தமிழில்: க.நா.சுப்ரமண்யம்
சரிவான பாதையிலே தூரத்தில் தன்னை நோக்கி ஏறி வந்த இருவரையும் பார்த்துக்கொண்டு நின்றார் ஆசிரியர். ஒருவன் குதிரை மேல் வந்தான்; மற்றொருவன் நடந்து வந்தான். இன்னும் செங்குத்தான குன்றை அவர்கள் அடையவில்லை. அதைத் தாண்டியே அவர்கள் பள்ளிக்கூடத்தை அடைய முடியும். ஏறி வருவது சிரமமான காரியம்தான். பனி வேறு பெய்ததால் சற்று மெதுவாகவே வந்தனர் அவர்கள். மனித சஞ்சாரமேயற்ற சரிவு அது. காலடியிலிருந்த கற்களில் குதிரை அடிக்கடி இடறிற்று. காதில் எதுவும் விழவில்லை - ஆனால் குதிரையின் மூச்சுக்காற்று வெண்மையான பனிப்படலமாகத் தெரிந்தது. ஒருவனுக்கு வழி தெரியும்போல இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னரே பனிக்கடியில் பாதை மூடிவிட்டது. எனினும் பாதை தெரிந்தே வந்தனர் அவர்கள். குன்றேறி வர அவர்களுக்கு அரைமணி நேரமாவது ஆகும் என்று எண்ணினார் ஆசிரியர். குளிராக இருந்ததால் உள்ளே போய், தனக்கு அணிந்துகொள்ள ஒரு ஸ்வெட்டர் எடுத்து வந்தார். குளிர்ந்து காலியாக இருந்த வகுப்பறையைத் தாண்டினார். கரும்பலையில் நாலு வர்ணங்களில் ஃபிரான்சு தேசத்து நாலு நதிகளும் மூன்று நாட்களாகக் கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. எட்டு மாதங்களாக மழையோ, மேகமோ இல்லாதிருந்தது - திடீரென்று மூன்று நாட்களுக்கு முன் பனிப்புயல் வீசியது - அக்டோபர் மத்தியில் சுற்று வட்டத்து மலைச்சரிவுகளிலே வசித்த இருபது மாணவர்களும் வருவதையே நிறுத்தி விட்டார்கள். பனி ஓய்ந்த பின் அவர்கள் வருவார்கள். தனக்கு வசிக்க இருந்த ஒரே அறையில் மட்டும் கணப்பு மூட்டி உஷ்ணமாக்கி வைத்திருந்தார் ஆசிரியர் டாரு. வகுப்பறைக்குப் பக்கத்து அறை அது. மலைமேல் போக கிழக்கே வாசல் இருந்தது. வகுப்பறை ஜன்னல்கள் போலவே அவர் அறை ஜன்னல்களும் தெற்கு நோக்கியிருந்தன. பனியில்லாத தெளிவான நாட்களில் மலைத்தொடருக்கப்பால் பாலைவனம் போகும் பள்ளத்தாக்கு தெரியும் - அந்த ஜன்னல் வழியாக.
அறையில் உஷ்ணக் கதகதப்பு ஏறியதும் டாரு முதலில் அந்த இரண்டு மனிதர்களைக் கண்ட ஜன்னலுக்குத் திருப்பினார். அவர்கள் இப்போது கண்ணில் படவில்லை. கடைசிக் குன்று ஏறத் தொடங்கியிருப்பார்கள். வானம் அவ்வளவு இருட்டாக இல்லை - பனி விழுவது சற்றே நின்றிருந்தது. அழுக்குப் படிந்த ஒளியோடு தொடங்கிய காலைப் பொழுது, மேகங்கள் அகன்றும் இருட்டாகவே தான் இருந்தது - ஒளி கூடவில்லை. மாலை இரண்டு மணிக்கும் கூட அப்போதுதான் பொழுது விழுந்ததுபோல இருந்தது. ஆனாலும் முந்திய மூன்று நாட்களையும் விட இது தேவலை. இருளும் அடர்ந்து பனியும் விழுந்து கொண்டிருந்தது அந்த மூன்று நாட்களும். காற்றும் விட்டுவிட்டு விசிறி விசிறி அடித்துக் கொண்டிருந்தது. தன் அறையிலேயே நெடுநேரம் டாரு முடங்கிக் கிடக்க வேண்டியதாக இருந்தது - வேறு எதுவும் செய்வதற்கில்லை. அவசியமானால் கணப்புக்குக் கரி கொணரவோ அல்லது கோழிக்குஞ்சுகளுக்குத் தீனி வைக்கவோ போனார் கொட்டகைக்கு. அதிருஷ்டவசமாக டாஜ்டிட்டிலிருந்து சாமான்கள் கொண்டு வரும் ட்ரக் இரண்டு நாட்களுக்கு முன்தான் வந்து போயிருந்தது. வடக்கே அருகிலுள்ள கிராமம் டாஜ்டிட்தான். இன்னும் இரண்டு நாள் கழித்து டிரக் மேலும் தேவையான சாமான்களைக் கொண்டு வரும்.
தவிரவும் அங்கு ஒரு முற்றுகை நேர்ந்துவிட்டால் கூடச் சமாளித்துக் கொள்வதற்கும் போதுமான உணவுப் பண்டங்கள் இருந்தன. மழை பெய்யாத காரணத்தால் விளைச்சல் காணவில்லை. விளைச்சல் காணாது பட்டினி கிடக்க வேண்டி வந்துவிட்ட அவர் மாணவர்களின் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு என்று பள்ளி ஆசிரியருக்கு அரசாங்கம் தந்திருந்த கோதுமை மூட்டைகள் அந்தச் சின்ன அறையிலே அங்குமிங்குமாக அடைத்துக் கொண்டு கிடந்தன. உண்மையில் அவர்கள் எல்லோருமே ஏழைகள் என்பதனால் பஞ்சத்திலடிக்கப்பட்டவர்கள்தான். ஒவ்வொரு நாளும் டாரு குழந்தைகளுக்குத் தானியத்தை அளந்து - இவ்வளவென்று - தருவார். இந்த மூன்று நாட்களும் அது கிடைக்காததால் அவர்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள். யாராவது பெற்றவனோ, சகோதரனோ தானியம் வேண்டும் என்று மாலையில் வந்தாலும் வருவான். அடுத்த அறுவடை வரையில் அவர்கள் சமாளிக்க வேண்டுமே! கப்பல் கப்பலாக ஃபிரான்சிலிருந்து கோதுமை வந்தது. பஞ்சத்தின் மோசமான நாட்கள் தீர்ந்து விட்டன. ஆனால் அந்தக் கடும் ஏழ்மையை மறப்பது என்னவோ சிரமம்தான். சூரிய ஒளியிலே கந்தலாடை உடுத்தி கண்குழி விழுந்த பட்டினிப் பட்டாளத்தை மறக்க இயலுமா? மழையில்லாமல் தீய்ந்து கருகிய நிலமும், புழுதி எழுப்பிய வயல்களும் காலடியிலே கல்லு கூடப் பொடியாகும் நிகழ்ச்சியும் மறப்பதற்கில்லை. ஆயிரக்கணக்கான ஆடுகள் இறந்தன. சில மனிதர்களும்தான் -எத்தனை, எங்கே என்று ஒருவருக்கும் தெரியாது.
இந்த ஏழ்மையோடு ஒப்பிடும்போது இத்தனை தனிமையான இடத்தில் பள்ளிக்கூடம் நடத்திக்கொண்டிருந்த தன்னை ஒரு பிரபு என்றுதான் சொல்ல வேண்டும். தனக்குக் கிடைத்தது,இருந்தது போதுமென்ற மனத்துடன் வாழ்ந்தார் அவர். இந்தக் கடினமான வாழ்வு அவருக்கு உகந்ததாக இருந்தது. அவர் சுவர்கள் வெள்ளை வைத்திருந்தன. படுத்து உறங்க குறுகிய கட்டில் - வர்ணம் தீட்டாத மர அலமாரிகள் -பின் பக்கத்துக் கிணறு - வாரத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களும் குடிநீரும் - இதுதான் அவர் வாழ்வு . திடீரென்று பனிபெய்யத் தொடங்கியது - மழை என்கிற சுவடேயில்லாமல். இந்தப் பிராந்தியமே அப்படித்தான். இங்கு வாழ்க்கை மகா கடினமானது. மனிதர்களும் மோசந்தான். அவர்கள் இருப்பதால் இப்பிரதேசத்து வாழ்வு சுலபமாகி விடுவதில்லை. ஆனால் டாரு இந்த வாழ்க்கைக்கே பிறந்தவர் - அவர். மற்றவர்களைத்தான் அந்நியப் பேர்வழிகளாக உணர்ந்தார்; வேறு இடத்துக்குப் போனால் தன்னை அந்நியனாக உணர்ந்தார்.
பள்ளிக் கட்டிடத்து வெளி வராண்டாவில் வந்து நின்றார் அவர். குன்றில் பாதிவழி ஏறி வந்து கொண்டிருந்தனர் இருவரும். குதிரை மேல் வந்தது பால்டுச்சி - போலீஸ்காரன். அவனை வெகுநாட்களாகவே அவருக்குப் பழக்கமுண்டு. இரண்டாவது பேர்வழி ஒரு அராபியன் - அவனைக் கயிற்றில் பிணைத்துக் கயிற்றின் ஒரு கோடியைத் தன் கையில் பிடித்திருந்தான் பால்டுச்சி; அராபியனின் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன; தலை குனிந்தபடியே குதிரைக்குப் பின் நடந்து வந்தான் அவன். டாருவைப் பார்த்துக் கையை ஆட்டினான் போலீஸ்காரன் - அதற்குப் பதில் சைகை செய்யவில்லை அவர். வெளிரிட்ட நீல ஜெல்லாபா சட்டை அணிந்து, காலில் செருப்புகளுடன், ஆனால் கனமான கம்பளி ஸôக்ஸ் அணிந்து தலையில் சேச்சே முண்டாசு கட்டியிருந்த அந்த அராபியனையே பார்த்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவராக நின்றார் டாரு. அவர்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். அராபியனை வேகமாக இழுத்துக் குதிரை துன்புறுத்தாத வண்ணம் அதை அடக்கிப் பிடித்துக்கொண்டு மெதுவாகவே வந்தான் போலீஸ்காரன்.
கூப்பிடு தூரத்தில் வந்ததும் பால்டுச்சி உரக்கச் சொன்னான். ""எல் அமேரிலிருந்து இந்த மூன்று கிலோ மீட்டர்களையும் கடக்க ஒரு மணி நேரமாயிற்று'' என்று கூவினான். டாரு பதில் தரவில்லை. தடித்த ஸ்வெட்டரை அணிந்துகொண்டு குள்ளமாக, சற்று தூரமாகக் காட்சியளித்தபடி நின்ற அவர் அவர்கள் தன்னை அணுகுவதைக் கவனித்துக் கொண்டே நின்றார். அராபியன் ஒரு தடவை கூடத் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. பள்ளிக் கட்டிட வாசலை அவர்கள் அடைந்ததும், ""ஹலோ'' என்றார் டாரு. ""உள்ளே வாருங்கள். குளிருக்கு அடக்கமாக, கதகதப்பாக இருக்கும்'' என்றார். கையில் பிடித்திருந்த கயிறு முனையை விட்டுவிடாமல் கீழே குதித்தான் பால்டுச்சி. அவன் கால்களில் வலி கண்டிருந்தது போலும். குத்திட்டு நின்ற மீசைக்குக் கீழே அவன் உதடுகள் டாருவைக் கண்டு புன்சிரிப்பால் மலர்ந்தன. பழுப்பேறிய நெற்றிக்குக் கீழே சிறிய இருண்ட கண்கள். முகவாய்க்கட்டை உதடுகளைச் சுற்றி பல சுருக்கங்கள் விழுந்திருந்தன. தோற்றத்தில் அவன் ஒரு ஆராய்ச்சி மாணவன். புஸ்தகப்புழு என்று கூடச் சொல்லலாம் போல இருந்தது. டாரு குதிரை லகானைப் பிடித்து அதைப் பின்பக்கம் கொட்டகைக்கு இழுத்துச் சென்றார். பிறகு வந்து இருவருடனும் பள்ளியில் அறையில் சேர்ந்து கொண்டார். பின்னர் அவர்களைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றார். ""வகுப்பறையை உஷ்ணமாக்குகிறேன். இதைவிட அது செüகரியமாக இருக்கும் நமக்கு'' என்றார். மீண்டும் அவர் தன் அறைக்குள் வந்தபோது, பால்டுச்சி ஆசனத்தில் வீற்றிருந்தான். அராபியனுடன் தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டிருந்தான். அராபியன் கணப்பருகில் குந்தியிருந்தான். அவன் கைகள் இன்னமும் கயிற்றால் கட்டப்பட்டேயிருந்தன. "சேச்சே' முண்டாசை சற்று மேலுக்குச் சாய்ந்தாற் போலத் தள்ளியிருந்தான். ஜன்னல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் டாருவின் கண்களில் பட்டது அவனுடைய தடித்த உதடுகள்தான். வழுவழுப்பாக நீக்ரோ உதடுகள் போலத் தடித்திருந்தன அவை. முண்டாசுக்குக் கீழே இருந்த நெற்றி அவன் பிடிவாதக்காரன் என்பதை அறிவுறுத்தியது. குளிரால் வர்ணம் சற்றுப் போன தடித்ததோல், அவன் முகத்திலே ஒரு அமைதியின்மையும், புரட்சி பாவமும் இருந்தது என்று டாரு கவனித்தார். தன்னை நேருக்கு நேர் நிமிர்ந்து அந்த அராபியன் பார்த்தபோது அப்படித்தான் டாருவுக்குத் தோன்றியது.
""அடுத்த அறைக்குப் போ''.
""நான் உனக்குக் கொஞ்சம் மிண்ட் தேநீர் தயாரித்துத் தருகிறேன்'' என்றார் டாரு.
""தாங்க்ஸ்'' என்றான் பால்டுச்சி. ""என்ன தொல்லை இந்த வேலையிலே? எப்படா ரிடையர் ஆகப் போகிறேன் என்று இருக்கிறது.'' தனது கைதியை நோக்கி அராபிய மொழியில் கூறினான். ""வா! வா! நீயும்தான்'' என்றான்.
அராபியினும் எழுந்தான்; மெதுவாகக் கட்டப்பட்ட தன் கைகளை முன்னால் நீட்டிக் கொண்டு வகுப்பறைக்குள் சென்றான். தேநீருடன் டாரு ஒரு நாற்காலியையும் கொண்டு வந்தார். ஆனால் பால்டுச்சி மிகவும் அருகிலிருந்த ஒரு மாணவனுடைய சரிவு மேசையின் மேல் வீற்றிருந்தான் -கணப்பைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். கணப்போ மேஜைக்கும் ஜன்னலுக்கும் இடையில் இருந்தது. கைதியின் பக்கம் தேநீரை நீட்டுகிறபோது டாரு அவன் கட்டப்பட்ட கைகளைக் கண்டு சற்று தயங்கினார்.
""கட்டை அவிழ்த்துவிடலாமே!''
""அவிழ்த்துவிடலாம். பிரயாணத்தை உத்தேசித்துக் கட்டியதுதான்'' என்றான் பால்டுச்சி.
அவன் எழுந்திருக்க முயன்றான். அதற்குள் டாரு அந்த அராபியன் பக்கத்தில் மண்டியிட்டு, தேநீர்க் கோப்பையைத் தரையில் வைத்துவிட்டு, கைகளைக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டார். ஒரு வார்த்தையும் பேசாமல், ஜுரம் அடித்தவனுடையது போன்ற கண்களுடன் அராபியன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். கைகள் விடுவிக்கப்பட்டதும் கட்டின் இறுக்கத்தால் வீங்கியிருந்த மணிக்கட்டுகளைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான். தேநீர்க் கோப்பையை எடுத்து சூடான தேநீரை அவசர அவசரமாக விழுங்கினான்.
""நல்லது'' என்றார் டாரு. ""நீ எங்கே கிளம்பினாய்?'' தேநீர்க் கோப்பையிலிருந்து மீசையை வெளியே எடுத்தான் பால்டுச்சி.
""இங்கேதான் ஐயனே!''
""வேடிக்கையான மாணவர்கள்தான்! இரவு இங்கு தங்குவீர்களா?'' ""இல்லை. நான் அல்மேருக்குத் திரும்பிப் போகிறேன். ஆசாமியை நீ டாஜ்டிட்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவனைப் போலீஸ் தலைமைக் காரியாலயத்தில் எதிர்பார்க்கிறார்கள்.''
பால்டுச்சி டாருவைப் பார்த்து ஒரு தோழமையுடன் சிரித்தான் ""இது என்ன கதை இது? என்னிடம் விளையாடுகிறாயா நீ?'' என்றார் டாரு.
""இல்லை ஐயனே! எனக்குக் கிடைத்த உத்தரவு இதுதான்.''
""உத்தரவா! யாருக்கு? எனக்கா?'' டாரு தயங்கினார். அந்தக் கிழட்டுக் கார்ஸிகன் போலீஸ்காரனுக்கும் வருத்தம் தர அவர் விரும்பவில்லை. ""அதாவது, அது என் வேலையில்லையே!''
""என்ன? அப்படியென்றால் என்ன அர்த்தம்? யுத்த காலத்தில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியதுதான்.''
""யுத்த காலம் வரும் வரையில் நான் காத்திருக்கிறேன்.''
பால்டுச்சி தலையை ஆட்டினான்.
""அது சரி. ஆனால் உத்தரவு இருக்கிறது - உன் அளவிலும்தான். ஏதோ விசேஷம் இருக்கிறது என்று தோன்றுகிறது. புரட்சி ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு அம்சத்தில் யுத்த காலம்தான்.''
டாரு இன்னமும் பிடிவாதமாகவே காணப்பட்டார்.
""கேளும் ஐயனே!'' பால்டுச்சி சொன்னான். "" எனக்கு உன்னைப் பிடிக்கும், இருந்தாலும் நீ விஷயத்தைப் புரிந்து கொள்ள முயலவேண்டும். எல் அமேரில் நாங்கள் ஒரு டஜன் பேர்வழிகள்தான் இருக்கிறோம். பொறுப்பு பூராவும் எங்களுடையது. ஆகவே நான் அதிகநேரம் அங்கிருந்து அப்பால் போய்விட முடியாது. இந்த மனிதனை உன்னிடம் ஒப்புவித்து விட்டு தாமதமன்னியில் திரும்பச் சொல்லி எனக்கு உத்தரவு. அங்கு அவனை வைத்திருக்க இயலாது - அவன் கிராமத்தவர் அசையத் தொடங்கிவிட்டனர். அவனை விடுவித்துக் கொண்டு போக அவர்கள் தயாராக இருந்தனர். நாளை மாலைக்குள் அவனை டாஜ்டிட்டில் கொண்டு போய்ச் சேர்த்துவிட வேண்டும். உன்னைப் போல பலசாலிக்கு இருபது கிலோ மீட்டர்கள் பற்றிக் கவலை என்ன வந்தது? அதற்குப் பிறகு உன் மாணவர்களை நாடி உன் செüக்கியமான வாழ்வுக்குத் திரும்பிவிடலாம்.''
சுவருக்கு அப்பால் குதிரை கனைப்பதும், பூமியைக் காலால் உதைப்பதும் காதில் விழுந்தது. டாரு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார். பனி மூட்டம் விலகி, மலைகள் மேல் வெய்யில் ஒளிபடரத் தொடங்கிவிட்டது. பனிப்புயல் அகன்றுவிடும். பனியெல்லாம் உருகிய பின்னர், மீண்டும் சூரியன் ஆட்சி தொடங்கிவிடும். மனிதன் வரமுடியாத பிரதேசமாகி விடும் அது மீண்டும்.
""அது சரி - அவன் என்ன செய்தான்?'' என்று பால்டுச்சியைப் பார்த்துக் கேட்டார் டாரு. ஆனால், போலீஸ்காரன் பதில் சொல்ல வாயைத் திறக்கும்முன், ""அவன் ஃபிரெஞ்சு பேசுவானா?'' என்றார்.
""தெரியாது - ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அவனை ஒரு மாதமாகத் தேடிக் கொண்டிருந்தோம். } அவன் கிராமத்தார் அவனை ஒளித்து வைத்திருந்தனர். அவன் தனது உறவினன் ஒருவனைக் கொன்றுவிட்டான்.''
""தெரியாது - ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அவனை ஒரு மாதமாகத் தேடிக் கொண்டிருந்தோம். } அவன் கிராமத்தார் அவனை ஒளித்து வைத்திருந்தனர். அவன் தனது உறவினன் ஒருவனைக் கொன்றுவிட்டான்.''
""நமக்கு எதிரியா அவன்?''
""இல்லை என்று எண்ணுகிறேன். ஆனால் இதெல்லாம் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.''
""எதற்காகக் கொன்றான்?''
""ஏதோ குடும்பத் தகராறு. ஒருவன் மற்றவனுக்குத் தானியம் தர வேண்டுமாம். அப்படி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு அரிவாளால் சீவிவிட்டான் - கழுத்தை வெட்டிவிட்டான். "சதக்' என்று ஆட்டின் கழுத்தைச் சீவுவதைப் போல.''
தன் கழுத்தில் கை வைத்து எப்படி என்று இழுத்துக் காட்டினான் பால்டுச்சி. இதைக் கண்ட அராபியன் கவலையுடன் அவனைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். டாருவுக்குத் திடுதிப்பென்று கோபம் வந்தது - அழுகிப் போன வஞ்சம் என்றும், சகமனிதனிடம் வெறுப்பு என்றும், ரத்த வெறி கொண்டும் செயல்படுகிற மனிதர்கள் மேல் வெறுப்புத் தோன்றியது.
ஆனால் அடுப்பின் மேலே கெட்டில் பாடியது. பால்டுச்சிக்கு மேலும் தேநீர் தந்தார். சற்றுத் தயங்கி விட்டு அரேபியனுக்கும் மீண்டும் தேநீர் தந்தார். இரண்டாவது தடவை கிடைத்த தேநீரையும் அவசரம் அவசரமாகப் பருகினான் அந்த அராபியன். அவன் கைகளைத் தூக்கியபோது சட்டை விலக, அவனுடைய மெலிந்த தசைநார் வலுவான மார்பு பிரதேசத்தையும் டாரு பார்த்தார்.
""தாங்க்ஸ் ஐயனே! நான் கிளம்புகிறேன் இப்போது'' என்றான் பால்டுச்சி.
எழுந்து அந்த அராபியனை அணுகியபடியே தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு கயிரை எடுத்தான்.
""என்ன செய்கிறாய்?'' என்று கேட்டார் டாரு அமுத்தலாக. பால்டுச்சி தடுமாறியவனாகத் தன் கையிலிருந்த கயிறைத் தூக்கிக் காட்டினான்.
""வேண்டாம். கட்டாதே.''
""உன் இஷ்டம். உன்னிடம் துப்பாக்கியிருக்கிறதா?''
""என் ஷாட்டுகன் இருக்கிறது.''
""எங்கே?''
""என் பெட்டியில் இருக்கிறது.''
""படுக்கையருகே தயாராக வைத்திருக்க வேண்டும் நீ அதை.''
""எதற்காக? நான் எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?''
""பைத்தியக்காரன் நீ! புரட்சி வந்துவிட்டால் ஒருவரும் ஆபத்தில்லாதவர்கள் இல்லை. எல்லோருக்கும் ஒரு கதிதான்.''
""என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். அவர்கள் அணுகுவதை வெகு தூரத்துக்கப்பாலிருந்தே நான் காண முடியும்.''
பால்டுச்சி சிரிக்க ஆரம்பித்தான். பிறகு தன் மீசையால் தன் பற்களைக் கெட்டியாக மூடிக் கொண்டான். ""நேரம் இருக்குமா?'' அதுசரி. அதைத்தான் சொன்னேன் நானும். நீ அரைப் பைத்தியம். அதனால்தான் உன்னிடம் நான் பிரியம் வைத்திருக்கிறேன். என் மகன் கூட அப்படித்தான் இருந்தான்.''
அதேசமயம் அவன் தன் ரிவால்வரை எடுத்து மேசைமேல் வைத்தான். ""இதை வைத்துக்கொள். இங்கிருந்து எல் அமேர் போவதற்கு இரண்டு துப்பாக்கி எனக்குத் தேவையில்லை.''
கறுப்பு வர்ணம் அடித்திருந்த மேஜை மேல் ரிவால்வர் பளபளத்தது. போலீஸ்காரன் தன் பக்கம் திரும்பியபோது பள்ளி ஆசிரியர் தோல், குதிரை இவற்றின் வாடையை உணர்ந்தார்.
""கேள் பால்டுச்சி'', என்றார் டாரு திடீரென்று, ""இந்த விஷயத்தில் எதுவும் எனக்குக் கசப்புத் தராதது இல்லை. இந்த அராபியனைக் கண்டாலே எனக்குக் கரிக்கிறது. ஆனால் அவனை நான் போலீஸ் காரியாலயத்தில் கொண்டு போய் விடமாட்டேன். சண்டை போட வேண்டுமா - அவசியமானால் போடுகிறேன். அது மட்டும் வேண்டாம், பாவம்!''
கிழட்டு போலீஸ்காரன் அவர் எதிரில் நின்று அவரைக் கடுமையாகப் பார்த்தான்.
""நீ முட்டாள்'' என்றான் மெதுவாக. ""எனக்கு மட்டும் அவனைப் பிடித்து ஒப்படைக்கப் பிடிக்கிறதா? எனக்கும் பிடிக்கவில்லைதான். ஒரு மனிதனைக் கட்டிப் போடுவது என்பது எத்தனை வருஷம் பழக்கமானாலும் பிடிக்காத விஷயம்தான் - வெட்கமாகக்கூட இருக்கிறது. ஆனால் அதற்காக அவர்கள் இஷடப்படி நடக்கவும் விட்டுவிட முடியாதே?''
""நான் அவனைக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைக்க மாட்டேன்'' என்றார் டாரு மீண்டும் ஒரு தரம்.
""அது ஒரு உத்தரவு. நான் திருப்பிச் சொல்கிறேன் உத்தரவை. அவ்வளவுதான்.''
""அது சரி நான் சொன்னதை அவர்களிடம் சொல்லிவிடு; நான் அவனைக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைக்க மாட்டேன்.''
சிந்திக்க முயன்றான் பால்டுச்சி. அராபியனைத் திரும்பிப் பார்த்தான். டாருவைப் பார்த்தான். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். ""மாட்டேன். நான் அவர்களுக்கு எதையும் சொல்ல மாட்டேன். உன்னைக் காட்டித் தர மாட்டேன். கைதியை இங்கு கொணர்ந்து உன்னிடம் விடச் சொல்லி எனக்கு உத்தரவு. அதை நடத்திவிட்டேன். இதோ இதில் கையெழுத்துப் போட்டுக் கொடு.''
""அதற்கு அவசியமில்லை. நீ உன் உத்தரவை நிறைவேற்றிவிட்டாய் என்பதை நான் மறைக்கவே மாட்டேன்.''
""என்னிடம் கோபித்துக் கொள்ளாதே! நீ உண்மையைச் சொல்வாய் என்று எனக்குத் தெரியும். நீ இந்தப் பக்கத்து மனிதன் - அதுவும் ஆண்மகன். ஆனால் கையெழுத்திட்டுத் தா } சட்டம் இதுதான்'' என்றான் பால்டுச்சி.
அதற்கு மேல் ஆட்சேபிக்கவில்லை டாரு. தனது மேஜை டிராயரை இழுத்து ஒரு சதுர உருவமான இங்க் புட்டியை எடுத்து, கையெழுத்து எழுதிக்காட்ட வைத்திருந்த பெரிய பேனாவினால் பர்பிள் மசியால் கையெழுத்திட்டுக் கொடுத்தார். போலீஸ்காரன் பால்டுச்சி அந்தக் கடிதத்தை மடித்துத் தன் தோல் பைக்குள் சொருகிக் கொண்டான். வாசல் பக்கம் நகர்ந்தான்.
""இரு வந்து வழியனுப்புகிறேன்'' என்றா டாரு.
""வேண்டாம்'' என்றான் பால்டுச்சி. ""நீ என்னை அவமதித்துவிட்டாய். இப்போது மட்டும் மரியாதை என்ன வந்தது?''
இருந்த இடத்திலேயே அசையாது கிடந்த அந்த அராபியனை ஒரு விநாடி திரும்பிப் பார்த்தான். முகத்தை சிணுக்கிக் கொண்டே மூக்கை இழுத்தான். வாசல் பக்கம் திரும்பினான். ""வரேன் மகனே'' என்றான். கதவைத் திறந்து சாத்திக் கொண்டு வெளியே போனான். ஜன்னல் வழியாக ஒரு கணம் கண்ணில் பட்டான்; பிறகு மறைந்துவிட்டான். பனி கிடந்த பாதையிலே அவன் காலடிச் சத்தம்கூடக் கேட்கவில்லை. சுவருக்கப்பால் குதிரைக் குளம்பொலி கேட்டது. சில கோழிக்குஞ்சுகள் சிறகடித்து வழியை விட்டுப் பறப்பதும் காதில் விழுந்தது. அடுத்த விநாடி ஜன்னலுக்கு வெளியே பால்டுச்சி மறுபடியும் கண்ணில் பட்டான். குதிரையை லகானால் பிடித்துக் கொண்டு வந்தான். சிறு குன்றுப் பக்கம் குதிரை பின்தொடர நடந்து, ஒரு தரம்கூடத் திரும்பிப் பார்க்காமல் நகர்ந்து விட்டான். உருட்டிவிடப்பட்டு ஒரு பெரிய கல் பாதையிலிருந்து கீழே உருண்டோடுவது காதில் விழுந்தது. டாரு கைதியின் பக்கம் திரும்பி நடந்து அவனை அணுகினார். அவரை விட்டுக் கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த கைதியிடம், ""இரு'' என்று அரபி மொழியில் சொல்லிவிட்டுத் தன் படுக்கையறைக்குள் போனார். கதவைத் தாண்டும்போது வேறு ஒரு யோசனை வரவே திரும்பி வந்து மேஜை மேல் கிடந்த ரிவால்வரை எடுத்துத் தன் சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே போனார். திரும்பிப் பார்க்காமல் தன் அறைக்குள் சென்றார்.
சிறிது நேரம் தனது படுக்கையில் படுத்து வானம் இருண்டு வந்து மூடிக் கொள்வதைக் கவனித்தார். மெüனத்தை ரசித்தார். யுத்தத்துக்குப் பிந்திய முதல் நாட்களில் இந்த மெüனம்தான் அவருக்குச் சகிக்க முடியாததாக இருந்தது. பாலைவனத்திலிருந்து உயரமான பீடபூமியைப் பிரிக்கும் பள்ளத்தாக்கு நகர் எதிலாவது உத்தியோகம் வேண்டுமென அவர் கேட்டார். அங்கு பாறையாலான குன்றுகள் வடக்கே பச்சையும், கறுப்புமாக, தெற்கே இளஞ்சிவப்பும் லவண்டருமாக நித்தியமான கோடைக்கு அரண் செய்யும். பீடபூமி மேட்டிலேயே வடக்கே வெகு தூரத்துக்கப்பால் அவருக்கு வேலை உத்தரவாகியது. ஆரம்பத்தில் இந்த வீணான பிரதேசங்களில் பெரும்பாறைகள் தவிர வேறு உயிர்ல்லாத இடத்தில் மெüனமாக இருப்பது சிரமமாக இருந்தது அவருக்கு. சில சமயம் பாறைகள் எங்காவது ஓரிடத்தில் வெட்டப்பட்டிருக்கும் - பயிரிடுவதற்காக அல்ல. வீடு கட்ட ஒருவிதக் கல் அங்கு கிடைத்ததால் வெட்டப்பட்டிருந்தது. இங்கு பயிராவது கற்பாறைகள் மட்டும்தான். சிறுசிறு கிராமத்துத் தோட்டங்களில் மண் வேண்டி மலை சரிவிலே சேர்ந்த கொஞ்ச மண்ணையும் தோண்டி எடுத்துப் போய் விடுவார்கள். இந்தப் பிராந்தியத்துக்குப் போக்கு இதுவே; முக்கால்வாசிப் பகுதியில் கற்கள்தான் நிறைந்திருந்தன. சில நகரங்கள் தோன்றின. சில நாட்கள் வளர்ந்தன. பிறகு மறைந்துவிட்டன. மனிதர்கள் இப்படி அப்படி வந்தவர்கள், ஒருவரை ஒருவர் நேசித்தார்கள், ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டார்கள்; பின் இறந்து போனார்கள். அல்லது மறைந்து போனார்கள். தானோ தனது விருந்தாளியோ பற்றி இந்த நாட்டுக்கு பாலைவனத்துக்குச் சிறிதும் கவலை கிடையாது. அவர்கள் எவ்விதத்திலும் முக்கியஸ்தர்கள் அல்ல. இருந்தும்... இருந்தும் இந்தப் பாலைவனத்துக்கு அப்பால், இதற்கு வெளியே அவர்களால் உயிர் வைத்துக் கொண்டிருந்திருக்க முடியாது. அவர்கள் வாழ்க்கை இதுதான்.
அவர் எழுந்தபோது பள்ளி அறையில் சப்தமேயில்லை. அராபியன் ஓடிப் போயிருக்கலாம் என்கிற எண்ணம் அவருக்கு மகிழ்ச்சியையே அளித்தது - கலப்பற்ற மகிழ்ச்சி அது என்று உணர்ந்தார். அவன் ஓடிப்போயிருந்தால் எவ்விதத் தீர்மானமும் செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு இராது. ஆனால் கைதி அங்கேயேதான் இருந்தான். மாணவன் மேஜைக்கும், கணப்புக்கும் இடையே கால் நீட்டிக் கொண்டு அவன் படுத்துக்கொண்டிருந்தான். கண்கள் திறந்திருந்தன - அரைக் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்படிக் கிடந்த அவன் உதடுகள் அதிகமாகக் கவனிக்கத் தக்கவையாகத் தெரிந்தன. கனமான உதடுகள் பிதுங்குகிற மாதிரி இருந்தன. ""வா'' என்று டாரு கூப்பிட்டார். அராபியன் எழுந்து அவர் பின் வந்தான். தன் படுக்கையறையில் ஜன்னலுக்கடியில் இருந்த மேஜையருகில் கிடந்த நாற்காலியை டாரு காண்பித்தார். டாருவை விட்டுக் கண்களை எடுக்காமலே அராபியன் உட்கார்ந்தான்.
""பசிக்கிறதா?''
""ஆமாம்'' என்றான் கைதி.
டாரு இருவருக்கும் மேசை மேல் உணவு எடுத்து வைத்தார். மாவும், எண்ணெயும் எடுத்து வட்டிலில் ஒரு கேக் செய்தார். புட்டியிலிருந்த காஸ் அடுப்பைப் பற்ற வைத்தார். கேக் வெந்து கொண்டிருக்கும்போது அவன் பக்கம் கொட்டகைக்குள் சென்று சீஸ், முட்டைகள், பேரீச்சை, கண்டென்ஸ்ட் பால் முதலியன எடுத்து வந்தார். கேக் வெந்ததும் அது குளிர ஜன்னல் படியில் வைத்தார். பாலைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சினார். சில முட்டைகள் உடைத்துப் போட்டு ஆம்லெட் செய்தார். ஒரு சமயம் அவர் கை வலது சட்டைப்பையில் இருந்த ரிவால்வரில் பட்டது. கையிலிருந்த கிண்ணத்தை வைத்து விட்டுத் தன் படிப்பு அறைக்குப் போய் ரிவால்வரைத் தன் மேஜை டிராயரில் வைத்துவிட்டு வந்தார். அவர் அறைக்குள் திரும்பும்போது நன்றாக இருட்டிவிட்டது. விளக்கைப் போட்டு விட்டு, அராபியனுக்கு உணவு எடுத்துக் கொடுத்தார். ""சாப்பிடு'', என்றார். கேக்கில் ஒரு பகுதியை அவசரம் அவசரமாக எடுத்த அராபியன் அதை வாயில் போட்டுக் கொள்ளும்முன் நிதானித்து, ""நீங்கள்?'' என்றான்.
""சாப்பிடு. நானும் உன்னோடு சாப்பிடுவேன்'' என்றார்.
தடித்த உதடுகள் சற்றே திறந்தன - ஏதோ சொல்ல. உடனே மூடின. கேக்கை வாயில் போட்டு மென்றான் அராபியன்.
சாப்பாடு முடிந்ததும், அராபியன் டாருவை நிமிர்ந்து பார்த்துக் கேட்டான்; ""நீங்கள்தான் நீதிபதியா?''
""இல்லை. இல்லை. நான் நாளை வரை உன்னை இங்கு வைத்திருப்பேன். அவ்வளவுதான்.''
""எதற்காக என்னோடு உணவருந்தினீர்கள்?''
""எனக்கும் பசித்தது.''
அராபியன் மெüனமானான். டாரு எழுந்து வெளியே போனார். கொட்டகையிலிருந்து ஒரு மடக்குக் கட்டிலை மேஜைக்கும், கணப்புக்கும் இடையில் போட்டார் - தன் படுக்கையை ஒட்டின மாதிரி ஒரு பெரிய பெட்டியிலிருந்து இரண்டு கம்பளிகளை எடுத்துக் கட்டிலில் விரித்தார். வேறு என்ன? வேறு எதுவும் செய்வதற்கில்லை. தன் படுக்கையில் உட்கார்ந்து கைதியைப் பார்த்தார். அந்த அராபியனின் முகம் கோபத்தால் பெருகி கொலை வெறியால் மாறுவதைக் கற்பனை செய்ய முயன்றார் - பார்த்தபடியே; முடியவில்லை. மிருகத்தின் வாய் போன்ற உதடுகளையும், கறுத்துப் பளபளத்த கண்களையும் தவிர வேறு எதையும் அவரால் காண இயலவில்லை.
""அவனை எதற்காக நீ கொன்றாய்?'' - தன் குரலில் இருந்த அதட்டல் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அராபியன் வேறு பக்கம் பார்த்தான். "" அவன் ஓடி விட்டான். அவனைத் துரத்திக் கொண்டு ஓடினேன்.''
""உனக்குப் பயமாக இருக்கிறதா?''
நிமிர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான் அராபியன்.
""செய்து விட்டது குறித்து வருந்துகிறாயா நீ?''
வாய்ப்பிளக்க அராபியன் அவரையே பார்த்தான். உண்மையில் டாருவினுடைய கேள்வி அவனுக்குப் புரியவில்லை என்பது தெரிந்தது. டாருவுக்கு எரிச்சலாக இருந்தது - எரிச்சல் வளர்ந்தது. அதே சமயம் இப்படி உட்கார்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது பற்றி வெட்கமாகவும், என்னவோபோலவும் இருந்தது.
""அங்கே படு'' என்றார். ""அதுதான் உனக்குப் படுக்கை.''
அராபியன் அசையவில்லை. அவன் டாருவை, ""எனக்குச் சொல்லுங்கள் ஐயா'' என்றான்.
ஆசிரியர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.
""போலீஸ்காரன் நாளை வருவானா?''
""எனக்குத் தெரியாது.''
""நீங்கள் எங்களோடு வருவீர்களா?''
""அதுவும் தெரியாது ஏன்?''
கைதி எழுந்து கம்பளி மேல் படுத்தான். ஜன்னல் பக்கம் அவன் காலிருந்தது. டாருவின் கால்மாட்டில் இருந்தது அவன் படுக்கை. விளக்கு ஒளி அவன் கண்களில் பட்டது. உடனே கண்களை மூடிக்கொண்டான்.
""ஏன்?'', என்று தன் படுக்கையருகில் நின்றபடியே கேட்டார் டாரு.
விளக்கு ஒளி கண்ணில் பட கண்களைத் திறந்தான் அராபியன். கண்ணைச் சிமிட்டாமல் இருக்க முயன்று கொண்டே ""எங்களோடு வந்து விடும்'' என்றான்.
நள்ளிரவு ஆகிவிட்டது. டாருவால் தூங்க இயலவில்லை. துணிகளை எடுத்துப் போட்டு விட்டு வழக்கப்படியே நிர்வாணமாகத் தூங்க முயன்றார் டாரு. நிர்வாணமாக இருப்பது அசெüகரியமாக இருக்குமோ என்று நள்ளிரவில் தயங்கினார். பிறகு எதிரி சண்டைக்கு வந்தால் அவனைத் தோற்கடிக்க ஒரு விநாடியில் தன்னால் இயலும் என்று எண்ணிப் பார்த்தார். துணிகளை அணிந்து கொள்ளலாமா என்று ஒரு கணம் யோசித்தார். பிறகு அது குழந்தைத்தனம் என்று அந்தச் சிந்தனையிலிருந்து ஒதுங்கி விட்டார். தன் படுக்கையிலிருந்த படியே கைதி கண்களை மூடிக் கொண்டிருப்பதை அவர் காண முடிந்தது. டாரு விளக்கை அணைத்தபோது இருட்டு கவ்விக் கொண்டதுபோல இருந்தது. பின்னர் ஜன்னலில் இரவு உருவெடுத்திருப்பது தெரிந்தது - நட்சத்திரங்களற்ற இரவு மெதுவாகப் புரண்டு கொடுப்பது போல இருந்தது. சிறிது நேரத்தில் காலடிக் கட்டிலில் உருவம் கிடந்தது, டாருவின் கண்களுக்குப் புலனாயிற்று. அராபியன் இன்னும் அசையவில்லை - அவன் கண்கள் திறந்திருந்தன போலும். பள்ளியைச் சுற்றி இலேசாகச் காற்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காற்று மேகங்களை விரட்டி விடலாம் - சூரியன் மீண்டும் நாளை தோன்றலாம்.
இரவிலே நேரம் ஆக ஆகக் காற்றின் ஊளை வேகம் அதிகரித்தது. கோழிகள் படபடத்து அடங்கின அராபியன் தன் கட்டிலில் டாருவுக்கு முதுகுப்பக்கம் தெரியப் புரண்டு படுத்தான். அவன் லேசாக முனகுவது டாருவின் காதில் விழுந்தது. தன் விருந்தாளியின் தூக்க மூச்சு ஒழுங்காக, கனமாக வருவதைக் கவனித்தார் டாரு. அந்த ஒலியைக் கேட்டுக்கொண்டே தூங்க மாட்டாமல் திணறினார். இந்த அறையில் ஒரு ஆண்டுக்கும் அதிகமாக அவர் மட்டுமே தனியாகத் தூங்கித்தான் அவருக்குப் பழக்கம். அராபியன் அருகில் இருப்பது அவரை என்னவோ செய்தது. இந்தக் கால அளவில் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரு சகோதரத்தவத்தை அவன் அருகில் இருப்பது தன் மேல் திணிப்பதாக அவர் உணர்ந்தார். ஒரே அறையில் படுத்துறங்க வேண்டிய சகோதரத்தவத்தை அவர் பழக்கப்பட்டவர்தான் - போர் வீரர்கள், கைதிகள் ஒரே அறையில் படுத்துறங்கும்போது, ஒரு கனவுலக, களைப்புலக சகோதரத்தவத்தை ஏற்கின்றனர். டாரு அந்த நினைவுகளிலிருந்து தன்னை உதறி அகற்றிக் கொண்டார். இப்படி நினைப்பது பிடிக்கவில்லை - தூங்குவதும் அவருக்கு அவசியம்.
சிறிது நேரம் கழித்து அராபியன் லேசாக அசைந்த போதும் அவர் தூங்கிய பாடில்லை. கைதி இரண்டாவது அசைவு காட்டியதும் கவனமாக இருந்தார் - உஷாரானார். தூக்கத்தில் நடப்பவன் போல அவன் படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து டாரு பக்கம் தலையைத் திருப்பாமல் ஏதோ கவனித்துக் கேட்பவன் போல உற்றுக் கவனித்தான். டாரு அசையவில்லை; தன் மேஜை டிராயரில் ரிவால்வர் இருந்தது நினைவுக்கு வர டாருவுக்கு உடனே எழுந்து ஏதாவது செய்வது நல்லது என்று தோன்றியது. ஆனாலும் கைதியைக் கவனித்துக் கொண்டே படுத்திருந்தார். சப்தமே செய்யாமல் கைதி காலைக் கீழேவிட்டு எழுந்து நின்று மறுபடியும் கவனித்தான். டாரு குரல் கொடுக்கலாம் என்று எண்ணுகிற விநாடியில், மிகவும் சாவதானமாக, சப்தமே செய்யாமல் அராபியன் நடக்கத் தொடங்கினான். அறைக் கோடியிலிருந்த கொட்டகைக்குள் போகும் கதவுப்பக்கம் நகர்ந்தான். ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்துகொண்டு கதவைத் தனக்குப் பின்னால் மூடித் தாளிட்டு விடாமல் வெளியே போனான். டாரு அசையவில்லை. ""அவன் ஓடிப்போகப் போகிறான்'' என்று எண்ணினார் அவர். ""சனியன் தொலைந்தது.'' இருந்தும் கவனித்துக் கேட்டார். கோழிகள் படபடக்கவில்லை. கைதி குன்றின் மேல் போயிருக்க வேண்டும். ஏதோ நீர் சப்தம் கேட்டது. அது என்ன என்று முதலில் புரியவில்லை. பிறகு கதவு வழியாக அராபியன் சப்தமே செய்யாமல் வருவதைக் கண்ட பிறகுதான் புரிந்தது. கதவை ஜாக்கிரதையாகச் சாத்திவிட்டு வந்து சப்தமே செய்யாமல் படுத்துவிட்டான் கைதி. பிறகு "டாருவும் திரும்பிப் படுத்துச் தூங்கிவிட்டார். தூக்கத்திலே ஏதோ காலடிச் சப்தம் கேட்டதுபோல இருந்தது. "நான் கனவு காண்கிறேன். நான் கனவு காண்கிறேன்' என்று நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டார்.
அவர் கண் விழிக்கும்போது, வானம் தெளிந்துவிட்டது. ஜன்னல் வழியாகக் காலை ஒளியும், இளஞ் சீரிய கிரணங்களும் உள்ளே வந்தன. அராபியன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் வாய் திறந்திருந்தது. கவலை எதுவும் அற்றவன் போலத் தூங்கினான், அவன். ஆனால் டாரு அவனை உலுக்கி எழுப்பியபோது தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. மிகவும் பயந்தவன் மாதிரி, டாரு யார் என்று அறியாதவன் மாதிரி மிரள மிரள விழித்தான். டாரு நாலடி பின் வாங்கி, ""பயப்படாதே. நான் நீ சாப்பிட வேண்டாமா?'' என்றதும் அந்த அராபியன் தலையை ஆட்டினான். ""ஆமாம் சாப்பிட வேண்டும்'' என்றான். அவன் முகத்தில் அமைதி கண்டது. ஆனால் அவன் "பாவம்' ஒரு தினுசாக எதிலும் ஈடுபாட்டில்லாததாகத்தான் இருந்தது.
காபி தயாராகியது. கேக் துண்டுகளை மென்று கொண்டே தங்கள் படுக்கைகளில் உட்கார்ந்தபடியே காபியை அருந்தினர். பின்னர் டாரு அராபியனை கொட்டகைக்குள் அழைத்துச் சென்று குழாய் இருந்த இடத்தைக் காட்டினார். அவன் கழுவிக் கொண்டான். தன்னறைக்குள் போய்க் கம்பளிகளை எடுத்து மடித்து வைத்துவிட்டுத் தன் படுக்கையையும் சீர் செய்தார். வகுப்பறை வழியாக வெளியே திறந்த மேடைக்குச் சென்றார். நீலவானத்தில் சூரியன் தோன்றி உயர ஏறிக் கொண்டிருந்தது. மனித சூன்யமான மேடான பீடபூமியிலே பிரகாசமான ஒளி படர்ந்து கொண்டிருந்தது. குன்றுச் சரிவுகளில் பல இடங்களில் பனி உருகத் தொடங்கிவிட்டது. கற்கள் மீண்டும் தோன்றத் தொடங்கிக் கொண்டிருந்தன. தன் மேடையில் பதுங்கியபடியே மனித சூன்யமான அந்தப் பிரதேசத்தைப் பார்த்தார் டாரு. பால்டுச்சியைப் பற்றி நினைத்துப் பார்த்தார். அவனுக்கு வருத்தம் தந்துவிட்டது பற்றி டாரு வருந்தினார். யாருக்கும் வருத்தம் தர அவர் விரும்பவில்லை. போலீஸ்காரன் விடைபெற்றுக் கொண்டுபோன விதம் அவரைத் துயரத்தில் ஆழ்த்தியது அப்படி யாருக்கும் விரோதியாக இருக்க அவர் விரும்பியதேயில்லை. தன்னுள் எதுவும் இல்லாமல் காலியாகிய மாதிரி உணர்ந்தார் அவர். தன்னை யாரோ காயம் பண்ணிவிட்ட மாதிரி உணர்ந்தார். அதே சமயம் உள்ளேயிலிருந்து கைதி இருமுவது காதில் விழுந்தது. தன்னையும் அறியாமலே டாரு அதைக் கவனித்தார். கோபம் கோபமாக வந்தது அவருக்கு. அவருள் கோபம் பிரமாதமாக எழுந்து வளர்ந்தது. ஒரு கூழாங்கல்லை எடுத்துக் கை கொண்ட மட்டும் விசிறி எறிந்தார். அது தூரத்தில் போய்ப் பனிச்சகதியில் அமுங்குவதைப் பார்த்தார். அந்த மனிதனுடைய அசட்டுத்தனமான குற்றம் அவரை எரிச்சல் கொள்ளச் செய்தது - ஆத்திரத்தை அவருக்கு ஊட்டியது. ஆனால் அதற்காக அவனைப் போலீஸôரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது தன் மதிப்பு உகக்காத விஷயம். தன் தாழ்வையும், பலஹீனத்தையும் உணரச் செய்ததும் அந்தக் காரியம் பற்றிய சிந்தனையே. இந்த அராபியனைத் தன்னிடம் அனுப்பி வைத்த தன் மக்களைச் சபித்தார் - அத்துடன் ஒரே மூச்சில் கொலை செய்யத் துணிந்து, தப்பித்துக் கொள்ளாமல் மாட்டிக்கொண்ட அராபியனையும் சபித்தார் டாரு. எழுந்து வளையமாக மேடை மேல் நடந்து வந்தார். பிறகு பள்ளிக் கட்டிடத்திற்குள் சென்றார்.
கொட்டகையில் சிமெண்டுத் தரையில் குனிந்து வாய்க்குள் இரண்டு விரல்களை விட்டுப் பல் தேய்த்துக் கொண்டிருந்தான் அராபியன். டாரு அவனைப் பார்த்து ""வா'' என்றார். கைதிக்கு முன் நடந்து அறையை அடைந்தார். தன் மேல் ஒரு வேட்டைக்காரன் சட்டையை அணிந்து கொண்டார். நின்றார். அராபியன் தனது "சேச்சே' குல்லாயைத் தலையிலும், செருப்புக்களைக் காலிலும் போட்டுக் கொள்ளும் வரை காத்திருந்தார். வகுப்பறைக்கு இருவரும் சென்றனர். வெளியே போகும் வழியைக் காட்டி, ""போ'' என்றார். அவன் நகரவில்லை. ""நானும் வருகிறேன்'', என்றார் டாரு. அதற்குப் பிறகுதான் கைதி கிளம்பினான். அராபியன் வெளியேறியதும் டாரு தன் அறைக்குள் போய் பிஸ்கெட்டுகள், பேரீச்சம்பழம், சர்க்கரை முதலியவற்றை எடுத்துப் பொட்டலம் கட்டினார். ""அதுதான் வழி'' என்று சுட்டிக் காட்டினார். கிழக்கு நோக்கிக் கிளம்பினார் - கைதி பின் தொடர கொஞ்ச தூரம் போனதும் பார்த்தார். ஏதோ சப்தம் கேட்பதுபோல இருக்கிறது என்று சுற்றிலும் பார்த்தார். நிர்மானுஷ்யமாகவே இருந்தது. யாரும், எதுவும் கண்ணில் படவில்லை. புரியாதவன் மாதிரி அவரையே கவனித்துக் கொண்டு நின்றான் அராபியன். ""வா, போவோம்'' என்றார் டாரு.
ஒரு மணிநேரம் நடந்திருப்பார்கள். ஒரு செங்குத்தான சுண்ணாம்புக்கல் ஒன்றின் ஓரத்திலே சிறிது நேரம் தங்கி இளைப்பாறினார்கள். பனி அதிவேகமாக உருகி மறைந்து கொண்டிருந்தது } சூரிய வெப்பத்திலே பனி உருகிய ஈரமும், சிறு குட்டைகளும் மிகத் துரிதமாகக் காய்ந்து கொண்டிருந்தன.
மேலான பீடபூமி முழுவதுமே சூரியவொளி தாக்கியது - காற்றைப் போலவே அதிலும் உஷ்ணம் ஏறிக்கொண்டிருந்தது. அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கியபோது, காலடியில் "விண்விண்' என்று கட்டாந்தரையாக ஒலித்தது. ஆனந்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டு எப்போதாவது ஒரு பறவை அவர்கள் முன் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது. விடியற்காலை ஒளியைப் பார்த்தவாறே டாரு இன்பத்துடன் நகர்ந்தார். பழக்கமான அந்தப் பரப்பிலே ஒரு பரவசம் உண்டாகியது டாருவுக்கு. நீலவான வளைவும் அடியில் மஞ்சள் நிற மணலும், கல்லும் - ஆஹா என்ன அற்புதம்! மேலும் ஒரு மணிநேரம் நடந்தனர் - தெற்கு நோக்கிச் சரிவிலே இறங்கினர். காலடியிலே பொடியான கரளைக்கற்கள் நிறைந்த சம நிலத்தை எட்டினர். அதற்குப்பால் கிழக்கு நோக்கிச் சரிவு இறங்கிற்று. தாழ்ந்த சமவெளி வரும் - அதிலே இலை அதிகமில்லாத முறுக்கேறிய மரங்கள் தோன்றும்; தெற்கே பார்த்தால் ஒரே குழப்பமான சித்திரம் போல கற்கள் காட்சி அளிக்கும்.
டாரு இரண்டு பக்கமும் பார்த்தார். வானத்தைத் தவிர, அடி வானம் பூமியை எட்டும் வரை எந்தப் பக்கத்திலும் யாரும் இல்லை. அராபியனைப் பார்த்தார். தன் கையிலிருந்த பொட்டலத்தை அவனிடம் தந்தார். ""எடுத்துக் கொள். அதில் பேரீச்சை, ரொட்டி, சர்க்கரை இருக்கிறது. இரண்டு நாளுக்குக் காணும். இதோ ஒரு ஆயிரம் பிராங்குகளும் இருக்கின்றன'' - அராபியன் இரண்டையும் வாங்கிக் கொண்டான். ஆனால் அவற்றை என்ன செய்வது என்று அறியாதவன் போல மார்போடு தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றான்.
""இதோ பார்'' என்றார் டாரு. கிழக்குப் பக்கம் கையைக் காட்டினார்; ""அதோ அந்தப் பக்கம் போனால் டிங்கியூட் - இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும். அங்கே நீ போனால் போலீஸ் காரியாலயம், நீதிபதி எல்லாம் இருப்பதைக் கண்டு கொள்வாய். அவர்கள் உன்னை எதிர்பார்க்கிறார்கள்.''
அராபியன் கிழக்கு நோக்கிப் பார்த்தான். அவன் கையில் மார்போடு அணைக்கப்பட்டு டாரு தந்த பணமும், பொட்டலமும் இருந்தன. டாரு அவன் தோள்பட்டையைப் பிடித்து தெற்கு நோக்கி அவன் முகத்தைத் திருப்பினார். குன்றின் அடிவாரத்திலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதை தெற்கே ஓடுவது லேசாகத் தெரிந்தது. ""அந்தப் பாதை வழியே நீ பீடபூமியைக் கடக்கலாம். ஒரு நாள் நடந்தாயானால் புல்வெளிகளையும், அராபியர்களையும் சந்திப்பாய் நீ! அவர்கள் நீதிப்படி உன்னை வரவேற்பார்கள்.''
அராபியன் இப்போது "டாரு'வைத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களிலே ஒரு பீதி குடி கொண்டிருந்தது தெரிந்தது அவருக்கு. ""கேளுங்கள்'' என்று அவன் ஆரம்பித்தான்.
""சும்மா இரு! நீ சொல்வதை நான் கேட்கப் போவதில்லை'' என்று அவனை அதட்டினார் டாரு. ""பேசாதிரு. நான் உன்னை இங்கே விட்டு விட்டுப் போகப் போகிறேன்.''
உடனேயே திரும்பி, இரண்டு நீள எட்டு எடுத்து வைத்தார். அவர்கள் வந்த வழியிலே குழப்பத்துடன் நின்ற அராபியனை சற்றே திரும்பிப் பார்த்தார். மீண்டும் வேகமாகத் திரும்பி வந்த வழியே தன் பள்ளிக்கூடம் நோக்கிக் கிளம்பினார். சில நிமிஷங்கள் வரை அவர் காலடிச் சப்தத்தைத் தவிர வேறு சப்தம் கேட்ட போதும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால், இன்னும் ஒரு நிமிஷம் கழித்துத் திரும்பிப் பார்த்தார். அந்த அராபியன் அவர் விட்டு வந்த இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கைகள் பொட்டலம், பணத்துடன் தொங்கவிட அவன் டாருவையே பார்த்துக் கொண்டு நின்றான். "டாரு'வின் தொண்டையை ஏதோ அடைப்பது போல இருந்தது. ஆனால், பொறுமையற்றவராக உலகையெல்லாம் சபித்துக் கொண்டே, தன் கையைத் தூக்கி ஆட்டிவிட்டு மீண்டும் கிளம்பித் தன் வழி நடந்தார். சிறிது தூரம் போய்விட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது அராபியன் அங்கில்லை - எந்தப் பாதையிலோ நகர்ந்து விட்டான்.
டாரு தயங்கினார். வானத்திலே உச்சியை எட்டி விட்டது சூரியன். சூரிய உஷ்ணம் நேராக அவர் தலையைத் தாக்கியது. முதலில் தயங்கியவராக, மெதுவாகத் திரும்பி நடந்தார். பிறகு வேகமாக நடந்து கைதியை விட்டுவிட்டு வந்த குன்றின் உச்சியை அடைந்தார். மூச்சு வாங்கியது அவருக்கு. நீலவானத்தை முட்டிய கற்குன்றுகள் தெற்கே கிடந்தன. கிழக்கு நோக்கின பாதையிலே. பனிப்படலம் போலவே ஒளிப்படலமும் ஒரு மறைவுத் திரையாகக் கிடந்தது. அந்தப் பாதையிலேயே சிறையையும் நீதிபதிகளையும் போலீஸ்காரனையும் நோக்கித்தான் அராபியன் நடந்துகொண்டிருந்தான் என்று கனக்கும் உள்ளத்துடன் கவனித்தார் டாரு. மெதுவாகவே நடந்துகொண்டிருந்தான் அவன்.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு டாரு தன் படிப்பு அறையில், ஜன்னலில் வெளியே பார்த்துக்கொண்டு நின்றார். பீடபூமி பூராவும் சூரியவெளியிலே குளித்துக் கொண்டிருந்தது - அதை அவர் கவனித்தார் என்று சொல்ல இயலாது. ஃபிரான்சு தேசத்து நதிகள் வளைந்து வளைந்து செல்லும், கலர் சாக்கால் எழுதிய நதிகளுக்கிடையே சற்று முன் அவர் படித்த புதிய வார்த்தைகள் காணப்பட்டன. ""நீ எங்கள் சகோதரனைப் போலீஸில் ஒப்படைத்தாய். அதற்கான தண்டனை உனக்குண்டு. நாங்கள் உன்னைக் கவனித்துக் கொள்வோம்'' என்று கோணல்மாணலாக எழுதியிருந்தது. டாரு வானத்தை அண்ணாந்து பார்த்தார்; பீடபூமியை நேராகப் பார்த்தார். கண்ணுக்கெட்டாத பல பிரதேசங்கள் அதற்கப்பால் இருந்தன. இந்தப் பரந்த நிலப்பரப்பிலே அவர் தனியானவர்; ஒருத்தர்.
******
வெளியீடு: ஞானச்சேரி; வருடம்: 1989
ஆங்கிலத்தில் Translated by Justin O'Brien : http://www.braungardt.com/Literature/Camus/Guest.htm
ஆல்பெர் காம்யு பற்றி க.நா.சு எழுதியது: பிரான்ஸ் நாட்டின் சிந்தான வரலாற்றில் மறுக்க முடியாத ஓர் இடத்தைப் பெறுபவர் ஆல்பெர் காம்யு. ழான் பால் சார்த்தரின் இருத்தலியல் (Existentialism) கோட்பாட்டுடன் இவரது சிந்தனைகள் பெரிதும் பிணைக்கப்பட்டிருந்தாலும், "தான் ஒரு கலைஞன்' என்று மட்டும் இவர் உணர்த்திக்கொண்டேயிருந்தார். மனிதம் சிதைந்து தன் மேன்மையை இழந்து வந்த ஒரு காலகட்டத்தில் வாழ்வை அதன் சகல பரிமாணங்களிலும் தீவிரமாக வாழ்ந்துவிட முனைந்த இந்த மனிதன் ஒரு கலைஞனாகவும் ஒரு தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர். 1913-ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் ப்ரெதன் - ஸ்பானிஷ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தார். முப்பது ஆண்டுகள் அல்ஜீரியா எனப்படும் வட ஆப்பிரிக்காவில் பல்வேறு தொழில்கள் செய்து (அல்ஜீரியர்ஸ் கால்பந்துக் குழுவிற்கு கோல் கீப்பராக இருந்ததும் இதில் அடங்கும்- வாழ்ந்து வந்தார். பிரான்ஸில் குடியேறிய பின்னர் ஜெர்மானிய ஆதிக்கத்தின் போது எழுந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிர பங்காற்றினார். "Combat' என்ற ரகசிய வெளியீட்டுப் பத்திரிகையின் ஆசிரியரானார். பின்னர் பத்திரிகைத் துறையை விட்டு விலகி முழுதுமாய் எழுத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1937}இல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. அந்நியன் (þThe outsider 1942) இவரது முதல் நாவல். தொடர்ந்து வீழ்ச்சி (þthe fall) "பிளேக்' (The plague) என்ற நாவல்களும், காலிகுலா (Caligula) முதலிய நாடகங்களும் சிசிபஸின் புராணம் (The myth of sysyphus) புரட்சிக்காரன்(The Rebel) போன்ற தத்துவக் கட்டுரைகளும் இவரது முக்கியமான படைப்புகளாகும். இன்றைய மனிதனின் மனசாட்சிப் பிரச்னைகளுக்கு தீர்மானமான கலை வடிவம் தந்தவர் என்ற அடிப்படையில் 1957-ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது நாற்பது. இலக்கியவாதியாகவும், தத்துவவாதியாகவும் வாழ்ந்த காம்யு சிறந்த நாடக ஆசிரியரும், நாடக இயக்குநரும்கூட. 1940-ல் பாரிஸ் நகரில் அரங்கேறிய பல உன்னத நாடகங்களில் இவரது பங்கும் குறிப்பிடத்தக்கது. ஆல்பெர் காம்யுவின் மொத்த சிந்தனா அமைப்பையும் புரிந்துகொள்ள நீண்ட தேடல் அவசியம். சில நேரங்களில் முரண்பாடுகளின் உச்சியில் தன் படைப்புகளில் காணக் கிடைக்கும் காம்யு சில நேரங்களில் அவநம்பிக்கை வாதியாகவும் (Pessimist) தோன்றுகிறார். என் பால்ய கால வறுமை எனக்குத் துரதிருஷ்டவசமாக இருந்ததில்லை என்று சொல்லியபோதும் வறுமை காம்யுவின் சிந்தனையைப் பாதித்த ஒரு முக்கியமான வாழ்நிலை உண்மை. இந்த வறுமைதான் அவரை அவநம்பிக்கைவாதியாக நமக்குக் காண்பிக்கிறது. எனினும் இதையெல்லாம் தாண்டி நிற்கும் இவரது தீவிரமான வாழ்வும், கலையும்தாண் இந்த நூற்றாண்டின் "மேற்கத்திய மனசாட்சி'யைப் பிரதிபலிக்கிறது. தமிழில் வெளியாகியுள்ள ஆல்பெர் காம்யு நூல்கள்: 1. அந்நியன் - (தமிழில்: வெ.ஸ்ரீராம்) க்ரியா பதிப்பகம் 2. கொள்ளை நோய் - (தமிழில்: ச.மதனகல்யாணி) ஆனந்தா பதிப்பகம், புதுச்சேரி 3. நியாயவாதிகள் (நாடகம்) - சந்தியா பதிப்பகம் 4. மரண தண்டனை என்றொரு குற்றம் - (தமிழில் } வி.நடராஜ்) வெளியீடு: பரிசல் http://en.wikipedia.org/wiki/Albert_Camus |
சிறு குறிப்பு:
இரண்டு முறை இச்சிறுகதையைப் படித்திருந்த நிலையில் என்னுடைய "குழிவண்டுகளின் அரண்மனை' - கவிதை நூலுக்கு மதிப்புரை கேட்டு கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் தயக்கத்துடன், ""நீங்கள் சிறுகதை எழுதியிருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். எழுதிக் கொண்டிருந்ததாகவும், ஆல்பெர் காம்யுவின் "விருந்தாளி' சிறுகதையைப் படித்ததில் இருந்து, "எழுதினால் இதைப்போன்றதொரு சிறுகதையை எழுத வேண்டும்' என்று விட்டுவிட்டதாகவும் கூறினார். (ஆல்பெர் காம்யுவின் வேறுபல சிறுகதைகளை ஆங்கிலத்தில் படித்திருப்பதாகவும் சுகுமாரன் கூறினார்.)அன்றிலிருந்து ஆல்பெர் காம்யுவோடு சேர்ந்தவிட்ட பிம்பமாகவே எனக்குள் கவிஞர் சுகுமாரனும் இருந்து வருகிறார். ஆல்பெர் காம்யு பெயரை எழுதுகிறபோதுகூட அவர் நினைவும் வந்துவிடுகிறது. சுகுமாரன் குறிப்பிட்டதற்குப் பிறகு இன்னும் கூடுதல் கவனத்துடன் இந்தச் சிறுகதையைப் படித்து வருகிறேன். -த.அரவிந்தன்
நன்றி: தாவரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக