17 ஜூலை, 2011

வயது - அம்பை

அம்பை
இருட்ட ஆரம்பித்து விட்டது. பர்மிங்கம் சப்தங்கள் மங்க ஆரம்பித்து விட்டன. அந்த மாலைப்பொழுது கனத்துக் கிடந்தது. அதன் பளுவைத் தாங்க முடியும் என்று தோன்றவில்லை. பர்மிங்கமின் குளிரில் அவளும், அவளைத் தன்னுடன் சில நாட்கள் தங்க அழைத்திருந்த லாஜ்வந்தியும் சுடச்சுடப் பேசியிருந்தனர் காலையில். விவாதத்தின் முடிவில், ''தீவாவளிக்கு விளக்கு ஏற்றியும், கோலம் போட்டும் இந்தியக் கலாச்சாரத்தை இங்குள்ள இந்தியர்களுக்கு நினைவுப்படுத்த நீ நினைக்கிறாய். ஆனால் இந்த கிரியைகள் தான் கலாச்சாரமா என்று கேள்விகள் கேட்டுத் தாண்டி வந்தாயின்று நாங்கள்'' என்றாள் பாகீரதி.

''இந்தியாவையே பார்க்காத, இந்தியர்கள் என்று அழைக்கப்படும் எங்களுக்கு வேறு எந்த வேர்கள் இருக்க முடியும் இங்கே?''

''கலாச்சார வேர்கள் தீபாவளியிலும், ஹோலியிலும் இல்லை லாஜு''.

''அந்த உபதேசத் தொனியில் பேசாதே. நீ கடை வைத்தால் உன் கடைக் கண்ணாடியைambai5 உன் முன்னோர்கள் இந்தியர் என்பதால் உடைக்கப் போவதில்லை. உன் தபால் பெட்டியில் யாரும் மலத்தைக் கொட்டப் போவதில்லை. ஒரு வெள்ளையனைக் காதலித்து விட்டால் குற்ற மனப்பான்மையுடன் நீ ஆடிப் போக வேண்டாம். இது அத்தனையும் நாங்கள் தாங்க வேண்டியிருக்கிறது. குன்றுபதேசம் செய்யாதே. பெரிய ஏசு கிறிஸ்து மாதிரி.....''

''கலாச்சாரத்தைச் சில விஷயங்களில் இறுக்கப் பார்க்கிறாய் நீ. அதை வளரவிடாமல் கட்டிப் போடுகிறாய்''.

''என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இந்தியாவுக்கு வா என்கிறாயா? பஸ் ஸ்டாப்பிலும், ரேஷன் கடையிலும் வரிசையில் நின்று சாகு என்கிறாயா?'' என்று வீறிட்டு லாஜ்வந்தி டீக்கோப்பையை அவள்மேல் எறிந்திருந்தாள் காலையில்.

அதன்பின் அந்த விபத்து. லாஜுதான் காரை ஓட்டினாள். முன்னிரவு. பாகீரதிக்கான பயணச்சீட்டுப் பற்றி விசாரிக்கப் போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னால் ஒரு கார் வழுக்கிக் கொண்டு போய்க்கொண்டிருந்தது. சடேரென்று மின்னல் அடித்தாற்போல் ஒரு பையன் பாய்ந்தான். முன்னால் போன கார் குலுங்கி வீறிட்டு நின்றது. ஒரு வயதான வெள்ளையர் வெளியே விரைந்து வந்தார்.

இந்தியப் பையன்.

முகத்தில் சாம்பல் பூக்க ஆரம்பித்து விட்டது. ''மா....மா....'' என்று முனகினான்.

''திடீரென்று கடந்தான் தெருவை. என்னால் நிறுத்த முடியவில்லை. நான் என்ன செய்வது? ப்ளீஸ், நான் என்ன செய்வது?'' என்று அரற்றினார் வெள்யைர்.

லாஜு, பையனின் நெற்றியைத் தடவினாள். அவன் தாத்தா பாட்டி பிறந்து வளர்ந்த கிராமம், சோள ரொட்டி சுடச்சுட, வெண்ணெய் உருக நெய் மணக்கும் கடுகுக் கீரை மசியல்..... காற்றில் ஆடும் நெற்பயிர், பஞ்சாபி ட்டப்பா பாட்டின் ஒரு வரி .....இல்லை, ஒரு வண்ண துப்பட்டா, அவன் அப்பாவின் அவிழ்ந்த முடி, அவருடைய பருத்த தொந்தியில் முறுக்கிப் படுத்திருந்த கனத்த நாடா முடிச்சு..... என்ன அவன் மனதில்?

''மா ... மேரி.... மா...''

ஆம்புலன்ஸ் வந்து அவனை ஏறூறும் போது அவன் உடல் கடைசியாக முறுக்கிக் கொண்டு துள்ளியது.

யாரையோ வைதவாறே தன் 'ஸ்டீயரிங் வீலில்' அடித்தாள் லாஜு.

அந்த விபத்து அவர்கள் கழித்திருந்த அந்த நாளின் தன்மையை ஒத்ததாகவே இருந்தது. சாம்பல், சாவு, அறுபடல், தனிமை இவற்றுக்கெல்லாம் குழைத்துப் பூசியதாய்.

அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. எதிர்கொள்ள ஒரு கனத்த மாலை இப்போது. இவன் ஒரு புத்தகத்துடன், லாஜு தன் தட்டச்சு இயந்திரத்தின் எதிரே வேலை செய்தவாறு.

லாஜு திரும்பி, ''பியர் குடிக்கலாமா?'' என்றாள்.

''இந்த குளிரில் பியர் யாரால் சாப்பிட முடியும்? ரம் இல்லையானால் வோட்கா''.

எழுந்து, ''எனக்கு பியர்தான் பிடிக்கும். நான் ஒரு பைன்ட் பியர் வாங்கி வரப்போகிறேன்' என்று விசுக்கென்று கதவை நோக்கிப் போனாள், பிடி வைத்த ஒரு பாத்திரத்தைக் கையில பிடித்தபடி. ''இந்தியக் கலாசாரத்தின் முக்கியமான அம்சம் விருந்தோம்ல் தான். இது தெரியாமல் என்ன இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புகிறாய்? என்று கத்தினாள் பாகீரதி அவள் முதுகைப் பார்த்து.

லாஜு கதவைப் படீரென்று உதைத்தாள்.

மீண்டும் கதவு திறந்தபோது பாகீரதி தலை நிமிரவில்லை. லாஜு தனியாக இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது. தலை நிமிர்ந்தாள். லாஜு அருகே சற்றுப் பருத்த, நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டு புன்னகை செய்ய ஆரம்பித்திருந்தாள். உருண்டை முகம், சுருளே இல்லாத முடி. உலர்ந்தாற்போல் உதடுகள், கூரிய செதுக்கி வைத்த மூக்கு. கறுப்புக் கண்கள். அவள் ஒரு தன்மையைத் தாங்கி வந்தாற்போல் வெளியே பனி பெய்ய ஆரமபித்தது. ஜன்னலூடே பனிப் பஞ்சு மழை.

''இவள் காப்ரியேலா. இந்தியர்களை ரொம்பப் பிடிக்கும். உன்னைப் பார்க்க அழைத்து வந்தேன்'' என்றால் லாஜு.

காப்ரியேலா கதவருகே இருந்த மின்விளக்கு வெளிச்சத்தை விட்டு முன்னால் வந்து நாற்காலியில் அமர்ந்து புன்னகைத்தாள். தன் கையை நீட்டினாள். அதைப் பற்றிக் கொண்டு,

''ஹலோ, நான் பாகீரதி'' என்றாள்.

அந்தக் கண்கள். தாமரை பூத்த தடாகமடீ... என்று கட்டைக் குரலில் குழைந்த பாடல் மூளையில் ஒலித்துப் பரவியது. தாமரையின் தண்டைப் பற்றிக் கொண்டுவிட்டால் கீழே கீழே கீழே ஆழங்காணா இடத்துக்குக் கொண்டு போகும் உணர்வு.

பியர் பாத்திரத்தை மேஜையில் வைத்த பின்னர் காப்ரியேலாவின் மேல்கோட்டைக் கழற்றி வாங்கி மாட்டிவிட்டு, ''நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள். நான் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்'' என்று தன் மேஜையை அடுத்த அறைக்குத் தள்ள ஆரம்பித்தாள் லாஜு. அறையை எட்டும் முன் பாகீரதியைப் பார்த்து, காப்ரியேலாவுக்கு புரியக்கூடாது என்பதற்காக ஹிந்தியில், ''விருந்தோம்பல் இந்தியப் பண்பாடு தான். ஆனால் எல்லா இந்தியர்களும் அதற்கு லாயக்கில்லை'' என்றாள்.

''சர்தான் போடீ''

''தமிழில் கெட்ட வார்த்தை கிடையாது என்று சொன்னாயோ?''.

''நீ நினைக்கும் கெட்ட வார்த்தை இல்லை இது''.

லாஜு மேஜையை உந்தினாள்.

காப்ரியேலா இருவரையும் பார்த்தவாறிருந்தாள்.

பாகீரதி புன்னகைத்தாள் அவளைப் பார்த்து, ''அபிப்ராய பேதம்'' என்றாள். காப்ரியேலா கம்பளத்தில் அமர்ந்தாள். ''இந்தியர்கள் மாதிரி'' என்றவாறே. பாகீரதியும் கீழே உட்கார்ந்து கொண்டாள்.

அருகே குளிர்காய மின் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.

தன் பையைத் திறந்து ஒரு வைன் புட்டியை எடுத்தாள். ''வைன் பிடிக்குமா?'' வெள்ளை வைன்.

''ரொம்ப....'' பாகீரதி மதுவை ஊற்றக் கோப்பைகளைக் கொண்டு வந்தாள்.

காப்ரியலோ ஊற்றினாள். இருவரும் கோப்பைகளை உயர்த்தினர். ''இந்த மாலைக்கு'' என்றாள் காப்ரியேலா.

கொஞ்சம் கழித்து, ''சில மாலைப் பொழுதுகள் ரொம்ப நீண்டு போகின்றன'' என்றாள் காப்ரியேலா. நெருப்பைப் பார்த்தாள். ''என் அம்மா பியானோ வாசிப்பாள். மாலையில், சில சமயம் என் அப்பா சீட்டி அடித்துப் பாடுவார் கூட....''

''லத்தீன் அமெரிக்காவின் எந்தப் பகுதி?''

''சிலே.''

சூடான இறகுடன் வைன் நரம்புகளை உரச ஆரம்பித்தது இதமாக. ''அவரவர் நாட்டை விட்டு வெளியே இருப்பவர்களுக்கு ஞாபகசக்தி தான் இதம். எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது என்று நான் நினைக்காத விஷயங்களெல்லாம் சில சமயம் நினைவுக்கு வருகின்றன. என் அம்மாவுக்கு முனை கூம்பிய நகங்கள். பியானோவில் வைத்த அவள் விரல்களை மட்டும் திடீரென்று ஒருநாள் நினைத்துக் கொண்டேன். என் அப்பாவின் சாக்லேம் றி ஷ¥வின் முடிச்சுப் போடும் இடத்தருகே ஒரு மடங்கல் விழும்....''

''அங்கே போவதுதானே நீ காப்ரியேலா?''

அவள் வைன் கோப்பையை வைத்து விட்டுத் தன் கைப்பையைத் திறந்தாள். தன் பாஸ்போர்ட்டை எடுத்துப் பாகீரதியிடம் வந்தாள். அது ஒரு ஐநா பாஸ்போர்ட். அவள் பிறந்த வருடத்தைப் பார்த்தாள். 1956 அவள் வயது இருபத்தைந்து தான். அவளைப் பார்த்தவுடன் சிரித்தாள். ''ஆமாம். அது சரியான வருடம் தான்'' என்றாள்.

''நான் ஒரு அரசியல் அகதி'' என்று விளக்கினாள்.

பாஸ்போர்ட்டில், அவள் எல்லா இடங்களுக்கும் போகலாம். சிலேயைத் தவிர என்றிருந்தது.

காப்ரியேலா தன் கோப்பையை நிரப்பிக் கொண்டாள்.

அவர்கள் கைதானது இரவு நேரத்தில். எட்டுப் பேர்கள். பதினெட்டு பத்தொன்பது வயதுக்காரர்கள். அர்ஜன்டீனாவுக்கு அவர்கள் தப்பி வந்து ஒரு மாதமாகி விட்டிருந்தது. சிலேயில் ஒரு மத்தியானம் அந்த எச்சரிக்கை அவர்களில் ஒருவர் காதில் கிசுகிசுக்கப்பட்டது. ''தப்பி ஓடுங்கள்'' கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்களைக் கைது செய்தாகிவிட்டது என்ற வதந்தி பரபரவென்று பரவியது. லூயிஸ¤ம் காடலீனாவும் டீ குடித்துக் கொண்டிருந்த அவளை எழுப்பிக் கொண்டு போனார்கள்.

பெளலா, யார்கே, யோஸே, தெரீஸா, ஆல்வாரெஸ் எல்லோரும் சற்று வெளுத்த முகங்களோடு பல்கலைக் கழகத் தெருமுனையில் நின்று கொண்டிருந்தார்கள். யோஸேயின் கண்கள் சிவந்திருந்தன. உதடுகள் துடித்தன. அழுதுவிடுவான் போலிருந்தது.

''நான் வெறும் துண்டுப் பிரசுரங்கள் தானே வினியோகித்தேன்?'' என்றான். அவன் குரல் நடுங்கியது. ''போலீஸிடம் உள்ள பட்டியலில் நம் பெயர்கள் கட்டாயம் இருக்கும். போன மாதம் போராட்டம் நடந்த போது முன் வரிசையில் நாம் எல்லோரும் இருக்கவில்லையா?'' வா, சீக்கிரம்,'' என்று சிடுசிடுத்தான் யார்கே.

அவள் பெளலாவைப் பார்த்தாள். ஒரு சின்னத்தோள் பை நிரப்பப்பட்டு அவள் தோளில் தொங்கியது. அவள் வீட்டுக்குப் போய் ஒரு சின்னப் பையில் வேண்டியதை நிரப்பிக் கொண்டு கிளம்ப மொத்தம் பதினைந்து நிமிடங்கள் தான் எடுத்துக் கொள்ள முடியும் என்றார்கள். பயத்தில் விக்கித்துப் போயிருந்த அம்மாவின் சில்லிட்டுப் போன கன்னங்களில் அசரமாக முத்தமிட்டு அவள் கிளம்பிய போது அந்த மாதத்தின் ரத்தப்பெருக்கு இறங்கத் தொடங்கியது. மீண்டும் உள்ளே ஓடி அதற்கான சாமான்களைச் சேகரித்தாள்.

அடுத்த தெருமுனையில் மற்றவர்கள் பொறுமை இழந்திருந்தனர். அவள் அதிக நேரம் எடுத்துக் கொண்டது பற்றி விவாதித்தவாறே வேகவேகமாகப் பல தெருக்களில் பிரிந்து போயும், சேர்ந்தும் நடந்தபோது, சிலேயில் கடைசித் தடவையாக நடத்துகிறோம் என்று அவள் நினைக்கவில்லை. எல்லாத் தீர்மானங்களும் எடுத்த வேகம், அமமாவின் சில்லென்ற கன்னம், நடந்து, ஓடி, பஸ்ஸில், ரயிலில் தாவி ஏறி, தூங்கி, இறங்கி, சிலேயின் எல்லையைக் கடக்க வேண்டிய அவசரம் - இவற்றிடையே அதிகமாகச் சிந்திக்க முடியவில்லை. நான்காம் நாள் கலை அவர்கள் அர்ஜன்டீனாவை அடைந்தனர். கடைசியாக தரிசு நிலம் ஒன்றின் மூலையில் சிதிலமாகக் கிடந்த வீட்டில் குடியேறினர். தற்காலிகமாக, சிலே போலீஸாரின் நீள்கரங்கள் அவர்களை எட்டும்வரை. வேறு வேறு பிரிவுகளில் படித்த அவர்கள் இப்போது நெருக்கமானார்கள். மற்றவர்களைப் பற்றி நினைக்க, பேச, மெளனிக்கக் கற்றுக் கொண்டார்கள். யோஸேயின் சின்னத் தங்கைக்குப் பிடித்த சிகப்பில் மஞ்சள் மலர் பதித்த தலைக்குல்லாய் முதல் காடலீனாவின் நண்பன் தந்த சுவையற்ற முதல் முத்தம் வரை அந்தரங்கங்கள் பொதவாகிப் போயின. அவர்கள் வினியோகித்த துண்டுப் பிரசுரங்களின் விவரங்கள், அர்ஜன்டீனாவின் பத்திரிகைகள் எழுதியவை, எழுதாமல் விட்டவை இவற்றிலிருந்து கிரகித்த சேதிகள் பற்றிய அபிப்பிராயங்கள் என்று நிறையப் பேசிக் கொண்டனர்.

கைதான அன்று அவர்கள் மாணவர் தலைவன் அன்டோனியோ பற்றிப் பேசியிருந்தனர். அவர் பொறியியல் பிரிவின் கடைசி ஆண்டுப் படிப்பில் இருந்தான். யார்கேயைத் தவிர அவனை யாரும் பார்த்ததில்லை. அவன் எழுத்துக்களைப் படித்திருந்தனர். யார்கே அவனை ஒரு முறை பார்த்திருந்தான். ஒரு கூட்டத்துக்குப் பின் பலர் அன்டோனியோவின் பின்னால் அவன் அறைக்குப் போனபோது யார்கேயும் போனான். அன்டோனியோ மிக மிருதுவான குரலில் பேசினான்.

''அன்டோனியோ, உன் படிப்பு முடிந்ததும் உனக்குக் கட்டாயம் அமெரிக்காவில் வேலை கிடைக்கும். ஏன் நீ இதை எல்லாம் செய்கிறாய்'' என்றான் ஒரு மாணவன்.

''எனக்கு பயமில்லாமல் வாழ வேண்டும். ஒரு சாதாரண பிரஜைக்கு உரிய கெளரதையுடன் இருக்கும் அடிப்படை உரிமை எனக்குத் தேவை. அதனால் தான்'' என்று பதிலளித்தான் அன்டோனியோ.

''எனக்கு ரொம்ப பயமா இருக்கிறது. அன்டோனியோ'' என்றான் இன்னொருவன் வெளிப்படையாக.

அன்டோனியோ சிரித்தான். ''நண்பனே, நான் பெரிய வீரன் இல்லை. ஒரு கூட்டத்தில் அந்தப் போலீஸ் அதிகாரி சாதாரண உடையில் வந்திருந்தார். ஒரு கணம் நான் அந்த உயிரற்ற, உணர்ச்சிகள் மழுங்கிய கண்களைச் சந்தித்தேன். நிஜமாகச் சொல்கிறேன். என் முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போயிற்று. ஒரு அறையில் இவர் என் எதிரில் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்தபோது வியர்வை பொங்க ஆரம்பித்தது. தலையில் பாரம் அழுத்தியது. எனக்குப் பயம் இல்லை என்று நினைக்காதே. நானும் பயப்படுகிறேன். அடிப்பட்டால், குண்டு துளைத்தால், சித்திரவதை செய்யப்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து காதலிக்கப் பயப்படுகிறேன். அவளை ஆபத்தில் தள்ளக் கூடாதே என்று பயப்பட வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்''.

பேசியவாறே யதேச்¨யாகத் திரும்பியபோது யார்கேயின் மேல் பார்வை பட்டது. பிறகு அவன் கண் பார்வை வேறுபக்கம் திரும்பி விட்டது.

அந்த ஒரு முறை தான் யார்கே அன்டோனியோவைச் சந்தித்தது. அவன் பிடிபட்டுவிட்டான் என்ற சங்கதி அவர்களை எட்டியிருந்தது.

அந்த இரவு அதைப் பற்றித்தான் பேசினார்கள். பேசியவாறே தெரீஸா சுவரில் சாய்ந்து உறங்கி விட்டாள். எங்கு வேண்டுமானாலும் சுருண்டு படுத்து, உடனே உறங்கி விடுவாள் அவள்.

'ஒருவேளை நாம் பிடிபட்டால் நம்மை அடித்து வதைப்பார்களா யார்கே?'' என்றான் யோஸே மெல்ல.

யோஸேக்கு நிறையச் சிரிக்கப் பிடிக்கும். அடக்கமாட்டாமல் பொங்கிப் பொங்கிச் சிரிப்பான். அந்த மாதம் எல்லோர் கூந்தலையும் அவன்தான் வெட்டியிருந்தான். அவன் வீட்டுப் புல்தரையை வெட்டுவதுபோல் வெட்டித் தள்ளியிருந்தான். பதிலுக்குக் காடஸீனா அவனை மொட்டையாக்கியிருந்தாள். இப்போது அவன் கேள்வி கேட்ட போது மொட்டைத் தலையுடன் குழந்தை போலிருந்தான். அவன் புறங்கழுத்து ரோஜா வண்ணத்தில் சிறு பையனுடையது போல இருந்தது. யார்கே அவன் தலையைத் தடவினான் செல்லமாக.

அந்த இரவுதான் அவர்கள் பிடிபட்டார்கள். அவர்கள் உரக்கக் கத்தி எதிர்த்தும் அவர்கள் பிரிக்கப்பட்டனர். தெரீஸாவின் அந்த அகன்ற, பயந்த தூக்கம் கலந்த கண்கள்; பெளலாவின் வெளுத்த முகம்; ஒருகணம் நடுங்கிய யோஸோவின் உடல்; இழுக்கப்படும் ஓசை, கத்தல்கள் இவை எல்லாம் அவர்கள் கடைசியாகப் பகிர்ந்து கொண்ட கணங்களின் துளிகள்.

அப்புறம் அந்தச் சிறு சதுர அறை. அதில் நூறு பெண்கள், விபசாரிகள், கொலைகாரிகள், திருடிகள், அரசியல் கைதிகள், உட்காரக்கூட இடம் இல்லை. நின்றவாறே உறக்கம், வீக்கம் ஏறிய கால்கள். போலீசார் பலாத்காரம் செய்த விபசாரியின் ஐந்த மாதக் கரு அந்த நெருக்கத்தில்தான் வெளிப்பட்டது சிதைந்து. வலியில் அவள் ஒருமுறை வீறிட்டாள். பின்பு அவள் இரத்தம் காப்ரியேலாவின் மேலும், அடுத்திருந்தவர்கள் மேலும பீறிட்டுப் பீச்சியடித்தது. அந்தப் பாதி உருவான கருவை காப்ரியேலா இன்னும் மறக்கவில்லை. அது கொழுகொழுவென்று இருந்தது. மாவு மாதிரி. தட்டையான வழுக்கல் தலையில் துருத்திய மூடின கண்கள். கோணலாய் நீண்ட கை போன்ற ஒன்று. அதன் பெண்குறி ஒரு சிறு கீறல்.

அந்தக் கேள்வி நேரங்கள்.

ஒரு கருணையான இன்ஸ்பெக்டர். ஒரு கொடுமைக்கார இன்ஸ்பெக்டர்.

மாறிக் மாறிக் கேள்விகள்.

அன்டோனியோவை உனக்குத் தெரியுமா?

நான் அவனைப் பார்த்ததில்லை.

அவன் உன் நண்பனா?

இல்லை.

நீ அவனுடன் படுத்திருக்கிறாயா?

.........................

அவள் அவனைப் பார்த்தே இல்லையே இன்ஸ்பெக்டர், இது என்ன கேள்வி?

நீ நல்ல பெண். நல்ல பையனைக் கல்யாணம் செய்து கொண்டு இருக்க வேண்டியவள். என் தங்கையின் சாயல் உனக்கு. உண்மையைச் சொன்னால் உன்னை அனுப்பி விடுவோம்.

முகத்தில் சுளீரென்று மின்விளக்கின் வெளிச்சம்.

மீண்டும் கேள்விகள். அன்டோனியோ எங்கே? அன்டோனியோ பிடிட்டான் தெரியுமா? அவன் சிறையில் இறந்து விட்டான். அவளுக்குச் சேதி வந்ததா? எப்படி? இப்போது அவர்கள் தலைவன் யார்?

வெந்நீரிலும் குளிர்ந்த நீரிலும் மாறிமாறித் தலையை முக்கி எடுத்தல். கேள்விகள். யார் நல்ல, இன்ஸ்பெக்டர், யார் கொடுமைக்காரன் என்ற குழப்பம்.

இரண்டு ஆண்டுகள். அதன்பின், மனித உரிமைக்காகப் போராடும் ஒரு அகில உலக ஸ்தாபன முயற்சியால் விடுதலை.

சிறையின் வெளியே அவள் வந்தபோது அப்பாவும், அம்மாவும் நின்று கொண்டிருந்தனர். மிலிடரி மேஜராக இருந்து ஓய்வுபெற்ற, தடித்த மீசை அப்பா குரலெடுத்து அழுததை வாழ்க்கையில் முதல் முறையாகப் பார்த்தாள்.

விவரங்கள் : தெரீஸா ஆரம்ப போலீஸ் பலாத்காரத்திலிருந்து மீளவில்லை. யோஸேக்குப் பயத்தில் மார்வலி ஏற்பட்டு மரணம். காடலீனாவும், பெளலாவும் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கூறப்பட்டது. லூயிஸ் விடுதலை ஆகிவிட்டான். ஆனால் மனநோய் விடுதியில் இருக்கிறான். யார்கேயின் சடலம் கண்கள் தோண்டப்பட்டு, கை கால்கள் வெட்டப்பட்டு ஒரு சாக்கடையில் கிடைத்தது.

நொடியில் உறங்கிப் போகும் தெரீஸா, லூயிஸின் தோளில் நினைத்த போதொல்லாம் தலைசாய்த்துக் கொஞ்சும் காடலீனா, பாப்பா என்று வேடிக்கையாக அழைக்கப்பட்ட சிரிக்கும் யோஸே, அவர்கள் வயதே ஆன, ஆனால் அப்பா போல் நடந்து கொண்ட யார்கே, எந்த இக்கட்டான நிலைமையிலும் சாப்பிட ஏதாவது எற்பாடு செய்துவிடும் ஆல்வாரெஸ் - அவர்கள் எல்லோருக்குமாக அவள் அழுதாள். லூயிஸைப் பார்க்க அவள் அனுமதிக்கப்படவில்லை. அம்மாவிடம் அவனைப் பார்க்கப் போகும்படிச் சொன்னாள். சிவப்பு ரோஜாக்கள் எடுத்துப் போகச் சொன்னாள். அவனுக்கும், காடலீனாவுக்கும் பிடித்தவை.

பிறகு இங்கு அனுப்பப்பட்டாள். மொழி புரியாத உலகுக்கு.

காப்ரியேலா ஏறிட்டுப் பார்த்தாள். ''சிறைக்குப் போகும் முன் நான் துப்பாக்கியைத் தொட்டதில்லை. அப்பா தனது துப்பாக்கியைச் சுத்தப்படுத்தும் போது பார்த்தது தான். யாரையும் என்னால் கொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. சிறைக்கு வெளியே வந்தபின் நான் அடிக்கடி நினைத்தேன், அந்த இரு இன்ஸ்பெக்டர்களையும் சுட வேண்டுமென்று. அவர்கள் நெஞ்சில் குண்டு துளைக்க, அல்லது தலை வெடித்துப் போகச் சுட வேண்டும் என்று கறுவினேன்''.

கண்ணாடி ஜன்ன்ல்களைப் பனி மூட ஆரம்பித்துவிட்து. லாஜு கம்பளத்தில் வந்து அமர்ந்திருந்தாள். எவ்வளவு நாழிகையாக என்று தெரியவில்லை.

காப்ரியேலா சிரித்தவாறே சொன்னாள். ''என் அப்பா அமமாவைப் பார்க்க ரொம்பத் துடிக்கிறது. என் அம்மா தன் முன் தலை நரைத்து விட்டது என்று எழுதினாள் ஒரு கடிதத்தில். நான் உடனே கடைக்கு ஓடி விலை உயர்ந்த தலைச்சாயம் வாங்கி அனுப்பினேன். அவளை நான் எப்போதாவது பார்த்தால் முன்போலவே பார்க்க விரும்புகிறேன். மாறுதலே இல்லாமல், வயதாகாமல்''.

சட்டென்று அவளுடைய தேன் நிற முடியைப் பார்த்தாள் பாகீரதி. கற்றை கற்றையாக நரை. வெளியே காத்து நின்ற அவளுடைய அம்மாவானாள் பாகீரதி. தேன் அருவியில் கூந்தலுடன் பியானோ அருகே செழுமைக் கன்னங்களோடு நின்ற பதினெட்டு வயதுப் பெண்ணைச் சிறைக்கு அனுப்பிய அம்மா, அவள் சிறையின் கதவில் கண் பதித்து நின்றபோது சிறையிலிருந்து முதல் அடி வெளியே வைத்த இருபதே வயதில் வயதான, உடல் கனத்துச் சிதைந்த ஒரு பெண். தேன் நிறக் கூந்தலெங்கும் வெள்ளை வரிகள்.

பாகீரதி அவள் கூந்தலைப் பார்த்தாள். அவள் பார்ப்பதை உணர்ந்தது போல் தன் கூந்தலில் விரல்களை விட்டு அளைந்தாள் காப்ரியேலா. புன்னகைத்தாள்.

(அம்பையின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' என்ற சிறுகதை தொகுதியிலிருந்து......)
**********
flow1

கருத்துகள் இல்லை: