http://kuttyrevathy.blogspot.com
பூமியின் மீது பல்லாயிரம் வருடங்களாகக் கதை சொல்லுதல் என்பது ஒரு கலையாக இருந்தாலும் வாழ்க்கையின் நவீனத்துக்கு ஏற்றாற்போன்றும் அப்பொழுது பீடித்திருக்கும் அரசியலுக்கு ஏற்பவும் சொல்லப்படும் ஊடகத்திற்கு ஏற்பவும் கதை சொல்லப்படும் முறை மாறிக் கொண்டே இருக்கிறது. இலக்கியத்தின் உச்சபட்ச தகுதியான கதை சொல்லும் திறன் என்பது குகை ஓவியம் போன்ற கலை வடிவங்களை எப்பொழுதோ பற்றிக் கொண்டன என்றாலும், என்னை சுவாரசியப் படுத்துவதென்பது திரைப்படத்தில் ஒரு கதை, சொல்லப்படும் முறையாலும் நுட்பத்தாலும் பெரிய அளவில் வேறுபடுவதால் தான் இன்றைய உலகையே திரைப்படம் என்னும் காட்சி ஊடகம் வெகுஜனத்தை ஆட்டுவிக்கிறது. காலந்தோறும் வளர்ச்சியுறும் நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை தன்னுள் வாங்கிக் கொண்டு திரைப்படம் என்பது கதை சொல்லலை இன்னும் இன்னும் சுவாரசியப்படுத்துகிறது. அத்துடன் சொல்லப்படுவது ஒரே கதையென்றாலும் வேறு வேறு நுட்பமான அதன் வெளிகளையும் காட்சிப்படுத்துகிறது. அல்லது மிகுதியான கற்பனை வெளிகளுக்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.
மேற்சொன்ன அத்துணை விஷயங்களையும் கீஸ்லோவ்ஸ்கியின் மூன்று நிறங்கள் -சிவப்பு என்ற திரைப்படத்தைப் பார்க்கும் போது நுகரலாம். அதை எப்படியும் பத்து தடவைக்கு மேலாக ஒரு பாடத்தைப் படிப்பது போலவே நுணுக்கமாய் கவனித்திருக்கிறேன். கதையில் மூன்று வித்தியாசமான கதைப்பின்னல்கள் ஒன்றின் மீது ஒன்றாய் படரும்படி, ஒன்றோடொன்று பொருந்தும் படி, ஒன்றுக்குள் மற்றொன்று அடங்கி விடும்படியான திரைக்கதை. படத்தின் முழுக்கதையையும் இந்தப் பத்திக்குள் சொல்வது மிகக் கடினம். ஒரு முறை பார்த்துவிட்டால் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு தளத்திலிருந்து கதைப் பின்னல்களை விவரித்துப் பேசுவது என்பது எளிதாக இருக்கும். அதனினும், மனித சிந்தனைக்கு கதைசொல்லல் முறையை தெளிவாக்கும் பயிற்சியாகவும் இருக்கும். படத்தில் இடம்பெறும் மூன்று முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று நேரடியாகப் படத்தில் இடம்பெறுவதில்லை. தொலைபேசி வழியாகக் கேட்கப்படும் குரலாகவே பதிவாகிறது. என்றாலும் மூன்று கதாபாத்திரங்களும் ஒன்றின் சாயலை மற்றொன்று ஏற்கும் படியாக சொல்லப்பட்டிருப்பது திரைக்கதை வடிவத்திற்கேயான சிறப்பியல்பு எனலாம். எந்தக் காட்சியில் அந்தக் கதாபாத்திரங்கள் மற்ற கதாபாத்திரத்தின் சாயலை ஏற்கின்றது, அல்லது இழக்கின்றது என்பதை படத்தைத் துல்லியமாகப் பார்ப்பவர் கண்டுபிடித்துவிட முடியும்.
அதே மாதிரி ஒரே சமயத்தில் படத்தின் முதிய கதாபாத்திரமும், இடம் பெறும் இளம் கதாபாத்திரமும் ஒரே கதாபாத்திரத்தின் முதிய, இளம் கதாபாத்திரங்களாக எண்ணத் தோன்றும் படியான திரைக்கதையாகவும் இருக்கிறது. ஒரு நேர்க்கோட்டுக் கதை மரபிலிருந்து திடச் சிக்கலான கதை சொல்லலையும் அதன் வழி அரசியலையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கீஸ்லோவ்ஸ்கி. அத்திரைப் படத்தில் கதை மேற்கொள்ளும் மனித உளவியல், உறவுகள், அன்பு பற்றிய அணுகுமுறைகளைப் பற்றி திரைக்கதைக்கு நிகரான அளவுக்கு செறிவாக விவாதிப்பதற்கும் விஷயங்கள் இருப்பினும் என்னை மிகக் கவர்ந்தது அத்திரைப்படத்தில் ஆளப்பட்டுள்ள கதை சொல்லல் உத்தி தான். இம்மாதிரியான கதை சொல்லல் முறையால் மனவெளி விரிவடைவதோடு மனிதனின் ஆழ்மனச்சிக்கலை ஒத்த பின்னலான அமைப்பையே கொண்ட இக்கதை, அம்மனச்சிக்கலை அவிழ்க்கவும் செய்கின்றது.
நேர்க்கோட்டுக் கதையிலிருந்து கதையின் கட்டமைப்பை மாற்றியமைக்க உள்ளார்ந்த பயிற்சியும் வாழ்வியலை அயராது விசாரிக்கும் பார்வையும் அவசியப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களின் குறைபாடுகள் என்பது எனக்கு இவையாகவே தோன்றுகின்றன. கதையை அணுகும் முறைகளால் பல சமயங்களில் வெற்றி கொள்ளும் திரைப்படங்களே கூட சமூக்கத்தை அரைகுறையாக உள்வாங்கிக் கொண்ட பார்வையால் பார்வையாளர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தமிழ் மொழியில் கதை சொல்லும் மரபு, இத்தகைய தட்டையானதாய் இருந்ததில்லை. சிலப்பதிகாரம் தனது காவியத் தன்மையில் இன்றும் வெற்றி கொள்வதற்கு காரணம் அதன் சித்திரக் கட்டமைப்பே. மேலும் பூடகமாகச் சொல்லல், ஒன்றைச் சொல்லி தொடர்புடையதைச் சொல்லாதிருத்தல், பார்வையாளரின் அனுமானங்களுக்கும் கற்பனைகளுக்கும் பெரும்பாலான உரையாடல்களை விட்டு விடுதல், அவர்களின் கற்பனை வெளியை கதை நகருந்தோறும் வளமாக்கிக் கொண்டே கதையை நகர்த்தல், வார்த்தைகளைக் குறைத்த பாணிகளையும் சைகைகளையும் குறிப்புகளையும் கொண்டிருத்தல் போன்ற நுட்பங்களைக் கொண்டு இயங்கும் கதை மரபு நமது.
இன்றும் நாட்டுப்புறக் கதை சொல்லிகள் இந்த நுட்பங்களை இழக்காமல் இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் கதையின் மையக் கதாபாத்திரங்கள் ஒரே சமயத்தில் பல கதாபாத்திரங்களாக மாறுவது என்பது கதை கேட்பவனை நுட்பமான உளவியல் வெளிக்குள் அழைத்துச் செல்வதற்கான உத்தியே. மனித உடலின் இயற்பியல் எல்லையை இயன்ற வரை விரிப்பதும் மானுடத்தின் அசாத்திய சாத்தியங்களைப் பற்றிய அக்கறையோடு இயங்குவதும் நாட்டுப்புறக் கதைகளின் சிறப்பியல்புகள். இக்கதைகள் உருவாக்கித் தரும் வெளியிலேயே அம்மனிதர்கள் தொடர்ந்து அன்றாடம் இயங்குவதும், வாழ்வதும்கூட உண்டு, கதையிலிருந்து வெளியே வர விருப்பமின்றி!
குட்டி ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக