03 டிசம்பர், 2011

மரணத்திற்குப் பின் ?? - சில உண்மை சம்பவங்களும் , அலசலும்

ந த்வேவாஹம்ஜாது நாஸம்ந த்வம் நேமே ஜனாதி பா
நசைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத;பரம் (கீதை)


(நீ எவர் அழிவார் என்று நினைக்கிறாயோ, அவர்கள் அனைவரும் நீயும் நானும்கூட இல்லாமல் போகமாட்டோம். இந்த உடல் தோன்றுவதற்கு முன்னும் நாம் அனைவரும் இருந்தோம். இந்த உடல் அழிந்தபிறகும் நாம் இருப்போம். உடல் அழிவதால் ஆத்மா நாசமுறாது. ஆகவே நசித்துவிடுவார்களோ என்று ஐயப்படுவதும் வருந்துவதும் உசிதமல்ல)

இறப்பு என்றாலே நமக்கு ஒரு அச்சம்; மனதிலே ஒரு பயம். அதுதான் நமது முடிவா? இல்லை, அதற்குப் பிறகும் இன்னொரு பிறப்பு அல்லது ஒரு வாசல் காத்திருக்கிறதா? விடைகாணமுடியாத ஒரு கேள்வி. 


இறந்தவர்கள் யாரும் இதுவரை நம் முன் இறப்பிற்குப் பின் நடப்பது என்ன என்று சொன்னதில்லை. ஆனால், இந்தக் கேள்விக்கு விடையாக சாவின் விளிம்பைத் தொட்டுப்பார்த்து மீண்டவர்கள் சொல்லும் அனுபவங்கள் நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பதை அறியத் துணையாக இருக்கும். உடலை விட்டு உயிர் பிரிந்து அந்த சொர்க்கத்தின் அல்லது நரகத்தின் வாயில்களைத் தட்டும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிப் பலர் தங்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் சாவு என்பது ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே காட்டுகின்றன.

இந்த அனுபவம் பலருக்கு, இறப்பிற்குப்பின் வாழ்க்கை தொடர்கிறது என்பதை உறுதி செய்வதாகவே இருக்கிறது. உண்மையில் இறப்பைக்கண்டு அஞ்சிடும் பலருக்கு நமது உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் அதற்கு மரணமில்லை. தொடர்ந்து வாழ்கிறது என்ற எண்ணமே மரணபயத்திலிருந்து வெளிவர உதவியாய் இருக்கிறது. இதில் நம்பிக்கையில்லாதவர்கள், இவையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சொல்பவர்கள்கூட, இந்த நம்பிக்கையால் நிம்மதி அடையும் பெரும்பாலோரின் எதிர்ப்புக்களிடையேதான் தங்கள் கருத்துக்களையும் வாதங்களையும் முன் வைக்க வேண்டியுள்ளது. 

ஜேம்ஸ் ஆல்காக் என்பவர் ஏன் மரணத்திற்குப் பிறகு ஆன்மா அழிவதில்லை என்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதற்குக் காரணம் கூறுகிறார். "அறிவுபூர்வமாக எப்படியும் ஒரு நாள் நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்லப்போகிறோம் என்று தெரிந்த மக்கள் அதை உணர்வுப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில்லை. இறப்பிற்குப் பிறகும் ஒரு வாழ்வு இருக்கிறது. நாம் முற்றிலும் அழிவதில்லை என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஒரு தெம்பைத்தருகிறது" 
சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள் பற்றிய குறிப்புக்கள் இன்று நேற்றல்ல, தொன்று தொட்டே நிலவி வருகிறது. இதைப்பற்றிய முதல் செய்தியாக ப்ளேட்டோவின் Republic என்ற நூ¢ல் இறந்தபிறகு உயிர் மீண்டு வருவதாகக் கூறப்படும் ஒரு வீரனைப் பற்றி குறிப்பிடுகிறது. பைபிளிலும் இறப்பிலிருந்து உயிர்ப்பிப்பதாகக் கூறப்படும் பல கதைகள் உள்ளன. மற்ற பல மதநூல்களும் இதே நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளாக இந்த நம்பிக்கைகள் இருந்துவந்தாலும் சமீபகாலத்தில் இதுபோன்ற அனுபவங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இந்த அனுபவங்களை ஒப்புக் கொள்வதில்லை. இவைகள் யாவும் இறக்கும்போது செயலிழக்கும் மூளையில் ஏற்படும் பிரமைகள் என்றும், ஒருவிரிந்த கனவு என்றுமே அவர்கள் கருதுகிறார்கள்.

அப்படி என்றால், எது சரியான விளக்கம்? இந்த சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள், இறப்பிற்குப்பின் துவங்கும் வாழ்க்கையைக் குறிக்கிறதா? இல்லை, நாம் காற்றோடு காற்றாகக் கலக்குமுன்னர் ஏற்படும் இறுதி அனுபவத்தைக் குறிக்கிறதா?

இறப்பிற்குச் சற்று முன்னர் தாங்கள் பெற்றதாகப் பலர் கூறும் அனுபவங்கள் நமக்கு வரும் கனவுகளைவிடச் சுவையானவை. இவை நிஜம்போலவேத் தோன்றுகின்றன. சாவுக்குப் பின் ஏற்படும் அனுபவங்களைச் சொல்லும் எந்த ஆராய்ச்சியும் இவற்றை மனதில் கொள்ளவேண்டும். இந்த அனுபவங்களையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு விளக்கம் தேடும்போது, மனங்களைப் பற்றியும், சுய உணர்வுகள் பற்றியும் கேள்விகள் எழுகின்றன. 
சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்கள் தங்களது உடலைவிட்டு வெளியே வருவதை உணர்கிறார்கள். அப்போது அவர்கள் அனுபவிப்பது ஒரு பரிபூரண சுதந்திரம், வலியே இல்லாத ஒரு நிலை. இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பெரும்பாலும் அப்போது தாங்கள் படுத்திருக்கும் இடத்திற்கு மேலே மிதப்பதாக அறிகிறார்கள். அங்கிருந்து அவர்களால் கீழே படுத்திருக்கும் 'அவர்களைப் ' பார்க்கமுடிகிறது. தான் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி என்ன நடக்கிறது, கூடி நிற்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் கூறும் விஷயங்கள் மிகவும் சரியாகவே அமைகின்றன. இந்த செத்துப் பிழைக்கும் அனுபவத்தை உடலைத் தாண்டிய அனுபவம் (Out of body experience) என்றும் கூறலாம். இத்தகைய அனுபவங்களுக்குத் தகுந்த உதாரணமாக, சியாட்டில் நகருக்கு முதல் முறையாகப் பயணம் செய்த மரியா என்ற பெண்ணிற்கு நேர்ந்த நிகழ்ச்சியைக் கூறுவார்கள்.
மரியா என்ற வாஷிங்டன் நகரைச் சேர்ந்த பெண் 1977ம் ஆண்டு தன் நண்பர்களைக் காண முதல்முறையாக சியாட்டில் நகருக்கு வருகிறாள். வந்த இடத்தில் அவளுக்கு பலத்த இருதயநோய் ஏற்பட அவள் Harbourview மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு கிம்பர்லி கிளார்க் என்ற சமூகசேவகி மரியாவை உடனிருந்து கவனித்து வந்தார். திடீரென மரியாவின் இருதயம் செயலிழக்க, மருத்துவர்கள் செயற்கை முறையில் அவள் இருதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். 
 Ghost Under Bed
அதன் பின்னர் கிம்பர்லி கிளார்க்கிடம் மரியா சொன்ன செய்திகள் தான் பரபரப்பானவை. "டாக்டர்களும் நர்ஸ்களும் என் உடலில் சோதனை செய்துகொண்டிருந்தபோது அதிசயமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் உயர நாலாவது மாடியின் உயரத்திற்கு மிதந்து சென்று அந்த மேற்கூரையிலிருந்து என்மீது நடத்தப்படும் சோதனைகளைக் காண முடிந்தது என்று மரியா கூறியபோது கிளார்க் அதை நம்பவில்லை. ஆனால் அதற்குப்பிறகு அவள் கூறியவை திகைப்பூட்டின. தனது உடல்நிலைபற்றிய குறிப்புப்படங்கள் மானிட்டரிலிருந்து வெளிவருவதைப் பார்த்ததாகக் கூறினாள். அதுதவிர, தான் மேலும் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே மிதந்து சென்றதாகவும் அவள் கண்ட அவசர சிகிச்சை வழியைப்பற்றியும் அதன் கதவுகள் முன்புறமாகத் திறக்கப்படுவதைப் பற்றியும் விரிவாகக் கூறியபோது நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த மருத்துவமனைக்கு முதல் முறையாக மரியா வந்திருப்பதால் அதன் பல வேறு இடங்கள் பற்றி அவள் அறிந்திருக்க வழியேயில்லை. அவள் மேலும் தனது கட்டிடத்திற்கு வலதுபக்கத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு ஜன்னலின் விளிம்பில் ஓரத்தில் கிழிந்துபோன ஒரு டென்னிஸ் ஷ¥வைக் கண்டதாகவும் அதன் முடிச்சு ஷ¥வின் அடிப்பாகத்தில் இருந்ததாகவும் கூறினாள். மரியா இருந்த இடத்திலிருந்து அப்படிப்பார்க்க வாய்ப்பே இல்லை. கிளார்க் அடுத்த கட்டிடத்தின் மூன்றாவது தªமாடிக்குச் சென்று அந்த ஜன்னலில் சோதனையிட்டபோது மரியா கூறியது சரியாகவே இருப்பது தெரியவந்தது இறப்பின் பின்னும் ஆன்மா அழியாமல் இருக்கிறது என்பதை நம்புபவர்கள் இதைத் தகுந்த சான்றாகக் காட்டுகிறார்கள். 

மற்றுமொரு நிகழ்ச்சி. Laurelynn என்ற பெண்மணி ஒரு சாதாரண அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறாள். ஆனால், அறுவை சிகிச்சையின் போது ஆழமாகக் கத்தி பாய்ந்ததால் அவளது உடலிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரபரப்புடன் இருந்தார்கள். அவர்கள் உடையில் வெளியே எங்கு பார்த்தாலும் ரத்தம். என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று அறிந்துகொள்ள முடியவில்லை. அப்போது என்னால் டாக்டர்கள் என்னுடைய உடலில்தான் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் அதுபற்றிய கவலையும் அப்போது எனக்கில்லை; நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்; அருமையான நேரம் அது. அவர்களிடம், 'எனக்கு ஒன்றுமில்லை, என்னைப்பற்றிக்கவலைப் படாதீர்கள், நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று சொல்ல நினைத்தேன். உடலைவிட்டுப் பிரிந்து சென்ற நான் வேறு உலகத்தில் பிரவேசிக்கிறேன். அங்கு அமைதி- பூரண அமைதி- உடலில் எந்தவிதமான வலியுமில்லை. ஆனால் ஒரு சுகானுபவம் இருந்தது; இருட்டான, ஒரு மகிழ்ச்சி ததும்பும் ஒரு இடம்; அன்பும் ஆதரவும் என்னைச் சுற்றிப் பரவியிருப்பதை உணர்ந்தேன். அந்த சுகமான இருட்டு வழி தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. 
இதுவரை பூமியில் அனுபவிக்காத ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவம் அது- இருட்டுவழியின் எல்லையில் ஒரு மஞ்சள் நிறம் கலந்த வெண்மையான ஒளியைக் காண்கிறேன். அந்த அமைதியை அந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெண்மை கலந்த ஜோதியை நான் அடைவதற்கு முன்னால், எனது வலதுபுறம் யாரோ இருப்பதை உணரமுடிந்தது- 

அதுவேறுயாருமில்லை- ஏழு மாதங்களுக்கு முன்னால் இறந்த என் மனைவியின் சகோதரன்தான். என்னுடைய கண்களாலும் காதுகளாலும் பார்க்கவோ கேட்கவோ முடியாவிட்டாலும் அது எனது மனைவியின் சகோதரன்தான் என்பதை உணரமுடிந்தது. அவனுக்கு உருவமில்லை; ஆனால் அவனை உணர முடிந்தது- அவனது சிரிப்பை அவனது நகைச்சுவை உணர்வை என்னால் அறிய முடிந்தது- அவன் என்னை வரவேற்கக் காத்திருந்தான்" - கென்னத் ரிங் கின் Lessons from the Light".

இதுபோன்ற அனுபவங்கள், இவைகளை வெறும் மனப் பிரமையென்றோ, கட்டுக்கதைகள் என்றோ ஒதுக்கிவிட முடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன. இந்த அனுபவங்கள் ஏற்பட்டவர்கள் இந்த பூமியை விட்டு வேகமாகத் தாங்கள் செல்வதை உணர்கிறார்கள். பிறகு ஒரு ஒளிநிறைந்த அன்புமயமான இடத்தை அடைகிறார்கள். அங்கு முன்னமே இறந்த அவர்களது உறவினர்கள் அவர்களை 'நீங்கள் இங்கே வருவதற்கு நேரம் இன்னும் வரவில்லை, இன்னும் பூமியில் நீங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது", எனக் கூறித் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
இந்த உலகிற்குத் திரும்பி வந்தவுடன் எப்படி தனது இறப்பு அனுபவம் ஒரு ஆனந்தத்தை அளித்தது என உணர்கிறார்கள். ஆனால், அந்த அனுபவத்தைப்பற்றி மற்றவர்களிடம் விளக்க சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இந்த அனுபவம் அவர்களது வாழ்க்கையையே மாற்றுகிறது. அவர்கள் அதற்குப்பிறகு சாவைக்கண்டு அஞ்சுவதில்லை. இந்த பூதவுடல் மறைந்தபிறகும் 'நான்'- 'எனது ஆன்மா' உயிர்வாழ்கிறது என அறிகிறார்கள் . 

அதற்குப்பிறகு அவர்களது அணுகுமுறையில், மற்றவர்களை மன்னிப்பதில், அன்புகாட்டுவதில், உதவி செய்வதில் ஆன்மிகத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்துகிறார்கள்- இந்த அனுபவம் அவர்கள் வாழ்ந்த வாழ்வை, செய்த நன்மைகளையும் தீமைகளையும் ஒரு சில நொடிகளில் அவர்கள் கண்முன்னே கொண்டுநிறுத்தி அவர்களைப் பண்பட்டவர்களாக்குகிறது.

கருத்துகள் இல்லை: