தமிழகத்தில்
விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவன்
விசுவநாத நாயக்கன். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவன், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த
நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினான். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72
பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு
படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன்
பாளையக்காரன் எனப்பட்டான்.
கடமையும், அதிகாரமும்
மண்டல அரசு, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைப் பாளையக்காரர்களின் நிர்வாகப் பொறுப்பில் விடும். இதற்குப் பதிலாகப் பாளையக்காரர்கள் அரசின் பாதுகாப்புக்காகத் தேவையான இராணுவ வளங்களைக் கொடுக்கவேண்டும். பாளையப்பட்டுகளுக்குள் அடங்கும் நிலங்களுள் ஒருபகுதியைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளும் பாளையக்காரர்கள், மிகுதியை, இராணுவ வளங்களைத் திரட்ட உதவக்கூடிய செல்வாக்குள்ள குடிமக்களில் சிலருக்குப் பிரித்து வழங்கினர்.
பாளையக்காரர்களின் நிர்வாகம்
தங்களுடைய நிர்வாகத்துக்குள் அடங்கிய பகுதியில் ஓரளவு சுயமான அதிகாரத்துடன்கூடிய ஆட்சியதிகாரம் பாளையக்காரர்களுக்கு இருந்தது. பாளையப்பட்டுகளுக்கெனத் தனியான நிர்வாக அமைப்பும் இருந்தது. இந்த அமைப்பிலே பாளையக்காரர்களின் கீழ் அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் செயற்படக்கூடிய
தளவாய் ஒருவரும், பாளையப்பட்டுக்கு மேலுள்ள அரசு தொடர்பான விடயங்களைக் கவனிக்கத்
தானாபதி ஒருவரும் இருந்தனர்.
உரிமைகள்
பாளையங்களின் பாதுகாப்பு,
நிர்வாகம், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு,
வரி வசூலிப்பு போன்ற விடயங்களில் பாளையக்காரர்களுக்கு உரிமைகள் இருந்தன. படை திரட்டி அவற்றைப் பாராமரிக்கவும், பாளயத்தின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளைக் கட்டிக்கொள்ளவும், நீதி விசாரணைகளை நடத்தித் தீர்ப்பு மற்றும் தண்டனைகள் வழங்கவும் பாளையக்காரர் அதிகாரம் பெற்றிருந்தனர். தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்களிடம் வரி அறவிடும் உரிமை இவர்களுக்கு இருந்தது. இவ்வாறு அறவிடப்படும் வரி, மன்னருக்கான கொடுப்பனவு, பாளையக்காரர்களின் சொந்தச் செலவு மற்றும் பாளையத்து நிர்வாகச் செலவு என்பவற்றுக்காகச் சமமாகப் பங்கிடப்பட்டது.
பாளையக்காரரின் பங்களிப்புகள்
முழு நாட்டின் பாதுகாப்புக்காகவும், வலிமைப் பெருக்கத்துக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும், நாட்டின் மன்னர்கள் ஈடுபடும் போர்களில் உதவியாக நின்று போர்புரிந்து வெற்றி தோல்விகளைப் பாளையக்காரர்கள் தீர்மானித்துள்ளார்கள். அரசுரிமைப் போட்டி, உள்நாட்டுக் கலகங்கள் போன்றவற்றிலும் பாளையக்காரர்களின் பங்கு பல சந்தர்ப்பங்களில் முக்கியமானதாக இருந்ததுண்டு. பிற்காலங்களில் மன்னர்கள் அந்நியர் ஆதிக்கங்களுக்குப் பணிந்த பின்னரும், பாளையக்காரர்கள் அவர்களை எதிர்த்து நின்ற வரலாறுகளும் உண்டு.
பாளையங்கள்
72 பாளையங்களின் பெயர்ப்பட்டியல்.
- அம்மைய நாயக்கனூர்
- அக்கிப்பட்டி
- அழகாபுரி
- ஆய்க்குடி
- ஆத்தங்கரை
- இளசை
- இரசக்கயனூர்
- இலக்கயனூர்
- இடையக் கோட்டை
- இராமகரி
- உதயப்பனூர்
- ஊற்றுமலை
- ஊர்க்காடு
- எட்டையாபுரம்
- ஏழுமலை
- ஏழாயிரம் பண்ணை
- கடலூர்
- கல் போது
- கன்னி வாடி
- கம்பம்
- கண்டமநாயக்கனூர்
- சொக்கம்பட்டி
- தலைவன்கோட்டை
- தேவாரம்
- தொட்டப்பநாயக்கனூர்
- தோகை மலை
- கும்பிச்சி நாயக்கனூர்
- படமாத்தூர்
- பாஞ்சாலங்குறிச்சி - வரலாற்றுப் புகழ் பெற்றது
- பாவாலி
- பெரியகுளம்
- போடி நாயக்கனூர்
- ரோசல் பட்டி
- வடகரை
- வாராப்பூர்
- விருப்பாட்சி - வரலாற்றுப் புகழ் பெற்றது
- கவுண்டன் பட்டி
- கடம்பூர்
- காம நாயக்கனூர்
- காடல் குடி
- காசையுர்
- குமார வாடி
- குளத்தூர்
- குருவிகுளம்
- கூடலூர்
- கொல்லப்பட்டி
- கொல்லங்கொண்டம்
- கோலார் பட்டி
- கோட்டையூர்
- கோம்பை
- சந்தையுர்
- சக்கந்தி
- சமுத்தூர்
- சேத்தூர்
- சிவகிரி
- சிங்கம்பட்டி
- சுரண்டை
- வெள்ளிக்குன்றம்
- விரமலை
- நத்தம்
- நடுவக்குறிச்சி
- நாகலாபுரம்
- நிலக்கோட்டை
- நெற்கட்டும் செவல் - வரலாற்றுப் புகழ் பெற்றது
- மணியாச்சி
- மருங்காபுரி
- மன்னார் கோட்டை
- மலைப்பட்டி
- மருதவானையுர்
- முதுவார் பட்டி
- முல்லையுர்
- மேல் மாந்தை
புகழ் பெற்ற பாளையக்காரர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக