நண்பர்களே,
மறுகாலனியாக்கத்தின் விளைவாக அரசுக் கட்டமைப்பு, அரசாங்கம், அவற்றின் அதிகாரங்கள், தேர்தல் அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும், அரசியலிலிருந்து
மக்கள் மென்மேலும் விலக்கி வைக்கப்பட்டு அரசியலற்றவர்கள் ஆக்கப்படுவது
குறித்தும் இந்த நீண்ட கட்டுரை விளக்குகிறது. ஓரவளவு அரசியல்
தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் இதை படித்து புரிந்து கொள்ள முடியும் என
நம்புகிறோம். இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும்
மாறிவருகிறது என்பதை இந்தக்கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும்
நிறுவுகிறது.
முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே
முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு,
அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இந்தியாவின் விதி
ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு
இருக்கும் நிலையில் அதை மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு
அரசியல் ரீதியதில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இந்த கட்டுரை
வேண்டுகிறது. வாருங்கள், இணைந்து செயல்படுவோம்!
- வினவு
__________________________________________________
யார் வென்றாலும் தொடரப் போவது மறுகாலனியாக்கத்துக்கான ஆட்சியே!
இதற்கு சேவை செய்து தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்க யாருக்கு லைசன்சு?
கருணாநிதி குடும்பத்துக்கா, ஜெயா-சசி கும்பலுக்கா?
தனியார்மயம் தாராளமயம் உலகமயம் மறுகாலனிய கொள்கைகள்
புகுத்தப்பட்டதோடு சேர்த்து, அதற்கு ஏற்ப அரசின் பாத்திரமே
மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு
வன்முறைக் கருவி, ஒரு எந்திரம் என்ற அதன் பாத்திரம் மேலும் ஆக்டோபஸ் தன்மை
கொண்டதாக்கப்பட்டு இறுக்கப்பட்டுள்ளது. சொல்லப்படுகின்ற போலி
ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள சிவில், ஜனநாயக உரிமைகள் கூட வெட்டி
சுருக்கப்படுகின்றன. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள்
நடத்தும் இடங்கள், மக்கள் கூடாத ஒதுக்குப்புறமான இடங்களாக வரையறை
செய்யப்படுகின்றன. பத்து மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது,
சுவரொட்டிகள் ஒட்டத் தடை, தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவது என இதற்கு
எடுத்துக்காட்டுகள் ஏராளமாக உள்ளன. இதற்கேற்ப சட்டங்களும்
கடுமையாக்கப்பட்டுள்ளன. படிப்படியாக ஒரு போலீசு அரசாக, பாசிசத்தன்மை
கொண்டதாக அரசு மாற்றப்பட்டு வருகின்றது.
மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் தரகனாக அரசு:
இரண்டாவதாக, விவசாயிகள், விவசாயம் சார்ந்த துணைத்
தொழில் செய்பவர்கள், விசைத்தறி, சிறு பட்டறைகள் உட்பட சிறு தொழில்
நடத்துபவர்கள், சிறு வணிகர்கள் ஆகியோரிடமிருந்து அவர்களது உற்பத்தி
சாதனங்களையும் வாழ்வாதாரங்களையும் பறித்தெடுத்துக் கொண்டு (பலாத்காரமாகவோ
நிர்ப்பந்தங்கள் மூலமாகவோ பணத்தைக் கொடுத்தோ) அவர்களை கூலி உழைப்பை
மட்டும் நம்பி வாழும் ஏதுமற்றோராக நகர்ப்புறங்களை நோக்கி வீசியடிக்கும்
ஒரு நிகழ்ச்சிப் போக்கை அரசு அமுல்நடத்தி வருகின்றது.
சட்டிஸ்கர், ஜார்கண்டு போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் முதல்
பஞ்சாப், மகாராட்டிரா, குஜராத், தமிழ்நாடு போன்று வளர்ந்த மாநிலங்கள் வரை
இந்தியா முழுமையும் நடக்கும் இந்த நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக இந்தியா
முழுமைக்கும் மக்கள் வேலை தேடி செல்வது அதிகரித்து வருகின்றது.
வெளிநாடுகளுக்கு செல்வதும் அதிகரித்து வருகின்றது. ஐரோப்பாவில் நடந்த
புராதன திரட்சியை ஒத்த இந்த நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக, இதன் மூலமாக
பருத்துக் கொழுத்த பன்னாட்டுக் கம்பெனிகளும், தரகு அதிகார வர்க்க
முதலாளிகளும், வீடுமனை வாங்கல்-விற்றல்-கட்டிட தொழில் அதிபர்களும்,
பறித்தெடுக்கப்பட்ட இந்த உற்பத்தி சாதனங்கள், வாழ்வாதாரங்களை அப்படியே
அள்ளிச் சுருட்டி விவசாயம், மற்றும் எல்லாத் தொழில்களையும் தங்களது ஏகபோக
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கினர். இதற்கான
அடியாட்படையாக, ஆலோசகராக, தாதிப்பெண்ணாக, புரோக்கராக, வேலைக்காரனாக,
கருவியாக அரசு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இவ்வாறு விவசாயிகள் மற்றும் சிறு தொழிலதிபர்கள்,
வணிகர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உற்பத்தி சாதனங்களை பன்னாட்டுக்
கம்பெனிகளுக்கும், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் வாங்கித் தரும்
புரோக்கராக அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. விவசாய நிலங்கள்,
புறம்போக்கு நிலங்களை வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வருவாய்
ஆய்வாளர் (ஆர்ஐ), வட்டாட்சியர், நில அளவை ஊழியர்கள், சொத்துப் பத்திரப்
பதிவு அலுவலர்கள், ஓட்டுக் கட்சி பிரமுகர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள்
ஆகியோர் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அரசே இதை
ஊக்குவிக்கிறது.
உணவு தானிய உற்பத்தி, பூ, பழம், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தி,
கொள்முதல், வினியோகம், விற்பனை, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை
தயாரித்தல், விற்றல் ஆகிய தொழில்களில் ஈடுபடவும் இவற்றிற்காக கொள்முதல்
நிலையங்கள், குளிரூட்டப்பட்ட கிடங்குகள் கட்டிக் கொள்ளவும், முன்பேர
வர்த்தகத்தில் ஈடுபடவும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தரகுஅதிகார
நிறுவனங்களுக்கும் அரசு தாராள அனுமதி அளித்துள்ளது.
இவர்களின் சேவைக்காக, விவசாய பல்கலைக்கழகங்கள், விவசாய ஆராய்ச்சிக்கான
இந்திய கவுன்சில் (ICAR) வேளாண் அமைச்சகங்கள், வேளாண் விரிவாக்க
அலுவலகங்கள், திட்டக் கமிஷன், பல வல்லுனர் குழுக்கள் ஆகியவை
பணிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் இயக்க பன்னாட்டு மற்றும் தரகு அதிகார
வர்க்க முதலாளித்துவ கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள்,
வல்லுனர்கள் அமெரிக்கப் பன்னாட்டு வேளாண் உணவு கழக நிறுவனத் தலைவர்கள்
கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும்
இந்த முறையில் அரசின் பல்வேறு நிறுவனங்கள், அவர்களின் நோக்கங்கள்,
திட்டங்கள், பணிகள் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மறுகாலனியாக்க சுரண்டலின் நேரடி அடியாளாக அரசு:
மூன்றாவதாக, ஐரோப்பிய புராதனத் திரட்சியை ஒத்ததொரு
நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக நகர்ப்புறங்களை நோக்கி விசிறயடிக்கப்படும்
கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள் பெரும் ரிசர்வ் பட்டாளமாக திரண்டு
நிற்கின்றனர். இதைப் பயன்படுத்தி அவர்களை மிகக் குறைந்த கூலிக்கு (ஒரு
கட்டிடத் தொழிலாளியோ அல்லது வேறு ஒரு தொழிலாளியோ தினக்கூலியாக 200, 300
கூட பெறலாம். ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டி முதலாளிகள் அடைகின்ற இலாப
விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதும், கல்வி, மருத்துவம்,
இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு உழைப்பாளி மக்கள் செலவிடும்
தொகை அதிகரித்துக் கொண்டே போவதோடும் சேர்த்துப் பார்க்கும் போதும்தான்
இது மிகக் குறைந்த கூலி என்பது தெளிவாகப் புலப்படும்) அன்றாடக்
கூலிகளாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் வேலைக்கமர்த்தி 12 மணி நேரம் 14
மணிநேரம், இரண்டு ஷிப்டுகளை தொடர்ந்தாற்போல் செய்ய வைப்பது, எந்த
உரிமையும் இன்றி கொத்தடிமைகள் போல நடத்துவது என ஒட்டச் சுரண்டிக்
கொழுக்கின்றனர், பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளும் தரகு அதிகார வர்க்க
முதலாளிகளும்.
சாதாரண தொழிலாளர்கள், அரைத் திறனாளி (ICAR) தொழிலாளர்கள் மட்டுமல்ல,
தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பொறியியல் துறைகளில் பணியமர்த்தப்படும்
பொறியாளர்கள், கணினி வல்லுனர்கள் வரை அனைவரும் இந்த வகையான தற்காலிக
ஒப்பந்த பணியாளர்களாக கொடுமையான கொத்தடிமைச் சுரண்டலுக்கு
ஆட்படுத்தப்பட்டுள்ளனர். தொழிற்சங்கம் அமைப்பது என்ற பேச்செடுத்தாலே
வேலையை விட்டு தூக்கியெறியப்படுகின்றனர். வெள்ளைக்காலர் தொழிலாளர்கள்,
வல்லுனர்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள் கூட இன்று வெள்ளை அடிமைகளாக
ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கான அடியாளாக அரசு மாற்றப்பட்டிருக்கிறது.
மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,
பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகளின்
ஊதியத்தை திட்டமிட்டே சில மடங்குகள் அதிகமாக கொடுப்பது; அதையும்
தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவது; இதன் மூலம் பன்னாட்டுக்
கம்பெனிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் உற்பத்தி செய்யும்
நுகர்பொருட்கள், வழங்கும் சேவைகள் ஆகியவற்றிற்கும் வீடுமனை கட்டல்
வாங்கல் விற்றல் அதிபர்களின் தொழிலுக்கும் தொடர்ந்து கிராக்கியை
அதிகரித்து அவர்கள் கொள்ளை இலாபம் அடித்து கொழுக்க வைக்கும் கருவியாக
அரசின் செயல்பாடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் இன்னொரு பக்கமாக, பல்வேறு நிதி நிறுவனங்கள் தொடங்கவும் அவைகள்
தாராள முதலீடு திரட்டவும், அன்னிய முதலீடுகளை அதிகரித்தும், மேலே சொன்ன
பிரிவினர்கள் நுகர்பொருட்கள், வீடுகள், மனைகள் வாங்குவதற்கும் கல்வி,
மருத்துவத்திற்கும் ஏராளமான கடன்கள் வழங்கவும், அதற்கேற்ப மத்திய ரிசர்வ்
வங்கி மூலம் வட்டியைக் குறைத்தும் ஏற்பாடுகள் செய்து தரும் புரோக்கராக
அரசு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்டியில்லா கடன், குறைந்த
வட்டியிலான கடன், சுலப தவணைகள் என்றெல்லாம் தனது முகவர்களை இந்த நிதி
நிறுவனங்களும் பிறரும் அனுப்பி இவர்களை பேசி மயக்கி கடன்காரர்கள்
ஆக்குகிறார்கள். கடன் அட்டை வசதியும் இதற்கான சாதனமாக
வினியோகிக்கப்படுகின்றது; தவணை கட்டத் தவறினால் அடியாட்களை விட்டு
வசூலிக்கவும் சொல்கிறார்கள்; இவ்வாறு அரசாங்கத்தின் பணத்தை, மொத்த
மக்களின் நிதியை நிதி நிறுவனங்கள் சுற்று வழியில் சுருட்ட அரசாங்கமே ஒரு
சாதனமாக மாற்றப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான கருவியாக அரசு
நான்காவதாக, “அரசின் கையில் போதிய நிதியில்லை; புதிய
முதலீடுகள் செய்ய நிதிப் பற்றாக்குறை உள்ளது” என்ற முகாந்திரத்திலும்,
‘பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. “புதிய தொழில்
நுட்பங்கள் புகுத்தப்பட்டு தொழில்துறை நவீனமாக்கப்பட வேண்டியுள்ளது” என்ற
முகாந்திரத்திலும் கல்வி, மருத்துவம் போன்ற பல சேவைத் துறைகளிலும், பல
உற்பத்தி துறைகளிலும் பருத்துக் கொழுத்த பன்னாட்டுக் கம்பெனிகளும் தரகு
அதிகார வர்க்க முதலாளிகளும் புகுந்து கொள்ளை இலாபம் ஈட்ட தாராளமாக
அனுமதிக்கப்படுகின்றன; பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு
அவர்களுக்கு விற்கப்படுகின்றன.
இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பாடுபட்டு
உருவாக்கி வைத்திருக்கும் அடிப்படை கட்டுமானங்கள், சாதனங்கள், பிற வசதிகளை
தனியார்துறையினர் பயன்படுத்தவும், அந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கே
போட்டியாக செயல்படவும், காலப்போக்கில் இந்த பொதுத்துறை நிறுவனங்களை
‘நட்டத்தில்’ இயங்கும் நிறுவனங்களாகவும் தனியார்துறையை விட மட்டமான சேவை
வழங்கும் நிறுவனங்களாகவும் (எடுத்துக்காட்டாக பி.எஸ்.என்.எல்)
மாற்றுவதையும் அரசே திட்டமிட்டு செய்கிறது. பின்னர் அந்த துறையையே
கைகழுவுவதையும் செய்கிறது. உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கின்ற,
கோடிக்கணக்கான மக்களுக்கு நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி மருந்துகள்
தயாரிக்கும் நிறுவனங்களையும் தென்கிழக்கு ஆசியாவிலேயே அரசுத்துறையில்
சிறந்து விளங்கும் இந்துஸ்தான் போட்டோ பிலிம் போன்ற நிறுவனங்களையும் கூட
இந்த முறையில் தனியாருக்குத் தாரை வார்க்கும் தயாளனாக அரசு
மாற்றப்பட்டுள்ளது.
தங்களிடம் நிதியில்லை, மூலதனம் இல்லை என்று சொல்லும் அரசே, இன்னொரு
பக்கம், கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் (பருத்து கொழுத்த பன்னாட்டு
முதலாளிகள் மற்றும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள்) தொழில் தொடங்க
குறைந்த விலையில் விளைநிலங்களை வாங்கிக் கொடுப்பது, அரசு நிலங்களை
அடிமாட்டு விலைக்கு விற்பது அல்லது நீண்டகால வாடகைக்கு விடுவது, மின்சாரம்,
தண்ணீர் போன்ற சேவைகளை குறைந்த விலையில் வழங்குவது, மானியங்கள்,
வரிச்சலுகைகள் அளிப்பது என்று அரசு நிதியை நமது பணத்தை வாரி வாரி
அவர்களுக்கு வழங்கிக் கொண்டுள்ளது.
2006ஆம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை இவ்வாறு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகள் மட்டும் 22 இலட்சம் கோடிகளுக்கு மேல்! அதாவது ஒரு நாளைக்கு 240 கோடி ரூபாய்களை தூக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் வரிஏய்ப்பு செய்வதற்கும்
அந்தப் பணத்தை வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமான வழிகளில் கொண்டு செல்வதற்கும்
பல வசதி, வாய்ப்புகளை அரசு செய்து கொடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக,
மொரிசியஸ் நாட்டிலும் இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளுக்கு
இரட்டை வரியிலிருந்து சலுகை என்ற பெயரில் பணத்தை வெளியே கொண்டு செல்ல
அனுமதிப்பது; ஏற்றுமதி, இறக்குமதி விதிகளில் சலுகை போன்ற வழிமுறைகள் மூலம்
அனுமதிப்பது; இவ்வாறு வரிஏய்ப்பு மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் கருப்புப்
பணமாக ஒரு நாளைக்கு 240 கோடி ரூபாய்களை வெளிநாடுகளுக்கு கடத்தி
வருகிறார்கள்.
இவ்வாறு பல ஆண்டுகளாக எடுத்துச் செல்லப்பட்டு அயல்நாட்டு வங்கிகளில் இரகசிய கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு 72 இலட்சம் கோடிகளுக்கு மேல்! இது அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட விபரம்; உண்மை நிலைமை இதைவிட அதிகமாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
அரசு வங்கிகளிடமிருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு குறைந்த வட்டியில்
கடன் வழங்குவதும், வாங்கிய கடனில் ஒரு பெரும்பகுதியை முதலாளிகள்
திட்டமிட்டே கட்டாமலிருப்பதும், வாராக் கடன் என்ற பெயரில் இவற்றை அரசாங்கம்
கொள்கை முடிவெடுத்து தள்ளுபடி செய்வதும் நடந்து வருகின்றது. இவ்வாறு பல
இலட்சம் கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளி கொடுக்கப்பட்டு
வருகின்றது. இவையெல்லாம் கொள்கை முடிவெடுத்து, பொருத்தமான
சட்டதிருத்தங்கள் செய்து பகிரங்கமாக, முறையான வழிகளிலேயே அரசாங்கம் செய்து
கொடுக்கின்றது. அப்படிப்பட்டதாகவே மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள்,
இயங்குமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி, நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் மிகக் குறைந்த விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது.
இரும்புத்தாது, எண்ணெய் வயல்கள், பாக்சைட், தண்ணீர், மணல், நிலம், காட்டுவளம், கடல்வளம், அலைக்கற்றை என ஐந்துவகை இயற்கை வளங்களும் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு, கொள்கை முடிவெடுத்து,
சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், அமைச்சரவைகளுக்கு தெரியாமலேயே இரகசிய
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதனடிப்படையில் வாரி வாரி
வழங்கப்படுகின்றன. இவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் இயற்கை வளங்களை
பகற்கொள்ளையடிப்பதற்கான கருவியாக அரசு மாற்றப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திலிருந்து மக்களை விலக்கி வைக்கும் கோடீசுவரர்களின் ஆட்சியாக
ஐந்தாவதாக, இன்று எம்எல்ஏ ஆக வேண்டுமென்றால் கூட,
குறைந்தபட்ச தகுதி கோடீசுவரனாக இருக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில்
வேட்பாளராக நிற்க குறைந்தது 5 கோடி ரூபாய் செலவழிக்க தயாராக
இருக்கவேண்டும். எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் இதை ஒரு விதியாகவே ஆக்கி
விட்டன. அமெரிக்க மேல்நிலை வல்லரசு தலைமையிலான ஏகாதிபத்திய நலன்களுக்கு
சேவை செய்வது, பருத்து கொழுத்த பன்னாட்டு நிறுவனங்களும் தரகு அதிகார
வர்க்க முதலாளிகளும் நமது நாட்டின் வளங்களையும் அரசு சொத்துக்களையும்
மக்களின் உழைப்புச் சக்தியையும் ஒட்டச் சுரண்டுவதற்கான முகவர்களாக
செயல்படுவது, இந்த சேவைக்காக கார்ப்பரேட் முதலாளிகள் அடிக்கும்
பகற்கொள்ளையில் ஒரு பங்கை பெற்றுக் கொள்வது என்ற திருப்பணியைச்
செய்வதற்காக யார் ஆட்சியில் இருப்பது என்ற ஒரேயொரு நோக்கத்திற்காக
மட்டுமே எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. மற்றபடி வேறு
எந்த கொள்கையோ, இலட்சியமோ, நாட்டுப்பற்றோ இவர்களிடம் இல்லை.
பிஜேபி, ஜெயலலிதாவின் கட்சி போன்ற சில கட்சிகள் பார்ப்பனியத்தை
அரியணையில் ஏற்றுவது என்ற நோக்கோடு செயல்பட்டாலும், மேலே சொன்னவாறு
கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிப்பதற்கோ, அமெரிக்காவின் உலக
மேலாதிக்கத்திற்கு சேவை செய்வதிலோ இவர்களுக்கும் பிற தேர்தல் அரசியல்
கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடு கிடையாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) லிபரேசன், சிபிஐ, சிபிஎம் போன்ற
‘இடதுசாரி’ கட்சிகள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் கார்ப்பரேட்
பகற்கொள்ளைக்கும் எதிராக எடுக்கும் நிலைப்பாடுகள் சந்தர்ப்பவாதமாக
இருக்கும் அதேவேளையில், இக்கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் உட்பட அடிமட்ட
ஊழியர்கள் வரை பலர் இலஞ்ச இலாவண்யம், மோசடிகளில் ஈடுபடுபவர்களாகவும்
இருக்கின்றனர். கார்ப்பரேட் பகற் கொள்ளைக்கு இவர்களின் தலைமையிலான அரசுகளே
சேவை செய்பவையாகவும் இருக்கின்றன; மேலும், இவர்கள் ஏதாவது ஒரு ஆளும்
வர்க்க / போனபாடிஸ்ட் காரியவாத பிழைப்புவாத கட்சிகளின் கூட்டணியில் மாறி
மாறி சந்தர்ப்பவாதமாக பங்கேற்கின்றனர். இவர்கள் சேர்ந்துள்ள கூட்டணி
பதவிக்கு வந்து, அந்த அரசுகள் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான சாதனமாக
செயல்படும்போதும் கூட்டணியிலிருந்து விலகாமல், மென்மையான விமர்சனங்களை
வைத்து விட்டு தொடர்ந்து ஆதரித்து, தங்களால் முடிந்தவரை அரசு
சன்மானங்களைப் பெற்றுக் கொள்வதிலும் பதவி சுகம் காண்பதிலும் திருப்தி
கொள்கிறார்கள். இவ்வாறு இவர்களும் ஆளும் வர்க்க / பிழைப்புவாத கட்சிகளின்
கோடீசுவரர்களின் கையாட்களாக செயல்படுகின்றனர்.
கோடிசுவரர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். நிற்க
முடியும் என்பதோடு, தனியார்மய தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கம்
மிகவும் கருணையுடன் பேசும் தருணங்களில் கூட ‘அனைவரையும் தழுவிய வளர்ச்சி’
(Inclusive growth) என்று கூறுகிறதேயன்றி பணக்காரர்களிடமிருந்து எடுத்து
ஏழைகளுக்கு கொடுத்தல் என்பதையோ, நலிந்த பிரிவினருக்கு சலுகைகள் வழங்கி
கைதூக்கி விடுதல் என்பதையோ பேசுவதில்லை. இத்தகைய ‘கொள்கை வழிபட்ட
அரசியல்’ அனைத்தையும் ‘ஜனநாயகத்திலிருந்து’ துடைத்தெறிந்து விட்டது.
இதன்மூலம் வேறுபட்ட அரசியல் கொள்கைகளுக்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளின்
பின்னால் மக்கள் அணிதிரளுதல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,
அதனடிப்படையில் வாக்களித்தல் என்பதற்கான சாத்தியத்தையே நாடாளுமன்ற அரசியல்
அரங்கிலிருந்து புதிய தாராளவாதம் எனப்படும் மறுகாலனியாதிக்கப் போக்கு
நீக்கி வருகின்றது.
‘சிறந்த அரசாளுமை’ (good governance) என்பதே எல்லா அரசுகளின் நோக்கமாக
இருக்க வேண்டுமெனவும் இப்போக்கு வரையறுத்துள்ளது. சர்வதேச நிதி
நிறுவனங்களால் முன்தள்ளப்படும் புதிய தாராளவாத வகையிலான கட்டுமான
சீர்திருத்தங்களைக் கறாராகவும் ஈவு இரக்கமின்றியும் அமுல்படுத்துவதையே
சிறந்த அரசாளுமை என்று உலக முதலாளித்துவம் போற்றுகிறது. மேலும் ‘சுயமாக
சுறுசுறுப்பாக இயங்கும் அரசு’ (Proactive state) என்ற என்பதையும்
மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ப சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில்
‘தோல்வியுற்ற அரசாக’ (failed state) இருக்கக்கூடாது என்பதையும்
முன்தள்ளுகிறது.
சிறந்த அரசாளுமை, நல்லாட்சி போன்ற முழக்கங்களையே இன்று எல்லா ஓட்டுக்
கட்சிகளும் வரித்துக் கொண்டு விட்டன. இதற்காக உலகவங்கி போன்ற ஏகாதிபத்திய
நிறுவனங்கள் தமது அரசுக்கு அளிக்கும் சான்றிதழையும் பெருமையுடன்
விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. மேல்நிலை வல்லரசுகளால் திணிக்கப்பட்ட இந்த
கட்டுமான சீர்திருத்தங்களின் எல்லைக்குள் நின்றுதான் நாடாளுமன்ற அரசியலில்
முதலாளித்துவக் கட்சிகள் தமக்குள் மோதிக் கொள்கின்றன. இவைகளுக்கிடையில்
வேறுபாடுகளே இல்லாத நிலைமையில், தேர்தல் போட்டியும் மாறுபட்ட
கொள்கைகளுக்கு இடையிலான மோதலாக இல்லை. மாறாக தனிநபர் பற்றிய
குணாதிசயங்கள், திறமைகள், அவர்கள் செய்த இலஞ்சம் மற்றும் பிற முறைகேடுகள்,
மோசடிகள், சேர்த்த சொத்துக்கள் ஆகியவற்றை முதன்மைப்படுத்துகின்ற,
நபர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியாகவே தேர்தல்கள் இருக்கின்றன.
கொள்கை வேறுபாடுகள் அற்றுப் போனதால் அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின்
சாபக் கேடுகளான சாதி, மதவெறி ஆகியவற்றைத் தூண்டி விட்டும், இலவசத்
திட்டங்களை அறிவித்தும், நேரடியாக ஓட்டுகளுக்கு விலை பேசியும் தான்
ஓட்டுகள் அறுவடை செய்யப் படுகின்றன. அரசு அதிகாரத்திலிருந்து சொல்லிக்
கொள்ளப்படுகிற ஜனநாயகத்தை வெளியேற்றி விட்டு, முதலாளித்துவ வர்க்கம்
அதனைக் கைப்பற்றியிருப்பது போலவே, எல்லா முதலாளித்துவ அரசியல்
கட்சிகளிலும் உட்கட்சி ஜனநாயகம் ஒழிந்து ஒரு கும்பல் அல்லது குடும்பத்தின்
அதிகாரமாக சீரழிந்திருக்கிறது. அரசாளுமையிலிருந்து அரசியலை விலக்கிவிட்ட
இந்த ஜனநாயகத்தில்தான் ‘முறையாக’ தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு கட்சிகள்
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்திருக்கின்றன.
இதற்கேற்ப தேர்தல் நடத்தை முறைகளையே கோடீசுவரர்களுக்கு மட்டும்
உரித்தான ஒன்றாக, பரந்துபட்ட உழைக்கும் மக்களை அதிலிருந்து விலக்கி
வைக்கின்ற நடத்தை முறைகளாக ஆளும் வர்க்கங்களே தேர்தல் கமிஷன்கள் மூலம்
அமுல் நடத்துகின்றன. சேஷன் இந்திய தேர்தல் தலைமை ஆணையாளராக இருந்த
காலத்திலிருந்து இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட்டு
வருகின்றன. இதனை சேஷனின் விசேட திறமை, தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்
என்ற அவரது இலட்சியம், அதாவது ஒரு தனிநபரின் முன்முயற்சி என்ற கோணத்தில்
பார்க்கக் கூடாது. மாறாக, ஆளும் வர்க்கம் மறுகாலனியாதிக்க
கொள்கைகளுக்கேற்ப அரசு, தேர்தல் முறை ஆகியவற்றில் கொண்டு வந்துள்ள பொது
மாற்றங்கள் என்று இதைப் பார்க்க வேண்டும்.
இன்னொரு பக்கம், முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தில் சீரழிவும்,
ஊழல்களும் ரவுடித்தனமும் அராஜகங்களும் முறைகேடுகளும் மோசடிகளும்
சந்தர்ப்பவாதங்களும் பிழைப்புவாதங்களும் மலிந்து நாறுவது என்பது
அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்துடன் மறுகாலனியாதிக்க கொள்கைகள்
புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து எல்லா சமூக மதிப்பீடுகளும் அறநெறிகளும்
தூக்கியெறியப்பட்டு வருகின்றன. இதன் தாக்கம் ஏற்கெனவே நாறிக்
கொண்டிருக்கும் முதலாளித்து தேர்தல் ஜனநாயகத்திலும் ஏற்பட்டு, தேர்தல்
ஜனநாயக நடைமுறைகள் மீதும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதும் மக்களிடையே
வெறுப்பும் அவநம்பிக்கையையும் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக இந்த
சமூக அமைப்பு மற்றும் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தின் மீது
நம்பிக்கையிழந்து புரட்சிகர இயக்கங்களின் பக்கம் மக்கள் திரும்புவதைத்
தடுக்கும் நோக்கிலும் ஆளும் வர்க்கங்கள் தேர்தல் கமிசனைக் கொண்டு
கடுமையான தேர்தல் நடத்தை விதிகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றன.
ஆனால் தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் எந்த விதத்திலும் மக்களுக்கு
பணம் கொடுத்தல், பிரியாணிபீர் விருந்துகள், அன்பளிப்புகளை வழங்குதல்,
ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை வாரி வழங்குவோம் என்று கட்சிகள் போட்டி
போட்டுக் கொண்டு அறிவித்து மக்களை ஈர்த்தல், சாதிய உணர்வுகளைத்
தூண்டியும் ரவுடித்தனத்தில் ஈடபட்டும் ஓட்டுப் பொறுக்குதல் போன்ற
நடைமுறைகளை தடுக்கவில்லை; மாறாக இவை கனஜோராகவே நடந்து கொண்டிருக்கின்றன.
அதிகரித்து வருகின்றன என்று 2009 நாடாளுமன்ற தேர்தலும் குறிப்பாக
திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நிரூபித்துள்ளன. சில கட்சி
வேட்பாளர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வதும், தேர்தல் நடத்தை விதிகளை
மீறிவிட்டதாக அமைச்சர்கள் உட்பட பலபேர் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை பதிவு
செய்வதும், பிறகு தேர்தல் முடிந்தவுடன் இந்த வழக்குகளை அப்படியே
விட்டுவிடுவதும்தான் நடைமுறையாக உள்ளது. யாரும் தண்டிக்கப்படுவதில்லை.
பதவியும் பறிக்கப்படுவதில்லை.
முன்பெல்லாம் தேர்தல் என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லா
உழைக்கும் மக்களும் கலந்து கொள்ளும் பிரச்சார முறைகளைக் கொண்டதாக,
அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார முறைகள் எல்லாம் அனுமதிக்கப்பட்டு,
இரவு பகலாக ஒரு இரண்டு மாத காலத்திற்கு திருவிழா போல நடைபெறும்; கட்சித்
தொண்டர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்;
ஆனால் மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப இன்று தேர்தல் என்பது
கோடீசுவரர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய
பிரச்சார நடைமுறைகள் மட்டுமே கொண்டதாக தேர்தல் முறை மாற்றப்பட்டு விட்டது.
தொலைக்காட்சி நிறுவனம் நடத்த, செய்திப் பத்திரிகைகள் நடத்த அல்லது
அவைகளில் விளம்பரம் செய்ய, கார்களில் பவனி வர ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே,
அதாவது கோடீசுவர வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வண்ணம் தேர்தல்
முறைகள் மாற்றப்பட்டு விட்டன.
கொள்கை, கோட்பாடு என்று எந்த வெங்காயமுமின்றி கட்சியே பிழைப்புவாதக்
கட்சிகளாக மாறிவிட்ட நிலையில், பிரியாணியுடன் நாள் ஒன்றுக்கு ரூ. 200
கொடுத்தால்தான் வேலை செய்யும் ‘தொண்டர்களை’ கொண்டதாகவே இவைகள்
மாறிவிட்டன. பணப்பட்டுவாடா உட்பட பல முறைகேடுகளை ஒழித்து நேர்மையான தேர்தலை
நடத்துவது என்ற முகாந்திரத்தில் 85 விழுக்காடு உழைக்கம் மக்கள் தேர்தலில்
பங்கேற்பது உட்பட பிரச்சாரத்தில் ஈடுபடுவது வரை தேர்தல் நடைமுறையிலிருந்து
விலக்கி வைக்கப்ட்டுள்ளனர். பலாத்காரமாக தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின்
ஒரே வேலை வாக்களிப்பது மட்டுமே. அவ்வளவுதான்! அதுவும் தேர்தல்
நடத்துவதற்கான காலம் குறுக்கப்பட்டு அவசரம் அவசரமாக நடத்தப்படுகின்றது.
பத்து அல்லது 15 நாள் பிரச்சாரத்தில் தேர்தல் முடிந்து விடுகின்றது.
எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கவேண்டும் என்ற வெறி; ஆட்சியை
பிடிக்க முடியாவிட்டாலும் நாலு சீட்டாவது ஜெயித்தால்தான் கட்சியையே தக்க
வைத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் காக்காய்கள் கூட்டத்தில்
கல்லெறிந்தது போல கட்சி நிர்வாகிகள் ஓடிப் போய் விடுவார்கள் என்ற பீதி
ஆகிய ‘உன்னத நோக்கங்களே’ இன்று கட்சிகளை வழிநடத்துகின்றன. இந்த
நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள எந்தவிதமான சந்தர்ப்பவாதத்திற்கும்
அவமானத்திற்கும் அவமதிப்புகளுக்கும் இழிவுபடுத்தலுக்கும் எல்லாவிதமான
பிழைப்புவாதங்கள், தகிடுதத்தங்களைச் செய்யவும் எல்லா தேசிய, பிராந்திய,
சாதியக் கட்சிகளும் கூட்டணிகள் அமைத்துக் கொள்கின்றன. கொள்கை, இலட்சியம்,
தேசப்பற்று, சமூகப்பற்று போன்று எதுவும், எந்த மதிப்பீடும் அறநெறியும்
இக்கட்சிகளிடம் இல்லை.
தேர்தலுக்கு முன்பு அமைக்கப்படும் கூட்டணிகள் தேர்தல் முடிந்தவுடன்
கலைந்து புதிய கூட்டணிகள் அமையும்; தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறும்.
அதேவேளையில் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு சேவை செய்வதிலும்
தங்களது தலைமையிலான அரசுகளை அதற்கான கருவியாக பயன்படுத்துவதிலும்,
அதன்மூலம் எல்லாவிதமான முறைகளிலும் தங்களுக்கான சொத்துக்களை குவித்துக்
கொள்வதிலும் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆட்சி நடத்துகின்ற, அரசை
இயக்குகின்ற கட்சிகளின் தன்மையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன.
இன்னுமொரு மாற்றம் என்னவென்றால், எல்லா முதலாளித்துவ தேர்தல் அரசியல்
கட்சித் தலைவர்களும் தங்களது பினாமிகளின் (சாதிக் பாட்சா, பல்வா போன்ற
பினாமிகளின்) பேரில் சுயநிதிக் கல்லூரிகள் நடத்துகிறார்கள்; ரியல் எஸ்டேட்
தொழிலில் கோடி கோடியாக சொத்து சேர்க்கிறார்கள்; மணல் திருட்டு நடத்தி
கொள்ளையடிக்கிறார்கள்; கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பங்குதாரர்களாக
உள்ளனர். கனிம வள சுரங்கத் தொழில் நடத்தி கொள்ளையடிக்கிறார்கள். சொந்த
மாநிலத்தில் தொழில் நடத்தினால் தெரிந்து விடும் என்பதால் வெளிமாநிலங்களில்
தொழில் நடத்துகிறார்கள். இவ்வாறு அரசியல்வாதிகள் முதலாளிகளாக
மாறியுள்ளனர். இதன் மறுபக்கமாக முதலாளிகள் குறிப்பாக, அவர்களின் இளைய
வாரிசுகள் இன்று அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். முதலாளி வர்க்கத்திற்காக
அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் ஆள்வது மாறி, முதலாளி வர்க்கத்தினரே இன்று
நேரிடையாக ஆட்சி செலுத்துவதும், முதலாளிகள், நிலப்பிரபுக்களால்
சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் ஏழைகள், தலித்துகள்,
பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின்
முன்னேற்றத்திற்காகவும் ‘சோசலிசம்’, ‘சமூக நீதி’ போன்ற கொள்கைகளின்
அடிப்படையில் வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்ற திட்டங்களைப்
போட்டு அரசியல் சேவை செய்பவர்கள், தொண்டாற்றுபவர்கள் என்ற நிலைமாறி
அவர்களே முதலாளிகளாக மாறி நேரடியாக சுரண்டுபவர்களாகவும்
ஒடுக்குபவர்களாகவும் மாறிவிட்டனர்.
அரசியல்வாதிகளும், முதலாளிகளும் இணைந்த ஒரு ஒட்டு வகைப் பிரிவினர்
(ஒட்டு மாங்காய் போல) தான் இன்று கட்சிகளையும் அரசுகளையும் ஆள்கிறார்கள்;
நிர்வகிக்கிறார்கள். இதன் விளைவாக அரசு சொத்துக்களையும், அரசு கஜானாவையும்
நாட்டின் இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் சட்டபூர்வமாகவே,
கொள்கை முடிவுகளின்படியே பகற்கொள்ளையடிப்பது அதிகரித்து வருவதோடு,
இவர்களின் வரிஏய்ப்பு, தில்லுமுல்லுகளும் அதிகரித்துள்ளன. இவற்றில்
புதுப்புது நுட்பங்களும் புகுத்தப்பட்டுள்ளன; இந்த வழிமுறைகளில்
ஈட்டப்படும் கருப்பு பணமும் பன்மடங்கு பெருகிவிட்டது. அவற்றை
வெளிநாடுகளுக்கு கடத்தும் ஹாசன் அலி போன்ற ஹவாலா ஏஜெண்டுகளும் நீரா ராடியா
போன்ற அரசியல் தொழில் புரோக்கர்களும் அவர்களின் செல்வாக்கும் அதிகார
பலமும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
ஹசன் அலி ஒரு நபர் அல்ல; அவனுக்கு பின்னால் கார்ப்பரேட் முதலாளிகள்,
மத்திய மாநில அமைச்சர்கள், தேசியக் கட்சிகளின் பெருந்தலைவர்கள், உயர்மட்ட
அதிகாரிகள், நீதிபதிகள், ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் கும்பல்கள்
ஆகியவர்கள் உள்ளனர். அவன் மீது கைவைத்தால் இந்த அத்தனை சக்திகளையும்
எதிர்த்து நிற்க வேண்டும்; ஹசன் அலியும் அவனது கூட்டாளிகளும் ஏறத்தாழ
72,000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளனர். அவன் தாவூத் இப்ராஹிமுடனும் ஆயுதக்
கடத்தல் பேர்வழி ஆதனன் கஷோகியுடனும் தொடர்பு வைத்துள்ளான். 35,000 கோடி
ரூபாய்களை ஹவாலா வழிமுறை மூலம் (அதாவது சட்டவிரோதமான பணப் பரிமாற்றத்தின்
மூலம்) வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளான் என்று அரசாங்கமே குற்றம்
சாட்டியுள்ளது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 10.3.11); 1984-இல் ஒரு டாக்டர் மீது
ஆசிட் வீசி தாக்கிய வழக்கு ஹசன் அலி மீது உள்ளது. இந்த வழக்கு தொடர்பான
பதிவேடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசு சொல்லியுள்ளது.
2008-இல் மூன்று பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்ததாக இவன் மீது வழக்கு உள்ளது.
தற்போது குதிரைப் பண்ணை அதிபராக உள்ள ஹசன் அலியின் வருமானம் ஆறு
ஆண்டுகளில் 54 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2001-02-ஆம் ஆண்டில் இவனது ஆண்டு
வருமானம் 528.9 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அடுத்த ஆண்டில் (2002-03-இல்
5404.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பின்னர் 2006-07ம் ஆண்டு 54,268 கோடி
ரூபாயாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(தினமலர், 21.3.11). 2002லிருந்து 2006-ம் ஆண்டுக்குள் அதாவது
நான்காண்டுகளில் அவனது வருமானம் 10 மடங்கு அதிகரித்துள்ளது.
சாதாரணமாக இதே விகிதத்தில்தான் அவனது சொத்து அதிகரித்திருக்கும் என்று
கணக்கிட்டால் கூட, 2006லிருந்து 2010-ம் ஆண்டிற்குள், அதாவது அடுத்த
நான்காண்டுகளில் இன்னும் ஒரு 10 மடங்கு அதிகரித்து 2010-ம் ஆண்டில் அவனது
வருமானம் 5,40,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் என்று சொல்லலாம். எனவே
தான், அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள்
அவன் மீது வழக்குகள் போடவே தயங்குகின்றன; மரியாதையுடன் அழைத்து வந்து
பிஸ்கட், டீ தந்து விசாரித்து விட்டு மரியாதையாக அனுப்பி வைக்கின்றன.
அம்பலமான ஒரு ஹசன் மட்டுமல்ல, அம்பலம் ஆகாமல் பல ஹசன் அலிகள்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ள
வேண்டும். விசாரணை அமைப்புகள் இவனைப் போன்றவர்கள் மீது கார, சாரமில்லாத
குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யும்; நாட்டின் திறமை வாய்ந்த
வழக்குரைஞர்கள் இவன்களுக்காக வாதாடுவார்கள். குற்றம் நிரூபிக்கப்படவில்லை
என்று உச்சநீதி மன்றமே இவர்களை விடுதலை செய்யும்.
ஹசன் அலிகளையும் நீரா ராடியாக்களையும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை
அதிகார வர்க்கத்தினரையும் சிபிஐயையும், தலைசிறந்த வழக்குரைஞர்கள், உயர்நீதி
மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதியையும் தங்களது செல்லப் பிராணிகள் போல் ஊட்டி
வளர்க்கும் ஒரு புதிய ஒட்டுவகை ஆளும் வர்க்கத்தினரின் கட்சிகளுடைய
ஏதோவொரு கூட்டணிதான் இத்தேர்தல்களில் ஆட்சிக்கு வரும். இவர்களின் ஒரே
நோக்கமே மக்கள் பணத்தையும் நாட்டின் வளங்களையும் பகற்கொள்ளையடிப்பதுதான்!
எனவே, இன்றைய நிலையில் முதலாளித்துவ தேர்தல் முறையில் மக்கள் ஏதாவது ஒரு
கோடீசுவரனைத்தான் எம்எல்ஏ ஆகவோ, எம்பி ஆகவோ தேர்ந்தெடுக்க முடியும்.
கோடீசுவரர்கள் தான் அமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் பிரதமர்களாகவும்
இருப்பார்கள். இவர்களின் நோக்கம் செயல்பாடுகள் பற்றி மேலே பார்த்தோம்.
இப்படிப்பட்ட கோடீசுவரர்களால், கோடீசுவரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சி
மக்கட்தொகையில் ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களுக்காக
பாடுபடுவார்கள் என்பது நடக்கவே நடக்காது.
கார்ப்பரேட்டுகள் மீதான அரசு அதிகாரம் விலகுதல் அரசின் மீதான கார்ப்பரேட் அதிகாரம் இறுகுதல்
ஆறாவதாக, ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் உலக
மேலாதிக்கம் மற்றும் உலகமயமாக்கலின் கீழ் ஒரு புதியவகை காலனியாதிக்கம்
அதாவது மறுகாலனியாக்கம் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில்
அமுல்படுத்தப்படுகிறது. தங்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள
தேசிய அரசு, தேசங்களின் இறையாண்மை, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத்
தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்டுள்ள
முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து அரசமைப்பை முடக்கி அவற்றை தங்களின்
(சர்வதேசியமாகியுள்ள ஏகாதிபத்திய நிதிமூலதனம் மற்றும் மேல்நிலை
வல்லரசுகளின்) ஆணைக்கு ஆடும் கைப்பாவைகளாக மாற்றி உள்ளன. இவற்றின்
கருவிகளான உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவைதான்
இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாளித்துவ
ஜனநாயக அரசாங்கங்களை கட்டுப்படுத்துகின்றன; ஆட்டுவிக்கின்றன.
“சந்தைக்கு எல்லாம் தெரியும்” என்ற புதிய தாராளவாத முழக்கத்தின்
அடிப்படையில் சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும்
மாற்றப்பட்டிருக்கின்றன. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான அரசியல்
ரீதியான உறவை, முதலாளிக்கும், நுகர்வோனுக்கும் இடையிலான பொருளாதார உறவின்
சட்டகத்தில் வைத்து, குடிமகனின் அரசியல் உரிமையை, நுகர்வோனின் பொருளாதார
உரிமையாக மாற்றும் புதிய அரசியல் வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது.
வேலையின்மை, வறுமை, தற்கொலைகள் போன்ற அனைத்தும் பெருகி வருவதற்கு ஊழல்,
அயோக்கிய அரசியல்வாதிகள் தான் காரணம் என்றும், தகுதியான, நேர்மையான,
நிர்வாக நுணுக்கங்கள் அறிந்த அதிகார வர்க்கத்தினரிடம் கொள்கை முடிவுகள்
எடுக்கும் அதிகாரத்தைக் கொடுப்பதன் மூலமே இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு
காண முடியும் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதிகார வர்க்கத்தின்
கையில் முடிவெடுக்கும் அதிகாரங்களும் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.
கழிவுநீர் அகற்றுதல், குப்பை வாருதல் தொடங்கி கல்வி, தொழில் வளர்ச்சி
உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் மற்றும் பொதுத்துறையை சீரமைத்தல்,
தனியாருக்கு விற்றல் ஆகிய அனைத்து பிரச்சினைகள் தொடர்பான முடிவுகள்
எடுக்கும் அதிகாரமும் ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் தரகு அதிகாரவர்க்க
முதலாளித்துவ நிறுவனங்கள் சார்ந்த வல்லுனர்களிடம் விடப்படுகின்றன.
மேலும் ஜனநாயக அமைப்பிற்கு வெளியே இந்நிறுவனங்கள் இருப்பதால், தமது
முறைகேடுகள் தொடர்பாக மக்களுக்கு சம்பிரதாயபூர்வமாக விளக்கத்தினைக் கூட
இவை அளிப்பதில்லை. இந்நிறுவனங்கள் அளிக்கின்ற ஆய்வறிக்கைகள்
நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்குமே இரகசியமாக்கப்பட்டு, அதிகார வர்க்கம்,
பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச நிதிநிறுவனங்கள் என்ற வட்டத்திற்குள்ளேயே
புதைந்து விடுகின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு
பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து அதிகார வர்க்கத்தையும் மக்களுக்கு
பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோரையும்
விடுவித்து விடுவதன் மூலம் அம்மணமான கார்ப்பரேட் அதிகார வர்க்கத்தின்
ஆட்சியே இன்று இந்தியாவில் நடந்து வருகின்றது. கார்ப்பரேட் முதலாளி
வர்க்கத்தின் மீது அரசு ஏற்கெனவே விதித்திருந்த கட்டுப்பாடுகள்,
ஒழுங்குமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜனநாயக
அமைப்பின் அதிகாரத்திலிருந்து கார்ப்பரேட் முதலாளி வர்க்கம்
விடுவிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த துறைகளிலும், முதலாளி வர்க்கத்தை
கண்காணித்து நெறிப்படுத்தும் துறைகளிலும் அரசு எந்திரம் வெட்டிக்
குறைக்கப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் புதிய தேவைகளை ஈடு செய்யும்
திசையில் அதிகார வர்க்கமும் போலீசு இராணுவமும் மென்மேலும்
பெருக்கப்படுகிறது. மேலும் பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு
இலாக்காக்களிலும் மக்கள் நலன் சார்ந்த துறைகளிலும் ஆட்குறைப்பு மற்றும்
அவுட்சோர்சிங் முதலான முறைகளைப் புகுத்தி அரசு நிர்வாகமும்
தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. கார்ப்பரேட் முதலாளிகளும் ஏகாதிபத்திய
தொண்டூழிய தன்னார்வ குழுக்களும் அரசின் இயற்கையான கூட்டாளிகள் என்று
முன்வைக்கப்பட்டு, அவர்கள் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு
வருகின்றனர்.
அரசு அதிகார நிறுவனங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அரசு சாரா
வல்லுனர்கள், தன்னார்வ குழுக்களின் இயக்குனர்கள் பங்கேற்கின்றனர். அரசுப்
பணிகள் தனியாருக்கு அவுட்சோர்சிங் செய்யப்படுகின்றன. அரசுத்துறை
தனியார்துறை கூட்டுத் திட்டங்கள் பெருகி வருகின்றன. பொதுத்துறை
நிறுவனங்கள் படிப்படியாக தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. முன்பு அரசு
ஏகபோகமாக இருந்து வந்த தொலைபேசி, மின்சாரம் போன்ற துறைகளில்
அத்துறைகளுக்குரிய அமைச்சரவைகளுக்கு வெளியே, அதற்கும் மேலே, சுயேச்சையான
அதிகாரம் கொண்ட ‘ஒழுங்குமுறை ஆணையங்கள்’ உருவாக்கப்பட்டு, அதன்மூலம்
அரசுத்துறைகளை திட்டமிட்டு நட்டப்படுத்தி, அப்புறம் அவற்றை ஒழிக்கும்
சதித்திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் தனியார் முதலாளிகளுடன்
தொடர்பு வைத்திருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் அத்தகைய உறவுகள்
முறைகேடானவை என்றும் நடவடிக்கைக்கு உரியவை என்றும் ஏற்கெனவே
கைக்கொள்ளப்பட்டு வந்து மரபுகள் கைவிடப்பட்டிருப்பது மட்டுமல்ல,
பொருளாதாரக் கொள்கை முடிவுகள் எடுக்கும் முன் எஃப்ஐசிசிஐ, சிஐஐ போன்ற
தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சங்கங்களை அரசே அழைத்து
கலந்தாலோசிக்கிறது. மக்கள் நலனையும் மக்கள் பிரதிநிதி களையும் புறந்தள்ளி
விட்டு, சமூகத்தின் பிரதிநிதியாகவும் அரசு அதிகாரத்தின் அங்கமாகவும் பெரும்
கார்ப்பரேட் முதலாளிகளின் வர்க்கத்தை நியமிக்கும் இந்த நடவடிக்கையை
நியாயப்படுத்துவதற்காக ‘கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்ச்சி’ என்ற
புதியதொரு கோட்பாடு புகுத்தப்பட்டுள்ளது.
“வேர்மட்ட ஜனநாயகம்” என்ற பெயரில் ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ
குழுக்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற அதிகார மையங்களாக ஆக்கப்பட்டுள்ளன.
ஏகாதிபத்தியங்களின் கண்களாகவும் காதுகளாகவும் விளங்கும் இந்த ஐந்தாம்படை
அமைப்புகள், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக மாற்றப்பட்டுள்ளன.
மேலிருந்து கீழ் என்ற அதிகாரப்படிநிலை முறை நிராகரிக்கப்பட்டு, உலக வங்கி,
ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய சர்வதேச நிதிநிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளைப்
புறந்தள்ளி நகராட்சிகளையும் ஊராட்சிகளையும் நேரடியாக தொடர்பு கொண்டு
திட்டங்களை அமுல் நடத்துகின்றன. அவற்றிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகளை
முனை மழுங்கச் செய்கின்றன.
நீர்வள மேம்பாடு, சாலை போடுதல், கல்வி, காடுவள நிர்வாகம்,
உள்கட்டுமானப் பணிகள் போன்ற இதுகாறும் அரசின் பொறுப்பு, கடமை என்று
கூறப்பட்டு வந்த துறைகள் பலவற்றிலும் தனியார்துறை புகுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக பொதுநலனுடன் தொடர்புள்ள இந்தத் துறைகளிலெல்லாம் தனியார்
புகுத்தப்படுவதால், பொதுச் சொத்துக்கள் கார்ப்பரேட் முதலாளி வர்க்க
ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டு மக்கள் இவற்றின் மீது எந்தவிதத்திலும்
உரிமை கோர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
மாறியுள்ள உலக நிலைமையில் தமது முழு ஆற்றலையும் வெளிக் கொண்டு வர
வேண்டுமானால், அரசுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள்,
இன்னபிற அரசு சார் நிறுவனங்களை தன்னாட்சி கொண்ட அமைப்புகளாக மாற்ற
வேண்டும் என்ற புதிய தாராளவாதத்தின் கோரிக்கையும் அமுலாக்கப்பட்டு
வருகின்றது. இதன் மூலம் இவற்றுக்கான அரசு மானியங்களை வெட்டுவது
மட்டுமின்றி, நாட்டின் பொதுத்தேவையின் அடிப்படையில் வகுக்கப்படும்
திட்டங்களுக்கு சேவை செய்வதாக இந்த அமைப்புகள் இருப்பதும் முடிவுக்குக்
கொண்டு வரப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் இலாபமீட்டும்
முதலாளித்துவ நிறுவனங்களைப் போலவே மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
பன்னாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ நிறுவனங்கள் இவற்றை நேரடியாக
தொடர்பு கொண்டு தம் தேவைக்கான ஆய்வுகளைச் செய்யும் ஆய்வுக் கூடங்களாகவும்
தமக்கு தேவைப்படுகின்ற துறைகளிலான பட்டதாரிகளை உருவாக்கித் தரும்
பட்டறைகளாகவும், தமது வர்த்தக முகவர்களாகவும் பரப்புரையாளர்களாகவும் இவற்றை
மாற்றியமைத்துள்ளன.
சாராம்சமாக சொன்னால், மக்கள் நலனை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற,
நிலைநாட்டுகின்ற அறுதி அதிகாரம் என்ற தகுதியிலிருந்து அரசு மெல்ல மெல்ல
அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது. தமது அடிப்படைத் தேவைகளையும் கவுரவமான
வாழ்க்கையையும் பெற முடியாத குடிமக்களுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்ய
வேண்டியது அரசின் பொறுப்பு என்பதை கருத்தளவில் கூட மறுகாலனியாதிக்க
கொள்கைகள் ஏற்பதில்லை. மாறாக, குடிமக்கள் அனைவரையும் நுகர்வோராகவும்,
எனவே, தமக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை விலைகொடுத்து வாங்கிக்
கொள்ள கடமைப்பட்டவர்களாகவுமே அது கருதுகிறது. கல்வி, மருத்துவம், தண்ணீர்
போன்ற அடிப்படைத் தேவைகளும் சாலைகள் முதலான சேவைகளும் வணிகப் பொருட்களாக
மாற்றப்பட்டு விட்டன. இதனால் குடிமக்களின் பாலான தனது கடமைகளிலிருந்தும்
அரசு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.
சமூக ரீதியான தீர்வுகளைக் கோருகின்ற சிக்கல்களுக்கு சமூக ரீதியான
தீர்வுகளை மறுத்து, தனிப்பட்ட தீர்வுகளை மக்களே தங்களது சொந்த பொறுப்பில்
செய்து கொள்ளுமாறு மாற்றப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பற்றாக்குறை போன்று
சூழலியல் தோற்றுவிக்கும் பிரச்சினைகளுக்கு மழைநீர் சேமிப்புத் திட்டம்,
புவி சூடேறுதல் பிரச்சினைக்கு கார்பன் வர்த்தகம், விவசாயத்தின் நசிவால்
பெருகியுள்ள கிராமப்புற வறுமை, கடன் சுமைக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள்,
அணைக்கட்டுகள் அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றிற்காக
கிராமம் கிராமமாக அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு ஒரு சமூகம் என்ற
வகையில் மறுவாழ்வு வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கு தனிப்பட்ட ஈட்டுத்தொகை
வழங்குதல் என எல்லாப் பிரச்சினைகளிலும் தனிப்பட்ட தீர்வுகளை முன்வைப்பதன்
மூலம் ஒரு சமூகம் என்ற வகையில் அரசியல் ரீதியாக சிந்திக்கவும் திரளவும்
விடாமல் மக்களின் சிந்தனையையே மறுகாலனியாதிக்க கொள்கைகள் விலங்கிட்டு
வைத்துள்ளன.
அதற்கேற்ப இவ்வாறு மறுகாலனியாதிக்க முறையிலான சுரண்டல் ஆதிக்கத்தின்
கீழ், இந்திய அரசின் கட்டுமானம், அதன் பாத்திரம், செயலாற்றும் முறைகள்,
சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள்
பகற்கொள்ளைக்கான ஒரு கருவியாக வெளிப்படையாகவே பறைசாற்றிக் கொள்ளும்
அரசாக, சோசலிசம், காந்தியம், சமூகநீதி போன்ற பாசாங்குகள் எதுவும்
இல்லாமல், நிலையான ஆட்சியை நிலைநாட்டும் வலுவான அரசாங்கம் என்ற இலச்சினை
பொறித்த அரசாக மாற்றப்பட்டு விட்டது.
மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் அரசுக் கட்டமைப்பு:
தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய தாராளவாத கட்டுமான
சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து சரியாக சொன்னால்
மேல்நிலை வல்லரசுகளின் உலக மேலாதிக்கத்திற்கான, சர்வதேசியமயமாகி
பிரம்மாண்டமாகப் பெருகிவிட்ட நிதிமூலதனம் மற்றும் தேசங்கடந்த தொழில்
கழகங்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளான இந்தியப் பெருமுதலாளிகளான தரகு
அதிகாரவர்க்க முதலாளிகள் ஆகியோரின் தடையற்ற சுரண்டலுக்கான, நமது பணம்,
நமது உழைப்புச் சக்தி, அரசு சொத்துக்கள், நாட்டின் இயற்கை வளங்கள்
ஆகியவற்றை பகற்கொள்ளையடிப்பதற்கான இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகளும்
திட்டங்களும் புகுத்தப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து கடந்த இருபது ஆண்டு
களில், இவைகளின் இந்த நோக்கங்களை அடிபணிந்து அப்படியே நிறைவேற்றும்
வகையில் அரசு, அரசியல் கட்சிகள், தேர்தல் ஆகியவைகளின் பாத்திரம்,
கட்டமைப்பு, செயல்படும் முறைகள் ஆகியவையெல்லாம் மாற்றியமைக்கப்பட்டு
வருகின்றன.
மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்படுவதற்கு முன்பு, அன்னிய
மூலதனத்தின் மீதான தேசிய அரசுகளின் அதிகாரம் கேள்விக்கிடமற்றது என்றும்,
இந்த அதிகாரம் தேசிய இறையாண்மையின் பிரிக்கவொண்ணாத அங்கம் என்று
சொல்லப்பட்டது. நடைமுறையில் இது முழு அளவில் இல்லை; நவீன காலனிய
கொள்கைகளுக்கு ஏற்ப அரைகுறையாகவே இருந்தது. இந்த அதிகாரத்தின்
அடிப்படையில்தான் ஏகாதிபத்திய நிறுவனங்களின் சொத்துடமைகளை முன்பு இந்திய
அரசு நாட்டுடைமை ஆக்கியது. ஏகாதிபத்திய தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு
தொழில்களை அழிக்கின்ற வகையிலான முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளில்
ஈடுபடுவதையும், உள்நாட்டு அரசியலில் தலையிடுவதையும் தடுக்க தனிச்சிறப்பான
சட்டங்களை இயற்றியது. (அன்னிய செலாவணியை நெறிப்படுத்தும் சட்டம், ஏகபோக
கட்டுப்பாடு வர்த்தக நடவடிக்கைகள் சட்டம் போன்றவை இதற்கு
எடுத்துக்காட்டுகள்)
ஆனால், இன்று மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்பட்டதிலிருந்து அதன்
தேவைக்கேற்ப அரசின் கட்டுமானமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி
தாராளமயமாக்கல் மற்றும் மூலதனக் கணக்கு தாராளமயமாக்கல் என்ற
‘சீர்திருத்தங்கள்’ மூலம் சர்வதேச நிதிமூலதனத்தின் ஆணைக்கு மட்டும் சேவை
செய்யும் பணிப்பெண்ணாக அரசின் பாத்திரமும் சட்டதிட்டங்களும்
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசங் கடந்த தொழிற்கழகங்கள் எப்படியெல்லாம்
விரும்புகிறார்களோ அப்படியெல்லாம் நமது நாட்டின் இயற்கை வளங்களையும், அரசு
சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும், பொதுத்துறையையும்
பகற்கொள்ளையடிப்பதற்கான கருவியாக, ஆயுதமாக அரசின் கட்டுமானமும்
சட்டதிட்டங்களும் மாற்றப்பட்டு வருகின்றன. அமெரிக்க மேல்நிலை வல்லரசின்
உலகமேலாதிக்கத்திற்கு அடியாளாக செயல்படும் வகையில் இந்தியாவின்
வெளிநாட்டுக் கொள்கையும் இராணுவத்தின் பாத்திரமும்
மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனவே, நாம் வழக்கமாக சொல்லும் முதலாளித்துவ போலி ஜனநாயக வகைப்பட்ட
அரசு, அரசியல் கட்சிகள், தேர்தல் முறைகள் ஆகியவற்றின் பாத்திரம்,
கட்டமைப்பு, செயல்பாடுகள் எல்லாம் மறுகாலனியாதிக்க காலகட்டத்தில்
மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய அரசுகள், தேசிய இறையாண்மை கொண்ட
அரசுகள் என்பவையெல்லாம் தகர்க்கப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சியை
அமல்படுத்தும் கருவியாகவே இந்திய அரசு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
காலனியாதிக்க எதிர்ப்புக் கட்டத்தின் மிச்ச சொச்சங்களாகவும், வளர்முக
நாடான இந்தியாவின் அரைகுறை இறையாண்மையானது சர்வதேச நிதி மூலதனத்திற்கு
அன்று உருவாக்கி வைத்திருந்த தடைக்கற்களாகவும் இருந்த விதிமுறைகள்,
சட்டங்கள் ஆகியவை தகர்க்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய விதிமுறைகள்
சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உலக மேலாதிக்க அரசாக
உருவாக்கப்பட்டிருக்கும் உலக வர்த்தகக் கழகத்தின் கைப்பாவையாக, இந்திய
அரசின் கட்டமைப்பு மாற்றப்பட்டு வருகின்றது. தேர்ந்தெடுக்கப்படும்
அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும்
பொருளாதாரத் தேவைகள் தொடர்பான சட்டங்களை இயற்றவோ திட்டங்களைத் தீட்டவோ
இல்லாமல், சர்வதேச நிதிமூலதனத்தின் ஆணைக்கு ஆடுவதாகவே அரசு மறுகட்டமைப்பு
செய்யப்பட்டுள்ளது.
பழைய உள்ளடக்கத்தையும்கூட இழந்துவரும் போலி ஜனநாயகம்!
மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக, இறையாண்மையை முற்றிலுமாக இழந்து
வருகின்ற இந்தியாவில், பழைய முறையிலான முதலாளித்துவ போலி ஜனநாயகமே கூட
தனது உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. அனைத்து மக்களுக்கு
வாக்குரிமை என்பது மட்டுமே ஜனநாயகத்திற்கான அளவுகோலாக மாற்றப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் வழியே தனியார்மய தாராளமய கொள்கைகளை
நிறைவேற்றிக் கொள்ள சட்டபூர்வமாக நியாயம் தேடிக் கொள்ளவே ஆளும்
வர்க்கங்கள் தேர்தல்களை இன்று நடத்துகின்றன.
முதலாளித்துவ போலி ஜனநாயகத்தின் வர்க்க சாராம்சம் வர்க்க உள்ளடக்கம்
மாறாமல் இருக்கும்போதே (அதில் கூட தேசங்கடந்த தொழில்கழக முதலாளிகள்
மற்றும் சர்வதேச நிதிமூலதன கும்பல்கள் மற்றும் அவர்களின் இளைய பங்காளிகளாக
உள்ள தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் பலம் அதிகமாக உள்ளதுடன்
அவர்கள் ஆதிக்கத்திலும் உள்ளனர். நிலப்பிரபுக்களின் எண்ணிக்கையும் பலமும்
பங்கும் மிகக் குறைந்ததாகவே மாறிவிட்டது) அரசு எந்திரம், அரசாங்கம்,
அரசியல் கட்சிகள் ஆகியவைகளின் கட்டுமானம், பாத்திரம், பணிகள்,
சட்டதிட்டங்கள் எல்லாம் மாற்றப்பட்டு அதற்கேற்ப ‘ஜனநாயக தேர்தலின்’
நோக்கமும் அதில் மக்களின் பாத்திரமும் வெட்டி சுருக்கப்பட்டு
மாற்றப்பட்டுள்ளன.
எனவே, எந்தக் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும்
இந்த அரசை மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும்தான் பயன்படுத்த
முடியும். வேறு எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத வகையிலும், அத்தகைய
தன்மையிலும்தான் கட்டப்பட்டிருக்கின்றது. மறுகாலனியாதிக்கம் என்ற
சட்டகத்திற்குள் நின்று கொண்டு சில சீர்திருத்தங்கள் செய்யலாம்;
மக்களுக்கு சில சலுகைகள், மானியங்கள், இலவசங்கள் வழங்கலாம்; முற்றாக,
எதிரான கொள்கைகளை அமுல்படுத்த முடியாது. அமுல்படுத்த முயற்சிப்போர்
தூக்கியெறியப்படுவார்கள்;
நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வேலிக்கு வெளியே நிற்கின்ற நக்சல்பாரி புரட்சியாளர்களால் மட்டும் இந்த அரசு எந்திரத்தை தகர்த்தெறிந்து, மறுகாலனியாதிக்கத்தை தூக்கியெறிந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உண்மையாக சேவை செய்கிற ஒரு புதிய அரசமைப்பை, புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க முடியும்.
ஆகையால் வாக்களிக்கும் உரிமை என்பது ஆகமிகக் கொடூரமான மறுகாலனியாதிக்க
வடிவிலான ஆதிக்கத்தையும் சுரண்டலையும் மக்கள் மீது திணித்து அமுல்நடத்த,
எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கொடுக்கலாம் என்பதைத்
தீர்மானிப்பதற்கான உரிமை மட்டுமே.
தேர்தல் அரசியல் என்பது காந்தியம், சோசலிசம், தாராளவாதம், சமூகநீதி
என்று வெவ்வேறு கொள்கை பேசும் கட்சிகளுக்கிடையிலான மோதலாக இனிமேலும்
இல்லாமல் போய்விட்டதால், சில நட்சத்திர தலைவர்களுக்கிடையிலான
போட்டியாகவும், கட்சிகளுக்கிடையிலான விளம்பர போராகவும், நடிகர்கள்,
விளையாட்டு வீரர்கள் போன்ற நட்சத்திரங்களால் விளம்பரப்படுத்தப்படும்
சந்தைப் பொருளாகவும் விலைக்கு வாங்கப்படும் பண்டமாகவும் ஓட்டுச்சீட்டு
அரசியல் மாற்றப்பட்டு விட்டது.
மறுகாலனியாக்கத்துக்கு நியாயம் தேட மட்டுமே தேர்தல்!
இன்று எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், சீர்திருத்தவாத, போலி
கம்யூனிச, போலி புரட்சிகர கட்சிகள் அனைத்தும் நேரடியாகவோ, சுற்றி
வளைத்தோ மறுகாலனியாக்கத்திற்கு சேவை செய்கின்ற கட்சிகளாகவே மாறிவிட்டன;
கொள்கைகள், இலட்சியங்கள், நோக்கங்கள் என்று எதுவும் இக்கட்சிகளுக்கு
கிடையாது. கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு அடியாளாக வேலை
செய்யும் ‘எஸ் பாஸ்’ ஆட்களாக மாறிவிட்டன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னின்ன கொள்கைகள்,வளர்ச்சித் திட்டங்களை
அமுல்படுத்துவோம்; இவ்வாறு வேலையின்மையைப் போக்குவோம்; விலைவாசியைக்
குறைக்க இன்னின்ன நடவடிக்கைகள் எடுப்போம் என்று நாட்டுநலன், மக்கள் நலனை
முன்னிறுத்துகின்ற கொள்கைகளோ வளர்ச்சித்திட்டங்களோ பொருளாதார
திட்டங்களோ எதுவும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இல்லை; தப்பித்
தவறி சிலவற்றை அவர்கள் குறிப்பிட்டாலும், அதெல்லாம் ‘வாக்காளர்களைக் கவர
வேண்டும், மற்றபடி செய்யப்போவதில்லை’ என்று முடிவெடுத்துக் கொண்டு தான்
குறிப்பிடுகிறார்கள்.
“சும்மா ஒரு சம்பிரதாயத்திற்குத்தான் தேர்தல் அறிக்கைகளை
வெளியிடுகிறோம்; யார் இதைப் படித்து நினைவில் வைத்துக் கொண்டு கேட்கப்
போகிறார்கள். அப்படியே கேட்டாலும் சமயத்திற்கு தகுந்த ஒரு சாமர்த்தியமான
பதிலை சொல்லிக் கொள்ளலாம்’” என்று உள்மனதில் கருதிக் கொண்டுதான் தேர்தல்
அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஒரே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின்
வேறுபட்ட இலவசங்கள், முரண்பட்ட வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கைகள்
இதைத்தான் காட்டுகின்றன. மேலும் எப்படி மாற்றி பித்தலாட்டம் செய்தாலும்
ஒன்றும் ஆகிவிடாது; நமக்கு ஓட்டு கிடைக்கும் அந்த அளவுக்கு மக்கள்
இளிச்சவாயர்கள், ஏமாளிகள் என்று மக்களை மிகவும் மலிவாக, இழிவாக
அற்பர்களாகவே இவர்கள் கருதுகிறார்கள்.
நமது வரிப்பணம், அரசு சொத்துகள், நாட்டின் இயற்கை வளங்கள்,
பொதுத்துறைகள், மக்களின் உழைப்பாற்றல் ஆகியவற்றை கார்ப்பரேட் முதலாளிகள்
பகற்கொள்ளையடிக்கவும் இவர்கள் இலாப வேட்டைக்காக விவசாயிகள், சிறு
உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், குட்டி முதலாளிகள், ஆதிவாசிகள்
ஆகியவர்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை
பலாத்காரமாக பறித்துக் கொண்டு, அவர்களை நகர்ப்புற உழைப்புச் சந்தைகளை
நோக்கி விசிறியடிப்பதிலும், அங்கு இந்த கார்ப்பரேட் முதலாளிகள் அவர்களை
கொடூரமாக சுரண்டிக் கொள்ளை இலாபமடிக்கவும் கொள்கை முடிவெடுத்து,
சட்டபூர்வமாக அரசு எந்திரத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி சேவை செய்யும்
கொள்கையில் மட்டும் எல்லாக் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றனர்.
கார்ப்பரேட் முதலாளிகள்தான் ஊழலுக்கான ஊற்றுக்கண் என்ற உண்மையும் ஊழலை விட
பகற்கொள்ளையில் இவர்கள் அடிக்கும் பணம் பன்மடங்கு அதிகம் என்ற உண்மையையும்
வெளியில் சொல்லாதிருப்பதிலும் இவர்கள் ஓரணியில் இருக்கின்றனர். இந்த
சேவையை யார் சிறப்பாக செய்வது என்று போட்டி போட்டுக் கொள்கின்றனர்.
கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்க சேவை செய்து அதற்கு சேவைக்
கட்டணமாக (அதாவது இலஞ்சமாக) ஒரு கவளத்தை (யானைக்கு கவளம் கவளமாக, அதாவது
பெரிய பெரிய உருண்டையாகத்தான் உணவளிப்பார்கள். அதில் ஒரு கவளத்தை எடுத்துப்
போட்டால் பல்லாயிரக்கணக்கான எறும்புகளுக்கு தீனியாகும் என்பார்கள்)
தாங்கள் எடுத்துக் கொண்டு கொழுக்கலாம் என்பதற்காக மட்டுமே தேர்தலில்
நிற்கிறார்கள்; இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விவகாரத்தில் கார்ப்பரேட்
யானைகளின் வயிற்றுக்குள் போன பல கவளங்கள் போக ஒரு கவளத்தைத்தான்
கருணாநிதி, ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், கனிமொழி, அ.ராசா, சோனியா
குடும்பத்தினர் ஆகியோர் பங்கிட்டுக் கொண்டனர். கார்ப்பரேட்
முதலாளிகளுக்கிடையிலான போட்டி காரணமாகவோ, கட்சித் தலைவர்களின் குடும்ப
சண்டை, கோஷ்டி சண்டை காரணமாகவோ இந்த இலஞ்சம் அம்பலமானால், அதைப்
பயன்படுத்தி, வாய்ப்பிழந்த எதிர்கட்சி கூப்பாடு போடுவதும், பின்னர் இந்த
இலஞ்சம் முறைகேடுகளை சொல்லி, அடுத்த தேர்தலில் பதவிக்கு வந்து “காஞ்ச மாடு
கம்பங் கொல்லையில் புகுந்த மாதிரி” பதவியிலிருந்த கட்சிக்காரர்களை விட
பன்மடங்கு சம்பாதிப்பதும், அதற்கடுத்த தேர்தலில், பழைய கட்சி மீண்டும்
ஆட்சிக்கு வந்து இவர்களை விட பன்மடங்கு கூடுதலாக கொள்ளையடிப்பதும் என
மாற்றி மாற்றி கோடீசுவர அயோக்கியன்கள் கொள்ளையடிப்பதற்கான சாதனமாகவே
தேர்தல் இருக்கின்றது.
எனவே, ஓட்டளிப்பது, வாக்குரிமை
என்பது நமது பணத்தை கோடி கோடியாக சுருட்டிக் கொள்ள எந்த கோடீசுவர
அயோக்கியனை தேர்ந்தெடுப்பது எந்த கபட வஞ்சகனை முதல்வராக்குவது என்பதற்கான
உரிமை மட்டுமே.
முதலாளிகளாகும் அரசியல்வாதிகள்.. அரசியல்வாதிகளாகும் முதலாளிகள்!
சட்டமன்ற தேர்தலுக்காக ஒரு தொகுதியில் குறைந்தது ஐந்து கோடி ரூபாய்கள்
செலவு செய்ய தயாராக இருக்கின்றவனை மட்டும்தான் எல்லாக் கட்சிகளும்
வேட்பாளராக நிறுத்துகின்றன. எழுதப்படாத ஒரு விதியாகவே இது
செயல்படுத்தப்படுகின்றது. ஒரு தேர்தலுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவு
செய்யும் தகுதியுள்ள கோடீசுவரன் யோக்கியனாக இருக்க முடியாது என்பதும்
யோக்கியன் எவனும் இப்படிப்பட்ட கோடீசுவரர்களாக முடியாது என்பதும்
எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மை. அவன் ஐந்துகோடியை முதலீடு செய்வதே சில
பத்து கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கலாம் என்பதற்காகத்தான்.
மேலும் ஏற்கெனவே ஓரிடத்தில் குறிப்பிட்டபடி, முதலாளிகளே
அரசியல்வாதிகளாகவும் அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறி, இணைந்து ஒரு
ஒட்டுரக முதலாளித்துவ பிரிவு உருவாகியுள்ளது. எனவே, இவர்களைப்
பொருத்தவரையில் தனியார்மயம் தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்க கொள்கைகள்
ஓர் அரசியல் கொள்கையாக அன்றி, சொந்தக் கொள்கையாகவே ஆகியுள்ளது. தரகு
அதிகார வர்க்க முதலாளிகளான பஜாஜ், மல்லையா, அனில் அம்பானி ஆகியோர்
நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற்றிருக்கிறார்கள். கருணாநிதி
போன்றோரின் குடும்பம் ஒரு தரகு அதிகார முதலாளித்துவ குடும்பமாக
மாறியுள்ளது போன்றவை சில எடுத்துக் காட்டுகள்; இன்று இவர்களின் வாரிசுகள்
அரசியலில் பெருமளவு நுழைந்துள்ளனர்.
பல்வேறு தொழில், சேவைத்துறைகளை கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும்
அமைக்கப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இந்த முதலாளிகளே இடம்
பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் என்ற தனியார்
விமானக் கம்பெனியின் முதலாளி விஜய் மல்லையா சிவில் விமான
போக்குவரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவர். தகவல்
ஒலிபரப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் லோக்மத் பத்திரிகை
குழுமத்தின் முதலாளி விஜய் தொரிதா ஓர் உறுப்பினர். தரகு அதிகாரவர்க்க
முதலாளிகள் பலரின் கம்பெனி விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராகவும்
வழக்குரைஞராகவும் செயல்பட்ட சிதம்பரம்தான் பின்னர் நிதியமைச்சராக நியமனம்
பெற்றார்.
எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழுகின்ற மக்களையும், தற்கொலைக்குத்
தள்ளப்படும் விவசாயிகளையும் இன்னும் பிற உழைக்கும் மக்களையும், 234
எம்எல்ஏக்களும் கோடீசுவரர்களாக இருக்கும் சட்டமன்றமும் அமைச்சரவையும் வாழ
வைக்கும் என்று நம்பி ஓட்டு போடுவது மிகப் பெரிய ஏமாளித்தனம்! இதனை உரிமை
என்று சொல்வது ஆக மிகப் பெரிய பித்தலாட்டம்!
அரசியலிலிருந்து மக்களை விலக்கும் மறுகாலனியாக்கம் அதனை அமலாக்கும் தேர்தல் ஆணையம்!
அடுத்ததாக, அதிகார வர்க்கத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளான அதிகாரிகளும்,
சட்டமன்றம், நாடாளுமன்றங்களின் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் நேரடியாக
பங்கேற்கும் அளவிற்கு மாற்றப்பட்டிருக்கும் இந்த அமைப்பு முறை மீது மக்கள்
நம்பிக்கை இழந்து விடாமல் தடுப்பதற்குத்தான் தேர்தல் ஆணையமும் களத்தில்
இறக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் கடுமையான மாதிரி
நன்னடத்தை விதிகளும் அவற்றை அமுலாக்க அது எடுத்து வரும் அதிரடி
நடவடிக்கைகளும் ஓட்டுக் கட்சிகள் செய்யும் தில்லுமுல்லுகளையெல்லாம்
கண்டுபிடித்து தடுத்து தேர்தலை நேர்மையாக நடத்தும் என்ற பிரமையை மக்களிடையே
உருவாக்குவதற்கான ஏமாற்று வித்தைகளே! தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடி
நடவடிக்கைகளின் இன்னொரு நோக்கம் உழைக்கும் மக்களை தேர்தல்
நடைமுறையிலிருந்து விலக்கி வைப்பதுதான்! ஓட்டுப் போடுவது தவிர அவர்களுக்கு
வேறு எந்த பாத்திரமும் இல்லாமல் செய்வதுதான்! ஏனென்றால், மறுகாலனியாதிக்க
சித்தாந்தப்படி மக்களை அரசியலிலிருந்தே விலக்கி வைக்கவேண்டும்;
மார்க்சியம், காந்தியம் தேசியம் போன்ற எந்த இசங்களிலும் அறநெறிகள், சமூக
மதிப்பீடுகள் எதிலும் நம்பிக்கையோ, மதிப்போ, அக்கறையோ அற்றவர்களாகவும்
அவற்றை பிற்போக்கானதாகவும் பத்தாம்பசலித்தனமாகவும் கருதி முகம் சுளித்து
ஒதுக்கித் தள்ளுபவர்களாகவும் மாற்ற வேண்டும்.
மறுகாலனிய சித்தாந்தம், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவில்
அரசியல் குடிமகன் என்ற அம்சத்தையே ஒழித்துவிட்டு, குடிமக்களை வெறும்
நுகர்வோராக மட்டுமே கருதி நடத்துகிறது. இதற்கேற்பவே அரசும் அரசியலும்
மாற்றப்பட்டுள்ளது. “குடிமகனான உனது பணி ஒழுங்காக வேலைக்கு போவது;
கடுமையாக உழைத்து பணம் ஈட்டுவது; அதை வைத்துக் கொண்டு வகைவகையான
நுகர்பொருட்கள், புதிதுபுதிதாக நவீனமாக வந்து கொண்டிருக்கும் செல்போன்
போன்ற நுகர்பொருட்களை வாங்கி அனுபவி; விதவிதமான உணவுப் பொருட்களையும்
நொறுக்குத் தீனிகளையம் வாங்கி ருசித்து இன்புறு; மலிவான கிடைக்கும்
டிவிடிக்களை வாங்கி வந்து கிளுகிளுப்பூட்டும் திரைப்படங்களைப் பார்;
பாடல்களை ரசித்துக் கேள்; கிரிக்கெட் பார், நன்றாக தண்ணி போட்டு ஜாலியாக
இரு. கும்பலாக சுற்றுலா சென்று அனுபவி; திருவிழா கொண்டாடு; சமூக சேவை,
அரசியல் என்று போய் இவ்வளவையும் இழக்காதே; இளமையை வாழ்க்கையை வீணடிக்காதே’
என்று தான் மறுகாலனிய சித்தாந்தம் கற்பிக்கின்றது. இத்துடன் முதலாளித்துவ
ஜனநாயகத்தின் சீரழிவையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,
“அரசியல் ஒரு சாக்கடை; அந்தப் பக்கம் போகாதே” என்றும் பரப்புரை செய்கிறது.
பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களிலிருந்து அறநெறிகளை கற்பிக்கும் பாடங்கள்
நீக்கப் பட்டிருக்கின்றன. மாற்றாக நடனம், யோகா, தற்காப்பு கலைகள்
ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதுடன், சுயமுன்னேற்றக் கண்ணோட்டத்தில்
‘படித்து வேலைக்கு போகவேண்டும்; நன்றாக சம்பாதிக்க வேண்டும்; அதற்கு
எந்தவித முறையையும் கையாளலாம். வாழ்க்கையை வகைவகையாக அனுபவிக்க வேண்டும்’
என்ற மனோபாவத்தையும், சுயநல போட்டி மனப்பான்மையையும் உருவாக்குவதன் மூலம்
மாணவப் பருவத்திலேயே வளரும் தலைமுறையினர் அரசியல் பக்கம் தலைகாட்டாமல்
தடுக்கப்படுகிறார்கள். இதற்கேற்ப பள்ளி, கல்லூரிகளில் மாணவர் பேரவைத்
தேர்தல்கள் தடைச் செய்யப்படுகின்றன.
வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத்திட்டங்களில் ஊராட்சி, நகராட்சி
தலைவர்கள், தன்னார்வ குழுக்கள், மகளிர் சுயநிதி உதவிக் குழுக்கள் ஆகியோரை
பங்கேற்க வைப்பது; குளங்கள், ஏரிகள், ஆறுகள், காடுகள் போன்ற இயற்கை
வளங்களை பராமரிப்பது பயன்படுத்துவதற்கான சுயேச்சையான அதிகாரம் கொண்ட
குழுக்களில் மக்களில் சில முக்கியமானவர்களையும் மேலே சொன்னவர்களையும்
பங்கேற்க வைப்பது இதன் போக்கில் மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள்
ஆகியோருடன் கலந்தாலோசிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், தங்கள்
மூலம்தான் அரசாங்கம் நடத்தப்படுகின்றது என்ற எண்ணத்தை வேர்மட்ட அளவில்
ஏற்படுத்தி, அவர்களை அரசியல் பக்கம் போகாமல் தடுக்கும் உலகவங்கி திட்டமும்
அமுல்படுத்தப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை, நடத்த அனுமதித்தாலும்
ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத இரண்டு, மூன்று இடங்கள் தவிர பிற இடங்களில்
நடத்த அனுமதி மறுக்கப்படுவது, பேரணிகள், நடத்த, சுவரொட்டிகள் ஒட்ட தடை
போடப்படுகிறது. புதுப்புது அடக்குமுறை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.
இவை எல்லாவற்றின் நோக்கமும் ஒன்றுதான்; ஆகப் பெரும்பான்மையாக உள்ள
உழைக்கும் மக்கள் அரசியலையே வெறுத்து ஒதுக்க வேண்டும்; அரசியலில் ஈடுபாடு
கொள்ளக்கூடாது. அவர்களின் ஒரே அரசியல் நடவடிக்கை தேர்தல் வரும்போது
ஓட்டுப் போடுவது மட்டுமே. இவ்வாறு அவர்களை அரசியலிலிருந்து விலக்கி
வைப்பது, அரசியல் தீண்டாமையை அவர்கள் மீது ஏவி விடுவது என்பதுதான்
மறுகாலனியாதிக்க காலகட்டத்தின் நடைமுறையாகும். இந்த நோக்கத்தை
நிறைவேற்றத்தான் தேர்தல் ஆணையம் இம்சை அரசனைப் போல் ஆர்ப்பாட்டம் செய்து
வருகின்றது.
தொகுப்பாக,
இதுவரையில் நாம் விவரித்ததை தொகுத்து சாராம்சமாக சொன்னால், தனது
ஆதிக்கத்திற்கும் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள ‘தேசிய’
அரசு, தேசங்களின் ‘இறையாண்மை’, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத்
தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்ட
முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து நொறுக்கி வருகின்றது
சர்வதேசியமயமாகிவிட்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம். மேல்நிலை வல்லரசுகளின்
வெளிப்படையான தலையீடுகள் ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, உலகப்
பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான சர்வதேச நிறுவனங்கள் என்றழைக்கப்படும் உலக
வர்த்தகக் கழகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின்
ஆணைகளுக்கு ஆடும் அரசாகவே இந்திய அரசும் அதன் சட்டமன்றங்கள்
நாடாளுமன்றங்களும் மாற்றப்பட்டுள்ளன.
மேல்நிலை வல்லரசுகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் அதிகார வர்க்கங்களாலும்
தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழிற்கழங்களின் நிர்வாகிகளிலும் சர்வதேச
நிதிமூலதன கும்பல்களாலும் முதலாளித்துவ வல்லுனர்களாலும் நிரப்பப்பட்டுள்ள
இந்த நிறுவனங்கள்தான் (எந்த மக்களாலும் இவை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை)
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும்
இந்திய ஜனநாயகத்தை, அதன் அரசை, கட்டுப்படுத்துகின்றன, ஆட்டுவிக்கின்றன.
மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டுள்ள
இந்தியாவின் பொருளாதாரம் எப்படி பன்னாட்டு தொழிற்கழகங்கள் மற்றும்
சர்வதேச நிதிமூலதனத்தின் நலனுக்கேற்ப தனியார்மயம் தாராளமயம், உலகமயத்துக்கு
உட்படுத்தப் பட்டுள்ளதோ, அதேபோல இவைகளின் நலன்களுக்காகவும் அமெரிக்க
மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கத்திற்காகவும் தனியார்மய, தாராளமய,
உலகமயக் கொள்கைகள் அரசுக் கட்டமைப்புக்குள்ளும் புகுத்தப்படுகின்றன. அதன்
கட்டுமானம், சட்டங்கள், விதிமுறைகள், பணிகள், செயல்பாடுகள் எல்லாம்
மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ‘ஜனநாயக’ அரசமைப்பின்
கட்டுமானங்களிலும் அதன் நடைமுறைகளிலும் முதலாளித்துவ சந்தையின் விதிகள்
புகுத்தப்பட்டு அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதலாளித்துவ சந்தையின்
விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.
அரைகுறை இறையாண்மையையும் இழந்து வருகின்ற இந்தியாவில் நிலவுகின்ற
அல்லது மாற்றி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற போலி ஜனநாயகம் கூட அதன்
உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி,
மக்களைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஓட்டளிப்பதாக மட்டும் வெட்டி
குறுக்கப்பட்டு விட்டது. அதுவும் கூட, ‘தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள்
நாட்டு நலன், மக்கள் நலன் கருதி, விருப்பப்பட்டு, எந்தவித
நெருக்குதலுமின்றி சுதந்திரமாக சுயேச்சையாக தனியார்மய தாராளமய கொள்கைகளை
மேற்கொண்டு வருகின்றன’ என்று காட்டி மறுகாலனியாதிக்கத்திற்கு நியாயஉரிமை
பெறுவது என்ற காரணத்திற்குத்தான் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா ஆங்கிலேயர்களின் நேரடி காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த
காலகட்டத்தில், விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும்,
எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும் பதவிகளில் ஒட்டிக் கொண்டு சலுகைகளை
அனுபவிக்கவும் பொறுக்கித் தின்பதற்கும் விழைந்த நாட்டுப்பற்று அற்ற
பிழைப்புவாத கும்பல்களை ஊக்குவிக்கவும் மேலிருந்து திணிக்கப்பட்டது
நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகம். காலனியாதிக்கத்தை கட்டிக் காக்க ஆங்கில
ஏகாதிபத்தியவாதிகளின் கிரிமினல் மூளையில் உதித்த இந்த சாணக்கிய திட்டம்
வெற்றிகரமாகவே நிறைவேறிற்று என்று சொல்ல வேண்டும். காலனிய காலம் தொடங்கி
1950களின் தொடக்கத்தில் திணிக்கப்பட்ட நவீன காலனிய ஆதிக்க காலகட்டத்தில்
செழித்து வளர்ந்த அரசியல் பிழைப்புவாதமும் சீரழிவும் 1980, 1990களில் அதன்
உச்சத்தை எட்டியது. தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சிகள், கட்சித்
தாவல்கள், கூட்டணிகள் உடைவது, அரசாங்கங்கள் கவிழ்வது, புதுக்கூட்டணி, புது
அரசு, சில மாதங்கள் வருடங்களுக்குள் மீண்டும் கட்சி தாவல்கள், அரசுகள்
கவிழ்வது என்று நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடியது.
மேல்நிலை வல்லரசுகளின் தோற்றம், நிதிமூலதனம் சர்வதேசியமயமானது,
தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழில் கழகங்கள், அறிவியல் தொழில்நுட்பப்
புரட்சி, ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி ஆகியவைகளின் விளைவாக நவீன
காலனியாதிக்கம் அகற்றப்பட்டு மறுகாலனியாதிக்கம் இந்த காலகட்டத்தில்தான்
புகுத்தப்பட்டது. சர்வதேச வலைப்பின்னல்களால், ஒரே சங்கிலியால்
கட்டப்படிருந்த நிதி மூலதனத்தின் செயல்பாடுகளுக்கும் தேசங்கடந்த
தொழில்கழகங்களுக்கும் நாடாளுமன்ற அராஜகமும் நிலையற்ற ஆட்சிகளும் எதிரானவை;
எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தடைபோடுபவை; எனவே, அவற்றை ஒழிக்க
வேண்டியது அவர்களுக்கு அவசியமும் கட்டாயமும் ஆகியது. இதற்கேற்பவே
மறுகாலனியாதிக்க நலன்களுக்காகவே நிலையான ஆட்சி, சிறந்த அரசாளுமை என்ற
முழக்கங்களை முன்வைத்துள்ளனர். நிதிமூலதனம், பன்னாட்டு முதலாளிகளின்
தனியார்மய சுரண்டலும் ஆதிக்கமும் தங்கு தடையின்றி நடப்பதற்கு ஏற்ற நிலையான
ஆட்சி, சிறந்த ஆளுமை, வலுவான ஆட்சி (failed state ஆக இல்லாமல்) ஆகியவையே
தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரே இலக்காக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் என்பது, ஏகாதிபத்தியத்தின் பிள்ளைப்பருவத்தில்
அதாவது 20-ம் நூற்றாண்டின் துவக்க பத்தாண்டுகளில், நேரடி காலனியாட்சி
பிரதான வடிவமாக இருந்த காலகட்டத்தில், கம்யூனிச, தேசிய இயக்கங்கள் ஏற்றம்
பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நேரடிக் காலனிய ஆட்சியைப் பாதுகாக்க
ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டது. அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு
விடுதலைப் போராட்டங்களை நீர்த்துப் போக செய்வதற்கும் எதிர்ப்புகளை
நிறுவனமயமாக்குவதற்கும், பதவிகளில் ஒட்டிக் கொண்டு அரசு சன்மானங்களை
பொறுக்கித் தின்னவும் சலுகைகள் கௌரவங்களை அனுபவிக்கவும் நாட்டுப்பற்று
அற்றுப் போகும்படியான பிழைப்புவாத கும்பல்களை உருவாக்கவும் ‘ஜனநாயக
தேர்தல் அரசியலைப்’ புகுத்துவது ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு உகந்ததாக
இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான அரசியல், பொருளாதார
வளர்ச்சிப் போக்கின் விளைவாக மேல்நிலை வல்லரசுகள் அவற்றின் மேலாதிக்கம்,
ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் சீரழிவு காரணமாக
கம்யூனிச தேசிய இயக்கங்கள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உலக நிலைமை
ஆகியவற்றின் காரணமாக, மறுகாலனியாதிக்க முறையிலான காலனிய ஆட்சி வடிவத்தை
மேலாதிக்க வல்லரசுகள் பிரதானமாக கையாண்டு வரும் நிலைமையில் ஜனநாயகமும்
தேர்தலும் வெட்டி சுருக்கப்பட்டு பரந்துபட்ட மக்கள் அரசியலில் இருந்தே
விலக்கி வைக்கப்பட்டு வருகின்றனர்.
‘தேர்தல் அரசியல்’ சீரழிவின் விளைவாக பல்கிப் பெருகி பேயாட்டம்
போடுகின்ற பிழைப்புவாதக் கும்பல்கள் நாடாளுமன்ற அராகஜம் ஆகியவற்றினால்
பாதிக்கப்படாமல், சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களுக்கு இதுவரையிலிருந்த
வரம்புக்குட்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களையும்
பறித்துக் கொண்டு அவற்றை வெறும் ‘நீயா, நானா’ விவாத மன்றங்களாக்கி விட்டு,
அந்த மன்றங்களுக்கு வெளியே எல்லா அதிகாரங்களையும், கார்ப்பரேட்
முதலாளிகள், அவர்களின் கூலி வல்லுனர்கள், அதிகார வர்க்கத்தினர் நம்பகமான
அரசியல் அடிவருடிகள் ஆகியோரைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைக்கும் வகையில்
அரசின் கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் இன்னொரு பக்கமாகத்தான், எப்படியும் பணம் சம்பாதித்து உல்லாசமாக
வாழவேண்டும் என்கின்ற நெறியின்மையிலும், நுகர்வு வெறியிலும், போதையிலும்
சீரழிவிலும் மக்களை ஆழ்த்துவதும், கிரிக்கெட் திரைப்படம்செல்போன் போன்ற
மோகங்களால் மட்டுமே ஆட்டுவிக்கப்படுகின்ற, தேசப்பற்றோ, கொள்கை
இலட்சியங்களோ அற்ற நடமாடும் பிண்டங்களாக மக்களை மாற்றுவதும் திட்டமிட்டு
செய்யப்பட்டு வருகின்றது. காலனிய கட்டத்தில் தேர்தல் அரசியலைப் பகுத்தி
மக்களைச் சீரழித்த ஏகாதிபத்தியம், மறுகாலனிய கட்டத்தில் மக்களை அரசியல்
அற்றவர்களாகவும், அரசியலின்மீதே அருவெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றி
வருகின்றது. அரசியல் பச்சோந்தித்தனம், பச்சையான அம்மணமான, வெட்கம் மானம்
ஏதுமற்ற பிழைப்புவாத அரசியல் தகிடுதத்தங்களால் வெறுப்பின் எல்லைக்கே
சென்று, யாராவது நல்லவன் வந்து ஏதாவது நல்லது செய்ய மாட்டானா என
எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து, மக்களது மனம் இறுகி விட்டது. ஓட்டை
ஒரு சரக்காக கருதும் மனநிலைக்கு கருத்து ரீதியாகவே அவர்கள் வந்து
விட்டார்கள். அல்லது யார் அதிக பொருட்களும் இலவசங்களும் கொடுக்கிறார்களோ
அவர்களுக்கு ஓட்டை விற்கத் தயாராக இருக்கிறார்கள். “நீ எனக்கு பதவி தா;
நான் உனக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி தருகிறேன்” என்று பகிரங்கமாக
ஓட்டை விலைபேசுவதாக தேர்தலே மாறியிருக்கிறது.
“நல்லவன் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும்; ஆனால் அது எங்கே நடக்கப்
போகிறது?” என்று நொந்து கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் நாமும்
பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது.
நாடாளுமன்றத்தின் மீதான மாயையும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அது
அரசியல் ரீதியில் காலாவதியாகிவிட்டதா என்ற கேள்விக்கும் இடமில்லை.
ஏனென்றால், அந்த வேலையை மறுகாலனியாதிக்கவாதிகள் செய்து விட்டனர்.
எனவே, மக்கள் தங்களது அடிமனதில் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும் நல்லவர்கள், மக்களது துயரத்தை தீர்ப்பதற்கான வழிமுறையைக்
கொண்டிருப்பவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான். இதை நிறைவேற்றப் போகும்
புதிய ஜனநாயகப் புரட்சி மட்டும்தான் மக்களின் எதிர்காலம். அந்த
எதிர்காலத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!
_________________________________________________________________________________________________
http://www.vinavu.com/2011/04/13/state-of-indian-politics/