20 அக்டோபர், 2011

பெண் படைப்புலகம் – பால் வேறுபாடுகளைக் கடந்து-கவிஞர் சக்தி ஜோதி

          2000  க்கு பின் பெண்ணியம் ,பெண்மொழி ,பெண் படைப்பாளிகள், என்று உரக்கவே         பேசுகின்றார்கள் . ஆனால்  ஆண்மொழி ,ஆண் படைப்பாளி ,ஆணியம்  என   ஒன்று  இல்லை ,அல்லது அவ்வாறு    பேசப்படுவதில்லை . இவ்வாறு  ஆண்,பெண் என்று பாகுபடுத்தி  பார்ப்பதை ,பெண்ணியம்  என்றும் பெண்மொழி     என்றும் பகுத்துப்  பார்ப்பதை  அனைவரும்  ஒத்துக் கொள்கிறார்களா  என்றால்  இல்லை  என்றுதான்  சொல்ல வேண்டும் .

                       பசியும்,வறுமையும் இங்கு பொதுவில்  இருக்கின்றன .இன்பமும்,துன்பமும்  பொதுவில்  இருக்கின்றன .பெண்ணுக்கொரு பசி,  ஆணுக்கொரு  பசி  என்று இல்லை.அரசியல்  ரீதியாக  மக்கள்       ஒடுக்கப்படுகிறார்கள்  என்றால்  ஒடுக்கப்படுபவர்கள்   இருபாலரும்தான் .

      பெண்ணுக்கு  சில தனித்தன்மைகள்   இருக்கின்றன .அதுபோலவே  ஆணுக்கும்  சில தனித்தன்மைகள் இருக்கின்றன என்பதை எவரும் மறுக்க இயலாது  .கருவை சுமப்பது பெண்ணென்றால்   அதை உருவாக்குபவன்  ஆணாக  இருக்கின்றான் . இயற்கையின்  நியதிக்கு   கட்டுப்பட்டுதான்  உடல்கள்  இயங்குகின்றன .அரசியல் ரீதியாக  பல நூறு  ஆண்டுகளுக்கு  முன்பு  பெண்ணே   ஆதிக்க  சக்தியாக இருந்தாள்  என்றும்  ஒரு கணத்தை ,ஒரு இனக்குழுவை   நிர்வகிக்கும் ,தலைமையேற்கும்  இடத்தில்  பெண்ணே இருந்தாள்  என்பதையும்  சமூகவியல்  வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர். பல்வேறு நாடுகளில்  நிலத்தை , நீரை  பெண்ணாகப்  பார்க்கும்
வழக்கம்  இன்றளவும்    உள்ளது .

      உடல்  அரசியல் என்றால்  இந்த  மனித  உறவுகளை  பேணி  பாதுகாப்பது   அல்லது   அதன் மீது   ஆதிக்கத்தை ,  அரசியலை  செலுத்துவது என்பதுதான்.  இதை பால் வேறுபாட்டின்   அடிப்படையில்  உடல் உறுப்புக்களை  பற்றி    விவாதிப்பதாக  குறுக்கிவிடக்௬டாது  . ஒருவர் இந்த உலகததில்  சுதந்திரமாக  வாழ உரிமை  இருக்கிறதா  இல்லையா  என்பதுதான்  இன்றைய  கேள்வி .

                   அரசனின்  அதிகாரம்  என்பது  குடிமக்களின்  மீது  அவர்கள் வாழ்வை  பரிக்கும் அல்லது  வாழ விடும்   உரிமையாக  அமைந்திருந்தது . குடிமக்களின் உழைப்பை  ,அவர்கள்  உற்பத்தி  செய்யும்  பொருளை  ,அவர்களுடைய   காலத்தை  இறுதியில்   அவர்களுடைய  உயிரை   பறிக்கும் அதிகாரம்  அரசனிடம்  இருந்தது . அரசனுடைய  உரிமையின்   அடிப்படையில்   அமைந்திருந்த  குடிமக்களின்  சாவு  தற்போது  வேறு வகையில்  வெளிப்படுகிறது .

                        நவீன  கால  யுத்தங்கள்  என்பவை  அரசனின்  பாதுகாப்பு  வேண்டி  நடத்தப்படுபவை  அல்ல  .மாறாக  ஒரு  சமூகத்தின்  ,ஒரு  இனத்தின்  இருப்பை ,தேவையை  நியாயப்படுத்தி  இன்னொரு சமூகத்தின்  ஒட்டு  மொத்த   அழித்தொழிப்பை   செய்ய  வேண்டி  நிகழ்த்தப்படுகிறது

                ஒரு  உயிரின் மீது  அல்லது  உடலின் மீது தன்  அதிகாரத்தை  செலுத்துவதன்  மூலம்  தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் மேலும்  அதிகாரத்தில்   இருப்பவர்களால்  ஒரு உயிரின்  மீது  முடிவுகள்  எடுப்பதும்   ஆகியவை  தான்  உடல்  அரசியலை  தீர்மானிக்கின்றன . இங்கு  பிரச்சனை  பால்  வேறுபாடுகளை  கடந்து  இருக்கின்றன.

                உலகத்தில்  அதிகாரத்தின்  பொருட்டு  சட்டங்கள்  இயற்றப்படும் போது  அதை வலிமையானவர்கள்  வலிமையற்றவர்கள் மீது  தங்கள்  அதிகாரத்தை  செலுத்தி  ஆதிக்கம்  செய்வதும்  தொடர்கின்றன . அரசியல்  அதிகாரத்தை  கைப்பற்றுபவர்கள் ஆணாக இருந்தாலும் ,பெண்ணாக இருந்தாலும்  அவர்கள்  அதிகாரத்தின்
குறியீடுகளாகவே  இருக்கின்றனர் .

              இங்கு நாம்  பார்க்க  வேண்டியது  ஒரு படைப்பில்  என்ன  அரசியல்  வெளிப்பாடு  நிகழ்கின்றது  என்பதைத்தான் . ஒரு படைப்புதான் அது எதற்கு    எதிரான  இலக்கியம்  என்பதைச்  சொல்லும்.

               ஆண்  என்பவன்  கூட  பெண்ணின்  மீதான  ஒடுக்குதலுக்கு  எதிராக  எழுதக்கூடும்.பெண்  என்பவள்  அதற்கு   ஆதரவாகக்  கூட  எழுதக்கூடும் .பெண்கள்  மீதான  ஒடுக்குமுறை  என்பது வெறும்  பால்  அடையாளம்  சார்ந்து   குறுக்கி  விடக் ௬டாது.

         நீண்ட  தமிழ்  இலக்கிய  மரபில்  பால்  வேறுபாடுகளை  கடந்த  இலக்கியமே  பேசப்பட்டு  வருகின்றன. அதை     சங்க இலக்கியம் தொட்டு  நாம்  பார்க்கலாம் .  சங்க  கால  சமுதாயத்தினர்  பாலியலை  மிக  இயற்கையானதாக  கருதினர் . அதனை  குற்றமானது ,சிற்றின்பம் ,தீமையானது   என்று   இழிவாகக்  கருதி  ஒதுக்கும்  போக்கு  அறவே  இல்லை. அதுபோல    பாலுறவை  மையப்படுத்தி   காமத்தை  உடலிலிருந்து  பிரித்து  காமக்கலையாக  மாற்றும்  முயற்சியும்  இல்லை . ஆண்  பெண்ணுக்கு இடையிலான  உடலுறவை    இயல்பானதாகக்  கருதும்  போக்கு  சங்க  இலக்கிய  பிரதிகளில்  காணப்படுகிறது .

                   இன்றும்  கூட பெண்கள்  எழுத  வருவது  ஒன்றும் புதியதல்ல . எழுதுகின்ற  விஷயமும்  புதியதல்ல .நமது   நீண்ட  இலக்கிய  மரபில்  பெண்கள்  பலரும்  அகமும்  புறமும்  எழுதியிருந்தாலும்   அதை  இன்று  வரை  ஒரு  ஆணாதிக்க  மனோபாவத்திலேயே  பார்க்கப்படுகிறது . இன்றைய  இலக்கியம்  தலித்  இலக்கியம்  , பெண் இலக்கியம்   என பிரிக்கப்படுகிறது .படைப்புகள்  பெரும்பாலும் அவரவர் சூழல்  சார்ந்தும் ,சிந்தனைகள்  சார்ந்தும் ,வாழ்வியல்  சார்ந்தும்  ,பொருளாதார  நிலைமைகள் சார்ந்தும் அமைகிறது .  ஒருவர்  சார்ந்து  வாழும்  சமூகத்திற்கு ஏற்றவாரே  மொழியும்   அமைகின்றது .பெண்களுக்கும்  அவ்வாறே  அவர்கள்  வளர்ந்த  வகையிலும்   நேரடியாகவோ ,மறைமுகமாகவோ  தன்னை  பாதித்த சம்பவங்களின்  ஆக்கமே  படைப்பாகிறது .

                   மொழியில்  உள்ள  எதுவும்  எந்த  எழுத்தும்  வாழ்வியலில்  உள்ள  எந்த  உணர்வும் ,செயல்பாடும் ,இலக்கியமாக்கப்படுவதில்   தவறு  எதுவுமில்லை. இலக்கியமாகும்     நிகழ்வு  ஆண்கள்   எழுதும் போது விதமாகவும்பெண்கள் எழுதும் பொது வேறொரு விதமாகவும்   விமர்சிக்கப்படுவதுதான்   தவறு .இங்கு பெண்கள் எழுதுகிறார்கள்  என்பதற்காகவே  ஒரு   அரசியல்  நிகழ்த்தப்படுகிறது .

                   பெண் தன் உடலின்  இயல்புகளை  மன விருப்பத்தை ஆண்  தன் உடல் மீது நிகழ்த்தும் அத்து மீறல்களை , வன்முறைகளை ,அவனது  புறக்கணிப்பை  தன்  எழுத்தில்  கொண்டு வருவது  சமூகத்தில்   மிகப்பெரிய  அதிர்வை  ஏற்படுத்தியுள்ளது .

                        பெண் கவிஞர்கள்  காமத்தை ,பாலியியலை எழுதுவது  தவறு   என்று  ஒரு சாராரும், எழுதினால்  தவறில்லை  என ஊக்குவித்து  அந்த  எழுத்தை  வியாபாரம்  ஆக்கும்  தந்திரத்தை  இன்னொரு  சாராரும்  செய்து    பெண்ணை  போகப்பொருள்   ஆக்குகிறார்கள் .

              பெண்ணுடல்  என்பது  ஆணுடைய  உடைமையாகவும்  அந்த  உடல்  என்கிற  நிலப்பரப்பை  பாதுகாக்கும்   காவலனாகவும் , புரவலனாகவும் ,தன்  அதிகாரத்தை  செலுத்தும்  ஒரு அமைப்பாக   குடும்பம்  என்கிற  ஒரு அமைப்பை  கட்டமைத்துள்ளான். பெண்களின்   விடுதலைக்காக  , உரிமைக்காக  ஒட்டுமொத்தமான  குடும்பம்  என்கிற  அமைப்பை  சிதைக்க  சொல்வதாக அர்த்தமில்லை .  தனிச் சொத்துடமை உருவாக்கிய  குடும்பம்  என்கிற   நிறுவனத்தை  பாதுகாக்கும்  நிறுவனங்களாக  சாதி, மதம், அரசு  ஆகியவை  இருக்கின்றன.

                         குடும்பம்  என்ற  நிறுவனம்  பெண்ணுடைய  இருப்பை  வேள்விக்குறி  ஆக்கினாலும்  அதனுடைய  பாதுகாப்பு  அவளுக்கு  தேவைப்படுகிறது . குடும்பம் என்ற நிறுவனத்தில்  பெண்  என்பவள்  ஆணின் உடமையாகிறாள் ,கருத்தியல்  ரீதியாக  ஆண்  பெண்ணுடைய  உடைமையாக  கட்டமைக்கப்பட்டுள்ளது .

                         பெண் உடலை  ஆண்கள்  கொண்டாடும்  போது தன்  உடலை ,தன் உணர்வை ,பெண்கள் இன்னும்  வலிமையாக  கூற முடியும்.  பெண் உடலை  புனிதம்  என்று  ௬றுவது   அல்லது  அவ்வாறு  கூறி அடிமைப்படுத்துவதும்  எவ்வாறு  இயல்பற்றதோ  அவ்வாறே  அந்த  உடலை  அலட்சியப்படுத்துவது    இயல்பற்றது .
பெண் உடல்  ஒருவரின்   தனிப்பட்ட  உடைமை  அல்ல. இயற்கையின்  ஒரு  பகுதி .ஆணோ  பெண்ணோ  தன்னளவில்  ஒரு  ஒழுங்கு  நிலைக்கு இயல்பாக   வரக்கூடிய  ஒரு சமூக  அமைப்புதான்  தற்சமயம்  தேவையாய் இருக்கிறது .

                                ஆண் மட்டுமே  உள்ள சமூகம்  அல்லது பெண் மட்டுமே  உள்ள  சமூகம் உலகில்  நம்மால்  கற்பனை    செய்து  பார்க்க முடியுமா .  இதில் சமத்துவப் பண்பாடு  என்பது  சாத்தியமாகுமா.  ஆண்  பெண்  என்கிற  இணைகளின்   வழியே  ஒரு சமூகம்  கட்டமைக்கப்படும்  போதுதான்  சமத்துவப்  பண்பாடு  சாத்தியமாகும். குடும்ப அமைப்பிலும்  அதிகாரத்தை  பெண்களுக்கு  கொடுப்பதல்ல பெண்ணுரிமை .அதிகாரத்தை ஒன்றுமற்று போகச்செய்வதுதான்   உண்மையான  சுதந்திரம்.

                      இன்றைய  பல  படைப்புக்கள்  இதைத்தான்  வலியுறுத்துகின்றன.  பெண் படைப்புக்கள்  கால ஓட்டத்தில்   பொது  படைப்பாக  மாறுவதும் , பெண்களுக்கான  பிரச்சனை என்பது  ஒரு சமூகத்திற்கான  பிரச்சனை  என்பதையும்    புரிந்து கொண்டால் மட்டுமே  அதற்கான  ஒட்டுமொத்த தீர்வை  நோக்கி  நகர முடியும் .
………………..
எஸ் ஐ சுல்தான்-

கருத்துகள் இல்லை: