12 ஜூலை, 2011

தாராவி

வெளிநாட்டிலிருந்து வருகிறீர்களா? இந்திய அரசு உங்களுக்கு காட்ட விரும்பாத காட்சி!







• மும்பைக்கு அருகே தாராவி என்ற சேரிப்பகுதியை வைத்துக்கொண்டு, இந்தியா தனது இமேஜை மாற்றுவது எப்படி?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றய பல ஆசிய நாடுகளைவிட அதிகமாக இருக்கிறது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மிகுந்த பலம்வாய்ந்த நாடும் இந்தியாவே. அப்படியிருந்தும் மேலைநாடுகளில் இந்தியாவைப்பற்றி சொல்வதென்றால் முதலில் சொல்லப்படுவது இந்தியாவின் பங்குச் சந்தை பற்றியுமல்ல, அதன் தொழில்நுட்பம் மேலோங்கிய நிறுவனங்கள் பற்றியுமல்ல… அங்குள்ள ஏழ்மையைப் பற்றித்தான்!
அன்றிலிருந்து இன்றுவரை எந்தவொரு ஆங்கிலப்படத்தையும் எடுத்துப் பாருங்கள். அவற்றில் இந்தியா பற்றிக் காட்டுவதென்றால் சிம்பாலிக்காகக் காட்டப்படும் காட்சி, பிச்சைக்காரர்களோ, பாம்பாட்டிகளோ, தெருவில் உலாவும் மாடுகளோ, அல்லது சேரிகளோதான். இப்படிக் காட்டினால்தான் மேலை நாட்டிலுள்ள சராசரி ரசிகன் ஒருவருக்கு, இந்தக் காட்சியில் இந்தியாவைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று புரியும் என்பதே அவர்களது கணிப்பு!
இந்தியாவும் தனது இந்த இமேஜை மாற்றிக்கொள்ள நீண்ட காலமாகவே முயற்சிக்கிறது. ஆனால் இமேஜை மாற்ற முடியவில்லை. இன்றும் ஆங்கிலப் படங்களில் சேரிக்குள் குடுகுடுப்பைக்காரர் போவதுதான் காண்பிக்கப்படுகின்றது.
இமேஜ் இன்னமும் மாறவில்லை. எங்கே தவறு செய்கிறது இந்தியா? வெளிநாடுகளில் செய்யப்படும் விளம்பரங்கள் போதாதா?
அதெல்லாம் ஒன்றுமில்லை. இதற்கான விடை இந்தியாவுக்கு உள்ளேயே இருக்கிறது.
நெருக்கமான வீடுகள்.. நடுவே சாக்கடை!
வெளிநாடு ஒன்றிலிருந்து நீங்கள் இந்தியாவுக்கு வருவதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரமான மும்பைக்கு வாருங்கள்.
மும்பை டவுன்டவுனில் இருக்கிறது இந்தியா உங்களுக்குக் காட்ட விரும்பும் காட்சி. அங்கிருந்து வெறும் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்தியா உங்களுக்குக் காட்ட விரும்பாத காட்சி.
இந்தியா உங்களுக்குக் காட்ட விரும்பாத காட்சிதான் தாராவி. ஆசியாவின் மிகப்பெரும் சேரிப்பகுதி.
மும்பையிலிருந்து கூப்பிடு தொலைவில் இந்தச் சேரிப் பகுதியை வைத்துக்கொண்டு இந்தியா வெளிநாடுகளில் தனது இமேஜை மாற்றுவது எப்படி?
இன்றைக்கும் தாரவியின் நிலைமை மிகப் பரிதாபமாக உள்ளது. இரைச்சல் இப்பகுதியில் மனிதர்கள் மிக நெருக்கமாக வாழ்கின்றனர். ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 18 000 பேர் வசிக்கின்றனர். குறுகிய சாலைகள் மற்றும் தெருச் சந்துகளில் சிரமப்பட்டு தங்களது வாழ்கையை நடத்துகின்றனர். ஆயிரக்கணக்கான எலிகளுக்கு மத்தியில் இவர்களது வாழ்க்கை செல்கிறது.
தாரவியை உலகின் மிகப்பெரிய சேரிப்பகுதியாக சிலர் குறிப்பிடுவது உண்மையல்ல. கென்யாவின் தலைநகர் நைரோபிக்கு அருகேயுள்ள கிபேராவில் தாரவியைப்போல 4 மடங்கு மக்கள் வசிக்கின்றனர். தாராவியை வேண்டுமானால், ஆசிய அளவில் மிகப்பெரிய சேரிப்பகுதி என்று சொல்லலாம். (கராச்சியில் தாரவியைக் காட்டிலும் அதிக மக்கள் வசிக்கும் ஒரு சேரிப்பகுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி உறுதியான விபரங்கள் இல்லை)
தற்போது தாராவி இருக்கும் பகுதி 19-ம் நூற்றாண்டில் சதுப்பு நிலமாக இருந்தது. இங்கு கோலி மீனவ மக்கள் வசித்து வந்தனர். இந்தப்பகுதியில் தென்னங்கீற்றுகள், அழுகிய மீன்கள் மற்றும் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்டு அசுத்தமானதால், கோலி இன மக்கள் காலப்போக்கில் இந்தப்பகுதியைவிட்டு வெளியேறினர். இது மற்ற இனத்து மக்கள் வந்து தங்குவதற்கு வசதியாக அமைந்தது.
குஜராத்திலிருந்து வந்த கும்பர் இனத்தவர்கள்,  இங்கு குயவர் காலனியை உருவாக்கினர். மண்பாண்டங்கள் செய்தனர். தமிழ்நாட்டிலிருந்து வந்த தமிழர்கள் தோல் பதனிடும் தொழிற்சாலையை உருவாக்கினர். உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் துணி நெய்யும் தொழிலில் ஈடுபட்டனர்.
இப்படி பல்வேறு தரப்பு மக்களும் தாரவியில் வந்து சேர்ந்ததால் இந்தியாவில் வேறுபட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக தாரவி மாறியது.
மழை வந்தால் நிலைமை படு மோசம்!
சேரிப்பகுதிகளில் காணப்படும் அனைத்துப் பிரச்சனைகளும் தாரவியில் உள்ளன. உதாரணமாக 35 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் மீராசிங் என்ற பெண் தண்ணீருக்காக அன்றாடம் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டியுள்ளது. தண்ணீர் பெறுவதற்கு இவர் ரௌடிகளுக்கு மாமூல் கொடுக்க வேண்டி உள்ளது. சேரிப்பகுதி சட்ட வரம்பிற்குள் வராததால் அரசின் சலுகைகள் தாரவி இருக்கும் பகுதிக்குக் கிடைப்பதில்லை. தண்ணீருக்கு ரௌடிகள், மின்சாரத்திற்கு ரௌடிகள் என எல்லாமே குண்டர்களின் பிடியில்தான் தாரவி சிக்கியுள்ளது.
தாரவியில் உள்ள 90 அடி சாலையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் வித்தியாசமானவை. டாக்ஸி டிரைவர்கள் தங்களது டாக்ஸியை வெளியே எடுக்கச் சிரமப்படுவது, மண்பாண்டம் செய்பவர் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறுவது, சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலையிலிருந்து வரும் தொந்தரவுகள் என அனைத்தையும் இங்கு வசிக்கும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்த தாரவிப்பகுதியை மாற்றும் முயற்சியில் முகேஷ் மெகத்தா என்பவர் இறங்கியுள்ளார். 56 வயதான இவர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார். தாரவியை 5 பகுதியாகப் பிரித்து வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய புதிய காலனிகளை உருவாக்குவது அவரது திட்டங்களில் ஒன்று. இங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 225 சதுர அடி கொண்ட வீடு ஒன்றைக் கட்டித்தருவதும் இவரது திட்டத்தில் ஒரு பகுதி.
திட்டம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்ற இந்தியா போன்ற நாட்டில் நிர்வாக இழுபறிகள் ஏராளமாக இருக்குமே? இருக்கின்றன.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் கட்டடங்களைக் கட்டி சேரிப்பகுதிகளை ஒழிப்பதற்கு, அங்குள்ள 60 சதவீத மக்களின் அனுமதி தேவைப்படுகிறது. அதைப் பெறுவது அவ்வளவு சுலபமல்ல.
முகேஷ் மெகத்தாவின் குடும்பம் குஜராத்தில் இருந்து மும்பைக்கு வந்தது. இரும்புத் தொழிலில் ஈடுபட்டு பெருமளவில் செல்வம் ஈட்டியது. “எனது அப்பா கையில் ஒருபைசாகூட இல்லாமல் மும்பைக்கு வந்தார். பின்னர் மிகப்பெரும் இரும்புத் தொழிலில் அதிபரானார். நான் அமெரிக்காவில் கட்டடக்கலை பயின்றேன். அமெரிக்காவைப் பின்பற்றி தாரவியில் மாற்றம் கொண்டுவர உள்ளேன்” என்கிறார் முகேஷ் மெகத்தா.
தாரவியை மாற்றும் முகேஷ் மெகத்தாவின் திட்டத்திற்கு அந்தப் பகுதியில் எல்லோரும் ஆதரவாக இல்லை. கணிசமான எதிர்ப்பும் காணப்படுகிறது.
உதாரணமாக மீராசிங் என்பவர் 400 சதுர அடி இடத்தில் வசிக்கிறார். வாடகை மூலம் ரூ.1400 சம்பாதிக்கிறார். இப்படி இருக்கையில் மெகத்தாவின் திட்டத்தின்படி 225 சதுர அடி கொண்ட வீடு எனக்குத் தேவைதானா? என்று கேட்கிறார். இதுதவிர, லிப்ட் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளையும் ஏற்க அவர் தயாராக இல்லை.
இவரது மகன் அமீத்சிங் மெகத்தாவின் திட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார்.  “குண்டர் மெகத்தாவின் முட்டாள்தனமான திட்டம்” என தனது ‘ஜன்ஹித் டைம்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை எழுதத் தயாராக உள்ளார்.
பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேச் மொபின் இத்திட்டத்தை வரவேற்றுள்ளார். அரசின் மெத்தனப்போக்கே சேரிப்பகுதிகள் உருவாவதற்குக் காரணம் எனச் சாடுகிறார். ஆனாலும், மெகத்தாவின் திட்டம் நடக்குமா என சந்தேகப்படுகிறார். “மகராஷ்ட்ரா மாநிலத்தின் அரசியல்வாதிகளால்  எங்களது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொண்டால்தானே மாற்றியமைக்க முடியும்”
குழந்தைகள் விளையாடும் இடத்தைப் பாருங்கள்!
இவர்கள் இருவரும் கனவுலகில் மிதப்பதாகக் கேலி செய்கிறார்  ஷேச் மொபின். இவ்வாறு கூறுவதற்கும் காரணம் உண்டு. ஏனென்றால் தாரவி பகுதியில் முகேஷ் மெகத்தா கோல்ப் கிளப், பாய்மரப்படகு போட்டிக்கான கிளப் போன்றவற்றை உருவாக்குவதாகக் கூறி இருந்தார். மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்போவதாகவும் தனது திட்டத்தில் கூறி இருந்தார்.
இவரது இதுபோன்ற திட்டங்களைத்தான் மக்கள் கேலி செய்கின்றனர். இவர் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து வேஷம் போடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதை மறுக்கும் மெகத்தா, தான் கனவுலகில் வாழ்பவர் அல்ல என்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்ட்ரா முதல்வர் தேஷ்முக் குடிசைப்பகுதிகளை மாற்றுவதாகக் கூறி 60 ஆயிரம் குடிசைகளை அகற்றினார். இதனால், 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்தனர். இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிடக்  கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் மெகத்தா.
மெகத்தாவின் திட்டத்திற்கு கும்பார் இன மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அந்த இனத்தைச் சேர்ந்த டாங் என்பவர், “எனது வீட்டைப் பாருங்கள்! 3000 சதுர அடியில் அமைந்துள்ளது. அவர் கட்டித் தருவதாகக் கூறும் வீட்டைவிட இது பெரியது. இங்கு தொழிற்சாலையும் உள்ளது. தாரவியை சேரிப்பகுதி என்று யார் சொன்னது? எதற்காக நாங்கள் இங்கிருந்து வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும்?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகிறார்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து மெகத்தாவின் திட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பொதுவாக இந்தியாவில் எந்தத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்வரை இழுபறி இருந்தே தீரும். அதற்கு தாரவியும் விதிவிலக்கல்ல.

கருத்துகள் இல்லை: