தமிழில் - புதுமைப்பித்தன்
அவள் ஒரு நாடகக்காரி. அந்தக் காலத்திலே அவளுக்கு யௌவனக் களை மாறவில்லை. குரல் கணீர் என்று இருக்கும். பலர் வந்து போவார்கள். ஆனால் குறிப்பாக நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ் என்பவனுக்குத்தான் அவள் வைப்பாக இருந்து வந்தாள்.
அன்று அவளும் கோல்ப்பக்கோவும் முன்னறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வெயில் சகிக்க முடியவில்லை. கோல்ப்பக்கோவ், அப்பொழுதுதான் சாப்பிட்டுவிட்டு மிகவும் மட்ட ரகமான போர்ட் ஒயின் பாட்டிலைக் காலி செய்ததினால், சிடுசிடு என்று பேசிக் கொண்டிருந்தான். இருவருக்குமே அன்று பேச்சில் லயிப்பில்லை. வெயில் தணிந்தால் வெளியே சென்று காற்று வாங்கிவிட்டாவது வரலாம் என்ற நினைப்புத்தான் இருவருக்கும்.
திடீரென்று வெளிக்கதவை யாரோ படபடவென்று தட்டி உடைத்தனர். கோல்ப்பக்கோவ், பக்கத்து நாற்காலியில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டை எடுத்துக்கொண்டு, வேறு அறைக்குச் செல்லலாம் என்று எழுந்தான். அவன் முகக்குறி, "வெளியில் யார்?" என்று பாஷாவைக் கேட்பது போல் இருந்தது.
"தபால்காரன், அல்லது வேறே யாராவது நம்ம குட்டிகள்" என்றாள் பாஷா.
தபால்காரனாவது அல்லது பாஷாவின் ஸ்திரீ நண்பர்களாவது தன்னை அங்கு கண்டுகொள்வதை, கோல்ப்பக்கோவ் பொருட்படுத்தவில்லை. ஆனால், எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருப்பதற்காகவே, துணிமணிகளைச் சேர்த்து வாரிக்கொண்டு, மற்றொரு அறைக்கு சென்றான்.
பாஷா முன் பக்கம் சென்று வெளிக் கதவைத் திறந்தாள்.
அவள் கதவைத் திறந்ததும், எதிரில் தான் முன்பின் அறியாத அந்நிய ஸ்திரீ நிற்பதைக் கண்டு, ஆச்சரியத்துடன் பார்த்தாள். பாஷாவின் முன் நின்றவள் வாலிப நங்கை; அவளுடைய உடையிலும் நின்ற நிலையிலும் குடும்ப ஸ்திரீ என்று ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.
வந்தவள், முகம் வெளிறிப் போயிருந்தது; 'மூசுமூசு' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். அவள் நெடுந்தூரம் ஓடி வந்தவள் போல் தென்பட்டாள்.
"என்ன வேண்டும்?" என்றாள் பாஷா.
வந்தவள் உடனே பதில் சொல்லவில்லை. முன் ஒரு அடி எடுத்து வைத்து அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். பின்பு சோர்ந்தவள் போல உள்ளே வந்து உட்கார்ந்தாள்; அவளது வெளிறிய உதடுகள் பேசுவதற்கு முயன்று அசைந்தன. ஆனால் அவளால் பேச முடியவில்லை.
நெடு நேரம் கழித்து வந்தவள் தனது சிவந்த கண்களால் பாஷாவின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள். பின்பு, "என் புருஷன்; - அவர் இங்கு வந்தாரா?" என்றாள்.
"புருஷனா?..." என்று ஈனஸ்வரத்தில் எதிரொலித்தாள் பாஷா. அவளது கைகளும் கால்களும் குளிர்ந்து விறைத்தன.
"எந்த புருஷன்?" என்றாள் பாஷா மறுபடியும்.
"என் புருஷன் நிக்கோலாய் பெட்ரோவிச் கோல்ப்பக்கோவ்" என்றாள் அந்த ஸ்திரீ.
"தெ...ரி...யா...து! அம்மா! நான் ஒருவருடைய புருஷனையும் பார்க்கவில்லை" என்றாள் பாஷா.
ஒரு வினாடி இருவரும் மௌனமாக இருந்தனர். அந்த அந்நிய ஸ்திரீ, தனது கைக்குட்டையால் முகத்தைத் துடைத்து, விம்மிக்கொண்டுவரும் அழுகையைக் கைக்குட்டையால் அடக்க முயன்றாள். அவளது முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பாஷாவிற்கும் பயம் அதிகரித்தது. கல்லாய்ச் சமைந்தது போல் நின்றாள்.
"அவர் இங்கே இல்லையென்று சொல்லுகிறாயாக்கும்?" என்றாள் அவள் மறுபடியும். இப்பொழுது அவளது அழுகை அடங்கிவிட்டது; குரல் கணீரென்றது. உதட்டில் ஒருவிதமான புன்சிரிப்பு நிலவியது.
"நீங்கள் யாரைப் பற்றிக் கேட்கிறீர்கள்? ஒன்றும் தெரியவேயில்லையே!" என்றாள் பாஷா.
"சீ! நீ ஒரு மோசமான தரித்திரம் பிடித்த கழுதை!" என்றாள் வந்தவள்.
அவளது முகக் குறி பாஷாவை எப்படி வெறுக்கிறாள் என்பதைக் காண்பித்தது.
"நீ... நீ ஒரு மோசமான கழுதை! கடைசியாக உன் மூஞ்சிக்கி நேரே இதைச் சொல்லுவதற்குச் சமயம் கிடைத்ததே!"
பாஷாவிற்குப் புதிதாக வந்த ஸ்திரீ சொல்லுவது மனத்தில் தைத்தது. உண்மையிலேயே தான், மோசமாக, பார்ப்பதற்கு விகாரமாக இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. உப்பிய கன்னமும், அம்மை வடு நிறைந்த முகமும், என்ன சீவினாலும் பணியாது முகத்தில் வந்து விழும் தலை முடியும், பார்ப்பதற்கு விகாரமாகத்தான் இருக்கும் என்று அவள் மனத்தில் பட்டது. இதனால் வெட்கினாள். சிறிது ஒல்லியாக, நெற்றியில் வந்து விழாத கூந்தலுள்ளவளாக, முகத்தில் நிறைய பவுடர் அப்ப வேண்டாதவளாக இருந்தால், தானும் ஒரு குடும்ப ஸ்திரீ போல் பாவனை செய்ய முடியும் என்று நினைத்தாள். எதிரில் நிற்கும் அந்நிய ஸ்திரீயின் முன்பு நிற்கவும் வெட்கப்பட்டாள் பாஷா.
"என் புருஷன் எங்கே! அவர் இங்கு இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலையே கிடையாது. ஆனால் ஒன்று சொல்லுகிறேன், கேள். பணம் காணாமற் போய்விட்டது. அதற்காக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவரைக் கைது செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். இவ்வளவும் உன் வேலைதான், தெரிந்ததா?" என்றாள் கோல்ப்பக்கோவின் மனைவி.
அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து அங்குமிங்கும் உலாவினாள். அவளைப் பார்ப்பதற்கே பாஷாவிற்குப் பயமாக இருந்தது. அவளுக்கு இன்னதென்றே புரியவில்லை.
"இன்று அவரைக் கண்டுபிடித்து ஜெயிலில் அடைத்து விடுவார்கள்!" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ். அதை நினைக்கும் பொழுதே அவளுக்குத் துக்கமும் கோபமும் நெஞ்சையடைத்தன. "அவரை இந்தக் கதிக்கு ஆளாக்கினது யார்? மோசமான மூதேவி! பண ஆசை பிடித்த ஜடமே!". அவள் மூக்கும் உதடும் தாங்க முடியாத துர்நாற்றத்தை ஏற்றதுபோல நெளிந்து மடிந்தன. "எனக்கு வேறே விதியில்லை! கேட்கிறாயா? எனக்கு வேறே வழியில்லை. இப்பொழுது உன் பக்கத்திலேதான் பலம் இருக்கிறது. ஆனால் உதவியில்லாத என் குழந்தை குட்டிகளைப் பதுகாக்கத் தெய்வம் இருக்கிறது! அவருக்குத் தெரியும். அவர் உனக்குத் தகுந்த கூலி கொடுப்பார்! அனாதை விட்ட கண்ணீர் நிலத்தில் மறையாது. காலம் வரும். அப்பொழுது நீ என்னை நினைப்பாய்!"
பிறகு அந்த அறையில் நிசப்தம் குடிகொண்டது. ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ் கையை நெறித்துக்கொண்டு அறையில் அங்கும் இங்கும் நடந்தாள். பாஷா, பயத்தால் அப்படியே விறைத்துப் போய், தலையில் அப்பொழுதே இடிவிழுமோ என்று நடுங்கி நின்றாள்.
"எனக்கு ஒன்றும் தெரியாது அம்மா!" என்றாள் பாஷா. இந்தக் கோடையிடி போன்ற சூடான வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை. மாலை மாலையாகக் கண்ணீர் வடித்து, குலுங்கிக் குலுங்கிக் கதறினாள்.
"புளுகாதே! எனக்கு எல்லாம் தெரியும்! ரொம்பக் காலமாகத் தெரியும்! போன மாசம் முழுவதும் இங்கேதான் வந்து கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியும்" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்; அவளது கண்கள் தணல் வீசின.
"ஆமாம்! அதற்கென்ன? எத்தனையோ பேர் வருகிறார்கள்! நான் என்ன கையைப் பிடித்தா இழுக்கிறேன்! அது அவரவர்கள் இஷ்டம்!" என்றாள் பாஷா.
"நான் சொல்வதைக் கேள்! ஆபீசில் பணத்தைக் காணவில்லை. அவர் பணத்தைத் திருடிவிட்டார். தரித்திரம் பிடித்த உன் மூஞ்சிக்காக அவர் ஆபீசிலே குற்றத்தைச் செய்திருக்கிறாரே! உனக்கு நியாயம், கட்டுப்பாடு, ஒழுங்கு ஒன்றும் கிடையாது. உன் வாழ்க்கையே மற்றவர்களைக் கஷ்டப்படுத்டுவதுதான். ஆனால் கொஞ்சமாவது இரக்கம் இல்லாமல் உன் நெஞ்சு வெந்து உலர்ந்து போயிருக்காது! அவருக்குப் பெண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் உண்டு. அவரைத் தண்டித்து நாடு கடத்திவிட்டால் (ரஷ்யாவில் ஜாரரசன் ஆட்சியில் திருட்டுக் குற்றத்திற்காகவும் ஸைபீரியா என்ற குளிர்ப் பாலைவனத்திற்கு நாடு கடத்திவிடுவார்கள்) அவர் குழந்தைகளும் நானும் தெருவிலே கிடந்து பட்டினியால் மடிய வேண்டியதுதான். அதை உணர்ந்து கொள்! அவர்களை இந்தக் கதியிலிருந்து தப்புவிக்க ஒரே வழியிருக்கிறது. இன்றைக்கு நான் 900 ரூபிள் (ருஷிய நாணயம்) சம்பாதித்தால் அவரை விட்டுவிடுவார்கள். 900 ரூபிள்கள் தான்!"
"என்ன, 900 ரூபிள்களா?... எனக்குத் தெரியாது... எடுக்கவில்லை" என்றாள் பாஷா.
"நான் உன்னிடம் 900 ரூபிள்கள் கேட்க வரவில்லை, உன்னிடம் பணமில்லை என்று எனக்குத் தெரியும்... மேலும் உன் காசு எனக்கு வேண்டாம்! நான் கேட்பது வேறு! உன்னைப் போன்ற பெண்களுக்கு ஆண் பிள்ளைகள் விலையுயர்ந்தவற்றைப் பரிசளிப்பார்கள். என் புருஷன் உனக்குக் கொடுத்தவைகளை மட்டிலும் திருப்பிக் கொடுத்துவிடு!"
"அம்மா! உன்னுடைய புருஷன் எனக்கு ஒன்றும் கொடுக்கவில்லை" என்று பாஷா கதறினாள். அப்பொழுதுதான் அவளுக்குச் சிறிது புரிய ஆரம்பித்தது.
"கொடுத்த பணம் எல்லாம் எங்கே? அவர் பணத்தையும், என் பணத்தையும் எங்கு கொண்டு தொலைத்தார்? கேள்! உன் காலில் விழுந்து பிச்சையாகக் கேட்கிறேன். கோபத்திலே கண் தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னித்துக்கொள். நீ என்னை வெறுப்பாய்; அது எனக்கு தெரியும். ஆனால் என் நிலைமையை யோசித்து, கொஞ்சம் இரங்கு. காலில் விழுந்து கேட்கிறேன், அவர் கொடுத்த சாமான்களை மட்டும் திருப்பிக் கொடுத்துவிடு."
"உம்" என்று தோளை குலுக்கினாள் பாஷா.
"உனக்குக் கொடுக்கறதில் சந்தோஷந்தான். கடவுள் சாட்சியாகச் சொல்லுகிறேன், உன் புருஷன் எனக்கு வெகுமதி கொடுத்தது கிடையாது. நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுகிறேன். என்னை நம்பு; இருந்தாலும் நீ சொல்வதிலும் கொஞ்சம் உண்மையிருக்கிறது. அவர் ஒன்றிரண்டு சாமான்களை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவைகளை வேண்டுமானால் கொடுத்து விடுகிறேன்," என்றாள் பாஷா.
உடனே மேஜையைத் திறந்து, அதிலிருந்து ஒரு ஜதை தங்க வளையலையும் ஒரு சிவப்புக்கல் பதித்த மோதிரத்தையும் எடுத்தாள்.
"இந்தா!" என்று வந்தவளிடம் அவற்றைக் கொடுத்தாள்.
கோல்ப்பக்கோவ் மனைவியின் முகம் சிவந்து, உதடுகள் துடித்தன. பாஷாவின் நடத்தையால் அவளுக்குக் கோபம் வந்தது.
"என்னிடம் எதைக் கொடுக்கிறாய்? நான் உன்னிடம் தானம் கேட்க வரவில்லை. நியாயமாக உனக்குப் பாத்தியதை இல்லாத, உன் சந்தர்ப்பத்தை வைத்து அவரிடம் கசக்கிப் பிடுங்கிய நகைகளைக் கேட்கிறேன். அன்றைக்கு வியாழக்கிழமை, என் புருஷனுடன் துறைமுகத்திற்கு வந்தாயே; அப்பொழுது நீ போட்டுக்கொண்டிருந்த விலையுயர்ந்த புரூச்சுகளும் கை வளைகளும் எங்கே? ஒன்று மறியாதவள் போல் என்னிடம் பாசாங்கு பண்ணாதே! கடைசியாகக் கேட்கிறேன். அந்த நகைகளைக் கொடுப்பாயா, மாட்டாயா?"
"நல்ல வேடிக்கைக்காரியாக இருக்கிறாய்!"
இப்பொழுது பாஷாவிற்கும் சிறிது கோபம் வந்தது.
"உனது நிக்கோலாய் பெட்ரோவிச்சிடமிருந்து ஒரு நகையாவது நான் பெற்றதில்லை. அவன் வரும்பொழுதெல்லாம் பட்சணந்தான் வாங்கி வருவான்."
"பட்சணமா?" என்று சிரித்தாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.
"வீட்டிலே குழந்தைகளுக்கு வயிற்றிற்கு ஒன்றும் கிடையாது. பட்சணமா உனக்கு; நன்றாக இருக்கிறது? அவர் கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்க முடியுமா, முடியாதா?"
பதில் ஒன்றும் பெறாததினால், அவள் மௌனமாக உட்கார்ந்து யோசித்தாள். கண்கள் வெறிச்சென்று பார்த்தபடி இருந்தன.
"இனி என்ன செய்வது? நான் 900 ரூபிள் சம்பாதிக்காவிட்டால் அவர் கதி அதோகதிதான்... பின்... குழந்தைகள், நான்... எல்லோருக்கும் அந்தக் கதிதான்! அவளைக் கொல்லட்டுமா? காலில் விழட்டுமா?" என்று தனக்குத் தானே பேசிக்கொண்டான் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.
அவளுக்கு அழுகை பொருமிக்கொண்டு வந்தது. கைக்குட்டையை எடுத்து வாயை அமுக்கிக் கொண்டாள்.
விம்மல்களுக்கிடையே, "நான் உன் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீதான் என் புருஷனை நாசப்படுத்தி விட்டாய். அவரைக் காப்பாற்று! அவர் மீது இரக்கமில்லையானால் இந்தக் குழந்தைகளுக்காவது கொஞ்சம் தயவு பண்ணு! குழந்தைகள் உனக்கு என்ன செய்தன?"
குழந்தைகள் ஆதரவற்றுப் பசியால் தெருவில் நின்று கதறுவதுபோல் பாஷாவின் மனக்கண் முன்பு தோன்றியது. குழந்தைகளை நினைத்ததும் பாஷாவிற்கும் துக்கம் வந்தது. அவளும் விம்மியழுதாள்.
"என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்? நான் மோசமானவள், நிக்கோலாய் பெட்ரோவிச்சை நாசப்படுத்தியதாகச் சொல்லுகிறாய்! சத்தியமாக, தெய்வத்தின் மீது ஆணையாக சொல்லுகிறேன் - அவரிடமிருந்து நான் ஒன்றும் பெற்றது கிடையாது. எங்கள் நாடகக் கம்பெனியில் ஒரு பெண்ணைத்தான் பணக்காரன் ஒருவன் வைத்திருக்கிறான்; மற்றவர்கள் எல்லாருக்கும் தினசரி சாப்பாட்டுக்கே கஷ்டம்! நிக்கோலாய் பெட்ரோவிச் படித்தவர், மரியாதைக்காரர், பெரிய மனிதர். அதனால் அவரை வரவேற்றேன். பெரிய மனிதர்கள் எல்லாருக்கும் வரவேற்பளிப்பது எங்கள் கடமை."
"நான் அந்த நகைகளைக் கேட்கிறேன். அவற்றைக் கொடு. நான் உன் காலில் விழுந்து கண்ணீர் விடுகிறேனே. சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டுமானாலும் செய்கிறேன்!"
அவள் குனிவதைக் கண்டு பாஷா பயந்து வீரிட்டாள். இந்தத் தெய்வம் போன்ற ஸ்திரீ நாடகக்காரியின் காலில் விழுவதால் பன்மடங்கு உயர்ந்து விளங்குவதாக மனத்தில் நினைத்தாள்.
"சரி இந்தா நான் கொடுத்து விடுகிறேன்!" என்று பாஷா கண்ணைத் துடைத்துக் கொண்டு மேஜையண்டை ஓடினாள்.
"இந்தா! ஆனால், இவற்றை நிக்கோலாய் பெட்ரோவிச் கொடுக்கவில்லை! வேறொரு பெரிய மனிதர் தந்தார்!" என்று மேஜையுள்ளிருந்த வைர புரூச்சையும், பவள மாலையையும், மோதிரம், கை வளையல் முதலியவற்றையும் எடுத்துக்கொடுத்தாள்.
"இந்தா எல்லாவற்றையும் எடுத்துக் கொள்! ஆனால் இவைகளை உன் புருஷன் கொடுக்கவில்லை. இவைகளை எடுத்துக் கொண்டு போய்ப் பணக்காரராகுங்கள்!" பாஷாவிற்கு, அவள் 'காலில் விழுவேன்' என்றதில் பெருத்த கோபம். "நியாயமாக நீ அவர் மனைவியாக இருந்தால், இவைகளை நீயே கட்டாயம் எடுத்துக்கொண்டு போக வேண்டும்! நீயே வைத்துக்கொள்ள வேண்டும்! அப்படித்தான்! நீயே வைத்துக்கொள்ள வேண்டும்! நான் அவரைக் கூப்பிடவில்லை. அவராக வந்தார்!"
கண்களில் பார்வையை மறைக்கும் கண்ணீர் வழியாகக் கொடுக்கப்பட்ட நகைகளைக் கவனித்து, "இன்னும் பாக்கியிருக்கிறது. இங்கிருப்பவை 500 ரூபிள் கூடப் பெறாது!" என்றாள் ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ்.
உடனே பாஷா மேஜையிலிருந்த தங்கக் கைக் கடிகாரம், சிகரெட் பெட்டி, பொத்தான்கள் எல்லாவற்றையும் எடுத்து எறிந்து, "இவ்வளவுதான்! இனி வேறு ஒன்றும் என்னிடம் கிடையாது. வேண்டுமானால் சோதனை போட்டுக் கொள்ளு!" என்றாள்.
ஸ்ரீமதி கோல்ப்பக்கோவ், ஒரு பெரிய பெருமூச்செறிந்து, நகைகளை எல்லாம் கைக்குட்டையில் சேர்த்து முடிந்து கொண்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாது, வெளியே சென்று விட்டாள். உள் கதவு திறந்தது. கோல்ப்பக்கோவ் அங்கு வந்தான். அவன் முகம் வெளிறியிருந்தது. கசப்பு மருந்தை விழுங்கியவன் போல் தலையை அசைத்துக் கொண்டு நின்றான். அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது.
"நீ எனக்கு என்ன கொடுத்தாய்? எப்பொழுதுதான் வெகுமதி கேட்பதற்கு அனுமதித்தாய்" என்று பாஷா அவன் மீது சீறி விழுந்தாள்.
"வெகுமதி! அதைப் பற்றி இப்பொழுதென்ன? தெய்வமே! உன் காலிலா அவள் விழ வேண்டும்!"
"நீ எனக்கு என்ன வெகுமதி கொடுத்தாய் என்று கேட்கிறேன்" என்று பாஷா மறுபடியும் சீறினாள்.
"தெய்வமே! பெருமையையும் மதிப்பையும் விட்டுவிட்டு இவள் காலில் விழவா! நானல்லவோ அதற்குக் காரணம். இவ்வளவையும் நான் அனுமதித்தேனே!"
கோல்ப்பக்கோவ், தன் தலையைக் கையில் பிடித்துக் கொண்டு, வேதனையால் முனகினான்.
"இதற்கு மன்னிப்பு உண்டா? என்னால் என்னை மன்னித்துக் கொள்ள முடியாது. கிட்ட வராதே! மூதேவி" என்று பாஷாவை உதறித் தள்ளிவிட்டு, "உன் காலிலா விழ வேண்டும்! உன் காலில்! ஐயோ தெய்வமே! உன் காலில்" என்று முனகிக்கொண்டே, அவசர அவசரமாக உடுத்திக் கொண்டு, கதவைத் திறந்து வெளியேறினான்.
பாஷா கீழே விழுந்து புரண்டு ஓலமிட ஆரம்பித்தாள். அவசரத்தில் முட்டாள்தனமாக நகைகளைக் கொடுத்தற்காக வருத்தப்பட்டுக் கொண்டாள். அவளை அவள் மனமே இடித்தது. மூன்று வருஷங்களுக்கு முன்பு ஒரு வியாபாரி தன்னைக் காரணமில்லாது அடித்தது ஞாபகம் வந்தது. அதை நினைத்துக் கொண்டும் இன்னும் அதிகமாக ஓலமிட்டு
அழுதாள்.
அழுதாள்.
***
ஆங்கிலத்தில் படிக்க இங்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக