17 ஜூலை, 2011

ஒரு சின்ன, நல்ல விஷயம் - ரேமண்ட் கார்வர்(Raymond Carver,)

தமிழில்: ஜி. குப்புசாமி
சனிக்கிழமை பிற்பகல் ஷாப்பிங் சென்டரில் இருந்த பேக்கரிக்குச் சென்றாள். கேக்குகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்த லூஸ்-லீஃப் பைண்டரைப் புரட்டிப் பார்த்துவிட்டுப் பையனுக்குப் பிடித்தமான சாக்லேட் கேக்கை ஆர்டர் செய்தாள். அவள் தேர்ந்தெடுத்த கேக்கில் ஒளிவீசும் வெள்ளை நட்சத்திரங்களுக்குக் கீழே ஒரு விண்வெளிக்கலமும் ஏவுதளமும் மற்றொரு மூலையில் சிவப்பு ஃபிராஸ்டிங்கில் ஒரு கிரகமும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தpic0505-carver001க் கிரகத்திற்குக் கீழே அவன் பெயர் 'ஸ்கூட்டி' எனப் பச்சை எழுத்துகளில் இருக்கும். அடுத்த திங்கட்கிழமை அவள் மகனுக்கு எட்டு வயது என்பதை அவள் அந்த வயதான, தடிமனான கழுத்தைக் கொண்டிருந்த  ரொட்டிக் கடைக்காரனிடம் சொன்னபோது எதுவும் பதிலுக்குச் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். மேலங்கியைப் போலக் காணப்பட்ட ஏப்ரன் ஒன்றை அந்த பேக்கர் அணிந்திருந்தான். பட்டையான நாடாக்கள் அவன் கைகளுக்கடியில் நுழைந்து முதுகிற்குச் சென்று, மீண்டும் சுற்றிக்கொண்டு முன்னால் வந்து அவனது தடிமனான இடுப்பிற்குக் கீழே கட்டப்பட்டிருந்தன. கைகளை ஏப்ரனில் துடைத்துக்கொண்டே அவள் சொல்வதைக் கேட்டான். புகைப்படங்களின் மீது பார்வையைப் பதித்தபடி அவள் சொல்லும்போது குறுக்கிடாதிருந்தான். அவன் வேலைசெய்வதற்காக வந்திருப்பவன், ராத்திரி முழுக்க அங்கேயே ரொட்டியும் கேக்கும் செய்துகொண்டிருப்பவன். அவனுக்கு எந்த அவசரமும் கிடையாது.
அவள் அந்த பேக்கரிடம் தன் பெயரையும் ஆன் வைஸ், தொலைபேசி எண்ணையும் கொடுத்தாள். கேக் திங்கட்கிழமை காலை அடுப்பிலிருந்து தயாராக வந்துவிடும். அன்று பிற்பகலில்தான் பையனின் பார்ட்டி. அந்த ரொட்டிக் கடைக்காரன் ஓர் உற்சாகி அல்ல. அவர்களுக்கிடையே அனாவசியமாக எந்தவொரு பேச்சும் இல்லை. தேவையான தகவல்கள், குறைந்தபட்ச வார்த்தைகள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்டன. அவளை அவன் அசௌகரியமாக்கியிருந்தான், அதை அவள் ரசிக்கவில்லை. கையில் பென்சிலோடு கவுன்ட்டரில் அவன் குனிந்திருந்தபோது, அவனது கரடுமுரடான தோற்றத்தை உற்றுக் கவனித்தாள். ரொட்டி சுடுவதைத் தவிர வேறு எந்த வேலையையாவது அவன் வாழ்க்கையில் செய்திருப்பானா என்று வியந்தாள். அவள் முப்பத்து மூன்று வயதான ஒரு தாய். எல்லோருக்குமே, குறிப்பாக அந்த பேக்கரின் வயதில் இருப்பவர்களுக்கு - அவன் அவளுக்கு அப்பாவாக இருக்கக்கூடிய வயது - நிச்சயம் குழந்தைகள் இருந்திருக்கும், கேக்குகளும் பிறந்த நாள் விழாக்களுமாக இருக்கும் இத்தகைய விசேஷமான பொழுதுகளை அவர்கள் கடந்திருப்பார்கள். அந்தப் பரவசவுணர்ச்சி அவர்களிடையே எப்போதுமிருக்கும் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் அவனது - முரட்டுத்தனமல்ல - முசுடுத்தனத்தில் அவனோடு நட்பாகப் பேசும் முயற்சியைக் கைவிட்டாள். பேக்கரியின் பின்கட்டில் அலுமினிய ரொட்டிக் கரண்டிகள் அடுக்கிய ஒரு நீளமான கனத்த மரமேஜையும் அதற்குப் பக்கத்தில் காலி ரேக்குகளோடு ஓர் இரும்பு அலமாரியும் தெரிந்தன. அங்கே மிகப் பெரிய அடுப்பு ஒன்றிருந்தது. ஒரு ரேடியோ கிராமப்புற மேற்கத்திய சங்கீதம் பாடிக்கொண்டிருந்தது.
அவன் ஸ்பெஷல் ஆர்டர் அட்டையில் தகவல்களை எழுதி முடித்துவிட்டு பைண்டரை மூடிவைத்தான். அவளை நிமிர்ந்து பார்த்து, "திங்கட்கிழமை காலை" என்றான். அவள் நன்றி கூறிவிட்டு வீட்டிற்குத் திரும்பினாள்.
திங்கட்கிழமை காலை பர்த்டே பாய் பள்ளிக்கு இன்னொரு சிறுவனோடு சென்றுகொண்டிருந்தான். உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் ஒன்றை அவர்கள் பகிர்ந்துகொண்டு நடக்கும்போது பர்த்டே பாய் அன்று பிற்பகல் விருந்தில் அவன் நண்பன் என்ன பரிசளிக்கவிருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் அவனைத் தள்ளிக்கொண்டு சாலைச் சந்திப்பைக் கவனிக்காமல் குறுக்கே சென்றுவிட, உடனே ஒரு கார் அவனை இடித்துத் தள்ளியது. தலை சாக்கடையிலும் கால்கள் சாலையிலுமாக ஒருக்களித்து அவன் விழுந்தான். அவன் கண்கள் மூடியிருந்தன. ஆனால் கால்கள் எதன் மீதோ ஏற முயல்வதுபோல உதைத்துக்கொண்டன. அவன் சினேகிதன் உருளைக்கிழங்கு சிப்ஸ் பொட்டலத்தைக் கீழே போட்டுவிட்டு உடனடியாக அழத் தொடங்கினான். கார் ஒரு நூறு அடிதூரம்வரை சென்று சாலையின் நடுவில் நின்றது. ஓட்டுநர் இருக்கையில் இருந்தவன் திரும்பிப் பார்த்தான். அச்சிறுவன் தடுமாறியபடியே எழுந்து நிற்கும்வரை காத்திருந்தான். சிறுவன் கொஞ்சம் தள்ளாடினான். அதிர்ச்சியில் இருப்பவனைப் போல்தான் தெரிந்தது. மற்றபடி பரவாயில்லை. டிரைவர் காரை கியருக்குக் கொண்டுவந்து கிளம்பிச் சென்றான்.
பர்த்டே பாய் அழவில்லை. ஆனால் அவனுக்குச் சொல்லவும் எதுவுமில்லை. கார் மேலே இடித்தது எப்படி இருந்ததென்று அவன் நண்பன் கேட்டபோது அவன் பதிலளிக்கவில்லை. அவன் வீட்டிற்குத் திரும்பி நடக்க, அவன் நண்பன் பள்ளிக்குச் சென்றான். பர்த்டே பாய் வீட்டிற்குள் சென்று தன் அம்மாவிடம் அதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தபோது சோபாவில் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, அவன் கையை மடியில் அழுத்திக்கொண்டு "ஸ்கூட்டி, என் செல்லமே, உனக்கு வேறு ஒன்றுமில்லையே, நன்றாகத்தானே இருக்கிறாய்?" என்று கேட்டதும், எப்படியும் அவள் டாக்டரிடம் கூட்டிப்போகத்தான் போகிறாள் என்று நினைத்தபடி, சட்டென்று சோபாவில் மல்லாந்து படுத்துக் கண்களை மூடி மயங்கிப்போனான். அவனை அவளால் எழுப்ப முடியாதபோது, தொலைபேசிக்கு விரைந்து வேலையில் இருந்த தன் கணவனை அழைத்தாள். அமைதியாக இரு, அமைதியாக இரு என்று அவளிடம் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸை அழைத்தான் ஹோவர்ட். அங்கிருந்தே மருத்துவமனைக்குப் புறப்பட்டான்.
பர்த்டே பார்ட்டி ரத்துசெய்யப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு லேசான 'கன்கஷன்'. தலையில் பேரதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறினர். வாந்தியும் இருந்தது. அது நுரையீரலுக்குச் சென்றுவிட, அன்று பிற்பகல் அதை பம்ப் செய்து வெளியேற்ற வேண்டியிருந்தது. இப்போது அவன் மிக ஆழமான உறக்கத்தில் இருப்பதைப் போலத் தானிருந்தான். ஆனால் கோமா அல்ல. பெற்றோர்களின் கண்களில் கலவரத்தைப் பார்த்ததும் நிச்சயமாகக் கோமா அல்ல என்றார் டாக்டர் பிரான்ஸிஸ். பற்பல எக்ஸ்ரேக்களுக்கும் பரிசோதனைக்கும் பிறகு, சிறுவன் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருப்பதைப் போலவும், இனி எப்போது வேண்டுமானாலும் எழுந்துவிடுவானென்றும் தோன்றியபோது ராத்திரிப் பதினோரு மணிக்கு ஹோவர்ட் மருத்துவமனையை விட்டுக் கிளம்பினான். அவனும் ஆனும் பையனோடு அன்று பிற்பகலிலிருந்து மருத்துவமனையில் இருந்திருக்கின்றனர். இப்போது அவன் கொஞ்சநேரம் வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு உடைமாற்றி வரலாமென்று, "ஒரு மணிநேரத்தில் திரும்பிவிடுவேன்" என்றான். அவள் தலையசைத்தாள். "பரவாயில்லை, நான்தான் இங்கே இருக்கிறேனே?" என்றாள். அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவர்கள் கைகளைத் தொட்டுக்கொண்டனர். படுக்கைக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து, மகன் எவ்விதப் பிரச்சினையுமின்றிக் கண்விழிப்பதற்காகக் காத்திருந்தாள். அதற்குப் பிறகுதான் அவளுக்கு ஆசுவாசப்பட முடியும்.
ஹோவர்ட் மருத்துவமனையிலிருந்து, ஈரமான கரிய தெருக்களில் வேகமாக வீட்டிற்குச் சென்றான். பின் தன்னுணர்வு வந்தவனாக வேகத்தைக் குறைத்துக்கொண்டான். இதுவரைக்கும் அவன் வாழ்க்கை எந்தத் தடங்கலுமின்றி அவன் திருப்தி கொள்ளும் வகையிலேயே சென்றிருக்கிறது. கல்லூரி, திருமணம், வர்த்தகத்தில் மேற்படிப்பிற்காகக் கல்லூரியில் மற்றொரு வருடம், ஒரு முதலீட்டு நிறுவனத்தில் ஜூனியர் பார்ட்னர்ஷிப், அப்புறம் அப்பாவானான். மகிழ்ச்சியாக மட்டுமல்ல, அதிர்ஷ்டசாலியாகவும் இருந்துவந்திருக்கிறான். அது அவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் பெற்றோர் இன்னமும் இருக்கின்றனர். அவன் சகோதரர்களும் சகோதரியும் நல்லவிதமாகக் காலூன்றியிருக்கின்றனர். அவனுடைய கல்லூரி நண்பர்கள் உலகெங்கும் நல்ல பதவிகளில் இருக்கின்றனர். அவனுக்குப் பிரச்சினையை உண்டாக்கக்கூடுமென்று அவன் அறிந்திருந்த பல இச்சைகளிலிருந்து அவன் விலகியே இருந்துவந்திருக்கிறான். அதிர்ஷ்டம் மாறிவிட்டாலோ விஷயங்கள் திடீரெனத் திரும்பிவிட்டாலோ அவை அவனை முடமாக்கிவிடும் அல்லது கீழே வீழ்த்திவிடும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. வீட்டின் வாகனப் பாதையில் நுழைந்து வண்டியை நிறுத்தினான். அவனது இடதுகால் நடுங்கத் தொடங்கியது. ஒரு நிமிடம் காருக்குள்ளேயே உட்கார்ந்தபடி இப்போதைய நிலைமையை எப்படி எதிர்கொள்வதென்று பகுத்தறிவோடு சிந்திக்க முயன்றான். ஸ்கூட்டியின் மீது ஒரு கார் மோதிவிட்டது, அவன் மருத்துவனையில் இருக்கிறான், ஆனால் அவன் குணமடைந்துவிடப் போகிறான். ஹோவர்ட் கண்களை மூடி முகத்தைக் கையால் அழுத்தித் துடைத்துக்கொண்டான். காரிலிருந்து வெளியேவந்து முன்வாசல் கதவை நெருங்கினான். வீட்டிற்குள்ளே நாய் குரைத்துக்கொண்டிருந்தது. டெலிபோன் விடாப்பிடியாக அடித்துக்கொண்டிருக்க, கதவின் பூட்டைத் திறந்து, தடுமாறித் தடவி ஸ்விட்சைப் போட்டான். அவன் மருத்துவமனையைவிட்டு வந்திருக்கவே கூடாது, வந்திருக்கவே கூடாது. "காட் டாமிட்" என்று சபித்துக்கொண்டே ரிஸீவரை எடுத்து, "இப்போதுதான் நான் உள்ளே நுழைகிறேன்" என்றான்.
"இங்கேயிருக்கிற ஒரு கேக்கை எடுத்துப் போகவில்லை," அந்தப் பக்கத்திலிருந்த குரல் சொன்னது.
"என்ன சொல்கிறாய்?" என்றான் ஹோவர்ட்.
"கேக்" என்றது அக்குரல். "ஒரு பதினாறு டாலர் கேக்."
ஹோவர்ட் ரிஸீவரைக் காதோடு அழுத்திப் புரிந்துகொள்ள முயன்றான். "கேக்கைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது", என்றான். "ஜீஸஸ், நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்?"
"அப்படிச் சொல்லக் கூடாது," என்றது அந்தக் குரல்.
ஹோவர்ட் டெலிபோனை வைத்தான். சமையலறைக்குச் சென்று கொஞ்சம் விஸ்கி எடுத்துக்கொண்டான். மருத்துவமனைக்கு போன்செய்தான். குழந்தையின் நிலைமை அப்படியேதான் இருக்கிறது, இன்னமும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறான், எதிலும் மாற்றமில்லை. குளியல் தொட்டிக்குள் நீர் சரிய, ஹோவர்ட் முகத்திற்கு சோப் தடவிச் சவரம் செய்துகொண்டான். தொட்டிக்குள் இறங்கிக் கை கால்களை நீட்டிக்கொண்டு கண்களை மூடியவுடனேயே தொலைபேசி மீண்டும் அடித்தது. துள்ளியெழுந்து டவல் ஒன்றைச் சுற்றிக்கொண்டு தொலைபேசியிடம் ஓடினான். மருத்துவமனையை விட்டு வந்ததற்காகத் தன்னைத்தானே, "முட்டாள், முட்டாள்" என்று திட்டிக்கொண்டே ரிஸீவரை எடுத்து "ஹலோ! ஹலோ!" என்று கத்த, மறுமுனையில் சத்தமே இல்லை. அழைத்தவன் தொடர்பைத் துண்டித்தான்.
நள்ளிரவுக்குச் சற்றுநேரம் கழித்து மருத்துவமனைக்கு அவன் திரும்பிவந்தான். கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் ஆன் இன்னமும் அமர்ந்திருந்தாள். ஹோவர்டை நிமிர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பவும் மகனிடம் பார்வையைத் திருப்பிக்கொண்டாள். சிறுவனின் கண்கள் இன்னமும் மூடியேயிருந்தன. தலையில் பாண்டேஜ்கள் சுற்றப்பட்டிருந்தன. அவனது சுவாசம் அமைதியாகவும் சீராகவும் இருந்தது. படுக்கைக்கு மேலேயிருந்த கொக்கியில் குளுக்கோஸ் பாட்டில் மாட்டப்பட்டு, அதிலிருந்து புறப்பட்ட குழாயின் முடிவிலிருந்த ஊசி சிறுவனின் கையில் குத்தப்பட்டிருந்தது.
"எப்படி இருக்கிறான்?" என்றான் ஹோவர்ட். குளுக் கோஸையும் ட்யூபையும் காட்டி, "என்ன இதெல்லாம்?"
"டாக்டர் பிரான்ஸிஸ் உத்தரவு" என்றாள். "அவனுக்குச் சக்தி தேவைப்படுகிறதாம். அவன் பலத்தை இழக்காதிருக்க வேண்டுமாம். ஏன் இவன் எழுந்திருக்கமாட்டேனென்கிறான் ஹோவர்ட்? இவனுக்குப் பிரச்சினை ஒன்றுமில்லையென்றால் எதற்கு இதெல்லாம்? எனக்குப் புரியவில்லை."
ஹோவர்ட் அவள் பின்னந்தலையில் கையை வைத்துக் கூந்தலைக் கோதினான். "அவனுக்குச் சரியாகிவிடும். கொஞ்சநேரத்தில் எழுந்துவிடுவான். டாக்டர் பிரான்ஸிஸ§க்கு எது என்னவென்று தெரியும்."
கொஞ்சநேரம் கழித்துச் சொன்னான், "நீ வேண்டுமானால் வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு வரலாமே? நான் இங்கேயே இருக்கிறேன். ஒரு கிறுக்கன் போன் செய்துகொண்டேயிருக்கிறான், கண்டுகொள்ளாதே. அவன்தானென்று தெரிந்தால் உடனே போனை வைத்துவிடு."
"யார் கூப்பிடுவது?"
"யாரென்று தெரியவில்லை. வேறு வேலை எதுவுமில்லாமல் சும்மாவேனும் எல்லோரையும் எழுப்பிக்கொண்டிருக்கிற எவனோ. நீ கிளம்பு."
அவள் தலையாட்டி மறுத்தாள். "வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன்."
"அப்படியா? கொஞ்சநேரம் வீட்டுக்குப் போய்விட்டுக் காலையில் வா. எல்லாம் சரியாகிவிடும். டாக்டர் பிரான்ஸிஸ் என்ன சொல்லியிருக்கிறார்? ஸ்கூட்டிக்குச் சரியாகிவிடும் என்றாரா இல்லையா? நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவ்வளவுதான்."
ஒரு நர்ஸ் கதவைத் தள்ளித் திறந்தபடி வந்தாள். அவர்களிடம் தலையசைத்துவிட்டுப் படுக்கைக்கருகே சென்றாள். போர்வைக்கடியிலிருந்த இடதுகையை வெளியிலெடுத்து மணிக்கட்டில் தன் விரல்களை அழுத்தி நாடித்துடிப்பைக் கண்டுபிடித்துக் கைக்கடிகாரத்தைக் கவனித்தாள். சிறிது நேரத்தில் அந்தக் கரத்தைப் போர்வைக்கடியில் மீண்டும் வைத்துவிட்டுப் படுக்கையின் கால்மாட்டிற்குச் சென்றாள். அங்கே கட்டிலில் மாட்டியிருந்த ஒரு க்ளிப் போர்டில் எதையோ எழுதினாள்.
"எப்படியிருக்கிறான்?" என்றாள் ஆன். ஹோவர்டின் கை அவள் தோளில் பாரமாக இருந்தது. அவன் விரல்களிலிருந்த அழுத்தம் அவளுக்குப் புரிந்தது,
"அப்படியேதான் இருக்கிறான்," என்றாள் நர்ஸ். பிறகு, "டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வருவார். டாக்டர் ஆஸ்பிட்டலுக்கு வந்துவிட்டார். இப்போது ரவுண்ட்ஸில் இருக்கிறார்" என்றாள்.
"இவள் வேண்டுமானால் வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு வரட்டுமே என்று சொல்லிக்கொண்டிருந்தேன்" என்றான் ஹோவர்ட். "டாக்டர் வந்ததற்குப் பிறகுதான்" என்றான்.
"அவர்கள் போகட்டும்," என்றாள் நர்ஸ். "நீங்கள் இருவருமே வீட்டுக்குப் போய்விட்டு வரலாமென்று நினைக்கிறேன், உங்களுக்கு இஷ்டப்பட்டால்." அந்த நர்ஸ் பொன் நிறக் கூந்தல் கொண்ட ஒரு குண்டான ஸ்காண்டிநேவியப் பெண். அவள் பேச்சின் உச்சரிப்பில் அதன் சாயல் தெரிந்தது.
"டாக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். நான் டாக்டரிடம் பேச விரும்புகிறேன். இவன் இதைப் போலத் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாதென்று நினைக்கிறேன். இது ஒரு நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை." அவள் தன் கண்களைப் பொத்திக்கொண்டு தலையைக் குனிந்துகொண்டாள். ஹோவர்டின் பிடி அவள் தோளில் இறுகியது. பின் அவன் கை கழுத்திற்கு நகர்ந்து ஆதரவாக வருடியது.
"டாக்டர் பிரான்ஸிஸ் சில நிமிடங்களில் இங்கே இருப்பார்" என்றாள் நர்ஸ். பின் அவள் அறையிலிருந்து வெளியேறினாள்.
ஹோவர்ட் தன் மகனை வெறித்துப் பார்த்தபடியிருந்தான். போர்வைக்கடியிலிருந்த அந்தச் சின்ன நெஞ்சு நிதானமாக எழும்பித் தாழ்ந்துகொண்டிருந்தது. அவன் அலுவலகத்திற்கு ஆனின் தொலைபேசி வந்த அந்த பயங்கர நிமிடங்களுக்குப் பிறகு, முதல்முறையாக இப்போது தன் கால்களில் நிஜமானதொரு பயம் உருவாகிவருவதை உணர்ந்தான். அவன் தலையைக் குலுக்கிக்கொள்ளத் தொடங்கினான். ஸ்கூட்டி நன்றாகத்தான் இருக்கிறான். வீட்டில் அவனுடைய படுக்கையில் தூங்குவதற்குப் பதில், ஆஸ்பத்திரிப் படுக்கையில் தலையில் பேண்டேஜ்களோடும் கையில் ட்யூபோடும் இருக்கிறான். ஆனால் இப்படிப்பட்ட சுயசமாதானம்தான் அவனுக்கு அந்தக் கணத்தில் தேவையாக இருந்தது.
டாக்டர் பிரான்ஸிஸ் உள்ளே நுழைந்து சில மணிநேரங்களுக்கு முன்னால்தான் சந்தித்திருந்தாலும் ஹோவட்டோடு கைகுலுக்கினார். ஆன் நாற்காலியிலிருந்து எழுந்தாள், "டாக்டர்?"
"ஆன்?" என்று கேட்டபடியே தலையசைத்தார். "முதலில் இவன் எப்படியிருக்கிறான் என்று பார்த்து விடலாம்," என்றார் டாக்டர். படுக்கையின் பக்க வாட்டிற்கு நகர்ந்து சிறுவனின் நாடித்துடிப்பைப் பரிசோதித்தார். கண் இரப்பைகளை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தார். ஹோவர்டும் ஆனும் டாக்டருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு கவனித்தனர். டாக்டர் போர்வையை விலக்கி, ஸ்டெதாஸ்கோப்பினால் அவன் இதயத்தையும் நுரையீரல்களையும் கவனித்தார். வயிற்றில் அவரது விரல்களை அங்குமிங்குமாக அழுத்திப் பார்த்தார். சோதித்து முடித்ததும் கால்மாட்டிற்குச் சென்று சார்ட்டைப் படித்தார். நேரத்தைக் குறித்துவிட்டு, சார்ட்டில் எதையோ கிறுக்கினார். ஹோவர்டையும் ஆனையும் ஏறிட்டார்.
"டாக்டர், இவன் எப்படியிருக்கிறான்?" என்றான் ஹோவர்ட். "இவனுக்கு என்னதான் ஆகியிருக்கிறது?"
"ஏன் இவன் விழிக்கவேமாட்டேனென்கிறான்?" என்றாள் ஆன்.
டாக்டர் அகன்ற தோள்களும் வெயிலில் பழுத்த முகமும் கொண்ட ஓர் அழகான மனிதர். நீலநிற 'த்ரீ-பீஸ்' சூட்டும் கோடிட்ட டையும் தங்கத்தில் கஃப்லிங்க்குகளும் அணிந்திருந்தார். அவரது சாம்பல் நிற முடி தலையின் பக்கவாட்டாக அழுத்தி வாரப்பட்டு, இப்போதுதான் ஒரு இசைக் கச்சேரியிலிருந்து வந்தவர்போலக் காணப்பட்டார். "இவன் நன்றாகத்தான் இருக்கிறான்," என்றார் டாக்டர். "பயப்படுவதற்கு எதுவுமில்லை, சரியாகிவிடுவானென்றுதான் சொல்வேன். நன்றாகத்தான் இருக்கிறான். இருந்தாலும் அவன் கண் விழிக்க வேண்டும். வெகுசீக்கிரமே மயக்கத்திலிருந்து விழித்துக்கொள்வான்." டாக்டர் சிறுவனை மீண்டும் பார்த்தார். "சில டெஸ்ட் ரிசல்ட்டுகள் வந்தவுடன் இரண்டொரு மணி நேரத்தில் நமக்குத் தெளிவாகிவிடும். ஆனால் நம்புங்கள், இவன் நன்றாகத்தான் இருக்கிறான். மண்டையோட்டில் ஒரு மயிரிழை விரிசல் இருப்பதைத் தவிர வேறெதுவும் இல்லை."
"ஹோ, நோ," என்றாள் ஆன்.
"முன்பே சொன்னதைப் போல மூளையில் கொஞ்சம் அதிர்ச்சி-கன்கஷன்-ஏற்பட்டிருக்கிறது, அதிர்ச்சியில்தான் இருக்கிறான்" டாக்டர் சொன்னார். "அதிர்ச்சி ஏற்பட்ட கேஸ்களில் இப்படிப் பார்க்க முடியும். இப்படிப்பட்ட மயக்கம்."
"அபாயக் கட்டத்தில் இவன் இல்லைதானே?" ஹோவர்ட் கேட்டான். "முன்பு நீங்கள் அவன் கோமாவில் இருக்கவில்லை என்றீர்கள். அப்போது இதைக் கோமா என்று உங்களால் சொல்ல முடியவில்லை . இப்போது அப்படிச் சொல்வீர்களா டாக்டர்?" ஹோவர்ட் காத்திருந்தான். டாக்டரை உற்றுநோக்கினான்.
"இல்லை, இதை ஒரு கோமா என்று அழைக்க நான் விரும்பவில்லை," டாக்டர் சொல்லிவிட்டுச் சிறுவனின் பக்கம் மீண்டும் ஒருமுறை பார்வையைத் திருப்பினார். "இவன் வெறும் ஆழமான தூக்கத்தில் இருக்கிறான். உடம்பு தனக்குத்தானே செய்துகொள்கிற நிவாரண நடவடிக்கை இது. உண்மையான அபாயம் எதுவும் அவனுக்கு இல்லை. அதை மட்டும் நிச்சயமாகச் சொல்வேன். ஆனால் அவன் விழித்தெழுந்தவுடன் மற்ற டெஸ்ட்டுகளைச் செய்துபார்த்தால்தான் நமக்கு மேலும் தெரியும்."
"இது ஒருவகையான கோமாதான், இல்லையா?" என்றாள் ஆன்.
"அப்படிச் சொல்ல முடியாது" என்றார் டாக்டர். இதைக் கோமா என்றழைக்க நான் விரும்பமாட்டேன். இதுவரைக்கும் இல்லை. ஒரு பெரிய 'ஷாக்'கில் இவன் பாதிப்படைந்திருக்கிறான். இதைப் போன்ற ஷாக் கேஸ்களில் இவ்விதமான விளைவுகள் நேருவது இயல்புதான். உடல்ரீதியான காயத்தின் வேதனைக்கு இது ஒரு தற்காலிக எதிர்வினை. கோமா? கோமா என்பது ஓர் ஆழ்ந்த, தொடர்ச்சியான நினைவிழந்த நிலை. அது நாட்கணக்கிலோ வாரக்கணக்கிலோகூட நீடிக்கலாம். ஸ்கூட்டி அத்தகைய கட்டத்தில் இல்லை. எங்களால் சொல்ல முடிந்த அளவில் இல்லை. இவன் நிலைமை காலையில் நிச்சயம் முன்னேற்றம் தெரியும் என்று உறுதியாகச் சொல்வேன். பந்தயம் கட்டுகிறேன் பாருங்கள். அவன் எழுந்தவுடன் நமக்கு மேலும் தெரியவரும், அதற்கு அதிக நேரம் ஆகாது. அதற்குள் நீங்கள் வேண்டுமானால் கொஞ்சநேரம் வீட்டுக்குப் போய் வரலாம் அல்லது இங்கேயே இருக்கலாம், உங்கள் இஷ்டம். எப்படியிருந்தாலும் மருத்துவமனையிலிருந்து வெளியே போய் வர வேண்டுமென்றால், தாராளமாகச் சென்றுவாருங்கள். இது பெரும் சோதனைதான் உங்களுக்கு. எனக்குத் தெரியும்." டாக்டர் மீண்டும் சிறுவனைக் கூர்ந்து கவனித்துவிட்டு ஆன் பக்கம் திரும்பி, "நீங்கள் கவலைப்படாதீர்கள். என்னை நம்புங்கள். என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் கொஞ்சநேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்." அவர் அவளிடம் தலையசைத்துவிட்டு ஹோவர்டுடன் மீண்டும் கைகுலுக்கிவிட்டு, அறையைவிட்டு வெளியேறினர்.
ஆன், மகனின் நெற்றியில் கையை வைத்தாள். "குறைந்தபட்சம் இவனுக்குக் காய்ச்சலாவது இல்லாமலிருக்கிறதே" என்றாள். பின், "மை காட், ஆனால் ஏன் இவ்வளவு சில்லென்று இருக்கிறான், ஹோவர்ட்? இப்படியா சாதாரணமாக இருப்பான்? இவன் நெற்றியைத் தொட்டுப்பாருங்கள்."
ஹோவர்ட் மகனின் நெற்றிப்பொட்டைத் தொட்டுப் பார்த்தான். ஹோவர்டின் சுவாசம் தடைபட்டது. "இப்போதைக்கு இப்படித்தான் இருப்பானென்று நினைக்கிறேன்" என்றான். "இவன் 'ஷாக்'கில் இருக்கிறான், ஞாபகமிருக்கிறதா? அப்படித்தானே டாக்டர் சொன்னார்? டாக்டர் இப்போதுதான் வந்துசென்றிருக்கிறார். ஸ்கூட்டிக்கு ஏதாவது சரியில்லை யென்றால் சொல்லியிருப்பாரே."
ஆன் உதட்டைக் கடித்தபடி அங்கேயே நின்றிருந்தாள். பின் நாற்காலிக்கு நகர்ந்து உட்கார்ந்துகொண்டாள்.
ஹோவர்ட் அவளுக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். அவர்கள் ஒருவருக் கொருவர் பார்த்துக்கொண்டனர். ஏதாவது பேசி அவளுக்குத் தைரியமூட்டலாமென்று அவன் விரும்பினான். ஆனால் அவனும் பயந்திருந்தான். அவள் கையை எடுத்துத் தன் தொடையின் மேல் வைத்துக் கொண்டான். அவள் கை அவன் மேல் இருப்பது இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்தியது. அவள் கையை எடுத்து அழுத்தினான். பின் கையை வெறுமனே ஏந்திக்கொண்டிருந்தான். அவர்கள் அதே நிலையில் உட்கார்ந்தபடி, தம் மகனைக் கவனித்தபடி எதுவும் பேசாமல் சமைந்திருந்தனர். அவ்வப்போது அவள் கையை இறுக்கினான். கடைசியில் தன் கையை விடுவித்துக்கொண்டாள்.
"நான் பிரர்த்தனை செய்துகொண்டிருந்தேன்." என்றாள்.
அவன் தலையசைத்தான்.
"எப்படிப் பிரார்த்திப்பது என்பதையே ஏறக்குறைய மறந்துவிட்டேனென்று நினைத்தேன். நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம் கண்களை மூடிக் 'கடவுளே தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். ஸ்கூட்டிக்கு உதவுங்கள்' என்று சொல்வது. அப்புறம் மீதியெல்லாம் சுலபமாகிவிட்டது. வார்த்தைகள் அங்கேயே இருந்தன. நீங்கள்கூடப் பிரார்த்திக்கலாம்."
"நான் ஏற்கனவே பிரார்த்தித்துவிட்டேன்," என்றான். "இன்று பிற்பகல்-நேற்று பிற்பகல், ஐமீன்-நீ என்னிடம் தொலைபேசியில் பேசியபிறகு, நான் மருத்துவமனைக்கு வந்தபோது, பிரார்த்தித்துக்கொண்டேன்."
"நல்லது," என்றாள். முதன்முறையாக அவர்கள் இருவரும் இந்த நெருக்கடியான நேரத்தில் ஒன்றாக இருப்பதை அவள் உணர்ந்தாள். அதுவரையில் அவளும் ஸ்கூட்டியும் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாக அவளுக்குத் தோன்றிவந்தது. அவன் என்னதான் அங்கேயே இருந்து வந்தாலும் தேவைப்பட்டிருந்தாலும் அவர்கள் உலகத்தில் ஹோவர்டை அவள் அனுமதித்திருக்கவில்லை. அவன் மனைவியாக இருப்பதற்கு அவள் மகிழ்ச்சியுற்றாள்.
அதே நர்ஸ் உள்ளே வந்து சிறுவனின் நாடித்துடிப்பை மீண்டும் கவனித்தாள். படுக்கைக்கு மேலே தொங்கிக்கொண்டிருந்த பாட்டிலிலிருந்து இறங்கும் குளுக்கோஸின் வேகத்தைச் சோதித்தாள்.
ஒரு மணிநேரம் கழித்து, மற்றொரு டாக்டர் வந்தார். தன் பெயர் பார்ஸன்ஸ் என்றார். ரேடியாலஜியிலிருந்து வருகிறாராம். அவருக்கு அடர்த்தியான மீசை இருந்தது. லோஃபெர்ஸ் செருப்புகளும் ஒரு வெஸ்டர்ன் சட்டையும் ஜீன்ஸ§ம் அணிந்திருந்தார்.
"இவனைக் கீழே கொண்டுபோய் இன்னும் சில படங்கள் எடுக்கப்போகிறோம்" என்றார் அவர்களிடம். "இன்னும் சில படங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு ஸ்கேன் எடுக்கப்போகிறோம்."
"என்னது?" என்றாள் ஆன். "ஸ்கேனா?" அந்தப் புதிய டாக்டருக்கும் படுக்கைக்கும் நடுவில் நின்றாள். "உங்களுக்கு வேண்டிய எல்லா எக்ஸ்ரேக்களையும் ஏற்கனவே எடுத்துவிட்டீர்களென்று நினைத்தேன்."
"இன்னும் சில தேவைப்படுவதாகத் தோன்றுகிறது" என்றார். "பயப்படுவதற்கு எதுவுமில்லை. இன்னும் கொஞ்சம் படங்கள் எங்களுக்குத் தேவை, அவனுக்கு மூளையில் ஸ்கேன் எடுக்க வேண்டும்."
"மை காட்" என்றாள் ஆன்.
"இதைப் போன்ற கேஸ்களில் இது ஒரு மிகவும் இயல்பான செயல்முறைதான்" என்றார் புதிய டாக்டர். "இவனுக்கு ஏன் மயக்கம் தெளியவில்லையென்பதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு வழக்கமான மருத்துவச் செயல்முறைதான், பயப்படுவதற்கு எதுவுமில்லை. சில நிமிடங்களில் இவனைக் கீழே கொண்டுசெல்கிறோம்."
சிறிது நேரத்தில் இரண்டு பணியாளர்கள் சக்கர ஸ்ட்ரெச்சரோடு அறைக்குள் வந்தனர். கரிய கேசமும் கரிய தேகமும் கொண்டிருந்த அவர்கள் வெள்ளைச் சீருடையில் இருந்தனர். ஓர் அந்நிய மொழியில் தமக்குள் ஓரிரு வார்த்தைகள் சொல்லிக்கொண்டு சிறுவனை குளுக்கோஸ் குழலிலிருந்து விடுவித்துப் படுக்கையிலிருந்து ஸ்ட்ரெச்சருக்கு மாற்றித் தள்ளிக்கொண்டு வெளியேறினர். ஹோவர்டும் ஆனும் அதே லிஃப்ட்டில் ஏறிக்கொண்டனர். ஆன் குழந்தையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். லிஃப்ட் இறங்கத் தொடங்கியதும் அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஸ்ட்ரெச்சரின் இருபக்கத்திலும் நின்றிருந்த பணியாளர்களில் ஒருவன் மட்டும் அவர்கள் மொழியில் ஏதோ சொல்ல மற்றவன் மெதுவாக தலையசைத்ததைத் தவிர, வேறு எதுவும் பேசாமல் வந்தனர்.
அதற்குப் பின் அன்று காலை எக்ஸ்ரே டிபார்ட்மென்ட்டுக்கு வெளியே வெயிட்டிங் ரூமின் ஜன்னல்களைச் சூரியன் வெளிச்சப்படுத்தத் தொடங்கியபோது அவர்கள் சிறுவனை வெளியேகொண்டுவந்து அவன் அறைக்கு உருட்டிச் சென்றனர். ஹோவர்டும் ஆனும் அவனோடு மறுபடியும் ஒரே லிஃப்ட்டில் மேலே சென்றனர். இப்போதும் படுக்கைக்குப் பக்கத்திலேயே நின்றிருந்தனர்.
அவர்கள் அன்று முழுவதும் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் மகன் விழிக்கவில்லை. அவர்களில் யாராவது ஒருவர் எப்போதாவது அறையை விட்டுக் கீழே போய்ச் சிற்றுண்டியகத்தில் காபி சாப்பிடுவார்கள். பின் திடீரென்று ஞாபகம் வந்ததுபோலக் குற்றவுணர்வோடு மேஜையிலிருந்து எழுந்து அவசர அவசரமாக அறைக்குத் திரும்பிவருவார்கள். டாக்டர் பிரான்ஸிஸ் அன்று பிற்பகல் மீண்டும் வந்து சிறுவனை மறுபடியும் பரிசோதித்துவிட்டு, அவர்களிடம் அவன் நன்றாக முன்னேறிவருவதாகவும் இப்போது எந்த நிமிடமும் அவன் விழித்துக்கொள்வானென்றும் சொல்லிவிட்டுச் சென்றார். முந்தின இரவில் இல்லாத நர்ஸ்கள் அவ்வப்போது உள்ளே வந்துசென்றனர். பிறகு சோதனைக் கூடத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் கதவைத் தட்டிவிட்டு வந்தாள். அவர்களிடம் எதுவும் சொல்லாமல் சிறுவனின் கரத்திலிருந்து ரத்தம் எடுத்தாள். மகனின் கையில் அந்தப் பெண் சரியான இடத்தைத் தேடி ரத்தநாளத்தைக் கண்டுபிடித்து ஊசியைக் குத்தும்போது ஹோவர்ட் தன் கண்களை மூடிக்கொண்டான்.
"இதெல்லாம் எனக்குப் புரியவேயில்லை" என்றாள் ஆன் அப்பெண்ணிடம்.
"டாக்டர் உத்தரவு" என்றாள் இளம்பெண். "என்னைச் செய்யச் சொன்னதைச் செய்கிறேன். ரத்தம் எடுக்கச் சொன்னார்கள், எடுத்தேன். சரி, இவனுக்கு என்ன பிரச்சினை?" என்றாள். "அழகாக இருக்கிறான்."
"அவன்மீது ஒரு கார் மோதிவிட்டது" என்றான் ஹோவர்ட். "ஹிட் அண்ட் ரன்."
அந்த இளம்பெண் தலையை ஆட்டிக்கொண்டு சிறுவனை மீண்டும் பார்த்தாள். அவளது ட்ரேவை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.
"ஏன் இவன் விழிக்கமாட்டேனென்கிறான்? ஹோவர்ட்? இவர்களிடமிருந்து எனக்குச் சில பதில்கள் வேண்டும்."
ஹோவர்ட் எதுவும் பேசவில்லை. அவன் மீண்டும் நாற்காலியில் அமர்ந்து ஒரு காலை எடுத்து மற்றதன் மேல் போட்டுக்கொண்டான். முகத்தை அழுத்தித் துடைத்தான். அவன் மகனைப் பார்த்துக்கொண்டே நாற்காலியில் பின்னுக்குச் சாய்ந்து, கண்களை மூடித் தூங்கிப்போனான்.
ஆன் ஜன்னலுக்குச் சென்று வெளியே வாகனங்கள் நிறுத்தியிருந்த இடத்தை வெறித்தாள். அப்போது இரவு. விளக்குகள் பிரகாசிக்க கார்கள்அந்த பார்க்கிங் ஏரியாவிலிருந்து வந்து சென்றுகொண்டிருந்தன. ஜன்னலின் அடிக்கட்டையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த அவளுக்குப் புதிதான ஏதோவொன்றிற்குள், துயரமிக்க ஏதோவொன்றிற்குள் அவர்கள் இருப்பதைப் போல இதயத்தில் தோன்றியது. பயம் நிரம்பிப் பற்கள் கிடுகிடுக்க அவள் தாடையை இறுக்கினாள். மருத்துவமனைக்கு முன்பாகப் பெரிய கார் ஒன்று வந்து நிற்பதும், லாங் கோட் அணிந்திருந்த யாரோ ஒரு பெண் காருக்குள் ஏறுவதும் தெரிந்தது. அவளுக்கு அந்தப் பெண்ணாக, ஏதோ ஒருத்தியாக, எவளோ ஒருத்தியாக இங்கிருந்து எங்கேயோ போகிறவளாக, அவள் போய் வண்டியை நிறுத்தி இறங்கியவுடனேயே காத்துக்கொண்டிருந்த ஸ்கூட்டி 'அம்மா' என்று ஓடிவந்து கைக்குள் புகுந்துகொள்ள அவனைத் தூக்கிக்கொள்பவளாகத் தான் இருக்கக் கூடாதா என்றிருந்தது.
சிறிது நேரத்தில் ஹோவர்ட் தூங்கியெழுந்தான். உடனே திரும்பி மகனைப் பார்த்தான். நாற்காலியிலிருந்து எழுந்து, நீட்டி நிமிர்த்திக்கொண்டு சன்னலுக்கருகே அவளிடம் சென்று பக்கத்தில் நின்றான். இருவரும் வாகன நிறுத்தத்தை வெறித்துப் பார்த்திருந்தனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் கவலை அவர்களை வெளிப்படையானவர்களாக ஒரு பரிபூர்ணமான இயல்பான வகையில் ஆக்கியிருந்தாலும் ஒருவர் மற்றவரின் உள்ளத்தை நன்கறிந்திருப்பதாக உணர்ந்தனர்.
கதவு திறந்தது. டாக்டர் பிரான்ஸிஸ் உள்ளே வந்தார். இம்முறை வேறொரு சூட்டும் டையும் அணிந்திருந்தார். அவரது சாம்பல் நிற முடி ஒட்ட வாரப்பட்டு, இப்போதுதான் சவரம் செய்துகொண்டு வந்தவர்போலக் காணப்பட்டார். படுக்கைக்கு நேராகச் சென்று அவர்கள் மகனைப் பரிசோதித்தார். "இந்நேரம் இவன் விழித்துவிட்டிருக்க வேண்டும். இப்படி இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை," என்றார். "ஆனால் இவன் அபாயக்கட்டத்தில் இல்லையென்பதை மட்டும் நாங்கள் அனைவரும் உறுதியாகக் கூறுகிறோம். இவன் விழித்து விட்டால், எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். அவனுக்கு மயக்கம் தெளியாமலிருப்பதற்கு எந்தக் காரணமும், நிச்சயமாக எந்தக் காரணமும், கிடையாது. வெகுசீக்கிரமே அவன் விழிக்கப்போகிறான். எழுந்தவுடன் தலை வலிக்கிறது என்பான், அது நிச்சயம். ஆனால் அவனது அறிகுறிகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. நார்மலாகத்தான் இருக்கிறான்."
"அப்படியானால் இது கோமாதான்?" ஆன் கேட்டாள்.
டாக்டர் தன் மழமழப்பான கன்னத்தைத் தேய்த்தார். "தற்போதைக்கு அப்படியே அழைப்போம், அவன் விழித்தெழும்வரை. நீங்கள் மிகவும் களைத்திருப்பீர்கள். இது மிகவும் கஷ்டம்தான். எனக்குத் தெரியும். போய் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாருங்கள்," என்றார். "உங்களுக்கும் தெம்பாக இருக்கும். நீங்கள் போவதாக இருந்தால் நான் ஒரு நர்ஸை இங்கே விட்டுவைக்கிறேன். போய் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாருங்கள்."
"என்னால் எதுவும் சாப்பிட முடியாது." என்றாள் ஆன்.
"செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்," என்றார் டாக்டர். "எப்படியோ நான் சொல்ல வேண்டியதெல்லாம் எல்லா அறிகுறிகளும் நன்றாகவே இருக்கின்றன, டெஸ்ட்டுகள் எல்லாமே நெகடிவ்தான், எதுவும் தப்பில்லை. மயக்கம் தெளிந்தவுடனேயே எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் மீண்டுவிடுவான்."
"தேங்க் யூ டாக்டர்," என்றான் ஹோவர்ட். டாக்டரோடு மறுபடியும் கைகுலுக்கினான். டாக்டர் ஹோவர்டின் தோளில் தட்டிவிட்டு வெளியேறினார்.
"நம்மில் யாராவது ஒருவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்று நினைக்கிறேன். ஸ்லக்கிற்கு உணவு எடுத்துவைக்க வேண்டும்."
"பக்கத்து வீட்டில் யாரிடமாவது சொல்லலாம். நாய்க்குத் தீனி போடச் சொன்னால் செய்வார்கள்."
ஹோவர்ட், "ஆல்ரைட்," என்றான். சிறிதுநேரம் கழித்து "ஆன், நீ ஏன் போகக் கூடாது? நீ வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வாயேன்? உனக்கும் மாறுதலாக இருக்கும். நான் இவனோடு இருக்கிறேன். சீரியஸாகத் தான் சொல்கிறேன்," என்றான். "நாம் தெம்பாக இருக்க வேண்டும். இவன் விழித்து எழுந்த பிறகும்கூட நாம் இங்கேயே கொஞ்சநேரம் இருக்க வேண்டி வரலாம்."
"நீங்கள் போவதற்கென்ன?" என்றாள். "நீங்கள் போய் ஸ்லக்கிற்குச் சாப்பாடு வைத்துவிட்டு நீங்களும் சாப்பிட்டு விட்டு வாருங்கள்."
"நான் ஏற்கனவே போய் வந்துவிட்டேன். நான் போய்வருவதற்குச் சரியாக ஒரு மணி பதினைந்து நிமிடங்கள்தான் பிடித்தது. நீ ஒரு மணி நேரத்தில் போய்க் களைப்பாறிவிட்டு வரலாம்."
அவள் அதைப் பற்றி யோசிக்க முயன்றாள். ஆனால் அவள் மிகவும் களைத்திருந்தாள். கண்களை மூடி மீண்டும் யோசிக்க முயன்றாள். கொஞ்சநேரம் கழித்து, "சில நிமிடங்களில் நான் வீட்டுக்குப் போய் வந்துவிடலா மென்று தோன்றுகிறது," என்றாள். "இவனையே வைத்த கண்வாங்காமல் ஒவ்வொரு வினாடியும் நான் பார்க்காமல் இருந்தாலே இவன் சரியாகி எழுந்தாலும் எழுந்துவிடலாம். நான் இங்கே இல்லாவிட்டால் எழுந்து விடுவான், பார்க்கிறீர்களா? நான் வீட்டுக்குப் போய்க் குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக்கொண்டு வருகிறேன். ஸ்லக்கிற்கு நான் உணவு எடுத்துவைக்கிறேன்."
"நான் இங்கேயே இருப்பேன்," என்றான். "நீ போய் வா. நான் இங்கே பார்த்துக்கொண்டிருக்கிறேன்," வெகுநேரமாகக் குடித்துக்கொண்டிருந்தவன்போல அவன் கண்கள் ரத்தச் சிவப்பில் சுருங்கியிருந்தன. அவனது உடைகள் கசங்கியிருந்தன. தாடி மீண்டும் தலையெடுத்திருந்தது. அவள் அவன் முகத்தைத் தொட்டாள். பின், கையை எடுத்துக்கொண்டாள். அவன் கொஞ்சநேரம் யாருடனும் பேசவோ கவலையைப் பகிர்ந்துகொள்ளாமலோ தனியாக இருக்க விரும்புகிறான் என்பதைப் புரிந்துகொண்டாள். அலமாரியிலிருந்த பர்ஸை எடுத்தாள். அவள் கோட் அணிந்துகொள்ள அவன் உதவினான்.
"நான் ரொம்பநேரம் தங்கியிருக்கமாட்டேன்." என்றாள்.
"வீட்டுக்குப் போனதும் வெறுமனே உட்கார்ந்து கொஞ்சநேரம் ஓய்வெடு. ஏதாவது சாப்பிடு, குளி. குளித்துவிட்டு வந்ததும் கொஞ்சநேரம் உட்கார்ந்து ஓய்வெடு. அது உன்னை இலகுவாக்கும், நீயே பார். அப்புறம் கிளம்பி வா," என்றான். "கவலைப்படாமல் இருக்க முயல்வோம். டாக்டர் பிரான்ஸிஸ் சொன்னதைக் கேட்டாய்தானே?"
கோட்டை அணிந்தபடி ஒரு நிமிடம் அவள் நின்று டாக்டரின் வார்த்தைகளை, அதில் ஒளிந்திருக்கும் வாய்ப்புள்ள நுட்பங்களை, அவர் உண்மையில் சொன்ன வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்திருக்கக்கூடிய வேறு அறிகுறிகளை ஞாபகப்படுத்திப் பார்த்தாள். மகன்மீது குனிந்து சோதிக்கும்போது அவரது முகபாவத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா என்று நினைவுகூர்ந்து பார்த்தாள். குழந்தையின் கண் இரப்பைகளைப் பிரித்து அவர் பார்த்தபோதும், அவனது சுவாசத்தைக் கேட்டபோதும் அவரது அங்கங்கள் ஒருங்கிசைவாக இயங்கியதை நினைவுபடுத்திப் பார்த்தாள்.
கதவருகே சென்று திரும்பிப் பார்த்தாள். மகனைப் பார்த்தாள், பின் அவன் தந்தையைப் பார்த்தாள். ஹோவர்ட் தலையசைத்தான். அறையிலிருந்து வெளியேறிக் கதவைத் தனக்குப் பின்னால் மூடிக்கொண்டு சென்றாள்.
அவள் செவிலியர் அறையைத் தாண்டி லிஃப்ட் இருக்குமிடத்தைத் தேடித் தாழ்வாரத்தின் கடைசி வரை சென்றாள். தாழ்வாரத்தின் முடிவில் வலப்பக்கம் திரும்பி ஒரு நீக்ரோ குடும்பம் பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த ஒரு சிறிய வெயிட்டிங் ரூமிற்குள் நுழைந்தாள். காக்கிச் சட்டையும் பேன்ட்டும் தலையில் திருப்பிப் போட்டிருந்த பேஸ் பால் தொப்பியுமாக ஒரு நடுத்தர வயதினன் இருந்தான். இரவு உடையும் ஸ்லிப்பர்களும் அணிந்திருந்த ஒரு பருமனான பெண் ஒரு நாற்காலியில் சோர்ந்து அமர்ந்திருந்தாள். ஜீன்ஸ் அணிந்து, தலைமுடியை டஜன்கணக்கான பின்னல்களாகப் பின்னிவிட்டிருந்த ஒரு பதின்வயதுப் பெண் சிகரெட் பிடித்தபடி கால் மேல் கால்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆன் உள்ளே நுழைந்ததும் அந்தக் குடும்பத்தினர் அனைவரும் அவளை நோக்கிப் பார்வையைத் திருப்பினர். அங்கிருந்த சிறிய மேஜையின் மேல் ஹாம்பர்கர் அட்டைகளும் ஸ்டைரோபோம் கப்புகளும் இறைந்திருந்தன.
"பிராங்க்ளின்?" என்றபடி அந்தப் பருத்த பெண்மணி நிமிர்ந்தாள். "பிராங்க்ளினைப் பற்றியா?" அவள் கண்கள் விரிந்தன. "பெண்ணே, சொல் பிராங்க்ளினைப் பற்றியா?" நாற்காலியிலிருந்து அவள் எழுந்திருக்க முயல, அந்த ஆள் அவள்மீது கைவைத்து அமர்த்தினான்.
"ஈவ்லின், பொறுமை, பொறுமை," என்றான்.
"ஜ'ம் ஸாரி," என்றாள் ஆன். "நான் லிஃப்டைத் தேடிக்கொண்டிருக்கிறேன். என் மகன் மருத்துவமனையில் இருக்கிறான், இப்போது எனக்கு லிப்ட் இருக்குமிடம் தெரியவில்லை."
அவன் விரலை நீட்டிக்காட்டி, "அந்தப் பக்கம் போனால் லிஃப்ட் இருக்கும், இடது பக்கம் திரும்புங்கள்," என்றான்.
அந்த இளம்பெண் சிகரெட்டை இழுத்துக் கொண்டு ஆனை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் பிளவுகளாகச் சுருங்கின. புகையை வெளியேற்றுவதற்கு அவளது அகன்ற உதடுகள் மெதுவாகப் பிரிந்தன. நீக்ரோ பெண்மணி தலையைத் தோள்புறமாகச் சரித்து, ஆன்மீது ஆர்வம் குறைந்து பார்வையைத் திருப்பினாள்.
"என் மகன் மீது ஒரு கார் மோதிவிட்டது," ஆன் அம்மனிதனிடம் கூறினாள். அவளே அதை விளக்க வேண்டும்போலக் காணப்பட்டாள். "அவனுக்கு கன்கஷன் இருக்கிறது, மண்டையோட்டில் ஒரு சின்ன விரிசலும்கூட. ஆனால் அவன் நன்றாகிவிடுவான். அவன் 'ஷாக்'கில் இருக்கிறான். அது ஒருவிதமான கோமாவாகக்கூட இருக்கலாம். அதுதான் கோமா என்கிற அந்த விஷயம்தான் எங்களுக்குக் கவலையாக இருக்கிறது. இப்போது கொஞ்சம் வெளியில் போய் வரப்போகிறேன், என் கணவர் அவனோடு இருக்கிறார். ஒருவேளை நான் போனதிற்குப் பிறகு அவன் விழித்துக்கொள்ளலாம்."
"அடப்பாவமே" அம்மனிதன் நாற்காலியில் அசைந்தான். தலையை ஆட்டினான். மேஜையின் மேல் பார்வையைச் செலுத்தினான், பின் ஆனைப் பார்த்தான். அவள் இன்னமும் அங்கேயே நின்றிருந்தாள். அவன் சொன்னான்: "எங்கள் பிராங்க்ளின் ஆப்பரேஷன் டேபிளில் இருக்கிறான். யாரோ அவனை வெட்டிவிட்டார்கள். அவனைக் கொல்ல முயன்றிருக்கின்றார்கள். அவன் இருந்த இடத்தில் சண்டை நடந்திருக்கிறது. அந்த பார்ட்டியில் யார் வம்புக்கும் போகாமல், இவன் வெறுமனே நின்று பார்த்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை இப்போது. இப்போது ஆப்பரேஷன் டேபிளில் கிடக்கிறான். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். அதுதான் இப்போது எங்களால் முடிந்தது." அவன் அவளை அசையாமல் வெறித்தான்.
ஆன் அந்த இளம்பெண்ணைத் திரும்பிப் பார்த்தாள். அவள் இன்னமும் இவளைக் கவனித்துக்கொண்டிருந் தாள். வயதான பெண்மணி தலையைக் குனிந்து கண்களை மூடியிருந்தாள். அவள் உதடுகள் மௌனமாக அசைந்துகொண்டு ஓசையற்ற வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தாள். அந்த வார்த்தைகள் என்னவென்று கேட்க அவளுக்கு உத்வேகம் ஏற்பட்டது. இவள் இருக்கும் அதே நிலைமையில் இருக்கின்ற இம்மனிதர்களோடு மேலும் பேசிக்கொண்டிருக்க விரும்பினாள். இவளும் பயந்திருந்தாள். அவர்களும் பயந்திருந்தனர். அதுதான் அவர்களுக்கிடையே பொது. அந்த விபத்தைப் பற்றி ஏதாவது அவர்களிடம் அவள் சொல்லலாம், ஸ்கூட்டியைப் பற்றி, இது அவன் பிறந்த நாளென்று, திங்கட்கிழமை, நடந்திருப்பதைப் பற்றி, இன்னமும் அவன் மயக்கத்தில் இருப்பதைப் பற்றி. இருந்தாலும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. எதுவும் பேசாமல் அவர்களைப் பார்த்தபடி நின்றாள்.
அம்மனிதன் அடையாளம் சொன்ன வழியில் தாழ்வாரத்தில் சென்று லிஃப்ட்டைக் கண்டடைந்தாள். தான் செய்வது சரிதானா என்று வியந்தபடி மூடிய கதவுகளுக்கெதிரே ஒருநிமிடம் காத்திருந்தாள். பின் பட்டனை விரலால் அழுத்தினாள்.
நடைவழியில் கொண்டுவந்து என்ஜினை அணைத்தாள். கண்களை மூடி ஸ்டீயரிங்மீது தலையைச் சாய்த்துக்கொண்டாள். என்ஜின் குளிர்ச்சியடையத் தொடங்கும் டிக்டிக் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். காரிலிருந்து வெளியே வந்தாள். வீட்டிற்குள்ளே நாய் குரைப்பது கேட்டது. முன்கதவு பூட்டாமல் இருந்தது. உள்ளே நுழைந்து விளக்குகளைப் போட்டுவிட்டுத் தேநீருக்காகக் கொதிகெண்டியில் தண்ணீர் ஊற்றிவைத்தாள். உணவுப் பொட்டலத்தைத் திறந்து பின் கட்டிலிருந்த ஸ்லக்கிற்கு எடுத்துவைத்தாள். நாய் பசியோடு சத்தமெழச் சாப்பிட்டது. அவள் தங்கப் போகிறாளா என்பதைப் பார்க்க சமையலறைக்கு ஓடிவந்தது. தேநீரை எடுத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்ததும் தொலைபேசி அடித்தது.
போனை எடுத்து, "எஸ்!" என்றாள். "ஹலோ?"
"திருமதி வைஸ்?" என்றது ஒரு ஆண் குரல். அப்போது காலை ஐந்து மணி. பின்னணியில் ஏதோ ஒருவித இயந்திர அல்லது கருவிகள் ஒலி கேட்பதாகத் தோன்றியது.
"ஆமாம், ஆமாம்! என்ன விஷயம்?" என்றாள். "திருமதி வைஸ்தான். நான்தான். என்ன விஷயம் ப்ளீஸ்?" பின்னணிச் சத்தங்களை உற்றுக்கேட்டாள். "ஸ்கூட்டியைப் பற்றியா, கடவுளே?"
"ஸ்கூட்டி? ஆம், ஸ்கூட்டியைப் பற்றித்தான். பிரச்சினை ஸ்கூட்டியைப் பற்றியதுதான். ஸ்கூட்டியை மறந்துவிட்டீர்களா?" அவன் போனை வைத்துவிட்டான்.
அவள் மருத்துவமனையின் எண்ணை டயல் செய்து மூன்றாவது தளத்திற்குத் தொடர்பு கேட்டாள். போனை எடுத்த நர்ஸிடம் தன் மகனைப் பற்றிய தகவலைக் கேட்டாள். பின் கணவனிடம் பேச வேண்டுமென்றாள். இது அவசரம், என்றாள்.
டெலிபோன் ஒயரை விரலில் திருகியபடி அவள் காத்திருந்தாள். கண்களை மூடிக்கொண்டாள். வயிற்றில் பதற்றமாக உணர்ந்தாள். அவள் சாப்பிட்டே ஆக வேண்டும். பின் கட்டிலிருந்து ஸ்லக் வந்து அவள் காலடியில் படுத்துக்கொண்டது. வாலை ஆட்டியது. அதன் காதைப் பிடித்து அவள் இழுக்க, அது அவள் விரல்களை நக்கியது, ஹோவர்ட் லைனில் வந்தான்.
"இப்போது எவனோ ஒருவன் இங்கே போன் செய்தான்," என்றாள். டெலிபோன் ஒயரை முறுக்கினாள். "ஸ்கூட்டியைப் பற்றி என்றான்" அவள் அழுதாள்.
"ஸ்கூட்டி நன்றாக இருக்கிறான்" ஹோவர்ட் அவளிடம் கூறினான். "ஐ மீன், அவன் இன்னமும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறான். எந்த மாற்றமும் இல்லை. நீ போனதற்குப் பிறகு இரண்டுமுறை நர்ஸ் வந்துவிட்டுச் சென்றாள். நர்சும் டாக்டரும் என்று நினைக்கிறேன். அவன் நன்றாக இருக்கிறான்."
"அந்த ஆள் கூப்பிட்டான். ஸ்கூட்டியைப் பற்றி என்றான்."
"ஆன், கொஞ்சநேரம் ஓய்வெடு. உனக்கு ஓய்வு தேவை. என்னிடம் பேசியவனாகத்தான் இருக்க வேண்டும். அதை மறந்துவிடு. ஓய்வெடுத்துவிட்டு இங்கே வா. பின்பு நாம் காலை உணவாக ஏதாவது சாப்பிடலாம்."
"காலை உணவு! எனக்கு எந்தக் காலை உணவும் வேண்டாம்."
"நான் சொல்வதைக் கேள். பழச்சாறு.... அல்லது வேறு ஏதாவது. எனக்குத் தெரியவில்லை, எனக்கும் எதுவும் தெரியவில்லை, ஆன். ஜீஸஸ், எனக்குக்கூடப் பசியேயில்லை. ஆன், இப்போது பேசுவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. நான் இப்போது வெளியே மேஜைக்கருகே நின்றுகொண்டிருக்கிறேன். டாக்டர் பிரான்ஸிஸ் இன்று காலை எட்டு மணிக்கு மறுபடியும் வருகிறாராம். அப்போது ஏதோ சொல்லப்போகிறாராம், தெளிவாக எதையோ சொல்லப்போகிறார். அப்படித்தான் நர்ஸ்களில் ஒருத்தி சொன்னாள். அவளுக்கு அதற்குமேல் எதுவும் தெரியவில்லை. ஆன்? ஒருவேளை அப்போது நமக்கு ஏதாவது தெளிவாகலாம். எட்டுமணிக்கு, எட்டுமணிக்கு முன்னதாக இங்கே வந்துவிடு. நான் இங்கேயேதான் இருப்பேன் ஸ்கூட்டி நன்றாகத்தான் இருக்கிறான். அப்படியேதான் இருக்கிறான்" அவன் சேர்த்துக்கொண்டான்.
"அந்த போன் வந்தபோது நான் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஸ்கூட்டியைப் பற்றி என்றான். பின்னணியில் ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. உங்களுக்கு வந்த அழைப்பில்கூடப் பின்னணியில் சத்தம் இருந்ததா ஹோவர்ட்?"
"எனக்கு ஞாபகம் இல்லை" என்றான். "ஒருவேளை அந்தக் கார் டிரைவராக இருக்கலாம், ஒருவேளை அவன் ஒரு சைக்கோபத்தாக இருக்கலாம், ஸ்கூட்டியைப் பற்றி எப்படியோ தெரிந்துவைத்திருக்கலாம். ஆனால் நான் அவனுடன்தான் இருக்கிறேன். உன் வழக்கப்படி ஓய்வெடு. குளி, அப்புறம் ஏழு மணிக்குள் இங்கே வந்துவிடு. டாக்டர் வந்ததும் நாம் ஒன்றாக அவரிடம் பேசுவோம். எல்லாம் சரியாகிவிடும், ஆன், நான் இங்கே இருக்கிறேன். டாக்டர்களும் நர்ஸ்களும் இருக்கிறார்கள். அவன் உடல்நிலை சீராக இருப்பதாகச் சொல்கிறார்கள்."
"பயத்தில் செத்துவிடுவேன் போலிருக்கிறது," என்றாள்.
அவள் தண்ணீரைத் திருப்பிவிட்டு, உடைகளைக் களைந்து, குளியல் தொட்டிக்குள் இறங்கினாள். கேசத்தை அலசுவதில் நேரத்தை எடுக்காமல் வேகமாகக் குளித்து, துடைத்துக்கொண்டாள். சுத்தமான உள்ளாடைகளும் உல்லன் சட்டையும் ஸ்வெட்டரும் அணிந்துகொண்டாள். அவள் வசிப்பறைக்குச் சென்றதும் நாயும் உடன் வந்து தரையில் வாலை அடித்தது. வெளியே வெளிச்சம் பரவத்தொடங்க, வந்து காரை எடுத்தாள்.
மருத்துவமனையின் வாகன நிறுத்தத்திற்குள் ஓட்டிவந்து நுழைவாசலுக்கருகில் இருந்த ஒரு காலியிடத்தைக் கண்டுபிடித்தாள். அவளுடைய குழந்தைக்கு நடந்திருக்கும் விஷயங்களுக்கு அவளேதான் காரணமென்று ஒரு குருட்டு யோசனை தோன்றியது. அவள் நினைவுகள் அந்த நீக்ரோ குடும்பத்தின்பால் சென்றது. பிராங்க்ளின் என்ற அந்தப் பெயரும் ஹாம்பர்கர் பேப்பர்கள் இறைந் திருந்த மேஜையும் சிகரெட் பிடித்துக்கொண்டே தன்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த பதின்வயதுப் பெண்ணும் அவள் ஞாபகத்துக்கு வந்தனர். மருத்துவமனையின் வாசலைக் கடக்கும்போது அப்பெண்ணின் ஞாபக பிம்பத்திடம், 'குழந்தை பெற்றுக்கொள்ளாதே' என்றாள். 'கடவுள் பொருட்டு வேண்டவே வேண்டாம்.'
மூன்றாவது மாடிக்கு லிஃப்ட்டில் ஏறினாள். கூடவே பணியில் இருந்த இரண்டு நர்ஸ்கள் இருந்தனர். அது புதன் காலை, ஏழுமணிக்குச் சில நிமிடங்கள் இருந்தன. டாக்டர் மாடிஸன் என்பவருக்காகக் குறிப்பு ஒன்று இருந்தது. மூன்றாவது மாடியில் நின்று கதவுகள் வழுக்கித் திறந்தன. நர்ஸ்களுக்குப் பின்னால் அவள் வெளிவந்தாள். அவர்கள் எதிர்ப்புறம் திரும்பி, அவள் லிஃப்டிற்குள் நுழைந்தபோது, தடைபட்ட உரையாடலைத் தொடர்ந்தனர். தாழ்வாரத்தின் முடிவில் அந்த நீக்ரோக் குடும்பம் காத்திருந்த அச்சிறிய ஒதுக்குப்புறம்வரை சென்றாள். அவர்கள் இப்போது சென்றுவிட்டிருந்தார்கள். ஆனால் போன நிமிடம்தான் அவற்றைத் தள்ளிவிட்டு எழுந்து சென்றதுபோல நாற்காலிகள் குழம்பிக்கிடந்தன. மேஜையின் மேல் அதே கப்புகளும் பேப்பர்களும் குவிந்திருந்தன. சாம்பல் குடுவை சிகரெட் துண்டுகளால் நிரம்பியிருந்தது.
நர்ஸ்களின் அறைக்கு முன் நின்றாள். கவுன்ட்டருக்குப் பின்னால் ஒரு நர்ஸ் தலையை பிரஷ் செய்தபடி கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தாள்.
"நேற்றிரவு ஒரு நீக்ரோ பையனுக்கு ஆப்பரேஷன் நடந்தது," என்றாள் ஆன். "அவன் பெயர் பிராங்க்ளின். அவனுடைய குடும்பம் வெயிட்டிங் ரூமில் இருந்தது. அவன் இப்போது எப்படியிருக்கிறான் என்று தெரிய வேண்டும்."
கவுன்ட்டரின் பின்னால் ஒரு டெஸ்க்கில் அமர்ந்திருந்த நர்ஸ் அவளுக்கு முன்னாலிருந்த சார்ட்டிலிருந்து நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். தொலைபேசி ரீங்கரித்தது. ரிஸீவரை எடுத்தாள், ஆனால் ஆன்மேல் வைத்த கண்களை எடுக்கவில்லை.
"அவன் இறந்துவிட்டான்" கவுன்ட்டரில் இருந்த நர்ஸ் சொன்னாள். ஹேர் பிரஷ்ஷைப் பிடித்துக்கொண்டு அவளைத் தொடர்ந்து பார்த்தாள். "நீங்கள் அவர்கள் குடும்ப நண்பரா?"
"நேற்றிரவு அந்தக் குடும்பத்தைச் சந்தித்தேன்," என்றாள் ஆன். "என் மகனே மருத்துவமனையில் தான் இருக்கிறான். அவன் 'ஷாக்'கில் இருக்கிறான் என்று சொல்கிறார்கள். என்ன பிரச்சினையென்று உறுதியாக எங்களுக்குத் தெரியவில்லை. பிராங்க்ளினுக்கு என்னாகியிருக்குமென்று யோசனை. அவ்வளவுதான். நன்றி." அவள் திரும்பித் தாழ்வாரத்தில் நடந்தாள். சுவரின் நிறத்திலேயேயிருந்த லிஃப்ட் கதவுகள் வழுக்கித் திறந்து, வெள்ளைப் பேன்ட்டும் வெள்ளை கான்வாஸ் ஷ¨க்களும் அணிந்த ஒடிசலான வழுக்கை ஆள் கனமான வண்டியை அந்த சர்வீஸ் லிஃப்ட்டிலிருந்து வெளியே இழுத்துக்கொண்டு வந்தான். இந்தக் கதவுகளை நேற்றிரவு அவள் கவனித்திருக்கவில்லை. அந்த ஆள் வண்டியைத் தாழ்வாரத்திற்குக் கொண்டுவந்து லிஃப்டிற்கு அடுத்த அறையின் முன் நிறுத்திக் குறிப்பு அட்டை ஒன்றை எடுத்துச் சோதித்தான். பின் குனிந்து வண்டியின் கீழ் அறையிலிருந்து ஒரு ட்ரேவை எடுத்தான். கதவை லேசாகத் தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தான். சூடான உணவின் இனிமையற்ற நெடி அந்த வண்டியைக் கடக்கும்போது அடித்தது. வேறு எந்த நர்ஸ்களையும் பார்க்காமல் வேகமாக நடந்து மகன் அறையை அடைந்து கதவைத் தள்ளித் திறந்தாள்.
ஹோவர்ட் சன்னலருகே கையைப் பின்னால் கட்டியபடி நின்றிருந்தான். அவள் உள்ளே நுழைய, திரும்பிப் பார்த்தான்.
"எப்படி இருக்கிறான்?" என்றாள். படுக்கையருகே சென்றாள். பர்ஸை நைட் ஸ்டேண்டுக்குப் பக்கத்தில் தரையில் போட்டாள். அவள் அங்கிருந்து சென்று வெகுநேரமாகியிருந்ததைப் போலத் தோன்றியது. மகனின் முகத்தைத் தொட்டாள். "ஹோவர்ட்?"
"கொஞ்சநேரத்திற்கு முன்பாக டாக்டர் பிரான்ஸிஸ் இங்கே வந்தார்" என்றான் ஹோவர்ட். அவனைக் கூர்மையாகப் பார்த்தாள். அவன் தோள் சிறிது சரிந்திருப்பதாக நினைத்தாள்.
"காலை எட்டுமணிக்கு முன்பாக அவர் வரமாட்டார் என்றல்லவா நினைத்தேன்?"
"அவரோடு இன்னொரு டாக்டரும் இருந்தார். ஒரு நரம்பியல் டாக்டர்."
"நரம்பியல் டாக்டர்?"
ஹோவர்ட் தலையசைத்தான். அவன் தோள் சரிவது, அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. "அவர்கள் என்ன சொன்னார்கள் ஹோவர்ட்? ஏசுவே, என்ன சொன்னார்கள் என்று சொல்லுங்கள்."
"இவனைக் கீழே கொண்டுபோய் மேலும் சில டெஸ்ட்டுகள் செய்ய வேண்டும் என்றனர். ஆன், அவர்கள் ஆப்பரேஷன் செய்யலாமென்று நினைக்கிறார்களாம், அவர்கள் ஆப்பரேஷன் செய்யப்போகிறார்கள். இவனுக்கு ஏன் இன்னும் மயக்கம் தெளியவில்லையென்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இது வெறும் ஷாக்கோ கன்கஷனோ அல்ல. அதற்கு மேலே ஏதோ போலிருக்கிறது. இந்தளவுக்குத்தான் இப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவனுடைய மண்டையோட்டில். . . அந்த விரிசலில். . . அதில்தான் ஏதோ இருக்கிறது போலிருக்கிறது. அதுதான் காரணமென்று நினைக்கின்றனர். அதனால் ஆப்பரேஷன் செய்யப் போகிறார்கள். நான் உன்னைக் கூப்பிட முயன்றேன். நீ ஏற்கனவே வீட்டிலிருந்து கிளம்பி விட்டிருந்தாய்,"
"ஓ, தெய்வமே!" என்றாள். "ஓ, ப்ளீஸ், ஹோவர்ட், ப்ளீஸ்," அவள் அவன் கைகளுக்குள் சாய்ந்தாள்.
"ஹேய் இங்கே பார்!" என்று திடீரெனப் பதறினான் ஹோவர்ட். "ஸ்கூட்டி! ஆன், இங்கே பார்" அவன் அவளை படுக்கையின் பக்கம் திருப்பினான்.
சிறுவன் கண்களைத் திறந்தான், பின் மூடிக்கொண்டான். இப்போது மீண்டும் திறந்தான். கண்கள் ஒரு நிமிடம் நேராக நிலைத்தன, பின் மெதுவாகத் திரும்பி ஹோவர்ட், ஆன்மீது பதிந்தது. பின் மீண்டும் நகர்ந்தது.
"ஸ்கூட்டி" அவன் அம்மா படுக்கையை நோக்கிப் பாய்ந்தாள்.
"ஏய், ஸ்காட்?" அவன் அப்பா கூப்பிட்டான், "ஏய், மகனே?"
அவர்கள் படுக்கையின் மேல் குனிந்தனர். ஹோவர்ட் மகனின் கையைத் தன் கைகளில் ஏந்தித் தட்டிக்கொடுத்து அழுத்தத் தொடங்கினான். ஆன் குனிந்து மகன் நெற்றியில் மாறிமாறி முத்தமிட்டாள். அவன் கன்னங்களை ஏந்தி, "ஸ்கூட்டி, கண்ணே, இது அம்மா, அப்பா" என்றாள். "ஸ்கூட்டி?"
சிறுவன் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாமல் பார்த்தான். அவன் வாய் திறந்தது. கண்கள் இறுக மூடிக்கொண்டன. அவனிடமிருந்து ஓர் ஓலம் கிளம்பி நுரையீரலில் காற்று மிச்சமிருந்தவரைக்கும் செலவிட்டு வெளியேறி அடங்கியது. அவன் முகம் தளர்வடைந்து மிருதுவானதைப் போலிருந்தது. அவனது உதடுகள் பிரிந்து அவன் கடைசி மூச்சு தொண்டை வழியாகக் கிட்டித்த பற்கள் வழியாக மெதுவாக வெளியேறியது.
டாக்டர்கள் அதனை மறைந்திருந்த 'அக்ளூஷன்' என்றனர். பத்து லட்சத்தில் ஒருமுறை நிகழக்கூடிய சந்தர்ப்பம் என்றனர். ஒருவேளை அதனை எந்தவிதத்திலாவது கண்டுபிடித்திருந்தால் உடனடியாக சர்ஜரி செய்திருக்கலாம், அவனைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பே ஏற்படவில்லை. எப்படியிருந்தாலும் அவர்களது சோதனைகளில் எதைத்தான் பார்க்க முடிந்தது? டெஸ்ட்டுகளிலோ எக்ஸ்ரேக்களிலோ எதுவுமே தென்படவில்லையே?
டாக்டர் பிரான்ஸிஸ் நிலைகுலைந்திருந்தார். அவர்களை டாக்டர்களின் தனியறைக்கு அழைத்துச் சென்றபடி, "நான் எவ்வளவு மோசமாக உணர்கிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல முடியவில்லை. ஐ'ம் ஸோ ஸாரி, என்னால் பேச முடியவில்லை" என்றார். அங்கே மற்றொரு டாக்டர் எதிரேயிருந்த நாற்காலியில் காலைப் பின்னியபடி அதிகாலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பச்சை நிறத்தில் தளர்த்தியான 'டெலிவரி-ரூம்' மேற்சட்டையும் பச்சை பேன்ட்டும் தலை முடியை மறைக்கும்படியாகப் பச்சைத் தொப்பியும் அணிந்திருந்தார். ஹோவர்டையும் ஆனையும் டாக்டர் பிரான்ஸிஸையும் ஒருமுறை பார்த்தார். எழுந்து, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அறையைவிட்டு வெளிச்சென்றார். டாக்டர் பிரான்ஸிஸ் ஆனை சோபாவிற்குக் கூட்டிச் சென்று அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து, மெதுவான ஆறுதலளிக்கும் குரலில் பேசத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவளை நெருங்கி அணைத்துக்கொண்டார். அவள் தோளில் அவரது நெஞ்சு உயர்ந்து தாழ்வதை அவளால் உணர முடிந்தது. கண்களைத் திறந்தபடி அவரது அவரணைப்பில் அசைவற்றிருந்தாள். ஹோவர்ட் பாத்ரூமிற்குக் கதவைச் சாத்தாமல் சென்றான். பீறிட்டு ஆக்ரோஷித்த அழுகைக்குப்பின் குழாயைத் திறந்து முகத்தைக் கழுவினான். தொலைபேசி வைக்கப் பட்டிருந்த ஒரு சிறிய மேஜையின்முன் வந்தமர்ந்தான். முதலில் செய்ய வேண்டியது என்னவென்று தீர்மானிப்பதைப் போல் தொலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தான். சிலரை அழைத்துப் பேசினான். கொஞ்சநேரம் கழித்து டாக்டர் பிரான்ஸிஸ் தொலைபேசியை உபயோகித்தார்.
"இப்போதைக்கு வேறு ஏதாகிலும் நான் செய்ய வேண்டுமா?" அவர் அவர்களிடம் வினவினார்.
டாக்டர் அவர்களை மருத்துவமனையின் முன்வாயில் கதவுவரை அழைத்துவந்தார். மருத்துவமனைக்கு ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அப்போது காலை பதினோரு மணி. எவ்வளவு மெதுவாகவும் ஏறக்குறைய இஷ்டமேயின்றியும் தான் நடந்து வருவதாக ஆன் உணர்ந்தாள். டாக்டர் பிரான்ஸிஸ் அவர்களை வெளியேற்றுவதாக அவளுக்குத் தோன்றியது. அவர்கள் அங்கேயே இருக்க வேண்டும், அங்கேயே தங்கியிருப்பதுதான் சரியானதாக இருக்குமென்று நினைத்தாள். வாகன நிறுத்தத்தை இலக்கின்றி வெறித்திருந்தவள், திரும்பி மருத்துவமனையின் முகப்பை நிமிர்ந்து பார்த்தாள். தலையை ஆட்டத் தொடங்கினாள். "நோ, நோ," என்றாள். "அவனை இங்கேயே விட்டுவிட்டு வர என்னால் முடியாது, நோ." அவளிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தொலைக்காட்சித் தொடர்களில் வன்முறையில் அல்லது திடீரென நிகழ்ந்த மரணங்களின்போது அதிர்ச்சியுற்ற பாத்திரங்கள் பேசும் வசனத்தைப் போலவே இருப்பது எந்தளவுக்கு அநியாயமென்று அவளுக்குப்பட்டது. அவளது வார்த்தைகள் அவளுடையதாகவே இருக்க வேண்டுமென விரும்பினாள். "நோ," என்றாள். ஏதோ காரணத்திற்காக நீக்ரோ பெண்மணியின் தோளில் துவண்டு சரியும் முகம் அவள் ஞாபகத்தில் வந்தது. "நோ" என்றாள் மீண்டும்.
"இன்று மாலை உங்களிடம் பேசுகிறேன்," ஹோவர்டிடம் டாக்டர் சொல்லிக்கொண்டிருந்தார். "இன்னமும் சில விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கின்றன. எங்களது திருப்திக்காகச் சில விஷயங்களைத் தெளிவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. விளங்க வேண்டிய சில விஷயங்கள்."
"பிரேதப் பரிசோதனை?" ஹோவர்ட் கேட்டான்.
டாக்டர் பிரான்ஸிஸ் தலையசைத்தார்.
"புரிகிறது" என்றான் ஹோவர்ட். பின், "ஓ, ஜீஸஸ்! நோ, டாக்டர் எனக்குப் புரியவில்லை. என்னால் முடியாது, என்னால் முடியாது, என்னால் முடியவே முடியாது" என்றான்.
டாக்டர் பிரான்ஸிஸ் ஹோவர்டைத் தோளோடு அணைத்தார். "ஐ'ம் ஸாரி. கடவுளே, நான் எந்தளவுக்கு வருந்துகிறேன் தெரியுமா, ப்ளீஸ்?" ஹோவர்டின் தோளை விட்டுவிட்டுக் கையை நீட்டினார். ஹோவர்ட் அந்தக் கரத்தையே வெற்றாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப், பிறகு பற்றினான். டாக்டர் பிரான்ஸிஸ் ஆனை மீண்டும் ஒரு கையால் அணைத்துக்கொண்டார். வளால் புரிந்துகொள்ள முடியாத ஏதோ நல்லியல்பால் நிறைந்திருப்பதாக அவர் தெரிந்தார். அவர் தோளின் மீது தலையைச் சாய்த்தாள், ஆனால் கண்கள் திறந்திருந்தன. அவள் மருத்துவமனையையே பார்த்தபடியிருந்தாள். பார்க்கிங்கை விட்டு அவர்கள் வண்டி வெளிவரும்போது தலையைத் திருப்பி மருத்துவமனையைப் பார்த்தாள்.
=
வீட்டிற்கு வந்ததும் அவள் கோட்டின் பாக்கெட்டுக்குள் கைகளைச் செருகிக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள். ஹோவர்ட் மகனின் அறைக் கதவைச் சாத்தினான். காபி மேக்கரை இயங்கச் செய்துவிட்டு ஒரு காலிப் பெட்டியை எடுத்தான். வசிப்பறையில் இறைந்திருந்த மகனின் பொருட்களை எடுத்து அதற்குள் போடலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் அவளுக்குப் பக்கத்தில் சோபாவில் உட்கார்ந்து பெட்டியை ஒருபுறமாகத் தள்ளிவிட்டான். முழங்கால்களுக்கிடையில் கைகளைச் செருகிக்கொண்டு முன்னால் சாய்ந்தான். அழத் தொடங்கினான். அவன் தலையை இழுத்து அவள் மடிமீது வைத்துக்கொண்டு அவன் தோளைத் தட்டிக்கொடுத்தாள். "அவன் போய்விட்டான்" என்றாள். அவன் தோளில் தொடர்ந்து தட்டியபடியிருந்தாள். அவன் அழுகையை மீறிச் சமையலறையில் காபி மேக்கரின் 'உஸ்'ஸென்ற சத்தம் கேட்டது. மென்மையாக, "இதோ, இதோ பாருங்கள் ஹோவர்ட், அவன் போய்விட்டான். அவன் போய்விட்டான், அதற்கு நாம் இப்போது பழகிக்கொள்ள வேண்டும். தனியாக இருப்பதற்கு."
சிறிது நேரம் கழித்து ஹோவர்ட் எழுந்து அந்தப் பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு, எதனையும் அதற்குள் போடாமல் அறைக்குள் இலக்கின்றி அங்குமிங்கும் அலைந்தான். தரையில் கிடந்தவற்றில் சிலவற்றை எடுத்து சோபாவின் ஒரு மூலையில் வைத்தான். அவள் இன்னமும் கோட் பாக்கெட்டிலிருந்து கையை எடுக்காமல் சோபாவில் உட்கார்ந்திருந்தாள். ஹோவர்ட் பெட்டியை வைத்துவிட்டு வசிப்பறைக்கு காபியை எடுத்துவந்தான். பிறகு ஆன் உறவினர்களுக்கு போன் செய்யத் தொடங்கினாள். ஒவ்வொரு அழைப்பிற்கும் தொடர்பு கிடைத்ததும் சில வார்த்தைகள் வெடித்துவிட்டு ஒரு நிமிடம் அழுவாள். பின் நிதானமுற்று அளவான குரலில் என்ன நடந்ததென்று விவரித்துவிட்டு ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னாள். ஹோவர்ட் பெட்டியை வெளியே கராஜூக்குக் கொண்டு சென்றான். அங்கே இருந்த மகனின் சைக்கிள் கண்ணில் பட்டது. பெட்டியைக் கீழே போட்டுவிட்டு சைக்கிளுக்குப் பக்கத்திலிருந்த மேடையில் உட்கார்ந்தான். சைக்கிளை கவனமற்றுத் தூக்கி மார்போடு சாய்த்துக்கொண்டான். ரப்பர் பெடல் அவன் மார்பைக் குத்தியது. சக்கரத்தை ஒருமுறை சுழற்றிவிட்டான்.
ஆன் அவளுடைய சகோதரியிடம் பேசிவிட்டு போனை வைத்தாள். வேறொரு எண்ணை அவள் தேடிக்கொண்டிருந்தபோது தொலைபேசி அடித்தது. முதல் ரிங்கிலேயே அதை எடுத்தாள்.
"ஹலோ" என்றாள். பின்னணியில் ஏதோவொரு ஹம்மிங் சத்தம் கேட்டது. "ஹலோ!" அவள் மீண்டும் கூப்பிட்டாள். "கடவுளே, யார் அது? உனக்கு என்ன வேண்டும்?"
"உங்கள் ஸ்கூட்டி, உங்களுக்காகத் தயாராக வைத்திருக்கிறேன்" என்றது அந்த ஆளின் குரல். "நீங்கள் அவனை மறந்துவிட்டீர்களா?"
"யூ . . . ஈவில் பாஸ்டர்ட்!" ரிஸீவரில் அவள் வீறிட்டாள். "இதைப்போல எப்படி உன்னால் செய்ய முடிகிறது, நாய்க்குப் பிறந்த பிசாசே?"
"ஸ்கூட்டி" என்றான் அவன். "ஸ்கூட்டியைப் பற்றி மறந்துவிட்டீர்களா?" அவன் போனை வைத்து விட்டான்.
அவள் கத்தலைக் கேட்டு ஹோவர்ட் வந்து பார்த்த போது மேஜையின் மீது கைகளுக்கடியில் தலையைப் புதைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக்கேட்டபோது டயல்டோன் தான் கேட்டது.
றீ
அதன் பின் வெகுநேரம் கழித்து, பல விஷயங்களை அவர்கள் முடிவெடுத்த பின், நள்ளிரவுக்குச் சற்றுநேரம் முன்னதாக மறுபடியும் தொலைபேசி அடித்தது.
"நீங்களே பேசுங்கள்" என்றாள். "ஹோவர்ட், இது அவனேதான், எனக்குத் தெரியும்." அவர்கள் சமையலறை மேஜையில் காபிக்கு முன்பாக அமர்ந்திருந்தனர். அவள் கப்புக்குப் பக்கத்தில் ஹோவர்ட் ஒரு சிறிய கிளாஸில் விஸ்கி வைத்திருந்தான். மூன்றாவது ரிங்கில் அவன் எடுத்தான்.
"ஹலோ" என்றான். "யாரது? ஹலோ! ஹலோ!" தொடர்பு துண்டிக்கப்பட்டது. "வைத்துவிட்டான். யாரோ தெரியவில்லை."
"அது அவனேதான்! அந்த பாஸ்டர்ட்! அவனை நான் கொல்ல வேண்டும்" என்றாள். "அவனை நான் சுட வேண்டும். அவன் துடிப்பதைப் பார்க்க வேண்டும்."
"ஆன், மை காட்."
"உங்களுக்கு ஏதாவது கேட்டதா? பின்னணியில்? ஏதோ ஒரு சத்தம், மெஷின்போல, ஏதோ ரீங்கரிப்பதைப் போல்?"
"எதுவும் இல்லை. அந்த மாதிரி எதுவும் இல்லை" என்றான். "உடனே வைத்துவிட்டான். ஏதோ ரேடியோ சங்கீதம்போல இருந்ததாக நினைக்கிறேன். ஆமாம், ஏதோ ரேடியோ. அவ்வளவுதான் சொல்ல முடிகிறது. கடவுளே, என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரியவில்லையே."
அவள் தலையை ஆட்டினாள். "என்னால் முடிந்தால், அவனை என்னால் பிடிக்க முடிந்தால் . . ." அவளுக்குச் சட்டென்று அப்போது புலப்பட்டது. அது யாரென்று அவளுக்குத் தெரிந்துவிட்டது. ஸ்கூட்டி, கேக், தொலைபேசி எண். மேஜையிலிருந்து நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்து நின்றாள். "ஹோவர்ட், என்னை அந்த ஷாப்பிங் சென்டருக்குக் கூட்டிப்போ."
"என்ன சொல்கிறாய்?"
"ஷாப்பிங் சென்டர். கூப்பிடுவது யாரென்று எனக்குத் தெரியும். அவன் யாரென்று எனக்குத் தெரியும். அது அந்த ரொட்டிக்கடைக்காரன், நாய்க்குப் பிறந்த அந்த பேக்கர், ஹோவர்ட். ஸ்கூட்டியின் பிறந்த நாளுக்காக அவனை ஒரு கேக் செய்யச் சொல்லியிருந்தேன். அவன்தான் கூப்பிடுவது. அவனிடம்தான் நமது எண் இருக்கிறது, அவன் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அந்தக் கேக்கைச் சொல்லி நம்மைச் சித்திரவதை செய்துகொண்டிருக்கிறான். ரொட்டிக் கடைக்காரன், அந்த பாஸ்டர்ட்."
=
அவர்கள் ஷாப்பிங் சென்டருக்குச் சென்றார்கள். தெளிவான வானம். நட்சத்திரங்கள் நிரம்பியிருந்தன. குளிராக இருந்தது. காரில் ஹீட்டரைப் போட்டிருந்தார்கள். பேக்கரிக்கு முன்னால் காரை நிறுத்தினார்கள். எல்லாக் கடைகளும் மூடியிருந்தன. ஆனால் தெருவின் கடைசியில் சினிமா தியேட்டரின்முன் கார்கள் நிறையவே இருந்தன. பேக்கரி சன்னல்கள் இருட்டாக இருந்தன. ஆனால் கண்ணாடியின் வழியாக அவர்கள் பார்த்தபோது பின்னறையில் வெளிச்சமும் ஏப்ரன் அணிந்த ஒரு தடிமனான ஆள் அவ்வப்போது அந்தச் சீரான வெண்ணிற வெளிச்சத்தினூடாக வந்துபோய்க்கொண்டிருந்ததும் தெரிந்தது. கண்ணாடியின் வழியாக கேக்குகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதும் சின்னச் சின்ன மேஜை, நாற்காலிகளும் தெரிந்தன. அவள் கதவைத் திறக்க முயன்றாள். கண்ணாடியில் தட்டினாள். அந்த ரொட்டிக்கடைக்காரனுக்குக் கேட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் அவனிடம் இல்லை. அவர்கள் இருக்கும் திசையையே அவன் பார்க்கவில்லை.
பேக்கரியின் பின்னால் சுற்றிக்கொண்டுவந்து காரை நிறுத்தினார்கள். காரிலிருந்து வெளியேவந்தார்கள். வெளிச்சமிருந்த சன்னல் அவர்கள் எட்டிப் பார்க்க முடியாதபடி உயரத்தில் இருந்தது. பின்கதவுக்குப் பக்கத்திலிருந்த போர்டு 'பான்ட்ரி பேக்கரி, ஸ்பெஷல் ஆர்டர்ஸ்' என்றது. உள்ளேயிருந்த ரேடியோவின் சத்தம் அவளுக்கு லேசாகக் கேட்டது. ஏதோ 'கிறீக்' ஒலி-அந்த பேக்கரிக் கதவு திறக்கப்படுவதா? கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தாள். பின் மீண்டும் தட்டினாள், பலமாக. ரேடியோ நிறுத்தப்பட்டது. இப்போது ஏதோ சுரண்டும் சத்தம். மேஜை டிராயரையோ அல்லது எதையோ திறந்து மூடும் சத்தம்.
யாரோ தாழ்ப்பாளை நீக்கினார்கள். கதவு திறந்தது. அந்த ரொட்டிக் கடைக்காரன் வெளிச்சத்தில் நின்றுகொண்டு அவர்களைக் கூர்ந்து பார்த்தான். "கடையை மூடிவிட்டேன்" என்றான். "இந்த நேரத்தில் என்ன வேண்டும் உங்களுக்கு? இப்போது நடுராத்திரி. குடித்திருக்கிறீர்களா என்ன?"
திறந்திருந்த கதவு வழியாக விழுந்த வெளிச்சத்திற்குள் அவள் ஒரு அடி முன்வைத்தாள். தன் கனத்த இமைகளைக் கொட்டியபடி அவளை அடையாளம் கண்டுவிட்டான். "நீங்களா?" என்றான்.
"நான்தான்," என்றாள் "ஸ்கூட்டியின் அம்மா. இது ஸ்கூட்டியின் அப்பா. நாங்கள் உள்ளே வர வேண்டும்."
"இப்போது நான் பிஸியாக இருக்கிறேன். செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது."
ஆனாலும் அவள் வாசலைத் தாண்டி உள்ளே சென்றாள். ஹோவர்ட் அவளுக்குப் பின்னால் வந்தான். அந்த பேக்கர் பின்னுக்கு நகர்ந்தான். "இங்கே பேக்கரியைப் போலத்தான் வாசனையடிக்கிறது. ஒரு பேக்கரி மாதிரி இங்கே வாசனையடிக்கவில்லையா ஹோவர்ட்?"
"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றான் பேக்கர். "உங்களுடைய கேக் வேண்டுமா? அப்படியா, உங்கள் கேக்கை வாங்கிச்செல்வதென்று முடிவெடுத்து விட்டீர்களா? கேக் ஒன்று நீங்கள் ஆர்டர் செய்திருந்தீர்கள், இல்லையா?"
"நீ ரொம்ப கெட்டிக்கார பேக்கர்தான்" என்றாள். "ஹோவர்ட், இவன்தான் நமக்கு போன்செய்து கொண்டிருந்தது." அவள் முஷ்டியை இறுக்கினாள். அவனைச் சீற்றத்துடன் முறைத்தாள். அவளுக்குள் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த கோபம் அவளைத் தன்னைவிடப் பிரம்மாண்டமாக, இந்த இரண்டு ஆண்களைவிடப் பலமுள்ளவளாக உணர வைத்தது.
"ஒரு நிமிடம் இருங்கள்" என்றான் அந்த பேக்கர். "உங்களுடைய மூன்றுநாள் பழசான கேக்கை எடுத்துக்கொள்ள வேண்டும், அதுதானே? உங்களோடு விவாதிக்க விரும்பவில்லை அம்மணி. அதோ அது அங்குதான் இருக்கிறது. மட்கிக்கொண்டு. உங்களுக்குச் சொன்னதில் பாதிவிலைக்குத் தருகிறேன். இல்லை, உங்களுக்கு வேண்டுமா? எடுத்துக் கொள்ளலாம். எனக்கு அது உபயோகப்படாது, இப்போது யாருக்குமே உபயோகப்படாது. அந்தக் கேக்கைச் செய்வதற்கு எனக்குப் பிடித்த நேரம், செலவு... உங்களுக்கு வேண்டுமென்றாலும் சரி, வேண்டாமென்றாலும் சரி. நான் வேலைக்குத் திரும்ப வேண்டும்" அவன் அவர்களைப் பார்த்து, அவன் நாக்கைப் பற்களுக்குப் பின்னால் மீட்டிக் கொண்டான்.
"இன்னமும் கேக்குகளா" என்றாள். அவளுக்குள் அதிகரித்துக்கொண்டு வந்த விஷயம் தன் கட்டுப் பாட்டுக்குள் இருப்பதை அறிந்திருந்தாள். அவள் நிதானமாக இருந்தாள்.
"அம்மணி, இந்த இடத்தில் நான் ஒரு நாளைக்குப் பதினாறு மணிநேரம் வேலைசெய்கிறேன், பிழைப்பிற்காக," பேக்கர் சொன்னான். அவன் கைகளைத் தனது ஏப்ரனில் துடைத்தான். "வயிற்றைக் கழுவுவதற்காக ராத்திரியும் பகலும் இங்கே வேலைசெய்கிறேன்." ஆனின் முகத்தைக் கடந்து சென்ற ஒரு பார்வை அந்த பேக்கரைப் பின்னுக்கு நகர்த்தியது. "எந்தப் பிரச்சினையும் இப்போது வேண்டாம்" என்றான். அலமாரிக்குச் சென்று மாவுக் கட்டை ஒன்றை எடுத்து, அதனை இடது உள்ளங்கையில் தட்டியபடி, "உங்களுக்கு அந்த கேக் வேண்டுமா, வேண்டாமா? நான் வேலைக்குத் திரும்ப வேண்டும். ரொட்டிக் கடைக்காரர்களுக்கு ராத்திரியில்தான் வேலை இருக்கும்" என்றான். அவன் கண்கள் சிறியனவாக, இரக்கமற்று, கன்னக்கதுப்பின் உப்பலில் இடுங்கிப்போயிருந்ததைக் கவனித்தாள். அவன் கழுத்து கொழுப்பில் தடித்து உருண்டிருந்தது.
"பேக்கர்கள் ராத்திரியில்தான் வேலைசெய்வார் களென்று எனக்குத் தெரியும்" என்றாள் ஆன். "அவர்கள் ராத்திரியில் போன்கால்கள்கூடச் செய்வார்கள். யூ பாஸ்டர்ட்."
மாவுக் கட்டையை உள்ளங்கையில் தொடர்ந்து தட்டியபடி இருந்தான். ஹோவர்டை ஓரக்கண்ணால் பார்த்தான். "ஜாக்கிரதை, ஜாக்கிரதை" என்றான் ஹோவர்டிடம்.
"என் மகன் இறந்துவிட்டான்" உணர்ச்சியற்ற முடிவுத்தன்மையுடன் அவள் கத்தினாள். "திங்கட் கிழமை காலை அவன்மீது ஒரு கார் மோதிவிட்டது. நாங்கள் அவன் எழுந்திருப்பானென்று காத்துக் கொண்டேயிருந்தோம். அவன் செத்துப்போகும் வரை காத்துக்கொண்டேயிருந்தோம். ஆனால் அதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது, இல்லையா? பேக்கர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்க முடியாது, இல்லையா மிஸ்டர் பேக்கர்? ஆனால் அவன் செத்துப் போய்விட்டான். அவன் செத்துப்போய்விட்டான், யூ பாஸ்டர்ட்!" எந்தளவுக்குக் கோபம் அவளுக்குள் திடீரென்று நிரம்பியதோ அந்தளவுக்கு அது வடிந்து, சுருங்கி, வேறோர் உணர்விற்கு இட்டுச் சென்றது. தலைசுற்றிக் கண் இருண்டது. மாவு பரப்பி வைத்திருந்த மரமேஜையில் சாய்ந்து, முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, தோள் முன்னும் பின்னுமாகக் குலுங்க அழத் தொடங்கினாள், "இது நியாமே இல்லை," என்றாள். "இது நியாயமே இல்லை, இல்லை."
ஹோவர்ட் அவள் முதுகில் கைவைத்து அமர்த்தி, அந்த பேக்கரை நோக்கித் திரும்பினான். "ஷேம் ஆன்யு" என்றான். "ஷேம்."
பேக்கர் மாவுக் கட்டையை அலமாரியில் திரும்ப வைத்தான். ஏப்ரனைக் கழற்றி அலமாரியின் மீது வீசினான். அவர்கள் பக்கம் திரும்பினான். தலையை மெதுவாகக் குலுக்கிக்கொண்டான். காகிதங்களும் ரசீதுகளும் ஒரு கூட்டல் இயந்திரமும் ஒரு டெலிபோன் டைரக்டரியும் இருந்த கார்டு டேபிளுக்கடியிலிருந்து ஒரு நாற்காலியை வெளியே இழுத்தான். "தயவுசெய்து உட்காருங்கள்" என்றான். "உங்களுக்கு ஒரு நாற்காலி கொண்டுவருகிறேன்." என்றான் ஹோவர்டிடம். "உட்காருங்கள், ப்ளீஸ்" பேக்கர் உள்ளே கடையின் முன்புறத்திற்குச் சென்று இரண்டு சிறிய தேனிரும்பு நாற்காலிகளோடு வந்தான். "நீங்கள் இருவரும் தயவு செய்து உட்காருங்கள்."
ஆன் கண்களைத் துடைத்துக்கொண்டு பேக்கரை நோக்கினாள். "உன்னைக் கொல்ல வேண்டுமென்று விரும்பினேன்" என்றாள். "நீ சாக வேண்டுமென்று விரும்பினேன்."
அவர்களுக்கு மேஜையில் இருந்தவற்றை ஒதுக்கி இடம் தந்தான். கூட்டல் இயந்திரத்தை நோட்டுப் புத்தகங்கள், ரசீதுகளோடு சேர்த்து ஒரு பக்கமாகத் தள்ளினான். டெலிபோன் டைரக்டரியை ஓரமாக நகர்த்தும்போது அது தரையில் தொப்பென்று விழுந்தது. ஹோவர்டும் ஆனும் நாற்காலிகளில் அமர்ந்து மேஜைவரைக்கும் இழுத்துக்கொண்டார்கள். பேக்கரும் உட்கார்ந்தான்.
முழங்கையை மேஜையில் ஊன்றியபடி, "நான் எந்தளவுக்கு வருத்தப்படுகிறேன் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்" என்றான். "கடவுளுக்குத்தான் தெரியும் நான் எந்தளவுக்கு வருத்தப்படுகிறேன் என்பது. நான் சொல்வதைக் கேளுங்கள். நான் வெறும் ரொட்டிசுடுபவன். வேறு எப்படியும் என்னை நான் கருதிக்கொள்வதில்லை. ஒருவேளை முன்பொரு காலத்தில், பல வருடங்களுக்கு முன்பு, நான் வேறொரு விதமான மனிதனாக இருந்திருக்கலாம். இருந்திருக்கிறேன். எனக்கு ஞாபகமில்லை, நிச்சயமாகச் சொல்லும்படி தெரியவில்லை. அப்போது இருந்தாற்போல இப்போது நிச்சயம் இல்லை. இப்போது நான் வெறும் ரொட்டி சுடுபவன். அதற்காக, நான் செய்தது மன்னிக்கக்கூடியதல்ல, எனக்குத் தெரியும். ஆனால் நான் மனமார வருந்துகிறேன். உங்கள் மகனுக்காக வருந்துகிறேன். இதில் என் பங்கிற்காக வருந்துகிறேன்" என்றான். மேஜை மீது உள்ளங்கைகள் தெரியக் கைகளை விரித்து, "எனக்குக் குழந்தைகள் கிடையாது. எனவே நீங்கள் எப்படி உணருவீர்களென்று என்னால் கற்பனைதான் செய்துகொள்ள முடியும். என்னால் உங்களுக்குச் சொல்ல முடிந்ததெல்லாம் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். உங்களால் இயலுமானால் என்னை மன்னியுங்கள்" என்றான். "நான் மோசமானவன் அல்ல, நான் அப்படிக் கருதவில்லை. நீங்கள் போனில் சொன்னதைப் போல நான் தீயவன் அல்ல. நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டியதெல்லாம், கடைசியில் பார்க்கும்போது என்னால் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று இனியும் தெரியப் போவதில்லை என்றுதான் தோன்றும். ப்ளீஸ்," என்றான். "உங்கள் இதயங்களில் என்னை மன்னிக்க முடியுமா என்று நான் கேட்கலாமா?"
பேக்கரிக்குள்ளே கதகதப்பாக இருந்தது. ஹோவர்ட் மேஜையிலிருந்து எழுந்து அவன் கோட்டைக் கழற்றினான். ஆனின் கோட்டைக் கழற்ற உதவினான். பேக்கர் அவர்களை ஒரு நிமிடம் பார்த்துவிட்டுத் தலையை அசைத்துக்கொண்டே மேஜையிலிருந்து எழுந்தான். அடுப்பிற்குச் சென்று சில ஸ்விட்ச்சுகளை அணைத்தான். கோப்பைகளைத் தேடியெடுத்து எலெக்ட்ரிக் காபி மேக்கரிலிருந்து காபியை ஊற்றினான். ஒரு அட்டைப் பெட்டியில் க்ரீமும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையும் எடுத்து மேஜை மேல் வைத்தான்.
"நீங்கள் ஏதாவது சாப்பிடலாம்" என்றான். "எனது ஹாட்ரோல்களில் கொஞ்சம் சாப்பிடுவீர்களென்று நம்புகிறேன். நீங்கள் சாப்பிட வேண்டும். இனி ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும். சாப்பிடுவது என்பது இதைப் போன்ற சமயங்களில் ஒரு சின்ன, நல்ல விஷயம்."
அடுப்பிலிருந்து சூடான லவங்க ரோல்களை எடுத்துவந்து அவர்களுக்குப் பரிமாறினான். ஐஸிங்குகள் இன்னமும் திரவமாக வழிந்துகொண்டிருந்தன. மேஜை மேல் வெண்ணெயையும் அதைப் பரப்பக் கத்திகளையும் எடுத்துவைத்தான். அவர்களோடு சேர்ந்து அவனும் மேஜைக்கு முன்னால் அமர்ந்தான். காத்திருந்தான். அவர்களிருவரும் ஆளுக்கொரு ரோலைத் தட்டிலிருந்து எடுத்துச் சாப்பிடத் தொடங்கும்வரை காத்திருந்தான். "எதையாவது சாப்பிடுவது நல்லது" அவர்களைக் கவனித்தபடியே பேசினான். "இன்னமும் எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிடுங்கள். எவ்வளவு பிடிக்குமோ சாப்பிடுங்கள். உலகத்தின் எல்லா ரோல்களும் இங்கே இருக்கின்றன."
அவர்கள் ரோல்களைச் சாப்பிட்டுக் காபி அருந்தினார்கள். ஆனுக்குத் திடீரென்று பசியாக இருந்தது. ரோல்கள் சூடாகவும் சுவையாகவும் இருந்தன. அவளே மூன்று ரோல்கள் சாப்பிட்டாள். அது அந்த பேக்கரை சந்தோஷப்படுத்தியது. பின்பு அவன் பேசத் தொடங்கினான். அவர்கள் கவனமாகக் கேட்டார்கள். அவர்கள் களைப்பிலும் துயரத்திலும் இருந்தாலும் அந்த பேக்கர் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்டார்கள். தனிமையைப் பற்றியும் அவனது நடுத்தர வருடங்களில் அவனிடம் வந்து சேர்ந்து விட்ட சந்தேக உணர்ச்சிகளையும் வரம்பு வரையறைகளைப் பற்றியும் அவன் பேசத் தொடங்கியபோது அவர்கள் தலையசைத்துக் கேட்டுக்கொண்டார்கள். இத்தனை வருடங்களாகக் குழந்தையற்றிருப்பது எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று அவர்களிடம் சொன்னான். அடுப்புகளுடன் நாட்களை முடிவின்றி நிறைந்தும் முடிவின்றி வெறுமையாகவும் திரும்பத் திரும்ப வாழ்ந்துவருவது. அவன் உழைத்துத் தயாரித்தவிருந்து உணவுகள், கொண்டாட்டங்கள். விரல் புதையுமளவிற்கு ஐஸிங் அலங்காரங்கள். கேக்குகளில் புதைத்து வைத்த குட்டியான திருமண ஜோடிகள். நூற்றுக்கணக்கில் - அல்ல - இதுவரை ஆயிரக்கணக்கில். பிறந்த நாட்கள். அந்த மெழுகுவர்த்திகள் எல்லாம் எரிந்துகொண்டிருப்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். அத்தியாவசியமான ஒரு தொழில் அவனுடையது. அவன் ஒரு ரொட்டி சுடுபவன். அவன் ஒரு மலர்ப் பண்ணையாளனாக இல்லாமலிருந்தது அவனுக்குச் சந்தோஷம். மனிதருக்கு உணவிடுவது அதைவிடச் சிறப்பானது. இதன் வாசனை மலர்களின் வாசனையைவிட எப்போதுமே மேலானது.
"இதை முகர்ந்து பாருங்கள்" ஒரு கருப்பு ரொட்டியைப் பிரித்துக் காட்டினான். "இது ஒரு கனமான ரொட்டி. ஆனால் சத்து மிகுந்தது." அவர்கள் அதை முகர்ந்து பார்த்தர்கள். பின் அதை அவர்களுக்குச் சுவைத்துப் பார்க்கக் கொடுத்தான். வெல்லப்பாகும் முழுப் பருப்புகளும் சேர்ந்த சுவையைக் கொண்டது அது. அவர்கள் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களால் முடியும்வரை சாப்பிட்டார்கள். அந்தக் கருப்பு ரொட்டியை மென்று விழுங்கினார்கள். விளக்கின் மிளிர்வில் பகல் வெளிச்சம் போலிருந்தது. சன்னல்களில் வெளிறிய வெளிச்சம் படர, காலை விடியும் வரை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிளம்புவதைப் பற்றி அவர்களுக்குத் தோன்றவேயில்லை.
****
நன்றி: காலச்சுவடு - இதழ் 106, அக்டோபர் 2008
flow1

கருத்துகள் இல்லை: