12 மே, 2012

நெஞ்சில் இட்ட கோலம் - "இன்னொருவனின் கனவு"

.- குமரகுருபரன்








அனைத்திற்கும் உலகில் இன்னொரு அதீத பக்கம் இருக்கிறது. இயற்கையில், மனித மனங்களில், அவர்கள் வாழ்க்கையில்.







பதின்மத்துக்கும் அப்படியே.







அப்படி ஒரு அதீதம் சிலி(celie)என்கிற பதினான்கு வயதுப் பெண்ணின் கடிதங்கள் மூலம் ஆரம்பிக்கிறது, நாம் நேசிக்கும் அமெரிக்க இயக்குனரிடம் இருந்து. சிலி கடவுளுக்கு எழுதிய கடிதங்கள் அவை. அதீதம். பதின்மத்தின் எண்ணவெல்லா அவஸ்தை.







அதிகம் நேசிக்கப் படும்,அதிகம் விமர்சிக்கப் பட்ட,அதிகம் புறக்கணிக்கப் பட்ட படம் சிலியின் கதை. பதினோரு அகடமி விருதுகள் வெல்லும் என எதிர்பார்க்கப் பட்டு ஒன்று கூட இல்லாமல் போன அவமானம் அதன் வரலாறு.







எனினும், கதையாக, சினிமாவாக, இசை வடிவமாக, ஒலிச் சித்திரமாக தன்னை வெளிப் படுத்திக் கொண்டே இருந்த கறுப்பு அனுபவம் அது.யாரும் தொடத் துணியாத துயர் சினிமா. யாரும் எதிர்பார்த்திராத தன்னம்பிக்கை கவிதை.







உலக சினிமா என்பது அமெரிக்கர்களின் சினிமா அல்ல.ஆனால் உலகம் என்பது அமெரிக்காதான் இன்றைய நுகர்வுப் பொருளாதார, அரசியல், தொழில்நுட்பக் கலாசாரத்தில். அதனாலேயே அவர்களுடைய சினிமா நம்மை ஆளுகிறது, ஈர்க்கிறது, விருதுகள் பெறுகிறது.







அமெரிக்க சினிமா என்பது, அதன் கலைஞனுக்கு உலகளாவிய படைப்புச் சுதந்திரத்தை அளிக்கிறது. அமெரிக்க சினிமா ஈரானைப் பற்றி, கீழை நாடுகளின் மத அடிப்படை வாதங்களைப் பற்றி, வியட்நாம் பற்றி, திபெத் பற்றி, தலாய் லாமா பற்றி, மும்பையின் சேரிகள் பற்றி, கோன் பனேகா க்ரோர்பதி பற்றி, ஆப்ரிக்க மக்கள் பற்றி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பற்றி தன் சினிமாவாக தன் கண்ணோட்டத்தில் வெளிக் கொணர்ந்திருக்கிறது. கொணர்கிறது,அது தவறோ,சரியோ.







அலைஸ் வாக்கர் ( Alice Walker)என்கிற அமெரிக்கர் சிலியின் கதையை எழுதினார்.1983-ல் புலிட்சர் விருது வென்ற அந்த நாவல் பதினோரு முறை தணிக்கை செய்யப் பட்டது, அதன் வன்மொழி காரணமாக. சுரங்களில், வேற்று கிரகவாசிகளில், யுத்த களங்களில், மனித நேயத்தை உணர்த்திய ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் அதை, சிலியின் கதையை, சினிமா ஆக்கியவர். தான் ஒரு கவிஞன் என்று அதன் மூலம் நிரூபித்தவர்.







ஸ்பீல் பெர்க் மற்றும் பதின்மம்....யோசிக்க இயலாத சொப்பனம். தி கலர் பர்பிள்(the colour purple-1985).







ஒரு வெற்றி பெற்ற இயக்குனர் ஏன், தனக்கு, தன் பாணிக்கு சம்பந்தம் இல்லாத சினிமா ஒன்றை செய்ய வேண்டும்? ஸ்பீல் பெர்கின் இந்தத் துணிச்சல் நிறைய பதில்களையும், புரிதல்களையும் அளித்திருக்கிறது சிலியின் கதை மூலமாக,சினிமா பற்றி,அமெரிக்க சினிமா பற்றி, விருதுகள் பற்றி, கலைஞனின் ஆன்மத்தேடல் பற்றி.







பதின்ம, பால்ய சினிமாவில் அமெரிக்க சினிமாவின் பங்கெடுப்பு புறக்கணிக்க இயலாதது. மிக அண்மைய உதாரணம் ட்விலைட் (twilight)வரிசைப் படங்கள். ஹாரி பார்ட்டர் படங்கள் குழந்தைகளுக்கான படங்கள் என்பதால் அவை தவிர்க்கப் பட்டிருக்கின்றன. இல்லையெனில் சின்ன ஒரு இழையில் அவையும் அமெரிக்க பால்ய படங்கள் தான். ட்விலைட் வரிசை இங்கே பதின்மத்தின் இன்னொரு பிரிவில் இடம் பெறும். நாம் பதின்ம,பால்ய சினிமா ஆக எடுத்துக் கொண்டிருக்கும் சினிமா வரிசையில் பிரான்சிஸ் போர்ட் கொப்பலாவில் ஆரம்பித்து அமெரிக்கன் பை(american pie-1999) இயக்கிய வீட்ஸ் சகோதரர்கள் வரை ஏகப்பட்ட படங்கள் காணக் கிடைக்கின்றன. இவற்றில் இப்போது வெளி வந்திருக்கும் american reunion,20o4-ல் வெளிவந்த the girl next door,little manhattan-2005 என்று நிறைய நகைச்சுவை இழையோடும் பதின்ம குறும்புப் படங்கள் தான் ஜாஸ்தி.







பதின்மத்தின் இருண்ட அனுபவங்கள் குறித்து அவை கண்டு கொள்வதில்லை. அதே நேரத்தில் பதின்ம இருண்மை அனுபவங்கள் தனியாக அமெரிக்காவின் மயிர்க் கூச்செறியும் த்ரில்லர்களை,வன்மன வெளிப்பாடு மிக்க பதின்ம(elephent-2003-gusvansant)சினிமாக்களை அளித்திருக்கின்றன. அமெரிக்கர்களின் நேர்த்தியான நிஜ பதின்ம சினிமாவாக “தி கலர் பர்பிள்” எனும் அமெரிக்க-ஆப்ரிக்க படம் இந்த பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் அது எழுப்பும் கேள்விகளும், தொடும் வாழ்க்கையும். அவை, இன்றைக்கும் மிக முக்கியமானவை தான்.







விரிந்து பரந்த அம்மலர்த் தோட்டத்தில் அந்த சகோதரிகளின் களி நடனத்தில் ஆரம்பிக்கிறது “தி கலர் பர்பிள்”. ஊதா வயலட் பூக்கள் நிறைந்த தோட்டம் அது...அவர்கள் ஏதோ பாடிக் கொண்டே சாட் பூட் த்ரீ விளையாடுகிறார்கள். அந்தப் பாடலின் சில வரிகள் இப்படி இருக்கின்றன....'கடவுளே என் தங்கையை என்னிடம் இருந்து விலக்கி வை'.







சிரித்தபடி தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கும் சிலி,நெட்டி சகோதரிகளைக் கனத்த அந்தக் குரல் உறைய வைக்கிறது. 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இருவரும்...உங்கள் அம்மா பகல் உணவுடன் காத்துக் கொண்டிருக்கிறாள்'. அவரை அப்பா ஆக அறிமுகப்படுத்தலாம்தான். அதற்கான பிற தகுதிகள் அதை நம் மனசாட்சியிடம் முறையிட்டு தடுக்கின்றன. அவர் மேலும் சொல்கிறார் 'சிலி, இந்த வட்டாரத்திலேயே மிக அவலட்சணமான புன்னகை உன்னது' என்று.







காட்சி 1909, பனிக் காலம் என்கிறது நமக்கு,சிலியின் பிரசவ அலறலுடன்.நெட்டி,பதை பதைப்புடன் குழந்தை வெளி வரக் காத்திருக்கிறாள்.அது நிகழ்கிறது.பெண் குழந்தை என்ற படியே நெட்டி அதை சிலியின் கைகளில் கொடுக்கிறாள். சிலி பார்த்துப் பரவசம் அடையும் முன், அந்த கரங்கள் அக்குழந்தையைத் தட்டிப் பறிக்கின்றன. 'மவளே,கடவுளைத் தவிர, இதைப் பற்றி யாரிடமாவது முறையிட்டால் பார்த்துக் கொள்' என்ற மிரட்டலுடன் அவர் வெளியேறுகிறார். சகோதரிகள் கண்ணீரால் காட்சியைக் குளமாக்குகிறார்கள்.







14 வயதில் சிலிக்கு இரண்டு குழந்தைகள். இரண்டுமே அவளிடம் இல்லை.அவளின் அப்பாதான் அவள் குழந்தைகளின் அப்பாவும். 'உன் அம்மாவால் எது முடிய வில்லையோ ,அதை நீ செய்' என்று சொல்லி அந்த ஆண் நிகழ்த்திய வன் புணர்ச்சியின் அடையாளங்கள் அவை.பால்யம்,பதின்மம் இதெல்லாம் என்ன என்பதை கடவுள் தான் அவளுக்குச் சொல்ல வேண்டும். அவர் எங்கே இருக்கிறார்?அவர் கறுப்பா?வெள்ளையா?







'கடவுளே ,நான் நல்ல பெண்தான் இல்லையா' என்ற தன் குரலுடன் சிலி தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள்.







தென் அமெரிக்கா,குறிப்பாக ஜார்ஜியா( Georgia)வின் பாவப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்க கறுப்பின மக்களின் கதையையும்(1900),அமெரிக்காவின் இருண்ட நாகரீகத்தையும்.சிலியின் இரண்டு குழந்தைகளையும் அவள் அப்பா கொன்றிருப்பார் என்று அவள் நம்ப வில்லை. இப்போது பிறந்த பெண்குழந்தையை அவர் போதகர் ஒருவரின் குடும்பத்துக்கு விற்று இருக்கக் கூடும். இப்போது அவளது அப்பாவின் பார்வை சகோதரி நெட்டி மேலும் விழ ஆரம்பித்திருக்கிறது.







“அவளை பாதுகாக்க வேண்டும், நெட்டியை சர்ச்சில் அடிக்கடி அந்த மிஸ்டர்(mr)நோட்டம் விடுகிறார். அப்பாவிடம் இருந்து தப்பிக்கவாவது, நெட்டியை எங்காவது அனுப்பி வைத்து விட வேண்டும்...அந்த மிஸ்டர் நல்லவரா அவளுக்கு?” இப்படியெல்லாம் அலை பாய்கிறது சிலியின் சிந்தனை.







தன்னைப் பற்றி 'தான் மிக அவலட்சணமான பெண்'என்பதைத் தாண்டி அந்த பதினான்கு வயதில் சிலிக்கு வேறெதுவும் நினைக்க இல்லை. ஒலிவியா என்று பெயரிட்டு வைத்திருக்கும் தன் பெண் குழந்தை எங்கே வளர்கிறது என்றும் தெரியவில்லை.இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் கடவுளே?







ஆனால்,ஆண்கள் அவள் எதிர்பார்க்காத விஷயங்களைச் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் எதிர்பாராத தருணங்களில் சுய லாபத்திற்காக.







சிலியால் "மிஸ்டர் ' என்று அறியும் ஆல்பர்ட்(danny glover),அவளுடைய வீட்டின் முன் குதிரையில் அமர்ந்தபடி,அவள் அப்பா(!)விடம், அவள் தங்கை நெட்டியை திருமணம் செய்ய விரும்புவதாக கேட்கிறார். ஜன்னலுக்குள் நின்றபடி பார்த்துக் கொண்டிருக்கும் சகோதிரிகள் குறிப்பாக நெற்றியின் முகம் பயத்தால் உறைகிறது. அவர்கள் அப்பாவின் குரல் கேட்கிறது... “இல்லை மிஸ்டர், நெட்டி மிகவும் சிறிய பெண், அவளை இப்போது மணம் முடித்துத் தர இயலாது”.இப்போது இருவரின் முகமும் மலர்கிறது.







அடுத்த நொடி, அவர் மேலும் சொல்கிறார், “ஆனால் மிஸ்டர் நீங்கள் சிலியைத் திருமணம் செய்து கொள்ளலாம். என்ன கொஞ்சம் அவலட்ச் சணமானவள், கெட்டுப்போனவள், ஆனால் அருமையான வேலைக்காரி, உங்கள் வீட்டை, உங்கள் நான்கு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வாள்...என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர்?” சிலியின் கண்கள் வழக்கம் போல குளமாகின்றன. நெட்டி அவளை ஆசுவாசப் படுத்திகிறாள்.சிறிது நேரம் யோசித்து விட்டு மிஸ்டர் சொல்கிறார் “நல்லது,நான் அவளை ஒருமுறைப் பார்க்க வேண்டுமே”.







அப்பாவின் அழைப்புக்கு சிலி அந்த மிஸ்டரின் முன் நிற்கிறாள். அவளுடைய வாழ்க்கையின் அடுத்த பயணம் ஆரம்பிக்கிறது. ஆண்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள்?







ரத்தக் காயத்துடன் ஆரம்பிக்கிறது சிலியின் வாழ்க்கை மிஸ்டரின் மனைவி அல்லது பணிப்பெண் ஆக. மிஸ்டரின் பையன் ஹார்போ வேகமாக கூக்குரலிட்டபடி ஓடி வந்து அவள் மேல் மோதி தடுக்கி விழ வைக்கிறான். அடுத்தடுத்து தடுக்கி விழல்கள் தான் அவளுக்கு காத்திருக்கிறது அந்த வீட்டிற்குள். அலங்கோலமாய்க் கிடக்கிறது அன்பு சிறிதும் அற்ற அவ்வீடு.மிருகம் போல் அவள் மேலே விழுந்து இயங்கி, கடவுளே என்றபடி களைத்துச் சாய்கிறான் மிஸ்டர். அவளுக்கு அழுகை பொங்குகிறது. கடவுள் எங்கிருக்கிறார்? நீர் நிச்சயமாக கறுப்பாக இருக்க மாட்டீர்....!







சிக்கெடுத்து வருடங்கள் ஆன மிஸ்டரின் பெண் குழந்தையின் தலை மயிருடன் போராடிக் கொண்டிருக்கும் போது, சிலி 'இவளுக்கு முடி வெட்டலாமே'என்கிறாள்.







'பெண் குழந்தையின் முடியை வெட்டுவது அபசகுனம்'என்கிறான் மிஸ்டர்.







ஆனால் இப்படி முடி இருப்பது சரி இல்லை என்ற அவளின் பதிலுக்கு அறை விழுகிறது, கன்னத்தில். எதிர்த்துப் பேசுவது என்பது இவ்வீட்டில் கூடாது என்ற கட்டளையுடன். ஆண்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள்?







அறுபத்தெட்டு வயதாகும் அலைஸ் வாக்கர் சாதாரண எழுத்தாளர் அல்ல.பெண் போராளி. 1944-ல் பிறந்த அவரின் வாழ்க்கை அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக ஒடுக்கப் பட்ட, அமெரிக்க கறுப்பின மக்களுக்காக, அப்பெண்களுக்காக, நிறவெறி,பாலியல் வன்முறை,வன்கொடுமை ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப் பட்ட ஒன்று. அவரின் குரல், அவரின் எழுத்து அமெரிக்காவின் மிகவும் கவனிக்கப் படும், மதிக்கப்படும், மாற்றங்களை உருவாக்கும் கறுப்பு மந்திரம் இன்றும்.



அவரின் தைரியத்திற்கும், நேர்மைக்கும் போன வருடம்(2011),நேர்காணல் ஒன்றில்,அவர் சொன்ன ஒரு கருத்து போதும்.







“அமெரிக்காவும் இஸ்ரேலும் உலகின் மிகக் கொடூரமான தீவிரவாத அமைப்புகள்” என்பதே அது. அவர் 1983-ல் தி கலர் பர்பிள் நாவலுக்கு புலிட்சர்(pulitzer)இலக்கிய விருது வென்றது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒட்டு மொத்த கறுப்பின மக்களின், ஒடுக்கப்பட்ட பெண்களின் ஆன்மா சற்று கர்வமும் சாந்தியும் அடைந்த தருணங்கள் அவை.







தன் நாவலை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சினிமாவாக எடுக்க விரும்புவதாக தகவல் அறிந்ததும் அவர் சொன்னது, “வேண்டாம்,அது சரி வராது'. ஹாலிவுட் வசூல் பாக்ஸ் ஆபீஸின் ஹீரோவாக ஸ்பீல்பெர்க் கொண்டாடப்பட்ட (ET,jaws)ஆரம்ப வருடங்கள் அப்போது.







அலைஸ் வாக்கரை யார் மீற இயலும்? எனினும் கடைசி முயற்சியாக,அவரை ஸ்பீல் பெர்கின் சினிமாக்களைப் பார்க்க சம்மதிக்க வைத்தார்கள். et படத்தைப் பார்த்து விட்டு அலைஸ் வாக்கர் சொன்னார், “'வேற்றுக் கிரக உயிருக்கும் மனதும், வாழ்கையும் இருக்கிறது என்று சொன்ன அவரது நேயம் எனக்குப் பிடித்திருக்கிறது”.காலம் எப்போதும் தனக்குத் தேவையான விசயங்களைத் தனக்கு தேவையானவர்களிடம் இருந்து பெறத் தயங்கியதில்லை. அலைஸ் வாக்கர் என்கிற ஆளுமையின் அந்த ஒற்றை அங்கீகாரத்தில், ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் என்கிற கலைஞன், மகா கலைஞன் ஆகும் தருணம் பிறந்தது.







அவரின் முதல், சீரியஸ், அவரது பாணியற்ற திரைப்படம் 'தி கலர் பர்பிள்'.







தன் மீது விழுந்திருக்கும் புகழ் வெளிச்சம், தான் வெள்ளையர் என்ற பேதம், இரண்டையும் சுமந்து அமெரிக்க கறுப்பின மக்களின் இருண்ட வாழ்க்கைக்குள் எப்படி பயணம் செய்யப் போகிறார் ஸ்பீல் பெர்க்? அதற்கான அவசியம் என்ன? என்பது ஹாலிவுட்டின் கேள்வியாக இருந்தது.







“எனக்கு அந்த நாவலின் வலி,அதன் ஆன்மா,கனவு,சிலியின் உலகம் அனைத்தும், கண்டிப்பாக அதைச் சினிமாவாகத் தரிசிக்க வேண்டும் என்கிற ஆசையை, உந்துதலை ஏற்படுத்தியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது” என்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.











முழுக் கறுப்பினக் கதையான “தி கலர் பர்பிள்” படத்தின் நடிகர்கள் தேர்வே அவரின் முதல் சவால் ஆக இருந்தது. அவ்வளவு பெரிய இடத்தை, வாய்ப்பை ஹாலிவுட் அமெரிக்க கறுப்பின சகோதரர்களுக்கு அதுவரை வழங்கி இருக்க வில்லை, அவர்களுக்கான சினிமா ஒன்றை அது யோசித்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.







இன்றைக்கு நாம் அறியும் மிகச் சிறந்த நம்பர் ஒன் ஹாலிவுட் நடிகர்கள் ஆன வில்ஸ்மித்(wilsmith), எடி மர்பி(eddimurphy),(ஹாலி பெரி)haliperi,சாமுவெல் ஜாக்சன் அனைவரும் “தி கலர் பர்பிள்” படத்தின் தேவையை,அது ஏற்படுத்திய புதிய பாதையை கண்டிப்பாக நினைவு கூறக்கூடும்.







Danny Glover(மிஸ்டர்), Whoopi Goldberg(சிலி), Margaret Avery(மிஸ்டரின் காதலி ஷக்), Oprah Winfrey(ஹார்ப்போவின் மனைவி சோபியா),என்று அற்புதமான கறுப்பின கலைஞர்கள் ஸ்பீல்பெர்க்கால் “தி கலர் பர்பிள்” படத்துக்கு அடையாளம் காணப்பட்டார்கள். மிக மிக அற்புதமான ஒளிப்பதிவும், இசையும் வாய்த்தது அப்படத்திற்கு.







ஸ்பீல்பெர்க்கின் எண்ணற்ற மினி கிரேன் ஷாட்கள், க்ளோஸ் அப்கள், வைட் ஆங்கிள் ஷாட்கள் எல்லாம் அலைஸ் வாக்கரின் எழுத்தை உயிர் கொண்டு எழச் செய்தன திரையில்.







மிஸ்டரின் வீட்டில் சிலியின் வாழ்க்கை மெல்ல மெல்ல புதிய மனிதர்களையும், புதிய அனுபவங்களையும், புதிய சிந்தனைகளையும் சேர்க்க ஆரம்பிக்கிறது காலத்தின் ஓட்டத்தின் ஊடே. நெட்டி அவளுடன் மறுபடி வந்து சேர்கிறாள். இரை, சமையல் அடுப்புக்கு மேலே தானே ஏறி உட்கார்ந்த திருப்தி மிஸ்டருக்கு. அதன் பதைபதைப்பு வழக்கம் போல் சிலிக்கு.ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்?.







நெட்டி அவளுக்கு கடிதம் எழுத,வாசிக்கச் சொல்லித் தருகிறாள். அக் குறைவான ரம்யமான காலத்தில் சகோதிரிகள் தங்கள் சந்தோஷ ஆன்மாவை மறுபடி தரிசிக்கிறார்கள். ஆனால்,மிஸ்டர் நெட்டியை ஒரு பக்கம் பாலியல் ரீதியாக நெருக்கிக் கொண்டே தான் இருக்கிறார்.







முடிந்து, முயலாமல், நெட்டி விரட்டப்படுகிறாள் வீட்டில் இருந்து, இனிமேல் நீங்கள் இருவரும் சந்திக்கவே முடியாது என்ற மிஸ்டரின் துர்க்கோபத்துடன். “தன் வயதை விட ஐந்தாறு வயதே சிறிதான அவரின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது தவிர வேறெதும் இல்லை இனி சிலிக்கு. இச் சமயத்தில் அவருடைய காதலி என்று இன்னொரு பெண்ணை(ஷக்-பாப் பாடகி)அழைத்து வருகிறார் மிஸ்டர்.







அவள் சிலியைப் பார்த்த முதல் கணம் சொல்லுவது, “இவ்வளவு அவலட்சணமான பிறவியா?” என்பது தான். சிலி நினைப்பது “கடவுளே, நீ எங்கிருக்கிறாய், நீ கறுப்பா, வெள்ளையா, அழகா?. ஷக் அவ்வளவு அழகாய் இருக்கிறாள்!







ஷக் மெல்ல மெல்ல சிலியை நேசிக்க ஆரம்பிக்கிறாள். அவளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறாள். அவளுக்கும் சிலிக்கும் இடையே மிக நெருக்கமான (lesbian)தன் பால் ஈர்ப்பும் உருவாகிறது. இந்த ஈர்ப்பு அலைஸ்வாக்கரால் கட்டுடைந்த நதியைப் போல் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கும் நாவலில்.







x ரேட்டிங்குக்குப் பயந்து ஸ்பீல் பெர்க் அதைத் தொட்டும் தொடாமல், ஒரே காட்சியில் தாண்டி இருப்பார். தன் அந்த முடிவைக் குறித்து ஸ்பீல் பெர்க் பின்னாளில் நொந்து கொண்டிருக்கிறார். ஏனெனில் சிலியின் சிதைந்த ஆன்மா, தன்னம்பிக்கை பெறும் மிக முக்கியமான உறவு அது. அவளுக்கு எந்த ஆணிடம் இருந்தும் இதயப் பூர்வமாக, கிடைக்காதது.







“தி கலர் பர்பிள்” என்னும் தலைப்பே, சிலியின் அந்தரங்க உறுப்பு சார்ந்த,அதன் பாலியல் ஏக்கங்கள். ஏமாற்றங்கள். சந்தித்த வலிகள் குறித்துதான். இன்னொரு குறியீடும் அலைஸ் வாக்கரால் நாவலில் அழுத்தமாக அமைக்கப் பட்டிருக்கும்.அது சிலி கடவுளுடன் நிகழ்த்தும் உரையாடல் குறித்து. ஷக், சிலிக்கு கடவுளைப் பற்றியும் சொல்கிறாள்.







“கடவுள், கருப்பு, வெள்ளை, அல்ல.எந்த நிறமும் அல்ல. எந்த உருவமும் அல்ல.அது ஒரு இருப்பு, கடைசி நம்பிக்கை அவ்வளவே”. இதற்கிடையில் இன்னொரு துணிச்சலான பெண் சோபியா(ஒபரா வின்பிரே)வை, மிஸ்டரின் மகன் ஹார்ப்பரின் மனைவி ஆகச் சந்திக்கிறாள் சிலி.







சிலிக்கும், ஹார்ப்பர், சோபியாவுக்கும் இடையேயான,காட்சிகள் தனிக் கவிதை.சிலியின் ஆழ்மனம் அவளின் சகோதரி நெட்டியை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. திடிரென்று தன் புது கணவனுடன் வருகிறாள் ஷக்.வாசலில் அவர்களை வரவேற்க வந்து நிற்கும் சிலிக்கு, மிஸ்டரின் வெளிறிப் போன முகமும்,ஷக்கின் உற்சாகமும் மறுபடி கிடைக்கின்றன.







ஆண்கள் இருவரும் விருந்துக்குத் தயார் ஆகிறார்கள். குடித்துக் களிக்கும் அக் கணத்தின் இன்னொரு களிப்பு தபால் கொடுப்பவரின் அழைப்பு மூலம் சிலியை,ஷக்கை எட்டுகிறது.







“ஆல்பர்டுக்குக் காத்திரு(மிஸ்டர்), அவர் வந்து தபாலை எடுத்துக் கொடுப்பார்” என்கிறாள் சிலி. “அவனுக்கு காத்திருந்தால் கிறிஸ்துமஸ் வந்துவிடும்” என்று சொல்லியபடியே ஷக், அந்த தபால் பெட்டியை நோக்கித் தானே செல்கிறாள். கடிதங்களை எடுக்கிறாள். படிக்கிறாள்.அந்த அடிவான மேக முட்டத்தின்,கீழ் இறுகி நிற்கும் அந்த வீட்டிற்குள் செல்கிறாள். அவர்களின் குடி அதிகமாகி,இப்போது உளறல் ஆகியிருக்கிறது.







மெதுவாக,சிலியின் கை பிடித்து, மேலே மாடிக்கு வா என்று இழுத்துச் செல்கிறாள். மெல்ல அவளை கட்டிலில் அமரவைத்து, அந்தக் கடிதத்தைக் கொடுக்கிறாள். அதன் முகவரி, நெட்டி, ஆப்ரிக்கா, என்று சொல்கிறது.... நடுங்கும் விரல்களுடன் அதைப் பிரிக்கிறாள் சிலி.







உள்ளிருந்து காய்ந்த பூவிதழ் ஒன்று விழுகிறது.அதை முத்தமிடுகிறாள்.ஜன்னலின் வழியே, வெளிச்சம் நிறையும் அக்காட்சியின் இசை நம்மிடம் இருந்து கண்ணீரைக் கேட்கத் தொடங்குகிறது...







ஏப்ரல்,18,1935...வாசிக்கத் தொடங்குகிறாள், 'சிலி,நான் இறந்து போனதாய் நினைத்திருப்பாய், இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்,நீ நகரத்தில் சந்தித்த பெண், அவளுடைய கணவர் சாமுவேல் இருவரிடமும் கடவுள் அனுப்பிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றன, ஒலிவியா, ஆடம் ...ஆம்,கடவுள் அனுப்பி வைத்த உன் குழந்தைகள், இப்போது அவர்களைக் கவனிக்க என்னையும் அனுப்பி இருக்கிறார் இங்கே. இங்கே ஒரு குடும்பமாக நாங்கள் சந்தோஷம் கொண்டிருக்கிறோம்...நெட்டி”.







சிலி நிறுத்தி, நிதானமாக சொல்கிறாள் 'ஷக், தெரியுமா உனக்கு, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன எனக்கு, ஒலிவியா,ஆடம்,உயிருடன்'.







தேடத் தேட அறையின் மறைவிடம் ஒன்றிலிருந்து,மேலும் கடிதங்கள் கிடைக்கின்றன, நெட்டி அனுப்பி மிஸ்டர் மறைத்து வைத்த கடிதங்கள். அவளுடைய ஒரு கடிதம்,தன் முதல் ஆபிரிக்க அனுபவத்தை பரவசத்துடன் விவரிக்கின்றன....







அவளுடைய குரல், சிலியின் வாசிக்கும் குரல், நெட்டியின் அந்த அனுபவம் காட்சியாக விரியும் போது...நம் முன் விரியும் ஒட்டகச் சிவிங்கிகளின் ஓட்டம்,அச்சிறு பெண்ணின் நடனம், மரங்கள் , யானை....வாவ்.







yes mister speilberg here you are...என்று நம்மை உணர்ச்சிப் பெருக்கில் குலுங்க வைக்கும், சந்தோசம், துக்கம்,வியப்பு இன்னும் எண்ணற்ற உணர்ச்சிகளுடன் தன் நிலை இழக்கச் செய்யும்,இப்போதும் நாம் காணும் ஸ்பீல் பெர்க் என்னும் மகா கலைஞனின் தரிசனம்,அலைஸ் வாக்கரையும் தன்னிலை இழக்க வைத்த விஷயம்....!







அமெரிக்க கறுப்பின மக்களின் ஒடுக்கப்பட்ட, வலிகளின் ரணம் வழியும் ஆன்மாவை அந்த மகாகலைஞன் வருடிக் கொடுத்த தருணம்,அவர்கள் மனதில், நேயமுள்ள எவர் மனதிலும் அந்த மகா கலைஞன் சிம்மாசனமிட்டு அமர்ந்த தருணம்...







இரண்டு ஆளுமைகள் இணைந்தால் உலகின் காலத்தால் அழியா படைப்பு ஒன்று வெளிப் படும் தருணம், அதை உணர நம் கண்களின் இரண்டு சொட்டுக் கண்ணீர் சாட்சியாக இருக்கும். சினிமா என்பது, நாம் பார்ப்பது எல்லாம் அல்ல, அது வேறேதோ,என்று நம்மைப் பிரமிக்க வைக்கும் இடம்.







தன் வாழ்க்கையில் முதன் முறையாக,தன் மிஸ்டரைப் புறக்கணிக்கத் தயார் ஆகிறாள் சிலி. அதற்குப் பின் நடக்கும் சம்பவங்கள்,காட்சிகள் நாம் பார்க்கும் தலைசிறந்த பெண்ணிய சினிமா.







“தி கலர் பர்பிள்” படத்தின் க்ளைமாக்ஸ், சிலி, தன் சகோதரி நெட்டி யை, தன் குழந்தைகளை மீண்டும் காணும் தருணங்கள், உங்களை படம் பார்த்த இரவு முழுவதும் தூங்க விடாமல் புரள வைக்கும் மனித நேயத்தின் அற்புத தருணங்கள். இளமையைத் தரிக்காமலேயே, தொலைத்த சிலி (Whoopi Goldberg)என்ற எண்ணற்ற கறுப்பினப் பெண்களின் ஆன்ம சாட்சியின் மீள் தருணங்கள்!



காலம் சில சினிமாக்களை தனக்காக, தன் ஆவணத்திற்காக,மிகச் சிறந்த மனங்கள் மூலம் சாதித்துக் கொள்ளும். “தி கலர் பர்பிள்” அதில் ஒன்று.







அலைஸ் வாக்கரும், ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கும் அச்சிறந்த மனங்களில் சில. பின்னாளில்,மிகவும் மதிக்கப்பட்ட சினிமாவின் நாயகர் இங்க்மர் பெர்க்மன் இப்படிச் சொன்னார்,'ஸ்டீவன் என்னைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறார்'







மகா கலைஞர்களின் படைப்பும்,வாழ்வும் அப்படித்தானே!







இன்னொருவனின் கனவு – தொடரும்


கருத்துகள் இல்லை: