16 ஜூலை, 2011

ஒரு பில்லியன் பிராத்தனைகளும் ஒற்றைச் சூடக்கட்டியும் - ஆதவன் தீட்சண்யா சிறுகதை

ஒரு பில்லியன் பிராத்தனைகளும் ஒற்றைச் சூடக்கட்டியும் - ஆதவன் தீட்சண்யா சிறுகதை





இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி அதில் பாகிஸ்தானை வீழ்த்தியடிக்கத்தான் உலகில் கிரிக்கெட் தோன்றியது என்னும் மூடநம்பிக்கை சற்றும் அண்டாதவனாய் இருந்தான் மாரிச்சாமி. பாகிஸ்தானுக்கும் முன்பே கிரிக்கெட் இருந்தது என்கிற உண்மையை அறிந்திருந்தபடியால் விளையாட்டை விளையாட்டாய் பார்க்கும் பெரியமனம் அவனுக்கிருந்தது. விளையாட்டு சூதாட்டமாய் பிசுகுவதைக் காணும் திறனும் அதை வெளிப்படுத்தும் துணிவும் இருந்தது. எனவே தீவிர தேசபக்தர்களாகிய கிரிக்கெட் ரசிகர்களால் தேசத்துரோகி எனத் தூற்றப்பட்டிருக்கிறான். உங்கம்மா உன்னை துலுக்கனுக்கா பெற்றாள் என்பது போன்ற மானப்பிரச்னைமிக்க கேள்விகளுக்கும் ஆளாகி யிருக்கிறான். கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த விளையாட்டு என முண்டா தட்டும் கிரிக் கெட்டான்களிடம், அப்படியெல்லாம் ஒரு வெங்காயமும் (வெங்காயத்துக்கு பதிலாக மசுரு என்ற சொல்லையும் பாவிப்பதுண்டு) கிடையாதென  வாதிட்டதுடன், இங்கிலிஷ் காரன் கொடுத்துவிட்டுப் போன சீக்குகளில் இதுவும் ஒன்று என்ற உண்மையைப் போட்டுடைத்து உதையும் வாங்கியிருக்கிறான்.

அடிப்படையில் மாரிச்சாமி அரசியலில் கூடுதல் நாட்டமுள்ளவன். ஏதாவது ஒன்றை மட்டும் கெடுத்தால்/ வளர்த்தால் போதுமானது என்ற தெளிவு அவனுக்கிருந்த தால் அப்படியொன்றும் ஆர்வமுள்ள கிரிக்கெட் ரசிகனாய் உருப்பெறாமல் திசைமாறியிருந்தான். இன்னும் சொல்லப் போனால் இங்கிலாந்தின் கில்லிதாண்டல் எனப்படும் அந்த விளையாட்டின் வாடையே பட்டுவிடாதபடிக்கு நெடுங் காலம் தன்னை தற்காத்தே வந்திருக்கிறான். எனவே இந்தியா ஜெயிச்சிடுத்து என்று பட்டாசு வெடிக்கிறவர்களிடம் அதற்குள்ளாகவா தீபாவளி வந்துடுச்சு என்று அப்பாவித்தன மாய் கேட்டு கடுப்பேற்றுவதிலும் நம்மாள் வல்லவன்தான். ஆனால் ஸ்கோர் என்ன என்று விசாரித்தபடியே தாய் வயிற் றிலிருந்து பூமிக்கு வந்த சிலபேருடனும் பழக வேண்டி வந்தபோது அந்த நட்புவட்டத்திலிருந்து தனிமைப்பட்டு விடாதிருக்க கிரிக்கெட்டில் புழங்கக்கூடிய சிலபல சொற் களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய வரலாற்று நெருக்கடி ஏற்பட்டது மாரிச்சாமிக்கு. தெரியாத மாதிரி காட்டிக்கொள்ளவும் கூடாது, தெரிந்தமாதிரி பேசி மாட்டிக் கொள்ளவும் கூடாது என்பதற்காக அந்த காலகட்டத்தில் அவன் புதுப்புது உத்திகளைக் கையாள வேண்டியிருந்தது.

தன்னையும் ஒரு கிரிக்கெட் டானாக நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆட்டங் களைப் பார்க்கத் தொடங்கிய அந்த நாட்கள் மிகக்கொடூரமானவை. குறிப்பாக அந்தக்கனவு- அப்பப்பா, அதிலிருந்து அவன் இன்னமும் மீளவேயில்லை. பெவிலியனிலி ருந்து நட்டநடு மைதானத்திற்கு ஆட்டக்காரர்கள் அனைவரும் அம்மணக்கட்டையாக வருகிறார் கள். ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று குழந்தைகள் ஆரவாரித்து கேலி செய்கின்றன. குளியறைக்குள் குஷ்புவை பார்த்த ரஜினிபோல கடவுளே கடவுளே என்று நாட்டுச் சனங்கள் கண்மூடிப் பிதற்றுகின்ற னர். ‘நாங்கள் திறந்து போட்டுக்கொண்டு வரும்போது நீங்கள் மூடிக்கொண்டீர்கள். நீங்கள் திறந்து பார்க்கும்போதோ நாங்கள் எல்லாற்றையும் மூடிக்கொண்டிருப்போம். ஆம்... இதோ நாங்கள் அணிந்திருக்கும் இந்த ஜட்டியை தேசபக்தியுடன் ஸ்பான்சர் செய்தவர்கள்....’ என்று ஆட்டக்காரர்கள் அந்தக் கனவில் பேசும் வசனம் இப்போதும்கூட அவனை அரற்றி விடுவதுண்டு. இதையெல்லாம் மீறித்தான் கடலை காம்பிர், டொக்கு டோனி, வண்டுருட்டி டெண்டூல்கர் என்று ஆட்டக் காரர்களை அடைமொழியிட்டு விளிக்குமளவுக்கு விஷய ஞானமுள்ளவனாக இன்றைக்கு மாரிச்சாமி வளர்ந்திருக்கிறான். கர்த்தருக்கு பயப்படுவதே ஞானத்தின் தொடக்கம் என்று நம்புகிற கிறிஸ்தவரைப்போல கிரிக்கெட் விவகாரங்களை அறிந்து வைத்திருப்பதிலிருந்தே ஒருவரது பொதுஅறிவு தொடங்குவதாக இந்தியர்கள் நம்பத் தொடங்கியிருந்தக் காலத் திற்குள் அவனும் எப்படியாவது பொருந்தவேண்டும்தானே?
மூன்று கம்புகளில் ஒன்று எகிறி மீதி ரெண்டும் நட்டு வைத்தமேனிக்கு செஞ்செவிக்க நின்றாலும் ஏன் அவுட் என்று வெளியேற்றுகிறார்கள் என்பது போன்ற மேலோட்டமான சில சந்தேகங்களுடன் மாரிச்சாமி இருந்த வேளையில்தான் பாழாய்ப்போன இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வந்து தொலைத்தது. உலகக்கோப்பையை இந்திய அணிதான் வெல்லவேண்டும் என்று போட்டி அறிவிக்கப்பட்ட நொடி யிலிருந்தே அன்னந்தண்ணி ஆகாரமில்லாமல் மொட்டை போட்டுக்கொள்வது, மூக்கறுத்துக்கொள்வது என்று பிரார்த் தனை செய்யத் தொடங்கிவிட்ட ஒரு பில்லியன் இந்தியர்களில் மாரிச்சாமியின் பெயர் சேர்த்தியில்லை என்பதை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டன. சச்சின் சதமடிக்க வேண்டுமென முதுபெரும் பாடகி ஒருவர் விரதம் இருக்கப்போவதாக அறி விப்பு வெளியானபோது அவன் கடுப்பின் உச்சத்திற்குப் போனான். பிரார்த்தனைதான் ஜெயிக்க வைக்குமென்றால் ஆடுவது எதற்காக என அவன் எழுப்பிய கேள்வி கிரிக் கெட்டைப் பற்றியதா கடவுளைப் பற்றியதா என்ற குழப்பம் நிலவியதால் இதுவரை யாரும் பதிலளிக்கவேயில்லை.

ஆனால், போட்டிக்கான ஏற்பாடுகளை வழக்கம்போல் ஆர்வ மற்று கவனித்துக் கொண்டிருந்த மாரிச்சாமி, போட்டியில் பங்கெடுக் கும் அணிகளின் பட்டியலைப் பார்த்ததிலிருந்து பிரார்த்திக்கத் தொடங்கினான் என்றால் அதை வரலாற்றின் முரண் என்றுதான் சொல்லவேண்டும். அதற்குப்பிறகு அவனிடம் திடுமென கிரிக்கெட் தொடர்பான அரும்பெரும் மாற்றங் களும் அறிவுத்தேடலும் முளை விட்டு அரும்பி ஆல்போல் கிளைத்து அருகுபோல் வேரோடத் தொடங்கியதென்றால் அதற்குப் பின்னே இருப்பது கேவலம் ரசிக மனோபாவம் அல்ல- அப்பட்ட மான அரசியல் காரணங்கள்.

போட்டியில் பங்கெடுக்க இலங்கை அணியும் வருகிறது என்ற அறிவிப்பைக் கேட்டதிலிருந்தே மாரிச்சாமியின் ரத்தம் கொப்பளிக்கத் தொடங்கியிருந்தது. தன்னைப்போலவே தமிழ்நாடும் கொந்தளிக்கும் என்று எதிர்பார்த்தான் மாரிச்சாமி. இலங்கையைச் சேர்ந்த கொசுவைக்கூட இந்தியாவுக்குள் விட மாட்டோம் என்று கர்ஜிக்கிற நெடுமாறன், வைகோ, திருமா வளவன், மருத்துவர் மாலடிமை ( ராமதாசு), சீமான், அர்ஜூன் சம்பத், பால்தாக்கரே போன்ற தலைவர்கள் அவனுக்கு இந்த நம்பிக்கையை உருவாக்கியிருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்றொழித்த இறுமாப்பு டன் பவனிவரும் இலங்கை ஆட்சியாளர்களை அம்பலப் படுத்தி தனிமைப்படுத்த இந்த வாய்ப்பையும் தலைவர்கள் நழுவவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்க முடியாதபடி இலங்கை அணியை தமிழ்நாட்டவர் விரட்டியடிக்கும் பட்சத்தில் அது ஒரு சர்வதேசப் பிரச்னையாகிவிடும். அய்.நா.சபை வரும், அமெரிக்கா வரும் (இரண்டும் ஒன்று தான்). ஏன், எதனால், எப்படி என்று உலகம் முழுக்க பரபரப் பாக விவாதம் நடக்கும். சிங்கள இனவெறியும் அது நடத் தியப் படுகொலைகளும் நாலாப்பக்கமும் விவாதத்திற்குள்ளா கும். இது எதுவுமே நடக்காவிட்டாலும்கூட, என்னதான் மன் மோகன் சிங்கும் தானும் ஒரே டவுசரை ஆளுக்கொரு காலில் மாட்டிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாய் இருந்தாலும் இந்தியாவிற்குள் விளையாட்டுக்காகக்கூட கால்வைக்க முடி யலையே என்ற அவமானமாவது ராஜபக்ஷேவுக்கு மிஞ்சும் என்பது மாரிச்சாமியின் கணக்காயிருந்தது. எனவே விமான நிலைய ஓடுதளத்திற்குள் ஆவேசமாக நுழைந்து இலங்கை அணியை தரையிறங்கவிடாமல் துரத்தியடிக்கும் போராட்டத் திற்கு மேற்படி தலைவர்கள் அறைகூவல் விடுப்பார்கள் என்று காத்திருந்தான். ஒருவேளை எதிர்ப்புக்கு பயந்து இலங்கை அணியினர் நீர்மூழ்கி கப்பலில் திருட்டுத்தனமாக வந்து கரை யேறிவிடுவார்களேயானால் ஆடுகளத்திற்குள் நுழைந்து அதம் கிளப்புவதற்கும் தயங்காதவர்கள் தான் இந்தத் தலைவர்கள் என்பதாக அவனது சிந்தனை விரிந்து கொண்டிருந்தது.

ஆனால் மாரிச்சாமி மலை போல் நம்பியிருந்த தலைவர்களில் பலரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம் பிடிப்ப தென்று அல்லாடித் திரிந்ததால் இலங்கை அணி வரப்போகும் விசயம் அவர்களுக்கு உறைக்கவேயில்லை. நினைவில் வைத்திருந்த சிலரோ தேர்தல் நேரத்தில் இதையெல்லாம் பிரச்சினையாக்கி கிரிக்கெட் ரசிகர்களின் வாக்குகளை இழந்து விடக்கூடாது என்ற கவனத்தில் மறந்தவர்களைப் போலவே இருந்தார்கள். இலங்கைக்குப் போகிறவர்களெல்லாம் ராஜ பக்ஷேவின் கைக்கூலி என்றும் இலங்கையிலிருந்து வருகிற வர்களெல்லாம் ரா உளவாளி என்றும் கனகச்சிதமாக கண்டு பிடிப்பதுடன், இணையதளத்திற்குள் ஈழம் அமைத்தே தீர்வ தெனப் போராடி வரும் இளம்புலிகள், கன்னங்கரேல் கரடிகள், செக்கச்செவேல் சிறுத்தைகள், பண்டார வன்னியன் பாசறை, சங்கிலியன் சமர்க்குழு, எல்லாளன் எஃப்-16, மே18-31 இயக் கம் போன்ற அமைப்புகளின் தளப்போராளிகள்கூட இவ் விசயத்தில் அமைதிகாத்ததை மாரிச்சாமியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கமலஹாசன் வீட்டு முன்னாடியும் அமிதாப் மச்சான் வீட்டு முன்னாடியும் ஆர்ப்பாட்டம் செய்யற உங்க தலைவருங்க ஏன் இலங்கைக்குப் போய் தொழில் நடத் துற அசோக் லேலண்ட் ஹிந்துஜா வீட்டு முன்னாடியோ அம் பானி வீட்டு முன்னாடியோ ஆர்ப்பாட்டம் நடத்தறதில்லே என்று ஏற்கனவே தன்னைக் கலாய்க்கும் சிங்களச்செல்வன் களுக்கு முன்னால், தான் இன்னும் இளக்காரமாய் போய்விட்ட தாக மருகிப்போனான் மாரிச்சாமி.
எவ்வித எதிர்ப்புமின்றி இலங்கை அணி இந்தியாவுக் குள் ஆடப்போவது உறுதியாகிவிட்ட நிலை மாரிச்சாமியை மிகவும் சோர்வடைய வைத்தது. இலங்கையை எதிர்த்தாடி வீழ்த்த நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் ஒரு அணியை களமிறக்கினால் என்ன என்று உருத்திரக்குமாரனுக்கு யோசனை சொல்லும் பகிரங்கக் கடிதம் ஒன்றையும் வழக்கம் போல அதைப் பாராட்டி வெவ்வேறு பெயர்களில் அவனே எழுதிக்கொண்ட 108 பின்னூட்டங்களையும் தனது இணைய தளத்திலும் முகப்புத்தகத்திலும் ஒருசேர வெளியிட்டபோது அது ஒரு பெரும் பிரச்னையாக மாறும் என்று மாரிச்சாமி அப்போதைக்கு நினைத்திருக்கவில்லை. ஒவ்வொரு நாடாக கடந்து கடந்து வந்துவிட்டதில் இப்போது தானிருக்கும் நாடு எதுவென்பதே தெரியாத குழப்பம் நிலவுவதால் நாடு கடந்த தமிழீழ கிரிக்கெட் அணி ஒன்றை அனுப்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று உருத்திரகுமாரனின் ஊடகப்பிரிவுச் செயலாளர் அனுப்பியிருந்த பதில் ஏற்கும்படியாகத்தான் இருந் தது அவனுக்கு. எந்தவொரு அமைப்பிலும் அங்கத்துவம் பெறாத தன்னையும் பொருட்படுத்தி ஒரு அரசின் தலைவர் அனுப்பிய பதில் அவனுக்கு செருக்கேற்றியது. உண்மையான பின்னூட்டங்களும் ஒன்றிரண்டு வரத்தொடங்கின.

“நாவலர் அரங்கத்திலிருந்து நல்லூர் கோவிலுக்கு வெளிக்கிடு வதைப்போல நினைச்சமாத்திரத்தில் திருப்பதிக்கு வந்து போகும் ராச பக்ஷேவை மறிக்காமல் கிரிக்கெட் ஆட வருகிறவர்களை மறிக்கச் சொல்வதன் மர்மம் என்ன?”

“ ஏழுமலையான் கோவிலும் முன்பு  புத்தவிகாரை யாகத் தான் இருந்தது என்று ‘பட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும் ராமர் கோவிலும்’ என்கிற புத்தகத்தில் ( பஃறுளி பதிப்பகம்) கூறப்பட்டுள்ள விசயம் தெரிந்துதான் ராசபக்ஷே யின் விஜயம் அடிக்கடி நடக்கிறதோ?’’

“ தமிழா திருப்பதியை நீ தெலுங்கரிடம் இழந்தாய், தெலுங்கர்களோ சிங்களவனிடம் இழக்கப்போகிறார்கள்”

“ ஆஹா, பின்னூட்டத்தில் பெடலெடுக்கிற பிரகஸ் பதியே, என்னதான் தமிழன் என்று வேஷம் போட்டாலும் கடைசியில் உன் தெலுங்கன் புத்தியைக் காட்டிவிட்டாயே?”

“பா.செயும் இவனையும் போன்ற தெலுங்கர்கள் ஊடுருவித்தான் நமது போராட்டத்தை திசைமாற்றிவிட்டனர்.  சுத்தத் தமிழா நீ எங்கே போனாய்..”

“சுத்தத்தமிழன் சோப்புத்தொட்டிக்குள் முங்கியெழுந்து சொட்டுநீலத்தில் நனைந்து கொண்டிருக்கிறான்...’’

“சைவர்களாகிய தமிழர்கள் ஒரு வைணவக்கோவில் பறிபோவதற்கு ஏன் கவலைப்பட வேண்டும்?”

“தமிழர்/ தெலுங்கர், சைவம்/ வைணவம் என்ற சர்ச்சை யில் திராவிடம் எங்கே போனது?..’’
“கி.வீ.யின் கோமணத்தைக் கழற்றிப்பாரடா, தெரியும்..”

தான் முன்வைத்த விசயத்தின்மீது அல்லாமல் இப்படி யாக பின்னூட்டங்கள் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறதே என்று மாரிச்சாமி கவலைகொள்ளத் தொடங்கியபோதுதான் ஆரம்பித்தது வினை.
“மாரிச்சாமி என்கிற பெயரில் திரியும் சோ‘மாரிச் சாமியே’, இப்படியொரு கடிதத்தை தனக்கு அனுப்பிவைக்கு மாறு உருத்திரக்குமாரன் உன்னோடு நடத்திய பேரம் எவ்வளவு? பேமெண்ட் டொலரிலா பவுண்ஸிலா? ”
“நாடு கடந்த தமிழீழ அரசின் ரகசிய ஏஜண்ட் 007...”

“தேசியத்தலைவர் தினமணி பேப்பர் படிப்பது போன்ற போட்டோவைப் பார்க்கவில்லையா நீ? உயிரோடிருக்கும் அவ ருக்கு அனுப்பாமல் உருத்திரக்குமாரனுக்கு அனுப்பியதில் மறைந்திருக்கும் சதியை அறியாதவனல்ல தமிழன்...”

“தலைவர் மட்டுமல்ல, தமிழ்ச்செல்வன், குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், திலீபன் எல்லோருமே செத்ததாக சிங்களவனுக்கு போக்குக்காட்டி விட்டு அண்டார்டிக் பனிப்பாளத்திற்கு கீழ் உயிரோடுதான் இருக்கிறார்கள்.  தருணம் பார்த்து வெளிக்கிட்டு ஈழப்போர் 4ஐ நடாத்தி வெற்றி வாகை சூடுவார்கள்...அப்ப இருக்குடா மாரிச்சாமி உனக்கும் ஆப்பு.”
இவை மட்டுமல்லாது, புலிகளின் அசல் வாரீசாக தாங்கள் இருக்கையில் அவர் களுக்கு ஏன் கடிதம் எழுதினாய் என்று ஐக்கிய ராச்சியத்திலிருந்தும், பிரித்தானியாவிலிருந் தும், நோர்வேயிலிருந்தும், இன்னும் கனடா, அவுஸ்திரே லியா, டென்மார்க், ஸ்விஸ், யேர்மனி என்று பல பாகங்களி லிருந்தும் ஒருவரையொருவர் மறுத்துத் தாக்கும் பின்னூட்டங் களைப் படித்து மாரிச்சாமி சோர்ந்து போனான்.

நாயைக்கூப்புடற நேரத்தில் நாமே நக்கிவிடலாம் என்று அவனது பாட்டி அடிக்கடி சொல்கிற பழமொழி நினைவுக்கு வந்த மாத்திரத்தில் எவரது துணைக்காகவும் காத்திருக்காமல் அரசியல் கிரிக்கெட்டை தானே ஆடுவதென முடிவெடுத்தான் மாரிச்சாமி. ஆனால் எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு தன்னந்தனி மனிதன் என்ற வகையில் தன்னால் என்ன செய்ய முடியும் என்ற யோசித்தபோதுதான் இந்த பிரார்த்தனை விசயம் பிடிபட்டது. பிரார்த்தனை செய்து இந்தியாவை ஜெயிக்க வைக்க முடியுமென்றால் அதே பிரார்த்தனையை செய்து இலங் கையை தோற்கடிக்கவும் முடியும்தானே என்று அப்போது அவன் எடுத்த முடிவு கிரிக்கெட் வரலாற்றையே புரட்டிப் போடப்போகிறது என்பதை அப்போதைக்கு அவனே அறிந்திருக்கவில்லை.

தனது பிரார்த்தனையையும் மீறி அணிகள் பலவற்றை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்று இலங்கை முன்னேறிய போது அந்த அணியின் 12வது ஆட்டக்காரராக மாயவுருவில் புத்தரும் ஆடியிருப்பாரோ என்ற சந்தேகம் வந்தது மாரிச் சாமிக்கு. புத்தரது அருளில்லாமல் இலங்கை எதில்தான் ஜெயித்திருக்கிறது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண் டான். புத்தர் சிங்களவர்களின் அடியாளாகிவிட்டார் என்ற தனது தலைவர்களின் குற்றச்சாட்டு அவனுக்கு நினைவுக்கு வந்தது. புஷ்யமித்திர சுங்கன் இந்தியாவில் பௌத்தத்தை அழித்தக் கையோடு அப்படியே ஒருநடை இலங்கைக்கும் போய் துவம்சம் செய்துவிட்டு வந்திருக்க வேண்டும். அல்லது, எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிய தமிழ்மன்னன் இலங்கைக்கும் போய் வந்திருந்தானென்றால் எல்லாக்கேடும் அப்போதே முடிந்திருக்கும் என்று கறுவிக்கொண்டான்.
இறுதிச்சுற்றுப் போட்டியில் என்னோடு மோதப்போவது யார் என்று திமிர்த்துக்கொண்டு நிற்கிற இலங்கையை வீழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாயிருந்த மாரிச்சாமி நிலைமைக்கேற்ப வியூகங்களை மாற்றியமைப்பதில்தான் ஒரு  போராளியின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை அறிந் திருந்தான். எனவே அவன் இப்போது தனது பிரார்த்தனையின் இலக்குகளை மாற்றியமைத்தான்.

இறுதிப்போட்டியைவிட இந்தியாவும் பாகிஸ்தானும் (பாகிஸ்தானும் இந்தியாவும் என்று நிரல் மாற்றிச் சொல்வது குறைபாடுள்ள தேசபக்தி) மோதப்போகும் அரையிறுதி ஆட்டத்தில் எல்லோரது ஆர்வமும் குவிந்தி ருக்க மாரிச்சாமி தன்னை தன்னந்தனியனாய் உணர்ந்தான். நடக்கவிருப்பது போட்டியல்ல, போர் என்கிற ரீதியில் ஊடகங்கள் ஏற்றிய பரபரப்பு மாரிச்சாமிக்கு எரிச்சலைத் தந்தது. பந்துவீசி விளையாடுவார்களா பாம் வீசி விளையாடுவார்களா என்கிற லெவலில் பிய்த்துக்கொண்டு கிளம்பிய விவாதத்தால் நுழைவுச்சீட்டுக்கு பெரிய அடிபிடியாகிவிட்டது. இதுகாறும் தேசத்தின் நலனுக்கு எதிராக துரும்பளவும் தீங்கு செய்திடாத தாங்கள் கிரிக்கெட் பார்க்கப் போகாவிட்டால் தேசபக்தியை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுமே என்ற கவலையில் நடிகர்களும் தொழிலதிபர்களும் கட்சித்தலைவர்களும் அங்கலாய்ப்பதைப் பார்க்க பரிதாபமாயிருந்தது. ஆனால் பாம்பின் கால் பாம்பறியும்தானே? நூறுமடங்கு ஆயிரம் மடங்கு கூடுதல் விலையில் கள்ளச்சந்தையில் அவர்களுக்கு கிடைத்தது டிக்கெட்.

சரி, பசங்க ஏதோ விளையாடிட்டுப் போறானுங்க என்று இந்த பெரிய மனுசன் தனக்குண்டான வேலையைப் பார்க்கப் போயிருக்க வேண்டியதுதானே என்று மன்மோகன்சிங் மீது குறைபட்டுக்கொண்டான் மாரிச்சாமி. பாராளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்லக் கூப்பிட்டால் மிரண்டுபோன மாடு பின்னுக்கிழுக்கிற மாதிரி பம்முகிற இவர், நான் கிரிக்கெட் பார்க்க மொஹாலிக்குப் போறேன், நீயும் வாயேன் என்று கிலானியை வேறு கூப்பிட்டுத் தொலைத்திருந்தார். மேயற மாட்டை நக்குற மாடு கெடுப்பதுங்கிறது இதுதான்.

ஆளும் திறனில்லாதவர், ஊழல்வாதிகளின் தலைவர் என்றிருக்கும் தன்னைப் பற்றிய சித்திரத்தை அழித்தெழுதவே மன்மோகன்சிங் இப்படி ஸ்டன்ட் அடிக்கிறார் என்பது தனக்கே புரிகிறபோது கிலானிக்கு ஏன் புரியவில்லை என்று மாரிச் சாமிக்கு வருத்தமாகிவிட்டது. சரி, கூப்பிட்ட மரியாதைக்கு வந்துட்டுப் போறேன்னு சொல்லி நிறுத்தாமல், ஜெயிச்சீங் கன்னா ஆளுக்கு 25 ஏக்கர் நிலம் தாரேன்னு அறிவித்து அவங்காளுங்களை உசுப்பேத்தினதில் மாரிச்சாமி ஏகத்துக்கும் கடுப்பாகிப்போனான். வெள்ளாமை பண்ணி கஞ்சி குடிக்க இத்துனூண்டு நிலம் கேட்கிற சனங்களை சுட்டுக் கொல்கிற ஆட்சியாளர்கள் சொகுசில் திளைக்கிற கிரிக்கெட்டான்களுக்கு நிலம் கொடுக்க ஏன் துடிக்கிறார்கள் என்ற கேள்வி மாரிச் சாமியைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் எழவில்லை. போதாக் குறைக்கு பூனம் பாண்டே என்கிற மாடல்குல மாணிக்கம் வேறு இந்தியா உலகக்கோப்பை வென்றுவிட்டால் அந்தக் குழுவிலிருக்கிற அத்தனைப்பேர் முன்னாலும் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிற்கிறேன்னு சபதம் வேறு போட்டுவிட்டதில் ஆட்டத்தைப் பார்க்கவா அம்மணத்தைப் பார்க்கவா என்று ஊரே பரபரப்பிலும் கிளுகிளுப்பிலும் பற்றியெரிந்தது. வெற்றி பெறப்போகும் இந்திய ஆட்டக்காரர்களில் யார் யாருடன் எந்தெந்த பாலிவுட் நடிகை டேட்டிங் போகவிருக்கிறார் என்கிற அதிமுக்கிய விசயங்களை ஆங்கிலச்சேனல்கள் அலசி காயப்போட்டுக் கொண்டிருந்தன. நாட்டின் கௌர வத்தை உயர்த்தப்போகிற ‘நம்ம பசங்களுக்கு’ காணிக்கையாக கொடுப்பதை விடவும் சிறப்பாக உங்கள் உடம்பு என்னத்தை செய்துவிடப்போகிறது பெண்களே என்று  உசுப்பேற்றவும் ஊடகங்கள் தயங்கவில்லை.

போர் தொடங்கிவிட்டிருந்தது. நெரிசலில் திணறிக் கொண்டிருந்தது பார்வையாளர் மாடம். ‘ஆத்தா உம்பேரன் வந்திருக்கேன்’ என்று ஏதாவதொரு குடிசைக்குள் எட்டிப் பார்த்து டயலாக் பேசும் அரசியல்பணிக்கு லீவ் போட்டு விட்டு ராகுல்காந்திகூட வந்திருந்தார். இந்திய ஆட்டக்காரர் கள் எச்சில் துப்பினாலும் மூக்கு நோண்டினாலும்கூட பார்வை யாளர் மாடத்திலிருந்த ரசிகர்களும் பிரபலங்களும் ஆரவாரம் செய்து உற்சாகமூட்டினர். கிரிக்கெட் தந்திரியான ராஜதந்திரி என்று அவ்வப்போது மன்மோகன் சிங்கை குளோஸ்அப்பில் காட்டிக்கொண்டிருந்தன தொலைக்காட்சிகள். உங்க ஊர், உங்க மைதானம், உங்க கும்பல்... என்னமும் நடத்துங்கப்பா என்பது போல அவர் பக்கத்தில் கிலானியும் இருந்தார்.
மாரிச்சாமி இப்போது நிதானத்துடன் காய் நகர்த்தினான். எனவே இந்தியாவின் வெற்றிக்காக ஒரு பில்லியன் இந்தியர் களும் பிரார்த்தித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் ஜெயிக்கவேண்டும் என்பதாயிருந் தது அவனது பிரார்த்தனை. தனது அரசியல் எதிரிகளான இந்தியாவை அரையிறுதியிலும் இலங்கையை இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தானைக் கொண்டு வீழ்த்திவிடும் அவனது அரசியல் கிரிக்கெட்டின் கவுன்ட்டவுண் தொடங்கி யிருந்தது. யார் கையில் மட்டையைக் கொடுத்து யாரை அடித்து வீழ்த்துவது என்கிற தனது திட்டத்தில் எந்த பிசகும் வந்துவிடாமலிருக்க அவனது பிரார்த்தனை தீவிரமானது.

எது நடக்கக்கூடாதென்று பயந்தானோ அதுதான் கடைசியில் நடந்தது. இந்தியா அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்திவிட்டு இறுதிச்சுற்றில் இலங்கையுடன் மோதுவதற்கு வந்திருந்தது. உண்மையில் ஒருவரையொருவர் எதிர்த்தாடுவார் களா அல்லது ‘மச்சான், நாமெல்லாம் அப்படியா பழகியிருக் கோம்?’ என்று இரண்டு அணிகளும் ஒரே அணியாக மாறி கோப்பையை பங்கிட்டுக் கொள்வார்களா என்ற சந்தேகம் வந்துவிட்டது மாரிச்சாமிக்கு. சந்தேகப்பட வேண்டும் என்ப தற்காக அவன் சந்தேகப்படவில்லை. இருநாடுகளுக்குமிடையில் அப்படியொரு நெருக்கம் இருக்கிறது என்பதுதானே உண்மை? தனது மீனவர்களை தினந்தோறும் சுட்டுத்தள்ளுகிற போதும்கூட  இலங்கையோடு இணக்கத்தையே பேணி வருகிற இந்தியா இலங்கையை எதிர்த்து ஆடும் என்று எப்படி நம்புவது? அப்படியே இந்தியா தயாராயிருந்தாலும் அதை எதிர்த்தாட இலங்கைதான் முன்வருமா? அல்லது, பயங்கர வாதத்தை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக்  கொன்றொழிக்க உற்றத்துணையாய் இருந்தமைக்கு காணிக்கையாக உலகக்கோப்பையை இந்தியா வுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு வெளியேறிவிடுமா? சீனா கிரிக் கெட்டே ஆடாதிருப்பது ஏன்? இப்படி பலவாறான கேள்வி களும் அய்யங்களும் வாட்டியெடுத்தன மாரிச்சாமியை.

 ஒருவேளை நட்பையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு விளையாட்டை விளையாட்டாய் எண்ணி மோதிக்கொள்வார் களேயானால், எந்த அணி ஜெயித்தாலும் அது தனக்கு கிடைக்கும் வெற்றி என்றும்கூட அவனுக்கொரு கருத்திருந் தது. மோதவிடுவதுதான் வெற்றியே தவிர கோப்பை யாருக்கு என்பது அவனைப் பொறுத்தவரை முக்கியமற்றதாயிருந்தது.

நெறியற்ற நோக்கங்களுக்காக இணைந்து நிற்கும் கூட்டாளிகளுக்குள் பிளவை உருவாக்கி மோதவிடுவதும் அரசியல் தந்திரங்களில் ஒன்று என்பதை அறிந்திருந்த மாரிச்சாமியின் பிரார்த்தனை அதுபற்றியதாகவே இருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தொலைக்காட்சியின்  முன் அமர்ந்துவிட்டிருந்த ஒரு பில்லியன் இந்தியர்களும் இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று கண்மூடி பிரார்த் திக்கத் தொடங்கியிருந்தனர். போட்டி தொடங்கிவிட்டால் இவர் கள் எழுப்புகிற ஆரவாரக்கூச்சல் தனது ஒருமுகப்பட்ட மனதைச் சிதறடித்து பிரார்த்தனையின் அடர்த்தியைக் குறைத்துவிடக்கூடும் என்று அஞ்சிய மாரிச்சாமி ஜனசந்தடி யற்ற கானகம் ஒன்றுக்கு விரைந்தான். மகரஜோதிக்காக கொழுத்தக்கூடியதைப் போன்ற மிகப்பெரிய சூடக்கட்டி யொன்றையும் அவன் வாங்கியிருந்தான். போட்டி நடக்கும் ஏழுமணி நேரத்திற்கும்  நின்றெரியக்கூடிய அளவுக்கு பெரிய தாயிருந்த அந்த சூடக்கட்டியின் அனலடிக்காத தூரத்தில் அமர்ந்த மாரிச்சாமி கண்மூடி தன் பிரார்த்தனையைத் தொடங்கிவிட்டிருந்தான்.

இரவு ஒன்பதரை மணிவாக்கில் நகரத்திலிருந்து கிளம் பிய வேட்டுச்சத்தங்களால் போட்டியின் முடிவை ஒருவாறு யூகித்துக் கொண்ட மாரிச்சாமி, தனது பிரார்த்தனை பலித்து விட்டது குறித்த சந்தோஷத்தோடு கண்திறந்தான். வாண வேடிக்கைகள்  இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன. இந்தியா ஜெயித்ததற்கான கொண்டாட்டத்தில் இருக்கிற எவரு டனும் இலங்கை தோற்றதற்கான தனது கொண்டாட்டத்தை பகிர்ந்துகொள்ளத் தேவையில்லை என்பதில் மாரிச்சாமி உறுதி யாக இருந்தான். என்னை எதிர்க்க எவருமுண்டோ இவ்வுல கில் என்று மார்தட்டி நின்ற இலங்கை மண்ணைக் கவ்வியது தான் முக்கியமேயன்றி அதை மாரிச்சாமிதான் செய்துமுடித் தான் என்கிற தகவல் இந்த உலகத்துக்கு தேவையற்றது. அவனைப் பொறுத்தவரை அது தன்னந்தனியனாய் தனக்கே தனக்கென தானே ரகசியமாக ஈட்டிய வெற்றி. அது யாருக்கும் தெரியக்கூடாது, குறிப்பாக க்யூ பிராஞ்ச் போலிசுக்கு.
***
வாக்கு கொடுத்த மாதிரியே நம்ம பசங்கக்கிட்ட உங்க பசங்க தைரியமா தோத்துட்டாங்க. வெளிவரப் போகிற ஐ.நா. அறிக்கையால உங்களுக்கு எந்த பாதிப்பும் வராம பாதுகாக்க வேண்டியது இனி எங்கப் பொறுப்பு. பயப்படாம போயிட்டு வாங்க... என்று ராஜபக்ஷேவை வழியனுப்பினார் மன்மோகன் சிங்.  தன்னந்தனியனாய் இலங்கையை வீழ்த்தி ராசபக்சே வுக்கு பாடம் புகட்டிவிட்ட களிப்பிலும் களைப்பிலும் தூங்கத் தொடங்கியிருக்கிறான் மாரிச்சாமி.

***

புதுவிசை, இதழ்:32, ஜூன் 2011

கருத்துகள் இல்லை: