12 ஜூலை, 2011

நிர்வாணம் =சந்ரு


நிர்வாணம்
சந்ரு


கவின்கலை படைப்புகளில் ஆடை அணியாத ஆண் - பெண் உருவத்தோற்றங்கள்

“மாற்றம் என்பது மாறாதது''. (பழைய பௌத்தம்)

உருவத் தோற்றக் கவர்ச்சியிலிருந்து படைப்பாளி - பார்வையாளர்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறது. (புதிய அரூப கவின்கலைக் கோட்பாடு)
இயற்கை சீற்றமும். பிறப்பு ரகசியமும் உறைவிட குகைகளைச் சுருட்டி ஆண் குறி, பெண் குறி மறைக்க. மண்ணை, பொனை வில் வளைத்து அதிகாரம். நாகரீகம் என ஆடை அணிந்த மானிடம் பாலியல் உணர்வுகளை விலைப் பேசிக் கொண்டிருக்கிறது.

நிர்வாணம் என்ற வார்த்தைக்கு இயற்கை, வெளிப்படை, வீடுபேறு, அனாதி என பல அர்த்தங்கள் விளங்குகின்றன. எனினும், ஆடை அணியாத ஆண், பெண் நிர்வாணம் என்பது நபரின் மனநிலை, சூழல் என்பது சார்ந்து ஆக்கம் - ஆபாசம் என எதிர்மறை அர்த்தங்களை விளைக்கிறது.

மேலை - கீழை கலை மரபு மற்றும் படைப்பு - படைப்பாளி என்பது குறித்தும், கவின்கலை படைப்பு செய்ய ஆடை அணியாத உயரி மாதிரியின் நேர்முக அமர்வு தேவை - தேவை இல்லை என்பவை குறித்தும் இக்கட்டுரை தொடர்கிறது.
.................
“அணியும் ஆடைகளைக் காட்டிலும் சரீரமும், உண்ணும் உணவைக் காட்டிலும் ஜீவனும் உன்னதமானது'' என்கிறது, நீண்ட அங்கி அணிந்த நிர்வாணம்.

சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து விண்ணுலகுச் சென்ற ஏசு பிரானை, தத்தமது நடை வீதிகளில் கண்டு பிடித்து சித்திரங்களில் சிறை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். டா வின்சி, மைக்கிலேஞ்சிலோ, ரஃபேல் போன்ற மேலை நாட்டு கவின் கலைஞர்கள்.......
“அனைத்து உயிர்களும் அளவற்ற உணர்வு, அறிவு, ஆற்றல், ஆனந்தம் உடையன'' என்கிறது ஆடை அணியாத நிர்வாணம். மண்ணிலும், விண்ணிலும், அமரத்துவம் கண்டோரை மனதில் கண்டு சொல்வதும், கேட்பதுமாய் பதுமைகள் செய்து கொலுவைத்துக் கொண்டிருக்கிறார்கள், இயற்பெயர் அற்ற கீழை நாட்டு கவின் கலைஞர்கள்...

.... இப்படி மேலை - கீழை நாட்டு மக்கள் அரசு, நம்பிக்கை, கலை மரபு என சாதி பிரித்து பேசிக் கொண்டிருக்கிறது கவின்கலை வரலாறும், விமரிசனமும்...

ஆங்கிலேயர் ஆட்சியின் பாடதிட்டங்களை இந்திய கவின்கலைப் பயிற்சி கூடங்களும் விளைவித்து வரும் இச்சூழலில், நாமும் நமது நடை வீதிகளில் "மோனோலிசா' வைத் தேடித் திரியும் பாக்கியம் பெற்றோம்.


வாழ்க்கை - கலைவழி - தேடல்

தெளிந்த மனோபாவத்தில் எழும் கேள்வியே பதிலாகவும் இருக்கிறது. (புத்தர் உபதேசம்)

மரணத்தைப் பற்றி சிந்திப்பதால் என்ன லாபம் உண்டாகும். (எமன் உபதேசம்)

கொலையும், தற்கொலையும் அமைதியற்ற மனோநிலை, பாதுகாப்பு அற்ற சூழலின் விளைவு.

நமது தனிமை பாட தூண்டியது, வேலைப்பளு பாட தூண்டியது. நாம் பாடிய பாடல் எதுவான போதும், தூண்டல் நமக்கான பாதுகாப்பு, செயல் ஊக்கம், உற்சாகம் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டது. இவையே நாம் எதை, எங்கு, எதற்காக செய்த போதிலும் அவற்றில் நமது எதிர்பார்ப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே வாழ்க்கை, இதில் தனிநபர் - சமூகம் - இயற்கை என்பதில் நேரும் முரண் - இணக்கத்தில், விருப்பு - வெறுப்பு என நேரும் மன இறுக்கமும் குழப்பமும், ஆழ்ந்த அமைதியை நம்மில் நாம் அடைந்ததாகவும், அடையாததாகவும் பாவனைக்குள்ளாகிறது. இவ்வழியில் ஆழ்ந்த அமைதி என்பது நமது வாழ்க்கை வழியில் அன்னியமானதாகவும் கலை இலக்கியங்கள் வாயிலாக தொடுதலாகவும் விளங்குகிறது.

நாம் அனைவரும் சொல்பவர் - கேட்பவர்களாகவே இருக்கிறோம், இதில் படைப்பாளி, பார்வையாளர் என்பவர் விதிவிலக்கானவர்கள் அல்ல. ஆழ்ந்த அமைதி என்பது அவரவர் தேடும் விழிகளில் விளைவது. இதை ஒரு கலை படைப்பாளி தன் கலைப்படைப்பிலிருந்து கற்று இருக்க வேண்டும். அதற்குத் தடையாக அமைவது ஒரு கலைப்படைப்பு ஏற்கும் வியாபாரம், விருது, அதிகாரம் எனக் குறிப்பிடலாம்.

காட்சிப் பதிவு ஒரு தகவல் அடையாளம்

புவியில் உயிரினத் தோன்றலைத் தற்செயல் என்கிறது அறிவியல். நிஜம், நிழல் என்பதற்கு இடையான மன ஓட்டம், அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் ஊக்கம், கையகப்படுத்திய எழுதுபொருட்கள் என தன் அனுபவத்தை ஒரு தளத்தின் மேல் காட்சிப் பதிவு செய்யும் வழிமுறையைக் கொண்டு வருகிறது மானிடம்.

யானையின் தோற்றத்தைக் குழந்தை வரைந்தாலும். சிறந்த சித்திரக்காரன் வரைந்தாலும் அவை இரண்டும் "யானை' என்ற தகவலைக் கொண்டுள்ளது. அத்தகவல் பதிவுகள் தகவல் பரப்பு சாதனமாகவும் விளங்குகிறது.

தரையில், சுவரில் கோடுகளைக் கீறி, முட்டைகளிட்டு, அவற்றில் யானை, பூனை, சாமி, பூதம் காட்டி பெற்ற முத்தங்களில்., பாடப் புத்தகம் பார்த்து, சாமி, நாயகன் , நாயகி படம் பார்த்து வரைந்து... வரைந்து ஓவியர் "ரவிவர்மா' என பட்டம் பெற்ற போதும், நமது தனிமை உணர்வு வடிவ, உருவ, அரூப கூறுகளால் காகிதங்களை நிரப்பிக் கொண்டிருப்பது யதார்த்தம். இவை யாவும் அப்பொழுதிற்கு, மனோநிலைக்குமான காட்சிப்பதிவுகள்.

பின் குறிப்பு : ஒரு தளத்தில் எழுத்தால் எழுதப்பட்டவை அனைத்தும் கவிதை அல்ல என்பதில், ஓரு நபரின் வாழ்க்கை அனுபவம், பரந்துபட்ட சிந்தனை, மொழிப் பயிற்சி சார்ந்தது கவிதை என கருத நேர்கிறது. அவ்வண்ணம் வடிவ, உருவ, அரூப தோற்ற கூறுகளால் ஒரு தளத்தில் நிரப்பப்படுவது அனைத்தும் கவின்கலை படைப்புகள் அல்ல என்பதில் ஓவியம் ஒரு நபரின் வாழ்க்கை, சிந்தனை, சித்திரம் எழுதும் சீரிய பயிற்சி சார்ந்தது எனக் கருத நேர்கிறது.

கலைத் துறைகள்

சமூகம் தனது பாதுகாப்பு, மனிதகுல மேம்பாடு என பலவகை தொழில் துறைகளைக் கொண்டுள்ளது. இதில் உற்பத்தியாளர், உற்பத்திபொருள் என்பது அந்தந்த தொழில் துறைகளின் இயக்கமாக விளங்குகிறது. இதில் உற்பத்தியாளரின் அனுபவம், உற்பத்திப் பொருட்களின் செய்நேர்த்தி என்பவை சார்ந்து அனைத்து தொழில் துறைகளும் "கலை' என்ற சொல்லை கொண்டுள்ளது.

பிற துறைகளின் உற்பத்திப் பொருள் தகவலுக்கு உரியவை என்றும் கலைத் துறையாக கருதப்படும் மொழி, நடிப்பு, ஓவியம் என்பன தகவல் பரப்பிற்கு உரியன என்றும் சாதி பிரிகிறது. இதில் மொழி, நடிப்பு என்பன யதார்த்த வழி வகை பயிற்சிக்குரியது என்றும், ஓவியம் என்பது சிறப்புவகை பயிற்சிக்குரியதாக "நுண்கலை' என்ற சொல்லை பெறுவதாகவும் கருதலாம்.

சித்திரம் பழகுதல்
கூர்ந்து கவனித்தல் - மனப்பயிற்சி - மனோலயம்

ஓரு "பூ'வைப் பார்த்தோம் என்பதைவிட, அதைப்பார்த்து சித்திரம் எழுதும் வழியில் அப்பூவின் தோற்றம் தன்மை, எழுதுபொருட்களின் பயன்பாடு என்பவை குறித்து விரிவான தகவல் அறிவைப் பெறுதல். கூர்ந்து கவனித்தல் எனலாம்.

மனப் பதிவிலிருந்து ஒரு பூவை சித்திரம் எழுதி பழகுதல், பிரிதொரு பூவைப் பார்த்தபோது, சித்திரம் எழுதிய முன் அனுபவங்களால் மனத்தளவிலேயே ஓர் சித்திரம் எழுதி பழகுவதை மனப்பயிற்சி எனலாம்.

சைக்கிள் ஓட்டி பழகியபின், சைக்கிள் நாம் போய் சேர வேண்டிய இடம் நோக்கி ஓட, நமது மனம் போய் சேர்ந்தபின் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஓடிக் கொண்டிருக்கும், இவ்வகையில் கண்ணால் - மனதால் கண்ட காட்சித் தோற்றங்களை சித்திரமாக்கும் திறன் வலுப்பெற்ற நிலையில், காட்சித் தோற்றங்கள் ஒரு தளத்தில் விரிந்து கொண்டிருக்க நமது மனம் "நான்', "படைப்பு' என அக, புற விளைவுகளின் நுண்மம் நோக்கி இயக்கம் கொள்கிறது. இதைச் சித்திரம் எழுதுவதிலிருந்து அடுத்து ஓர் மனச் சஞ்சாரத்தைப் பாவனையாக ஏற்கும் வழித்தடம்.

சித்திரம் எழுதாமல் எழுதுதல்

தன்நிலை - முன்நிலை - சார்பு நிலையாக நாம் இருத்தல் பற்றிய வினா ஒரு பூவைப் பார்த்து. “நீ யார்?'' என கேட்க நம்மில் நேரும் விந்தையும், பயமும் நமது செயல் ஊக்கமும், ஆழ்ந்த அமைதியுமாக ஒரு தளத்தின் மேல் "பூ' காட்சி அமர்வதைக் கலாஅனுபவம் எனலாம்.

கவின்கலைத் துறை

"இல்லை என்பதும், இருக்கிறது என்பதும் அவர் அவர் இருத்தல் சார்ந்தது'.

கலை என்பது தெய்வதரிசனம், ஓர் மனோநிலை கலை கலைக்காக, கலை மக்களுக்காக. தனி நபர் சுதந்திரம்...

ஒரு நபர் தனது அனுபவத்தைக் காட்சிப்பதிவு செய்வது இத்துறையின் அடிப்படைக் கூறு. இயற்கை, சமூக சூழல், தனிநபர் ஏற்கும் மாற்றங்களில், கவின்கலை படைப்புகளுக்கான கருத்துரு வடிவகட்டமைப்புகளில் நேரும் மாற்றங்கள் இத்துறையின் மாற்றங்களாக அமைகிறது.

கவின்கலைப் படைப்பு - கருத்துரு
அன்றும் இன்றும்

தன் முனைப்பும் காட்சிப்பதிவு செய்யும் ஊக்கமும் நீங்கலாக, நேரில் - மனதில் கண்ட காட்சித் தோற்றங்களைச் சிறப்பாகக் காட்சி பிரதி செய்யும் திறன் இத்துறையில் சிறப்பு அம்சமாகக் கருதப்பட்டது. மேலும் அவை மதம் - அரசு இனக்குழு அடையாளங்களைப் பரவலாக பதிவு செய்து வந்தது... ( இது வரலாற்றுக்கால கூத்து).

தொழில் நுட்ப வளர்ச்சியாக வந்த புகைப்படக் கருவிகள், சித்திரக்காரரின் சிறப்பான பயிற்சித்திறனை வெளிப்படையாக கேள்விக்குள்ளாக்கியது. விஞ்ஞான வளர்ச்சி - உலக யுத்தங்களின் தீவிரம் மனித உரிமையைக் கேள்விக்குள்ளாக்கியது. இவ்வழியில் மதம், அரசு, இனக்குழு அடையாளம் என்ற அதிகார மையங்களை கேள்விக்குள்ளாக்கி, சித்திரம் எழுதும் ஊக்கத்தை முன் வைத்து சித்திரம் எழுதும் பயிற்சித் திறனை பின் தள்ளி பயணித்தது நவீனக்கூத்து...

நவீன கலைப் படைப்பபுகள் ஏற்கும் வியாபார, விளம்பர, அதிகாரங்களை முன் வைத்து நவீன படைப்பாளிகள் கோரும் மனித உரிமை, படைப்பு சுதந்திரம் என்பவற்றைக் கேள்விக்குள்ளாக்கியது இன்றைய சூழல். மேலும், நவீன கருத்துருவை மதம் என்றும் படைப்பாளிகளை மதவாதிகள் என்றும் விமர்சித்தது. நிகழ்பொழுதாய் அனுபவித்ததைக் கலையின் நுண்மம் என்றும், அதன் பிரதிப்பதிவை உற்பத்திப் பொருள் என்றும் சுட்டுகிறது. நபரின் தேவை, உற்பத்தி பொருளுக்கான செலவீனம், உற்பத்திப் பொருளின் வடிவ கட்டமைப்பு நிலைத்த தன்மை என்பவை விலைமதிப்பு, அதிகாரம் என்பவைகளுக்குரியது என தனி நபர் சுதந்திரத்தைக் கோரும் வகையில் நிற்பது, நடப்பது, சுவற்றில் கீறுவது அனைத்தும் கவின்கலைப் படைப்புகள் என கருத்துரைக்க வருவது... (நவீனம் மருவிய கூத்து)

ஆங்கிலேயர்களின் பீரங்கி ஓசையில், தங்கள் முன்னோர் தத்துவம், கலை மரபுகளைத் தொலைத்த இன்றைய இந்தியர்கள், ஐரோப்பாவில் நிகழ்ந்த நவீன கலை வித்தகங்களைத் தங்களுடையது என விளம்பி வருவது வர்த்தக உலகமய கூத்து.

கவின்கலைப் படைப்பு – படைப்பாளி

மலர் - நான் - மலர் சித்திரம் என்பதில் "மலர்', இயற்கை "நான்', பாவித்தவன், "மலர் சித்திரம்' சூழல் மற்றும் சித்திரம் ஊக்கம் சார்ந்தது.

வான் நட்சத்திரங்களைப் பார்த்து, "நான் யார்?' என கேட்க நம்மில் எழும் விந்தையும், பயமும் நமக்கான ஆழ்ந்த அமைதியும் ஊக்கமுமாக பெறும் அனுபவம் மனதெளிவின் அடையாளம்.

தூண்டலும் துலங்கலும் யாவற்றிலுமானது. ஒரு நபரின் மனதும் - உடலும் ஏற்கும் தூண்டல் - துலங்கள் விழிப்புணர்வு ஆழ்மன விளைவு மற்றும் இச்சை - அனிச்சை செயல்களின் விளைவு என்பவற்றில் அடையாளப்படுத்தலாம்.

விழிப்புமன - ஆழ்மன செயல்பாடுகளை அனுபவித்தல், கவனித்தல், வெளிப்படுத்துதல் என வகை பிரிக்கலாம். வான் நிலவோடு ஆடி மகிழ்ந்து அனுபவித்தல் (புலன் வகை உணர்வு). மனப்பதிவு ஆக்கியது கவனித்தல் (பிறருடன் பகிர்ந்துகொள்ள அடையாளங்களை பெறுவது), பிறருடன் பகிர்ந்து வெளிப்படுத்தல் (நோக்கம், சூழல் சார்ந்து செயல்புரிவது) எனக் குறிப்பிடலாம். மேலும் இவையாவும் ஏககாலத்திற்குரியது.

ஆழ்மன விளைவுகளைக் கனவு மற்றும் அரை உறக்க நிலைகளுக்கானது என குறிப்பிடலாம். அவ்விளைவுகளின் அதிவேக தன்மையால், நாம் கவனிக்கும் அடையாளங்கள் விந்தை தன்மை கொண்டதாக அமைகிறது. அவை நபரின் மனப்பதிவாற்றல், முன் அனுபவங்களால் விசாரிக்கும் திறன் மற்றும் வெளிப்படுத்தும் நோக்கம் சார்ந்து அவை விந்தை மற்றும் யதார்த்தக் கூறுகளில் வெளிப்பாடு அடைகிறது எனக் குறிப்பிடலாம்.

கலைப் படைப்பு கருக்கொள்ளும் நிலை

தனது வாழ்நாள் முழுவதையும் நிகழ் சுழிப்பில் அடையாளம் காணும் ஊக்கம் ஒரு பொறியைத் தூண்டலாக பெறுவதும், அதன் தெளிவு - விரிவு என முன் அனுபவங்களால் விசாரணை கொள்வதும் ஒரு படைப்பு கருப்பெறும் நிலை எனலாம். அதே வேளை தூண்டலாக பெற்ற பொறி உயிர்ப்பு அடைவதும், உயிர்ப்பு அற்று போவதும், பொறித் தேர்வு மற்றும் விசாரிப்பு நிலைகளில் நபர் ஏற்கும் மனத் தெளிவு சார்ந்தது எனக் குறிப்பிடலாம்.

கருக்கொள்ளும் நிலையில் பொறி பெறும் தீவிரம், அதன் வெளிப்பாட்டிற்கான தளம், எழுது பொருட்களைத் தேர்வு செய்யும் முனைப்பு கொள்கிறது எனவும் குறிப்பிடலாம்.

கையிருப்பாக பெற்ற தளம், எழுது பொருட்களின் தன்மைகளை உள்வாங்கும் நிலையில், மனதளவிலான முன்வைப்புகள், வெளிப்பாட்டிற்கான வடிவ, உருவ, அரூப தோற்றக் கூறுகளில் தேற்றம் கொள்கிறது. மேலும், சித்திரம், எழுதும் பயிற்சித்திறன், தோற்றக் கூறுகளின் அமைதி மற்றும் இயங்கியல் சார்ந்து, ஒரு தளத்தில் வெளிப்பட இருக்கும் தோற்றங்களில் ஓரு தோற்றத்தையும் அதன் ஆரம்ப முதல் புள்ளியையும் ஏற்கிறது எனலாம். அதனைத் தொடர்ந்து கருவின் மையம், படைப்பின் நோக்கம், அதைத் தெளிவாக சித்தரிக்கும் காட்சி தோற்றங்களின் வரிசை நிகழ்பொழுதின் மன ஓட்டம் ஒரு கலைப்படைப்பு வெளிப்படுகிறது என கருதலாம்.

பின் குறிப்பு 1:

பொழுதும். தூண்டலும் உணர்வு மயமாக விளங்க, நபரின் அனுபவம், நோக்கம், நிகழ்சூழல், எழுது பொருட்களின் தன்மை சார்ந்து நபர் ஏற்ற தூண்டல் வெளிப்பாடு கொள்கிறது எனலாம்.

அனுபவித்தல், கவனித்தல் அற்றுப் போவதும், கவனித்தல் அற்றுபோனதின் சாடையாக, சித்திரம் எழுதும் நிலையில் தற்செயலாக நேரும் அடையாளத்தைப் பெறுவதும், படைப்பாளியை விந்தைக்குள் ஆக்குகிறது எனலாம்.

சித்திரம் எழுதும் நிலையில் மனதும் - உடலும் லயிக்க, தன்னில் விருப்பு வெறுப்பு அற்ற மனோநிலை மேலோங்கி சூழல் இறுக்கம் தளர்ந்து அகம் மகிழ அதுவே படைப்பில் செய் நேர்த்தியும், மறை பொருளுமாக அமைகிறது எனலாம்.

பின் குறிப்பு 2:

வெறுமை, தெளிவற்ற மனோநிலைகளில் மன ஒருமித்தலை நோக்கி, ஒரு தளத்தில் காட்சித் தோற்றங்களைக் கீறுவதும், அவற்றில் ஒரு பொறியைத் தனது படைப்பு தூண்டலாகப் பெறுவது யதார்த்தம்.

பிறரின் விருப்பம் மற்றும் வேண்டுகோளைப் படைப்பாளி தனது படைப்புப் தூண்டலாகப் பெறுவதும், அதை சித்திரம் எழுதும் தன் மனப்பழக்கத்திலிருந்து ஒரு காட்சி பதிவாக்குவதும் யதார்த்தம்.

நிகழ் சுழிப்பில் தன்னில் நேர்ந்த தூண்டலின் இலக்காக, தன்னிலை - முன்னிலை - சார்புநிலை என யாவற்றின் பேரிலும் விசாரிப்பும், அதன் வெளிப்பாடாக ஓர் காட்சி பதிவு செய்வதம் கலா அனுபவத்திற்குரியத எனலாம்.

பின் குறிப்பு 3:

படைப்பு நிலையில் தன்னில் குழந்தைத்தனமும், அன்பு கூறும் அறிவார்த்தமும் ஒன்று கலக்க, தன்னில் தான் யாதுமற்று போகிற தகிப்பும், அதுவே ஆழ்ந்த அமைதியும் செயல் ஊக்கமுமாக கண்டு அடைவதும், அதை தன் வாழ்நாள் முழுமைக்குமாக யாசிக்கிற வைராக்கியமும் ஒரு கலைப் படைப்பாளி ஏற்கும் பித்த நிலைக்கான அனுபவம் எனக் கருதலாம்.

படைப்பு - படைப்பாளி
மல உபாதையும் - பிரசவ உபாதையும்

“தன் மக்கள் போலிருப்பர் பகைவர்''

“ஜனங்க எத தின்னா பித்தம் தெளியுமுன்னு அலையிது...''

நிறைமாத கர்ப்பமா காட்டுக்குக் களை எடுக்கப்போன எடத்தில பிள்ளைய பெத்து வாய்க்கா தண்ணியில கழுவி எடுத்து எங்கப்பனுக்கு "காட்டு ராசா' ன்னு பேரு வச்சாளாம் கிழவி....

“அடம் பிடித்தலும், விளையாட்டுமாக குழந்தை கோபமும் கொஞ்சலுமாக (“நீ சாப்பிடாவிட்டால் இந்தச் சோற்றை அந்த நிலவிற்கு கொடுத்துவிடுவேன்... இந்தச் சுவற்றிற்கு... மரத்திற்கு... பூனைக்கு...'') என அனைத்திலும் ஊடுருவுகிறாள் தாய்.

பிழைப்பு வாதத்திற்கு உறவு அன்னியம்.

உதாரணம் 1

தூண்டல் – வெளிப்பாடு

உற்சாகமான பொழுதில் நம்மை நோக்கி “நலமா?'' என வினாவிய ஒருத்தருக்கு “ஆம் ஒரு பறவை போல'' என பதிலுரைத்தோம்.

“நலமா?'' என வினாவிய வேறு ஒருத்தருக்கு “ஆம்... ஒரு பருந்தைப் போல'' என பதிலுரைத்தோம்.

“தாத்தாக்கு ஜாலி'' என்ற பேத்திக்கு, “ஆமாம் கண்ணு... ஒரு தேன் சிட்டைப் போல....'" என்றோம்.

அதே சூழலில் நமது உற்சாகத்தை வேறு வேறு நபருக்கு வேறு வேறு அடையாளங்களில் பகிர்ந்தோம்.

மனசஞ்சாரம் அதி நுட்பமாயும், அதி விரிவாயும் இயங்குகிறது. நமது உணர்வுமயம், பறவை, பருந்து, தேன்சிட்டு அல்ல... அவை நமக்கும் எதிர் நபருக்குமான உறவின் வெளிப்பாடு. இவ்வகையில் காட்சிப் பதிவுகளுக்கான தூண்டலும் வெளிப்பாடும் குறித்து விவரிக்கலாம்.

படம் 1

ஓயாத மன ஓட்டத்தில் நொடிக்குள், நொடியாக நேர்ந்த பொறியின் ஜாடையாக, ஒரு பறவை காகிதத்தில் காட்சி பதிவாக...

நம்மில் நாம், “பறவையே... பறவையே..நீ எங்கே பறக்கிறாய்?'' என வினாவ.

அது, “வெட்ட வெளியில்'' என பதிலுரைக்க பறவை தவிர்த்து காகிதத்தில் நிரப்பப்படாத பகுதியே வெட்ட வெளியாக... அப்பொழுதும், மன ஓட்டமும் காட்சி பிரதி கொண்டது எனக் கருதலாம்
.
இவை தவிர்த்து காகிதத்தில் வெற்றிடம் இருப்பதாக கருதி, பிற சித்திரம் பார்த்து பழகியது, பிறரைக் கவரும் நோக்கம் என காகிதத்தில் இறங்கிய பறவையைத் தொடர்ந்து மேக கூட்டம், முழு நிலா, மரக்கிளை ஜோடிப்பறவைகள் எனப் பல சாடைகளைக் காட்சிப்பதிவு செய்வது சித்திரகாரரின் அக உணர்விற்குப் புறம்பானது எனலாம்.

படம் 2

நம்மில் நாம், “பறவையே...பறவையே நீ எங்கே பறக்கிறாய்?'' வினா.

“இருளில் இருன்மையாக'' பதிலுரை.

இருள் வெளியாகும் காகிதத்தில் உருவ, அரூப சாடையாக பறவை வந்து அமையலாம் (அல்லது) கூண்டிற்குள் அடைபட்ட பறவையாக காட்சி மருவி அமையலாம்.

படம் 3

நம்மில நாம், “நீ யார்?''

“புறா''

மன குழப்பம், சித்திரம் எழுதும் பழக்கமின்மை என்ற வகைகளில்.

புறா என காகித்தில் கோடு கீற ஆரம்பித்து, அதன் அலகின் தோற்றம் நீண்ட கத்தியாக, மயிலின் ஜாடை தேடி யானை பிடரிவந்து அமைய, பெண்ணின் பருத்த மார்புகள் அணிகலன்கள் ஏற்க, வால்பகுதியில் லாரியின் புகைப்போக்கி வந்து அமைந்து காகிதம், எங்கும் புகை கிளப்ப... அப்பொழுதிற்கான காட்சிப்பதிவு அரங்கேறியது எனலாம்.

இத்தகைய வெளிப்பாட்டை நபர் தனது அதீத கற்பனை, தடையற்ற வெளிப்பாடு, படைப்பு சுதந்திரம் என கருத்துரைக்க முற்படுவது, அவர் தனது அகத்திற்கும் பிறரது நம்பிக்கைக்கும் களங்கம் விளைவிக்கிறார் எனலாம்.

படம் 4

நம்மில் “நீ யார்?''

பதில் “பாவனை''

“அடையாளம்?''

“பொழுது''

“அடையாளம்?''

“.................................''

வினாவும், பதிலும் ஒன்று கலந்த கோலாகலம்.... அனைத்தும் அதன் அலங்காரம், அதன் பிரதி வெற்றுக் காகிதம்.... உள் உணர்வும் பிறருடன் பகிர்கிற வாஞ்சையும், கலையும் வாழ்க்கையும், செயல் ஊக்கமும், காட்சி பிரதியும் விளைந்தபடி....

உதாரணம் 2

கவிதை – ஓவியம்

ஒரு காகிதத்தில் “பூ'' என்ற எழுத்தை எழுதி, அதை கவிதை என்பது சொல்பவர், கேட்பவர் உடன்பாடு என்றும்...பூ... ப்புப்... ப்பு... பி... என நீளும் வார்த்தை அடுக்குகளே கவிதை வடிவம் என்றும் பரவலாக கருதுகிறோம்.

ஒரே வீச்சில் நான்கு வரிகள், கவிதை என காகிதத்தில் வந்து அமைந்ததிலும் எழுதி நோக்கும், இலக்கணம் என அடித்து திருத்தி, அடித்து கசங்கி பல காகிதங்கள் குப்பைக்குப் போனதில், உடன் இருப்பவர் படைப்பாளியின் மனத் தெளிவையும், அவஸ்தையையும் எளிதில புரிந்து கொள்ள இயலும். (இது கவிதைப் பண்ணை)

கவிதை எழுதி அடித்து திருத்திய காகிதங்களைக் குப்பையில் வீசாமல் கண்ணாடி சட்டமிட்டு கவின்கலைப் படைப்பு என கூவலாம். (நன்றி. கவி தாகூரின் அடித்தல் திருத்தல்களைக் கவின்கலைப் படைப்பு என விளம்பிய நல் இதயங்களுக்கு.)

ஒரு "பூ' வை நேரில் பார்த்த வரைதலும், பூவின் படம் பார்த்து வரைதலும் அவை கலை படைப்புகள். பூவின் ஓர் இதழை, மகரந்த சேகரத்தின் வண்ணத்தை என எதைத் தீட்டினாலும் அவை கலைப்படைப்புகளே என்பது பரவலான கருத்து.

ஒரு காகித்தில் எழுதி, அடித்து, திருத்தி, வண்ணமிட்டு அழித்து. திருத்தி எழுதுவது ஓவியம் செய்யும் வழிமுறை இயல்பு என கருதுகிறோம். இவ்வகையில் ஓவியம் செய்பவரின் மனக் குழப்பமும், மனத் தெளிவும் குறித்து உடன் இருப்பவர் புரிதலில் சிரமத்தை விளைவிக்கிறது எனலாம்.

காட்சித் தோற்றங்களை எழுதி அது கவின்கலை படைப்புதானா? என சந்தேகமும், கவலையும் கொள்ள வேண்டாம்.

கழிவறை கதவைத் திறந்து வைத்து அல்லது மூடி வைத்து எழுதப்பட்ட அனைத்தும் கவின்கலைப் படைப்புகளே....(நன்றி : நவீனம் மருவிய கூத்து)

பின்குறிப்பு : ஓவியம் எழுத பயன்படும் பொருட்களின் தன்மை என்பது வேறு, ஓவியம் செய்யும் நிலையில் படைப்பாளி கொண்ட மனோநிலை என்பது வேறு. இத்தகைய விசாரிப்பில் அடித்து, திருத்தி எழுதுவது ஓவியம் செய்யும் வழிமுறை இயல்பு அல்ல, படைப்பாளியின் மனத்தெளிவும், சித்திரம் எழுதும் பழக்கமும் அவர் இடும் ஒவ்வொரு புள்ளியையும், வண்ணத் தீட்டலையும் செழுமைப்படுத்துபவை என அறியலாம்.

வெளி
கவின்கலை படைப்பு - படைப்பாளி
அகம் – புறம்

இயற்கை தோற்றம் ஓவியரின் திறமை, எழுது பொருட்களின் தன்மை இருமுறை இழப்பால் ஓவியமாக காட்சிப்பதிவு கொள்கிறது. - "அரிஸ்டாட்டில்'

சித்திரம் எழுதுதலும், குதிரை ஏற்றமும், மனித குலத்திற்கு எதிரானது. - "மனு"

தனக்கு அடுத்தவரை நேசிக்காமல் அரூபமாய் இருக்கும், பிதாவை நேசிப்பதாக சொல்பவன் பொய்யன். - "ஏசு'

காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவெளிக்கே. - "பட்டினத்தார்'

அகம் நேசிக்கிறது, புறம் ஒரு கையில் பணியாரமும், மறுகையில் பிரம்புமாக அலைகிறது. மண்ணில் யாவும் ஒன்று கலந்த வெளியில், நாம் அடையாளமற்றுப் போவதும், அந்நிலையே வாழ்தலின் ஊக்கம், உறவில் செழுமை என கண்டுணர்வதும், அதையே ஒவ்வொரு நொடிக்குள் பாவிப்பதும், பாவனையாக்குவதுமாக அவிழ்கிறது பரவெளி.

பார்வையாளருக்கும் தனக்கும் பரிச்சயமான தோற்றக்கூறுகளைக் காகிதத்தில் காட்சி விரிப்பாக்கி பார்வையாளரைக் கவர்ந்து தன் அக வெளியில் சஞ்சாரம் பண்ணும்படி செய்யும் ஆற்றலைப் படைப்பாளியின் படைப்பாற்றல் என குறிப்பிடுகிறோம். இதில் படைப்பாளி நேரிலும், மனதிலும் கண்ட தோற்றமும் அவை ஓவியமாவதும், படைப்பாளியின் அகவொளிக்கு வழி கூறுவதாக அமைகிறது. இவ்வகையில் காட்சித் தோற்றங்களில் முற்றுப்பெறாமல் ஒரு கவின்கலை படைப்பு ஏற்கும் உணர்வு மயம்.... பரவெளி.... படைப்பாளி... பார்வையாளருள் விளையும் நுட்பமான உறவு கலந்தது எனக் குறிப்பிடலாம்.

பாலியல் உணர்வு
ஆண் - பெண் நிர்வாண தோற்றம்

சிவனே காமன், தவ நிலையில் சிவன் காமனைச் சாம்பலாக்கியதும், ரதிக்கு உரித்தாக சாம்பலிலிருந்து காமனை எழுப்பியதும் (பழைய... புதிய புராணம்)

பிறப்பில் ஆண்பால், பெண்பால் என பகுத்தது நமது புத்திசாலித்தனங்கள் அல்ல என்பதும், கண்ணால் காணும் காட்சித் தோற்றங்கள் மட்டுமே பாலியல் உணர்வைத் தூண்டக்கூடியது அல்ல என்பதும் எளிதில் விளங்கும்.

ஆடை அணியாத பெண், ஆண் மரப்பாச்சிகளின நிர்வாணத் தோற்றம் குழந்தை விளையாட்டில் புதைய., கோவில் சிலை தனி நபர் புகைப்படம், எக்ஸ்ரே, போன்ற காட்சிப் பதிவுகளில் தனிநபரின் புகைப்படம் வாலிபத்தை வசீகரித்தது என்பதும் அதை நெருங்கிய சினேகத்துடன் மட்டுமே பகிர்ந்து கொண்டோம் என்பதும் நெருங்கிய உறவு மற்றும் சமூக கட்டமைப்பு சார்ந்தது எனக் குறிப்பிடலாம்.

பலர் நடந்து செல்லும்வழியில் ஆடை கலைந்து கிடக்கும் நோயாளியை நாம் கண்டும், காணாது கடந்து சென்ற பொழுதில் நம்மில் பாலியல் உணர்வு முகம் மழுங்கி கிடந்தது என்பதற்குச் சமூக கற்பிதம், அருவெறுப்பு, உதவ இயலாமை என விழிப்பு மன விளைவுகளைக் குறிப்பிடலாம். அதே வேளை கண்டும் காணாது கடந்த பொழுதில் நம்மில் பதிந்த பொறி ஒன்று, நமது கனவிலும் மனக் குழப்பத்திலும் பாலியல் உணர்வை நம்மில் உக்கிரப்படுத்தியது என்பதற்கு நமது சூழல் மற்றும் ஆழ்மன விளைவுகளைக் குறிப்பிடலாம். இவ்வாறு ஆழ்மன, விழிப்புமன விளைவுகளுக்கு ஆட்படுவது சராசரி மாந்தர் அனைவருக்கும் பொது எனலாம்.

பாலுணர்வு தூண்டல், காட்சித் தோற்றங்களைப் பதிவு செய்யும் ஊக்கம் என மனப்பதிவு, சித்திரம், புகைப்படம் ஆகியவற்றை முன் மாதிரியாக வைத்து சித்திரம் எழுதி பழகுவது யதார்த்த சூழலுக்கானது எனலாம்.

ஒரு நபர் தன்னை கலைப் படைப்பாளியாக கருத முற்படும் வழியில், தோற்றங்களைச் சிறப்பாக காட்சிப்பதிவு செய்ய வேண்டும் எனவும், ஒரு கலைப்படைப்பு அனைவர் முன்பும் காட்சி வைக்கப்படும் நேர்மை கொண்டது எனவும் நம்பிக்கை பெறுகிறார். இவ்வகையில் ஆடை அணியாத ஆண், பெண் உயிர் மாதிரிகளை நேர்முக அமர்வாக வைத்த சித்திரம் எழுதுவதை கலைத்துறைக்கான வழிமுறை என படைப்பாளி வலுவான கருத்தடைகிறார் எனலாம்.

எந்த ஒரு செயலிலும் நமது உடலும் மனதும் லயிக்க நம்மில் நாம் விருப்பு வெறுப்பற்ற ஓர் மனோநிலையைக்கண்டது ஓர் தரிசனம். இவ்வகையில் தன்முன் ஓர் நாற்காலியில் ஆடை அணியாது அமர்ந்திருக்கும் உயிர் மாதிரியைச் சித்திரம் எழுதுவதும், நாற்காலியைச் சித்திரமாக எழுதுவதும் ஒரே அனுபவமாக பாவிக்கும் நிலையில் படைப்பாளியுள் பாலுணர்வு முகம் மழுங்கி கிடந்தது என்பதும், பிரிதொரு பொழுதில் விழிப்புமன, ஆழ்மன விளைவாக பாலுணர்வு தூண்டலுற்றது என்பதும் யதார்த்தம் எனலாம்.

கவின்கலை படைப்புகளில் ஆண், பெண் நிர்வாணத் தோற்றம்

சித்திரங்களில் இடம் பெறும் பல்வேறு தோற்றங்களில் தனித்து அடையாளப் படுத்தும் வகையில் ஆண், பெண் நிர்வாணத் தோற்றங்கள் அமைந்திருக்கலாம். மேலும், நிகழ்பொழுதின் மன ஓட்டம், எழுது பொருட்களின் விளைவு சார்ந்து ஆண் பெண் நிர்வாண தோற்றம் பல்வேறு தோற்றப் புனைவுகளாகவும் அமைந்திருக்கலாம்.

பாலியல் உறவு குறித்த மன ஓட்டம், பிறப்பு உறுப்புகளின் பேரில் அதீத கவர்ச்சி, சூழல் மற்றும் சித்திரம் எழுதும் பயிற்சித்திறன் சார்ந்து ஆண், பெண் நிர்வாணத்தைக் குறிப்பிடும் வகையில் எளிய தோற்றம் மற்றும் குறியீட்டு அடையாளங்கள் காட்சிப்பதிவு கொண்டிருக்கலாம்.

அப்போதைய மன ஓட்டத்தைக் காட்சிப்பதிவு செய்தல் என்பதற்கு நீங்கலாக, பிறப்பு ரகசியங்களின் பேரிலான விந்தை, நம்பிக்கை மற்றும் பாலியல் உணர்வு, உறவுகளை முறைப்படுத்துதல், அழகியல், கேளிக்கை என பல்வேறு விஸ்தரிப்புகளைச் சித்தரிக்கும் வகையில் கலைப் படைப்புகளில் ஆண், பெண் நிர்வாணத் தோற்றம் அமைந்திருக்கலாம்.


குறிப்பு :

ஆண், பெண் நிர்வாணத் தோற்றம், பிறப்பு உறுப்புகளைச் சுட்டும் வடிவ, உருவ, அரூப கூறுகளைக் காட்சிப் பதிவு செய்து வழிபாடு செய்வது மானிடத்தில் நீண்ட தொடராக உள்ளது.

புனிதம், புனிதமில்லை என நேரும் மனக் குழப்பம் தெளிவுகொள்ளும் வகையில் சாத்தியம், சாத்தியமில்லை என தோன்றும் காட்சி வகையான ஆண், பெண் சேர்தல், விலங்குகளோடும் பலர் கூட்டமாகவும் கலவி கொள்ளுதல் என நிர்வாணத் தோற்றங்கள் கலைப்படைப்பாக அமைவதைக் காணலாம்.

பரிச்சயமான தோற்றத்தை முன்வைத்து, அதன் செய்நேர்த்தி ஒளிஇருள் விளையாட்டு என உருவக் கவர்ச்சியிலிருந்து மீளும், ஓர் அழகியல் கூறாகவும் நிர்வாணத் தோற்றங்கள் அமைந்திருக்கலாம்.

கோவில் தூணில் ஆடை அவிழ்க்கும் மோகினியை நோக்கி, தன் ஆண்குறி வடமாய் சுருண்டு தோளில் தொங்க ஓடும் கோமாளி, பாலியல் கேளிக்கையாக அமைந்திருக்கலாம்.

கழிவறை கதவைப் பூட்டி, சுவரில் ஆண்குறி, பெண் குறி வரைந்த பொழுதை சூழல் வயப்பட்ட புத்தியும், பழக்கமும் என்றால், அதே பொழுது ஆண்குறி, பெண்குறி வரைந்து படைப்பு சுதந்திரம் மாயா தாந்த்ரா, காமசூத்ரா என பலர்முன் காட்சி வைப்பதை சூழல் வயப்பட்ட புத்தியின் பிழைப்புவாதம் எனக் குறிப்பிடலாம்.

சித்திரம் எழுத
ஆடை அணியாத ஆண் பெண் உயிர் மாதிரிகளின்
நேர்முக அமர்வு
தேவை - தேவையில்லை

சகல ரகசியங்களையும் அறிந்த வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு அடிமை....

கலைப் படைப்பு என்பதை படைப்பாளியின் அகவொளி அனுபவம், நோக்கம், நிகழ்சூழல் என்பதன் புற வடிவம் எனலாம்.....

மொழியின் எழுத்து வடிவத்தை எழுதிக் கற்பது, எழுத்தை கற்பது என்பது அதன் வடிவம், ஒலி, பயன்பாடு என்பதாக அமைகிறது. அவ்வண்ணமே காட்சி தோற்றத்தை எழுதிக் கற்பது என்பது அதன் ஒளி, இருள்தன்மை, கனபரிமாணம், திசு கட்டமைப்பு என்பதாக அமைகிறது.

ஒரு எழுத்து மட்டுமே தனி அர்த்தத்தைத் தருகிறது. பல எழுத்துக்களின் கூட்டமைப்பும் தனி அர்த்தத்தைத் தருகிறது என்பது மொழி பயன்பாட்டிலுள்ளது. அவ்வண்ணமே தனி ஒரு தோற்றம் மட்டும், பல தோற்றங்களின் கூட்டமைப்பு என்பன தனித்தனி அர்த்தங்களை விளைவிப்பது, கவின்கலை பயன் பாட்டிலுள்ளது.

நாம் நேரில் காணும் தோற்றத்தை, விந்தை தோற்றங்களாக பெறுவது யதார்த்தம். நேரில் ஒரு தோற்றத்தைப் பார்த்து சித்திரம் எழுதுவது, சித்திரம் எழுதும் மனப்பயிற்சியை வளர்க்கிறது. அம்மனப்பயிற்சி மனதில் தோன்றும் விந்தையான தோற்றங்களைச் சித்திரமாக எழுத வழி செய்கிறது எனலாம்.

யதார்த்த சூழலில் நாம் பெறும் இறுக்கமான மன உணர்வு நம்மை இறுக்கமற்ற மனநிலைக்கு நகர்த்துகிறது. இதை பாவிப்பதும், பாவனையாகப் பெறுவதும் ஓர் அனுபவம், சித்திரம் எழுதுவதன் வாயிலாக நெருக்கடியற்ற மனநிலைக்கு சித்திரக்காரர் நகர்கிறார் எனலாம். இந்நகர்வினை நேரில் கண்ட மனதில் கண்ட தோற்றங்களை வரைவது என்பதற்கு விலக்கானது எனலாம். மேலும், இந்நகர்வு சித்திரம் எழுதுவதற்கு மட்டுமல்ல அனைத்துவகை செயல்முறைகளுக்கும் உரியது எனக் குறிப்பிடலாம்.

குறிப்பு :

குறிப்பிட்ட ஒரு நபரின் தோற்றத்தைச் சித்திரம் எழுத, அந்நபரின் நேர்முக அன்ர்வு அவசியம், ஒரு மனித தோற்றத்தைச் சித்திரமாக எழுத சித்திரகாரரின் போதுமானது எனலாம்.

ஒரு மூலிகையின் குணநலனை அறிந்து சொல்ல ஒருவர் தனது உடல், மனதைப் பரிசோதனை களமாகக் கொள்வதும், மற்றும் ஒருவர் இரசாயன கலவை - குடுவை ஆகியவற்றைப் பரிசோதனை களமாக கொள்வதும் யதார்த்தம். இப்பரிசோதனைக் களம் எதுவானபோதும் நபரின் அனுபவமும், நுண்ணறிவும் பிரதானமாக அமைய வேண்டியதாகிறது.

ஒரு தீப்பெட்டியைப் பார்த்து சித்திரம் எழுதுவது, ‘தாஜ்மகாலை’ சித்திரமாக செய்வதை எளிதாக்குகிறது. நேரில் தனது கைவிரல்களைப் பார்த்து சித்திரம் எழுதுவது, தனது முதுகை மனதில் பார்த்து சித்திரம் எழுதுவதை எளிதாக்குகிறது. இதில பார்த்து, பாராமல் எழுதுதல் என்பதில் நபரின் அனுபவமும், நுண் அறிவும் பிரதானமாக அமைய வேண்டியதாகிறது.

ஆண், பெண் உடலை கூறுகளைத் தெளிவாக அறிய முற்படுவது. சித்திரம் எழுதுவது மனப் பயிற்சியால் ஆடை மறைப்பை ஊடுருவி அறிவது என்பன யதார்த்த சூழலியேயே நிகழ்வதாக இருக்கிறது. மேலும், கலைப் படைப்பு என்பது ஆண் பெண் உருவத் தோற்றங்களைச் சித்தரிப்பது அல்ல. அது ஓர் மனோபாவத்தை யாசிப்பது எனலாம்.

அறுவை சிகிச்சை மருத்துவரும், நோயாளியும் ஒரு இசையில் உற்சாகம் பெறுவது போல் சித்திரமும் தனது அவசியத்தை பெறுகிறது. இசைக்கலைஞனும் ஓவியரும் அறுவைச் சிகிச்சை மருத்துவர் அல்ல. இவ்வகையில் மனித உடற்கூற்றைக் கற்பது என்பது மருத்துவருக்கும், சித்திரக்காரருக்கும் வேறு வேறு நோக்கம் உடையதாகிறது.

அனைத்தும் பொது மற்றும் தனி கூறுகளை உடையன. இதில் ஒன்றின் தனி மற்றும் பொது கூறுகளைச் சுட்டுவது அதை தெளிவாக அடையாளம் காட்டுவதாக அமைகிறது. இவ்வகையில் விலங்குகள், மனிதர்கள் என்பவை பொது, தனி உடல்கூறுகளே கொண்டது. விலங்கின் உடற்கூறைத் தெளிவாக புரிதல் என்பது, மனிதனின் உடற்கூறைத் தெளிவாகப் புரிதல் என்பதாகிறது. ஆடை அணியாத விலங்கை வரைவதை விடவும், மனித தோற்றம் நம்மை அதிகம் வசீகரிக்கிறது என்பதில் ஆடை அணியாத மனித உயிர் மாதிரிகளை நேரில் பார்த்து சித்திரம் எழுதுவது அமைகிறது எனலாம்.

நிர்வாணம்
உருவத் தோற்ற கவர்ச்சி
கீழை - மேலை நாட்டு கலை மரபு

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். - வள்ளலார்.

ஞானம், கொலைவெறி, மனக்குழப்பம் என்ற நிலைகளை மரணம் பற்றிய சுய விசாரிப்பில் அறியலாம்.

‘மரத்தில் புதைந்தது மாமத யானை’

மனநிர்வாணம் என்பதை பற்றற்று இருத்தல் என்றும், யாவற்றின் பேரிலும் பற்று என்றும் விளங்கலாம். மேலும், இவ்வனுபவத்தை உலகத்தாரோடு ஒத்த வாழ்தலிலும் அறியலாம். விவசாயம் செய்யும் நந்தனிடத்திலும் பானை வரைந்து கொண்டு ஆழ்வாரிடத்திலும், கூடாரம் தைத்துக் கொண்டிருந்த பவுலிடத்திலும் ஞான வாழ்க்கையைக் காணலாம்.

ஊடகத்தின் வாயிலாக பிறப்பதல்ல ஞானம், காத்திருப்பின் சிறு துரும்பும் ஞானத்திற்கு வழி நடத்தும்...... இவ்வகையில் ஒரு கலைப்படைப்பாளி தான் பழகிக் கொண்ட ஊடகத்தின் வாயிலாக இருத்தலின் மகத்துவத்தையும், மன நிர்வாணத்தையும் நோக்கி பயணிப்பதும், பார்ப்போரை வழிநடத்தவும் மேற்கொள்ளும் முயற்சியினை கவின்கலை படைப்புகளும் அதன் மறைபொருளும் எனக் குறிப்பிடலாம்.

கங்கை + கீழை

நெற்றிப் பொட்டின் ஓர் துடிப்பைக் கவனிக்க, தண்டுவட அடிநுனியிலிருந்து பொரு..... பொரு என உணர்வு ஏறி நெற்றிப் பொட்டிற்கும், அடி நுனிக்கும் சஞ்சாரம் பண்ண, நெற்றிப் பொட்டின் துடிப்பைப் பாவனையாக சூழற்ற, சிர உச்சியும், பிடரிக் கண்ணும் திறக்க, உள்ளும் புறமுமாக தென்றல் உலாவுகிற ஓர் அனுபவம் .... அதை ஜீவ நதி, கங்கை, பெண் என சாடை கூறுவது பிறருடன் பரிமாற்றத்திற்கு ஏதுவான அடையாளங்கள்.

இதுகாரும் அவளைக் கண்டதில்லை, நான் அறிவேன், அவள் எந்தப் பெண் உருவும் அல்ல. அவளைச் சித்திரமாக்க எந்த ஒருத்தியை ஆடை கலந்து காட்சி மாதிரியாக வைத்து சித்திரம் எழுதுவது....?

கங்கையும், அவளது பணிப் பெண்களும், ஒரே முகம், ஒரே உடல்வாகு என கற்சிலைகளில் கொலுவிருக்கிறார்கள்.

கங்கைக்கான அனுபவமும், படைப்பாளியின் அகவொளி, காட்சித் தோற்றம் பெரும் புராண கதைகளிலும், பூஜை புனஸ்காரங்களிலும் மறைபொருளாகிறது என்பது நடைமுறை அனுபவம்.


மோனலிசா + மேலை

ஒளி, இருள்தன்மை, தோற்றத்தின் புறக் கட்டமைப்பில் தெளிவு, பாவம் என நேர்ந்த மோனலிசா ஓவியம் லியார்னாடோ டாவின்சி என்ற ஓவியரின் ஓர் அடையாளம். அந்நாட்டு மரபு என்ற வகையில் மோனலிசா ஒரு தனி நபரின் தோற்றம் என்றாகிறது. மோனலிசா பெண் என்றால் அவள் யாருடைய மகள், காதலி, மனைவி என்றும் ஆண் என்றால் பெண் தோற்றமாக சித்தரிக்க வேண்டிய தேவை படைப்பாளிக்கு ஏன் நேர்ந்தது என்றும், அந்த ஓவியம் குறித்து விவாதங்கள் நிகழ்ந்தபடி இருக்கிறது.

மோனலிசா ஓவியம் ஓர் தனிநபர் அடையாளம், நுட்பமான செய்நேர்த்தி, விலைமதிப்பு, விளம்பரம் என்பதில் படைப்பாளியின் அகவெளி புதை பொருளாகி விடுகிறது என்பது நடைமுறை.


கவின்கலை படைப்புகளும் சமூக சூழலும்

வெட்ட வெளியான கலா அனுபவம் எந்தச் சாயத்தையும் அணிந்து கொள்ளவில்லை என்பதும், ஒரு கலைப்படைப்பு படைப்பாளியின் சமூக சூழல் - அரசு, நம்பிக்கை உள் அடக்கிய அடையாளம் என்பதையும் நாம் அறிவோம்.

பட்டீஸ்வரம் பெரிய கோவிலின் கர்ப்பகிரக படிகட்டுக்கு அருகில், ஒரு சிலையைப் பார்த்து ஒரு மாணவன் சித்திரம் எழுதிக் கொண்டிருக்க.

வழிப்போக்கர். “எதைப் பார்த்து சித்திரம் எழுதுகிறாய்”.

மாணவன், “இதோ இதை”

வழிபோக்கன், “அவன் காமன், அவள் ரதி, அவன் தவக்கோல சிவன்”

வேறு ஒரு சந்தர்ப்பத்தில், தாத்தா தன் பேரனை நோக்கி,

“ஒக்காந்து செய்யிற வேலையச் சிறப்பா செய்...., அதவிட்டுட்டு வர்றபோறவளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தா வேலை ஆகாது. நீ செய்ற வேலையைச் சிறப்பா செஞ்சா, வர்றவா எல்லாம் உன்னையே சுத்தி நிற்பா.... உன்மேல ஆசப்படுவா......”

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கதாகலாட்சேபம்.

“காம வேட்கை நம்மில் அக்கினியாக தகிக்கிறது. அதில் மனம் பதைத்து, வெறி கொள்ள வேண்டாம்.

காமனும், ரதியும் சிவசக்தி, இன்பமயம், குளிர்ந்த தென்றல், நறுமணம், நல்சுவை, நல்உணர்வு, நல்இசை....” என்றது.

வழிபோக்கர், தாத்தா, கலாசேவகம் என்பவை, வாழ்க்கை அனுபவம், புராணம், கதை, சிற்பம் என்பதில் சித்திரம் பயிலும் மாணவனிடத்தில் ஓர் பொதுமையை நேர்த்தியது, சமூக சூழலின் யதார்த்த வழிநடத்தல் எனலாம்.

கவின் கலைத் துறை
மேலை நவீனம்
கீழை நவீனம்

இருத்தலின் எத்தனம், தன் முனைப்பு என்பன தனது நகர்விற்கு தடையானதைத் தகர்க்க முற்படுவது மிக இயல்பான நிகழ்வு.

மேலை நாட்டில் கிறிஸ்துவம், சமூக வாழ்க்கையில் மேலாதிக்கம் கொண்டது.

தொழில் நுட்ப - விஞ்ஞான வளர்ச்சி, உலக யுத்தத்தின் உக்கிரம் என மேலைநாட்டினரும், படைப்பாளிகளும் கொண்ட அச்சமும், அதிலிருந்து மீட்சியுமாக, மார்சல் டூசாம்ப் தனது கலைப்படைப்பாக ஓர் கழிவறை கோப்பையைக் காட்சி வைத்ததும், மோனோலிசா ஓவியத்திற்கு மீசை போட்டதும் யதார்த்தம் எனலாம்.

பாவம், தோற்றப் பொலிவு, ஒளி, இருள், என்பதைக் கலைப்படைப்பில் கருதும் பிரதானமாகக் கருதும் நெருக்கடி, அவ்வுருவத் தோற்றங்களைச் சிதைக்க முற்படுவது யதார்த்தம். இதைச் சென்ற நூற்றாண்டில் மேலை நாட்டு மக்களும், படைப்பாளிகளும் தங்கள் நவீனம் நோக்கிய எழுச்சியாக கருதியதும் யதார்த்தம்.

கீழை

குறிப்பாக இந்தியர்கள் சென்ற நூற்றாண்டில் அடைந்த நெருக்கடி என்பது ஐரோப்பியர்களிடமிருந்து தங்கள் ஆட்சி அதிகாரத்தை மீட்பது எனலாம்.

சைவம், வைணவம் என்பன இந்திய மக்களின் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது என்றபோதிலும், அவை சமணம், பௌத்தம் ஏற்ற அனித்தியம், அனாத்மா என்ற விசாரணைகளையும் உள் வாங்கியது எனலாம்.

பாவம், தோற்றப்பொலிவு ஒளி, இருள் என்பதைவிட கலைப்படைப்பு என்பது அகநிர்வாணம் சார்ந்தது என்ற கருத்தும், வெளிப்பாடும் கொண்ட இந்திய கலைப்படைப்புகளைப் புறத்தோற்ற அளவில், சித்தரிப்பதும் சிதைப்பதும் மேற்கத்திய தழுவல் என்றும், இதை தங்கள் நவீன நோக்கு என இந்திய சமூகமும் படைப்பாளிகளுக்கும் கருதுவது மேற்போக்கானது என்றும் குறிப்பிடலாம்.


கருத்துகள் இல்லை: