பிறந்தது பிரான்சு - அநாதைக் குழந்தை - அரசுக் காப்பகம்- சுமாராகக் கல்வியறிவு - திருட்டுக்குற்றங்கள், சிறைவாசம் -படைப்பிலக்கியவாதி - இறந்த நாடு மொராக்கோ. இது தான் ழான் ழெனேவின் வாழ்க்கைப் பயணம். படைப்புகளின் துணையோடுதான் அவரைப் புரிந்துகொள்ளவும் வேண்டும். திட்டவட்டமான வேறு ஆதாரங்களில்லை. பிறப்பைப் போலவே இறப்பும் அநாமதேயமாக நடந்தேறியது. பாசிபடர்ந்து தேங்கிக்கிடந்த அணை நீர் கரையுடைந்து பாய்ந்ததுபோல நிகழ்ந்தது அவருடைய இலக்கியப் பிரவேசம். தொடக்கக் காலத்தில் முகம்சுளித்து தாழிட்ட படைப்புலகம் கதவுகளை மாத்திரமல்ல சன்னல்களையும் சேர்த்தே திறந்து அவரை அணைத்துக்கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது. நடுநிசி நாயின் அழுகையும் ஆந்தையின் அலறலும் களிப்பூட்டுபவை, இறுக்கம் குறைப்பவை என்பதைப் பின்னாளில் அவரது படைப்புகள் உறுதிப்படுத்தின. பின்னிரவு அலறல்போல ஒலித்த அக்குரல்கேட்டு வெருண்டோடியவர்கள் அநேகர், பின்னர் அவர்களே அதன் வசீகரத்திற்கு ஆட்பட்டுக் கைகுலுக்கினார்கள்.
பாலின்பம் ஓரினச்சேர்க்கையென்ற மனித ஒழுகலின் மிகைகளை, முரண்களைப் போற்றிப் பாடிய ‘ழெனே’வின் படைப்புகள் பிரெஞ்சுப் படைப்புலகத்திற்கு அது நாள்வரை நிகழாதவை, ஆபாசமானவை. பதினேழாம் நூற்றாண்டிலேயே கத்தோலிக்க மதத்தின் குறியீடுகளை, சடங்குகளைக் கேள்விக்குட்படுத்திய விவாதங்கள் பிரசித்திபெற்ற தத்துவவாதிகளின் வரவேற்பறைகளிலும் படைப்பாளி, பதிப்பாசிரியர் பெயரின்றி கலகக்குரல்கள் தெருமுனைகளிலும் முச்சந்திகளிலும் விநியோகிக்கப்பட்டிருந்தன என்றபோதிலும் மர்க்கி தெ சேடுவிற்குப் (Marquis de Sade) பிறகு தீண்டத்தகாதவை எனச் சமூகத்தால் ஒதுக்கப்பட்டிருந்தவற்றை மீண்டும் அரங்கேற்றியவர் ழான் ழெனே. தொடக்கத்தில் வரவேற்பில்லையென்றபோதும் பிற்காலத்தில் அவரது படைப்பாற்றல் பிரெஞ்சுப் படைப்பாளுமைகளின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாகச் சார்த்துரு போன்றவர்கள் அவர் படைப்புகளை ஏற்றுக்கொண்டமை. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு தரப்பில் பூச்சொரிதல் மறுதரப்பில் கல்லெறிதலென்று இரண்டும் நிகழ்ந்தன. எழுத்தாளராகவும் நாடக ஆசிரியராகவும் செயலாற்றிய இளைஞர் ழான் ழெனே இப்பிரச்சினையை எதிர்கொண்டவிதம் கவனத்திற்குரியது. மளமளவென்று சென்றடைந்த புகழைக் காப்பாற்றவும் கண்டனங்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளவும் அவர் தெரிந்திருந்தார். கடுமையான விமர்சனங்கள் குறித்த கவலையின்றித் தீவிரமாகத் தமது இலக்கிய ஆளுமையை நாவல்கள், நாடகங்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், விமர்சனங்கள்வழி வெளிப்படுத்த முடிந்தது.
பிறந்தது டிசம்பர் 10, 1910. தந்தை இன்னாரென்று தெரியாது. தாயார் உள்ளாடை தயாரிப்பு நிறுவனமொன்றில் தொழிலாளி. 28 ஜூலை 1911 அன்று மருத்துவமனையொன்றில் ஏழுமாதக் குழந்தையை அநாதையாக்கிவிட்டுப் புறப்பட்டுப் போனவர் போனவர்தான். இன்னொரு மகனின் பிறப்பும் மருத்துவமனையில் சேர்ப்பித்துவிட்டு அந்த அம்மாள் காணாமல்போனதும் அச்சுபிசகாமல் நிகழ்ந்தது. பிறகு அப்பெண்மணி இளம்வயதிலேயே காய்ச்சல் கண்டு இறந்ததாகச் சொல்கிறார்கள். பிரெஞ்சு அரசாங்கத்தின் சமூகநலத் துறை உதவியுடன் தச்சர் குடும்பமொன்று ழான் ழெனேவை எடுத்து வளர்த்தது. படிப்பு நன்றாகவே வந்ததாம்.
14வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போகிறார். சின்னச்சின்னத் திருட்டுகள், குற்றங்கள். நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பதில்லை. இடையில் ஓர் இசைக்கலைஞரிடம் பயிற்சி, அங்கேயும் பணத்தைக் கையாண்டதாகக் குற்றச்சாட்டு. மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதாகத் தீர்மானிக்கப்பட்டு அதைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை அளிக்கிறார்கள். சிகிச்சையின்போதே அங்கிருந்து மீண்டும் ஓட்டம். 1926ஆம் ஆண்டு மூன்று மாத சிறைவாசம். பின்னர் சீர்திருத்த முகாமொன்றுக்கு அனுப்பப்படுகிறார். இரண்டாண்டுக் காலம் அங்கே தங்க நேர்ந்தபோது தான் ஓரினச்சேர்க்கையில் அனுபவம் பெறுகிறார். அவரது பல படைப்புகளில் பின்னர் இவ்வனுபவம் இடம்பெறுகிறது. பதினெட்டு வயதில் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்கிறார். ஆறாண்டுக் காலம் லெபனான், சிரியா, ஸ்பெயின், லிபியா, மரோக்கா என்றிருந்து விட்டுச் சொல்லாமல்கொள்ளாமல் ராணுவத்திலிருந்து வெளியேறுகிறார்.
தண்டனையிலிருந்து தப்ப ஐரோப்பாவெங்கும் தலைமறைவு வாழ்க்கை, அடுத்தடுத்து திருட்டு வழக்கு, சிறைவாசம், தண்டனையிலிருந்து தப்பிக்க செக்கோஸ்லா வாக்கியா நாட்டில் அரசியல் அகதியாகத் தஞ்சம் கோருகிறார். அங்கே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகளைச் சந்திக்க நேரிடுகிறது. அப்பெண்மணியே அவரது வாழ்க்கையில் குறுக்கிட்ட முதலாவதும் கடைசியுமான பெண்மணி என்று சொல்கிறார்கள். மீண்டும் பாரீஸுக்குத் திரும்புகிறார். நான்காண்டுக் காலம் அங்கே தங்குகிறார். ஒரு திருட்டின்போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார், அது தவிர தகுந்த உரிமமின்றிக் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக வேறு குற்றச்சாட்டு. ஆறுமாதம் சிறைத் தண்டனை. மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது உறுதிசெய்யப்பட்டதால் தண்டனை இரண்டு மாதமாகக் குறைகிறது. தொடர்ந்து அவ்வப்போது திருட்டு, போலிச் சான்றிதழ்கள் தயாரித்த குற்றமெனக் கைதுசெய்யப்படுவதும் சிறையிலிருப்பதும் பின்னர் விடுதலையாவதுமாக வாழ்க்கை தொடர்கிறது. ஆக எழுத்துக்கு வருவதற்கு முன்பு சமூகத்திற்கும் சமூக நியதிக்கும் முரண்பட்டவர், சட்டத்திற்கு முன்பாகக் குற்றவாளி.
ழெனே இறந்தபோது புகழின் உச்சத்திலிருந்தார். அவர் பிறந்த ஆண்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு பிரெஞ்சுப் படைப்புலகம் நூற்றாண்டுவிழாவை எளிமையாகக் கொண்டாடியது. மீண்டும் அவரது படைப்புகள் புத்தகக் கடைகளில் விற்பனையில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நாற்பதுவயது மதிக்கத்தக்க வாசகரொருவர், விற்பனையாளரிடம் ழெனே எழுத்தின் பெருமையைக் கூறிப் புளகாங்கிதமடைகிறார். பதிலுக்கு விற்பனையாளர் தமது தரப்பு ழெனே பெருமைகளை நினைவுகூர்ந்து பூரிக்கிறார். எனக்கோ விற்பனையாளர் என்னைக் கவனிக்கவில்லையே என்னும் கோபம் இருந்தபோதிலும் உரையாடலின் போக்கில் கோபம் போய்விட்டது. நாவல்கள், நாடகங்கள், கவிதைத் தொகுப்புகள், விமர்சனக் கட்டுரைகளென்று ழெனேவிடம் பன்முகத்தன்மை இருப்பது உண்மையே ஆயினும் அவற்றை வரிசைப்படுத்திக்கொண்டு செயல்பட்டிருக்கிறார். படைப்புகளில் அசலான ழெனேவை ரத்தமும் தசையுமாக உலவவிட்டதாலேயே, தொடக்கத்தில் பிரெஞ்சு பொதுப்புத்திக்குக் குற்றப்பத்திரிகைகளை வாசிக்கும் அனுபவம். கடுமையான விமர்சனங்கள், சமூகமும் சமயமும் நிராகரித்திருந்த வேளையில் இலக்கியத் தோள்கொடுத்த சார்த்துருவையும் அத்தனை சுலபமாக மறந்துவிட முடியாது.
ழெனேவின் படைப்புகள் கால வரிசைப்படி நான்கு படிநிலைகள்: தொடக்கத்தில் கவிதைகள், அடுத்ததாக நாவல்கள், மூன்றாவதாக நாடகங்கள், இறுதியாக அரசியல் பத்திகள். ழான் ழெனேவுக்கு வேறு விளம்பரமே வேண்டாம். அவரது படைப்புகளுக்கு முன்னுரை என்னும் பெயரில் சார்த்துரு 700 பக்கங்களில் எழுதிய ‘Saint Genet: Actor and Martyr’ என்னும் தத்துவார்த்த கட்டுரையொன்று போதும். நூலில் “ ‘மேதமை’ யென்பது தானமாகப் பெறப்படுவதல்ல, நிராதரவற்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்னும் உந்துதலால் கிடைப்பது” என்பார் சார்த்துரு. 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் ‘Les Temps modernes’ என்னும் இலக்கிய இதழைத் தொடங்கிய சார்த்துரு ‘இலக்கியம் என்றால் என்ன?’ என்னும் கேள்வியை ஆரம்பித்து படைப்பிலக்கியவாதிகளின் கடப்பாடுகள் பற்றிய தமது சிந்தனைத் தொடரை (குறிப்பாகப் படைப்பாளியின் சுதந்திரம்) ஆரம்பித்து வைத்திருந்தார். அவ்விதழில் பிற படைப்பாளிகளின் எழுத்துக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவதென்ற சடங்கையும் தொடங்கிவைத்தார். அந்த வகையில் ழான் ழெனேயின் ‘Pompe funebres’ (Funeral Rites) என்னும் நாவல், ‘journal du voleur’ (The Thief's Journal) என்னும் சுயசரிதையிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள் ஆகியவற்றையும் வெளியிட்டார். குறிப்பாக 1950ஆம் ஆண்டு ஆறு இதழ்களில் தொடர்ந்து சார்த்துரு எழுதிய கட்டுரைகள் ழெனே புகழை உச்சத்திற்கு எடுத்துச் சென்றன, பின்னர் அவை 1952ஆம் வெளிவந்த ‘Saint Genet: Actor and Martyr’ என்னும் நூலிலும் இடம்பெற்றன. ழெனேவின் படைப்புகளை இலக்கியவாதியாக அல்ல தத்துவவாதியாகச் சார்த்துரு ஆய்வுசெய்திருந்தார்.
ழெனேவின் வாழ்க்கைத் தடத்தின் முற்பாதி பிற்பாதியை அறிந்தவர்களுக்கு இருத்தலியலால் ழெனேவை வடிவமைக்க முனையும் சார்த்துருவின் நியாயங்கள் தெளிவாகப் புரியும். எழுத்தையும் தம்மையும் இருட்டில் நிறுத்தி முனகிக்கொண்டிருந்த ழான் ழெனேவின் திசைக்கு ஒளிபாய்ச்சிய வேறிருவர் கோக்டோ, பார்பெசா. முன்னவர் படைப்பிலக்கியவாதி, பின்னவர் இதழாசிரியர். பிரான்சு நாட்டை ஜெர்மன் ஆக்கிரமித்திருந்த காலம். நிர்வாகத்தில் ஜெர்மானியர்களும் அவர்களை ஆதரித்த சிறுபான்மை பிரெஞ்சு இனவெறியர்களுமிருந்தார்கள். ழெனேவின் முதல் கவிதை அவரோடு சிறையிலிருந்து பின்னர் மரணதண்டனை விதிப்படி கில்லெட்டால் தலைவெட்டப்பட்ட மொரீஸ் பிலோர்ழ் நினைவைப் போற்றும் வகையில் வந்தது. இந்த மொரீஸ் என்பவர் ஓட்டல் அறையில்வைத்துத் தன் நண்பனின் கழுத்தை அறுத்த குற்றத்திற்காகத் தண்டனை பெற்றவர். பின்னர் இந்நபரைக் குறித்தும் புத்தகம் வந்தது என்பது தனிக்கதை.
மொரீஸ் பிலோர்ழ் சிறையிலிருந்த காலத்தில் அதே சிறையில் ‘ழெனே’ இருந்திருக்கிறார் என்பதைத் தவிர ழெனேவுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்புமில்லை என்கிறார்கள். கவிதைக்குப் பின்னர் எழுதியிருந்த குறிப்பொன்றில் ழெனே தனது கவிதையின் நாயகன் குறித்து கூறியுள்ள தகவல்களிலுள்ள முரண்கள் மேற்கண்டவர்களின் குற்றச்சாட்டை நியாயப்படுத்தவும் செய்கின்றன. ஆக மொத்தத்தில் மொரீஸ் பிலோர்ழ் என்னும் உண்மைக் குற்றவாளியை நண்பனாகக் கற்பனையில் வரித்ததற்கும் கவிதையில் நிறுத்தி துதி பாடியதற்கும் அவனிடத்தில் தன்னைக் கண்டது காரணமாக இருக்கலாம். Le Condamné à Mort (The Man Sentenced to Death) என்னும் அக்கவிதை, “என் நண்பன் மொரீஸ் பிலோர்ழ் நினைவாக இதைச் சமர்ப்பிக்கிறேன். அவனது ஒளிவீசும் உடலும் முகமும் எனது இரவுகளைத் தூக்கமின்றி அலைக் கழிக்கின்றன” என்று மக்களுக்கு அறிமுகமாகிறது. தொடக்கத்தில் ரகசியமாக விநியோகிக்கப்படுகிறது. வரவேற்பு நன்றாக இருக்கவே பதிப்பகங்களைத் தேடுகிறார். பதிப்பாளர் எவரும் முன்வராத நிலையில் The Man Sentenced to Death என்னும் கவிதைத் தொகுப்பைக் கைப்பணத்தை முதலீடு செய்து வெளியிட வேண்டி யிருந்தது. ஓர் அநாமதேய முகவரியுடன் ஆசிரியர், பதிப்பாளர் பெயர்களின்றி, ஆனால் ‘Fresne 1942’ (ழெனே சிறை தண்டனை அனுபவித்த இடம்) என்னும் பெயரில் வெளி வந்தது.
1943 தொடக்கத்தில் ழெனே கவிதைகளை வாசிக்க நேர்ந்த கோக்டோ, அதிசயிக்கிறார். அதிகமாகப் பாலியல் சார்ந்த சொற்களை உபயோகித்திருக்க, களவாய் வாசித்து சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்ததென்கிறார்கள். ஆகக் கவிதைத் தொடர்பான முதலாவது பதிப்பு ஒப்பந்தம் ஓர் இளம் பதிப்பாளருடன் ஆரம்பமாயிற்று, உபயம் கோக்டோ.
ழெனே சிறையிலிருந்தபோது பார்பெசாவென்ற மற்றொரு பதிப்பாளருக்கு எழுதிய கடிதமொன்றில், “திருவாளர்கள் கோக்டோவும் (Cocteau), பிரான்சுவா சாந்த்தோனும் எனது படைப்புகளில் சிலவற்றை நீங்கள் பிரசுரிக்க உடன்படுவதாக எழுதியிருந்தார்கள். ஆனால் பல காரணங்களை முன்வைத்து அவை பிரசுரிக்கக்கூடியவையல்ல என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டிருக்கிறார். ‘Le journal de Cocteau’ என்னும் நூலில், ழெனேவின் படைப்புகள் ஏன் தொடக்க காலத்தில் மறுக்கப்பட்டன என்பதைப் பற்றி, கோக்டோ விவரித்து எழுதியிருக்கிறார். இந்நாட்குறிப்பினூடாக மெல்லமெல்ல ழெனேவின் எழுத்துக்கள் எவ்வாறு பிரெஞ்சு இலக்கிய உலகத்தால் தவிர்க்கவியலாத எழுத்துக்களென்ற பரிணாமத்தை அடைந்ததென விளங்கிக்கொள்கிறோம். கோக்டோ, ழெனேவின் எழுத்துக்கள் ஏற்படுத்தியிருந்த அதிர்ச்சியிலிருந்து மீளாது பிப்ரவரி 22ஆம் தேதியிட்ட தமது குறிப்பொன்றில் ழெனேவை ‘வெடிகுண்டு ழெனே’ (la Bombe Genet) என்கிறார்.
‘Our Lady of the Flowers’ (1943), ‘The Miracle of the Rose’ (1944) இரண்டும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்தவை: கருப்பொருள், கதை சொல்லல், எழுத்துமுறை ஆகியவற்றுள் பொதுவாக இரண்டிற்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன. இதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் விடயம் இவ்விரண்டிலும் வெகுசன இலக்கியத்திற்கும் அதன் படைப்பாளிகளுக்கும் கொடுத்துள்ள இடமும் அதற்கான காரணங்களும். பிற மேற்கத்திய நாடுகளைப் போலவே பிரான்சு நாட்டில் வெகுசன இலக்கியம் உச்சத்திலிருந்த காலமென்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தையும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். சமூகத்தில் சிந்தனைச் சோம்பல்கொண்ட தரப்பினரின் கொச்சை உணர்வுகளுக்குத் தீனி போடும் வகையில் இயங்கிய இவ்வகை இலக்கியங்களின் கருப் பொருள்கள் எளிதானவை: எளிதாக ஏமாறும் இளம்பெண்கள்; உண்மைக்கு ஏற்படும் சோதனைகள், ஆதரவற்ற மனிதர்களை வதைக்கும் நெருக்கடிகள்; துன்பம் இறுதியில் மகிழ்ச்சியெனப் பெரும்பாலும் உண்மைக்கு மாறான முடிவுகளைக்கொண்டவை. அடுத்து அவை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டன. மக்களில் ஒரு தரப்பினருக்கு இவ்வாறான புனைவுகள் ஆறுதலைத் தந்தன. நிஜவாழ்க்கை ஏமாற்றங்களை இதுபோன்ற கற்பனைகள் பூர்த்தி செய்தன.
தீவிர இலக்கியத்திற்கும் வெகுசன இலக்கியத்திற்குமுள்ள முக்கிய வேறுபாடு, பிந்தையதன் ஈடுசெய்யும் குணம் அது தரும் ‘வலி நிவாரணம்’. பெரும்பாலான வாசகர்களைப் போலவே ழான் ழெனேவுக்கும் பிந்தையது வலி நிவாரணி அல்லது ஓர் ‘இழப்பீடு’. இங்கே வாசகர்களை அவர்களின் வறுமைக் கோட்பாட்டிலிருந்து மீட்க வேண்டுமென்னும் கடப்பாடோ அவர்கள் பாவங்களிலிருந்து மீட்கும் நற்செய்தியோ அல்ல. மாறாக அவர்கள் கற்பனைக்கு வழிவிடுகிறது. கால் கடுக்க நடந்து பெற முடியாத நீதியை, வெகுசன இலக்கியங்களின் கடைசிப் பக்கங்களில் எட்டும்போது அவனுக்கு நிம்மதி. நிஜவாழ்க்கையில் எக்காளமிடும் வில்லன்கள் இக்கற்பனைப் புனைவுகளில் தோற்கும்போது, மகிழ்ச்சி. பெற்றோரை இழந்து, வாழ்க்கையில் கடும் நெருக்கடிகளுக்குள்ளான ‘ழெனே’, தொடக்க காலத்தில் வெகுசன இலக்கியத்தில் பற்றார்வத்தை வளர்த்துக்கொண்டதில் வியப்பில்லை என்கிறார்கள். ஆனால் பிற்காலத்தில் ழெனே படைப்பாளரான பிறகு சூழ் நிலைக்கேற்ப வேறுவகை நிலைப்பாட்டை எடுக்கிறார்.
நாற்பதுகளில் மேற்கத்திய இலக்கிய உலகம் கிளிப்பிள்ளைக் கூறுகளை நிராகரிக்கிறது. நீதியென்றும் அறமென்றும் எழுதுவது முடிவுக்கு வருகிறது. புனைவு என்னும்போதும் உண்மைக்கு விசுவாசமாக இருப்பது அவசியமென்று தீர்மானமாகிறது. படைப்புலகில் சொந்த சிந்தனைகளை எழுத்தில் கொண்டுவரும் ஒரு சுதந்திரப்போக்கு பிரவேசித்திருந்த காலமது. இப்புதிய சூழலுக்கு ழெனே இணங்குகிறார். அவ்வகையில் மிஷல் செவாகோ போன்ற வெகுசன இலக்கியவாதியின் மீது கொண்டிருந்த அதி தீவிரப் பிடிமானத்தைத் தளர்த்திக்கொள்கிறார். தமது எழுத்தினூடாக ஏற்படுத்தவிருக்கும் தம்மைப் பற்றிய புதிய பிம்பத்திற்கு வெகுசன இலக்கியத்தின் மீதுள்ள அபிமானம் தடையாக இருக்கலாமென ஊகித்திருக்க வேண்டும்.
ஒரு நேர்காணலின்போது ‘பல்ஸாக்கைக் காட்டிலும் எனது விருப்பம் ப்ரூஸ்ட்’ என்று தெளிவுபடுத்துகிறார். எளிமை என்னும் பேரிலே இலைமறை காயாக அவதூறானவற்றை இட்டு நிரப்புகிறார்கள் என்று வெகுசன இலக்கியத்தைப் பகிரங்கமாகவே கண்டிக்கிறார். இந்நிலைப்பாட்டிற்கு மாறாகக் காத்திரமாக முன்வைத்த அவரது மேற்கண்ட படைப்புகளிலும் விமர்சனங்களிலும் அடிநாதமாக வெகுசன இலக்கியத்தைக் கொண்டாடும் போக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் ஃப்ளோரான்ஸ் மெர்சியே போன்ற விமர்சகர்கள். The Miracle of the Rose நாவலின் வெற்றி அவரது ‘மெட்ரே’ சிறைவாசத்தின் உண்மை அனுபவத்தால் தீர்மானிக்கப்பட்டதல்ல, வெகுசன இலக்கியத்தின் மீது அவர்கொண்டிருந்த அபிமானத்தால் நிகழ்ந்ததென்பது அவர்கள் தரப்புவாதம். அதாவது வெகுசன எழுத்தாளர்களுக்கும் அவருடைய வாசகர்களுக்குமிடையே சுவாதீனமற்ற ஒரு கற்பனை இன்பம் கட்டமைக்கப்படுகிறதென அவரெழுப்பும் பிரேரணைக்கு அவரே பலியாவதாகக் குற்றச்சாட்டு. இது ஏதோ ழான் ழெனேவையும் அவரது படைப்புகளையும் சார்ந்து எழுப்பப்படும் குற்றச்சாட்டல்ல.
‘Our Lady of the Flowers’ (1943), ‘The Miracle of the Rose’ (1944) இரண்டிலுமே அநாதைப் பிள்ளைகள் வருகிறார்கள். வெகுசன நாவல்களில் தவறாமல் கையாளப்படும் கதைக்கரு. மாறாக அநாதைச் சிறுவர்களுக்கான கடந்தகால மதிப்பீடுகளைத் தமது படைப்புகளில் ழெனே புரட்டிப்போடுகிறார். பெரும் பணக்கார அல்லது பிரபுக்கள் வம்சத்தில் பிறந்து எதிர்பாராதவிதமாகத் திருடன் அல்லது நாடோடிக் கூட்டத்தில் சிக்கி, வளர்ந்து பெரியவனானதும் மீண்டும் பெற்றோரிடம் திரும்பும் கதைகள் வெகுசனப் புனைவுகளில் ஏற்கனவே நாம் வாசித்தது தான். அரசாங்கத்தின் தயவில் வளர்ந்த ழெனே, இருபதாம் வயதில் தாயைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கேட்டுவைத்த முறையீட்டை அரசாங்கம் நிராகரிக்க, ஏமாற்றமடைந்த ழெனே; வெகுசன நாவல்களில் நிகழும் கற்பனை சாத்தியத்தைத் தமது புனைவுகளிலும் உள்வாங்கிக்கொண்டிருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதை வெளிப்படையாக அவர் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்.
ஆரம்ப கால அவரது படைப்புகளில் இடம்பெறும் சிறுவன் சுயமாகத் தேர்ந்தவன், படிக்காத மேதை. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் சிறைவாசத்தின்போதும் வாசித்திருந்த ஜனரஞ்சகமான இலக்கியத்தின் பாதிப்பில் திளைப்பவன். அசலான ழான் ழெனேவைத்தான் நாவலில் சந்திக்கிறோம். சுயசரிதைதான் அவரது படைப்புகள். இப்படி ஆரம்பித்த அவரது வாழ்க்கையில்தான் பிற்காலத்தில் பிரெஞ்சு இலக்கிய உலகின் மகத்தான ஆளுமைகளுள் ஒருவரென்ற பெயரெடுத்தார். சார்த்துருவுடனும் கோக்டோவுடனும் சமமாக உட்கார்ந்து உரையாடுவதற்கான தகுதியையும் அளிக்கிறது. இது எப்படி நிகழ்ந்ததென்பது வியப்புக்குரியது. ழெனே கையாளும் மொழி, வெகுசன இலக்கியம் சார்ந்ததல்ல. கதைப்பொருளையும் அதைச் சொல்ல நேர்ந்த வகைமையையும் வைத்து வெகுசன இலக்கியத்தின்பாற்பட்டதெனச் சொல்லலாமே தவிர மொழிக்கட்டுமானம் நுண்மம் கூறுமுறைகள், துணை நாடக உத்தி ஆகியவற்றால் அவரது படைப்புகள் தீவிர இலக்கியத்தின்பாற்பட்டவை. ஆனாலும் அம்மொழி குறித்து வேறு வகை விமர்சனங்கள்: தீண்டத்தகாதவை, முகம் சுளிக்கவைப்பவை, சமூக நெறிகளுக்கு முரண்பட்டவை. கீழ்த் தரமான சொற்களென்று சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டவைக்கு லா. ச. ரா மொழியில் அழகியல் உபச்சாரம். வாக்கிய ஒழுங்கும் இறுக்கமும் பிசகாத சொற்களும் தேர்ந்த கலைஞனுக்குச் சொந்தமானவை.
எடுத்தாளப்பட்ட கருப்பொருட்களுக்கு-குற்றங்கள், ஓரினச் சேர்க்கை -பரத்தமை- பாரபட்சமற்ற நீதியை வழங்குகிறார், பிற கருப்பொருட்களைப் போலவே அவையும் உன்னதமானவை என்கிறார். கொச்சை மொழி, பேச்சுவழக்கை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதென்பது பிரெஞ்சுப் படைப்புலகைப் பொறுத்தவரை இவர் வருகைக்கு முன்பாகவே நிகழ்ந்துள்ளதற்குச் சான்றுகளுள்ளன. அடுத்து அவற்றை எடுத்தாண்ட விதமும் பிரெஞ்சுப் படைப்புலகிற்குப் புதிதல்ல. வெகுசன எழுத்தாளர்கள் பலர் இதற்கு முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். இருந்தும் ழெனே கொண்டாடப்படுவதற்கான காரணம் அவை திணிக்கப்படுபவை அல்ல, கட்டமைப்பில் நிர்ப்பந்தங்களேதுமில்லை. பிரதியில் பிரித்துணர இயலாதபடி உள்வாங்கப்பட்டிருக்கிறது.
எந்த ஒரு மொழியிலும் கொச்சைச் சொற்கள் என்பன தவிர்க்க முடியாதவை. சேரிகள், குற்றங்கள் தீச் செயல் புரிவோர் சொல்லாடல்கள் எனப் பெயர் பெற்றுச் சமூகம் அவற்றுக்கான இடத்தைக் கீழ்நிலையில் தான் வைத்திருக்கிறது. உன்னத இலக்கியங்கள் எனப்படுபவை அச்சொற்களை நிராகரித்தே வந்திருக்கின்றன. இன்று தமிழுட்பட எல்லா மொழிகளிலும் கொச்சைச் சொற்களும் ஆபாசமும் இலக்கியத் தகுதியை எட்ட முயல்கின்றன. ஆண் பரத்தமை, தடுப்புக்காவல், சிறை வாசம் என்பது போன்ற பின்னணியை வைத்தே படைப்புகளும் விரிகின்றன. தொடக்கத்தில் குறிப்பிட்டது போன்று ழெனே அவற்றை உபயோகித்த காலம் வேறு. மற்றவர்களுக்கும் ழான் ழெனேவுக்கும் என்ன வேறுபாடு? இங்கே பலருக்கும் குறத்தியென்றால் பாசிமணிபோல் கொச்சைச் சொற்கள், அருகில் சென்றால் குமட்டலைத் தரும் வீச்சம் வரும் தமிழில் கூடுதலாகவே வருகிறது.
ழான் ழெனேவின் குறத்தியும் சரி, பாசிமணியும் சரி தொட்டுப் பார்க்கத் தூண்டுபவை. வெட்கமறியாத ஆசைக்குக் காரணமாகுபவை. வேட்கைகள் நொதிக்க மன ஆக்கிரமிப்பிற்கு அடிமையாவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக