22 அக்டோபர், 2011

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்) தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

அத்தியாயம்-1
[ஹெகலின் கோட்பாடுகள் பற்றிய விமர்சனம்]
நம் முன்னுள்ள இந்த நூல் (“லுத்விக் ஃபாயர்பாக்”, சி.என்.ஸ்டார்க்கே, பி.எச்டி., ஸ்டுட்கார்ட், ஃபெர்ட். என்கே, 1885) ஒரு தலைமுறைக்கும் குறைவான காலத்துக்கு முன்னால் நம்மைக் கொண்டு செல்கிறது. ஆனாலும், ஜெர்மனியில் இன்றைய தலைமுறையினருக்கு நூறாண்டு காலத்துக்கு முந்தையதைப் போல அந்நியப்பட்டதாய் இருக்கிறது. எனினும், ஜெர்மனி 1848-ஆம் ஆண்டுப் புரட்சிக்குத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது. அன்றுதொட்டு நமது நாட்டில் நிகழ்ந்தவை அனைத்தும் 1848-இன் தொடர்ச்சியே ஆகும். புரட்சியின் இறுதி விருப்பம் மற்றும் கட்டளையின் நிறைவேற்றமாகவே இருந்திருக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்சில் நடந்ததைப் போன்றே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியிலும் ஒரு தத்துவப் புரட்சி அரசியல் வீழ்ச்சிக்கு வித்திட்டது. ஆனாலும் இந்த இரண்டுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு! ஃபிரஞ்சுத் தத்துவவாதிகள் அதிகாரபூர்வமான அனைத்து விஞ்ஞானத்தையும், கிறிஸ்துவத் திருச்சபையையும், பலநேரங்களில் அரசையும்கூட வெளிப்படையாய் எதிர்த்துப் போரிட்டனர். பாஸ்டிலில் (Bastille) அவர்கள் சிறைபிடிக்கப்படும் ஆபத்து எப்போதும் நிலவிவந்தபோது, அவர்களது எழுத்துகள் நாட்டுக்கு வெளியே ஹாலந்து அல்லது இங்கிலாந்தில் அச்சிடப்பட்டன. மறுபுறம் ஜெர்மானியத் தத்துவவாதிகளோ பேராசிரியர்களாவும், இளைஞர்களுக்கான, அரசால் நியமிக்கப்பட்ட போதனையாளர்களாகவும் இருந்தனர். அவர்களது நூல்கள் அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களாக இருந்தன. ஒட்டுமொத்த மேம்பாட்டின் உச்சநிலை அமைப்பான ஹெகலிய அமைப்புமுறை பிரஷ்ய அரசின் ஆஸ்தான தத்துவத்தின் தரத்துக்கே உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது எனலாம்! இந்தப் பேராசிரியர்களுக்குப் பின்னால், அவர்களது தெளிவற்ற பகட்டான பண்டிதச் சொல்தொடர்களுக்குப் பின்னால், அவர்களது புரியாத சலிப்பூட்டும் வாக்கியங்களுக்குப் பின்னால் ஒரு புரட்சி மறைந்திருப்பது சாத்தியமா? அப்போது, புரட்சியின் பிரதிநிதிகள் என்று கருதப்பட்ட மிதவாதிகள், மூளையைக் குழப்பும் இந்தத் தத்துவத்தின் கடுமையான எதிர்ப்பாளர்களாய் இருந்தார்கள், அல்லவா? ஆனால், அரசாங்கமோ, மிதவாதிகளோ காணத் தவறியதைக் குறைந்தபட்சம் ஒரு நபராவது, மிக முன்னதாக 1883-ஆம் ஆண்டிலேயே கண்டறிந்தார். அவர் வேறு யாருமன்று, அவர்தான் ஹென்ரிஹ் ஹெய்னே (Heinrich Heine). [ஹெய்னே தாம் எழுதிய ஜெர்மனியின் வரலாறு, மதம், தத்துவம் குறித்து என்னும் கட்டுரைகளில் ஜெர்மன் தத்துவப் புரட்சி பற்றி எழுதியுள்ளதை ஏங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார்.]
ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:
”எதார்த்தமானவை அனைத்தும் பகுத்தறிவுக்கு உகந்தவை; பகுத்தறிவுக்கு உகந்தது அனைத்தும் எதார்த்தமானவை.” (All that is real is rational; and all that is rational is real).
என்னும் ஹெகலின் புகழ்பெற்ற கூற்றைப்போல வேறெந்தத் தத்துவக் கோட்பாடும் குறுகிய மனப்பான்மை கொண்ட அரசாங்கங்களின் நன்றிக்கடனையும், அதே அளவுக்குக் குறுகிய மனப்பான்மை கொண்ட மிதவாதிகளின் கோபத்தையும் சம்பாதித்ததில்லை.
இக்கூற்று அன்று நிலவிவந்த கொடுங்கோன்மை, போலீஸ் ஆட்சி, அரச தர்பார் விசாரணை முறைகள், தணிக்கைமுறை ஆகிய அனைத்தையும் புனிதப்படுத்தி அவற்றுக்குத் தத்துவ ரீதியான அங்கீகாரத்தை வழங்கியது என்பது தெளிவு. மூன்றாம் ஃபிரெடரிக் வில்லியம் மன்னனும் அவனது குடிமக்களும் அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தனர். ஆனால் ஹெகலின் கருத்துப்படி, நிலவுகின்ற அனைத்தும் நிபந்தனை இன்றி நிச்சயமாக எதார்த்தம் ஆகிவிட முடியாது. நிலவுகின்ற ஒன்று அவசியமாகவும் இருக்கும்போது மட்டுமே எதார்த்தம் என்னும் பண்பைப் பெறுகிறது என்பது ஹெகலின் கருத்தாகும்.
“தனது வளர்ச்சிப் போக்கில் எதார்த்தம், அவசியமானது என நிரூபித்துக் கொள்கிறது”
ஹெகலைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை – ஒரு குறிப்பிட்ட வரிவிதிப்பு நடவடிக்கையை ஹெகலே எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் – நிபந்தனையின்றி எவ்விதத்திலும் எதார்த்தம் ஆகிவிட முடியாது. எனினும், அவசியமாய் இருக்கின்ற ஒன்று, வளர்ச்சிப் போக்கின் கடைசி நிலையில் தன்னைப் பகுத்தறிவுக்கு உகந்ததாகவும் நிரூபித்துக் கொள்கிறது. அக்காலத்திய பிரஷ்ய அரசுக்கு பொருத்திப் பார்த்தால் ஹெகலியக் கருதுகோளின் பொருள் இதுவே: அந்த அரசு எந்த அளவுக்கு அவசியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குப் பகுத்தறிவுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. அப்படி இருந்தும் அந்த அரசு நமக்குத் தீங்கானதாய்த் தோன்றுகிறது எனில், தீங்கான பண்பு கொண்டதாய் இருந்தும் அது தொடர்ந்து நீடித்திருக்கிறது எனில், காரணம் யாது? அரசாங்கத்தின் தீங்கான பண்பை நியாயப்படுத்துவதும், விளக்குவதும் அதன் குடிமக்களிடம் நிலவும் அதற்கீடான தீங்கான பண்பே ஆகும். ஆக, அக்காலப் பிரஷ்ய மக்கள் அவர்களின் தகுதிக்கேற்ற அரசாங்கத்தைத்தான் பெற்றிருந்தார்கள்.
ஆனால், எதார்த்தம் என்பது சமூக அல்லது அரசியல் அமைப்பில் குறிப்பிட்ட நிலைமையின் உள்ளடங்கிய பண்பாக எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் எவ்விதத்திலும் இருக்க முடியாது என்பது ஹெகலின் கருத்தாகும். அப்படிச் சொல்லிவிட முடியாது. ரோமானியக் குடியரசு எதார்த்தமானதாய் இருந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து வந்த ரோமானியப் பேரரசும் எதார்த்தமானதாக இருந்தது. ஃபிரஞ்சு முடியாட்சி 1789-இல் மாபெரும் புரட்சியினால் அழிக்கப்பட வேண்டிய அளவுக்கு எதார்த்தத்துக்குப் புறம்பானதாகவும், அவசியமற்றதாகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் ஆகிவிட்டிருந்தது. இந்தப் புரட்சியைப் பற்றி ஹெகல் எப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் பேசுகிறார். ஆகவே, இந்த எடுத்துக்காட்டில், முடியாட்சி எதார்த்தம் அல்லாததாகவும், புரட்சி எதார்த்தமானதாகவும் இருந்தது. எனவே, வளர்ச்சிப் போக்கில், முன்பு எதார்த்தமானதாக இருந்தது, எதார்த்தம் அல்லாததாக மாறிவிடுகிறது. தனது அவசியத்தை, நிலவுவதற்கான உரிமையை, பகுத்தறிவுக்கு உகந்த தன்மையை இழந்து விடுகிறது. அழிந்து கொண்டிருக்கும் எதார்த்தத்துக்குப் பதிலாக ஒரு புதிய, சாத்தியமான எதார்த்தம் எழுகிறது. பழைய எதார்த்தம் புத்திசாலித்தனமாக எதிர்ப்புக் காட்டாமல் சாகுமெனில் இம்மாற்றம் அமைதியாக நிகழும். இந்த அவசியத்தை எதிர்க்குமெனில் இது பலவந்தமாக நிகழும். இவ்வாறாக, ஹெகலிய இயக்கவியலின் வழியாகவே ஹெகலின் கருதுகோள் எதிரிடையாய் மாறிவிடுகிறது. மனித வரலாற்றில், எதர்த்தமானதாய் இருப்பதெல்லாம் காலப்போக்கில் பகுத்தறிவுக்குப் புறம்பானதாய் ஆகிப் போகிறது. எனவே எதார்த்தமானதாய் இருப்பது அதன் உள்ளடக்கத்திலேயே பகுத்தறிவுக்கு ஒவ்வாததாய் இருக்கிறது. பகுத்தறிவுக்குப் புறம்பான தன்மையின் கறை முன்னமே படிந்திருக்கிறது. மனிதர்களின் மனங்களில் பகுத்தறிவுக்கு உகந்ததாய் இருக்கும் ஒவ்வொன்றும், நடப்பிலுள்ள வெளித்தோற்ற எதார்த்தத்துக்கு எவ்வளவுதான் அதிகமாக முரண்படுகின்ற போதிலும், இறுதியில் எதார்த்தமானதாய் ஆகியே தீரும். ஹெகலியச் சிந்தனை வழிமுறையின் அனைத்து விதிகளின்படியும், எதார்த்தமானது ஒவ்வொன்றும் பகுத்தறிவுக்கு உகந்தது என்னும் கருதுகோள், நிலவுகின்ற அனைத்தும் அழியக் கூடியதே [கோதே எழுதிய ஃபாஸ்ட் என்னும் நாடகத்தில் பகுதி I, காட்சி 3-இல் மெஃபிஸ்டோஃபிலிஸ் சொல்லும் வசனம் இது] என்னும் மற்றொரு கருதுகோளுக்கு இட்டுச் செல்கிறது.
ஆனால், மனிதச் சிந்தனை மற்றும் செயல்பாட்டின் விளைவுகள் அனைத்தின் இறுதிப் பயனுக்கு நிரந்தரமாக மரண அடி கொடுத்ததில்தான் ஹெகலியத் தத்துவத்தின் (கான்டுக்குப் பிந்தைய மொத்தத் தத்துவ இயக்கத்தின் முடிவு என்ற வகையில் மட்டும் நாம் இதனைக் கருத்தில் கொள்வோம்) மெய்யான முக்கியத்துவமும் புரட்சிகரமான பண்பும் அடங்கியிருக்கின்றன. ஹெகலின் கருத்துப்படி, தத்துவம் அறிந்துணரக் கூடிய ’உண்மை’ என்பது, ஒருமுறை கண்டறியப் பட்டவுடன் வெறுமனே மனப்பாடம் செய்யக்கூடிய, தயார்நிலையிலுள்ள வறட்டுச் சூத்திரங்களின் தொகையாக இருக்க முடியாது. இப்போது உண்மை என்பது அறிந்துணர்தலின் வளர்ச்சிப் போக்கிலேயே அடங்கியுள்ளது; விஞ்ஞானத்தின் நீண்ட வரலாற்று ரீதியான வளர்ச்சிப் போக்கிலேயே அடங்கியுள்ளது. விஞ்ஞானம், என்றைக்கும் எட்டிப் பிடிக்க முடியாத முடிவான உண்மையை நோக்கிக் கீழ்நிலையிலிருந்து அதிஉச்ச அறிவுநிலைக்குத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது. முடிவான உண்மை என்று சொல்லப்படும் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டால், அதற்குப் பிறகு தொடர்ந்து செல்ல வழியில்லை. தான் கண்டுபிடித்த முடிவான உண்மையைக் கைகட்டி வியந்து நோக்குவதைத் தவிர விஞ்ஞானத்து வேறு வேலையில்லாமல் போய்விடும். அத்தகைய நிலைக்கு விஞ்ஞானம் ஒருபோதும் வந்து சேராது. மேலும், தத்துவ அறிவுத் துறைக்குப் பொருந்துகிற எதுவும் பிறவகையான அறிவுத் துறை ஒவ்வொன்றுக்கும் பொருந்தும். மேலும், நடைமுறைச் செயல்பாடுகளுக்கும்கூடப் பொருந்தும். மனிதகுலத்தின் முழுநிறைவான, இலட்சியச் சூழ்நிலையில் அறிவானது முழுமையான முடிவை எட்டிவிட முடியாது. அதுபோலவே வரலாறும் அதுபோன்ற முடிவை எட்டிவிட முடியாது. முழுநிறைவான சமுதாயம், முழுநிறைவான “அரசு” என்பதெல்லாம் கற்பனையில் மட்டுமே நிலவக் கூடியவை. இதற்கு மாறாக, அடுத்தடுத்துத் தொடர்ந்து வருகின்ற வரலாற்று அமைப்புமுறைகள் அனைத்தும், கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு முன்னேறிச் செல்லும் மனித சமுதாயத்தின் முடிவில்லாத வளர்ச்சிப் போக்கின் இடைப்பட்ட தற்காலிகக் கட்டங்களே ஆகும். இவற்றில் ஒவ்வொரு கட்டமும் அது தோன்றி வளர்ந்த காலகட்டத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் அவசியமானதாகவும் எனவே நியாயமானதாகவும் இருந்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு வரலாற்றுக் கட்டத்தின் கருவறைக்குள்ளேயே, படிப்படியாக வளர்ந்துவரும் ஒரு புதிய மேம்பட்ட நிலைமைகளுக்கு முன்னால் தனது உறுதிப்பாட்டையும் நியாயத்தையும் இழந்து விடுகிறது. ஒவ்வொரு கட்டமும் அதைவிட உயர்வான ஒரு கட்டத்துக்கு வழிவிட்டே தீர வேண்டும். அந்த உயர்ந்த கட்டமும் ஒருநாள் நசிவுற்று மறைந்து போகும். பெருந்தொழில், தொழில்போட்டி, உலகச் சந்தை ஆகியவற்றின் மூலம் முதலாளி வர்க்கம், காலகாலமாய் வளர்ந்து நிலைபெற்ற நிறுவனங்களை நடைமுறையில் எவ்வாறு அழித்து ஒழிக்கிறதோ அதுபோலவே, முடிவான நிரந்தர உண்மை மற்றும் அதனோடு தொடர்புடைய மனித குலத்தின் நிரந்தரமான நிலைகள் பற்றிய கருத்துருக்களை இயக்கவியல் தத்துவம் அழித்து ஒழிக்கிறது. அதற்கு (இயக்கவியல் தத்துவத்துக்கு) இறுதியானது, முழுமையானது, புனிதமானது என்று எதுவும் இல்லை. ஒவ்வொன்றினுடைய, ஒவ்வொன்றிலுமுள்ள மாறிக்கொண்டே இருக்கும் தன்மையை அது வெளிப்படுத்துகிறது. கீழ்நிலையிலிருந்து உயர்நிலைக்குச் செல்லும் முடிவில்லாத முன்னேற்றத்தில் உருப்பெறுதல், அழிந்துபோதல் என்ற இடையறாத நிகழ்வுப்போக்கு தவிர வேறு ஒன்றுமே அதற்கு முன்னால் நிலைத்திருக்க முடியாது. மேலும் இயக்கவியல் தத்துவம் என்பதுகூட, சிந்திக்கும் திறனுள்ள மூளையில் இந்த நிகழ்வுப்போக்கு ஏற்படுத்தும் வெறும் பிரதிபலிப்புத்தானே தவிர வேறொன்றுமில்லை. இதில் ஒரு பழைமைவாதக் கூறும் அடங்கியுள்ளது உண்மைதான். அறிவு மற்றும் சமுதாய வளர்ச்சியின் திட்டவட்டமான கட்டங்கள், அவற்றின் காலகட்டம் மற்றும் சூழ்நிலைகளில் நியாயமானவையே என்பதை இயக்கவியல் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அந்த அளவுக்கு மட்டுமே. இந்தக் கண்ணோட்ட முறையின் பழைமைவாதக் கூறு சார்புநிலையானது. அதன் புரட்சிகரப் பண்பு நிரந்தரமானது. இயக்கவியல் தத்துவம் இதைமட்டுமே நிரந்தரமானது என்று ஏற்றுக் கொள்கிறது.
பூமிக்குக்கூட ஒரு முடிவு இருப்பது சாத்தியம்; உயிர்கள் வாழ்ந்திட இயலும் அதன் தகுதிக்கும் முடிவு ஓரளவு நிச்சயம்; எனவே மனிதகுல வரலாற்றுக்கும்கூட ஏறுமுகம் மட்டுமல்ல இறங்குமுகமும் உண்டு என்று முன்னறிந்து சொல்கின்ற இயற்கை விஞ்ஞானத்தின் இன்றைய நிலையோடு இந்தக் கண்ணோட்ட முறை முற்றிலும் ஒத்துப் போகிறதா என்கிற கேள்வியில் நாம் இங்கே இறங்கத் தேவையில்லை. எப்படி இருந்த போதிலும், சமுதாயத்தின் வரலாற்றுப் போக்கு இறங்குமுகத்தில் கால்வைக்கும் அந்தத் திருப்புமுனைக்கு முன்னே நாம் வெகுதொலைவில் இருக்கிறோம். எனவே இயற்கை விஞ்ஞானம் தன் காலத்தில் இன்னும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஒரு பொருளைப் பற்றி ஹெகலியத் தத்துவம் அக்கறை கொள்ள வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இங்கே கட்டாயம் சொல்லியே தீர வேண்டிய ஒன்று இதுதான்: மேலே விரித்துரைக்கப்பட்ட கருத்துகளை ஹெகல் அத்தனை தெளிவாக விளக்கவில்லை. அவ்வளவு வெளிப்படையாக ஒருபோதும் அவர் கூறவில்லை எனினும், அவருடைய வழிமுறையின் மூலம் இயல்பாகப் பெறப்படும் முடிவுகள் அவை. இதற்கு ஓர் எளிய காரணம் உண்டு. ஹெகல், தத்துவ அமைப்புமுறை ஒன்றை உருவாக்கும் கட்டாயத்தில் இருந்தார். ஒரு தத்துவ அமைப்புமுறை என்பது ஏதாவது ஒருவகையான நிரந்தர உண்மையுடன் (absolute truth) நிறைவுபெற வேண்டும் என்பது காலகாலமாய் இருந்துவரும் மரபாகும். தர்க்க ரீதியாக அல்லது வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து செல்லும் நிகழ்வுப்போக்கே அழியாத உண்மை என்று ஹெகல், குறிப்பாகத் தர்க்கவியல் (Logic) என்னும் தம் நூலில், வெகுவாக வலியுறுத்திக் கூறிய போதிலும், தம்மையும் மீறி, இந்த நிகழ்வுப்போக்குக்கு ஒரு முடிவை வழங்க வேண்டிய காட்டாயத்துக்கு ஆளானார். ஏனெனில் அவர் தமது தத்துவ அமைப்புமூறையை ஏதாவது ஒரு புள்ளியில் முடிவுக்குக் கொண்டுவந்து நிறுத்த வேண்டியிருந்தது. அவர் தமது தர்க்கவியல் நூலில், இந்த முடிவையே மீண்டும் ஒரு தொடக்கமாக மாற்றிக் காட்ட முடியும். ஏனெனில், இங்கே, முடிவுக்கான புள்ளி அதாவது நிரந்தரக் கருத்து என்பது – அதைப்பற்றி அவர் எதுவுமே சொல்ல முடியாது என்ற அளவில் மட்டுமே அது நிரந்தரமானது – ”அந்நியமாகிப் போகிறது” (“alienates”). அதாவது, தன்னைத்தானே இயற்கையாக உருமாற்றிக் கொள்கிறது. பிறகு, மறுபடியும் மனதிற்குள், அதாவது சிந்தனையிலும் வரலாற்றிலும், அது தன்னிடமே வந்து சேர்கிறது. ஒட்டுமொத்தத் தத்துவத்தின் முடிவிலும், தொடக்கத்துக்கே இதுபோன்று மீண்டு வருவது, ஒரே ஒரு வழியில்தான் சாத்தியம். அதாவது, வரலாற்றின் முடிவைப் பின்வருமாறு புரிந்து கொள்வதன் மூலமாகத்தான் சாத்தியம்: மனிதகுலம் இதே நிரந்தரக் கருத்தை (absolute idea) அறிந்துணரும் நிலைக்கு வந்து சேர்வதுடன், நிரந்தரக் கருத்தை அறிந்துணர்தல் ஹெகலியத் தத்துவத்தில் எட்டப்பட்டுவிட்டது என்று பறைசாற்றுகிறது. இவ்வாறாக, ஹெகலியன் அமைப்புமுறையின் ஒட்டுமொத்த வறட்டுக் கோட்பாட்டு உள்ளடக்கம் நிரந்தர உண்மை என்று பறைசாற்றப்படுகிறது. வறட்டுக் கோட்பாடு அனைத்தையும் அழித்தொழிக்கும் அவருடைய இயக்கவியல் வழிமுறைக்கு இது நேர் முரணானது. இவ்வாறாகப், புரட்சிகரக் கூறு மிகைவளர்ச்சி நிலையிலுள்ள பழைமைவாதக் கூறின் காலடியின்கீழ் நசுக்கப்பட்டுக் கிடக்கிறது. மேலும், தத்துவவாத அறிந்துணர்தலுக்குப் பொருந்துவது எதுவும் வரலாற்று நடைமுறைக்கும் பொருந்தும். ஹெகல் என்னும் நபரின் வடிவில் நிரந்தரக் கருத்தை எட்டிவிட்ட மனிதகுலம், நடைமுறையிலும் அந்த நிரந்தரக் கருத்தை எதார்த்தத்தில் செயல்படுத்தக் கூடிய நிலையைப் பெற்றிருக்க வேண்டும். எனவே, அந்த நிரந்தரக் கருத்தின் நடைமுறை ரீதியான அரசியல் கோரிக்கைகளை சம காலத்தவர்கள் மீது அளவுக்கு மீறித் திணிக்க முடியாது. எனவே, சமூகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட முடியாட்சியில், அதாவது மூன்றாம் ஃபிரடெரிக் வில்லியம் அரசர் தம் குடிமக்களுக்கு தொடர்ந்து வாக்களித்து வந்த ஆனால் தரமுடியாமல் போன, அக்காலத்திய குட்டி–முதலாளித்துவ ஜெர்மானிய நிலைமைகளுக்கு ஏற்றபடியான, உடைமை வர்க்கங்களின் வரம்புக்குட்பட்ட, மிதமான, மறைமுக ஆட்சியில், இந்த நிரந்தரக் கருத்தை நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையின் தத்துவம் என்னும் நூலின் முடிவில் நாம் காண்கிறோம். அதுமட்டுமின்றி, பிரபு வம்சத்தின் அவசியமும் பூடகமான பாணியிலே நமக்கு விளக்கிக் காட்டப்படுகிறது.
எனவே, எவ்வாறு சிந்தனையின் முற்றிலும் புரட்சிகரமான ஒரு வழிமுறை மிகவும் சாத்வீகமான அரசியல் முடிவுக்கு இட்டுச் செல்கிறது என்பதை விளக்குவதற்கு, அந்த அமைப்புமுறையின் உள்ளடங்கியுள்ள அவசியக்கூறுகளே போதுமானவை. உண்மையில் பார்க்கப்போனால், இந்தக் குறிப்பிட்ட வடிவிலான முடிவை எட்டியதற்குக் காரணம், ஹெகல் ஒரு ஜெர்மானியர் என்பதும், அவரது சம காலத்தவரான கதேயைப் (Goethe) போலவே இவருக்கும் போலிப் பண்புவாதத்தின் (philistine’s) வால் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது என்பதுமே ஆகும். இருவருமே தத்தமது துறைகளில் இமயத்தை எட்டிப் பிடித்தவர்கள். எனினும், ஜெர்மன் போலிப் பண்புவாதத்திலிருந்து இருவருமே தம்மை முழுவதுமாக விடுவித்துக் கொள்ளவில்லை.
எனினும், ஹெகலிய அமைப்புமுறையானது அதற்கு முந்தைய வெறெந்த அமைப்புமுறையைக் காட்டிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு விரிந்த களத்தை உள்ளடக்குவதையோ, இந்தக் களத்தில் இன்றுங்கூட வியப்பூட்டும்படியான சிந்தனை வளத்தை வளர்த்தெடுப்பதையோ இதனால் எல்லாம் தடுக்க முடியவில்லை. மனம்பற்றிய தோற்றவியல் (phenomenology) (மனம் பற்றிய கருவியல் – embryology மற்றும் புதைபடிவ இயல் – palaeontology என்றும் இதனைச் சொல்லலாம். தனிநபர் உள்ளுணர்வு அதன் பல்வேறுபட்ட கட்டங்களின் ஊடான வளர்ச்சி, வரலாற்றுப் போக்கிலே மனிதனின் உள்ளுணர்வு கடந்துவந்த கட்டங்களின் சுருக்கப்பட்ட மறு ஆக்க வடிவமாக அமைகிறது) தர்க்கவியல் (logic), இயற்கைத் தத்துவவியல் (natural philosophy), மனம்பற்றிய தத்துவம், அதன் வரலாற்று ரீதியான உட்பிரிவுகளாக விளங்கும் வரலாறு பற்றிய தத்துவம், உரிமை பற்றிய தத்துவம், மதம் பற்றிய தத்துவம், தத்துவத்தின் வரலாறு, அழகியல், இன்னும் இதுபோன்ற பல்வேறுபட்ட வரலாற்றுத் துறைகளில் ஊடுருவியுள்ள வளர்ச்சி இழையைக் கண்டறிந்து, விளக்கிட ஹெகல் பாடுபட்டார். மேலும், ஹெகல் ஒரு படைப்பாற்றல் மிக்க மேதையாக மட்டுமன்றிப் பல்வேறு துறைகளில் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்ந்தார். எனவே ஒவ்வொரு துறையிலும் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் பாத்திரத்தை வகித்தார். அவருடைய “அமைப்புமுறையின்” (“system”) தேவைகளுக்கு ஏற்பவே அவர் அடிக்கடி வலிந்து புனைந்த கருத்தாக்கங்களை முன்வைக்க வேண்டியிருந்தது என்பது சொல்லாமலே விளங்கும். அவைபற்றித்தான் சிற்றறிவுள்ள அவரின் எதிரிகள் இன்றுங்கூட அதிகமாக வெற்றுக் கூச்சலிடுகின்றனர். ஆனால் அத்தகைய கருத்தாக்கங்கள் அவருடைய மாளிகையின் சாரக் கட்டுமானம் மட்டுமே. தேவையில்லாமல் இந்த வெளிக் கட்டுமானத்தில் மட்டுமே அலைந்து திரிந்து கொண்டிராமல் ஒருவர் இம்மாபெரும் மாளிகையின் உள்ளே நுழைந்து செல்வாராயின், அங்கே இன்றைக்கும் மங்காத மதிப்புடன் விளங்கும் எண்ணற்ற செல்வப் புதையல்களைக் காணலாம். அனைத்துத் தத்துவவாதிகளிடமும் குறிப்பாக இந்த “அமைப்புமுறை” (“system”) என்பதுதான் அழியத் தக்கது. அனைத்து முரண்பாடுகளையும் வென்றுவிட வேண்டும் என்கிற மனித மனத்தின் அழியாத வேட்கையிலிருந்து இது உருவாகிறது என்பதே இதற்கான எளிய காரணம் ஆகும். ஆனால் அனைத்து முரண்பாடுகளையும் நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிட்டால், நிரந்தர உண்மை என்று சொல்லப்படும் நிலைமைக்குக் கட்டாயம் வந்து சேர்வோம். அத்தோடு உலக வரலாறும் முடிவுக்கு வந்துவிடும். அடுத்து அது செய்வதற்கு எதுவுமில்லை. ஆனாலும் அது தொடர்ந்து சென்றாக வேண்டும் – எனவே, தீர்க்க முடியாத ஒரு புதிய முரண்பாட்டைச் சந்திக்கிறோம். இதுவரை கூறியுள்ளபடி பார்த்தால் தத்துவத்தின் பணி எனப்படுவது, முற்போக்கான வளர்ச்சியின் மூலம் மனித இனம் முழுமையும் மட்டுமே சாதிக்க முடிந்த ஒரு பணியைத் தனியொரு தத்துவ அறிஞர் சாதித்துத் தீர வேண்டும் என்று பொருள்படுகிறது. இதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நீண்ட கால அனுபவத்தில் அவ்வாறு உணர்ந்து கொள்ள அதே ஹெகல்தான் நமக்கு உதவியுள்ளார். அவரைக் காட்டிலும் அதிகமாக வேறு எவரும் நமக்கு உதவிவிடவில்லை. அவ்வாறு நாம் உணர்ந்து கொண்ட உடனே, அனைத்துத் தத்துவமும் – அந்தச் சொல்லுக்கு இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளின்படி – முடிவடைந்துவிடும். இந்தப் பாதையின் வழியாகவோ அல்லது எந்தத் தனிநபராலோ அடைய முடியாத “நிரந்தர உண்மையை” விட்டுவிடுவோம். அதற்குப் பதிலாக, இயக்கவியல் சிந்தனை மூலம் சோதனைகளை ஆதாரமாகக் கொண்ட விஞ்ஞானங்கள் மற்றும் பொதுமைப்படுத்தப்பட்ட அவற்றின் முடிவுகளின் வழியில் அடையத்தக்க சார்புநிலை உண்மைகளைத் தேடிச் செல்வோம். எப்படி ஆயினும் ஹெகலுடன் தத்துவம் முடிவுக்கு வந்துவிட்டது. காரணம் ஒருபுறம், தமது அமைப்பு முறையில், அதன் வளர்ச்சி முழுவதையும் மிகவும் நேர்த்தியான முறையில் தொகுத்துக் கூறிவிட்டார்; மறுபுறம் சிக்கல் மிகுந்த அமைப்புமுறைகளுக்கு வெளியே, உலகத்தைப் பற்றிய மெய்யான, நேருறுதியான அறிவு பெறுதலுக்கான பாதையை நமக்குக் காட்டியுள்ளார், தன்னையறியாமலே செய்தாலும்கூட.
ஜெர்மனியில் தத்துவத்தின் சாயல் தோய்ந்த சூழலில் இந்த ஹெகலிய அமைப்புமுறை எத்தகைய மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை ஒருவர் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அது ஒரு வெற்றி உலாவாக நீண்ட காலத்துக்கு நீடித்தது. ஹெகலின் மரணத்தோடு அது எவ்விதத்திலும் நிலைகுத்தி நின்றுவிடவில்லை. அதற்கு மாறாக, 1830 முதல் 1840 வரையிலான காலகட்டத்தில்தான் “ஹெகலியவாதம்” தனித்துக் கோலோச்சியது. கூடுதலாகவோ குறைவாகவோ அதன் எதிர்ப்பாளர்களையும் தொற்றிக் கொண்டது. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில்தான் ஹெகலியக் கருத்தோட்டங்கள், தெரிந்தோ தெரியாமலோ, மிகவும் வேறுபட்ட விஞ்ஞானங்களில் மிகப் பரவலாக ஊடுருவின. சராசரிக் கல்வியறிவு கொண்ட உள்ளங்களுக்குச் சிந்தனைத் தீனி போடுகின்ற ஜனரஞ்சக இலக்கியம் மற்றும் அன்றாடப் பத்திரிகைகளுக்குக்கூடச் சுவையூட்டின. ஆனால் மொத்தப் போராட்ட முனை நெடுகிலும் பெற்ற இந்த வெற்றியே ஓர் அகநிலைப் போராட்டத்துக்குப் பீடிகையாக அமைந்தது.
ஹெகலின் கோட்பாட்டை மொத்தமாக எடுத்துக் கொள்வோமானால், அது வெவ்வேறுபட்ட நடைமுறை அரசியல் கட்சிக் கருத்தோட்டங்களுக்குப் புகலிடம் அளிக்க ஏராளமான இடம் விட்டு வைத்திருந்ததை நாம் கண்டோம். கோட்பாடு சார்ந்த அக்காலத்திய ஜெர்மனியில் எல்லாவற்றுக்கும் மேலாக மதம், அரசியல் ஆகிய இரண்டுமே வாழ்க்கை நடைமுறையாக இருந்தன. ஹெகலிய அமைப்புமுறையை முதன்மையாக வலியுறுத்தியவர்கள் எல்லாம் இவ்விரு துறைகளிலும் பெருமளவு பழமைவாதிகளாய் இருக்க முடிந்தது. இயக்கவியல் வழிமுறையை முதன்மையானதாகக் கொண்டவர்கள் அரசியலிலும் மதத்திலும் அதிதீவிர எதிர்த்தரப்பைச் சார்ந்தவர்களாக இருக்க முடிந்தது. ஹெகலின் நூல்களில் அடிக்கடி புரட்சிகர வெஞ்சினத்தின் வெளிப்பாடுகளைக் காணமுடிந்த போதிலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவர் தம்மளவில் பழமைவாதத்தின் பக்கமே அதிகம் சாய்ந்துள்ளதாகத் தோன்றுகிறது. உண்மையில் அவருடைய வழிமுறையைவிட மிக அதிகமாக அவரின் அமைப்புமுறையே அவரின் ”மூளைக்கு வேலை கொடுத்துள்ளது”. 1830-களின் இறுதிவாக்கில் ஹெகலியக் கருத்துப் பிரிவினரிடையே இருந்த பிளவு மென்மேலும் வெளிப்படையாகத் தெரியலாயிற்று. இளம் ஹெகலியவாதிகள் என்று அழைக்கப்பட்ட இடதுசாரிப் பிரிவினர், வைதீக இறைப்பற்றுவாதிகள் (pietist) [17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய புரோட்டஸ்டன்டுகளிடையே இருந்த மத–மாயாவாதப் போக்கினர்] மற்றும் நிலப்பிரபுத்தவப் பிற்போக்காளர்கள் உடனான போராட்டத்தில், அன்றைய நாள்வரை அரசின் சகிப்புத் தன்மையையும், அவர்களின் போதனைகளுக்குப் பாதுகாப்பும்கூடப் பெற்றுத் தந்த தத்துவவாத நாவடக்கத்தை அன்றைய சூடான பிரச்சினைகளைப் பொறுத்தமட்டில் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டனர். 1840-இல் நான்காம் ஃபிரடெரிக் வில்லியம் அரசருடன் வைதீக இறைப்பற்றுவாதமும் (pietism) முற்றதிகார நிலப்பிரபுத்துவ பிற்போக்கு வாதமும் அரியணை ஏறியபோது வெளிப்படையாகக் கட்சி சேர்வது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. அப்போதும்கூடத் தத்துவ ஆயுதங்களைக் கொண்டுதான போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அருவமான (abstract) தத்துவக் குறிக்கோள்களுக்காக நடத்தப்படவில்லை. மரபு வழிப்பட்ட மதத்தையும், நடப்பிலிருந்த அரசையும் ஒழித்துக் கட்டுவதை நோக்கிப் போராட்டம் திரும்பியது. நடைமுறைக் குறிக்கோள்கள் இன்னமும் பெருமளவுக்குத் தத்துவ முகமூடியிட்டு Deutshe Jahrbucher–இல் [1841 முதல் 1843 வரை லைப்சிக் நகரில் வெளிவந்த இளம் ஹெகல்வாதிகளின் பத்திரிக்கை] முன்வைக்கப்பட்டு வருகையில், 1842-ஆம் ஆண்டைய Rheinische Zeitung–இல் [1842 முதல் 1843 வரை கோலோன் நகரில் வெளிவந்த ரைன் நகர முதலாளி வர்க்கப் பிரதிநிதிகள் நடத்திய பத்திரிக்கை. மார்க்ஸ் இதில் பணிபுரிந்தார். ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளார்] இளம் ஹெகலியக் கருத்துப்போக்கு, தலையெடுத்துவரும் தீவிரவாத முதலாளித்துவ வர்க்கத்தின் தத்துவமாகத் தன்னை நேரடியாகக் காட்டிக் கொண்டது. தணிக்கை முறையை ஏமாற்றுவதற்கு மட்டுமே தத்துவம் என்னும் முகமூடியைப் பயன்படுத்திக் கொண்டது.
என்றாலும், அந்தக் காலகட்டத்தில் அரசியல், முட்காடாய்க் கிடந்தது. எனவே, முதன்மையான போராட்டம் மதத்தை எதிர்த்துத் திருப்பிவிடப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம் – குறிப்பாக, 1840-லிருந்து – மறைமுகமான அரசியல் போராட்டமாகவும் இருந்தது. ஸ்ட்ராவ்ஸ் (D.F.Strauss) எழுதி, 1835-இல் வெளியிடப்பட்ட இயேசுவின் வாழ்க்கை [D.F.Strauss, Das Leben Jesu, Bd. 1-2, Tubingen, 1835-1836] என்னும் நூல் முதல் உந்துதலை வழங்கியது. கிறிஸ்துவப் புராணக்கதைகளின் உருவாக்கம் பற்றி அதில் கூறப்பட்டிருந்த கருத்துகள் பின்னர் புரூனோ பாவரால் (Bruno Bauer) மறுக்கப்பட்டன. கிறிஸ்துவப் பழங்கதைத் தொகுதிகள் மொத்தமும் அவற்றின் ஆசிரியர்களால் இட்டுக் கட்டப்பட்டவை என்பதைச் சான்றுகளுடன் நிறுவினார். இருவருக்கும் இடையேயான கருத்து மோதல், “தன்னுணர்வுக்கும்” (self-consciousness), “சாரப்பொருளுக்கும்” (substance) இடையேயான போராட்டம் என்கிற தத்துவப் போர்வையில் நடைபெற்றது. சுவிசேஷத்தின் அதிசயக் கதைகள் சமூகக் குழுவின் வாழ்வினூடே தன்னிச்சையான-மரபுவழிப்பட்ட புராணப்-புனைவு மூலமாக உருப்பெற்றனவா அல்லது நற்செய்தித் தூதர்களாலேயே இட்டுக்கட்டிக் கூறப்பட்டனவா என்ற பிரச்சினை, உலக வரலாற்றில் தீர்மானகரமான உந்து சக்தியாக இருப்பது “சாரப்பொருளா”, “தன்னுணர்வா” என்னும் கேள்வியாகப் பெரிதுபடுத்தப்பட்டது. இறுதியாக ஸ்டிர்னர் (Stirner) வந்தார். நம் காலத்திய அராஜகவாதத்தின் (anarchism) தீர்க்கதரிசி இவர். இறையாண்மையுடைய தன்னுணர்வுக்கு மேலாக, தன்னுடைய இறையாண்மை மிக்க “தான்” என்னும் அகந்தையை முன்வைத்தார். [1845-இல் லைப்சிக் நகரில் மாக்ஸ் ஸ்டிர்னர் எழுதி வெளியிட்ட Der Einzige und sein Enthum (The Unique and His Property) என்ற நூலை ஏங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார்]. இவரிடமிருந்து பக்கூனின் (Bakunin) நிறையவே கடன் வாங்கியுள்ளார்.
ஹெகலியக் கருத்துப்பிரிவு சிதைந்துபோன நிகழ்வுப்போக்கின் இந்தப் பகுதிக்குள் மேற்கொண்டு நாம் கவனம் செலுத்தப் போவதில்லை. அதைவிட நமக்கு மிகவும் முக்கியமானது இதுதான்: கருத்துறுதி மிக்க இளம் ஹெகலியவாதிகளில் முக்கிய பகுதியினர், உறுதிமிக்க மதத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தினுடைய நடைமுறைத் தேவைகளின் காரணமாக, ஆங்கில–ஃபிரஞ்சுப் பொருள்முதல்வாதம் [Anglo-French materialism] நோக்கிப் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் தங்களது கருத்துப்பிரிவின் அமைப்புமுறையோடு மோதிக் கொள்ள வேண்டியதாயிற்று. பொருள்முதல்வாதம் இயற்கை ஒன்றை மட்டுமே எதார்த்தம் எனக் கருதுகிறபோது, ஹெகலிய அமைப்புமுறையில் இயற்கை என்பது நிரந்தரக் கருத்தின் ”அந்நியமாக்கம்” (alienation) என்றே கருதப்படுகின்றது. இது ஒருவகையில் கருத்து என்பதைத் தரம் தாழ்த்துவதையே குறிக்கிறது எனலாம். இங்கே அனைத்து நிகழ்வுகளிலும் சிந்தித்தலும் சிந்தனையின் உற்பத்திப் பொருளான கருத்தும் முதன்மையானவையாக இருக்கின்றன. இயற்கை என்பது அதிலிருந்து தருவிக்கப்பட்ட ஒன்றாகவும், கருத்தின் தயவால் மட்டுமே நிலவக்கூடியதாகவும் இருக்கின்றது. இத்தகைய முரண்பாட்டிலே அவர்கள் சிக்கிக் கொண்டு ஆன மட்டும் நேர்த்தியாகவோ அல்லது மோசமாகவோ தடுமாறினர்.
அதன்பின் ஃபாயர்பாக் எழுதிய கிறிஸ்தவ மதத்தின் சாராம்சம் என்னும் நூல் [ஃபாயர்பாக் எழுதி 1861-இல் லைப்சிக்கில் வெளியிடப்பட்ட Das W esen des Christenthums (Essence of Christianity) என்னும் நூலை ஏங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார்] வெளியானது. அது ஒரே குத்தில் இந்த முரண்பாட்டைத் தூள் தூளாக்கியது. சுற்றிவளைத்தல் எதுவுமின்றி பொருள்முதல்வாதத்தை மீண்டும் அரியணையில் அமர்த்தியது. இயற்கையானது அனைத்துத் தத்துவங்களுக்கும் சார்பின்றி நிலவுகிறது. இந்த அடிப்படையின் மேல்தான் மனித இனமாகிய நாம் – நாமும் இயற்கையின் உற்பத்திப் பொருட்கள்தாம் – வளர்ந்து வந்திருக்கிறோம். இயற்கைக்கும் மனிதனுக்கும் அப்பால் எதுவும் இல்லை. நம்முடைய மதக் கற்பனைகள் படைத்துள்ள கடவுளர்கள் எனப்படுவோர் நமது சொந்த சாரத்தின் விசித்தரமான பிரதிபலிப்பு மட்டுமே. மந்திரம் உடைத்தெறியப்பட்டது; “அமைப்புமுறை” தகர்க்கப்பட்டு, ஒதுக்கப்பட்டது. முரண்பாடு என்பது நமது கற்பனையில் மட்டுமே நிலவுவது எனக் காட்டப்பட்டுக் கரைந்து போனது. இந்த நூலைப்பற்றி ஒருவர் அறிந்து கொள்ள, விடுதலை உணர்வை நல்கும் இந்நூலின் தாக்கத்தை ஒருவர் தாமே அனுபவித்து உணர்ந்திருக்க வேண்டும். எங்கும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது; நாங்கள் அனைவரும் உடனே ஃபாயர்பாக்வாதிகள் ஆகிவிட்டோம். மார்க்ஸ் எவ்வளவு உற்சாகத்துடன் இந்தப் புதிய கருத்துருவை வாழ்த்தி வரவேற்றார், விமர்சனக் கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் மீறி எந்த அளவுக்கு அதன் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தார் என்பதைப் புனிதக் குடும்பம் (The Holy Family) என்னும் நூலில் படித்தறியலாம்.
இந்த நூலின் குறைபாடுகளுங்கூட அதன் உடனடிச் செல்வாக்குக்கு உதவின. சில வேளைகளில் மிகை அலங்காரமாகவும் அமைந்த அதன் இலக்கிய பூர்வமான நடை, பரந்த வாசகர் கூட்டத்தை ஈர்த்தது. எப்படி இருப்பினும், நெடுங்காலம் நீடித்திருந்த அருவமான, எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஹெகலியத்துக்குப் பிறகு, புத்துணர்வு ஊட்டுவதாய் அமைந்தது. அன்பினை மிதமிஞ்சிய அளவுக்குத் தெய்வீகம் ஆக்கியதற்கும் இது பொருந்தும். “தூய பகுத்தறிவின்” இறையாண்மை ஆட்சி இனி சகிக்க முடியாது என்று ஆனபிறகு வந்தபடியால் இதனை நியாயப்படுத்த முடியாது என்றாலும் மன்னிக்கக் கூடியதே. ஆனால், 1844-ஆம் ஆண்டிலிருந்து ஜெர்மனியில் ”படித்தவர்களிடையே” பிளேக் நோயைப்போலப் பரவிக் கொண்டிருந்த “உண்மையான சோஷலிசம்” துல்லியமாக ஃபாயர்பாக்கின் இந்த இரண்டு பலவீனங்களையே தன்னுடைய தொடக்கப் புள்ளியாக எடுத்துக்கொண்டது என்பதை நாம் மறக்கலாகாது. ஒன்று, விஞ்ஞான அறிவுக்குப் பதிலாக இலக்கிய நயமுள்ள சொற்றொடர்களை முன்வைத்தது. இரண்டு, உற்பத்தியைப் பொருளாதார அடிப்படையில் மாற்றியமைப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பதற்குப் பதிலாக “அன்பின்” மூலம் மனிதகுலத்தின் விடுதலை எனப் பேசியது. சுருங்கக் கூறின், திரு. கார்ல் குரூன் (Karl Grun) போன்றோரால் பரப்பப்பட்ட அருவருப்பூட்டும் அலங்கார எழுத்துகளிலும் அன்புப் பரவசங்களிலும் தன்னையே பறிகொடுத்தது.
மற்றொரு விஷயத்தையும் நாம் மறக்கக் கூடாது: ஹெகலியக் கருத்துப்பிரிவு சிதைந்து போயிற்று. ஆனால் ஹெகலியத் தத்துவம் விமர்சனத்தின் மூலமாக முறியடிக்கப் படவில்லை. ஸ்ட்ராஸ், பவ்வர் இருவரும் அதன் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, அதை மற்ற பகுதிக்கு எதிராக நிறுத்தி வாதப் போர் புரிந்தனர். ஃபாயர்பாக் அந்த அமைப்புமுறையைச் சிதறடித்து, உதறித் தள்ளினார். ஆனால் ஒரு தத்துவத்தைத் வெறுமனே தவறானது என்று அடித்துக் கூறுவதால் மட்டும் ஒழித்துக்கட்டிவிட முடியாது. மேலும், தேசத்தின் அறிவுசார் வளர்ச்சி மீது மாபெரும் செல்வாக்குச் செலுத்திய ஹெகலியத் தத்துவம் போன்ற ஒரு சக்தி வாய்ந்த படைப்பை வெறுமனே புறக்கணிப்பதன் மூலம் ஒழித்துக்கட்ட முடியவில்லை. அதன் சொந்த அர்த்தத்திலிருந்து அதனை விடுவிக்க வேண்டும். அதாவது, விமர்சனத்தின் மூலம் அதன் வடிவத்தை உடைத்தெறிகிற அதே வேளையில், அதன் மூலம் வென்று பெற்றுள்ள புதிய உள்ளடக்கத்தைக் காப்பாற்ற வேண்டும். இது எவ்வாறு செய்து முடிக்கப்பட்டது என்பதை இனிவரும் பகுதியில் காண்போம்.
ஆனால், இதற்கிடையே, ஃபாயர்பாக் எவ்வளவு கேவலமாக ஹெகலை ஒதுக்கித் தள்ளினாரோ அதே அளவுக்கு 1848-ஆம் ஆண்டின் புரட்சியானது தத்துவங்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டது. மேலும், இந்த நிகழ்வுப்போக்கில் ஃபாயர்பாக்கும்கூடப் பின்னணிக்குத் தள்ளப்பட்டார்.
(அத்தியாயம்-1 முற்றும்) http://marxism.sivalingam.in/marxengelsbooks/feuerbachbookchap-1.htm

கருத்துகள் இல்லை: