12 ஜூலை, 2011

உலகசினிமாவில் ஒவியர்கள்.-எஸ். ராமகிருஷ்ணன்

உலக சினிமாவில் ஒவியர்கள் என்ற தலைப்பில் பிப்ரவரி 28 அன்று கும்பகோணம் அரசு ஒவியக்கல்லூரியில் நடைபெற்ற கவின்கலை விழாவில் பேசினேன். புகழ்பெற்ற ஒவியர்களை பற்றிய ஆவணப்படங்கள் மற்றும் முழுநீளப்படங்கள் என்ன வெளியாகி உள்ளன. ஏன் ஒவியர்களின் வாழ்க்கை படமாக்கபடுகின்றன என்பதை பற்றியதாக எனது உரை அமைந்திருந்தது.


இந்த நிகழ்வில் மாணவர்கள் மிக உற்சாகத்துடன்  கலந்துரையாடல் செய்தார்கள். முன்னதாக கும்பகோணம் ஒவியக்கல்லூரியின் திறந்த வெளி காட்சிக்கூடத்தில்  சிற்பங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை அந்த சிற்பங்களை  கண்டிருக்கிறேன்.  அப்போது கல்லூரி நேரம் முடிந்துவிட்ட காரணத்தால் முழுமையாக காண முடியவில்லை.

அன்று நிதானமாக ஒவ்வொரு சிற்பமாக பார்த்தேன். அவை அங்கு பயின்ற மாணவர்களின் படைப்புகள் என்றார்கள். நவீன சிற்பங்களும் மரபான சிற்பவகைகளும் இடம் பெற்றிருந்தன. நேர்த்தியான சிற்பங்கள்.

கும்பகோணத்திற்கு செல்பவர்கள் அவசியம் ஒருமுறை ஒவியக் கல்லூரியில் உள்ள சிற்பங்களை காண வேண்டும். பழமையான சோழர்கால சிற்பங்களை காண்பதற்காக கோவில் கோவிலாக செல்லும் நண்பர்களும்  ஒரு முறை மாணவர்களின் படைப்புதிறனில் உருவாகி உள்ள இந்த சிற்பங்களை காணுங்கள். மிக சிறந்த படைப்பு அனுபவத்தை உணருவீர்கள்.

இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நவீன ஒவியத்தின் இன்றைய பயமுறுத்தல்கள், பகட்டுகள் மற்றும் சிக்கலான கோட்பாடுகள் எதையும் அறியாதவர்கள்.  தங்கள் உள்ளுணர்வும் கலைத்திறனையும் நம்பி, ஒவியம், சிற்பத்தை உருவாக்குகிறார்கள்.  பெருநகர ஒவியக்கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட பின்புலமும் ஆர்வமும் கொண்டது இவர்களின் படைப்புலகம்.

எனது உரைக்கு முன்பாக ஒவியர் டாலியும் இயக்குனர் லூயி புனுவலும் இணைந்து உருவாக்கிய சர்ரியலிச சினிமாவான Un chien andalou என்ற பதினேழு நிமிசம் உள்ள குறும்படத்தை திரையிட்டு காட்டினேன்.

அத்துடன் பிகாசோ தனது புகழ்பெற்ற ஒவியங்களை தானே வரைந்து காட்டும் அரிய திரைப்படமான The Mystery of Picasso  படத்திலிருந்து சில பகுதிகளையும், வான்கோவை பற்றி பால்காக்ஸ் இயக்கிய வின்சென்ட் படத்தின் ஒரு பகுதியும் திரையிட்டு அதன் பிறகு வான்கோ, பிகாசோ, டாலி இந்த மூவரையும் முதன்மையாக கொண்டு நவீன உலக சினிமாவை பற்றி பேசினேன்.


வான்கோ தன் சகோதரனுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் மனச்சிதைவுற்ற நிலையில் வான்கோவின் காப்பக நினைவுகள் ஆகியவற்றை நினைவுகூர்ந்து பேசினேன்.


ஒவியர்களை பற்றிய உலகத்திரைப்பட வரிசையில் எனக்கு மிகவும் பிடித்தமான நான்கு படங்களான GIRL WITH A PEARL EARRING  என்ற வெர்மரின் ஒவியம் பற்றிய திரைப்படம். ப்ரைடா காலோவை பற்றி சல்மா ஹைக் நடித்த FRIDA என்ற திரைப்படம், JANG Seung-up   என்ற கொரிய ஒவியரை பற்றிய Chihwaseon கோயாவை பற்றிய கார்லோஸ் சுராவின் Goya en Burdeos  படம் பற்றி தனித்து விவரித்தேன்.

இத்துடன் மாணவர்களுக்கு உதவியாக நவீன ஒவியர்களை பற்றிய ஐம்பது சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றினையும் தந்தேன்.


இந்த விழாவினை சென்னை ஒவியக்கல்லூரி முதல்வர் ஒவியர் சந்துரு மற்றும் கும்பகோணம் ஒவியக்கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். 

இந்த நிகழ்வின் இன்னொரு மறக்கமுடியாத அம்சம் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்த போது ஒரு ஆட்டோ ஒட்டுனர் புன்சிரிப்புடன் அருகில் நிறுத்தி நீங்கள் எஸ்ராமகிருஷ்ணன் தானே என்று கேட்டார். ஆமாம் என்றதும் உங்கள் பேச்சை கேட்பதற்காக வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். கல்லூரி என்பதால் அனுமதிப்பார்களா என்று தயக்கமாக இருந்தது என்று சொல்லியபடியே உங்களது புத்தகங்களை எல்லாம் வாசித்திருக்கிறேன் என்று  ஆட்டோவில் என்னையும் மற்ற பேராசிரியர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

வழி முழுவதும் எனது புத்தகங்கள் பற்றியே பேசிக் கொண்டுவந்தார். தனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகம் என்றும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன் என்றபடியே கும்பகோணத்தில் உள்ள  பரபரப்பான பஜார் ஒன்றில் ஆட்டோவை நிறுத்தி விட்டு திடீரென ஆள் காணாமல் போய்விட்டார்.

எங்கே போனார் என்று புரியாமல் ஆட்டோவில் இருந்தோம். அவசர அவசரமாக ஒடிப்போய் அருகில் உள்ள ஜெயஸ்ரீ புத்தக நிலையத்திலிருந்து என்னுடைய  விழித்திருப்பவனின் இரவு புத்தகத்தின் பிரதி ஒன்றை வாங்கி வந்து அதில் என்னுடைய கையெழுத்து வேண்டும் என்று கேட்டார். ஆச்சரியமாக இருந்தது. கையெழுத்து போட்டு தந்தேன். ரொம்ப நல்லா எழுதுறீங்க சார் என்று கைகுலுக்கிவிட்டு  ஆட்டோவிற்கான கட்டணத்தை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டு தனக்கு இன்னொரு சவாரி இருக்கிறது என்று விடை பெற்றுச் சென்றார்.

சீனிவாசன் என்ற அந்த ஆட்டோ ஒட்டுனருக்குள் இருந்த புத்தகங்களின் மீதான விருப்பமும் என் படைப்பின் மீது உள்ள நெருக்கமும் என்னை நெகிழ வைத்தது. எனக்கு கிடைத்துள்ள  இலக்கிய விருதுகளை விடவும் இந்த பாராட்டு முக்கியமானது என்று தோன்றியது,

நிச்சயம் அன்று பகலுக்குள் ஆட்டோ ஒட்டி அவர் நூறு ரூபாய் சம்பாதித்து இருக்க கூடும். அந்த நிலையிலும் கூட 110 ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற அவரது உத்வேகம்  மிகவும் பாராட்டபட வேண்டியது.

சீனிவாசன் போன்ற வாசகர்களின் இருப்பு தான் எழுத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. நான் தான் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டியவன்.

உலக சினிமாவில் ஒவியர்கள் பற்றிய எனது புத்தகம் சித்திரங்களின் விசித்திரங்கள் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதை உயிர்மை ஆன்லைனில் வாங்க இயலும்.

ஒவியர்கள் குறித்த உலக சினிமா பற்றிய எனது பரிந்துரை பட்டியல் இது.


Films About Painters

  1. The Mystery of Picasso – Henri-Georges Clouzot
  2. LUST FOR LIFE -Directed by Vincente Minnelli
  3. GIRL WITH A PEARL EARRING – Film on Vermeer – Directed by Peter Webber
  4. Goya en Burdeos – Director: Carlos Saura
  5. FRIDA – Directed by Julie Taymor
  6. BASQUIAT -Directed by Julian Schnabel
  7. GOYA`S GHOST -Directed by Milos Forman
  8. Un chien andalou – Luis Buñuel and Dali
  9. Destino- animation by dali
  10. Vincent: A Film by Paul Cox
  11. Chihwaseon -Director: Im Kwon Taek – Korean painter.
  12. Camille Claudel – directed by Bruno Nuytten
  13. Edourd Manet: Painter of Modern Life.- documentary
  14. Modigliani-Director: Mick Davis
  15. Vincent and Theo: A Film by Robert Altman (1990)
  16. Vincent The Full Story: Documentary by Waldemar Januszczak
  17. The Eyes of Van Gogh -directed by Alexander Barnett
  18. Caravaggio -Director: Derek Jarman
  19. Pollock- Directed by Harry Moses
  20. Surviving Picasso-Directed by James Ivory
  21. Love is the Devil: Study for a Portrait of Francis Bacon
  22. The Agony and the Ecstasy -Director: Carol Reed
  23. Dreams by Akira Kurosawa – Van Gogh`s “Crows”
  24. Paul Gauguin – The Savage Dream
  25. Paradise Found- Directed by Mario Andreacchio
  26. Rembrandt – directed by Alexander Korda
  27. Rembrandt- Charles Matton
  28. Piet Mondrian- documentary  -Artists Of The 20th Century Series
  29. Marcel Duchamp- documentary- Artists Of The 20th Century -
  30. Impressionists: Renoir- Artists Of The 20th Century Series
  31. Cezanne In Provence- Documentary,
  32. Andy Warhol – Artists of the 20th Century- Series
  33. Pablo Picasso – Artists of the 20th Century – Series
  34. Wassily Kandinsky (Artists of the 20th Century) – Series
  35. Paul Klee (Artists of the 20th Century)- Series
  36. Norman Rockwell – Painting America Director: Elena Mannes
  37. Bruegel- BBC – Three Painters, Series
  38. Matisse – Three Painters, Series – BBC
  39. Goya – Three Painters, Series-– BBC
  40. Painter Rabindranath – A Film by Sukanta Roy
  41. Frida Kahlo- By: Sada Thompson – Portrait of an Artist series
  42. The Life and Death of  Frida Kahlo –  Produced By: Karen and David Crommie
  43. Dance of Life -Edvard Munch- Director Anja Breien
  44. Andrei Rublev -Andrei Tarkovsky – Russia
  45. Artemisia – Directed by Agnès Merlet
  46. Klimt – John Malkovich act as  klimt. Usa.
  47. Japser Johns: Take an Object -Museum of Modern Art
  48. Our city dreams – women artists who live in New York:
  49. Moulin Rouge-1952 – Toulouse-Lautrec,
  50. Rang Rasiya. – life of Raja Ravi Varma. Director Ketan Mehta

**s.ramakrishnan

கருத்துகள் இல்லை: