17 ஜூலை, 2011

மிகப்பெரும் சிறகுகளுடன் ஒரு வயோதிகன்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்(Gabriel García Márquez, )

Gabriel García Márquez,
தமிழில் : ஆர்.சிவகுமார்
கொலம்பிய எழுத்தாளர், பத்திரிகையாளர். 1955-ல் வெளியான லீப் ஸ்டார்ம் Leaf storm என்ற நாவல் மூலம் எழுத்தாளராக அறியப்பட்டார். 1967-ல் வெளியான One hundred years of solitude என்ற நாவல் சர்வதேச புகழ் பெற்றது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் முக்கி ய கூறான Magical Realism இந்த நூலுக்குப் பிறகே அதிக கவனம் பெற்றது. Autumn of the patriarch (1975), chronicle of a Death foretold (1981), love in time of cholera (1985) ஆகியவை இவருடைய மற்ற படைப்புகள். 1982-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
marquez3
வீட்டுக்குள் அவர்கள் கொன்ற ஏராளமான நண்டுகளைக் கடலில் எறிவதற்காக மழை தொடங்கி மூன்றாவது நாள் பெலயோ நனைந்த முற்றத்தைத் தாண்டிப் போனான். இறந்த நண்டுகள் உண்டாக்கிய துர்நாற்றம்தான் பிறந்த குழந்தைக்கு இரவு முழுவதும் காய்ச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு உலகமே சோகமயமாக இருந்தது. கடலும் வானமும் ஒரே சாம்பல் வண்ணத்தில் இணைந்து போயின. மார்ச் மாத இரவுகளில் ஒளித் துகள்களாக மின்னிய கடற்கரை மணல், சேறும் அழுகிய சிப்பியின் நண்டுகளும் கலந்த குழம்பாக மாறியிருந்தது. நண்டுகளை எறிந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவந்தபோது நடுப்பகல் வெளிச்சம் மிகக் குறைவாக இருந்ததால் முற்றத்தின் பின்பகுதியில் அசைந்துகொண்டும் முனகிக்கொண்டும் இருந்தது எது என்று பார்ப்பது கடினமாக இருந்தது. மிக அருகில் போய்ப் பார்த்தபோதுதான் வயதான மனிதன் என்பதை பெலயோ கண்டான். மண்ணில் முகம் பதிய படுத்துக் கிடந்த வயோதிகனால் கடும் முயற்சி செய்தும் எழ முடியவில்லை. அவனுடைய பெரிய சிறகுகள் முயற்சிக்குத் தடையாக இருந்தன.
கோரக்காட்சியால் பயந்துபோன பெலயோ குழந்தையின் காய்ச்சலைக் குறைப்பதற்காக அதன்மீது ஈரத்துணியைப் போட்டு எடுத்துக்கொண்டிருந்த மனைவி எலிùஸண்டாவைக் கூட்டிக்கொண்டு வர ஓடினான். அவளை முற்றத்தின் பின்பகுதிக்கு அழைத்துப் போனான். இருவரும் பேச்சற்ற திகைப்புடன் தரையிலிருந்த உடலைப் பார்த்தார்கள். குப்பை பொறுக்குபவனைப்போல வயோதிகன் உடையணிந்திருந்தான். வழுக்கை மண்டையில் சில வெளுத்த முடிகளும் வாயில் மிகக் குறைந்த பற்களுமே இருந்தன. இருந்திருக்கக்கூடிய பெருமித உணர்வு நனைந்திருந்த குடுகுடு கிழவனின் பரிதாப நிலையால் மறைந்து போய்விட்டது. அழுக்காகவும் பாதி பிடுங்கப்பட்டும் இருந்த பெரிய பருந்துச் சிறகுகள் சேற்றில் சிக்கிக்கொண்டிருந்தன. பெலயோவும் எலிùஸண்டாவும் நீண்ட நேரம் மிக அருகில் பார்த்ததால் சீக்கிரத்திலேயே ஆச்சரியம் நீங்கி சகஜமாகப் பாவிக்க ஆரம்பித்தார்கள். பேசக்கூட முற்பட்டார்கள். மாலுமியின் வலிமையான குரலில் புரிந்துகொள்ள முடியாத மொழி வழக்கில் பதில் சொன்னான். கணவனும் மனைவியும் சிறகுகள் ஏற்படுத்திய அசெüகரிய உணர்வை இப்படியாகத்தான் ஒதுக்கிவிட்டு; சூறாவளியால் உடைந்துபோன வெளிநாட்டுக் கப்பலிலிருந்து வீசியெறியப்பட்டவன் என்று விவேகமாக முடிவு செய்தார்கள். இருந்தாலும் வாழ்வையும் சாவையும் பற்றி எல்லாம் தெரிந்த அண்டைவீட்டுப் பெண்ணைக் கூப்பிட்டு அவனைக் காண்பித்தார்கள். ஒரே பார்வையில் அவள் அவர்களுடைய தவறைச் சுட்டிக்காட்டினாள். ""தேவதூதன். குழந்தைக்காகத்தான் வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். வயோதிகம் காரணமாக மழை அவனைக் கீழே வீழ்த்திவிட்டது'' என்று சொன்னாள்.
பெலயோவின் வீட்டில் உயிருடன் தேவதூதன் பிடிபட்டிருக்கும் விஷயம் அடுத்த நாள் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. விண்ணுலக சதியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களே அந்த நாளைய தேவதூதர்கள் என்று அபிப்பிராயம் கொண்ட அண்டை வீட்டுப் பெண்ணின் கருத்துக்கு மாறாக வயோதிகனை அடித்துக் கொல்ல மனம் வரவில்லை. மாவட்ட நிர்வாகியின் உதவியாளனான பெலயோ தன் குண்டாந் தடியைக் கையில் பிடித்தபடியே சமையலறையிலிருந்து பிற்பகல் முழுக்க கண்காணித்துக் கொண்டிருந்தான். இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக சேற்றிலிருந்து இழுத்துக்கொண்டு போய் கம்பிவலை போட்ட கூண்டுக்குள் கோழிகளோடு அடைத்தான். மழை நடு இரவில் நின்ற பிறகும் பெலயோவும் எலிùஸண்டாவும் நண்டுகளைக் கொன்றுகொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து காய்ச்சல் நீங்கிக் கண்விழித்த குழந்தைக்குப் பசித்தது. தோணியில் மூன்று நாளைக்குத் தேவையான குடிநீரும் வைத்து தேவதூதனை ஏற்றி விதிப்படி நடக்கட்டும் என்று பெருங்கடலுக்குள் அனுப்பிவிட கணவனும் மனைவியும் பெருந்தன்மை பொங்கத் தீர்மானித்தார்கள். ஆனால் விடிந்தவுடன் முற்றத்துக்குப் போய் பார்த்தபோது சுற்று வட்டத்தார் அனைவரும் கோழிக்கூண்டுக்கு முன்னால் திரண்டிருந்ததைக் கவனித்தார்கள். கூட்டம் கொஞ்சம் பயமின்றி கம்பிவலை வழியாகத் தின்பண்டங்களை எறிந்தபடி விளையாடிக் கொண்டிருந்தது. தெய்வீக உயிரினம் என்று கருதாமல் சர்க்கஸ் மிருகத்தைப்போல நடத்தினார்கள்.
விசித்திர செய்தியைக் கேள்விப்பட்ட அருட்தந்தை கொன்ஸôகோ பதற்றமடைந்து ஏழு மணிக்கு முன்பாக வந்து சேர்ந்தார். இதற்குள் விடியற்காலை வந்த கூட்டத்தைவிட குறைவான விளையாட்டுப் புத்தி கொண்ட பார்வையாளர்கள் வந்து அடைத்து வைக்கப்பட்டவனின் எதிர்காலம் குறித்து பலவகையான யூகங்களில் ஈடுபட்டார்கள். அவர்களிலே மிகவும் எளிமையான ஒருவன் வயோதிகனை உலகின் மேயராக்கவேண்டும் என்று நினைத்தான். இன்னும் கொஞ்சம் கண்டிப்புப் பேர்வழிகள் எல்லா யுத்தங்களையும் வெற்றிக் கொள்வதற்காக அவனை ஐந்து நட்சத்திர தளபதியாக்க வேண்டும் என்று எண்ணினார்கள். பிரபஞ்ச நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கும் சிறகுகள் கொண்ட புத்திசாலிகளின் இனமொன்றை பூமியில் உண்டாக்க அவனைச் சினைக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சில கனவுலவாதிகள் ஆசைப்பட்டார்கள். அருட்தந்தை கொன்ஸôகவோ பாதிரியாவதற்கு முன்பு வீரியம் மிக்க விறகு வெட்டியாக இருந்தவர். கம்பிவலை பக்கத்தில் நின்றபடியே சமயத்துறை வினாவிடைப் புத்தகத்தை சில விநாடிகள் மேலோட்டமாகப் பார்த்தார். பிறகு வசீகரமான கோழிக்குஞ்சுகளுக்கு மத்தியில் முதுமையான பெட்டைக் கோழி போலத் தோன்றிய பரிதாபமான வயோதிகனை நெருக்கத்தில் பார்ப்பதற்காகக் கதவைத் திறந்துவிடச் சொன்னார். விடியற்காலையில் வந்த பார்வையாளர்கள் எறிந்த பழத்தோல்கள் மற்றும் காலை உணவின் மிச்சங்கள் ஆகியவற்றுக்கிடையே மூலையில் படுத்துக்கிடந்த அவன் தன் சிறகுகளைச் சூரிய ஒளியில் உலர்த்திக் கொண்டிருந்தான். பாதிரியார் கூண்டுக்குள் நுழைந்து லத்தீனில் காலை வணக்கம் சொன்னபோது மனிதர்களின் துடுக்குத் தனங்களைப் பற்றி கவலைப்படாத அவன் பழமையான கண்களை மட்டும் உயர்த்தி அவனுடைய மொழியில் ஏதோ முணுமுணுத்தான். கடவுளின் மொழியையோ அவருடைய மதகுருமார்களுக்கு எப்படி வந்தனம் சொல்வது என்பதையோ தெரிந்திராத அவனை மோசடிக்காரன் என்று பங்குத்தந்தை சந்தேகப்பட்டார். மிக அருகில் கவனித்தபோது அதிக மனிதச்சாயல் இருப்பதைப் பார்த்தார். அவனிடம் சகித்துக் கொள்ள முடியாத திறந்தவெளி மணம் ஒன்று. சிறகுகளின் பின்புறத்தை புல்லுருவிகள் அடைத்திருந்தன. பிரதான இறகுகள் அண்டவெளியின் காற்றால் சீர்கெட்டிருந்தன. அவனைச் சார்ந்த எதுவுமே தேவதூதர்களின் பெருமித மேன்மைக்கு ஒத்துவரவில்லை. கோழிக்கூண்டிலிருந்து வெளிவந்த அவர் வயோதிகன் மீது ஆர்வம் கொண்டிருந்தவர்கள் கள்ளங்கபடில்லாமல் அவனை நடத்துவதில் உள்ள ஆபத்துகள் குறித்து சிறு பிரசங்கம் செய்தார். சூதுவாது தெரியாதவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்த பிசாசு சில கேளிக்கைத் தந்திரங்களைக் கையாளும் என்பதை நினைவுறுத்தினார். பருந்துக்கும் விமானத்துக்கும் உள்ள வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் சிறகுகள் முக்கிய அம்சம் இல்லையென்றால் தேவதூதர்களை அடையாளம் காண்பதில் இன்னும் அவை முக்கியத்துவம் குறைந்தவை என்று வாதம் செய்தார். என்றாலும் இதுபற்றி பிஷப்புகளுக்குக் கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார். பிஷப் அவருடைய தலைமைக் குருவுக்கும் தலைமைக் குரு போப்புக்கும் எழுதி மிக உயர்ந்த மத நீதிமன்றங்களிலிருந்து இறுதித் தீர்ப்பைப் பெற்றுத் தருவார்கள் என்றும் சொன்னார்.
பாதிரியுடைய விவேகம் பாறை மீது தூவப்பட்ட விதை போலானது. பிடிபட்ட தேவதூதன் பற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவி சில மணி நேரங்களில் பெலயோ வீட்டு முற்றம் சந்தைக்கடையின் ஆரவாரப் பரபரப்பைப் பெற்றது. வீட்டையே தகர்த்துவிடும் அளவுக்குச் சேர்ந்து விட்ட கும்பலைத் துரத்த முனையில் கத்தி பொருத்தப்பட்ட துப்பாக்கிகள் ஏந்தி துருப்புகளை வரவழைக்க வேண்டியதாயிற்று. கும்பல் எறிந்துவிட்டுப் போன குப்பையைப் பெருக்கித் தள்ளியதால் எலிùஸண்டாவின் முதுகுத்தண்டு முறிந்து போனதைப்போல வலித்தது. தடுப்பு போட்டு தேவதையைப் பார்க்க ஐந்து ùஸன்ட் அனுமதிக் கட்டணமாக வசூலிக்கலாம் என்ற எண்ணம் அவளுக்கு அப்போதுதான் உண்டானது.
மிகத்தொலைவிலிருந்து வித்தை காட்டுபவர்களின் கூட்டம் ஊருக்கு வந்தது. கழைக்கூத்தாடி கூட்டத்தின் மீது "சர்சர்' என்று சில முறை பறந்து போனான். யாருமே அவனைக் கவனிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் சிறகுகள் ஒத்தன தேவதூதனுடையவை அன்றி வெüவாலினதை. உலகிலேயே துயரமிக்க நோயாளிகள் ஆரோக்கியம் நாடி வந்தார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே இதயத்துடிப்புகளை எண்ணிக்கொண்டு வந்து தற்போது எண்களே இல்லாமல் போய்விட்ட ஏழைப்பெண், நட்சத்திரங்களின் சப்தம் தொல்லைப்படுத்துவதால் தூங்க முடியாமல் போய்விட்ட போர்த்துக்கீசியன், விழித்திருந்தபோது செய்தவற்றை மாற்றிச்செய்ய இரவில் தூக்கத்தில் நடக்கும் ஒருவன், இவற்றைவிட ஆபத்து குறைந்த நேரங்களில் அவஸ்தைப்படும் மற்றும் பலர் வந்தார்கள். பூமியையே நடுங்க வைத்த அந்தக் கப்பல் விநாசம் ஏற்படுத்திய நிர்மூலத்துக்கிடையில் பெலயோவுக்கும் எலிùஸண்டாவுக்கும் சுகக்களைப்பும் உண்டானது. காரணம் ஒரு வாரத்திற்குள்ளாகவே தங்கள் வீட்டின் அறைகளைப் பணத்தால் நிரப்பியதுதான். தேவதூதனைப் பார்க்கக் காத்திருக்கும் யாத்ரீகர் வரிசை தொடுவானத்தையும் தாண்டிப் போயிற்று.
தன்னுடைய நாடகத்தில் தனக்கே பங்கு இல்லாத நபர் தேவதூதன் ஒருவன்தான். கம்பிவலையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் விளக்குகளும் புனிதச்சடங்கு சார்ந்த மெழுகுவர்த்திகளும் உண்டாக்கிய தாங்க முடியாத வெப்பத்தால் வெகுவாக அவதிப்பட்டாலும் தன்னுடைய கடன் வாங்கிய கூட்டில் முடிந்த அளவு செüகரியத்தை அடைய முயன்றான். முதலில் அவனை அந்துருண்டைகளைச் சாப்பிட வைக்க முயற்சி செய்தார்கள். தேவதூதர்களுக்கு வகுத்துக் கொடுக்கப்பட்ட உணவு அதுதான் என்று புத்திசாலி அண்டைவீட்டுப் பெண் சொன்னதற்கு ஏற்ப அப்படிச் செய்தார்கள். செய்த தவறுகளுக்குக் கழுவாய் மேற்கொள்பவர்கள் அவனுக்காகக் கொண்டு வந்த, போப்பாண்டவர் கொடுத்த, உணவை நிராகரித்ததுபோலவே அந்துருண்டைகளையும் நிராகரித்தான். கடைசியில் கத்திரிக்காய் மசியலைத் தவிர வேறெதையும் சாப்பிடாததற்குக் காரணம் அவன் தேவதூதனாக இருந்ததாலா வயோதிகனாக இருந்ததாலா என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அமானுஷ்யமாக அவனிடம் இருந்த ஒரே நற்குணம் பொறுமைதான். குறிப்பாக சிறகுகளில் பல்கிப் பெருகிய நட்சத்திர மண்டல புல்லுருவிகளைத் தேடி கோழிகள் அவனைக் கொத்திய போதும், உடல் ஊனமுற்றவர்கள் தங்களுடைய ஊனமுற்ற பகுதிகளைத் தொட அவனுடைய சிறகுகளைப் பிடுங்கியபோதும், நிற்க வைத்துப் பார்ப்பதற்காக மேலதிக இரக்க குணம் உடையவர்கள் கூட அவன்மீது கற்களை எறிந்தபோதும் அசாத்திய பொறுமையைக் கடைப்பிடித்தான். ஒரு சமயம் பல மணி நேரங்களுக்கு அசைவற்றுக் கிடந்ததால் இறந்துவிட்டானோ என்று சந்தேகப்பட்டு எருதுக்குச் சூடு போடும் இரும்புக் கம்பியால் விலாவை எரித்தபோதுதான் அவர்களால் அவனை எழுப்ப முடிந்தது. திடுக்கிட்டு எழுந்த அவன் தன்னுடைய மாய உலக மொழியில் அவர்களை வசை பாடினான். கண்களில் நீர் வழிய இரண்டு முறை சிறகுகளை அடித்துக்கொண்டபோது கோழி எச்சமும் நிலாக்கோள தூசியும் கலந்த சூறைக்காற்றும் பீதிப்புயலும் தோன்றின். அவை இந்த உலகைச் சேர்ந்தவையாகத் தோன்றவில்லை. சூடு போட்டதற்கு அவனுடைய எதிர்வினை கோபத்தினாலன்றி வலியால்தான் உண்டானது என்று நிறைய பேர் நினைத்தாலும் அதன் பிறகு அவனைத் தொல்லைப் படுத்தாமலிருப்பதில் விழப்பாக இருந்தார்கள். காரணம், அவனுடைய சாத்வீகம் மாவீரனுக்குரிய சாந்தம் அல்ல, பிரளயத்தின் இளைப்பாறுதல் என்பதைப் பெரும்பான்மையோர் புரிந்துகொண்டதுதான்.
அருட்தந்தை கொன்ஸôகோ வேலைக்காரியின் வக்கணையும் பவ்வயமும் கலந்த வார்த்தைகளை உபயோகித்து தேவதூதனைப் பார்க்க வந்த கூட்டத்தின் துடுக்குத் தனத்தைத் தடுத்து நிறுத்தினார். அதேசமயம் சிறைப்பட்ட தேவதூதனின் தன்மை பற்றிய இறுதித் தீர்ப்பையும் மேலிடத்திலிருந்து எதிர்நோக்கியிருந்தார். ஆனால் ரோமிலிருந்து வந்த கடிதங்கள் எவ்வித அவசரத்தையும் வெளிப்படுத்தவில்லை. கைதிக்கு தொப்புள் இருந்ததா, அவனுடைய மொழி வழக்கு மேற்காசிய மொழி வகையோடு தொடர்பு ஏதும் கொண்டிருந்ததா, குண்டூசியன் தலைக்கு அவனுடைய உடலின் எத்தனை மடங்கு ஈடாகும், அவன் சிறகுகள் கொண்ட வெறும் நார்வேக்காரன்தானா என்பதையெல்லாம் ஆராய்வதிலேயே மேலிடத்தார் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார்கள். பாதிரியாரின் சிக்கல்களுக்குத் தெய்வீக சம்பவம் ஒன்று முற்றுப்புள்ளி வைக்காமலிருந்திருந்தால் அப்படியான அரைகுறையான கடிதங்களே வந்து போய்க்கொண்டு இருந்திருக்கும்.
அப்போதிருந்த பலவகையான கேளிக்கை ஈர்ப்புகளுக்கிடையே பெற்றோர் சொல்லுக்குக் கீழ்படியாததால் சிலந்தியாக மாற்றப்பட்ட பெண் ஒருத்தியைக் காட்சிப் பொருளாக்கும் குழு ஊருக்கு வந்தது. பார்க்க தேவதூதனை விட அவளுக்குக் கட்டணம் குறைவாக இருந்தது மட்டுமின்றி அவளுடைய அபத்தமான நிலை பற்றி அவளைக் கேள்விகள் கேட்கவும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அவளுடைய கோரத்தைப் பற்றிய உண்மையை யாரும் சந்தேகிக்க அவசியம் ஏற்படாமலிருக்க அவளை முழுக்கத் துருவி ஆராயவும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆட்டுக்கடா அளவுக்கு உருவமும் சோகமான இளம் பெண்ணின் முகமும் கொண்ட பயங்கரமான சிலந்தி அவள். அசாதாரண உருவத்தை விடவும் துயரத்தை விவரங்களுடன் உண்மையான வேதனையுடன் சொன்ன விதம் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. குழந்தையாக இருந்தபோது நடனமாடுவதற்காக வீட்டைவிட்டு திருட்டுத்தனமாகப் போனாள். அனுமதியின்றி விடியவிடிய நடனமாடிப் பின் காட்டு வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரமான இடி வானத்தையே இரண்டாகப் பிளந்தது. பிளவின் வழியாக வெளிப்பட்ட கந்தக மின்னல் அவளைச் சிலந்தியாக மாற்றிவிட்டது. தயாள குணமுடைய சிலர் அவளை நோக்கி எறிந்த கொத்துக்கறி உருண்டைகளே அவளுக்குக் கிடைத்த உணவு. மனித அனுபவ மெய்மையும் பயங்கர படிப்பினையும் கொண்ட இப்பெண்ணின் காட்சி, மனிதர்களை அபூர்வமாகவே அன்புடன் பார்க்கும் இறுமாப்பு கொண்ட தேவதூதனின் காட்சியை எளிதாகத் தோற்கடித்தது. மேலும் தேவதூதனால் நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட சில அற்புதங்கள் ஒரு வகையான மனப்பிறழ்வைக் கொண்டிருந்தன. உதாரணமாக, பார்வை திரும்பப் பெறாத குருடனுக்கு மூன்று புதிய பற்கள் முளைத்தது. பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவன் நடப்பதற்கு பதிலாக லாட்டரியில் ஜெயித்தது, தொழுநோயாளியின் புண்களிலிருந்து சூரியகாந்திப் பூக்கள் முளைவிட்டது போன்றவை. இதுமாதிரியான கேலிக்கிடமான, ஆறுதல் பரிசு போன்ற அற்புதங்கள் தேவதூதனின் புகழைச் சிதைத்திருந்தன. இப்படியாகத்தான் அருட்தந்தை கொன்ஸôகோவின் தூக்கமின்மை பூரணமாக நீங்கியது. மூன்று நாட்கள் மழை பெய்தபோது இருந்ததைப்போல பெலயோவின் முற்றம் வெறுமை அடைந்தது. படுக்கையறைக்குள் நண்டுகள் நடந்து திரிந்தன.
வீட்டுச் சொந்தக்காரர்கள் கவலைப்பட காரணமேயில்லை. குளிர் காலத்தில் வண்டுகள் நுழையாதபடி இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட்ட ஜன்னல்களும் தோட்டங்களும் இரும்புச் சட்டங்கள் நிர்மாணிக்கப்பட்ட இரண்டடுக்கு மாளிகை ஒன்றையும் சேமித்த பணத்தில் கட்டினார்கள். நகரத்துக்கு அருகில் பெலயோ முயல் பண்ணை அமைத்து வேலையையும் நிரந்தரமாக விட்டுவிட்டான். அந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அழகான பெண்கள் அணியும் வானவில் வண்ணங்களைக் காட்டும் பட்டு ஆடைகளையும் குதி உயர்ந்த ஸôட்டின் காலணிகளையும் எலிùஸண்டா வாங்கினாள். கோழிக்கூண்டைப் பற்றி மட்டும் அவர்கள் நினைக்கவேயில்லை. கிருமிநாசினி உபயோகப்படுத்திக் கழுவி அடிக்கடி நறுமணப் பிசினை வைத்து அவர்கள் எரித்தது தேவதூதனை வழிபாடு செய்வதற்கு அல்ல. பூதத்தைப் போல எல்லா இடங்களிலும் பரவி புதிய வீட்டைப் பழையதாக மாற்றிக் கொண்டிருந்த கழிவுக் குவியலின் துர்நாற்றத்தைப் போக்கத்தான். முதலில் குழந்தை நடக்கக் கற்றுக்கொண்டபோது கோழிக்கூண்டு அருகில் போகாதவாறு கவனமுடன் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் பிறகு பயம் நீங்கி நாற்றத்துக்குப் பழகிப் போனார்கள். இரண்டாவது பல் முளைப்பதற்கு முன்பாக குழந்தை கோழிக்கூண்டுக்குள் நுழைந்து விளையாடினான். கூண்டின் கம்பிகள் இற்று விழ ஆரம்பித்தன. மற்ற மனிதர்களிடமிருந்து ஒதுங்கியிருந்ததைப் போலவே குழந்தையிடம் இருந்தும் தேவதூதன் ஒதுங்கியே இருந்தான். ஆனாலும் ஏற்பட்ட பெருத்த அவமானங்களை மாயத் தோற்றங்களால் மயங்காத நாயின் பொறுமையோடு சகித்துக் கொண்டான். அவனுக்கும் குழந்தைக்கும் ஒரே சமயத்தில் தட்டம்மை வந்தது. குழந்தையைக் கவனித்த டாக்டருக்கு தேவதூதனுடைய இதயத்தின் சப்தத்தைக் கேட்கும் ஆவலை அடக்க முடியவில்லை. இதயத்திலிருந்து விஸில் சப்தத்தையும் சிறுநீரகங்களிலிருந்து பல வகையான சப்தங்களையும் கேட்ட டாக்டருக்கு அவன் இனி உயிர் வாழ்வது முடியாத காரியம் என்று பட்டது. அவருக்கு அதிக ஆச்சரியத்தை அளித்தது சிறகுகள் மனித உருவத்துக்கு மிக இயல்பாகக் பொருந்தியிருந்ததுதான். மற்ற மனிதர்களுக்கும் ஏன் சிறகுகள் இல்லை என்பதைத்தான் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மழையும் வெயிலும் கோழிக்கூண்டை முற்றிலும் சிதைத்த சில நாட்களுக்குப் பிறகு குழந்தை பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. மரணத் தறுவாயில் இருக்கும் திக்கற்றவனைப்போல தேவதூதன் இங்கேயும் அங்கேயும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தான். படுக்கையறையிலிருந்து துடைப்பத்தால் அவனை அவர்கள் துரத்திய சில விநாடிகளில் சமையலறையில் இருப்பதைப் பார்ப்பார்கள். ஒரே சமயத்தில் பல இடங்களில் அவன் இருப்பதைப்போல உணர்ந்த அவர்கள், தன்னை இரட்டிப்பாக்கிக் கொண்டானோ, தன்னை இனப்பெருக்கம் செய்து கொண்டானோ என்றும் சந்தேகப்பட்டார்கள். எரிச்சலும் மனநலக்கேடும் அடைந்த எலிùஸண்டா தேவதூதர்கள் நிரம்பிய அந்த நரகத்தில் வாழ்வது பயங்கரமானது என்று கத்திச் சொன்னாள். அவனால் அரிதாகவே சாப்பிட முடிந்தது. மூப்புற்ற கண்களில் திரை விழுந்ததால் கம்பங்களில் மோதிக்கொண்டான். இறகுகளே உதிர்ந்து போனதால் நாணற் புல் போன்ற எலும்பமைப்பை சிறகுகள் பெற்றன. பெலயோ இரக்கம் கொண்டு அவன் மீது கம்பளியைப் போட்டு கொட்டகையில் படுத்துத் தூங்க அனுமதித்தான். பிறகுதான் இரவில் அவனுக்குக் காய்ச்சல் வந்ததையும் உச்சரிக்க சிரமமான வார்த்தைகளை அவன் பிதற்றுவதையும் கவனிக்க முடிந்தது. அவர்கள் கலவரமடைந்த சில தருணங்களில் அதுவும் ஒன்று. காரணம் இறந்துவிடப் போகிறான் என்று அவர்கள் நினைத்ததும், இறந்துபோன தேவதூதர்களை என்ன செய்வது என்று புத்திசாலியான அண்டை வீட்டுப் பெண்ணால்கூட சொல்ல முடியாததும்தான்.
இருந்தும் மோசமான குளிர்காலத்துக்கு ஈடுகொடுத்து வாழ்ந்தது மட்டுமன்றி வெயில் காயும் நாட்கள் ஆரம்பித்தவுடன் உடல் ரீதியாக முன்னேறவும் செய்தான். முற்றத்தில் யாரும் பார்க்காத மூலையில் அசைவின்றிப் பல நாட்கள் இருந்தான். டிசம்பர் மாத ஆரம்பத்தில் சிறகுகளில் சோளக் கொல்லைப் பொம்மைக் காக்கையின் இறகுகளைப் போன்ற விரைப்பான இறகுகள் வளர ஆரம்பித்தன. முதுமையின் இன்னொரு துயரமாகத் தோன்றியது. மாற்றங்களுக்கான காரணம் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றங்களை யாரும் பார்க்கக் கூடாது என்பதிலும் நட்சத்திரங்களுக்குக் கீழே சமயங்களில் அவன் பாடிய கடலோடிகளின் பாடல்களை யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் மிக கவனமாக இருந்தான். ஒரு காலையில் எலிùஸண்டா மதிய உணவுக்காக வெங்காயங்களை நறுக்கிக்கொண்டிருந்த போது நடுக்கடலிலிருந்து வந்ததைப் போன்ற காற்று சமையலறைக்குள் வீசியது. ஜன்னலருகே போன அவள் பறப்பதாகத் தேவதூதன் செய்த முதல் முயற்சிகளைப் பார்த்தாள். முயற்சிகள் அலங்கோலமாக இருந்ததால் விரல் நகங்கள் காய்கறிப் பாத்தியில் பள்ளத்தை உண்டாக்கின. சிறகடித்து மேலெழும்பி காற்றில் நிலைகொள்ள முடியாமல் கொட்டகையை இடித்துத் தள்ளி விடுபவன்போல திணறினான். ஆனால் விரைவில் உயரே பறக்க முடிந்தது. வயோதிக வல்லூறின் ஆபத்தான சிறகடிப்போடு அவன் கடைசி வீடுகளைக் கடந்து போனதைப் பார்த்த எலிùஸண்டா அவனுக்கும் தனக்குமான நிம்மதிப் பெருமூச்சை விட்டாள். வெங்காயங்களை நறுக்கிக்கொண்டிருந்தபோது அவனைக் கவனித்தபடியே இருந்தாள். கண் பார்வையிலிருந்து மறையும்வரை பார்த்தாள். ஏனென்றால் அவளுடைய வாழ்க்கையில் இனிமேல் அவன் தொல்லையாக இல்லாமல் கடலின் தொடுவானத்தில் கற்பனைப் புள்ளியாக மட்டுமே இருக்கப் போகிறான்.
*******
நூல்: பிறமொழிக் கதைகள்; தமிழில் : ஆர்.சிவகுமார் பதிப்பகம்: யுனைடெட் ரைட்டர்ஸ்
ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்
flow1

கருத்துகள் இல்லை: