29 ஆகஸ்ட், 2011

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்… ஆரம்பம்!!

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்... ஆரம்பம்!!
ஈழத்தின் நினைவுகள் – பாகம் -8
vote-012காந்தி தேசத்தின் காவலர்கள்  ஈழத்தமிழர்களை சிங்கள பேரினவாதத்தின் வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற கருணைக்கொலை செய்திருந்தால் கூட நன்மைக்கே என்று நாங்கள் சந்தோசமாய் செத்திருப்போம். காலங்காலமாய் எங்களை  நம்பவைத்து  முதுகில் குத்தியே பழக்கப்பட்ட இந்தியா, ஈழத்தமிழனுக்கென்றே ஓர் கொம்பு சீவியது. அதுதான் இந்திய அமைதிப்படை. இந்தியாவில் காந்தியை பின்பற்றுபவர்களும் சரி, இலங்கையில் புத்தரின் பெயரால் ஆட்சி செய்பவர்களும் சரி இருசாராருமே எங்களின் இரத்தத்திலும், கண்ணீரிலும்தான் அதிக சந்தோசம் காண்பார்கள் போலும்.
ஏற்கனவே இலங்கை ராணுவத்தின் வன்கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த எங்களை, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்து ஈழத்தில் அப்பாவித் தமிழர்களான எங்கள் மீது போர்தொடுத்த கொடுமையை நாங்கள் சொல்லியழுதாலும் தீராது. இந்திய அமைதிப்படையை ஆங்கிலத்தில் Indian Peace Keeping Force-IPKF என்று கொண்டாலும், ஈழத்தமிழர்கள் சொல்வழக்கில் அது Indian People Killing Force என்றே சொல்லப்படுகிறது. அதாவது, ஈழத்தமிழர்களை கொல்வதற்கென்றே உருவாக்கப்பட்ட படை என்றுதான் சொல்வார்கள்.
எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சிங்களராணுவமும், புதிதாக அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவமும் சரி ஒரே மாதிரித்தான் தெரிந்தார்கள். இந்திய அமைதிப்படை என்னும் போது, அது ஏனோ எங்களுக்கு அதிகமாகவே வலிக்கத்தான் செய்கிறது. ஒருவேளை அது தமிழ்நாடும், ஆறரை கோடி தமிழர்களும் இருந்தும் எங்களுக்கு இந்த அவலங்கள் நிகழ்ந்ததே என்ற ஈழத்தமிழர்களின் ஆதங்கமாக இருக்கலாம்.
ஏற்கனவே ஆண்டாண்டு காலமாய் ராணுவ அடக்குமுறையினாலும், ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற ராணுவ நடவடிக்கையாலும் சோர்ந்து போயிருந்த எங்களுக்கு இந்திய ராணுவத்தின் வருகை ஓர் தற்காலிக விடுதலையை தரும் என்றுதான் நம்பியிருந்தோம். வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்கு போகும் போது இருந்த வலி திரும்பி வரும்போது ஏனோ அதிகமாகத் தெரியவில்லை. ஆனாலும், இதுவும் ராணுவம் என்கிற பயத்தை மட்டும் எங்களின் மனங்களிலிருந்து முற்றுமுழுதாக அகற்ற முடியவில்லை.
வழி நெடுக இந்திய ராணுவமும் எங்களை கொடுமைப்படுத்துமா என்றெல்லாம் கேள்விகேட்டே என் சித்தப்பாவின் உயிரை நான் எடுத்துவிட்டேன். அதற்கு அவர் அப்போது சொன்ன பதில்தான் அந்த வயதில் என்னை வாய்பிளந்து கேட்கவைத்தது. இந்தியா ராணுவத்தை அனுப்பியது ஈழத்தமிழர்கள் பாலுள்ள அக்கறையால் அல்ல. அது அவர்களின் தேசிய நலன் சார்ந்தது என்றார். எனக்கு அது அப்போது புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. மாணவப்பருவத்தில் படிப்பு, நட்பின் அரட்டைகள், இனிமையான எதிர்காலக் கனவுகள் இப்படித்தானே அநேகமானவர்களுக்கு வாழப்பிடிக்கும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? போர் பூமியில் மாணவப்பருவத்தின் அத்தனை சந்தோசங்களையும் இழந்த எனக்கு அது ஏனோ ஓர் வடுவாக என்மனதில் இன்றுவரை பதிந்துதான் விட்டது.
சரி, இனிமேலாவது நாங்கள் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போகலாம், எங்கள் சொந்தமண்ணில் எங்களுக்கு பிடித்த இடங்களில் அடையாள அட்டை இல்லாமலே சுதந்திரமாய் நடமாடலாம், குண்டுச்சத்தங்கள் இல்லாமல் தூங்கலாம், குறிப்பாக பதுங்குகுழி வாழ்க்கையிலிருந்து விடுதலை, அடிக்கடி தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்த்து எப்போது தலை மீது குண்டுவிழும் என்று பயப்படத்தேவையில்லை, உலகில் பெரும்பான்மையான மக்களைப்போல் நாங்களும் ஓர் இயல்பு வாழ்க்கை வாழலாம் என்று, காந்திதேசத்தின் மகாத்மா எப்படி எதிர்கால இந்தியாவை கனவு கண்டாரோ அப்படியொரு வாழ்க்கையை நாங்கள் சொற்ப காலமெனும் ஈழத்தில் வாழப்போகிறோம் என்ற சந்தோசக் கற்பனையுடன்தான் வடமராட்சிக்கு திரும்பினேன். என் அத்தனை சந்தோசமும் அமைதிப்படை என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடங்கியிருந்தது.
அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் ஊர் திரும்ப ஆரம்பித்திருந்தார்கள். வழிநெடுக பார்த்தவர்களிடமெல்லாம் இந்தியராணுவம் நல்லவிதமாக நடந்துகொள்கிறார்களா என்றெல்லாம் விசாரித்தபடியே ஊர்வந்து சேர்ந்தோம். எல்லோரும் சொன்னது, “ஓம், ஓம் (ஆம்) ஒரு பிரச்சனையும் இல்லை. அவங்கள் நல்லவிதமாகத்தான் ஆக்களை நடத்துறாங்கள். நீங்கள் பயப்படாமல் போங்கோ” என்பதுதான். சிங்கள பேரினவாதத்தின் ராணுவ கைக்கூலிகளிடம்  மிதிபட்ட எங்களை யாராவது மனிதர்களாக மதித்தால் நிச்சயமாக கண்கலங்கி விடுவோம். ஆரம்பத்தில் இந்தியராணுவம் அப்படித்தான் எங்களை கண்கலங்க வைத்தார்கள். எங்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதுதானே எங்கள் அறுபது வருட கோரிக்கை.
எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு ஈழத்தில் அகாலமரணமான எங்களின் உறவுகளுக்காய் எந்த ராணுவ இடையூறுமின்றி, தலையில் குண்டு விழும் என்ற பயமின்றி  வாய்விட்டு அழமுடிந்தது இந்த நாட்களில்தான். இதற்காக இந்திய ராணுவத்திற்கு நாங்கள் நன்றி சொல்லியே தீரவேண்டும். ஆனால், பிற்காலத்தில் எங்களின் கண்ணீரின் காரணகர்த்தாக்களாகவும் இவர்களே இருந்தார்கள்  என்பது சோகத்திலும் சோகமான விடயம். ஊருக்கு வந்து எங்கள் வீட்டைப் பார்த்தபோது எங்களின் உரிமைகளைப் போலவே உடமைகளும் சிதைக்கப்பட்டும், சிதறடிக்கப்பட்டும் கிடந்தன.  ஊருக்கு வந்து சேர்ந்ததும் சிலகாலம் செத்தவீடு, துக்கவிசாரிப்புகள், உடைமைகளின் இழப்புகள், உடைந்த எங்களின் வீடுகளை சரிப்பண்ணி ஏதோ வீடு என்ற ஓர் கட்டிடத்தை உருவாக்குவது இப்படித்தான் நகர்ந்தது.
அது தவிர முகாமிலிருந்து முன்னேறிய சிங்கள ராணுவத்தால் ஆங்காங்கே புதைக்கப்பட்ட Land Mine என்று சொல்லப்படும் கண்ணிவெடிகளால் காலை இழந்த ஆடு, மாடு, மனிதர்கள் பற்றிய சோகம் ஒருபுறமும், தெருவில் இறங்கி நடந்தால் காலை இழந்துவிடுவோமோ என்ற பயமும் இருக்கத்தான் செய்தது. பேச்சுவழக்கில் கண்ணிவெடி, ”மிதிவெடி” என்றே அழைக்கப்படுகிறது.  அப்படி கண்ணிவெடியில் மிதித்தால் என்ன செய்யவேண்டும் என்றும் பொதுவாகவே ஈழத்தமிழர்கள் அறிந்துதான் இருந்தார்கள். இந்த மிதிவெடிகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
போர் நடக்கும் இடங்களில் இவை பெரும்பாலும் விதைக்கப்படுகின்றன. இதனால் பலர் கால்களை இழந்து அங்கவீனர்கள் ஆகிறார்கள். ஒரு காலத்தில் இதைப் பற்றி விளம்பரப் படுத்த ஓர் உலகப்பிரபலம் வேண்டுமென்று யார் நினைத்தார்களோ, மறைந்த இங்கிலாந்தின் இளவரசி டயானாவை வைத்து பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அவரால் கண்ணிவெடியின் அவலத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்ட ஜெனீவாவில் ஐ. நா. சபையின் முன் மூன்றரை கால் நாற்காலி ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. ஈழத்திலும் இந்த கண்ணிவெடியால் பலர் கால்களை இழந்திருக்கிறார்கள்.
சரி, எதற்கு இப்போது இதைப்பற்றி பேசுகிறேன் என்றால் இன்று வன்னியில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியாது என்று சிங்கள அரசு சொல்லும் நொண்டிக் காரணங்களில் ஒன்று இந்த மிதிவெடிகள்தான். ஐ. நாவும் தங்களிடம் அதை அகற்றும் பணிக்கு தர பணம் இல்லை என்கிறது. சிங்கள அரசும் யாரும் பணம் தரமாட்டார்களாம் என்று மூக்கால் அழுகிறது. அட, இவர்கள் சொல்லுமளவிற்கு அப்படியேதும் மிதிவெடிகள் இருந்தால்தானே யாராவது அதை அகற்ற முடியும். இப்படித்தான், வன்னியில் இல்லாத கண்ணிவெடியை இந்தியாவின் ஏறக்குறைய இரண்டாயிரம் ராணுவம் இன்றுவரை அகற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லப்படுகிறது.
எப்படியோ, இந்திய ராணுவம் புலிகளை அழிக்கவேண்டும் என்று வந்த நோக்கத்தின் முதல் கட்டவேலையை சுபமே தொடங்கினார்கள்.  இந்தியராணுவம் தெருவில் போவோர், வருவோரையெல்லாம் மறித்து ஜூஸ் கொடுத்தார்கள் எங்கள் ஊரில். “நீங்கள் ஒப்பரேஷன் லிபரேஷனால் நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். உங்களுக்கு உதவத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். என்ன உதவி வேண்டுமானாலும் எங்களின் முகாமில் வந்து தெரிவியுங்கள்” என்றெல்லாம் ஆரம்பத்தில் தேனொழுகப் பேசினார்கள். சிங்கள ராணுவம் இதையெல்லாம் சொல்லியிருந்தால் நாங்கள் நம்பியிருக்க மாட்டோம். இந்திய ராணுவம் சொன்ன போது அதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.
அப்படி முகாமில் சென்று இவர்களோடு பேசியவர்களிடம் அவர்களின் அவலவாழ்வைப் பற்றி கேட்டதை விட புலிகளைப் பற்றித்தான் அதிகமாக இந்திய ராணுவம் கேட்டதாகச் சொன்னார்கள். வல்வெட்டித்துறையை சுற்றியிருந்த ஊர்களான பொலிகண்டி, உடுப்பிட்டி என்ற ஊர்களிலும் இந்திய ராணுவ முகாம்கள் இருந்தன. இவையிரண்டும் முற்றுமுழுதாக இந்தியராணுவம் மட்டுமே இருந்த முகாம்கள். அமைதிப்படைக்கு இந்த சிறிய ஊர்களில் இத்தனை  ராணுவமுகாம்கள் தேவையா என்ற கேள்விக்கெல்லாம் பதில் இந்திய மேலாதிக்க அரசியலைப் புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக புரியும்.
பொலிகண்டி முகாம் பொதுமக்களின் வீடுகளை மட்டுமே முகாமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டு உரிமையாளர்கள் சிலர் போய் நியாயம் கேட்டபோது இந்தியராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடுப்பிட்டி இராணுவமுகாம் பெண்கள் பாடசாலை ஒன்றை இராணுவமுகாமாக மாற்றி விட்டு, ஒருபக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் மற்றபக்கம் பாடசாலையை நடத்தும் படியும் சொன்னார்கள். அப்படித்தான் சிலகாலம் நடந்தது. ஆனால், அங்கு கல்வி கற்க வந்த மாணவிகளிடம் இவர்கள் தகாத முறையில் நடக்க முற்பட்டதாகவும், மாணவிகளை கிண்டல் செய்வதாகவும் நிறையவே கேள்விப்பட்டேன். பெற்றோர் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவே பயந்தார்கள். பின்னாட்களில் அது முழுவதுமாக இந்திய ராணுவமுகாமாகவே மாற்றப்பட்டுவிட்டது.
வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் சிங்கள ராணுவமும், இந்திய ராணுவமும் சேர்ந்தே இருந்தார்கள். அதனால்தான் இருவருமே எங்களின் அன்பைப் பெறுவதில் போட்டி போட்டார்கள்.  ஒரு கட்டத்தில் எங்கள் மீது யார் அதிகம் அன்பாய் இருக்கிறார்கள் என்பதில் சிங்கள ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே போட்டியே வந்து காமெடி கலாட்டாக்களும் இடம்பெற்றது. இந்திய ராணுவம் ஜூஸ் கொடுத்தால், சிங்கள ராணுவம் ஜூசோடு ஏதாவது சாப்பாடும் கொடுத்தார்கள். முதன்முதலாக நாங்களும், சிங்கள சமூகமும் சகோதர உறவுகள் என்றார்கள். இந்திய ராணுவம் மூன்றாம் மனிதர்கள் என்றார்கள். இந்திய ராணுவத்தோடு பேசாதீர்கள், உங்களை எப்போதுமே நாங்கள்தான் காப்பாற்றுவோம் (அதன் பொருள் உங்களை நாங்கள் மட்டும்தான் அழிக்கலாம் என்பதுதான்)  என்றெல்லாம் அன்புக்கட்டளை போட்டார்கள்.
நாங்கள் தான் பலியாடுகள் ஆயிற்றே. எந்தப்பக்கம் தலையை ஆட்டினாலும் தலையை வெட்டுவார்கள். அதனால் தமிழ் சினிமா வடிவேல் கதாபாத்திரங்கள்  மாதிரி “ஆஹா” என்று முழித்து, பொதுவாக சிரித்து, பொதுவாக தலையை ஆட்டி பரிதாபத்திற்குரிய பிறவிகளாய் ஆனோம்.  ஆனால், இன்று சிங்கள சமூகமும் இந்தியாவும் சகோதர உறவுகள் போலவும், ஈழத்தமிழர்கள் மூன்றாம் தர பிரஜைகளாகவும் புறக்கணிக்கப்பட்டு விட்டோம். அதனை அப்படியே இவர்கள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை.
அமைதிப்படை என்றால் போர் புரியும் இருதரப்பையும் போர் செய்யாமல் கண்காணிப்பதுதானே வேலை. இப்படித்தான் நாங்கள் ஆரம்பத்தில் நம்பினோம். இவர்கள் அமைதிப்படைக்குரிய ஐ. நா மற்றும் சர்வதேச விதிமுறைகளை மதித்து ஈழத்தில் அமைதியை நிலைநாட்டுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், இந்திய அமைதிப்படை என்ன செய்தது? போரை தடுக்க வந்தவர்களே எங்கள் மீது போர் தொடுத்தார்கள். தற்பாதுகாப்புக்கு மட்டுமே ஆயுதம் தரிக்கவேண்டியவர்கள் அத்தனை போராயுதங்களையும் எங்கள் மீது ஏவிவிடத் தவறவில்லை. யாழ்ப்பாணத்தில் விமானம் மூலம் குண்டு கூடப் போட்டார்கள். அடிக்கடி ரோந்து போகிறோம் பேர்வழி என்று வீதி வீதியாய் ஊவலம் போய் எங்கள் வயிற்றில் பீதியை கிளப்பினார்கள்.
தங்கள் பாதுகாப்புக்காக எங்களை கைதிகள் போல் பிடித்து வைத்தார்கள். ஒரு தடவையல்ல பலதடவை இப்படி நான் கைதியாக்கப்பட்டேன். கேட்பார் கேள்வியின்றி வீடு புகுந்து நேரம் காலமில்லாமல் வீட்டிலிருந்த என்னையும் என் தாயாரையும் அதேபோல் வீதியில் போனவர்களையும் இழுத்து வந்து ஓர் இடத்தில் கூட்டமாக இருத்தி வைப்பார்கள். பெரும்பாலும் ஆண்களைத்தான் கைது செய்தார்கள். எங்கள் வீட்டில் ஆண்கள் இல்லாததால் என் தாயார், தங்கை, நான் கைதிகளானோம்.
பெரும்பாலும் அன்றாடம் வேலைக்குப் போகிறவர்கள், பால் மற்றும் மரக்கறி விற்பவர்கள், வயதானவர்கள் இப்படித்தான் இவர்களிடம் மாட்டுவார்கள். இந்த வழியால் புலி போனதா என்று கேட்பார்கள். வீட்டிற்குள் இருக்கும் எனக்கு வீதியில் போனது புலியா  அல்லது பிசாசா என்று எப்படித்தெரியும்? இப்படித்தான் பதில் சொல்ல நினைப்பேன். ஆனால், என்னை பிறகு அடித்து விடுவார்கள் என்ற பயத்தினால் அடக்க ஒடுக்கமாக பதில் சொன்னேன். இளைஞர்கள் என்றால் அடித்துத்தான் கேள்வி கேட்டார்கள்.
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கானால் இரத்தம் கொதிக்கும். யாருடைய மண்ணில் வந்து யார் யாரை அதிகாரம் செய்வது? இப்படி அன்று  மணிக்கணக்கில் வீதியில் ஓரத்தில் உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை சோதனை போடுகிறோம் என்று வரம்பு மீறிவிடுவார்களா என்று பயந்துகொண்டே ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்தேன். இந்திய ராணுவம் என்னிடம் வரம்பு மீறி நடந்த சம்பவங்களும் அடிக்கடி என் நினைவுகளில் வந்து வலியை கொடுக்காமல் இல்லை. ஆனாலும், என்னுடன் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே என்ற தைரியம் வரும். இவர்கள் அங்கெ இங்கே பராக்கு பார்க்கும் நேரம், ஏன் எங்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சன்னக்குரலில் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். சத்தமாய் ஏதாவது பேசினால் என்ன பேசினீர்கள் என்று ஒரே போடாய் போட்டுவிடுவார்கள்.
பசி, தாகம், இயற்கை உபாதை என்று எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்தியராணுவ படை எங்களை போ என்று சொல்லும் வரை காத்திருக்க வேண்டும். சொந்த மண்ணிலேயே இன்னோர் நாட்டு ராணுவத்திடம் அடிமையாய் போன  அவலம் மனதில் எரிச்சலையும் கோபத்தையும்தான் கிளப்பியது. ஆனால் என்ன செய்ய முடியும். கைதிகளாய், கையாலாகாதவராய் அமைதியாய் இருந்தோம். மனம் வலித்தது. ஆனாலும், கண்ணீர் விடக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன்.
இந்தியராணுவம் சம்பந்தமான என் அனுபவத்தில் ஓர் சிறிய ஆறுதலான சம்பவமும் இருக்கத்தான் செய்தது. இந்திய அமைதிப்படையில் (?) தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஒருவர் இருந்தார். என்ன இது தமிழ் பெண்களையும் வீதியில் கைதிகள் போல் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம் அல்லது இந்தியராணுவத்தின் பெயர் கெடப்போகிறதே என்ற கவலை எதுவோ ஒன்று அவரை எங்களுக்கு தன்னாலான உதவியை செய்யவேண்டும் என்று தூண்டியிருக்கலாம். ஒருநாள் வழக்கம் போல் வீதியில் மற்றவர்களுடன் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தேன். நாங்கள் மட்டுமே பெண்கள். இவர் தமிழர் என்று தெரிந்ததும் நான் இவரிடம் கெஞ்சுவது போல் கேட்டேன். எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று.
இந்த தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் தலை மீது சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் (சீக்கியரோ?) தலைப்பாகை கட்டிய, சீருடையில் ஏதோ பட்டைகள் உள்ள ஓர் அதிகாரியிடம் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார். இவர் பதுங்கிப் பதுங்கிப் பேசுவதும், அவர் கண்கள் சிவக்க, உரத்த குரலில் கடித்துக் குதறுவது போல் பதில் சொல்வதும் எனக்கு ஏனோ ஓர் தர்மசங்கடத்தை இவருக்கு உண்டாகி விட்டோமோ என்று தோன்றியது. அந்த அதிகாரியின் பேச்சும், அவர் நின்ற தோரணையும் அவ்வளவு பயத்தைக் கொடுத்தது எனக்கு. ஒருவாறாக திரும்பி வந்தவர் சொன்னார் “சரிம்மா, என்னோட வாங்க  உங்களை உங்க வீட்ல விடுறேன்” என்றார். நான் ஏதோ பெரிய மேதாவி போல் முந்திக்கொண்டு “உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்களே போய்க்கறோம்” என்றேன்.
அவர் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு சொன்னார், “நீங்கள் தனியே போவதை இவர்கள் பார்த்தால் மறுபடியும் பிடித்து உட்கார்த்தி வைப்பார்கள் அதனால் தான் சொல்கிறேன் என்னோடு வாருங்கள் என்று”. அவர் சொல்வது சரியென்று தோன்றவே அவரோடு நடந்தோம். ஒரு இரண்டு நிமிட நடை என் வீட்டிற்கு. அப்படி தான் ஓர் நாள் என் மனதில் தோன்றியதை இவரிடம் கேட்டேன். “நீங்கள் எப்படி இந்த ராணுவத்தில்….” என்று. ஏனென்றால் என் கண்களுக்கு அவர் மிக நல்லவராகவே தோன்றினார். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், திரும்பி என்னை ஒருகணம் பார்த்துவிட்டு மறுபடியும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். ஐயோ அந்த முகத்தில் தெரிந்த வலியை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.
அந்த முகத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வலியைப் பார்த்தேன், உணர்ந்தேன். உண்மையில் ஈழத்தில் அமைதிதான் காக்கப்போகிறோம், ஈழத்தமிழர்களுக்கு உதவப்போகிறோம் என்று நம்பி வந்திருப்பார் போலும். ஆனால் நடந்தது தலைகீழாய் இருக்க, அந்த வலி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. பேச்சை திசை திருப்ப “உங்க பேர் என்ன”? என்றேன். நான் இப்படித்தான் சிலசமயம் மனதில் படுவதை படக்கென்று யாரிடமாவது கேட்டுவிடும் பழக்கம் உள்ளவள். அவர் பெயர் சொல்லவில்லை. சரி எந்த ஊர் என்றாவது சொல்லுங்கள் என்றேன். தான் மானாமதுரையை சேர்ந்தவர் என்றார். ஒரு சில சமயங்களில் என் தங்கையையும் கைதியாக்கிய சந்தர்ப்பங்களில் இவர் தான் அவள் சிறுமி என்பதால் என் வீட்டிற்கு முன்னாலுள்ள சிறிய தாயார் வீட்டிற்கு போகச்சொல்லுவார். நானும் போகலாமா என்றால், உங்களை போக விடமாட்டார்கள் என்றார். சரி, எவ்வளவு தான் அவர் எனக்கு உதவ முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.
அந்த சகோதரர்தான் சில விடயங்களை கற்றுத்தந்தார். ராணுவம் வருவது தெரிந்தால் வீட்டிற்குள் இருக்காதீர்கள். தெருவில் வந்து நில்லுங்கள். வீட்டின் கதவுகளை மூடி வைத்தால் சந்தேகப்படுவார்கள் அதனால் திறந்தே வைத்திருங்கள், ராணுவம் ரோந்து வரும் போது முடியுமான வரைக்கும் அதிகாரியின் அருகிலேயே நில்லுங்கள் அப்படி என்றால் அவர்கள் உங்களுடன் தகாத முறையில் நடக்க பயப்படுவார்கள் என்று. ஆனால், அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அவரை சிறிது காலத்திற்கு பின் நான் ரோந்து வந்த ராணுவத்துடன் பார்க்கவில்லை. இந்தியராணுவம் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இவரின் நினைவும் மறக்காமல் வரும் எனக்கு. நன்றிகள் சகோதரரே.
அன்று முதல் இன்றுவரை எல்லா அரசியல் மற்றும் ராணுவ விமர்சகர்களின் விமர்சனம் அல்லது ஒப்பீடு “ஈழம் இந்தியாவின் வியட்நாம்” என்பதுதான். அவர்கள் இந்தியா அல்லது இந்திய அமைதிப்படை (என்னைப்பொறுத்தவரை அது இந்திய ராணுவம்) ஈழத்தில் ஏன் தோற்றது என்று அதற்குரிய காரணத்தை அடுக்குகிறார்கள். இந்தியா தன் முழுப்பலத்தையும் அதாவது படை மற்றும் ஆயுத பலத்தை பிரயோகிக்கவில்லை என்று இவர்கள் சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே எரிச்சல்தான் வருகிறது. ஐயா, அறிவாளிகளே இந்திய ராணுவம் வந்தது “அமைதிப்படை” என்ற பெயரில். பிறகேன் நீங்கள் உங்கள் பலத்தை எங்கள் மீது மொத்தமாக பிரயோகிக்க முடியவில்லை என்று மூக்கால் அழுகிறீர்கள்? நீங்கள் கொஞ்சமாக பிரயோகித்த பலத்துக்கே நாங்கள் ஏறக்குறைய மூவாயிரம் அப்பாவிகளை இழந்து விட்டோம். இதில் முழுவதுமாக நீங்கள் படைப்பலத்தை காட்டினால் நாங்கள் என்னாகியிருப்போம்?
இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றால் அதன் “மை லாய்” (Mai Lai)  கிராமங்களை பற்றியும் பேசுங்களேன். இந்தியாவின் வியட்நாமில் எங்கள் ஊர்கள் மை லாய் கிராமங்களாய் பலிகொள்ளப்பட்டதை, அப்பாவிகளின் உயிர்கள் காவு வாங்கப்பட்டதை இவர்கள் பேசமாட்டார்கள். வினவு எனக்கு கொடுத்த இந்த அருமையான சந்தர்ப்பத்தில் நானாவது அதன் வலிகளை நினைவு கூரலாம் என்று நினைக்கிறேன்.
தொடரும்

கருத்துகள் இல்லை: