12 ஜூலை, 2011

துருக்கிச் சிறுகதை -மிகயீலின் இதயம் நின்றுவிட்டது

அய்ஃபர் டுன்ஷ்
தமிழில்: சுகுமாரன்
ஆங்கிலத்தில்: ஸ்டெபானி அடெஸ் (Stephanie Ates)
மிகயீலின் இதயம் நின்றது. கணக்குப் பார்த்துக்கொண்டிருந்த அலுப்பூட்டும் இரவொன்றில் அழுகையை மறைப்பதற்கிடையில் அவனுடைய இதயம் திடீரென நின்றுவிட்டது. அவன் மறைக்க விரும்பியது அழுகையை அல்ல; தோல்வியின் வலியால் வரும் புலம்பலைத்தான். பராமரிப்புக் குறைவால் சொத்தை விழுந்த பற்களைச் சரிசெய்துகொள்ள முடியாத அவனுடைய இரண்டு சிறு குழந்தைகளும் உதடுகளிலிருந்து பொறுக்க முடியாத சாபங்களைப் பொழியும் மனைவியும் குடியிருக்கும் அவலமான தீமையுணர்வும் தரித்திரமும் நிரம்பிய, சுவர்களில் உப்பு நீர் கசியும் வீட்டில் அவனுடைய இதயம் நின்றுவிட்டது.
அவனுடைய இதயம் நின்றுபோன அந்தக் கணம் எனக்கு நன்றாகத் தெரியும். நோய்வாய்ப்பட்ட நுரையீரலைப் போல் முனகிக்கொண்டும் ஆழமாக மூச்சு வாங்கிக்கொண்டும் வாழும் நகரத்தின் அண்டைவாசிகள் மூலம் அடுத்த நாள் பரவிய தகவலி லிருந்து தெரியவந்தது இது. மிகயீலின் இதயம் நின்ற அதே கணத்தில்தான் வியர்வை ஊறிய, பிரக்ஞையற்ற உறக் கத்திலிருந்து அவனுடைய வன்மமான கண்களால் திகிலடைந்து விழித்தேன். என் இதயத்தைத் துளைத்தது, அவனுடைய உள்ளங்கையில் எப்போதும் வைத்துக்கொண்டிருந்து மெருகு குன்றிப்போயிருந்த மூர்க்கமான கத்தியல்ல, வன்மம் நிரம்பிய அவனுடைய கண்களே என் இதயத்தைத் துளைத்தவை. எனக்கு ஏற்பட்ட இந்த ஆழமான காயத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் மது வாடையடிக்கும் வெப்ப மூச்சுகளை வெளியேற்றியபடி என் அருகில் படுத்துறங்கிக்கொண்டிருக்கும் செமிராமிஸைப் பார்த்தேன்.
“மிகயீலின் இதயம் நின்றுவிட்டது” என்று முனகினேன். பிறகு அதை நானே நம்ப விரும்பாமல் அந்த விதிவசமான வாக்கியத்தைத் திரும்பச் சொன்னேன். “மிகயீலின் இதயம் நின்றுவிட்டது” செமிராமிஸ் அதைக் கேட்கவில்லை. போர்வை மூடாத கால்களைச் சரிந்த வயிற்றையொட்டி இழுத்து இடுக்கிக்கொண்டாள். அவளுடைய விசாலமும் வசதியானதுமான படுக்கையில் முடங்கிக்கொள்ளப் பார்த்தேன். அது வீணாயிற்று. மறுபடியும் என்னால் உறங்க முடியவில்லை.
அன்றுமுதல் நான் உறக்கமிழந்தேன். அமைதியிழந்தேன் என்றும் நீங்கள் சொல்லலாம். நான் உறங்க விரும்பினேன். உறக்கத்தின் ஆழமான, இனிய வெறுமையில் புரள விரும்பினேன். குறைந்தபட்சம் படுக்கை நேரத்திலாவது மன வேதனையை மறக்க விரும்பினேன். இருந்தும் எதுவும் நடக்கவில்லை. நான் உறக்கத்தில் ஆழ்ந்த நொடிகள் மிகக் குறைவானவை. ஆனால் மிகயீலின் உயிர்க்களை இல்லாத முகத்தையும் அதீத வேட்கையால் வேகமாக முதுமையடைந்துவிட்ட தோற்றத்தையும் பிரித்துக்காட்டும் மெல்லிய புலம்பல் போன்ற நீண்ட அவனுடைய பழைய மோஸ்தர் மீசையையும் மறக்க அந்தச் சில நொடிகள் போதுமானவையாக இருந்தன. பலி மிருகத்தின் நிராதரவிலிருந்து எடுக்கப்பட்டவைபோன்ற அவனுடைய துயர்படிந்த கண்களை என்னுடைய மனத்திலிருந்து அப் புறப்படுத்த முடியவில்லை. அவை நீண்டகாலத்துக்கு முன்பிருந்தே என்மேல் சீற்றம்கொண்டிருந்தன.
குறுகிய கணங்களுக்கு மிகயீலை மறந்திருப்பதில் நான் வெற்றியடைந்திருந்தேன். எனினும் என்னுடன் வசிப்பதாக நான் நம்பிய அவனுடைய ஆவியிடமிருந்து என்னால் தப்ப முடியவில்லை. ஒவ்வொரு நிலைக்கண்ணாடியிலும் நான் எப்போதும் காணும் மிகயீலின் நெகிழ்வான முகத்தையே பார்த்தேன். அந்த வெளிறிய ஆவியிடம் இந்த விநோதச் சுழலில் சிக்கிக்கொண்டதும் உண்மையில் ஓர் அந்நியனாக இருந்தும் கொதிப்பான ஒரு வாழ்க் கையின் பகுதியாக மாறியதும்தான் என்னுடைய ஒரே தவறு என்று சொன்னேன். ஆனால் அதன் பிறகும் படுக்கையில் மன வேதனையுடன் புரண்டேன். ‘இனிமையான, தடை படாத, நிம்மதியான உறக்கம் எனக்கு வாய்க்காதா?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.
உடனடியாகப் பதிலையும் சொல்லிக்கொண்டேன் “ஏனென்றால் நான் குற்றவாளி. நான் ஒன்றைத் திருடிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை அது பயனற்ற ஒன்று. அசிங்கமானது. ஆனால் அதை நான் திருடியிருக்கிறேன்”. யாருக்கும் தெரியாத ஆனால் எனது இதயத்தைச் சின்னக் கீற்றாகக் கசியச் செய்துகொண்டிருக்கும் இந்த வலியிலிருந்து விடுபடுவதற்காக முதலில் செமிராமிஸை விட்டு விலகினேன். வருடக்கணக்காக என்னோடு அலைந்து அமைதியான இடத்தைத் தேடிக்கொண்டு கட்டிலுக்கு அடியில் தொந்தரவில்லாத மூலையில் கிடந்த என்னுடைய பெட்டியில் எனது உடைமைகளைத் திணித்துக்கொண்டிருந்தபோது மிகயீலின் வீட்டுக்குச் சில தெருக்கள் தள்ளியிருக்கும் பாழடைந்த தெருவின் கடைகெட்ட வீடுகளிருந்து, வெளிறிப் பழுப்பேறிய முகமுள்ள அவனுடைய ஏழை உறவினர்கள் போய் வருவதைப் பெண்களின் பரட்டைத் தலைகள் எட்டிப் பார்த்தன. எளிய ஈமச் சடங்கின்போது இரண்டு குழந்தைகளின் கைகளைப் பிடித்து நின்று அந்த ஒடிசலான பெண் ‘நான் இனி என்னசெய்வேன்?’ என்று விடாமல் சொல்லி அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் உருக்கமான வார்த்தைகளில் ஆறுதல் சொன்னார்கள். ‘இந்தப் பாழாய்ப் போன மரணம் மிகயீலின் விதி’ என்றார்கள். ஜன்னல் வழியாக செமிராமிஸைக் கண்களால் தேடிக்கொண்டிருந்தார்கள். இதயத்தில் ஆழமான வலியுடன் என்னுடைய பெட்டியை நிரப்பிக்கொண்டிருந்தபோது ‘இங்கேயே இருந்துவிடு’ என்று தான் சொன்னதற்கு எந்தப் பயனும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டிருந்த செமிராமிஸ் அமைதியாக இருந்தாள். எனக்கும் மிகயீலுக்கும் இடையிலான விசித்திர யுத்தத்தைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டதில்லை. எனினும் அவளுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.
இந்த மௌனப் பகைக்கு செமிராமிஸைத்தான் குற்றஞ்சாட்ட வேண்டும். மிகயீலை நான் பார்த்த முதலாவது இரவில் அவள் முகத்தில் தென்பட்ட பைசாசப் புன்னகைதான் இந்தப் பரிதாபகரமான சண்டையில் என்னைச் சார்பெடுத்துக்கொள்ளத் தூண்டியதாக நீங்கள் சொல்லலாம். இது எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் சமாதானமாகவும் இருக்கலாம். அவளுடைய சொந்த அபிப்பிராயத்தில் தனக்குச் சரியென்று பட்டதை செமிராமிஸ் செய்திருப்பதற்கான சாத்தியமாகவும் இருக்கலாம். இதில் தப்பான விஷயம் நானாகவும் இருக்கக்கூடும்.
கோமாளித்தனமான உடையணிந்து பழைய மோஸ்தரிலான மீசை வைத்திருந்த மிகயீலை முதன்முதலாகப் பார்த்த அந்த இரவில் வன்மத்துடன் அவனைக் கவனித்தேன். நியாயமான துக்கங்கள் இழையோடினாலும் மிகையான உற்சாகத்தைக் காட்டும் இந்த இருண்ட மனிதர்களின் உலகத்தில் நான் வசிக்க முடியாதபடி ஒரு நாள் அவன் என்னை முறித்துப் போடுவான் என்பது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் அந்த நாட்கள் ஒன்றிலேயே இந்த இடத்தைவிட்டுப் போயிருப்பேன். நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவனல்ல என்று நன்றாகத் தெரிந்திருந்தும் போகவில்லை. ஏனென்றால் அந்த அந்நியத் தன்மையின் பாவனையை விரும்பியிருந்தேன். அதுவே வெளியேறுவதற்குச் சரியான தருணமாக இருந்தபோதும் சோம்பலின் சுகத்தால் நகர்த்திச் செல்லப்பட்ட என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை.
ஓர் இலையும் அசையாத, நகரத்தின் எல்லா ஜன்னல்களும் விரியத் திறந்துகிடந்த கோடைக்கால இரவொன்றில்தான் மிகயீலை நான் முதல்முறையாகப் பார்த்தேன். செமிராமிஸ் இந்த நம்ப முடியாத நகரத்தை மிகவும் நம்பினாள்; ஏனென்றால், அவளுடைய தரித்திரக் காலத்தில் இந்த மாவட்டம்தான் ஆயிரக்கணக்கான இதய வேதனைகளுடனும் அவமதிப்புகளுடனும் வாழ்ந்துகொண்டிருந்த அவளைத் தன்னுடைய சீழ்கட்டிய மார்புகளுக்கிடையில் வரவேற்றது. அதே நகரம் இப்போது வெப்பத்தால் முனகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இரவும் அடித்து வதைக்கப்படும் பெண்களின் உடைந்த மூக்குகளிலிருந்து பெருகிய ரத்தத்தையோ அது என்னவோ மிகச் சாதாரணமான செயல் என்பதுபோல எந்தத் தயக்கமுமில்லாமல் இளைத்தவர்கள்மீது வலுவானவர்கள் காட்டும் வன்முறையின் எதிரொலியையோ உணர முடியவில்லை. வன்முறையும் தீவினையும் நிரம்பிய இரவு வாழ்க்கையிலிருந்து நகரம் சிறிய ஓய்வெடுத்துக்கொண்டாற் போலிருந்தது. தெரு நாய்கள் அமைதியாக இருந்தன. பகல் பொழுதில் சூடேறியிருந்த நடைபாதைக் கல் தளங்களில் தெருப் போக்கிரிகள் படுத்துக் கிடந்தார்கள். ஈக்கள்கூடப் பறக்காமலிருந்தன. வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்து உடல்களை நீட்டிக்கொண்டோம். அறையின் கூரை உயரமானதாக இருந்ததால் காற்றோட்டமான உணர்வைத் தந்தது. நாங்கள் பீரையும் வோட்காவையும் கலந்து குடித்துக்கொண்டிருந்தோம். நான் செமிராமிஸின் தாராளமான மார்பகத்தின் மேல் - அது இப்போது உண்மையிலேயே மிருதுவாகியிருந்தது - தலையை வைத்துக்கொண்டிருந்தேன். அவள் ரசனையில்லாத ஆனால் ஆடம்பரமான மோதிரங் களணிந்த விரல்களால் என்னுடைய தலைமுடியை அளைந்துகொண்டிருந்தாள். செம்ரா என்னும் தன் பெயரை ஏன் செமிராமிஸ் என்று மாற்றிக்கொண்டாள் என்ற கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தபோதே நாங்கள் எந்த வகையிலும் எப்போதும் இணையானவர்களாக இருக்க முடியாது என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன். இப்படி யோசிப்பது உண்மையாகவே என்னை மகிழச் செய்தது. தனக்குச் சொந்தமில்லாத இடங்களில் தைரியமாகச் சுற்றித் திரிகிற துணிச்சலான குற்றவாளியைப் போல உணர்ந்தேன்.
செமிராமிஸ், அவளுடைய பழைய புகைப்படங்களில் தோன்றுவது போல- ஒரு காலத்தில் மிக அழகாக இருந்தவள் - தன்னுடைய பக்குவமான பருவத்தைக் கடந்துவிட்ட பின்னும் தன்னம்பிக்கை கொண்டிருந்தாள். அப்படி இருந்தும் இசைக்கூடப் பங்காளிக்குத் தேவை என்பதால் குடிகாரியாக மாறியிருந்தாள். காமத்தையும் பெண்மையையும் கொடுத்து யாரைக் கைவசப்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுக்கொண்டிருந்தாள் என்பதையும் பொறுப்பில்லாத வெறுமையில் முடிவற்றுப் புரள்வதையும் இந்த உலகில் தனக்குரிய பிரதேசத்தில் தன் குரலைக் கேட்கச் செய்வதில் வெற்றியடைந்த தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கை பற்றியும் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். உடம்பு குலையாமல் இருக்கும்வரை மட்டுமே இரவுகளின் உலகில் பிழைக்க முடியுமென்ற நிலையிலிருக்கும் பெண்களைக் காட்டிலும் செமிரா மிஸ் புத்திசாலியாக இருந்தாள். மாதாந்தரக் கட்டணங்களைச் சரியான நேரத்தில் செலுத்தும், அழகும் உறுதியுமுள்ள வீடுகளில் வசிக்கிறவர்களுக்கு, தாங்கள் மிக ஒழுங்கானவர்கள் என்று நினைத்துக்கொள்கிறவர்களுக்கு இது ஒருபோதும் புரியாது.
அவளுடைய வாழ்க்கையில் அநேக ஆண்கள் நுழைந்திருந்தார்கள். அவர்களில் யாரையும் அவள் காதலிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவளுக்குப் பயன்படக்கூடிய எதையாவது அவளால் அடைய முடிந்தது. சிலரிடமிருந்து நல்ல அறிவுரைகள்; சிலரிடமிருந்து அவளால் எவ்வளவு வசதியாகச் செலவழிக்க முடியுமோ அந்த அளவு பணம்; சிலரிடமிருந்து அவர்களுடைய வேட்கையை நீட்டித்துக்கொள்ளச் செய்யும் தியாகத்துக்காகச் சில நகைகள்; சிலரிடமிருந்து இனிய நினைவுகள். யாருடன் வாழ்ந்தாளோ அவர்களிடமிருந்து பாடங்களையும் கற்றுக்கொண்டாள். மிக இதமானவரும் அத்துடன் கொஞ்சம் மோசமானவரும் சிடுமூஞ்சியுமான, நன்றாகப் படித்திருந்த ஒரு முதிர்ந்த மனிதரின் வைப்பாட்டியாக இருந்தாள். அப்போது அவள் புதுமலர்ச்சியுடன் இருந்தாள். அந்தக் கோலாகலம்தான் இப்போதும் அவளை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. அதில் அவள் மகிழ்ச்சியும் அடைகிறாள். அந்த முதியவர் சுருக்கமாக இதை அவளிடம் சொன்னார்:
“செமாராக்காரர்கள் பாடுபட்டு உருவாக்கும் அலுப்பூட்டும் வீடுகளையும் மகிழ்ச்சி தெரியும் வீடுகளையும் செமிராமிஸ்கள் சிதறடிக்கிறார்கள்”.
தன்னுடைய வைப்பாட்டி அவளுடைய தலைக்குள்ளே இது போன்ற வேடிக்கையான வாக்கியங்களைச் செதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி அவளிடம் இந்த வாசகத்தை மனப்பாடம் செய்யச் சொன்ன ஆசாமி கிறுக்கனா அல்லது செமாராப் பிரதேசத்தின் நடத்தைக்கு மாறாக இருக்க விரும்பும் உணர்வால் செமிராமிஸ் அதை மனப்பாடம் செய்தாளா என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தே ‘ரோமாபுரிப் பெண்மை’யை விருப்பத்துடனும் தேர்ந்தெடுத்திருந்த செமிராமிஸின் வாயிலிருந்து இந்த வாசகம் வெளிவந்தபோது அழைப்பு மணி பரிதாபகரமான வற்புறுத்தலுடன் நீண்டநேரம் ஒலித்தது. எச்சரிக்கையான உணர்ச்சிகளுக்குப் பொருந்திப்போகும் செமாராக் காரர்களின் முகத்தில் அபூர்வமாகக் காணப்படும் அந்தப் பைசாசப் புன்னகை செமிராமிஸின் முகத்திலும் ஒரு கணம் தோன்றி மறைந்தது. அவள் ஏன் கதவைத் திறக்கவில்லை என்ற ஆச்சரியத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். “அது மிகயீல் தான். மணியை அடித்துப் பார்த்து விட்டுப் போய்விடுவான்” என்றாள்.
ஒருவன் திறக்காத வாசற்கதவின் அழைப்பு மணியை மன்றாட்டத்துடன் அடித்துக்கொண்டிருந்து விட்டுப் போனான்.
செமிராமிஸ் சோம்பேறித்தனமாக எழுந்து வெக்கையைப் பொருட்படுத்தாமல், இன்னும் கவர்ச்சிகரமாக இருக்கும் உடலில் ஒசிந்த அசைவுகளுடன் குளியலறைக்குப் போனாள். கறுப்பு உள்ளாடை அணிந்த அந்த உடல் அவளுக்குப் பழக்கமான எல்லா ஆண்களையும் ஈர்த்திருந்தது; அவளுடன் வாழ்ந்தேன் என்பதால் என்னையும் ஈர்த்திருந்தது என்பதை அற்ப மகிழ்ச்சியுடன் தெரிந்துகொண்டிருந்தாள். மிகயீலுக்காகக் கதவைத் திறக்காததில் அவள் பேரானந்தம் அடைந்திருப்பதை நான் யூகித்தேன். அவளுடைய காலடிகள் ஷவரை நோக்கிப் போவதைக் கேட்டேன். நீரின் ஓசை என் ஆன்மாவை ஆசுவாசப்படுத்தியது. செமிராமிஸின் கணநேரப் பைசாசப் புன்னகை நினைவுக்கு வந்ததும், ஒரு காலத்தில் தனக்காக விரியத் திறந்து கிடந்த, இனி ஒருபோதும் திறக்காத கதவைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிய அந்த மனிதனை, மிகயீலைப் பார்க்க விரும்பினேன்.
நான் எந்த வாக்குறுதியும் கொடுத்திருக்கவில்லை என்றபோதும் அந்தக் கதவு எனக்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்தது. நான் விரும்பும் காலம்வரைக்கும் அந்தக் கதவைத் திறந்தே வைத்திருக்கச் செய்ய என்னால் முடியும். இருந்தும் என்னைப் பொறுத்தவரை இது எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. செமிராமிஸ் புத்திசாலி. ஆனால் சாதாரணப் பெண். என்னைச் சட்டென்று மறந்துவிடச் சிரமப்பட வேண்டியிருக்குமென்றாலும் அழுது புலம்பியபடி என்னைப் பின்தொடரும் பழைய பசப்புக்காரியிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் என்னால் விலக முடியும். நான் விலகிப் போகாததற்கு, செமிராமிஸ் தன்னை முழுவதுமாக என்னிடம் ஒப்படைத்திருக்கிறாள் என்பதல்ல; ஒரு புதிய இடத்தை, இருப்பிடத்தை, ஒரு வித்தியாசமான உலகத்தைத் தேடுவதில் எனக்கிருந்த அதீத சோம்பல்தான் காரணம். நான் காணாமற்போன பிள்ளைகளில் ஒருவன். தோல்வியின் நோய்க்கூறான உணர்ச்சிகளுக்கும் எதிர்காலமின்மைக்கும் என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருந்தேன்.
அகந்தை என்பது ஒருவேளை, ஆன்மாவை முற்றிலும் இழந்த பின்னர் தோன்றும் ஆழமான வெறுமையில் ஒருவன் அனுபவிக்கும் கடைசி உணர்வாக இருக்கலாம். எனினும் இறுமாப்பு நிரம்பியவனாக இருப்பதிலிருந்து என்னைத் தடுத்துக்கொள்ள என்னால் முடியவில்லை. மிகயீலைப் பார்ப்பதற்காக, அல்லது அதைவிட எனக்கே என்னை வீறாப்பாகக் காட்டிக்கொள்ள, ஜன்னல் அருகே போனேன். கொஞ்சம் முன்பு எதிர்பார்ப்புடன் தன்னம்பிக்கையான எட்டுகள் வைத்து எந்தப் படிகளில் ஏறிப்போனானோ அதே படிகள் வழியாகக் கிட்டத்தட்ட ஏமாற்றத்துடன் தலைகவிழ்ந்து இறங்கி, வேதனையால் கனத்த இதயத்துடன் அந்தக் குறுகிய தெருவுக்குள் நுழைந்துவிட்டிருந்தான். தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது தலையை உயர்த்தி ஜன்னலைப் பார்த்திருந்தால் அவனால் இனிமேல் நுழையவே முடியாத இந்த வீட்டில் வேறு ஒருவன் வசிப்பதைப் பார்க்க முடிந்திருக்குமோ? அவனுடைய இடத்தை எடுத்துக்கொண்டவன் முகத்தைப் பார்த்திருப்பானோ? எனக்குத் தெரியவில்லை. தெரு விளக்கின் வெளிச்சத்தில் எங்கள் கண்கள் சந்தித்துக்கொண்டன.
நான் அவனுடைய கறுத்த விழிகளைப் பார்த்தேன். முகத்தில் தெரிந்த பதற்றத்தையும் முரட்டுத் தோற்றத்தையும் மீறி அவை மிகவும் சோகமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதிக எடையில்லாத கறுப்பு ஜாக்கெட்டை அணிந்திருந்தான். வெள்ளைச் சட்டையின் காலரை மேலே இழுத்துவிட்டிருந்தான். சில விநாடிகள் என்னை அவன் உற்றுப் பார்த்தான். மீசையை வருடினான். அவசரமாக எட்டு வைத்து நடந்து, வாசல் முன்னால் நிறுத்தியிருந்த அவனுடைய அனடோல் எஸ்டேட் காருக்குள் ஏறினான். காரின் மேற்கூரைவரை சமையலறைப் பாத்திரங்கள் அடுக்கியிருந்ததை அப்போது நான் கவனிக்கவில்லை. என்னைப் பார்க்காதது போல நடிக்க விரும்பினான் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. பகைமையும் பற்றும் கலந்த உணர்ச்சிகூட இல்லாமல் வாழ்க்கையின் போக்குக்கு என்னை ஒப்புவித்துவிட்ட விநோத போதையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய பழைய மூர்க்கமான மனநிலையையும் கடந்திருந்தேன். அலுப்படைந்து, ஜன்னல் அருகில் நின்று வெளிச்சத்தை வடிகட்டிக் காட்டும் அண்டை வீட்டு ஜன்னல் நிழல்களை வேவு பார்த்துக்கொண்டிருக்கும் கிழவன் ஒருவனிடமிருந்து எந்த வகையிலும் நான் வேறுபட்டவனல்ல. இருந்தும் எங்களுடைய இரண்டாம் சந்திப்பில் மிகயீல் என்னை எதிரியாகவே பார்த்தான் என்பதைப் புரிந்துகொள்ள நேர்ந்தது.
அவனுடைய நடத்தையில் ஒரு பரிதாபகரமான அவசரம் இருந்தது. நகைப்புக்குரிய வகையில் அவன் மறைக்க விரும்பிய வன்மமும் இருந்தது. அவன் தட்டிய கதவு திறக்கப்படவில்லை என்பதை முழுத்தெருவும் தெரிந்துகொண்டிருந்ததில் அவன் அவமானமடைந்தான். என்னைப் பார்க்காமலிருப்பதாகப் பாவனைசெய்வதன் மூலம் அவனுக்கே உரிய வழியில் பெருந் தன்மையாக நடித்தான். அதன் மூலம் செமிராமிஸுக்கும் எனக்கும் இன்னொரு வாய்ப்பைக் கொடுத்தான். இந்தக் காரணத்தாலேயே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெருவைவிட்டுப் போய்விட விரும்பினான். எங்களுக் கிடையிலான குறுகிய நேருக்குநேர் சந்திப்பை உடனே மறக்கவும் மறக்கச் செய்யவும் விரும்பிக் காருக்குள் ஏறினான். சாவியைப் போட்டுத் திருப்பினான். ஆனால் நாள் முழுவதும் தெருக்களில் அலைந்து களைத்துப் போயிருந்த அந்த அனடோல் கிளம்பவில்லை. அவனுடைய உள்ளங்கைகள் வியர்த்துக்கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். மறுபடியும் மறுபடியும் சாவியைப் போட்டுத் திருப்பிக்கொண்டிருந்தும் கார் காயமடைந்த பறவையைப் போலக் கீச்சிட்டதே தவிர கிளம்ப மறுத்தது. அது அவனை மிகவும் எரிச்சலடையச் செய்தது.
காரைக் கிளப்ப முடியாமல் அவன் கட்டாயமாக இறங்க வேண்டி வந்தது. வியர்வை சொட்ட, ஒரு கையால் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து அனடோலைத் தள்ளத் தொடங்கினான். சுமை நிரம்பியிருந்ததால் அதனால் நகர முடியவில்லை. அந்த உற்சாகமற்ற அனடோல் நிறுத்தப்பட்டிருந்த வாசலிலேயே இருக்க மகிழ்ச்சியடைந்தது போலவும் நிரந்தர அமைதியில் இளைப்பாற விரும்பியதுபோலவும் தோன்றியது. அதன் விளைவாகவே சரிவில் சறுக்கி நகரவும் தொடங்கியது. மிகயீல் வேடிக்கையான எட்டுகளுடன் ஓடி காருக்குள் ஏறினான். அனடோல் உடனே மறைந்துவிடப்போவது போல் புறப்படும் நோக்கத்துடன் கொஞ்சம் முனகியது. அதன் விளைவாகவே புறப்பட்டது. அந்தப் பழைய எந்திரத்தின் இடிமுழக்கம் தெருவில் எதிரொலித்துப் படிப்படியாகக் கேட்காமல் போயிற்று. தெரு, சற்று முன்பு நிலவிய வலிமையான அமைதிக்குத் திரும்பியது. நான் உள்ளே போனேன். மிகயீலின் நிலைமையை ஞாபகப்படுத்திச் சிரித்துக்கொண்டு செமிராமிஸின் விசாலமான படுக்கையில் மல்லாந்து படுத்தேன். உறங்கிப்போனேன்.
இப்போது அதைப் பற்றி யோசிக்கும்போது, தன்னுடைய ஓட்டை அனடோலைக் கிளப்பி, பிரதான சாலையில் போகும்போது மிகயீல் காரை நிறுத்தி வினைல் உறை போட்ட ஸ்டியரிங் வளையத்தின் மேல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு கோபத்துடன் அழுதிருக்கலாம் என்று நினைத்தேன்.
கெடுபிடியான ஒழுக்க விதிகள் ஆட்சிசெய்யும் இந்த உலகில், வரையறுக்கப்பட்ட பழைய உணர்ச்சிகளுடனும் புதிரான சடங்குகளுக்கு ஊடாகவும் வாழ்க்கை வாழப்படும் இந்த உலகில், சின்னக் கால் இடறல்கூட ஒருவரின் கௌரவத்தை நொடியில் தரைமட்டமாக்கிவிடும் இந்த உலகில் - மிகயீல் அகப்பட்டிருக்கும் சூழ்நிலை அவனுக்குக் கிடைத்த கனத்த அடிதான். வாழ்க்கையின் அமளியால் அலுத்துப்போன அந்த அனடோல் மட்டும் சாவியைப் போட்டுத் திருப்பிய முதல்முறையே புறப்பட்டிருந்தது என்றால் ஒரு வேளை மிகயீலால் ஆர்ப்பாட்டமான புறப்பாட்டுடன் தெருவைத் தாண்ட முடிந்திருந்ததென்றால், எங்கள் இருவருக்கும் இடையில் இந்த மௌனப் போராட்டம் ஒருபோதும் தொடங்கியிருக்காது.
அவனைச் சீரழித்தது காதலின் பகைமையல்ல, அவனுக்கு நேர்ந்த எதிர்பாராத சின்ன இடையூறுகள்தாம். அவனைப் பற்றிய எல்லாவற்றையும் உறக்கத்தில் மறந்தேன். அவனை முழுமையாக என்னுடைய மனத்துக்கு வெளியே தள்ளினேன். சில நாட்களுக்குப் பின்னர் செமிராமிஸ் வசிக்கும் தெருவில் சந்தித்தபோது அவனை அடையாளம் கண்டுகொள்வது எனக்குச் சிரமமாக இருந்தது. செமிராமிஸுக்குக் கடற்கரை நகரத்தில் வேலை இருந்தது. அதற்காக இசைக்கூடத்தில் வேலைசெய்யும் பெண்கள் சிலருடன் பயணம் போயிருந்தாள். திரும்பி வரும்போது அவள் எதிர்பார்த்திருப்பது போல என்னைப் பார்க்கக் கூடாது என்று கற்பனை செய்தேன். நான் அவளைவிட்டுப் போய்விடக் கூடாது என்று வகை வகையான உணவுப் பொருட்களைக் குளிர்சாதனப் பெட்டியில் நிறைத்துவைத்திருந்தாள். இந்தப் பயணத்தைக் காதலுக்கான சோதனையாகவே அவள் எண்ணியிருந்தாள். அந்த இரவு நாங்கள் உறங்காமல் குடித்துக்கொண்டிருந்தோம். விடியவிருந்த சமயத்தில், ஒரு நாள் நான் நிச்சயமாக அவளை விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று சொல்லி நீண்ட நேரம் அழுதாள். நான் அவளைத் தேற்றுவதற்கு முயலவில்லை. குடித்திருந்ததாலும் உறக்கமின்மையாலும் களைத்துப்போயிருந்தாள். பேருந்தில் ஏறியதும் நினைவிழந்து போனாள். விளக்கிச் சொல்ல முடியாத சுதந்திர உணர்ச்சியில் ததும்பிக்கொண்டிருந்த நான், நீண்டகாலமாகப் போகாமலிருந்த நகரத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குப் போனேன். தேயிலைத் தோட்டங்களுக்குப் போய் அங்கிருந்த மேசைகளில் தலையைக் கவிழ்த்துக் குட்டித் தூக்கம் போட்டேன். தேங்கி நின்ற நீரில் என்னையே பார்த்தேன். என்னை ஈடுபடுத்திக்கொள்ளும் சின்ன சந்தோஷத்தைத் தேடினேன். ஒரு புதிய பாதையைத் தேடினேன். காலநிலை கடும் வெப்பமாக இருந்ததால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்படிப் போக அதுதான் சரியான நேரமாக இருந்தும், தெருவில் இறங்கியதும் ஜன்னல்கள் விரியத் திறந்து கிடக்கும் குளிர்ச்சியான ஓர் அறையில் சோம்பேறித்தனமாக - இந்தச் சோம்பலின் இனிமையை வாழ்க்கை முழுவதும் திட்பமாக உணர்ந்திருக்கிறேன் - வெறும் சோம்பேறித்தனமாகக் கொட்டாவி விட்டுக்கொண்டு படுக்கையில் படுத்துக்கிடக்கும் யோசனை என் கால்களை செமிராமிஸின் வீட்டை நோக்கி இழுத்தது. எப்படி இருந்தாலும், சிக்கலான தீர்மானத்தை விடுங்கள், ஓர் எளிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கூட இந்த முனகவைக்கும் பிசுபிசுப்பான ஜூலை மாத வெப்பத்தில் சாத்தியமில்லை.
யோசனையில் மூழ்கியபடி அடி வைத்து நடந்துகொண்டிருந்தபோது, கறுத்த சூரியகாந்தி விதைகளை உரித்து மென்றுவிட்டு உமியை ஜன்னல்கள் வழியாக எட்டித் தெருவில் துப்பிக்கொண்டிருந்த பெண்களின் தலைகளால் என் கவனம் சிதறியது. எதிர்த்திசையிலிருந்து முனகலுடன் அந்த அனடோல் வந்துகொண்டிருந்தது. அதன் இரைச்சல் தெருவை நிரப்பிக்கொண்டிருந்தது. குடியிருப்பின் வாசலில் காரை நிறுத்தி வெளியே வந்து ஒயிலாக நின்றான். முதன்முறையாகப் பார்த்த இரவே என் கவனத்தை ஈர்த்திருந்த மீசையை வைத்தே அவனை அடையாளம் கண்டுகொண்டேன். இந்தச் சந்திப்புக்காகவே பழுதுபார்க்கப்படாமலிருந்த அந்த அனடோலை எடுத்து வந்திருந்தான் என்பதும் நேர்த்தியாக உடையணிந்திருந்தான் என்பதும் அண்டையிலிருப்பவர்கள் முன்னால் இந்தக் காட்சியைக் காட்டுவதற்காகவே ஒத்திகை பார்த்திருந்தான் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது. தலைமுடிக்குச் சாயம் பூசியிருக்க வேண்டும். ஒன்றிரண்டு நரைத்த இழைகளை, குறிப்பாக நெற்றியில் புரளும்படி விட்டிருந்தான்.
திடீரென்று அவன் என்னைப் பார்த்தான். அவன் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். இந்த வேடிக்கையின் முடிவுக்கு வந்திருந்தான். அவனுடைய ஆற்றலைத் திரட்டிக்கொண்டான். நாங்கள் நேருக்குநேர் சந்தித்தோம். மடக்குக் கத்தியை எடுப்பதற்காகப் பாக்கெட்டில் கையைவிட்டான். இருந்தும் அதைப் பாக்கெட்டில் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் பார்த்தபோது சுருட்டிவிடப்பட்டிருந்த அவனுடைய டிரௌசர்களுக்குக் கீழே தெரிந்த பலமுறை துவைத்து, சுருங்கி நைந்துபோயிருந்த காலுறைகள் கால்களை மறைக்க முடியாமலிருந்ததைக் கவனித்தேன். இவையெல்லாம் அவனுடைய பகட்டான தோற்றத்தைக் குலைத்தன. என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. என்னுடைய நடையை மாற்றிக்கொள்ளாமலேயே குடியிருப்பை நோக்கி நடந்தேன். கடைசியில் அவன் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து மடக்குக் கத்தியை எடுத்து அதைத் திறந்து மூடிக்கொண்டிருந்தான். எங்களுக்கு நடுவில் சின்ன இடைவெளிதான் இருந்தது.
மிகயீல் என்னுடைய இதயத்தில் குத்தி இறக்கப்பார்த்த அந்தக் கத்தி என்னைக் கவரவில்லை. தெருவின் குறுக்கே வேகமாகக் கடந்த பூனையின் வாலளவு அர்த்தத்தைக்கூட அந்தக் கூரான எஃகுப் பளபளப்பு எனக்குத் தரவில்லை. உண்மையில், அந்தக் கத்திக்கு அர்த்தத்தைச் சேர்க்கும் விருப்பத்துடனும் அதை என் இதயத்தில் உணர்வதற்காகவுமே நடந்தேன். காணாமற்போன குழந்தைகளில் ஒருவனாக இருப்பது பற்றி நான் அக்கறைகொள்ளவில்லை. என்னுடைய இதயத்தில் சொருகப்பட்டால், அப்படி ஒரு சம்பவம் நிஜத்தில் நடக்கவேயில்லை என்று எண்ணி அந்தக் கத்தியைச் சுமந்துகொண்டே சுற்றித் திரியும் நிலையில் இருந்தேன். எனவே அந்தக் கத்தியை நோக்கி நடந்தேன். மிகயீலுக்கு எதிரான செய்கையாகவோ சாகச நாயகர்களின் உலகில் என் பெயர் நினைவுகொள்ளப்பட வேண்டும் என்றோ அல்ல. அந்தக் கத்தியிலிருந்து அவனுக்குக் கிடைத்த துணிச்சல் போதுமானதாக இருக்கவில்லை; அவனுடைய கைகள் உதறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
எனக்கும் கத்திக்கும் சில எட்டுகளே இருந்தபோது, பெரிய கனமான காதணிகளால் துளைகள் நெடுகப் பிளவுபட்ட காதுகளுள்ள ஒரு பெண், மூக்கொழுகும் சிறுமியொருத்தியை அவள் பாவாடையைப் பற்றி இழுத்தபடி எதிரிலிருந்த குடியிருப்புக்குள்ளேயிருந்து வெளியே வந்து எங்களுக்கிடையில் நேராகப் புகுந்து மிகயீலை நெருங்கி “உன்னிடம் காபி பாட் (சிஷீயீயீமீமீ ஜீஷீt sமீt) செட் இருக்கிறதா?” என்று கேட்டாள்.
மிகயீல் கணக்கிலெடுத்துக்கொள்ளாத சின்ன இடையூறு அந்தக் காட்சியை மொத்தமாக நாசம் பண்ணியது. ஏராளமான சமையல் பாத்திரங்கள் அடுக்கியிருந்த அந்த அனடோல் எஸ்டேட்டைப் பெண்கள் கூட்டம் மொய்த்திருந்தது. டஜன் கணக்கிலான சொரசொரப்பான, சிவந்த, வீங்கிய பெண் கரங்கள் காரின் ஒருக்களித்திருந்த பின்பக்கக் கதவைத் திறந்து பாத்திரங்களுக்கிடையில் துளாவத் தொடங்கியிருந்தன.
திடுதிப்பென்று தான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப் படத்திலிருந்து அவன் நீக்கப்பட்டான். வாணலிகள், பிரஷர் குக்கர், அகப்பைகள் எல்லாவற்றையும் கைகளில் எடுத்துக்கொண்டு பேரம் பேசத் தயாராக இருந்த பெண்களால் அவன் முற்றுகையிடப்பட்டான். பொருட்களை வாங்குவது என்ற காட்டுத்தனமான ஆசையால் உந்தப்பட்ட இந்தப் பெண்கள் கூட்டத்தைப் பிளந்து திரைப்படத்தைத் தொடர்வது அவனுக்கு அசாத்தியமாக இருந்தது. பெண்களின் கையிலிருந்த தன்னுடைய சாமான்களைக் காப்பாற்ற அவன் முயன்றுகொண்டிருந்தபோது, அந்தக் கேலியான சூழ் நிலையை ரசித்தபடியே குடியிருப்புக்குள்ளே நுழைந்தேன். படியேறி மேலேபோய் ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.
நான் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரியும். அந்தக் காரணத்தாலேயே சில காசுகளைச் சம்பாதிக்க இனிமையாகப் பேசி சரக்குகளை விற்கும் சாதாரண விற்பனையாளனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள அவனால் முடியவில்லை. மிகவும் கோபமடைந்திருந்தான். மனமுடைந்திருந்தான். தன்னுடைய சரக்குகளை எல்லாம் ஒழுங்கில்லாமல் திரட்டி காருக்குள் நிரப்பினான். ஆத்திரத்தில் நடுங்கியபடி உள்ளே ஏறினான். நீண்டகாலமாக அவனிடமிருந்து சாமான்களை வாங்கிக்கொண்டிருக்கும் அந்தப் பெண்கள் மிகயீலின் இந்த நடவடிக்கைக்குக் காரணம் புரியாமல் அவனை வைதுகொண்டும் சாபமிட்டுக்கொண்டும் அவர்களுடைய வீடுகளுக்குக் கலைந்துபோனார்கள்.
எங்களுடைய முந்தைய எதிர்கொள்ளலில் கிளம்ப மறுத்து அவனை அவமானப்படுத்திய அனடோல் இந்தமுறை திகைக்கவைக்கும் ஒலிகளை வெளியேற்றிக்கொண்டு புறப்பட்டது. காரின் பின்பக்கக் கதவு மூடப்படாததால் அந்தரத்தில் திறந்துகிடந்ததை அவன் கவனிக்கவில்லை. அவன் தெரு வழியாகப் பாய்ந்தபோது சிறுவர்கள் எல்லாத் திசைகளிலும் சிதறியோடினார்கள்; ஒரு மின்விளக்குக் கம்பத்தில் உரசினான்; ஒரு குப்பைத் தொட்டியில் மோதினான். அவன் பிரதான சாலைக்கு ஏறியபோது அவன் மோதித் தள்ளிய அந்தக் குப்பைத் தொட்டி தெருவையொட்டி உருண்டுகொண்டிருந்தது; அது அவன் விழுந்துவிட்ட நிலைமையைப் பார்த்து ஒரு பார்வையாளன் சிரிப்பதுபோலத் தெரிந்தது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் நீண்டகாலம் மிகயீலைப் பார்க்கவில்லை. நாங்கள் ஒருபோதும் சந்திக்கவில்லை. இருப்பினும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு அவன் என்னைப் பின்தொடர்ந்துகொண்டிருந்ததை உணர்ந்தேன். வேலையைத் துப்புரவாகச் செய்து முடிக்க விரும்பும் தொழில்முறைக் கொலையாளியைப் போல அமைதியாக இருந்தான். அவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. எனினும் அவன் எப்போதும் என் பின்னால் இருந்தான் என்பதைத் தெரிந்து வைத்திருந்திருந்தேன். என்னுடைய பிடரியில் அவனுடைய மூச்சை உணர்ந்தேன். நான் இதை மிகவும் ரசித்தேன். சில இரவுகளில் தெருக்களில் நடக்கும்போது சட்டென்று திரும்பத் தொடங்கினேன். சில சமயங்களில் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓடும் கால்களின் ஓசையைச் சந்தித்தேன். சில சமயங்களில் ஆழ்ந்த மௌனத்தையும். அவன் என்னைப் பின்தொடராத இரவுகள் எனக்கு அலுப்பூட்டத் தொடங்கின. பிரமைகளால் பின்னப்பட்ட குதூகல விளையாட்டில் என்னை இழந்து அதன் முடிவை எதிர்பார்த்திருந்தேன்.
ஆரம்பத்தில் அவன் என்னை அச்சுறுத்த விரும்பினான். பிறகு என்னைக் கொல்ல விரும்பினான். அவன் விரும்பியதெல்லாம் வாசலை மூடிவிட்ட செமிராமிஸைத் திரும்ப அடைவது. ஆனால் அவள் கதவுகளை மூடிவிட்டிருந்தாள். நான் அங்கே இல்லாமலிருந்தாலும் அதைத்தான் செய்திருப்பாள். மீண்டும் மீண்டும் வந்து அழைப்பு மணியை அடித்தாலும் கதவு திறக்காமலிருப்பதன் முழுக் காரணம் நான்தான் என்று அவன் நினைத்தான். உண்மையில் இது வேடிக்கையானது. அதுவுமல்லாமல், மிகயீலின் நிலைமையிலும் எங்களுக்கிடையில் இருந்த விநோதப் பந்தத்திலும் நீண்ட நேரம் சிரித்த பிறகு வரும் அழுகையின் சாயலுள்ள ஒரு சோகமான, மாயப் புதிர் இருந்தது. என்னைப் பொறுத்தவரை செமிராமிஸ் எதுவுமல்ல; அவனுக்கோ அவள் தான் எல்லாம். செமிராமிஸைப் பொறுத்தவரை மிகயீல் எதுவுமல்ல; நான்தான் எல்லாம்.
அவன் வெறுமனே என்னைப் பின்தொடரட்டும் என்பதற்காகவே எல்லா மாலை நேரங்களிலும் நான் இசைக்கூடத்துக்குப் போக ஆரம்பித்தேன். இது செமிராமிஸை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. அது ஒருவகையான பொறுப்புக்கு ஆட்படுவது என்று அவள் எண்ணினாள். உண்மையில் அது பொறுப்புதான். ஆனால் செமிராமிஸுடனான பொறுப்பல்ல; என்னுடைய கொலையாளியுடனான பொறுப்பு.
இருளின் பாடலுடன் போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், தொலைவிலிருக்கும் இந்தக் கவர்ச்சியற்ற நகரத்தில் சரியான ஆட்களின் வரிசையில் சேர்ந்துகொள்ள விரும்பாமல் இருந்ததில் நான் இழந்தது செமிராமிஸையல்ல; பொதுவானதாக இருந்தாலும் கொடூரமானதாக இருந்தாலும் நம்பிக்கையற்றதாகவும் கடைகெட்டதாகவும் இருந்தாலும் துயர சுவாசங்களுடன் வாழும் இந்த இசைக்கூடத்தைத்தான். இந்த இடம் மோசமாகப் பாடப்பட்ட இருளின் பாடல். அந்தப் பெண் பாடகிகளின் குரலில் இருந்த பிசிறுகளைப் போலவே அவலம் நிரம்பிய இந்த இடத்தின் பிரகாச விளக்குகளின் பாசாங்கில் அடைக்கலமாகியிருந்த முகங்களிலும் வாழ்க்கையின் பலத்த அடிகள் ஆழமான வடுக்களை மிஞ்சவிட்டிருந்தன.
ஒரு நாள் இரவில் இசைக்கூடத்தில் இருந்தபோது என்னை அச்சுறுத்துவதையும் கொல்லத் தீர்மானித்திருந்ததையும் மிகயீல் கைவிட்டுவிட்டதைப் புரிந்துகொண்டேன். ஒரு காலத்தில் தான் வைப்பாட்டியாக இருந்திருக்கக்கூடிய வாடிக்கையாளருடன் ஒரு மேசையில் என்மீது ஒரு கண்ணை வைத்தபடி உட்கார்ந்திருந்தாள் செமிராமிஸ். நான் மேடைக்கு முதுகைக் காட்டியபடி பாரில் உட்கார்ந்து நிதானமாகக் குடித்துக்கொண்டிருந்தேன். ‘அதுவும் இருக்க வேண்டும்’ என்ற காரணத்துக்காக இசைக்கூடம் பாரையும் சேர்த்து உள்ளலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் பார் உள்ளலங்காரத்துக்கு அந்நியமாகத் தெரிந்தது, என்னைப் போல.
பாரிலிருந்த மலிவான நிலைக் கண்ணாடியில் தெரிந்த உறுதியாகச் சொல்ல முடியாத வயதுடைய எனது உணர்ச்சியற்ற முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து முடித்தது போலத் தோன்றியது. அதைப் பற்றி ஆழ்ந்த வருத்தமடைந்தேன். என் வாழ்க்கைக்கு நானே ஏன் அந்நியனாக இருக்கிறேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். மேலும் என்னையே கேட்டுக்கொள்ள இருந்தபோது மிகயீலின் பெயர் உச்சரிக்கப்பட்டதால் என்னுடைய யோசனையைச் சுண்டியெறிந்தேன். பார்மேனுக்கும் பணியாளனுக்கும் இடையில் மிகயீலைப் பற்றி நடந்த உரையாடலை ஒட்டுக்கேட்டேன். ஒரு காலத்தில் அவன் செமிராமிஸின் காதலனாக இருந்தான் என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த இசைக்கூடத்தில் இருப்பவர்களில் எத்தனைபேர் எங்கள் மூவரையும் ஒன்றிணைக்கும் நூல்கண்டின் விசித்திரமான சிடுக்குகளைப் பற்றித் தெரிந்துவைத்திருப்பார்கள் என்பதில் எனக்குக் கொஞ்சம்கூட அக்கறையில்லை. மிகயீல் மட்டுமே என்னுடைய அக்கறைக்கு உரியவன்.
அவர்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று உணராமல் அந்த பார்மேனும் பணியாளனும் பேசிக்கொண்டிருந்தார்கள். மிகயீல், ஓர் ஆயுதம் வாங்குவதற்காகத் தன்னுடைய அனடோல் எஸ்டேட் காரை விற்றுவிட்டான். ஆனால் ஒரு பாராபெல்லம் துப்பாக்கியைக் கொண்டுவந்து தருவதாக அவனிடமிருந்து பணத்தை வாங்கியவன் தலைமறைவாகிவிட்டான். துக்ககரமான அலறல்களுடன் கிளம்பும் அந்தக் களைத்துப்போன அனடோலின் சத்தத்தை நீண்ட நாட்களாகக் கேட்கவில்லை என்பது அந்த நொடியில்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. வருந்தத்தக்க இந்த ஏமாற்றத்தைச் சொல்லிச் சிரித்தான் பார்மேன். “அந்த ஆயுதத்தால் யாரைச் சுடுவதாக இருந்தானாம்?” என்று கேட்டான். “யாருக்குத் தெரியும்? ஒருவேளை தன்னைத் தானே சுட்டுக்கொள்ளப் போனானோ என்னவோ?” என்றான் பணியாள்.
கோடைக்காலம் முடியும்வரை நான் மிகயீலைப் பார்க்கவேயில்லை. வழக்கம்போல என்னைப் பின் தொடரவில்லை.
ஒருவேளை அவனுக்கு ஆயுதம் கொண்டுவந்து தருவதாகப் பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிப்போனவனைத் தேடிப்போயிருக்கலாம். அப்படியே இருந்தாலும் அவன் என்னைப் பின்தொடர்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. சில இரவுகளில் அடர்ந்த இருளில் நீண்டு கிடந்த தெருக்களில் நடந்துகொண்டிருந்தபோது, எப்போதாவது எனக்குப் பின்னால் திரும்பிப் பார்க்கையில் பலவீனமாகவும் ஒல்லியாகவும் மாறிய ஒரு நிழல் குடியிருப்பின் வாசலில் தங்கியிருப்பதைப் பார்த்திருந்தேன்.
கோடைக்காலம் முடிந்தது. என்னைப் பின்தொடர்ந்து அலுத்துப் போயிருப்பான் அவன் என்று நினைத்தேன். அது ஒரு அக்டோபர் மாத மாலை. குளிர்காலம் விரைவில் வரும் என்பதற்கான அறிகுறி காற்றில் இருந்தது. லேசான நசநசத்த மழை பெய்துகொண்டிருந்தது. எதனாலோ சோர்ந்துபோயிருக்கும் இந்த நகரம் மேலும் மங்கலாக ஒளிர்ந்தது. செமிராமிஸ் மறுபடியும் இன்னொரு இழவெடுத்த பயணம் போயிருந்தாள். நான் இந்தத் துரதிருஷ்ட நகரத்தின் மரணத்தைப் பார்த்துக்கொண்டு தெருக்களில் அலைந்தேன். நகரத்தின் மேல் ஒரு கையறு நிலைப்பாடல் போல இறங்கிக்கொண்டிருந்த மேகங்களைப் பார்த்தேன். நான் உற்சாகமடைய முடியுமா, அப்படிப் பரவசமடைந்தால் புதிய இடத்துக்குப் போக முடியும். அப்படிச் சுத்த ரத்தம் ஓடும் நாளத்தைப் பார்க்க முடியுமா என்பதற்காகப் பெரிதும் முயன்றேன். எதுவும் என்னைப் பரவசப்படுத்தவில்லை. என்னுடைய முகத்தையும் சிகையையும் ஈரமாக்கி என்னைக் குளிரவைத்த மழைகூடப் பரவசப்படுத்தவில்லை. ஒரு புதிய தொடக்கத்தைத் தேடிப் போவதற்கான முனைப்புக் கடினமானதாகத் தோன்றியது. சாத்தியமில்லாததாகவும் தோன்றியது. என்னை வெகுசீக்கிரம் மூப்படையச் செய்துவந்த செமிராமிஸின் வீட்டுக்குத் திரும்பினேன்.
நான் தெருவில் நுழைந்தபோது இருட்டியிருக்கவில்லை. மழை பெய்து ஓய்ந்து தெருவில் தேவையில்லாத குட்டைகளை உருவாக்கி விட்டிருந்தது. தெருவின் எதிர்காலமில்லாத உருப்படாத சிறுவர்கள் பந்துவிளையாடிக்கொண்டிருந்தார்கள்.
செமிராமிஸின் வீட்டு வாசலில் மிகயீலைப் பார்த்தேன். முழுவதுமாக நைந்திருந்த ஜாக்கெட்டின் காலரை உயர்த்திவிட்டிருந்தான். கதவுக்கு முன்னாலிருந்த கல் தளத்தில் பதுங்கி உட்கார்ந்திருந்தான். தலையைச் சுவரோடு சாய்த்திருந்தான். மணிக்கணக்காக எனக்காகக் காத்திருந்து அலுத்துப் போய்த் தூங்கிவிட்டிருந் தான். நான் அவனை நெருங்கி அங்கே நின்றேன். அவனுடைய தாடி வளர்ந்திருந்தது. முதுமையின் சாயல் இருக்கவில்லை. லேசாகக் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான்.
உறக்கத்திலிருந்து எழுந்து என்னைப் பார்த்ததும் அவனுடைய வன்மம் நிரம்பிய கத்தியை என்னுடைய இதயத்தில் செருக வேண்டுமென விரும்பினேன். அவன் எழுந்திருப்பான் என்று தோன்றவில்லை. நான் குனிந்து மெதுவாக அவன் தோளைத் தொட்டேன். ‘எழுந்திரு, எழுந்து என் மார்பைத் துளைக்கப் போகும் உன் கத்தியால் இந்த முடிவில்லாத வெறுமையிலிருந்து என்னைக் காப்பாற்று’ என்று சொல்ல விரும்பினேன். அவன் எழுந்திருக்கவில்லை.
அந்த நொடியில் சிறுவர்களில் ஒருவன் அடித்த பந்து அவன் முகத்தில் வந்து மோதியது. அவன் சட்டென்று விழித்தான். என்னைப் பார்க்காமலேயே எழுந்தான். சூளுரைத்துக்கொண்டு நடந்து அச்சுறுத்தியபடி சிறுவர்களை நோக்கிப் போனான். கையில் பிடித்திருந்த பந்தை என்னுடைய இதயத்தில் சொருகிப் பார்ப்பதற்காக வைத்திருந்த கத்தியால் வெட்டிக் கீறினான். அந்தக் கணத்தில் நாங்கள் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டோம். பந்தும் கத்தியும் அவன் கைகளிலிருந்து நழுவின. உண்மை என்னவென்றால் அவன் ஒருவனைத் தற்கொலைக்குத் தூண்டிவிடும் அதிருஷ்டம்கூட இல்லாதவன்.
அன்று முதல் அவன் என்னைப் பின் தொடர்வதை நிறுத்தினான். இருந்தாலும் அவ்வப்போது நாங்கள் சந்தித்துக்கொண்டோம். என்னைப் பார்த்தபோதெல்லாம் வேகமாகத் திரும்பி அவசர எட்டுகள் வைத்து நடந்துபோவான். மெலிந்துபோயிருந்தான். அவனுடைய தோல்வி அவனை நிர்மூலமாக்கியது போலிருந்தது. நான் கடந்துபோகும் தெருக்களில் அவன் வரமாட்டான். நான் எங்கே இருக்கக்கூடுமோ அந்த இடங்களுக்குப் போக மாட்டான். ஒரு நாள் பக்கத்து மார்க்கெட்டில் சந்தித்தோம். ஒரு சிறிய ஸ்டாண்டில் சில டஜன் கண்ணாடிப் பாத்திரங்களை ஒழுங்குபடுத்தி வைத்திருந்தான். வழிப்போக்கர்களைக் கவர்வதற்காக மூன்று கிளாஸ்களை அந்தரத்தில் வீசிப் பிடித்துக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்தபடியே கடந்துபோன பெண்களைக் கூவி அழைத்துக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் வீசிப் பிடித்துக்கொண்டிருந்த கிளாஸ்களைப் பிடிக்க முடியாமல் போனது.
இந்த எதிர்கொள்ளலுக்குப் பிறகு அவனுடைய நிலைமை மேலும் மோசமாகிப் போனது என்றும் அதிகம் மூப்படைந்துபோனான் என்று கேள்விப்பட்டேன். இதைப் பற்றி நெடுக யோசித்து அதிருஷ்டம் என்னோடு இருக்கிறது என்று முடிவெடுத்து விட்டுவிட்டிருப்பான் என்று யூகிக்க முடிந்தது. அவன் என்னைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதால் இப்போதெல்லாம் நான் இசைக்கூடத்துக்குப் போவதையே விட்டுவிட்டேன். வாழ்க்கையைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் மிகயீலைப் பற்றியும் யோசித்துப் பொழுதைக் கொன்றேன். அவை எதுவும் சுவாரசியமானவையாக இல்லை. எனவே குடித்தேன். அவனுடைய மகத்தான காதலைத் திருடிக்கொண்டதன் மூலம் நான் சீரழித்த அந்த மனிதன் இல்லாமற் போனதும் நான் திருடிய காதல் சிதறிப்போனதும் என்னை மோசமாக அதிர்ச்சியடையச் செய்தன. முன்பெல்லாம் அவனைப் பற்றி யோசிக்கும்போது சிரிப்பது என் வழக்கம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என்னால் சிரிக்க முடியவில்லை. என்னுடைய மணிக்கட்டை வெந்நீருக்குள் வைத்து வெட்டிக்கொள்வதைப் போல உணர்ந்தேன். மணிக்கட்டை வெட்டிக்கொண்டபோது வலி தெரியவில்லை. ஆனால் இப்போது என் ஆன்மா கடும் வேதனையில் குடைந்துகொண்டிருந்தது.
அந்த இரவில் நான் அதிகமாகக் குடித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் மிச்சமிருந்த எல்லாவற்றையும் குடித்துத் தீர்த்திருப்பதை உணர்ந்தேன். இரவு வெகுநேரமாகிவிட்டிருந்தது . எல்லாம் மூடிக்கிடந்தன. இசைக்கூடத்துக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்தேன். அது ஒரு பனி இறங்கிய இரவு. தெருக்கள் பனியால் மூடப்பட்டிருந்தன. நகரத்தின் கெட்ட ரத்தம் ஓடும் இடுங்கிய தெருக்களில் அலைந்தேன். தகரப் பீப்பாய்களில் மரக்கட்டைகளைப் போட்டுப் பற்றவைத்த நெருப்பில் கைகளைக் காட்டி சூடாக்கிக்கொண்டிருந்த தெருப் போக்கிரிகளுக்கும் தாங்கள் தங்கியிருக்கும் முடுக்குகளில் படுப்பதற்கு ஆயத்தமாக அட்டைகளைப் பரப்பிக்கொண்டிருந்த வீடற்றவர்களுக்கும் மூக்குச் சளியை உறிஞ்சியபடி நோஞ்சானான, ஆனால் வெதுவெதுப்பான தெருப் பூனைகளை அரவணைத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டும் உடைகளைக் கிழித்துக்கொண்டுமிருந்த சிறுவர்களுக்கும் குளிராலோ அல்லது பசியாலோ ஊளையிட்டுக்கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்து அஞ்சுவதை மறந்துவிட்ட நாய்களுக்கும் இடையில் நடந்தபோதுதான் தொய்ந்து அசையும் ஒரு கறுப்பு ஓவர் கோட்டை நான் பின்தொடர்ந்துகொண்டிருப்பதைக் கவனித்தேன்.
பாரில், சந்தடியே இல்லாத மூலையில், மிகயீல் தலையைத் தொங்க விட்டபடி உட்கார்ந்து பீர் குடித்துக்கொண்டிருந்தான். நான் சத்தமில்லாமல் போய் அவன் அருகில் உட்கார்ந்தேன். அவன் அசையவோ நிமிர்ந்து என்னைப் பார்க்கவோ இல்லை. என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லையோ என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது பீர் கிளாசில் பார்வையைப் பதித்துக்கொண்டே நடுங்கும் குரலில் சொன்னான். “எனக்கு கண்ணாடிக் கோப்பைகளும் சீனப் பீங்கான்களும் விற்கும் கடை இருந்தது. கண்ணாடிப் பொருட்களை விற்று வந்தேன். அவளுக்கு என்னவெல்லாமோ வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தேன். அப்புறம் நீ வந்தாய். இப்போது என்னிடம் எதுவும் இல்லை”
அவன் கிளாஸைக் காலிசெய்து விட்டு நடுங்கும் புறங்கையால் வாயைத் துடைத்துக்கொண்டான். சீற்றமோ வெறுப்போ கோபமோ இல்லாத ஆனால் தொந்தரவுபடுத்தும் குரலில் சொன்னான்: “நீ அவளைக் காதலித்திருக்கலாம். நீ அவளைக் காதலிக்கவே இல்லை. என்னையும் நிர்மூலமாக்கி விட்டாய்.”
அவன் எழுந்து போனான். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு நான் அழுதுகொண்டிருப்பதை உணர்ந்தேன். வெளியே போனேன். தெருக் கோடியில் ஒரு தகரப் பீப்பாயில் மரக்கட்டைகள் எரியும் அரண்ட வெளிச்சத்தில் தன்னுடைய கறுப்பு நிற மேல்கோட்டை இழுத்துக்கொண்டு அவன் நடந்து இரவின் ஆழ்ந்த இருளில் கலப்பதைப் பார்த்தேன்.
மிகயீலின் இதயம் நின்றது அந்த இரவில்தான்.
o
“நான் எழுதுகிறேன். ஏனெனில், எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒற்றை வாழ்க்கையுடன் நிறைவடைய என்னால் முடியாது. நான் நானாக இருக்கவும் அதே நேரத்தில் பிறராக இருக்கவுமே எழுதுகிறேன்” என்று குறிப்பிடும் அய்ஃபர் டுன்ஷ், சமகாலத் துருக்கி இலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். அடாபஸாரியில் பிறந்தார். இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறையில் பயின்று பட்டம் பெற்றார். பல்கலைக்கழக நாட்களிலிருந்தே கலை, இலக்கிய, கலாச்சார இதழ்களில் எழுதத் தொடங்கினார். கும் ஹுரியத் நாளிதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பெற்ற முதல் பரிசு அய்ஃபர் டுன்ஷுக்கு இலக்கிய மதிப்பை ஏற்படுத்தியது. யாபி க்ரெதி பதிப்பகத்தின் தலைமைப் பதிப்பாசிரியராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.
இரண்டு நாவல்கள், ஐந்து சிறுகதைகள், இரண்டு வாழ்க்கைக் குறிப்புகள், ஓர் ஆய்வு நூல் - ஆகியவை வெளிவந்துள்ளன. தனது சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட படத்துக்குத் திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.
அய்ஃபர் டுன்ஷின் நெடுங்கதை ‘அசீஸ் பே சம்பவம்’ சுகுமாரனின் தமிழாக்கத்தில் ‘காலச்சுவடு நவீன உலகக் கிளாசிக் வரிசை’யில் அண்மையில் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை: