17 ஜூலை, 2011

உனக்கு விருப்பமென்றால் என்னை அழை - ரேமண்ட் கார்வர் தமிழில்: சுகுமாரன்.

Raymond Carver,
இந்த மொழிபெயர்ப்பு முதல் முறையாக உலக இலக்கியம் தளத்தில் வலையேறுகிறது. கவிஞர் சுகுமாரனுக்கு நன்றி.
அந்த வசந்தகாலத்தில் நாங்கள் இருவருமே வேறுவேறு நபர்களிடம் ஈடுபாடு கொண்டிருந்தோம்.ஆனால் கோடைக்காலத்தில், ஜூன்மாதம் வந்து பள்ளிக்கூடமும் மூடிய பிறகு எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு பாலோ ஆல்டோவிலிருந்து,  காலிஃபோர்னியாவின் வடக்குக் கடற்கரை கிராமப்பகுதிக்குச் செல்வதாக முடிவு செய்திருந்தோம். எங்கள் மகன் ரிச்சர்ட் வாஷிங்டன் பாஸ்கோவிலிருக்கும் நான்ஸியின் பாட்டி வீட்டுக்குப் போனான். இலையுதிர்காலத்தில் கல்லூரியில் சேரப் பணம் சேர்ப்பதற்காக கோடைக்காலம் முழுவதும் அவன் அங்கே வசிக்க வேண்டும். பாட்டிக்கு வீட்டுச் சூழ்நிலை தெரியும். அதனால் அவன் அங்கே போய்ச்சேர்வதற்கு வெகு முன்பே விசாரித்து ஒருவேலையைக் கண்டுபிடித்து வைத்திருந்தாள். அவளுடைய குடியானவ நண்பர் ஒருவரிடம் பேசி ரிச்சர்டுக்காக களமடிப்பதும் வேலியடைப்பதுமான வேலைக்கு உறுதியும் பெற்றிருந்தாள். கடினமான வேலைதான். ஆனால் ரிச்சர்ட் அதற்குத் தயாராகவே இருந்தான். உயர்நிலைப் பள்ளியின் கடைசி தினத்துக்கு மறுநாள் காலை பஸ்ஸில் புறப்பட்டான்.நான்தான் அவனை பேருந்து நிலையத்துக்கு அழைத்துப் போனேன். காரை நிறுத்திவிட்டு உள்ளேபோய் பஸ் வருகிறவரை அவனுடன் உட்கார்ந்திருந்தேன். அவனுடைய அம்மா ஏற்கனவே கட்டித் தழுவி அழுது முத்தமிட்டு அவனை வழியனுப்பிவைத்திருந்தாள்.போய்ச் சேர்ந்ததும் பாட்டியிடம் கொடுப்பதற்காக ஒரு நீண்ட கடிதத்தையும் அவனிடம் தந்திருந்தாள்.அவள் இப்போது வீட்டில் எங்கள் பயணத்துக்கான கடைசி நேரப் பேக்கிங்குகளை முடித்துக்கொண்டும் எங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளவிருக்கும் தம்பதிகளுக்காகக் காத்துக்கொண்டுமிருக்கிறாள். பயணச் சீட்டை வாங்கி ரிச்சர்டிடம் கொடுத்தேன். பேருந்து நிலையத்தில் போட்டிருந்த பெஞ்சுகள் ஒன்றில் உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்தோம். நிலையத்துக்கு வரும் வழியில் நாங்கள் குறைவாகவே பேசியிருந்தோம்.
‘'நீங்களும் அம்மாவும் விவாகரத்துச்செய்துகொள்ளப் போகிறீர்களா?''என்று கேட்டான்.

சனிக்கிழமை காலை. அங்கே கார்களும் அதிகமில்லை.
”எங்களால் ஒத்துப்போக முடியுமென்றால் அதற்கு அவசியமிருக்காது. எங்களுக்கும் அதில் விருப்பம் கிடையாது. அதனால்தான் கோடைக்காலம் முழுக்க யாரையும் பார்க்காமலிருப்பதற்காக இங்கேயிருந்து புறப்படுகிறோம். நமது வீட்டை கோடைக்கால வாடகைக்கு விட்டிருக்கிறோம். அர்க்கடாவில் வேறு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். நீயும் வெளியே போகிறாய் இல்லையா? அதுவும் ஒரு காரணந்தான். நீ பாக்கெட் நிறைய பணத்துடன் வீட்டுக்குத் திரும்பி வருவாய் என்பதற்காக அல்ல. விவாகரத்துப் பெறுவதில் எங்களுக்கும் விருப்பமில்லை. கோடைக்காலம் முழுவதும் தனியாக இருந்து பிரச்சனைகளை சரி செய்யப் பார்க்கிறோம்''
‘'நீங்கள் இன்னும் அம்மாவை நேசிக்கிறீர்களா? அவள் உங்களை நேசிப்பதாக என்னிடம் சொன்னாள்”
‘'நிச்சயமாக நேசிக்கிறேன்.இதற்குள் உனக்கும் அதுதெரிந்திருக்குமே. எல்லாரையும்போல எங்களுக்கும் சில சிக்கல்களும் பெரும் பொறுப்புகளும் வந்து விட்டன. தனியாக இருந்து பிரச்சனைகளை சரி செய்துகொள்ள எங்களுக்கு இப்போது அவகாசம் தேவையாக இருக்கிறது.ஆனால் நீ எங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நீ அங்கேபோய் கோடைக்காலத்தை நல்லபடியாகக் கழி,பாடுபட்டுக் காசைச் சேர்த்துக்கொள். இதை ஒரு விடுமுறையாக எடுத்துக்கொள். மீன்பிடிக்கக் கற்றுக்கொள்.அங்கே மீன்பிடிப்பு நிறைய நடக்கும்''
‘'நீர்ச் சருக்கும் கூட.நான் நீர்ச் சருக்கும் கற்றுக்கொள்ளப் போகிறேன்''
‘'நான் நீர்ச் சருக்கு விளையாடியதில்லை. எனக்காகவும் சேர்த்து விளையாடு.என்ன செய்வாய்தானே?''
பேருந்துநிலையத்தில் உட்கார்ந்திருந்தோம்.அவன் தன்னுடைய இயர்புக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் என் மடியில் கிடந்த செய்தித்தாளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.அவனுடைய பேருந்துக்கான அழைப்பு வந்தது.எழுந்து நின்றோம். அவனைக் கட்டிக்கொண்டேன் ‘'கவலைப்படாதே, கவலைப்படாதே.எங்கே உன்னுடைய டிக்கெட்?''
அவன் தன்னுடைய கோட்டுப்பாக்கெட்டைத் தட்டிக் காண்பித்துவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டான். பஸ் புறப்படும் இடம்வரை அவனுடன் நடந்தேன்.அவனை மறுபடியும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பினேன்.
‘'குட்பை டாட்'' என்றவன் கண்ணீரை நான் பார்க்காமலிருக்க திரும்பிக்கொண்டான்.
வீட்டுக்குத் திரும்ப காரோட்டி வந்தேன்.எங்களுடைய பெட்டிகளும் சூட்கேஸுகளும் கூடத்தில் காத்திருந்தன.எங்கள் வீட்டை கோடைக்கால வாடகைக்கு எடுத்திருந்த இளந்தம்பதிகளுடன் நான்ஸி சமையல் அறையில் காப்பி அருந்திக்கொண்டிருந்தாள். கணிதப் பட்டப் படிப்பு மாணவர்களான ஜெர்ரியையும் லிஸ்ஸையும் சில நாட்களுக்கு முன்பே சந்தித்திருந்தேன்.இப்போது மறுபடியும் கைகுலுக்கிவிட்டு நான்ஸி ஊற்றிக்கொடுத்த
காப்பியைக் குடித்துக்கொண்டிருந்தேன்.நாங்கள் மேஜையைச் சுற்றி உட்கார்ந்து காப்பி அருந்திக்கொண்டிருக்க நான்ஸி அவர்கள் செய்யவேண்டிய காரியங்களின் பட்டியலைப் பூர்த்தி செய்துகொண்டிருந்தாள்.அவர்கள் கவனிக்கவேண்டியவை எவை,மாதத்தில் சில சமயங்கள் செய்யவேண்டியவை எவை, மாத ஆரம்பத்திலும் முடிவிலும் செய்யவேண்டியவை எவை என்பதையும் தபால் வந்தால் அனுப்பவேண்டிய முகவரி எது என்பதையும் பற்றிய பட்டியல்கள்.நான்ஸியின் முகம் இறுகியிருந்தது.காலைநேரம் தாண்டியிருந்ததால் வெயில் திரையைக் கடந்து வந்து மேஜைமீது விழுந்திருந்தது.
கடைசியாக காரியங்கள் எல்லாம் ஓர் ஒழுங்குக்கு வந்ததுபோலத் தென்பட்டதும் அவர்கள் மூன்றுபேரையும் சமையல் அறையிலேயே விட்டுவிட்டு காரில் சாமன்களை ஏற்றத் தொடங்கினேன்.நாங்கள் குடியேறவிருந்த வீடு முழுமையாகப் ஃபர்னிஷ் செய்யப்பட்டது. சாப்பாட்டுத் தட்டு முதல் சமையல் பாத்திரங்கள்வரை இருக்கின்றன.எனவே இந்த வீட்டிலிருந்து அத்தியாவசியமானவற்றைத் தவிர அதிக சாமான்களைக் கொண்டுபோகத் தேவையில்லை.
காலிஃஃர்னியாவின் வடக்குக் கடற்கரையில் பாலோ ஆல்டாவுக்கு முந்நூற்றி ஐம்பதுமைல்கள் வடக்கேயிருக்கும் யூரேகாவுக்கு மூன்றுவாரங்களுக்கு முன்பேபோய் எல்லா வசதிகளுமுள்ள வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தேன்.நான் இப்போது தொடர்பு வைத்திருக்கும் சூஸனுடன் போயிருந்தேன். நகரத்தின் எல்லையிலிருந்த மோட்டலில் மூன்று இரவுகள் தங்கியிருந்தோம். நாளிதழ்களில் துளாவியும் ரியல் எஸ்டேட் ஏஜண்டுகளைச்
சந்தித்தும் இந்த வீட்டைக் கண்டுபிடித்திருந்தேன். மூன்றுமாத வாடகைக்கான காசோலையை நான் எழுதும்போது அவள் என்னையே கவனித்துக் கொண்டிருந்தாள். மோட்டலுக்குத் திரும்பிய பிறகு, கையை நெற்றிமேல் வைத்தபடி படுக்கையில் படுத்துக்கிடந்த சூஸன் சொன்னாள்: ''எனக்கு உங்கள் மனைவி நான்ஸிமேல் பொறாமையாக இருக்கிறது. ‘இன்னொருத்தி'யைப் பற்றி ஆட்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். சட்டபூர்வமான மனைவிக்குத் தான் உரிமைகளும் நிஜமான அதிகாரங்களும் இருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த விஷயங்களைப் பற்றி நான் இதற்கு முன்பு புரிந்து கொண்டிருக்கவில்லை. அக்கறை காட்டியதும் இல்லை. இப்போது நானே அதைப் பார்க்கிறேன்.அவள்மேல் பொறாமையாக இருக்கிறது எனக்கு.இந்த வீட்டில் இந்தக் கோடைக்காலத்தில் அவள் உங்களோடு வாழப்போகிற வாழ்க்கைபற்றி பொறாமையாக இருக்கிறது. அது நானாக இருக்கக்கூடாதா என்று ஆசைப்படத் தோன்றுகிறது. நாமாக இருக்கக்கூடாதா என்று ஆசைப்படத் தோன்றுகிறது.ஹூம்.நாமாக இருந்தால்... எனக்கு ஏக்கமாக இருக்கிறது'' நான் அவள் கூந்தலைக் கோதிவிட்டேன்.
நான்ஸி உயரமானவள். நீண்ட மெலிந்த கால்களும் பழுப்பு நிறக் கூந்தலும் கண்களும் கொண்டவள்.பெருந்தன்மையான உற்சாகமும் கொண்டவள். ஆனால் பிற்பாடு பெருந்தன்மையும் உற்சாகமும் எங்களிடையே குறைந்து வந்திருந்தன. அவள் பார்த்துவைத்திருந்த நபர் என்னுடைய சக ஊழியர்களில் ஒருவன்தான்.மிடுக்கானவன்.கோட் சூட் டை அணிபவன். தலை நரைத்தவன். அதிகமாகக் குடிப்பவன். வகுப்பறையிலேயே சிலசமயம் அவனுடைய கைகள் உதறிக்கொள்ளும் என்று என்னுடைய மாணவர்களில் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.நான்ஸி என்னுடைய உறவைக் கண்டு பிடித்து அதிக நாட்களாவதற்குள் விடுமுறைக் காலத்தில் ஒரு விருந்தின்போது அவனுக்கும் அவளுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவை எல்லாம் இப்போது சலிப்பாகவும் விரசமாகவும் தோன்றுகிறது. சலிப்பும் விரசமும் தான். அந்த வசந்த காலத்தில் அது என்னவோ அப்படியாகத்தான் இருந்தது. எங்களுடைய சக்தி எல்லாவற்றையும் முழுமையாக உறிஞ்சியிருந்தது. வேறு விஷயங்களின் மீதான கவனத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டிருந்தது. ஏப்ரல் மாத இறுதியில் எங்கள் வீட்டை வாடகைக்குக் விட்டுவிட்டு கோடைக்காலத்தைக் கழிப்பதற்காக நாங்கள் இருவர் மட்டுமாக எங்காவது தூரமாகப் போயிருந்து காரியங்களை பழையது போல ஒன்றுபடுத்த முடியுமா? - ஒன்றுபடுத்த முடியுமானால் - என்று பார்ப்பதாக முடிவு செய்திருந்தோம்.மற்றவர்களை அழைக்கவோ கடிதம் எழுதவோ வேறு வகையில் தொடர்புகொள்வதோ இல்லையென்று நாங்கள் பரஸ்பரம் ஒப்புக்கொண்டிருந்தோம்.எனவே ரிச்சர்டுக்கான ஏற்பாடுகளைச் செய்தோம். வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் தம்பதியரைக் கண்டுபிடித்திருந்தோம். நான் வரைபடத்தை வைத்துக்கொண்டு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து வடக்கே யூரேகாவுக்குக் காரில் சென்று சகல வசதிகளும் கொண்ட வீட்டை கெளரவமான வயோதிகத் தம்பதிகளுக்கு மட்டும் கோடை வாடகைக்கு விடத் தயாராக இருந்த ஏஜெண்டைச் சந்தித்து வீட்டைப் பெற்றேன். அதற்காக அந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் இரண்டாவது தேனிலவு - கடவுள் என்னை மன்னிப்பாராக - என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தினேன் என்றும் நினைக்கிறேன்.
அப்போது சூஸன் காருக்கு வெளியில் சிகரெட்டைப் புகைத்தபடி சுற்றுலாக் கையேடுகளை வாசித்துக் கொண்டிருந்தாள்.
சூட்கேஸுகளையும் பைகளையும் அட்டைப்பெட்டிகளையும் காரின் பின்பக்கத்திலும் பின்னிருக்கையிலும் அடுக்கிவைத்துவிட்டு நான்ஸி அவர்களிடமிருந்து இறுதியாக விடைபெற்று வராந்தாவிலிருந்து வரக்காத்திருந்தேன் அவர்கள் இருவரிடமும் கைகுலுக்கிவிட்டு காரை நோக்கி திரும்பினாள் நான்ஸி. நான் அவர்களுக்குக் கையசைக்க பதிலுக்கு அவர்களும் கையசைத்தார்கள். நான்ஸி காரில் ஏறி கதவைச் சாத்தினாள். ''போகலாம்'' என்றாள்.காரைக் கிளப்பினேன்.நெடுஞ்சாலையை நோக்கி முன்னேறினோம்.சாலையில் ஏறுவதற்கு முன்பாக வெளிச்சத்தில் எங்களை முந்திக்கொண்டு ஒரு கார் மப்ளர் உடைந்து தீப்பொறிகள் பறக்க ஓடுபாதையிலிருந்து விலகி வருவதைப் பார்த்தோம்.”அதை பாருங்கள், தீப்பிடித்து எரியப் போகிறது”என்று கத்தினாள் நான்ஸி.அந்தக் கார் சமாளித்துக்குகொண்டு சாலையில் ஏறும்வரை காத்திருந்து பார்த்தோம்.
செபஸ்டோபோலுக்கு அருகில் நெடுஞ்சாலையிலிருந்து விலகியிருந்த சிறிய உணவகத்தில் நிறுத்தினோம். 'ஈட் அண்ட் கேஸ்' (Eat & GAS) என்றது பெயர்ப்பலகை. அதைப் பார்த்து சிரித்துவிட்டோம். உணவகத்தின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து பின்பக்கமாக ஜன்னலுக்கு அருகிலிருந்த மேஜையில் உட்கார்ந்தோம். காப்பிக்கும் சாண்ட்விச்சுகளுக்கும் ஆர்டர் சொன்னோம். நான்ஸி மேஜைப்பலகையின் வரிகளில் அவளுடைய சுட்டுவிரலை ஓடவிட்டுக்கொண்டிருந்தாள்.நான் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே பார்த்தேன். ஜன்னலுக்கு அருகில் புதரில் வேகமான அசைவைக் கவனித்துக் கொண்டிருந்தபோதே ஒரு பாட்டுக் குருவியைப் பார்த்துக் கொண்டிருந்ததையும் உணர்ந்தேன்.சிறகுகள் படபடத்துத் துடிக்க புதருக்குள்ளேயிருக்கும் பூவில் அது அலகை நுழைத்துக்கொண்டிருந்தது.
''நான்ஸி, அங்கே பார், ஒரு ஹம்மிங்க் பேர்டு''
ஆனால் நான்ஸி பார்க்கவிருந்த நொடியில் பறவை பறந்துபோனது. நான்ஸி சுற்றிலும் பார்த்துவிட்டு ''எங்கே? எனக்கு எதுவும் தென்படவில்லையே...'' என்றாள்.
''ஒரு நிமிஷத்துக்கு முன்னால்வரைக்கும் அங்கேதான் இருந்தது. இதோ பார் இன்னொன்று,இது வேறு'' என்றேன்.
பணிப்பெண் எங்கள் ஆர்டரைக் கொண்டுவரும்வரை நாங்கள் அதையே பார்த்துக்கொண்டிருந்தோம்.அவள் வந்த கணத்தில் பறவை பறந்து கட்டிடத்தின் சுற்றுப் புறத்தில் மறைந்தது.
''நல்ல சகுனம் என்று நினைக்கிறேன்.ஹம்மிங்க் பேர்ட்ஸ். ஹம்மிங்க் பேர்ட்ஸ் அதிருஷ்டத்தைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறவை'' என்றேன்.
''நானும் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கே கேள்விப்பட்டேன் என்று ஞாபகமில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். நமக்குத் தேவைப் படுவதும் அதிருஷ்டம்தானே? என்ன சொல்கிறீர்கள்?''

”அவை நல்ல சகுனம்தான்.காரை இங்கே நிறுத்தியதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்'' என்றேன்.
அவள் தலையசைத்தாள். ஒரு நிமிடம் பொறுத்து சாண்ட்விச்சை ஒரு கடி கடித்து விழுங்கினாள்.
****************
இருட்டுவதற்கு முன்பே யுரேகாவுக்குப் போய்ச்சேர்ந்தோம். சில வாரங்களுக்கு முன்பு சூஸனும் நானும் மூன்று இரவுகளைக் கழித்த மோட்டல் இருக்கும் நெடுஞ்சாலையைக் கடந்து திரும்பி நகரத்துக்கு நேர்முகமாக நிற்கும் குன்றுக்குப் போகும் சாலையைப் பிடித்தோம். வீட்டுச் சாவி என் சட்டைப்பையில் இருந்தது.குன்றின்மேல் ஒன்றிரண்டு மைல் தூரம் பணிமனையும் பலசரக்குக் கடையும் இருக்கும் நாற்சந்தியை அடையும்வரை வண்டியைச் செலுத்தினேன்.எங்களுக்கு முன்னால் பள்ளத்தாக்கில் மரங்களடர்ந்த மலைமடிப்புகள். சுற்றிலும் பரந்துகிடக்கும் மேய்ச்சல் நிலம். பணிமனைக்குப் பின்னால் நிலத்தில் மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. ''அழகான கிராமம்.எனக்கு வீட்டைப் பார்க்க ஆசையாக இருக்கிறது'' என்றாள் நான்ஸி.
''கிட்டத்தட்ட இங்கேதான். இந்த ரோட்டின் இறக்கத்தில் அந்த மேட்டைத் தாண்டியதும்'' என்றேன்.
''இங்கே'' என்று சொன்ன நிமிஷத்தில் இரண்டு ஓரங்களிலும் வேலிப்புதர்கள் அடர்ந்த நீண்ட ஓடுபாதையில் காரைத் திருப்பினேன்.''இதோ, இங்கே தான்.உனக்கு என்ன தோன்றுகிறது?'' என்று நானும் சூஸனும் இதே ஓடுவழியில் நின்றபோது அவளிடம் கேட்ட அதே கேள்வியை நான்ஸியிடமும் கேட்டேன்.
''அருமை. அற்புதமாக இருக்கிறது நாம் இறங்கலாம்''
அந்த முற்றத்தில் ஒரு நிமிஷம் நின்றோம். சுற்றிலும் பார்த்தோம். பின்னர் வராந்தா படிகளேறினோம்.வாசல் கதவைத் திறந்து விளக்குகளைப் போட்டேன். வீட்டுக்குள்ளே நுழைந்தோம். இரண்டு சிறிய படுக்கையறைகள். குளியலறை. பழைய இருக்கைகளுடன் வசிப்பறை. கணப்பு. பள்ளத்தாக்கைப் பார்க்கும்விதமாக பெரிய சமையலறை. எல்லாமிருந்தன.
''உனக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று கேட்டேன்.
''அற்புதமாகத் தோன்றுகிறது.நீங்கள் இதைக் கண்டுபிடித்ததில் எனக்கு சந்தோஷம். நாம் இங்கே இருக்கிறோம் என்பதில் சந்தோஷம்'' என்றாள் நான்ஸி.
குளிர்பதனப்பெட்டியைத் திறந்து அதன் மீது விரலை ஓடவிட்டாள். ''கடவுளே நன்றி. இது சுத்தமாக இருக்கிறது. நான் எதையும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமேயில்லை.''
''படுக்கை விரிப்புகள் கூட சுத்தமாக இருக்கின்றன.நான் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன்.அவர்கள் இப்படித்தான் வாடகைக்கு விடுவார்களாம். நேர்த்தியான தலையணைகள். தலையணை உறைகள் கூட நேர்த்தியானவை''
''நாம் கொஞ்சம் விறகு வாங்கி வைக்கவேண்டும்.'' என்றாள். நாங்கள் வசிப்பறையில் நின்றுகொண்டிருந்தோம். ''இது மாதிரியான இரவுகளில் நமக்கு கணப்பு அவசியம்''
''நாளைக்கு விறகு வாங்கப் பார்க்கிறேன்.அப்படியே நாம் ஷாப்பிங் போகலாம். நகரத்தையும் பார்க்கலாம்''
அவள் என்னை ஏறிட்டுப் பார்த்தாள் ''நாம் இங்கே இருக்கிறோம் என்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது'' என்றாள்.
''எனக்கும் தான்'' என்றேன்.என் கைகளை விரித்தேன்.அவள் என்னை நெருங்கினாள். அவளைத் தழுவிக்கொண்டேன்.அவளுடைய நடுக்கத்தை என்னால் உணரமுடிந்தது. அவளுடைய முகத்தை உயர்த்தி இரு கன்னங்களிலும் முத்தமிட்டேன். ''நான்ஸீ'' என்றேன்.
''நாம் இங்கே இருக்கிறோம் என்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது'' என்றாள் அவள்.
********************
sukumaran-1 அடுத்த சில நாட்களை வீட்டை ஒழுங்குபடுத்துவதில் செலவிட்டோம்.சுற்றிப் பார்ப்பதற்காகவும் கடைகளை வேடிக்கை பார்ப்பதற்காகவும் யூரேகாவுக்குப் போனோம். வீட்டுக்குப் பின்னாலிருக்கும் புல்வெளியைத் தாண்டிக் காட்டுக்குப் போகும் வழிகளில் அலைந்தோம்.மளிகைச் சாமான்கள் வாங்கினோம்.செய்தித்தாளில் விறகு கிடைக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவர்களை அழைத்தேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு நீளமாக முடி வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் லாரி நிறைய பூவரசமர விறகுகளைக் கொண்டுவந்து கார் நிறுத்துமிடத்தில் அடுக்கிவிட்டுப் போனார்கள். அன்றிரவு உணவருந்திய பிறகு கணப்புக்கு முன்னால் உட்கார்ந்து காப்பி குடித்துக்கொண்டே நாய் வாங்குவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
”குட்டி வேண்டாம். நாம்தான் எப்போதும் எதையாவது சுத்தம் செய்துகொண்டேயிருக்க வேண்டிவரும். இல்லையென்றால் அது எதையாவது கடித்து மென்று கொண்டிருக்கும். நமக்கு அது வேண்டாம். ஆனால் ஒரு நாய் வேண்டும்தான். நாம் நீண்டகாலமாக நாய் வளர்க்கவே இல்லை. இங்கே ஒரு நாயை வைத்துப் பராமரிக்க முடியுமென்று தோன்றுகிறது'' என்றாள் நான்ஸி.
''கோடைக்காலம் முடிந்த பிறகு? நாம் இங்கேயிருந்து போன பிறகு?'' என்று கேட்டேன்.அந்தக் கேள்வியை மாற்றிக் கொண்டேன்.''நகரத்திலும் நாயை வளர்க்கலாமே?''
”பார்ப்போம்.அதற்குள் நாயைத் தேடிப்பார்க்கலாம்.நல்ல ரகமானதாக இருக்கவேண்டும்.அதை பார்க்கும்வரை என்ன ரகம் வேண்டுமென்று எனக்கே தெரியாது. வரி விளம்பரங்களைப் பார்க்கலாம். வேண்டிவந்தால் விலங்குக் காப்பகத்துக்குப் போய்ப்பார்க்கலாம். ''நாள் கணக்காக நாங்கள் நாய்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தும் வீடுகளைக் கடந்துபோகும் போதெல்லாம் அங்கிருக்கும் நாய்களைச் சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருந்தும் நாங்கள் விரும்பிய மாதிரியான நாய் கிடைக்கவில்லை. நாங்கள் நாயை வாங்கவில்லை.
நான்ஸி அவள் தாயை அழைத்து எங்கள் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தாள்.ரிச்சர்ட் வேலைக்குப் போகிறான் என்றும் மகிழ்ச்சியாகத்தான் தெரிகிறான் என்றும் அவள் அம்மா சொன்னாள். அவளும் நன்றாக இருக்கிறாளாம். ''நாங்களும் நன்றாக இருக்கிறோம். இது ஒரு நல்ல மருந்து'' என்று நான்ஸி சொல்வதையும் கேட்டேன்.
ஜூலைமாத மத்தியில் ஒருநாள் கடலுக்கு அருகிலிருந்த நெடுஞ்சாலையில் வண்டியில் போய்க்கொண்டிருந்தோம்.ஒரு மேடு ஏறியதும் மணல் திட்டுகளால் கடலிலிருந்து பிரிந்த கடற்கழிகள் தென்பட்டன. கரையிலிருந்தபடியே சிலர் மீன்பிடித்துக்கொண்டிருந்தார்கள். நீரில் இரண்டு படகுகளும் இருந்தன.
காரை சாலையைவிட்டு விலக்கி ஓரமாக நிறுத்தினேன்.”என்ன மீனைப் பிடிக்கிறார்களென்று பார்க்கலாம்”என்றேன்.”நாமே சில மீன்பிடிப்புக் கருவிகளை வாங்கலாம்”'
”கொஞ்ச காலமாக நாம் மீன்பிடிக்கப் போகவேயில்லை”என்று பெருமூச்சுவிட்டாள் நான்ஸி.
''ரிச்சர்ட் சின்னவனாக இருக்கும்போது மவுண்ட் ஷாஸ்டாவுக்கு அருகில் தங்கியிருந்தோம்.உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?''
''ஞாபகமிருக்கிறது.மீன்பிடிப்பதை விட்டுவிட்டதைப் பற்றி இப்போதுதான் யோசித்துக்கொண்டிருந்தேன். இறங்கிப்போய் என்ன மீன்பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்''
விசாரித்தபோது 'ட்ரௌட்' என்றான் அந்த ஆசாமி.சதிகார வானவில் 'ட்ரௌட்கள்'.கொஞ்சம் ஸ்டீல் ஹெட்மீன்களும் கோரை மீன்களும் கூட இருக்கின்றன.குளிர்காலத்தில் மணற்திட்டுகள் திறந்து கிடக்கும்போது வரும்.கோடைக் காலத்தில் திட்டுகள் தூர்ந்துபோகிறபோது இவையும் அகப்பட்டுக்கொள்கின்றன.இவற்றுக்கு வருடத்தில் நல்ல பருவம் இதுதான்.இன்றைக்கு நான் எதையும் பிடிக்கவில்லை.ஆனால் போன ஞாயிற்றுக்கிழமை நான்கு மீன்கள் பிடித்தேன். ஒவ்வொன்றும் ஒன்றே காலடி நீளம். உலகத்திலேயே சாப்பிட ருசியான மீன்கள். பிடிப்பதற்குள் போராட்டம் செய்துவிடும். படகிலிருப்பவர்கள் இன்று எதையாவது பிடித்திருப்பார்கள். ஆனால் எனக்குத்தான் இதுவரைக்கும் எதுவும் சிக்கவில்லை''
''தூண்டிலில் எதை இரையாக வைப்பீர்கள்?'' என்று கேட்டாள் நான்ஸி.
''எதை வேண்டுமானாலும்.புழுக்கள்,கோரை மீன்முட்டைகள்,முழுசான சோளம்.எதையாவது மாட்டித் தூண்டிலை ஆழத்தில் வீசிவிட்டுக் காத்திருக்கவேண்டும். தூண்டிலைத் தளர்வாக விட்டு கயிற்றின் மேல்கவனமாக இருக்கவேண்டும்''
நாங்கள் கொஞ்சம் அதிகமான நேரம் அங்கேயே சுற்றியிருந்தோம். அந்த ஆசாமி மீன்பிடிப்பதையும் கழிமுகத்தில் படகுகள் முன்னும்பின்னுமாக ததும்புவதையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.
''நன்றி.குட்லக்'' என்று அவனை வாழ்த்தினேன்.
''உங்களுக்கும்...உங்கள் இருவருக்கும் குட்லக்''
நகரத்துக்குத் திரும்பும் வழியில் விளையாட்டுக் கருவிகள் விற்கும் கடையில் வண்டியை நிறுத்தி லைசென்ஸ்கள் விலை அதிகமில்லாத தூண்டிற்கோல்கள், கப்பிகள்,நைலான் கயிறு,கொக்கிகள்,இரைகள்,மீன்பிடி கூடை எல்லாவற்றையும் வாங்கினோம்.மறுநாள் காலை மீன்பிடிக்கப் போகவேண்டுமென்று திட்டமிட்டோம்.
ஆனால் அன்று இரவு உணவருந்தி முடித்து பாத்திரங்களைச் சுத்தம் செய்துவிட்டு கணப்பில் நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தபோது தலையைப் பலமாகக் குலுக்கியபடி இது நடக்கப்போவதில்லை என்றாள் நான்ஸி.
''நீ ஏன் அதைச் சொல்கிறாய்? என்னதான் சொல்கிறாய்?''
”இது சரிவராது என்பதைத்தான் சொன்னேன். நாம் அதைச் சமாளிக்கவேண்டும்”' மறுபடியும் தலையைக் குலுக்கிக்கொண்டாள் அவள்.
''நாளைக் காலை மீன்பிடிக்கப்போக எனக்கு விருப்பமில்லை. நாய் வளர்க்க விருப்பமில்லை. நாயும் வேண்டாம். என் அம்மாவையும் ரிச்சர்டையும் தனியாகப்போய்ப் பார்க்கவேண்டும்.தனியாக...தனியாக இருக்க விரும்புகிறேன். ரிச்சர்டை விட்டுவிட்டு இருக்கமுடியவில்லை. ரிச்சர்ட் என் பையன்...என் குழந்தை... வளர்ந்ததும் என்னைவிட்டு போய்விட்டான்...அவனை விட்டுவிட்டு இருக்கமுடியவில்லை'' என்று அழுது புலம்பத் தொடங்கினாள்.
”அப்புறம் தெல்...தெல் ஷ்ரீடரைக் கூட விட்டுவிட்டு உன்னால் இருக்கமுடியவில்லை இல்லையா? உன்னுடைய பாய் பிரண்ட்...அவனை விட்டு விட்டும் இருக்கமுடியவில்லை?'' என்றேன்.
”இந்த இரவு எல்லாரையும் பிரிந்திருக்கிறேன்.உங்களைக் கூட இழந்திருக்கிறேன்.வெகுகாலத்துக்கு முன்னாலேயே உங்களை இழந்திருக்கிறேன். உங்களை மிக அதிகமாக இழந்து நீங்கள் எப்படியோ காணாமல் போய்விட்டீர்கள். அதையெல்லாம் விளக்க முடியாது. இனிமேலும் நீங்கள் என்னுடையவர் அல்ல''
''நான்ஸீ...'' என்றேன்.
”வேண்டாம்...வேண்டாம்” என்றாள்.தலையை உலுக்கிக்கொண்டாள்.கணப்புக்கு முன்னால் சோபாவில் உட்கார்ந்து தலையைக் குலுக்கிக் கொண்டேயிருந்தாள். ''நாளைக்கே போய் அம்மாவையும் ரிச்சர்டையும் பார்க்கவேண்டும். நான் போன பின்னால் நீங்கள் உங்கள் தோழியை அழைத்துக்கொள்ளலாம்''.
''நான் அதைச் செய்யமாட்டேன்.அப்படிச் செய்கிற உத்தேசமும் இல்லை'' என்றேன்.
''நீங்கள் அவளைக் கூப்பிடுவீர்கள்''
”நீயும்தான் தெல்லைக் கூப்பிடுவாய்”என்றேன்.அதைச் சொல்லும்போது அருவருப்பாகவும் உணர்ந்தேன்.
''உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்துகொள்ளுங்கள்'' என்று சொல்லியபடி சட்டையின் கைப்பகுதியில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.”உண்மையாகத்தான் சொல்கிறேன்.ஹிஸ்டீரியா வந்ததுபோல கத்த விரும்பவில்லை.நாளைக்கு நான் வாஷிங்டன் போகிறேன்.இப்போது படுத்துக் கொள்ளப் போகிறேன். சோர்ந்துபோய் விட்டேன். வருத்தப்படுகிறேன்,டான், நம் இரண்டுபேருக்காவும் வருத்தப்படுகிறேன்.நம்மால் இதைச் சரிசெய்து கொள்ளவே முடியாது. இன்றைக்கு அந்த மீன்காரன் நமக்கு குட்லக் சொன்னானே...'' என்று தலையை உலுக்கினாள். ''நமக்காக நான் குட்லக் சொல்லிக் கொள்கிறேன். நமக்கும் அது அவசியம்''
குளியறைக்குப் போனாள் அவள். தொட்டியில் தண்ணீர் விழுவது கேட்டது. நான் வெளியே வந்து முற்றத்துப் படிகளில் உட்கார்ந்து சிகரெட்டைப் புகைத்தேன். வெளியில் இருட்டும் அமைதியுமாக இருந்தது. நகரமிருந்த பக்கம் பார்த்தேன். ஆகாயத்தில் மங்கலாக விளக்குகளின் வெளிச்சம்  படர்ந்திருப்பதையும் பள்ளத்தாக்கில் கடற்பனியின் படலம் மிதப்பதையும் பார்க்கமுடிந்தது. சூஸனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்துக்குப் பின் நான்ஸி குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். படுக்கையறையின் கதவு தாளிடப்படுவதைக் கேட்டேன். நான் உள்ளே போய் அடுக்கிலிருந்து இன்னொரு விறகுக்கட்டையையெடுத்து கணப்பில் போட்டேன். அதன் பட்டையில் ஜுவாலைகள் பற்றியெரிவதுவரை காத்து நின்றேன்.இன்னொரு படுக்கையறைக்குள் நுழைந்து ஜன்னல்திரைகளை இழுத்துவிட்டேன். திரைவிரிப்பிலிருந்த பூவேலைகளை வெறித்துப் பார்த்தேன்.பிறகு குளித்து பைஜாமாவை அணிந்து மறுபடியும் கணப்பருகில்போய் உட்கார்ந்துகொண்டேன்.பனிமூட்டம் இப்போது ஜன்னலுக்கு வெளியில் வந்திருந்தது. நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்து புகைபிடித்தேன். ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது பனிமூட்டத்தில் ஏதோ நகர்வது தெரிந்தது. கூர்ந்து பார்த்தபோது முற்றத்தில் ஒரு குதிரை மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
ஜன்னல் பக்கமாகப் போனேன்.குதிரை நிமிர்ந்து ஒரு நிமிடம் என்னைப் பார்த்துவிட்டு மறுபடியும் குனிந்து புற்களைக் கவ்விப் பிடுங்கத் தொடங்கியது. இன்னொரு குதிரை காரைத் தாண்டிவந்து முற்றத்தில் மேய ஆரம்பித்தது. முற்றத்து விளக்கைப் போட்டுவிட்டு ஜன்னல் அருகில் நின்று அவற்றைக் கவனித்தேன். நீளமான பிடரியுள்ள பெரிய வெண்குதிரைகள். வேலியைத் தாண்டியோ பக்கத்திலிருக்கிற பண்ணைகள் எதிலிருந்தாவது பூட்டப் படாத கதவைத் தாண்டியோ அவை வந்திருக்கவேண்டும். எப்படியோ வந்து எங்கள் முற்றத்தில் திரிந்துகொண்டிருந்தன. கிடைத்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும் அவை பதற்றத்துடன் இருந்தன. ஜன்னலுக்குப் பின்னால் நான் நிற்குமிடத்திலிருந்தே அவற்றின் கண்களில் வெண்மையைப் பார்க்க முடிந்தது. புல் கொத்துகளைப் பிடுங்கும்போது அவற்றின் காதுகள் உயர்ந்து தாழ்ந்தன. மூன்றாவது ஒரு குதிரையும் முற்றத்தில் திரிந்தது. அதைத் தொடர்ந்து நான்காவதாக ஒன்று. எங்கள் முற்றத்தில் வெண் குதிரைகளின் மந்தை மேய்ந்துகொண்டிருந்தன.
படுக்கையறைக்குப் போய் நான்ஸியை எழுப்பினேன். அவளுடைய கண்கள் சிவந்திருந்தன. கண்களைச் சுற்றியிருந்த ரப்பைகள் வீங்கியிருந்தன. கூந்தலை சுருட்டிவிட்டிருந்தாள். கட்டில் காலுக்குப் பக்கத்தில் தரையில் ஒரு சூட்கேஸ் விரியத் திறந்துகிடந்தது.
''நான்ஸி, ஹனி. முற்றத்தில் என்னவென்று வந்து பார். வந்து பாரேன். நீ கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். நம்பவே மாட்டாய். சீக்கிரம் வா'' என்றேன்.
''என்ன இது? என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.என்ன இது?''
”அன்பே!நீ கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.நான் உன்னைக் கலவரப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள். ஆனால் கண்டிப்பாக நீ வந்து அதைப் பார்க்க வேண்டும்.”
நான் அந்த அறைக்குத் திரும்பி ஜன்னல் அருகில் நின்றேன். சில நிமிடங்களில் இரவு அங்கியின் முடிச்சைப் போட்டபடி நான்ஸி வந்தாள். ஜன்னலுக்கு வெளியில் பார்த்துவிட்டு, ''கடவுளே, எவ்வளவு அழகாக இருக்கின்றன, இவை எங்கேயிருந்து வந்திருக்கும், டான்? அழகாக இருக்கின்றன'' என்றாள்.
''இங்கே எங்கிருந்தாவது அவிழ்த்துக்கொண்டு வந்திருக்கும். பக்கத்திலிருக்கிற பண்ணைவீடுகள் எதிலிருந்தாவது. நான் ஷெரீபின் அலுவலகத்துக்குப் போன் செய்து இவற்றின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கச் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன்னால் நீ இவற்றைப் பார்க்கவேண்டும் என்று நான் விரும்பினேன்.''
''இவை கடிக்குமா? அதோ அங்கே நம்மையே பார்த்துக்கொண்டு நிற்கிறதே அதைக் கொஞ்சவேண்டும்போல இருக்கிறது. அதன் தோளில் தட்டிக் கொடுக்க ஆசைப்படுகிறேன். ஆனால் கடி வாங்க முடியாது. நான் வெளியே போகிறேன்''
''அவை கடிக்காது என்றுதான் நினைக்கிறேன். கடிக்கிற ரகத்தைச் சேர்ந்த குதிரைகள் மாதிரித் தெரியவில்லை. வெளியே போவதானால் கோட்டைப் போட்டுக்கொள். குளிர் அதிகம்.''
பைஜாமாவுக்கு மேலே கோட்டைப் போட்டுக்கொண்டு நான்ஸிக்காகக் காத்திருந்தேன். வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தோம். முற்றத்தில் குதிரைகளுக்கிடையில் நடந்தோம். அவை எல்லாமும் எங்களை நிமிர்ந்து பார்த்தன. இரண்டு குதிரைகள் மறுபடியும் புல்லை மேயத் தொடங்கின. மற்ற குதிரைகளில் ஒன்று கனைத்துவிட்டு கொஞ்சம் எட்டிநின்றது. பிறகு அதுவும் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு புல்லைக் கொறித்து அசைபோடத் தொடங்கியது. நான் ஒரு குதிரையின் நெற்றியைத் தடவி முதுகில் தட்டிக்கொடுத்தேன். அது தொடர்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தது. நான்ஸி இன்னொரு குதிரையை வருடி அதன் பிடறியைக் கோதி விட்டுக்கொண்டிருந்தாள். ''குதிரையே நீ எங்கேயிருந்து வருகிறாய்?எங்கே இருக்கிறாய்? இன்று இரவு ஏன் வெளியே வந்துவிட்டாய், குதிரையே!'' என்றெல்லாம் கொஞ்சியபடி அதன் பிடறியைக் கோதிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். குதிரை அவளை ஏறிட்டுப்பார்த்து உதடுகளால் ஊதிவிட்டு மறுபடியும் தலையைத் தொங்கப்போட்டது.அவள் அதன் முதுகில் தட்டிக்கொடுத்தாள்.
''நான் ஷெரீப்பைக் கூப்பிடப் போகிறேன்'' என்றேன்.
”இப்போது வேண்டாம்.இன்னும் கொஞ்ச நேரத்துக்குக் கூப்பிடவேண்டாம். இதுபோல ஒன்றை இன்னொருமுறை நம்மால் பார்க்க முடியாது.இனி ஒருபோதும் நமது முற்றத்தில் குதிரைகள் நிற்காது ஒருபோதும். டான் கொஞ்ச நேரம் பொறுங்கள்''
சிறிது நேரத்துக்குப் பிறகும் நான்ஸி ஒவ்வொரு குதிரையாக நகர்ந்து அவற்றின் முதுகைத் தட்டிக்கொடுத்துக்கொண்டும் பிடரியைக் கோதிக் கொண்டுமிருந்தாள். ஒரு குதிரை முற்றத்திலிருந்து நகர்ந்து கார் நிறுத்தும் இடத்துக்கு வந்து காரைச் சுற்றிக்கொண்டு நடந்து சாலையில் இறங்கியது. கூப்பிட்டுச் சொல்லவேண்டியதுதான் என்று புரிந்தது.
சற்று நேரத்தில் ஷெரீப் அலுவலகத்தின் இரண்டு கார்கள் பனிப்படலத்தில் சிவப்பு விளக்குகள் பளீரிடத் தோன்றின. அதற்குச் சில நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டுத் தோல் கோட்டுப் போட்ட ஒருவன் குதிரைகளை ஏற்றிச் செல்லும் டிரெயிலருள்ள பிக்கப் வண்டியுடன் வந்து சேர்ந்தான். குதிரைகள் தயங்கியும் முரண்டு பிடித்தும் ஓடின. டிரெயிலரிலிருந்தவன் கயிற்றைச் சுழற்றி வீசி ஒரு குதிரையின் கழுத்தில் மாட்டினான்.
''அதைத் துன்புறுத்த வேண்டாம்'' என்றாள் நான்ஸி.
வீட்டுக்குள் திரும்பிப்போய் ஜன்னலுக்குப் பின்னால் நின்று உதவியாளர்களும் மேய்ப்பனும் குதிரைகளை வளைத்துப் பிடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
''நான் காப்பி போடப் போகிறேன். நான்ஸீ...உனக்கும் காப்பி வேண்டுமா?'' என்று கேட்டேன்.
''எனக்கு என்ன வேண்டுமென்று சொல்லவா? டான், எனக்கு மிதப்பது போல இருக்கிறது. நிறைவாக இருக்கிறது. எனக்கு என்னமாதிரி இருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை. நீங்கள் காப்பி போடுங்கள். நான் ரேடியோவில் நாம் கேட்கக் கூடிய சங்கீதம் ஏதாவது வருகிறதா என்று பார்க்கிறேன். நீங்கள் மறுபடியும் கணப்பை மூட்டுங்கள். பரவசத்தில் என்னால் தூங்கக் கூட முடியாது''
கணப்புக்கு முன்னால் உட்கார்ந்து காப்பி குடித்தோம். யூரேகா வானொலி நிலைய இரவு ஒலிபரப்பில் சங்கீதம் கேட்டோம். குதிரைகளைப் பற்றி அப்புறம் ரிச்சர்டைப் பற்றி நான்ஸியின் தாயாரைப் பற்றி பேசினோம். நடனமாடினோம். தற்போதைய சூழ்நிலையைப் பற்றிப் பேசாமலிருந்தோம். ஜன்னலுக்கு வெளியில் பனிப்படலம் மிதந்துகொண்டிருந்தது.பரஸ்பர நேசத்துடன் பேசிக்கொண்டிருந்தோம். விடியப் போகிற நேரத்தில் வானொலியை அணைத்துவிட்டுப் படுக்கைக்குப் போய் உறவுகொண்டோம்.
மறுநாள் பிற்பகல். அவளுடைய எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக்கொண்டு சூட்கேசுகளைக் கட்டிவைத்து, அங்கேயிருக்கும் சிறிய விமான நிலையத்துக்கு அவளைக் காரில் கூட்டிப் போனேன். அங்கேயிருந்து போர்ட்லாண்டுக்குப் போகும் விமானத்தைப் பிடித்துப் போனால் இரவில் பாஸ்கோ செல்லும் விமானத்துக்கு மாறலாம்.
''நான் விசாரித்ததாக அம்மாவிடம் சொல். என் சார்பில் ரிச்சர்டை அணைத்து ஒரு முத்தம் கொடு. அவன் ஞாபகமாகவே இருக்கிறேன் என்று சொல். அவனை நேசிக்கிறேன் என்று சொல்.''
''அவனுக்கும் உங்கள்மேல் அன்புதான். உங்களுக்கே தெரியுமே. எப்படியோ இலையுதிர் காலத்தில் நீங்கள் அவனைப் பார்க்கத்தானே போகிறீர்கள்.''
நான் தலையாட்டினேன்.
”குட் பை”என்றபடி என்னை நெருங்கினாள்.இருவரும் கட்டித் தழுவிக்கொண்டோம்.
''நேற்றைய இரவு என்னை சந்தோஷமாக்கியது. அந்தக் குதிரைகள். நம்முடைய பேச்சு. எல்லாம்தான்.இதுவும் உதவுகிறது.அதை நாம் மறக்கமுடியாது'' என்றவள் அழத் தொடங்கினாள்.
''எனக்குக் கடிதம் எழுதுவாயா? நமக்கு இப்படி நடக்கும் என்று நான் யோசித்ததில்லை. இத்தனை வருடங்களில் ஒரு நிமிடம் கூட அப்படி நினைத்ததில்லை. நமக்கு அல்ல''
''நான் எழுதுகிறேன்.பெரிய கடிதங்களாகவே எழுதுகிறேன்.உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது உங்களுக்கு எழுதுவேனே அந்த மாதிரிப் பெரிய கடிதங்கள்''
''நான் அவற்றுக்காகக் காத்துக்கொண்டிருப்பேன்.''
அவள் மறுபடியும் ஏறிட்டுப் பார்த்து என் முகத்தை வருடினாள். திரும்பி தார்ப்பாதையைக் கடந்து விமானத்தை நோக்கி நகர்ந்தாள்.
போய் வா, அன்பே, கடவுள் உன்னோடு இருப்பாராக.
அவள் விமானத்தில் ஏறினாள். இன்ஜின்கள் இயங்க ஆரம்பித்து ஒரு நிமிடத்துக்குள் விமானம் ஓடுபாதையில் நகரத் தொடங்கும்வரை அந்த இடத்திலேயே இருந்தேன். அது உயர்ந்து ஹம்போல்ட் வளைகுடாவுக்கு மேல்பறந்து சீக்கிரமாகவே தொடுவானத்தில் ஒரு புள்ளியாக மாறியது.
நான் காரை வீட்டுக்குத் திருப்பி ஓட்டினேன்.நடைவழியில் நிறுத்தினேன்.கடந்த இரவில் தரையில் பதிந்திருந்த குதிரைகளின் குளம்படையாளங்களைக் கவனித்தேன். புல்தரையிலும் சகதியிலும் அழுத்தமாகப் பதிந்திருந்தன. எல்லா இடங்களிலும் குதிரைச் சாணம் குவிந்து கிடந்தது.வீட்டுக்குள் நுழைந்து கோட்டைக்கூடக் கழற்றாமல் தொலைபேசியை நோக்கிப் போய் சூஸனின் எண்ணைச் சுழற்றினேன்

தமிழில்: சுகுமாரன்.

http://en.wikipedia.org/wiki/Raymond_Carver

ஆங்கில மூலம் Call if you need me
flow1

கருத்துகள் இல்லை: