தொடர்ந்து மெல்வில்,லூயி மால் , சாப்ரோல் போன்றவர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தாலும் அவை பிரான்சில் மட்டுமே அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டிருந்தன. இது குறித்து 1957ல் பிரான்சில் வெளியான நாளிதழ் ஒன்றில் புதிய இளைஞர்கலின் சினிமா பற்றி ஒருகட்டுரை பிரசுரமானது. The New Wave: Portrait of Today’s Youth எனும் தலைப்பிட்ட கட்டுரையில்தான் முதன் முறையாக நியூ வேவ் புதிய அலை எனும் பதம் பயன்படுத்தப்பட்டது . ஆனாலும் கட்டுரை புதிய இளைஞர்கள் பெரிதாக எதுவும் சாத்தித்து விடவில்லை என்றே எழுதியிருந்தது . இந்நிலையில்தான் 1959ல் பிராங்கோய்ஸ் த்ரூபோவின் (The 400 Blows) (1959).எனும் படம் வெளியானது . பெற்றோர்களின் பொறுப்பின்மையால் சிறுவர்கள் படும் அவதியும் அத்னால திசை மாறும் அவர்களது வாழ்வையும் பற்ரிய இப்படம் காட்சி அமைப்பிலும் படத்தொகுப்பிலும் அதுவரையில்லாத புதிய் அணுகுமுறை கண்டு பார்வையாளர்கலும் விமர்சகர்களும் வியந்தனர். அவ்வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தை பார்த்தவர்கள் அதிர்ந்த்னர் . சிலர் இதுதான் சினிமா என உற்சாகத்தில் இரைந்த்னர் . இது உண்மையை பேசுகிறது.இதுவரை பார்க்காத புது அனுபவத்தை உண்டாக்குகிறது என பரவசமடைந்தனர் . விழாவுக்கு வந்திருந்த் வெளிநாட்டு இயக்குனர்கள் மத்தியில் ஒரே இரவில் த்ரூபொ நாயகனாக மாறி உலக சினிமாவின் புதிய நட்சத்திரமாக பிரகாசித்தார் . இத்த்னைக்கும் அவர் எழுதிய ஒரு விமர்சனத்திற்காக முந்தைய வருட விழாவுக்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது . அதே கேனஸ் திரைப்படவிழா இந்த வருடம் அவரை சிறந்த இயக்குனராக அறிவித்து பெருமை தேடிக்கொண்டது .. உலகசினிமா அரங்குகளில் எழுதியது பொல் படமெடுத்து நிரூபித்துகாட்டிய இளஞனை பற்றிய தகவல் பரபரப்பாக பேசப்பட்டது .

படத்தை எடுத்த தயாரிப்பாளர் இப்போது த்ரூபோவிடம் அடுத்த படத்திற்காக அணுக த்ரூபோ இம்முறை தான் இயக்குவதை விட த்ன் நண்பன் இயக்குவது வரலாற்றிற்கு பெருமை சேர்க்கும் செயல் என்றார்

த்ரூபோ சொன்ன இயக்குனர் ழான் லூக் கோதார்த்
அவர் எடுத்த படம் (Breathless) (1960). அந்தபடமும் அடுத்த வருட பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான வெள்ளிக்க்கரடி விருதை வாங்க நியூவேவ் என பிரெஞ்சு நியூவேவ் என விமர்சகர்கள் ஒருமனதாக அழைக்க துவக்கினர் .
கோதார்த்தின் படங்கள் அனைத்து சம்பிரதாயங்களையும் உடைத்தது. இத்த்னைக்கும் அது வழக்கமான ஹாலிவுட் பி மூவி சஸ்பென்ஸ் வகைப்ப்டம்தான் ..ஆனாலும் காமிரா உயிரோட்ட்மாக அசைந்தது . படத்தொகுப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. சினிமா என்பது வெறும் கதை சொல்வது மட்டுமல்ல அதை தாண்டியது என்பதை அனைவரும் ஏற்க துவங்கினர்
(தொடரும் ) http://www.ajayanbala.in

கருத்துகள் இல்லை: