12 ஜூலை, 2011

ஒநாய்கள் காத்திருக்கின்றன -எஸ். ராமகிருஷ்ணன்

ஒநாய்கள் காத்திருக்கின்றன

உலக இலக்கியத்தின் போக்கினை ஒவ்வொரு பத்தாண்டுகாலமும் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகை திசைமாற்றம் செய்கிறது. ஆப்ரிக்க இலக்கியங்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள், அமெரிக்காவின் நான்லீனியர் எழுத்து, பின்நவீனத்துவக் கதையாடல் என்று மாறிவந்த சூழலில் இரண்டாயிரத்துக்கு பிறகான இலக்கியப் போக்கினை மாற்றம் கொள்ளச் செய்திருப்பது ஆசியாவின் சமகால இலக்கியங்களே.
குறிப்பாக சீனா, ஜப்பான், லெபனான், கொரியா, இந்தியா, துருக்கி, இஸ்ரேல், கம்போடியா,  ஆர்மீனியா என்று ஒவ்வொரு தேசமும் தனக்கான தனித்துவமான இலக்கியப் பங்களிப்பையும் முன்னில்லாத புதிய கதைசொல்லும் முறைகள், கவித்துவ வெளிப்பாடுகள், சிந்தனைத் தளங்களை அடையாளப்படுத்தி வருகின்றன.
இன்று உலக அளவிலான சிறந்த இலக்கியப் பரிசிற்கான தேர்வு பட்டியலில் ஆசிய நாடுகளின் புத்தங்களே மூன்றில் இரண்டு பங்கை வகிக்கின்றன. முக்கிய பரிசுகளை வென்றுமிருக்கின்றன.  இந்த வளர்ச்சியை மேற்குலகம் இன்னமும்  அங்கீகாரம் கொள்ளாதற்கு அதன் அரசியல் நிலைப்பாடுகளே காரணம் .
இந்தியாவினைப் போலவே நீண்ட இலக்கிய பராம்பரியம் உள்ள சீனாவில் சமகால இலக்கியம் அதிதீவிரமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. கடந்த இருபத்தைந்து வருசங்களில் வெளியான நவீன சீன நாவலோ, சிறுகதை தொகுப்போ. கவிதைகளோ எதுவும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவேயில்லை. சீனா ஒரு கம்யூனிச நாடு என்ற பொதுதயக்கம் மற்றும் காரணமற்ற வெறுப்பு நம்மை விலக்கி வைத்திருக்கிறது என நினைக்கிறேன், அதன் சமகால இலக்கியத்தை தொடர்ந்து வாசிப்பவன் என்ற ரீதியில் அது நமக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை பலநேரங்களில் உணர்ந்திருக்கிறேன்
சீனாவின் இன்றைய இலக்கியம் சமகால அரசியலை தீவிரமாக விமர்சனம் செய்கிறது, மாவோவின் கலாச்சாரக் கட்டுபாடுகள் குறித்து மறுவிவாதம் நடைபெறுகிறது,  அந்த வரிசையில் வெளியான முக்கியமான நாவலே வுல்ப் டோடம். இது ஒரு கம்யூனிச எதிர்ப்பு நாவல் என்று  கடுமையான சர்ச்சை உருவாகி உள்ளது
சீனாவின் ஐம்பது ஆண்டுகால இலக்கிய வரலாற்றில் மிக அதிகமான பிரதிகள் விற்ற நாவலாக Wolf Totem   கொண்டாடப்படுகிறது. இந்த நாவலின் திரைப்பட உரிமையை லார்ட் ஆப் தி ரிங்ஸ் இயக்கிய பீட்டர் ஜாக்சன் வாங்கியிருக்கிறார்.
Man Asian Literary Prize, உள்ளிட்ட பத்து முக்கிய இலக்கிய விருதுகளை இந்த நாவல் வென்றிருக்கிறது. 2004ல் சீனாவில் இதன் முதல்பதிப்பு வெளியாகி லட்சம் பிரதிகள் விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக இந்த நாவல் 13 மொழிகளில் வெளியாகி இதுவரை நான்கு கோடிப் பிரதிகள் வரை விற்பனையாகி உள்ளதாகக் கூறுகிறார்கள்.
வுல்ப் டோடம் எழுதிய Jiang Rong தன்னை யார் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாமலே புனைப்பெயரில் எழுதியிருக்கிறார்.  நாவலின் வெற்றிக்குப் பிறகே அவரது சுயஅடையாளம் வெளியானது. நாவலை எழுதுவதற்கு இருபது ஆண்டுகாலம் ஆனது என்றும் டினமான் சதுக்கத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசிற்கு எதிரான கலகக்காரன் என்று ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து உள்ளதாகவும் நேர்காணலில் ஜியாங ராங் குறிப்பிடுகிறார்.
நாவல் மிகுந்த சர்சைக்கு உள்ளதானதோடு தடையும் விதிக்கபட்டது. இன்று அதன் பிரதிகள் 26 மொழிகளில் மொழிபெயர்க்க அனுமதிவழங்கபட்டிருக்கிறது. சீனாவில் ஒரு நாவலின் ஆங்கில உரிமை லட்சம் டாலர் முன்பணம் தந்து வாங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
1970ல் துவக்கத்தில் மங்கோலியாவின் ஸ்டெப்பி புல்வெளி பகுதியில் கதை நடக்கிறது. மாவோவின் கலாச்சாரக் கெடுபிடிகளால் Chen Zhen என்ற பீஜிங் பல்கலைகழக மாணவன்  நாடோடிகளுடன் சேர்ந்து வாழ்வதற்காக அனுப்பபடுகிறான். மங்கோலியாவின் தனிமைத் தீவு போல உள்ள புல்வெளியில் செங்கிஸ்கானின் வாரிசுகளாக கருதப்படும் இடையர்களுடன் சேர்ந்து தங்கிக் கொள்கிறான்.
அவர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள், வேட்டையாடும் ஒநாய்களும் அவர்கள் வாழ்வும் ஒரே சங்கிலியால் பின்னப்பட்டிருக்கிறது, அவர்கள் அதை ஒரு சமநிலை எனக் கருதுகிறார்கள்
ஒநாய் என்பதை விழிப்புற்ற மனசாட்சியாக நாடோடிகள் நினைக்கிறார்கள், ஆகவே அவர்கள் ஒநாயை வெறுப்பதேயில்லை, அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து கால்நடை வளர்ப்பது ஒநாய்களை வேட்டையாடுவதையும் நாடோடிகள் ஒநாய் குட்டிகளைத் திருடி வந்து வளர்ப்பதையும் அறிந்து கொள்கிறான். அத்துடன்  நாடோடி கலாச்சார அடையாளங்களைப் புரிந்து கொள்ளவும் துவங்குகிறான்.
ஒநாய்கள் பற்றி அறிந்து கொள்வது அவனைப் பரவசமூட்டுகின்றது. அவன் ஒநாய்கள் தனக்கு எதையோ கற்றுக் கொடுப்பதாக உணர்கிறான். அதன்பிறகு அவன் காட்டிற்குள் சென்று ஒநாய்களின் வாழ்க்கையை நெருங்கி அறியத் துவங்குகிறான். இயற்கை குறித்த அதுவரையான அவனது பார்வை உருமாறத்துவங்குகிறது.
இந்நிலையில் நிலஅபிவிருத்திதிட்டம் என்ற பெயரில் அரசு ஒநாய் குலத்தையே மொத்தமாக அழித்து ஒழிக்க ஆணையிடுகிறது. ஒநாய்களின் குலத்தை அழிப்பதற்காக நடைபெறும் அதிகார வேட்டையை நேரடியாக காண்கிறான் சென்ஷான். அது அவனது மனசாட்சியை உறுத்தத் துவங்குகிறது.
மங்கோலியாவின் ஆன்மாதான் ஒநாயாக உருக்கொண்டிருக்கிறது. சீனாவின் வடபகுதியில் வாழும் இந்த நாடோடி இனம் மிகவும் தைரியமானது. வரலாற்றின் முன்னோடி இனமது. அது ஒடுக்கபடுகிறது என்பதன் அடையாளமாகவே இந்த சம்பவங்களை உணர்கிறான்.
நாவல் முழுவதும் ஒநாய் மங்கோலியாவின் புராதனச் சின்னம் போலவே காட்டப்படுகிறது. ஏதோவொரு காலத்தில் மூதாதையர்களில் ஒருவர் காட்டில் கொண்டு போய்விடப்பட்ட போது அவர் ஒநாயால் எடுத்து வளர்க்கபட்டு காப்பாற்றபட்டார் என்ற நம்பிக்கை நாடோடிகளிடம்  இன்றும் உள்ளது.
ஒநாய்கள் தனக்கென தனித்துவமான வாழ்வியலைக் கொண்டிருக்கின்றன
ஒநாய் வேட்டையாடுகிறது என்ற பொதுபிம்பம் கலைந்து ஒநாய் வேட்டையாடப்படுகிறது என்ற புதிய கவனம் அவனுக்குள் உருவாகிறது, இந்த மாறுதலே அதிகார அரசியலின் முக்கிய அம்சம் என்பதை அவன் உணர்ந்து கொள்கிறான்
ஒநாய்களின் இயல்பையும் அவை மங்கோலிய புல்வெளியில் வாழும் முறைகளையும் நாவல் மிக நுட்பமாக நிறைய விவரிக்கிறது. இன்னொருபக்கம் நாடோடி வாழ்வின் சாராம்சங்களை நாவல் கவித்துவமாக எழுதிப்போகிறது.
ஒநாய்கள் இந்த நாவலில் கலாச்சார அடக்குமுறை மற்றும் இனக்குழுவினை சுய அடையாள ஒடுக்கத்தின் குறியீடாகவே சித்தரிக்கபடுகிறது. தன்னுடைய சொந்த வாழ்வின் அனுபவத்திலிருந்து இந்த நாவலை உருவாக்கியுள்ளதால் நாவல் முழுவதும் நேரடியான இயற்கை விவரணைகள், நுட்பமான தகவல்கள், விவரிப்புகள் என்று காட்சிகள் கண்முன்னே தோன்றிமறைகின்றன.
மனிதர்களோடு ஒநாய்கள் உண்மையில் அன்பு கொண்டிருக்கின்றன. அதன் தோற்றமே அதை விட்டு நம்மை விலக்கி வைத்திருக்கிறது. தெருநாய்கள் போல காரணமில்லாமல் ஒநாய்கள் குலைப்பதில்லை. அவை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. வாழ்வைப் போராடி வெல்கின்றன, ஒநாய்களை முக்கிய கதாபாத்திரமாக சொல்லும் பௌத்தகதைமரபும் இந்த நாவலை வாசிக்கையில் நினைவிற்கு வருகிறது.
சமகால சீன இலக்கியத்தினை உலகின் கவனத்திற்கு இந்த ஒரேயொரு நாவல் கொண்டு சேர்ந்துவிட்டது. இதன்விளைவாக இந்த ஆண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட சீன நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய உரிமை பெற்றுள்ளன. மேற்குலகைத் திரும்பி பார்க்க வைக்ககூடிய இப்படியான ஒரு பெருவெடிப்பிற்காக தான் தமிழ் நாவல் உலகமும் காத்திருக்கிறது போலும்.
**s.ramakrishnan

கருத்துகள் இல்லை: