தமிழில் : சுகுமாரன்
அங்கிள் டைட்டஸ் ஓர் ஆணி வாங்குவதற்காக, ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டிருந்தார். புகைவண்டி நிலையத்தில் பயணச் சீட்டுக் கொடுக்குமிடத்தில் பின்வருமாறு அச்சிட்ட வெள்ளைக் காகிதத்தைக் கண்டார்: ‘அன்பான பயணியே! உங்கள் பயணத்தின் போது யாராவது, எப்போதாவது ஒரு பிராணியை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால் தயவுசெய்து மறுத்துவிட வேண்டாம். எங்களுக்கு அதைக் கொண்டு வாருங்கள், நன்றி. ஹாலே மிருகக் காட்சி சாலை.’ அங்கிள் டைட்டஸ் அந்த அறிவிப்பைக் கோட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டார். புகை வண்டியேறி ஷீவார்ஸ்வாசர் போய்ச் சேர்ந்தார். ஆணியையும் வாங்கிக் கொண்டார். வீதியொன்றில், கறுப்பு நிறக் கைக்குட்டையைத் தலையில் சுற்றிக்கொண்டிருந்த முதுகு கூன்விழுந்த கிழவி ஒருத்தி அவருக்கு முகமன் கூறினாள்: “தயவுள்ள ஐயா! உங்களுக்குப் பிராணி எதுவும் தேவையாக இருக்கவில்லையா?” என்று கேட்டாள். “வாஸ்தவத்தில் தேவைதான். நீங்கள் ஏன் அதைக் கொடுக்கக் கூடாது?” என்று அங்கிள் டைட்டஸ் கேட்டார். “நகர்ப்புறத்திலுள்ள என்னுடைய பண்ணை வீட்டில் வசிக்கிறது அது. சமீப வருடங்களில் அது மிகவும் பெரிதாகிவிட்டது. ஆகவே அதைக் கொடுத்துவிட விரும்புகிறேன்” என்றாள் கிழவி.
அங்கிள் டைட்டஸ் கிழவியைத் தொடர்ந்து அவளுடைய பண்ணை வீட்டுக்குப் போனார். பறங்கிக் கொடிகளுக்கும், அவரைக் கொடிகளுக்கும் இடையில் சிவப்பும், மஞ்சளும், பழுப்புமான நிறங்கள் கொண்ட உருளை வடிவமான ஒரு வஸ்துவைப் பார்த்தார். வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ அதன் முனைகள் எதுவும் புலப்படவில்லை. ”பாம்பு என்று நினைக்கிறேன்” என்று யூகித்தார் அங்கிள் டைட்டஸ். “ஆமாம், அதன் பெயர் லயோலா” என்றாள் கிழவி. பாம்பின் மீது சுண்ணாம்பால் அம்புக்குறிகள் வரையப்பட்டிருந்தன. அவை வெவ்வேறு திசைகளைச் சுட்டிக் காட்டின. வால் பகுதிக்கு, தலைப்பகுதிக்கு என்று அடையாளச் சீட்டுகளும் இருந்தன. அங்கிள் டைட்டஸ் சொன்னார். “மிகவும் காரியார்த்தமான ஏற்பாடு. அநாவசியமாகச் சுற்றுவதைத் தவிர்க்கிறது.” தலையை நோக்கிச் சுட்டிய அம்புக்குறிகளைத் தொடர்ந்து கணிசமான தூரம் நடந்தபின், தண்டவாள மேட்டுக்கு அருகில் வெயில் காய்ந்தபடி படுத்துக் கிடந்த அதைக் கண்டார். “உன்னை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுதான்.” அங்கிள் டைட்டஸ் தொடர்ந்தார்: “உனக்கு ஆட்சேபம் இல்லையென்றால் நான் உன்னை ஹாலே மிருகக்காட்சி சாலைக்குக் கொடுத்து விடலாம். ஏற்கனவே என்னுடைய குரங்கு கேவார்டு அங்கே வேலை செய்கிறது. எனவே அந்த நிறுவனத்தை நிச்சயமாக உனக்கு சிபாரிசு செய்கிறேன்.” “எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை” என்றது தலை. “என்னுடன் வீட்டுக்கு வந்தால் நல்லது. கேவார்டு நாளை உன்னை மிருகக் காட்சி சாலைக்கு அழைத்துப் போகும்,” அங்கிள் டைட்டஸ் சொன்னார். “மிகவும் சந்தோஷம்” என்றது தலை. எனவே, அங்கிள் டைட்டஸ் ஷீவார்ஸ்வாசர்க்குப் போகும் புகைவண்டியைப் பிடித்தார். ஜன்னல் வழியாக, ரயில் பெட்டியை ஒட்டிய மாதிரியே, லயோலா என்ற பெரும் பாம்பின் முழுவடிவமான தலை அபார வேகத்துடன் ஓடிவந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
அன்றைக்கு, அங்கிள் டைட்டஸ், ஹென்ரியட், கேவார்டு மூவரும் அதே வீட்டின் மேல் தளத்தில் வ சிக்கும் போட்ஷீக்கா தம்பதியினரால் மாலை விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஹென்ரியட்டும், கேவார்டும் ஏற்கனவே மாடியில் இருந்தனர். “அன்புள்ள திருமதி போட்ஷீக்கா! துரதிருஷ்டவசமாக நான் தாமதித்துவிட்டேன். தவிர ஒரு விருந்தாளியையும் அழைத்து வந்திருக்கிறேன்.” என்று அங்கிள் டைட்டஸ், கொஞ்சம் தர்ம சங்கடத்துடன் சொன்னார். “ஓ! எனக்கு சந்தோஷமா” என்று என்ஜின் ஃபயர்மேனின் மனைவி சொன்னாள். “வந்திருக்கும் விருந்தாளி ஒரு பாம்பு” என்று அங்கிள் டைட்டஸ் தெரிவித்தார். திருமதி போட்ஷூக்கா, சற்றுப் பயந்த குரலில், “பெரியதா, சின்னதா?” என்று கேட்டாள். “மிகப் பெரியதுதான்” என்று ஒப்புக் கொண்ட அங்கிள் டைட்டஸ், தொடர்ந்து, “ஆனால், முழுவதுமாக உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. அதன் பெரும்பகுதி வெளியிலேயே தங்கி விட முடியும்” என்றார். “நான் காரணத்தைக் கேட்கவில்லை. ஆனால் என்னிடம் போதுமான உணவு இருக்குமா என்று நிச்சயமில்லை” - திருமதி போட்ஷீக்கா சொன்னாள். இதற்கிடையில் லயோலா அறைக்குள் தலையை நீட்டி, மிகுந்த மரியாதையுடன், “தயவு செய்து சிரமப்பட வேண்டாம். நான் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடுவேன்” என்று தெரிவித்தது. “என்ன பயங்கரமான யோசனை” என்று கத்தினார் ஹென்ரியட். “ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே சாப்பிட நேர்ந்தால் நான் பட்டினியால் செத்தே போவேன்.” “முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒருவன் எவ்வளவு தடவை சாப்பிடுகிறான் என்பதல்ல, என்ன சாப்பிடுகிறான் என்பதுதான்” என்றது லயோலா. “ஆனால், இவ்வளவு பெரியதாக இருப்பதற்கு நீ என்ன சாப்பிடுகிறாய்?” திருமதி போட்ஷீக்கா தெரிந்து கொள்ள விரும்பினாள். “ஊறுகாய்” என்றது பாம்பு. அங்கிள் டைட்டஸ், “அப்படியா? இப்போது எனக்கு எல்லாம் புரிகிறது.” என்று கூவினார்.
“சந்தேகமில்லாமல் ஊறுகாய் மட்டுமேயல்ல, என்னுடைய ஆகிருதியை நிர்ணயிப்பது” என்றது பெரும்பாம்பு. “ஒருவகையில் அது என் குடும்பத்திலேயே ஓடுவது. என்னுடைய அசல் மூதாதை ஏதேன் தோட்டத்திலிருந்தது. நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.” “அது போன்ற பாம்பு உண்மையாகவே இருந்ததா என்று நான் எப்போதுமே ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்” என்று ஃபயர்மேன் திருவாளர் போட்ஷூக்க சொன்னார். “முன்னோர்களைப் பொறுத்த வரை நீங்கள் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியாது. சில நிஜமாக இருந்திருக்கின்றன. சில இல்லை. எப்படியிருப்பினும் சொர்க்கத்திலிருந்த பாம்பின் வம்சாவளியில் வந்தது ஒரு ஹைட்ரா, பல தலைகள் கொண்ட பாம்பு. ஹைடிராவிலிருந்து வந்ததுதான் பிரசித்தி பெற்ற ஸாமர்கண்ட் ராட்சஸன். அதிலிருந்து கிரெண்டல் உருவானது. கிரெண்டலிலிருந்து சந்ததியானதுதான் வாஷ்நெஸ்ஸில். இன்றைக்கு வசிக்கிற நீர்ப்பாம்பு. அந்த நீர்ப்பாம்பின் சந்ததியே என் தாய் நூரெம்பர்க் ஃபுர்த்.” “நம்முடைய தெருக்களுக்கடியில் ஓடுகிற நீர்க்குழாய் உனக்கு ஏதாவது உறவா?” என்று கேட்டாள் சிறுமி போட்ஷீக்கா. “அபத்தம்” என்றது லயோலா. “எனக்குத் தெரிந்தவரை நீர்க்குழாய் சுத்தமான தொழில் நுட்ப ரீதியான வடிவம்.”
வெளியே கூடத்தில் தொலைபேசி மணி ஒலித்தது. அங்கிள் டைட்டஸ் எழுந்து போய் ரிசீவரை எடுத்தபோது, ஷீவார்ஸ்வசரில் இருக்கிற கூனல் கிழவியின் குரல் கேட்டது. “கவனி, நீ என் பாம்பை உன்னுடன் கொண்டு போகவில்லை” “நான் எடுத்துக் கொண்டுதானே வந்தேன்” என்று ஆச்சரியத்தில் கத்தினார் அங்கிள் டைட்டஸ். “ஆனால் அது இன்னும் என் தோட்டதில் படுத்துக் கிடக்கிறது” என்றாள் கிழவி. “சாத்தியமே இல்லை. அது இதோ இங்கே அடுத்த அறையில் இருக்கிறது.” அங்கிள் டைட்டஸ் சொன்னார். - ”அது என்னுடைய தோட்டத்தில் இருக்குமானால்....” கிழவி சிடுசிடுத்தாள். “நிச்சயம் உன்னுடைய அறையில் இருக்க முடியாது.” - “மாறாக இருக்கிறதே! ஏனென்றால் அது இங்கே இருக்கும்போது தர்க்கரீதியாகப் பார்த்தால் உன்னிடம் இருக்க முடியாதே” என்றார் அங்கிள் டைட்டஸ். “நான் அதை கிள்ளிவிடப் போகிறேன்” என்று சொன்னாள் ஷீவார்ஸ்வாரிலிருக்கிற கிழவி. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு லயோலா திடீரென்று கத்தியது. “ஓவ்! ஊத்தைக் கிழவி. கிள்ளி வைக்கிறாள்.” - “என்ன? அவள் அங்கே கிள்ளுகிறாள் என்று நீ இங்கே அலறுகிறாய்?” என்று கேட்டார் அங்கிள் டைட்டஸ். “வாஸ்தவம். என்னுடைய வால் அங்கேயும் தலை இங்கேயும் இருக்கிறது” என்றது பாம்பு. “ஆனால் நான் புகைவண்டியில் வரும்போது என்னைத் தொடர்ந்து நீ ஓடி வந்து கொண்டிருந்தாயே?” என்று கேட்டார் அங்கிள் டைட்டஸ். பாம்பு அவரைத் திருத்தியது: “நான் வெறுமனே என்னைச் சுருளவிழ்த்துக் கொண்டிருந்தேன்.”
“அதுவும் உண்மைதான்.” அங்கிள் டைட்டஸ் முணுமுணுத்துக் கொண்டே ரிசீவரை மெதுவாக வைத்தார். “ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருக்கக்கூடிய ஒரே மிருகம் உலகத்திலேயே லயோலா ஒன்றுதான்.”
நன்றி கொல்லிப்பாவை தொகுப்பு இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக