பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்திரேட் கோர்ட் வராந்தாவில் உட்கார்த்தி வைத்திருந்தது.
தாமிரவருணிக் கரை மேல் போகிற கொக்கிரகுளம் ரோட்டையும், ரோட்டிற்குக் கீழே போகிற ஆற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சாரதா.
சின்னப்பிள்ளையாக இருக்கையில் இதே ரோட்டில் அப்பாவோடும், அம்மாவோடும் கிட்டு மாமாவுடைய கல்யாணத்துக்காக நடந்து போயிருக்கிறாள். அப்போது அம்மா இருந்தாள். அதிகாலை முகூர்த்தத்துக்கு பிரம்மதேசத்திலிருந்து முதல் பஸ்ஸில் வந்து, ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, சந்திர விலாஸ் காபி கடையில் காபி சாப்பிட்டுவிட்டு, ஆற்றுப் பாலம் வழியாக இதே ரோட்டில்தான் நடந்தார்கள். அது சித்திரை மாதத்து முகூர்த்தம். காலை வெயிலுக்கு முன் லேசான குளிர்காற்று ஆற்றிலிருந்து, வீசினதும், அக்கரையில் கைலாசபுரத்து, படித்துறையில் லேசாக எரிந்து கொண்டிருந்த முனிசிபாலிட்டி விளக்குகளையும் கூட இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
“ஏடே..... இது யாரு புதுசா இருக்கே.”
”நம்ம ஏட்டய்யாதான் புடிச்சாவ. இத்தன வயசாகியும் பாரேன்.” என்று, ஒருத்தி, கோர்ட் படிக்கல்லில் உட்கார்ந்திருந்த போலீஸ்காரரைப் பார்த்து பேச்சும், சிரிப்பாணியுமாகச் சொன்னாள். அவளைத் தொடர்ந்து கூட இருந்த மற்றப் பெண்களின் சிரிப்புச் சத்தம் கேட்டது.
“ஏய்... செல்லம்மா... நீ நேத்துப் பொறந்துட்டு நேரே மாடத்தெருக்கு வந்திட்டவ நம்மப்பத்தி அழகம்மையக் கேளு சொல்லுவா.” என்று கண்ணைச் சிமிட்டினபடியே அழகம்மையைப் பார்த்தார். பின்னும் சிரிப்பும் கும்மாளமுமாகக் கிடந்தது.
சாரதாவுக்கு இந்த கேலிப் பேச்சுகள் ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு அப்பாவுடைய ஞாபகம் வந்தது. இப்போது அப்பா வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்த ஏட்டையா அப்பா சொன்னால் கேட்க மாட்டாரா? கைலாசபுரத்திலிருந்து புவனேஸ்வரி வந்து ஏட்டையாவிடம் சொல்லி கூட்டிக் கொண்டு போனால் கூடப் போதுமே. புவனேஸ்வரி மட்டும் வீட்டில் இருந்திருந்தால் இவ்வளவும் ஆகியிருக்காதுதான்.
நேற்று இதே நேரம் இருக்குமா, ஊரிலிருந்து புறப்படும்போது. சித்திக்குத் தெரியக் கூடாது என்று குடத்துக்குள்ளே அவளுடைய ஆஸ்திகளான ‘வெள்ளாவி’யில் சாயம் போன இரண்டு சேலைகள், செங்கோட்டை பெரியப்பா தைச்சுக் கொடுத்த ஜாக்கெட்டு, பின்னும் ஒரு சிட்டைத் துண்டு இதையெல்லாம் அள்ளிப் போட்டுக் கொண்டு வாய்க்காலைப் பார்க்க நடந்ததும், கடைக்குப் போகிற பாவனையில் அப்பா சாக்குப் பையைத் தூக்கிக் கொண்டு கொஞ்ச நேரங்கழித்து வந்ததும்.... சித்திக்கு எப்படியும் சந்தேகம் வராமல் இருந்திருக்காது. இப்போது அப்பாவை என்ன பாடு படுத்துகிறாளோ சித்தி?
”சாரதா! இதத் தவுத்தி எனக்கு வேற வழி தெரியல, இந்த முண்ட என்னையத் தின்னுது காணாதுன்னு ஒன்னையயிஞ் சாப்புட்டுருவா. புவனேசுவரி கூடப் போயி கொஞ்ச காலம் இரு. சொந்தக்காரனுவளை விட ஸ்நேகிததான் நமக்கு ஒதவுவா. அவ புருஷனுக்கு அங்க நல்ல வேலதான். எஸ். எஸ். எல். சி. பொஸ்தகத்தை எடுத்துக்கிட்டயா?... இந்தக் காபி கெளப்பு நடத்தி நான் ஒன்னைய கல்யாணங் கட்டிக் குடுத்திரப் போறேன்னு நம்பல. ஒனக்கு புவனேசுவரியும் அவ புருஷனும் எப்பிடியும் பார்த்து ஏற்பாடு பண்ணுவாங்க. எல்லாத்துக்கும் மேல ஸ்வாமி இருக்கார். போயிட்டு வா. நல்லபடியா ஆன பொறகு லெட்டர் போட்டா போதும்... இந்தா ரெண்டு ரூபாய வச்சுக்கோ. பஸ் சார்ஜ் போக கூடுதலா ஒரு ரூபா கொடுக்கனும்ணுதான் நெனச்சேன் முடியலை.”
இதுதான் சாரதாவுடைய அப்பா வெங்கய்யர், திருநெல்வேலி போகிற பஸ்ஸுக்காக காத்து நின்றபோது சாரதாவிடம் சொன்னது. அப்பா எப்போதும் போலத்தான் பேசினார். ஆனாலும், நேற்றுப் பேசின பேச்சை சாரதாவுக்கு மறக்க முடியவில்லை.
அப்புறம் என்ன? எட்டரை மணி பஸ் வந்தது. அப்பா கொண்டு வந்த சாக்குப் பையில் துணிமணிகளையும் சர்ட்டிபிகேட் புஸ்தகத்தையும் எடுத்துக்கொண்டு சாரதா பஸ்ஸில் ஏறினாள். ‘இன்வாய்ஸ்’ எழுதுகிறதுக்காக பஸ் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தது. திடீரென்று சித்தி ஓடிவந்து, பஸ்ஸை விட்டு இறக்கி விட்டு விடுவாளோ என்று பயமாகக் கூட இருந்தது சாரதாவுக்கு. நல்ல வேளை, பஸ் புறப்படுகிறவரை சித்தி வரவில்லை. முருக்கனோடை தாம்போதியில் பஸ் இறங்கி ஏறும்போது, அப்பா வாய்க்கால் கரை மேல் தோளில் குடத்தைச் சுமந்தபடியே போனதைப் பார்த்தாள்.
கைலாசபுரத்திலும் சாரதாவை விதிதான் ஜெயித்தது. புவனேசுவரியும், அவள் புருஷனும் ஆழ்வார்திருநகரிக்கு மாற்றலாகிப் போய் விட்டிருந்தார்கள். புவனேசுவரி இருந்த வீட்டைக் கண்டு பிடிக்கவே மத்தியானம் வரை ஆகிவிட்டது. கையில் இருந்த பாக்கிச் சில்லறைக்கு வெளியில் வாங்கிச் சாப்பிடக் கூட வெங்கய்யார் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை. அவ்வளவு ஒடுக்கமான சந்தில் குடியிருந்த புவனேசுவரி, தன் பள்ளிக்கூட ஸ்நேகிதி சாரதாவுக்கு எப்போதோ கடைசியாக அளவற்ற பிரியத்துடன் ஒரு லெட்டர் எழுதியிருந்தாள். அந்த லெட்டரை ஊரிலிருந்தபோது தன்னுடைய எஸ். எஸ். எல். சி. புஸ்தகத்துக்குள்தான் வைத்திருந்தாள். அதை எடுத்து அளவற்ற மனக் கஷ்டத்தோடு அவள் சாலைக் குமாரசாமி கோயில் சன்னதிக்குள், தூண் ஓரமாக இருந்த படியே நேற்றுப் பல தடவை திரும்பத் திரும்பப் படித்து மனசுக்கு சந்தோஷத்தைத் தேடிக் கொண்டாள் சாரதா. எவ்வளவு பிரியமானவள் அந்த புவனேசுவரி.
இந்த மாதிரி டவுனில், தனியே கோயிலுக்குள் உட்கார்ந்து இருந்தாலும் தப்பு என்கிறதை வெகு நேரத்திற்கு பிற்பாடுதான் சாரதா அறிந்த கொண்டாள். அங்கே இருந்து புறப்பட்டு, பஸ் ஸ்டாண்டுக்கு வழி கேட்டுக் கொண்டு வந்து சேர்ந்தாள்.
வெங்கய்யருக்கு பிரம்மதேசம் ரூட்டில் ஓடுகிற பஸ் கண்டக்டர்களைத் தெரியும். காலை பத்து மணி பஸ்ஸில் வருகிற கண்டக்டர் பையன் வெங்கய்யருக்கு வேண்டியவன் தான். அவனிடம் சொன்னால் ஊரில் கொண்டு போய் இறக்கி விட மாட்டானா? ஊருக்குப் போனால் சித்தி அவளை என்ன செய்வாள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இதைத் தவிர வேறே வழியென்ன?
அவள் துரதிருஷ்டம், காலையில்தான் முதல் பஸ் புறப்படுகிறது என்று சொன்னார்கள்.
பஸ் ஸ்டாண்ட் குழாயில் தண்ணீரை வயிறு முட்டக் குடித்துவிட்டு, சாக்குப் பையைத் தலைக்கு வைத்துக் கொண்டு, பஸ் ஸ்டாண்ட் கூட்டத்தோடு கூட்டமாய் படுத்துக் கிடந்தவலை நடுச் சாமத்தில் தட்டி எழுப்பி, போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு போனார்கள்.
“சைலன்ஸ்....” தலையை மட்டும் வெளியே வராந்தாவைப் பார்த்து நீட்டி ராகம் போட்டுச் சொல்லி விட்டு உள்ளே போனான் பியூன்.
எல்லாப் பெண்களும் வரிசையாக எழுந்து நின்று கொண்டார்கள். ஏட்டு அவசர அவசரமாகக் கோர்ட்டுக்குள் போனார். சாரதாவும் அவர்கள் நின்றதைப் பார்த்து நின்று கொண்டாள். கொஞ்ச நேரத்தில் பியூன் வெளியே வந்து அழகம்மையிடம் பேச்சுக் கொடுத்தான். சாரதாவைக் காட்டி ஏதோ கேலி பண்ணினான்.
ஒவ்வொருத்தர் பேராகச் சொல்லிக் கூப்பிட்டார்கள். சாரதாவும் கோர்ட்டார் முன்னால் போய் அந்தப் பெண்களோடு நின்று கொண்டாள்.
“இது என்னய்யா, புதுசா ஒரு ஆளு வந்திருக்காப்ல இருக்கே” என்று சாரதாவைப் பார்த்து ஏட்டய்யாவிடம் கோர்ட்டார் கேட்டார். கோர்ட்டார் சொன்னதைக் கேட்டதும், சட்டப் புஸ்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த வக்கீல்களும் திரும்பிப் பார்த்தார்கள். சாரதாவுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.
ஆளுக்கு ஐந்து ரூபாய் அபராதம் விதித்தார். ஏட்டய்யா ஒவ்வொருவரிடமாக வந்து ரூபாயை வாங்கினார்.
“என்ன முழிக்கே?.... அபராதம் கட்டப் போறீயா, இல்ல உள்ள போறீயா?” என்று சாரதாவைப் பார்த்துக் கேட்டார்.
சாரதா மெதுவாக, “பணம் இல்லை” என்று தலையைக் குனிந்தபடியே சொன்னாள்.
“ராத்திரி எத்தன ரூவா சம்பாதிச்ச? உள்ளதைச் சொல்லு. இல்ல நொறுக்கிருவேன்... அந்தப் பைக்குள்ள என்ன வச்சிருக்க?”
பையைப் பிடுங்கினார். பையிலிருந்து அவளுடைய இரண்டு சேலைகள், உள்பாடிகள், அழுக்கான ஜாக்கெட்டுகள், ஒரு சோப்பு டப்பா, எஸ். எஸ். எல். சி. சர்ட்டிபிகேட் புஸ்தகம், புவனேசுவரி அவளுக்கு எழுதின இன்லேண்ட் லெட்டர் உள்பட எல்லாவற்றையும் தரையில் கொட்டினார். எல்லோரும் அதைக் குனிந்து வேடிக்கை பார்த்தார்கள். அவளுடைய சேலை, உள்பாடி, ஜாக்கெட்டுகளை எல்லாம் உதறி உதறி எடுத்து பைக்குள் திணித்தார். சாரதாவுக்குக் கூச்சமாக இருந்தது. சோப்பு டப்பாவைத் திறந்து அதில் கிடந்த சில்லறைகளை எண்ணிப் பார்த்து, “முப்பத்தி அஞ்சு பைசா இருக்கு ஐயா... முப்பத்தஞ்சு பைசா போக பாக்கிய இன்னைக்கி சம்பாரிச்சுத் தந்திருவா.” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். எல்லோரும் சிரித்தார்கள். அழகம்மை மட்டும் ஏட்டய்யாவுக்குப் பக்கத்தில் வந்து நின்றாள்.
“ஏட்டய்யா.. என்ன ஒரேயடியாத்தான் பேசிக்கிட்டே போறீய. அதப் பாத்தா தெரியலியா? என்னம்போ அகஸ்துமாஸ்தா ஒங்க கையில ஆம்புட்டுக்கிட்டு. நல்ல எடத்துப் புள்ள மாதிரி இருக்கு. எல்லாத்தையும் எடுத்து உள்ள போட்டு பைய அது கையில கொடுங்க. இத்தன ஆம்பளைக முன்னால அது சேல துணிய வெளிய எடுத்துப் போட்டுட்டீங்களே. அது என்னமா ஒடுங்கிப் போயி நிக்கி.... அதுக்குக் கட்ட வேண்டியத நாங் கட்டுதேன். இந்தாங்க. பைய அது கையில குடுங்க.” என்று சொன்னாள் அழகம்மை. ஏட்டு பணத்தை வாங்கி கோர்ட் கிளார்க்கின் கையில் கொடுத்தார். எல்லோரும் வெளியே வந்தார்கள். பியூன் அடுத்த கேஸுக்கு எதிரி பேரைச் சொல்லிக் கூப்பிட்டான்.
சாரதாவுக்கு பேசக் கூட முடியவில்லை. அழகம்மை சாரதாவைக் கூட்டிக் கொண்டு மரத்தடியைப் பார்க்கப் போனாள்.
“என்ன அழகம்மக்கா, கவுல்கெடையா பாப்பாவப் புடிச்சிட்டீக போலிருக்கே.” என்று ஒருத்தி வந்து கேட்டாள்.
”செம்பகம் வாய அடக்கிப் பேசு. ஒன் இதப் பொத்திக்கிட்டு போ தூர.” என்றாள் அழகம்மை. சாரதாவிடம் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள். சாரதாவுக்கு அவர்கள் யார் என்கிறது கூடத்தெரியவில்லை. யாரோ தன்னைப் போல கஷ்டப்பட்ட பெண்கள்தான் அவர்கள் என்று இன்னமும் நினைத்திருந்தாள். அழகம்மை சாரதாவை கோர்ட் கேண்டினுக்கு கூட்டிக் கொண்டு போய் இட்லி வாங்கிக் கொடுத்தாள். ஊருக்குப் போக பஸ் சார்ஜூம் கொடுத்தாள். தனக்குத் தெரிந்த ஒரு சின்னப் பையனைக் கூப்பிட்டாள்.
“அக்காவ ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்கு கூட்டிக்கிட்டுப் போயி பிரம்மதேசம் பஸ்ல ஏத்தி அனுப்பிச்சிட்டு வா. பாப்பா போயிட்டு வாம்மா. எனக்கு இன்னங் கொஞ்சம் கோர்ட்ல வேல இருக்கு” என்று சொன்னாள் அழகம்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக