09 ஜூலை, 2011

RettamalaiSrinivasan

"நான் செங்கற்பட்டு கிராமங்களிலொன்றில் 1860 ஆம் வருடம் பிறந்தேன். கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வாசித்த போது சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர்கள். ஜாதிக் கோட்பாடுகள் மிகக் கடினமாய் கவனிக்கப்பட்டன. பிள்ளைகளிடம் சிநேகிதத்தால் ஜாதி, குடும்பம், இருப்பிடம் முதலானவைகளை தெரிந்து கொண்டால் அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து, பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக் கொண்டிருந்து, பள்ளி ஆரம்ப மணி அடித்த பிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது என்னை மாணாக்கர்கள் ஒட்டாதபடி வீட்டுக்கு கடுகென நடந்து செல்வேன்"

1939-இல் இரட்டைமலை சீனிவாசன் தன் வரலாற்றை தானே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்”என்ற பெயரில் 30பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது மாணவர் பருவத்தில் நடந்த நிகழ்வுகளை குறித்து பதிவு செய்திருப்பதைத்தான் நீங்கள் வாசிக்கிறீர்கள். தீண்டாமை சமூகத்தில் எந்தளவுக்கு அக்காலத்தில் வீரியத்துடன் செயல்பட்டன என்பதற்கு இவை போன்ற நிகழ்வுகளின் மூலம் நாம் அவதானிக்க முடியும்.

இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 7ஆம் தேதியை அரசு விழாவாக அறிவித்து இருக்கின்றார். 152 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் அரசாங்கத்தின் மரியாதைக்குரியவராக போற்றப்படும் இரட்டைமலை சீனிவாசன் யார்? அவருடைய சமூக பங்களிப்பு என்ன என்று இன்றைய தலைமுறை இளைஞர்கள் யோசிக்கலாம். தனது வாழ்க்கை முழுவதும் உரிமைப் போராட்டத்திற்காகவும் இன விடுதலைக்காகவும் போராடி சாதித்த மனிதராய் இன்றும் பேசப்படும் இரட்டைமலை சீனிவாசன் குறித்து சிறு அறிமுகத்துடன் சாதனைகளின் பட்டியலுக்கு செல்வோம்.

இன்று திராவிடம், திராவிடர் குறித்து சமூகத்தளத்திலும் அரசியல்தளத்திலும் பெரியாரின் கருத்தியல் ஆழமாய் பதிவு செய்யப்பட்டதற்கு முன்பே பெரியாருக்கு முன்னோடிகளாய் இருந்த எம்.சி.ராஜா, அயோத்தி தாசர், இரட்டை மலை சீனிவாசன் உட்பட அவர்கள் நெறிப்படுத்திய திராவிட சொல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பொதுவாக பறையர், பள்ளர் போன்ற சாதி மக்களை ஈனப்பிறவிகளாய் பழிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினராய் வைக்கப்பட்டிருந்த நிலையில் திராவிடம் என்பதை மொழி, இனம் என்னும் தளத்தைக் கடந்து சாதிபேதமற்ற சமூகம் என்னும் நிலையில் பொருள்படுத்தி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயரை தாழத்தப்பட்ட மக்களின் முன்னோடிகளில் ஒருவரான எம்.சி.ராஜா என்பவரால் 20.01.1922இல் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு [அரசாயை எண்: 817] இரண்டு ஆண்களுக்கு பிறகும் ஆதிதிராவிடர் என்ற சொல் உபயோகப்படுத்தப்படாமல் பறையர், பள்ளர், பஞ்சமன் என்றே அரசுசார் நிறுவனங்களிலும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் பதிவு செய்யப்பட்டதை கண்டு இரட்டைமலை சீனிவாசன் கொதித்து 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார். அன்றைய முதல்வர் பனகல் அரசர்சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்கினார். அன்றிலிருந்து ஆதிதிராவிடர் என்று அரசு ஆணைகளில் கவனமாக கையாளப்பட்டன.

1930-இல் லண்டனில் நடைப்பெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கருடன் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய கோர்ட் பாய்கெட்டில் "ராவ்சாகிப் ரெட்டமலை சீனிவாசன் பறையன் தீண்டப்படாதவன்" என பொறிக்கப்பட்ட அடையாள அட்டையை அணிந்திருந்தார். அவ்வாக்கியம் குறித்து சபையில் சலசலப்பு. அப்போது 5 ஆவது மன்னரிடம் உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு மன்னரோடு கைகுலுக்கினார்கள். இரட்டைமலை சீனிவாசன் முன் மன்னர் கை குலுக்க வந்தபோது கை குலுக்க மறுத்து "நீங்கள் என்னை தொட்டால் தீட்டு உங்களுக்கு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை இருகிறதே! நான் எப்படி உங்களுக்கு கை கொடுக்க முடியும்?" என கேட்டார். நெகிழ்ந்து போன மன்னர் இரட்டைமலை சீனிவாசனை இறுக்கி தழுவி அணைத்துக் கொண்டார். rettaimalai_seenivasan

நீங்கள் தற்போதைய சமூக நிலவரங்களுடன் இச்சம்பவத்தை பார்க்கும் போது இரட்டைமலை சீனிவாசனின் செயல் மிகைப்படுத்தப்பட்டதோ என்னும் ஐயப்பாடு ஏற்படலாம். காலச் சூழல்களின் மாற்றங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே!

ஓர் உதாரணத்திற்கு இந்நிகழ்வை பாருங்கள்.

வழக்கறிஞர் கல்வி முடித்திருந்த இரட்டைமலை சீனிவாசன் 1893 ஆம் ஆண்டு அக்டோபரில் “பறையன்” இதழை வெளியிட்டார். பறையன் ஏடு தொடங்கப்பட்டு முதல் இதழ் வெளியிடப்பட்டவுடன் அதன் பிரதி ஒன்று மதிப்புரைக்காக “சுதேசமித்திரன்” பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அப்பத்திரிகையின் ஆசிரியராக சி.ஆர். நரசிம்மன் என்ற பார்ப்பனர் இருந்தார். அவரது மேசையின் மேல் மதிப்புரைக்காக அனுப்பப்பட்டிருந்த “பறையன்” பத்திரிகை இருந்தது. அதனை அவர் கையில் எடுத்துப் பார்க்காமல் தொட்டு எழுதும் கட்டைப் பேனாவை குச்சி போல பிடித்து அதனைக் கொண்டு அப்பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தார் என்றால் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்!


ஆதி திராவிடர்களிலேயே முதன்முதலாக கல்லூரி படிப்பை முடித்தவர் இரட்டைமலை சீனிவாசன் பலருக்கு அறியாத தகவலாக இருக்கலாம். கல்வியின் முக்கியத்துவத்தை சிறுவயதிலேயே அவர் உணர்ந்திருந்ததால்தான் தன் சமூக மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து செல்லும் இடங்களில் எல்லாம் பேச முடிந்தது. மேலும் தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகத்தை ஏற்படுத்தியதும் இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாய் இருக்கும்.

1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. இந்த முயற்சியில் ஈடுபட்டவரும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களே.

தனது இனத்தின் உரிமைளை பெற இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சமூக போராட்டங்கள் கொடுமையாக இருந்தது. தாழ்த்தப்பட்டவன் தெருவில் நடப்பதற்கு போராட்டம் பொது கிணறுகளில் தண்ணீர் எடுக்கப் போராட்டம் கல்வி கற்க பள்ளிகளுக்குள் அனுமதிகோரி போராட்டம் என அடிப்படை உரிமைகளுக்காக இனபோராளியாய் வாழ்ந்த இரட்டைமலை சீனிவாசனை இன்று சந்ததியினர், "தாத்தா இரட்டைமலை சீனிவாசன்" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

இன்று தாத்தாவின் பிறந்ததினம்.


நம் முன்னோடிகள் பெற்றுத்தந்த உரிமைகளை நினைவு கூறுவோம். இன்னமும் தொடரும் உரிமை மறுப்புக்கான போராட்டங்களில் நம் தோழமைக்கு தோள் கொடுப்போம்! வென்றிடுவோம் இனவிடுதலையை!!!

தமிழச்சி
07.07.2011

கருத்துகள் இல்லை: