சினிமா தொழில்கள்:
சினிமா விநியோகம் ஒரு கடல் மாதிரிதான்.
மிக மிக விளக்கமாக சொல்ல வேண்டிய ஒரு தொழில் அது. ஆனாலும் முடிந்தவரையில்
அதை சுருக்கமாக கொடுத்துள்ளேன். படித்துவிட்டு கமென்டில் உங்கள்
கருத்துக்களை எழுதுங்கள்.
ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்
தயாரிப்பாளர் படத்தை தானே எல்லா தியேட்டர்களுக்கும் விநியோகம் செய்வது
என்பது சாதரண விஷயமல்ல. அதனால் படத்தை ஒரு தியேட்டரில்
விநியோகஸ்தர்களுக்குத் திரையிடுவதற்காக, ஒரு நாளை குறித்து
விநியோகஸ்தர்களுக்கு அழைப்பு விடுப்பார்.
திரைப்பட விநியோகஸ்தர்களும் வருவார்கள்.
படத்தைப் பார்ப்பார்கள். தங்கள் பகுதி தியேட்டரில் அந்தப் படத்தைத்
திரையிட விரும்பும் விநியோகஸ்தர் தயாரிப்பாளரிடம் பேசுவார்.
குறிப்பிட்ட விலைக்கு அந்தப் பகுதிக்கு
அந்தப் படம் விற்கப்படும். விலை அந்தப் படத்தை விநியோகஸ்தர் திரையிடும்
பகுதியில் படம் எப்படி ஓடும் என்பதைப் பொறுத்து அமையும். படம் நான்றாக
ஓடினால் விநியோகஸ்தருக்கு கொண்டாட்டம்தான்.
சினிமா விநியோகம் தொடர்பான பல்வேறு
தகவல்களை தொழில்கள் வாசகர்களுக்காக தருகிறார், சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர் சங்க செயலாளர் கலைப்புலி சேகரன்.
“தயாரிப்பாளரிடமிருந்து படத்தை வாங்கி
தியேட்டரில் ஓட்டுவதே விநியோகஸ்தரின் பணியாகும். விநியோகஸ்தர்கள் பொதுவாக
மூன்று முறைகளில் தயாரிப்பாளரிடமிருந்து படத்தை வாங்குவார்கள்.
டிஸ்ட்ரிபியூசன், எம்.ஜி, அவுட்ரேட்.
டிஸ்ட்ரிபியூசன் முறையில் படத்தை
தயாரிப்பாளரிடம் இருந்து விநியோகஸ்தர் வாங்கும்போது படத்தின் மொத்த லாபமோ
நஷ்டமோ தயாரிப்பாளரைச் சார்ந்தது.
விநியோகஸ்தர் படத்திற்கு டெபாசிட் பணத்தை
தயாரிப்பாளரிடம் கொடுக்க வேண்டும். 20% பணத்தை படம் ஓட்டுவதற்கு கமிஷனாக
ஓட்டிவரும் தொகையில் விநியோகஸ்தர்கள் எடுத்துக்கொள்வார்கள். அது
மட்டுமின்றி படத்தை விற்கும்போது அந்தத் தொகையில் சேல்ஸ் கமிஷனாக 7%
எடுத்துக் கொள்வார்கள். படத்திற்கு விளம்பரம் செய்யும் தொகையையும் இதில்
சேர்த்துக் கொள்வார்கள்.
அடுத்ததாக, எம்.ஜி. இதன் மூலம்
தயாரிப்பாளருக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு. அதாவது, விநியோகஸ்தர் ஒரு
தொகையை தயாரிப்பளரிடம் கொடுத்துவிட்டு படப்பெட்டியை வாங்குவார். படம்
தோல்வியைத் தழுவினால், நஷ்டம் விநியோகஸ்தருக்குத்தான். டெபாசிட் பணம்
திரும்பக் கிடக்காது. படம் வெற்றி பெறும்போது, கிடைக்கும் தொகையை
தயாரிப்பாளர் விநியோகஸ்தர் இருவரும் பிரித்துக் கொள்வார்கள்.
உதாரணமாக ஒரு படத்தை 50 லட்சம் ரூபாய்
கட்டி விநியோகஸ்தர், தயாரிப்பாளரிடமிருந்து வாங்குவார். படம்
தோல்வியடைந்துவிட்டால், அதாவது படம் மொத்தம் 10 லட்ச ரூபாய் மட்டுமே வசூல்
செய்திருந்தால், 40 லட்சரூபாய் விநியோகஸ்தருக்கு நஷ்டம்.
படம் நன்றாக ஓடி 50 லட்சத்திற்கு மேல்
வசூல் செய்யும்போது விளம்பர செலவு போக மீதமுள்ள தொகையை தயாரிப்பாளரும்
விநியோகஸ்தரும் சரிவிகிதமாக (50:50 என்ற அளவில்) பங்கிட்டுக் கொள்வார்கள்.
50 லட்சத்தைத் தாண்டி அமோகமாக வசூல்
செய்திருந்தால் படத்தை விற்கும் போது முதல் சலுகை அப்படத்தை எம்.ஜி.க்கு
வாங்கி திரையிட்ட விநியோகஸ்தருக்கே. ஆனால் மற்ற நபர் அதிக விலைக்கு
கேட்டால், அவருக்கு விற்பனை செய்ய தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு.
அடுத்து, அவுட்ரேட். அவுட்ரேட்டில்
பொதுவாக நல்ல முன்னணியில் இருக்கும் நடிகர்களின் படங்கள்தான் விற்பனை
செய்யப்படும். இதில் தயாரிப்பாளரிடம் ஒரு தொகையைக் கொடுத்து படத்தை
வாங்கிய பின்னர் அந்தப் படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அதன் லாபமோ நஷ்டமோ
விநியோகஸ்தரையே சாரும்.
இவையெல்லாம் தயாரிப்பாளரிடம் இருந்து
படத்தை வாங்கும் முறைகள். இனி தியேட்டர்காரர்களிடம் படம் கொடுப்பதையும்
அவர்களிடமிருந்து பணம் வசூல் செய்வதையும் பார்க்கலாம்.
முன்னணியில் உள்ள நடிகரின் படத்தை நல்ல
எதிர்பார்ப்புள்ள படத்தை வாங்கி வைத்திருக்கும் விநியோகஸ்தரை
தியேட்டர்காரர்களே வாங்க வாங்கன்னு கூப்பிடுவாங்க. இந்த சூழ்நிலையில்
அந்தப் படத்தை விகிதாசார முறையில் தியேட்டர்காரர்களுக்கு திரையிடக்
கொடுக்கலாம்.
விகிதாச்சார முறை என்பது, படம்
திரையிடப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தியேட்டருக்கு 30%
விநியோகஸ்தருக்கு 70%, 2ம் வாரம் தியேட்டர்காரர்களுக்கு 35%
விநியோகஸ்தருக்கு 65%, இப்படி ஒவ்வொரு வாரமும் தியேட்டருக்கு 5%
கூடிக்கொண்டும் விநியோகஸ்தருக்கு 5% குறைந்து கொண்டும் போகும். கடைசியில்
இரண்டு பேருக்குமே 50% : 50% வந்ததும் அதன் பின்பு கூடவோ குறையவோ செய்யாது.
படம் தியேட்டரிலிருந்து எடுக்கும்வரை 50%
என்பது நிரந்தரமாகவே இருக்கும். இப்போது பொதுவாக நிறைய படங்களுக்கு இந்த
முறையில்தான் தியேட்டர்காரர்களிடம் இருந்து வினியோகஸ்தர்கள் பணம்
வாங்குகிறார்கள்.
அடுத்தது, வாடகை முறை. அதாவது சில படங்களை தியேட்டருக்கு வாடகை கொடுத்து ஓட்ட வேண்டியிருக்கும். ஒரு நாள் வாடகை என்று ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்திருப்பார்கள்.
அடுத்தது, வாடகை முறை. அதாவது சில படங்களை தியேட்டருக்கு வாடகை கொடுத்து ஓட்ட வேண்டியிருக்கும். ஒரு நாள் வாடகை என்று ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்திருப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் வசூலாகும் பணத்தில் அந்த
வாடகைப் பணத்தை எடுத்துவிட்டு மீதிப்பணத்தைத்தான் விநியோகஸ்தர்களிடம்
தருவார்கள். அவர்கள் நிர்ணயித்திருக்கும் வாடகை கட்டணத்தை விட குறைவாக
வசூலாகி இருந்தால், மீதி பணத்தை விநியோகஸ்தர் கையில் இருந்து கொடுக்க
வேண்டும். அதுவரைக்கும் பொறுத்திருக்க மாட்டார்கள். அந்த நிலை வரும்போது
படத்தை தியேட்டரில் இருந்து எடுத்துவிடுவார்கள்.
அடுத்ததாக ப்ரொடக்ஷன், இந்த முறையில்
வசூலில் வாடகை பணமாக தியேட்டர்காரர்கள் நிர்ணயித்துள்ள தொகையை
கொடுத்துவிட்டு மீதி வருகின்ற பணத்தில் தியேட்டர்காரர்களும்
விநியோகஸ்தரும் ஆளுக்குப்பாதி பங்கிட்டுக் கொள்வார்கள்.
இவ்வளவுதான் திரைப்பட விநியோகம்
சம்பந்தமான விஷயங்கள். இது ஒரு நல்ல தொழிலும் கூட. ஆனால் இதில் புரிந்து
கொள்ள முடியாதது, எந்த படம் ஓடும்? என்பதைதான். இந்த படம் நன்றாக
வசூலாகும் என்று நினைத்து வாங்கியிருப்போம்.
ஆனால் தியேட்டரில் கொண்டு படத்தைப்
போட்டால் நான்கு நாட்கள் கூட ஓடாது. சில படங்களை, இந்த படமெல்லாம் எப்படி
ஓடப்போகுது? என்று நினைத்து வாங்காமல்கூட விட்டுவிடுவோம். சில நேரங்களில்
அந்த படங்கள்தான் சும்மா பிச்சுக்கிட்டு ஓடும். சில படங்கள் நாட்கள் போகப்
போகத்தான் வசூல் அதிகமாக தரும். மொத்தத்தில் மக்களின் ரசனையைப்
புரிந்துகொண்டு படத்தை வாங்கினால் வெற்றிதான்”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக