19 ஜூலை, 2011

தொலைவிலில்லை அக்காலம்



ஜூலை-2..பைசைக்கிள்தீவ்ஸ் இயக்குனர். விட்டோரியா டிசிகாவின் 108வது பிறந்த நாளின் நினைவாக....


உலகத்தில் தலைசிறந்த இயக்குநர்களை பட்டியல் போடுங்கள் என தலைசிறந்த விமர்சகர்களிடம் நாம் கேட்போமானால் பலரும் சாப்ளின்,அகிரா குரசேவா,பெர்க்மன்,ஹிட்ச்காக்,ட்ருபோ என பல பெயர்களை கூறுவார்களே தவிர அத்தனை சட்டென யாரும் டிசிக்காவின் பெயரை குறிப்பிடமாட்டார்கள்.அதே சமயம் அவர்களிடமே உலகத்தின் தலைசிறந்த படங்களை குறிப்பிட்டு சொல்லச் சொன்னால் அனைவருமே தவறாமல் சொல்லும் பெயர் பை சைக்கிள் தீவ்ஸாகத்தான் இருக்கும்.என்ன விந்தை!பை சைக்கிள் தீவ்ஸ் பெற்ற புகழை அதன் படைப்பாளி பெற முடியவில்லை.போஸ்ட் மாடர்ன் தியரி,படைப்பாளன் இறந்து விட்டான் எனக் கூறுகிறது.டிசிக்காவை பொறுத்தவரை அது முற்றிலும் சரியே.பை சைக்கிள் தீவ்ஸ் டிசிக்காவை சாகடித்துவிட்டது.இந்த திரைப்படத்திற்கு எற்பட்ட அபரிமிதமான வெள்ளிச்சம் டிசிகாவின் முகத்தை மறைத்துவிட்டது.அதற்காக டிசிகாவை குறைந்தவராகவே நாம் மதிப்பிட முடியாது.

உன்னதமான கலைப் படைப்புகள் எல்லாம் அதனை உருவாக்கிய கலைஞனை மறைத்துக்கொண்டுதான் பிரமாண்டமாக எழுகிறது.இன்னும் சொல்லப்போனால் அவற்றின் நிழலில்தான் அந்த நிழலில்தான் அந்த படைப்பாளன் தஞ்சமடைய வேண்டியதாக இருக்கிறது.டாவின்சியின் அளப்பரிய சாதனைகள் மோனலிசாவின் வசீகரமான புன்னகையின் முன் தகுதி குறைந்துபோயின.உமர்கய்யாமின் காதல் சுவை ததும்பும் வரிகள் அவரது வான சாஸ்திர கண்டுபிடிப்புகளின் மேல் மண்ணைபோட்டது.அதற்காக டாவின்சியோ,உமர்கய்யாமோ,டிசிக்காவோ அவர்களது படைப்புகளின் முன் தகுதி குறைந்தவர்களாக நாம் மதிப்பிட முடியாது.இன்னும் சொல்லப்போனால் நம்மைப் போன்ற ஆட்கள் இந்த விபத்திலிருந்து தப்பித்து, படைப்பைவிட படைப்பாளியை முக்கியமாகக் கருதி அவர்களின் மறைக்கப்பட்ட முகங்களை வெளிச்சத்தில் கொண்டுவந்து அவர்களது படைப்புகளுக்கு இணையாக கொண்டாட்டங்களை உருவாக்க வேண்டும்.

1902 ஜூலை 7-ல் இத்தாலியிலுள்ள சோவா நகரில் பிறந்தவர் விட்டோரியா டிசிகா. தனது 20 வயதிலேயே நடிகராக தன் கலை வாழ்க்கையை துவக்கியவர்.நடிக்க ஆரம்பித்த செற்ப காலங்களிலேயே காமெடியனாகவும்.கதாநாயகனாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவிட்டார்.பின்னாளில் ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற கவர்ச்சி கன்னிகளான சோபியா லாரன்ஸ்,ஜீனாலோலோ பிரிகிடா போன்ற நடிகைகள் தங்களது ஆரம்ப கால இத்தாலிய படங்களில் டிசிகாவோடு நடித்து தங்களது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் என்பது பின்னாளில் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு விசயம்.

ஹெமிங்வே எழுதிய பேர்வெல்டு ஆர்ம்ஸ் திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோது அதில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அந்த வருடத்திய ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டார் டிசிகா 1940-ல் ரோஸ் ஸ்கேர்லட் என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னை இயக்குனராக உயர்த்திக்கொண்டார்.இரண்டாம் உலகப்போரின் நெருக்கடியில் அப்போது இத்தாலி சிக்கிதவித்துக் கொண்டிருந்த காரணத்தால் அந்த படம் கவனிக்கப்படாமல் போனது.

1943ல் வெளியான திரைப்படம் THE CHILDREN ARE WATCHING US ...அவரை வியப்புடன் பார்க்க வைத்தது.இந்தப் படத்தில்தான் நியோ ரியலிஸத்தின் மூலகர்த்தாக்களில் ஒருவரான கதாசிரியர் ஜெவட்டினியுடன் கூட்டு சேர்ந்தார். தொடர்ந்து மூன்று படங்கள் இருவரும் இணைந்து நியோ ரியலிஸத்தின் அலையை இத்தாலி தொடங்கி உலகம் முழுவதும் ஏற்படுத்தினார்கள்.

ஒரு நடிகர் இயக்குனராக மாறும்போது துவக்கத்தில் ஏற்படும் கசப்புணர்ச்சியே ஆரம்பத்தில் அன்றைய இத்தாலிய திரைப்பட சூழலில் நிலவியது.

1946-ல் வந்த ஹுஷைன் வெற்றியை தொடர்ந்து இத்தாலிய சினிமா சஞ்சிகைகள் டிசிகாவை கொணடாடத்துவங்கின.அதற்கு முன் திரைப்படத்துரையில் சோசலிச எதார்த்த வாதமே ரியாலிசம் என்னும் பெயரில் ரஷயாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.அது எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்து காட்டுவதாக இருந்தது.அந்த ரியலிஸ காலத்தில் சமுக நுண்ணுணர்வுகள் எதுமற்று வெறுமனே கதைக்குள் காட்சிகளை கூர்ந்து கவனிப்பவர்களாகவும் மன ஒட்டங்களை பதிவு செய்பவர்களாகவும் மட்டுமே இயக்குனர்கள் தங்களின் கலை திறமையை கண்டடைந்து புகழ்பெற்றுள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய சரிவு ஐரோப்பாவையே சீர்குலைத்திருந்தது. போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அச்சம்,பீதி உணர்வே மக்களிடம் அதிகமாக இருந்தது.
இந்த பின்புலன்களின் கட்டமைவோடுதான் 1947ல் வெளியானது பை சைக்கிள் தீவ்ஸ்.வெறுமனே எதார்த்தம் என்று ஏமாற்றாமல் அதற்கு பின்னாலுள்ள அரசியல் சூழலையும்,ஒரு சாதாரண மனிதன் திருடன் ஆவதற்கான அறிவியல் ரீதியான காரணிகளையும் கொண்டு இத்திரைப்ப்டம் வெளியானது. சுருக்கமாக சொல்லப்போனால் அக்காலத்தைய இத்தாலி அடிதட்டு மக்களின் ஆன்மாவின் குரலாக இருந்தது பை சைக்கிள் தீவ்ஸ்.

இந்த படங்கள் எதார்த்தமாகவே இருக்கின்றன.ஆனால் அதே சமயம் மக்களுக்கு பலவிதமான அரசியல் பின்புலன்களையும் சமூக அக்கறையுடன் எடுத்துரைக்கின்றன.இவை ரியலிஸத்தை விட நூட்பமாக கவனத்தில் எடுத்துரைக்கின்றன.இவை ரியாலிசத்தை விட நுட்பமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை என கருதி இந்த படங்களுக்கு புதிய அடைமொழியாக நியோ ரியலிஸம் என பெயர் சூட்டி இதன் பிரதமகர்களாக டிசிக்காவையும்,ஜெவட்னியையும்,ரோபர்டோ ரோஸலினியையும் அறிவித்து மகுடம் சூட்டினர்.இதுதான்,நியோ ரியலிஸம் தோன்றிய கதை.சுருக்கமாக சொல்வதாக இருந்தால் கதைக்கும் அந்த படத்திற்கும் உண்மையாக இருப்பது ரியலிஸம்.வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் உண்மையாக இருப்பது நியோ ரியலிஸம்.

படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஒரு கூலித் தொழிலாளி.அதுநாள் வரை சினிமா சூட்டிங்கை பார்த்திராதவர்.தான் வேலை செய்யும் தொழிற்சாலையில் இரண்டு மாதங்கள் லீவு போட்டுவீட்டு வந்து நடித்தார்.அதேபோல முதல் நாள் சூட்டிகை வேடிக்கை பார்க்க வந்த சிறுவன்தான் படத்தில் சிறுவனாக நடித்த ப்ரூனோ.

படத்தை மேலோட்டமாக பார்க்கும் பார்வையாளனுக்கு ஒரு காவிய சோகம் நிரம்பிய கதை ஒன்று சொல்லப்பட்டிருந்தது.சைக்கிளை திருட்டு கொடுத்தவன் வேறு வழியேயில்லாமல் வேறெறொரு சைக்கிளை திருடும்போது மாட்டிக்கொண்டு திருடனாக அறியப்படுகிறான்.

இந்த கதை உலகெங்கும் எந்த மூலையிலிருப்பவருக்கும் சென்றடையக்கூடியதாக இருப்பதுதான் இந்த படத்தின் வெற்றி என்கிறார் ஆந்திரேபஸன்.அதேசமயம் உலகின் மிகசிறந்த சினிமா ரசிகன் ஒருவனுக்கும் அவனால் முழுவதும் கண்டறிய முடியாத பல நுட்பங்கள் திரைக்கதையிலும் திரைப்படமாக்கத்திலும் உருவாக்கம் பெற்றுள்ளன.பைசைக்கிள் தீவ்ஸின் தனித்தன்மை இவைதான்.

எனது கணிப்புப்படி உலகின் மிகச் சிறந்த படங்கள் இரண்டை சொல்லச் சொன்னால் ஒன்று பை சைக்கிள் தீவ்ஸையும்,அதற்கு முன்பாக சாப்ளினின் தி கிரேட் டிக்டேடரையும் சொல்வேன்.இரண்டுமே வரலாற்றை சொன்ன படங்கள்.ஒன்று போருக்கு பிந்தைய அழிவைக் காட்டியதென்றால்,மற்றொன்று போருக்கு காரணமான ஹிட்லரின் இனவெறியை நேரிடையாக இடித்துரைத்து.இரண்டுமே மனிதகுல விடுதலைக்காக தங்களது பாணியில் அழுந்தி பதியவைத்த படங்கள்.

இந்த இருவருக்கும் இடையேயிருந்த ஒப்புமையின் காரணத்தாலோ என்னவோ டிசிகா பைசைக்கிள் தீவ்ஸை சாப்ளினுக்கு தன் வழ்நாளின் கடப்பாடு என பகிரங்கமாக அறிவித்தார்.

மகத்தான் கலைஞன் தன் படைப்பின் முதுகில் வரலாற்றின் வலியை எழுதி வைப்பான்.காரணம் வரலாற்றின் ஆவணங்களைத் தேடும் எதிர்கால சமூக விஞ்ஞானிகளின் விரல்கள் இந்த சமூகத்தின் கலைப்படைப்பையே முதலில் தேடி வரும். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் தங்களது திறமைகளின் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட இயக்குனர்கள் பலர் தங்களின் வலிமையையும் சோகத்தையும் மறைத்து வந்திருக்கின்றனர்.காலம் அவர்களின் பெயரை வலக்கையால் எழுதி இடக்கையால் அழித்து வந்திருக்கின்றது.அவர்களது கலைச் செழுமைகள் அனைத்தையும் காலாவதியாக்கியது.


மேன்மையான மனிதர்கள் கொண்டாடப்படும்போது ஒரு சமூகம் தானாகவே நாகரீகமடைகிறது.ஒருவிதமான மறுமலர்ச்சி தமிழகத்தின் ஊடகம் மற்றும் அறிவு சார்ந்த சூழலில் காணப்படுகிறது.நல்ல் எழுத்துக்கள்,நல்ல படைப்பாளர்கள் ஒரளவு வல்லமை பெறுகின்றனர்.அறிவார்ந்த மக்களே நாளைய தமிழ் சமூகத்தை ஆள தகுதியுடைவராவர்.தொலைவில்லை அக்காலம்.

(2002 ல் டிசிக்காவின் நூற்றாண்டை யொட்டி நான் ஏற்பாடு செய்த சிலம்பு 2002 குறும்பட விழாவின் மலரில் வெளியான் கட்டுரை இது .. முன்னதாக தமுஎச எம் எம் டிஏ கிளை டிசிகா நூற்றாண்டை ஒட்டி ஏற்பாடு செய்த விழாவிலும் இக்கட்டுரை வாசிக்கப்ப்ட்டது )

http://www.ajayanbala.in/

கருத்துகள் இல்லை: