04 டிசம்பர், 2011

பாவம்-தேவதேவன் கவிதைகள்

கல்யாண மண்டபம் வெளியே காற்றாட
சிகரெட்டும் தாம்பூலமுமாய்
நின்று கொண்டிருந்தோம். அருகே
தாழிட்ட ஒரு வாசற் படிக்கட்டில்
புழுதி படிந்து காய்ந்த
எலும்புத் தோல் கோலத்தில்
நொடிந்து துயிலும் ஒரு சிறுவன்.

வீடும் மற்றுமுணவும் விரட்ட விரட்ட
பட்டினியுடன் வீதியலைகிறவன் போலுமிருந்தான்
சாப்பிட்டுப் பல நாட்களிருக்கும்போல் சொல்லிற்று
ஒட்டிய வயிறும் அவன் உடலும்.

உண்மையை அறியும் ஊகங்களுக்குள்
செல்லவிடாது எங்களைத் தடுத்தது
காலங்காலமாய் எங்களுக்குள்
வற்றாது ஓடிக் கொண்டிருக்கும்
பார்ப்பனிய விஷம்.

சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும்
வயிறு அப்படித்தான் இருக்குமாம்.
ஒட்டிய வயிறு உப்பிய வயிறு குறித்த
‘ஆழமான சிந்தனை’களை நாங்கள்
பகிர்ந்து கொண்டோம்.
கடைசித் தீர்ப்பாய்
பாவம் என்ற ஒரு சொல்லை
அவன்மீது உதிர்ந்து நீங்கினோம்.

கருத்துகள் இல்லை: