அத்தியாயம்-3
சோஷலிச இலக்கியமும் கம்யூனிச இலக்கியமும்
http://marxism.sivalingam.in/marxengelsbooks/manifesto/manifesto-chap-3.htmதமிழாக்கம்: மு.சிவலிங்கம்
சோஷலிச இலக்கியமும் கம்யூனிச இலக்கியமும்
1. பிற்போக்கு சோஷலிசம்
(அ) நிலப்பிரபுத்துவ சோஷலிசம்
ஃபிரான்சையும் இங்கிலாந்தையும் சேர்ந்த பிரபுக் குலத்தோருக்கு, அவர்களின்
வரலாற்று நிலை காரணமாக, நவீன முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்துப்
பிரசுரங்கள் எழுதுவது அவர்களுடைய வாழ்க்கைத் தொழில் ஆனது. 1830 ஜூலையில்
நடைபெற்ற ஃபிரெஞ்சுப் புரட்சியிலும், இங்கிலாந்து சீர்திருத்தக்
கிளர்ச்சியிலும்[37]
இந்தப் பிரபுக் குலத்தோர், வெறுக்கத்தக்க திடீர்ப் பணக்காரர்களிடம்
மீண்டும் தோற்றுப் போயினர். அதன்பிறகு, தீவிர அரசியல் போராட்டத்துக்குக்
கொஞ்சமும் வழியில்லாமல் போய்விட்டது. இனி இலக்கியப் போர் ஒன்றுதான்
சாத்தியமானதாக இருந்தது. ஆனால், இலக்கியத் துறையிலுங்கூட மீட்சிக்
காலத்தின்[ஏ8] பழைய கூப்பாடுகள் சாத்தியமற்றுப் போயின.
[ஏ8] 1660-க்கும் 1689-க்கும் இடையே நடைபெற்ற இங்கிலாந்து [முடியாட்சியின்] மீட்சியல்ல, 1814-க்கும் 1830-க்கும் இடையே நடைபெற்ற ஃபிரெஞ்சு [முடியாட்சியின்] மீட்சியே [இங்குக் குறிப்பிடப்படுகிறது]. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
அனுதாபத்தைப் பெறும்பொருட்டுப் பிரபுக் குலத்தோர், வெளிப்பார்வைக்காவது தம் சொந்த நலன்களை மறந்துவிட்டு, சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்தின் நலனை மட்டுமே கருத்திற்கொண்டு, முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் தம் குற்றச்சாட்டை வகுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருந்தனர். இவ்வாறாகப் பிரபுக் குலத்தோர் தங்களின் புது எஜமானர் மீது வசைமாரி பொழிந்தும், வரப்போகும் பேரழிவு குறித்து அச்சமூட்டும் தீர்க்க தரிசனங்களை அவர் காதுகளில் முணுமுணுத்தும் வஞ்சம் தீர்த்துக் கொண்டனர்.
இவ்வாறுதான் நிலப்பிரபுத்துவ சோஷலிசம் உதயமானது: பாதி புலம்பல், பாதி வசைப்பாட்டு; பாதி கடந்த காலத்தின் எதிரொலி, பாதி எதிர்காலம் பற்றிய அச்சுறுத்தல்; சில நேரங்களில் அதன் கசப்பான, கிண்டலான, சுருக்கெனத் தைக்கும் விமர்சனத்தின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தின் நெஞ்சக்குலை மீதே தாக்குவதாக இருந்தது. ஆனாலும், நவீன வரலாற்றின் முன்னேற்றத்தைப் புரிந்து கொள்ளும் திறன் கொஞ்சமும் இல்லாத காரணத்தால், எப்போதுமே அதன் விளைவு பரிகசிக்கத் தக்கதாகவே இருந்தது.
பிரபுக் குலத்தோர், மக்களைத் தம் பக்கம் திரட்டும்பொருட்டு, பாட்டாளியின் பிச்சைப் பாத்திரத்தைப் பதாகைபோல் தமக்கு முன்னால் உயர்த்திப் பிடித்தனர். ஆனால் மக்களோ அவர்களோடு சேர்ந்தபோதெல்லாம், அவர்களின் முதுகுப் புறத்தில் பழைய நிலப்பிரபுத்துவப் பட்டயங்கள் இருக்கக் கண்டனர். உரத்த, மரியாதையற்ற சிரிப்புடன் மக்கள் அவர்களைவிட்டு விலகிச் சென்றனர். ஃபிரெஞ்சு மரபுவழி முடியாட்சிவாதிகள் (French Legitimists)[38], 'இளம் இங்கிலாந்து'[39] அமைப்பினர் ஆகியோரில் ஒரு பிரிவினர் இந்தக் கேலிக்கூத்தை அரங்கேற்றினர்.
தங்களின் சுரண்டல் முறை, முதலாளித்துவ வர்க்கச் சுரண்டல் முறையிலிருந்து வேறுபட்டது என்பதைச் சுட்டிக்காட்டும் நிலப்பிரபுத்துவவாதிகள், முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைமைகளிலும் உறவு நிலைமைகளிலும் அவர்கள் சுரண்டினர் என்பதையும், அந்த நிலைமைகள் தற்போது காலாவதியாகிவிட்டன என்பதையும் மறந்துவிடுகின்றனர். தங்களுடைய ஆட்சியின்கீழ் நவீனப் பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் இருந்ததில்லை என்பதை எடுத்துரைக்கும் அவர்கள், அவர்தம் சமுதாய அமைப்புமுறையிலிருந்து தவிர்க்க முடியாதபடி கிளைத்தெழுந்ததே நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதை மறந்து விடுகின்றனர்.
மற்றபடி, அவர்கள் தங்கள் விமர்சனத்தின் பிற்போக்குத் தன்மையை மூடிமறைக்க முயலவில்லை. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் பிரதான குற்றச்சாட்டே இதுதான்: அதாவது, பழைய சமுதாய அமைப்புமுறையை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்துவதற்கென்றே விதிக்கப்பட்ட ஒரு வர்க்கம் முதலாளித்துவ ஆட்சியின்கீழ் வளர்க்கப்பட்டு வருகிறது என்பதுதான். பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பதற்காகக்கூட அல்ல, புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பதற்காகவே அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தைக் குற்றம் சாட்டுகிறார்கள்.
எனவே, அரசியல் நடைமுறையில், தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் அனைத்திலும் அவர்கள் கைகோத்துக் கொள்கின்றனர்; அவர்களுடைய பகட்டான வாய்ப்பேச்சுகள் ஒருபுறமிருக்க, அன்றாட நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் தரம் தாழ்ந்துபோய், தொழில்துறை மரத்திலிருந்து விழுகின்ற பொற்கனிகளைப் பொறுக்கித் தின்னவும், கம்பளி, பீட்ரூட்-சர்க்கரை, உருளைக்கிழக்கு சாராயம் ஆகியவற்றின் சட்டவிரோத வணிகத்தில் பண்டமாற்றாக வாய்மை, அன்பு, கவுரவம் ஆகியவற்றை விலைபேசவும் தயாராக உள்ளனர்.[ஏ9]
[ஏ9] இது முதன்மையாக ஜெர்மனிக்குப் பொருந்தும். அங்கு நிலவுடைமைப் பிரபுக்களும் (Landed Aristocracy), பண்ணை உடைமையாளர்களும் (Squirearchy) தம் பண்ணை நிலங்களில் பெரும்பகுதியைக் கண்காணியர்களைக் கொண்டு, அவர்களின் சொந்த ஆதாயத்துக்காகச் சாகுபடி செய்தனர். மேலும், அவர்கள் பெரிய அளவிலான பீட்ரூட்-சர்க்கரை உற்பத்தியாளர்களாகவும், உருளைக்கிழங்கு சாராயம் காய்ச்சும் தொழிலதிபர்களாகவும் இருந்தனர். இவர்களைவிட அதிகச் செல்வம் படைத்த இங்கிலாந்துப் பிரபுக்கள் இன்னும் அந்த அளவுக்கு இறங்கவில்லை. ஆனால், அவர்களும்கூடச் சரிந்துகொண்டே போகும் நிலவாரத் தொகையை எப்படி ஈடுகட்டுவது என்பதை அறிந்து வைத்துள்ளனர். பெரும்பாலும் நேர்மையற்ற முறையில் இயங்கும் கூட்டுப்-பங்கு நிறுவனங்களைத் (joint-stock companies) தொடங்குவோர்க்குத் தம் பெயர்களைக் கடனாகக் கொடுப்பதன்மூலம் அச்சரிவை ஈடுகட்டுகின்றனர். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
மதகுரு எப்போதும் நிலப்பிரபுவுடன் கைகோத்துச் செயல்பட்டதைப் போன்றே, மதவாத சோஷலிசம் நிலப்பிரபுத்துவ சோஷலிசத்துடன் கைகோத்துக் கொண்டது.
கிறிஸ்துவத் துறவு மனப்பான்மைக்கு சோஷலிசச் சாயம் பூசுவதைவிட எளியது எதுவும் இல்லை. கிறிஸ்துவ மதம், தனிச் சொத்துடைமைக்கு எதிராகவும், திருமணத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கமிடவில்லையா? அவற்றுக்குப் பதிலாக அது தர்மத்தையும் தரித்திரத்தையும், பிரம்மச்சரியத்தையும் புலனடக்கத்தையும், மடாலய வாழ்க்கையையும், புனித மாதா ஆலயத்தையும் பிரச்சாரம் செய்யவில்லையா? கிறிஸ்தவ சோஷலிசம் என்பது, சீமான்களின் மனப்புகைச்சலைப் புனிதப்படுத்த மதகுரு தெளிக்கும் புனித நீரன்றி வேறல்ல.
(ஆ) குட்டி முதலாளித்துவ சோஷலிசம்
முதலாளித்துவ வர்க்கத்தால் நாசமடைந்தது நிலப்பிரபுத்துவச் சீமான்களின்
வர்க்கம் மட்டுமே அல்ல; நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் சூழலில் வாழ்வாதார
நிலைமைகள் வாடிச் சிதைந்தது இந்தவொரு [நிலப்பிரபுத்துவ] வர்க்கத்துக்கு
மட்டுமே அல்ல. மத்திய கால நகரத்தாரும் சிறு விவசாய நிலவுடைமையாளர்களுமே
நவீன முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னோடிகளாக இருந்தனர். தொழில்
ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சொற்ப வளர்ச்சியே பெற்றுள்ள நாடுகளில்
உதித்தெழுந்துவரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கத்திலேயே, இவ்விரு
வர்க்கங்களும் [மத்திய கால நகரத்தார் வர்க்கமும், சிறு விவசாய நிலவுடைமை
வர்க்கமும்] செயலிழந்த நிலையில் இன்னமும் காலந் தள்ளுகின்றன.
நவீன நாகரிகம் முழுமையாக வளர்ந்துநிற்கும் நாடுகளில் குட்டி முதலாளிகளின் புதிய வர்க்கமொன்று உருப்பெற்றுள்ளது. அது பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது; முதலாளித்துவ சமுதாயத்தின் வால்பகுதியாக எப்போதும் தன்னைப் புதுப்பித்து வருகிறது. என்ற போதிலும், இந்த வர்க்கத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள், வணிகப் போட்டியின் செயல்பாட்டால், பாட்டாளி வர்க்கத்தினுள் தொடர்ந்து தூக்கி எறியப்பட்டு வருகின்றனர். நவீனத் தொழில்துறை வளர்வதைத் தொடர்ந்து, நவீன சமுதாயத்தின் ஒரு சுயேச்சையான பிரிவாக நீடிக்க முடியாமல் முற்றிலும் மறைந்துபோகும் காலம் நெருங்கி வருவதையும், பட்டறைத் தொழிலிலும், விவசாயத்திலும், வணிகத்திலும் அவர்களுக்குப் பதிலாக மேற்பார்வையாளர்களும், சம்பள அலுவலர்களும், கடை ஊழியர்களும் நியமிக்கப்படப் போவதையும் அவர்கள் [குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர்] கண்கூடாகக் காண்கின்றனர்.
மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயிகளாக இருக்கும் ஃபிரான்சு போன்ற நாடுகளில், முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நின்ற எழுத்தாளர்கள், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான அவர்களின் விமர்சனத்தை விவசாயிகள், குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினர் ஆகியோரின் தரத்தில் முன்வைப்பதும், இந்த இடைத்தட்டு வர்க்கங்களின் நோக்கு நிலையிலிருந்து தொழிலாளி வர்க்கத்துக்காகப் பரிந்து பேசுவதும் இயல்பே ஆகும். இவ்வாறுதான் குட்டி முதலாளித்துவ சோஷலிசம் உதயமானது. ஃபிரான்சில் மட்டுமன்றி இங்கிலாந்திலும் இத்தகைய கருத்தோட்டத்துக்கு சிஸ்மோண்டி (Sismondi)[40] தலைமை தாங்கினார்.
இந்த வகைப்பட்ட சோஷலிசம் நவீன உற்பத்தி உறவுகளிலுள்ள முரண்பாடுகளை மிகத் துல்லியமாகப் பாகுபடுத்திக் காட்டியது. குட்டி முதலாளித்துவ சோஷலிசம், பொருளாதார வல்லுனர்களின் கபடமான நியாயவாதங்களைத் தோலுரித்துக் காட்டியது. எந்திர சாதனங்கள், உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் நாசகர விளைவுகளையும், மூலதனமும் நிலமும் ஒருசிலரின் கைகளில் குவிவதையும், தேவைக்கு அதிகமான உற்பத்தியையும், [வணிக] நெருக்கடிகளையும் அது மறுக்க முடியாத வகையில் மெய்ப்பித்துக் காட்டியது. குட்டி முதலாளித்துவப் பிரிவினர், விவசாயிகள் ஆகியோரின் தவிர்க்க முடியாத அழிவையும், பாட்டாளி வர்க்கத்தின் கடுந்துயரையும், உற்பத்தியில் நிலவும் அராஜகத்தையும், செல்வ வளத்தின் வினியோகத்தில் காணப்படும் படுமோசமான ஏற்றத் தாழ்வுகளையும், தேசங்களுக்கு இடையிலான சர்வநாசத் தொழில்துறைப் போரையும் குட்டி முதலாளித்துவ சோஷலிசம் சுட்டிக் காட்டியது. பழைய ஒழுக்கநெறிப் பிணைப்புகளும், பழைய குடும்ப உறவுகளும், பழைய தேசிய இனங்களும் குலைந்து போவதையும் அது சுட்டிக் காட்டியது.
எனினும், இந்த வகைப்பட்ட சோஷலிசம் அதன் உறுதியான குறிக்கோள்களைப் பொறுத்தவரை, பழைய உற்பத்தி சாதனங்களையும், பரிவர்த்தனை சாதனங்களையும், அவற்றுடன் கூடவே பழைய சொத்துடைமை உறவுகளையும், பழைய சமுதாயத்தையும் மீட்டமைக்க விரும்புகிறது. அல்லது, நவீன உற்பத்தி சாதனங்களையும் பரிவர்த்தனை சாதனங்களையும், அவற்றால் தகர்த்தெறியப்பட்ட, தகர்த்தெறியப்பட்டே ஆகவேண்டிய, பழைய சொத்துடைமை உறவுகளின் கட்டுக்கோப்புக்குள் அடக்கி வைக்கவே விரும்புகிறது. இவ்விரண்டில் அதன் குறிக்கோள் எதுவாயினும், இந்த வகைப்பட்ட சோஷலிசம் பிற்போக்கானதும் கற்பனாவாத தன்மை கொண்டதுமே ஆகும்.
அதன் முடிவான முழக்கங்கள் இவை: தொழில் அரங்கில் ஒருங்கிணைந்த கைவினைக் குழுமங்கள், விவசாயத்தில் தந்தைவழிச் சமூக உறவுகள்.
முடிவில், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதால் ஏற்படும் மதிமயக்க விளைவுகள் அனைத்தையும், விடாப்பிடியான வரலாற்று உண்மைகள் சிதறடித்தபோது, இந்த வகைப்பட்ட சோஷலிசம் பரிதாபமான மன உளச்சலில் மூழ்கி முடிந்து போயிற்று.
(இ) ஜெர்மானிய சோஷலிசம் அல்லது “மெய்யான'” சோஷலிசம்
ஃபிரான்சு நாட்டு சோஷலிச, கம்யூனிச இலக்கியம் என்பது
ஆட்சியதிகாரத்திலிருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் ஒடுக்குமுறையில்
தோன்றியதோர் இலக்கியமாகும். இந்த ஆட்சியதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின்
வெளிப்பாடாக அது விளங்கியது. ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கம்
நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தோடு தன் போராட்டத்தை அப்போதுதான் தொடங்கியிருந்த
நேரத்தில் அந்த நாட்டில் இந்த இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜெர்மானியத் தத்துவவாதிகளும், கற்றுக்குட்டித் தத்துவவாதிகளும், வாய்ச்சவடால் பேச்சாளர்களும் (beaux esprits) இந்த இலக்கியத்தை ஆவலுடன் தம் வசப்படுத்திக் கொண்டனர். ஆனால் இந்த எழுத்துகள் ஃபிரான்சிலிருந்து ஜெர்மனிக்குள் குடியேறியபோது, அவற்றோடு கூடவே ஃபிரெஞ்சு சமூக நிலைமைகளும் ஜெர்மனிக்குள் குடியேறவில்லை என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிட்டனர். ஜெர்மன் சமூக நிலைமைகளில் வைத்துப் பார்க்கையில் இந்த ஃபிரெஞ்சு இலக்கியம் அதன் உடனடி நடைமுறை முக்கியத்துவம் அனைத்தையும் இழந்துவிட்டது; முழுக்கவும் இலக்கியத் தன்மை கொண்ட ஒரு போக்காகவே நிலைபெற்றது. இவ்வாறாக, பதினெட்டாம் நூற்றாண்டின் ஜெர்மானியத் தத்துவவாதிகளுக்கு, முதலாவது ஃபிரெஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள், பொதுநோக்கில் வெறும் ”நடைமுறைப் பகுத்தறிவின்” கோரிக்கைகளே; அதற்கு மேலான முக்கியத்துவம் எதுவுமில்லை. புரட்சிகர ஃபிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தினுடைய எண்ணத்தின் வெளிப்பாடு, தூய எண்ணத்தின் விதிகளாக, இயல்பாக இருக்க வேண்டிய எண்ணத்தின் விதிகளாக, பொதுவாக உண்மையான மனித எண்ணத்தின் விதிகளாக அவர்களின் கண்களுக்குப் பட்டது.
ஜெர்மானிய இலக்கிய வல்லுனர்களின் (literati) பணி, புதிய ஃபிரெஞ்சுக் கருத்துகளைத் தங்களின் பண்டைத் தத்துவ மனச்சாட்சிக்கு இசைவானதாக வளர்த்தெடுப்பதில் மட்டுமே அடங்கியிருந்தது. அல்லது இன்னும் சரியாகச் சொல்வதாயின், தம் சொந்தத் தத்துவக் கண்ணோட்டத்தைக் கைவிடாமல், ஃபிரெஞ்சுக் கருத்துகளைத் தமதாக்கிக் கொள்வதில் மட்டுமே அடங்கியிருந்தது.
இவ்வாறு தமதாக்கிக்கொள்ளல், ஓர் அயல் மொழியைத் கையகப்படுத்திக் கொள்ளும் அதே வழியில், அதாவது மொழிபெயர்ப்பு மூலமாக, நடந்தேறியது.
பண்டைக்காலப் பலகடவுள் மதத்தாரின் மூலச் சிறப்புள்ள இலக்கியங்கள் தீட்டப் பெற்றிருந்த கையெழுத்துப் பிரதிகளின் மேல், கத்தோலிக்க மதகுருக்களின் அற்பமான வாழ்க்கைக் குறிப்புகளை மடாலயத் துறவிகள் எழுதிவைத்ததை நாம் நன்கறிவோம். தெய்வ நிந்தனை கொண்ட ஃபிரெஞ்சு இலக்கியத்தைப் பொறுத்தமட்டில், ஜெர்மானிய இலக்கிய வல்லுனர்கள் (literati)இதே செயல்முறையைத் தலைகீழாகச் செய்து முடித்தார்கள். ஃபிரெஞ்சு மூலத்துக்குக் கீழே தங்களின் தத்துவ அபத்தத்தை எழுதிவைத்தனர். எடுத்துக்காட்டாக, பணத்தின் பொருளாதாரச் செயல்பாடுகளைப் பற்றிய ஃபிரெஞ்சு விமர்சனத்துக்கு அடியில் அவர்கள், ”மானுடத்தின் அந்நியமாதல்” (Alienation of Humanity) என்று எழுதினர். முதலாளித்துவ அரசு பற்றிய ஃபிரெஞ்சு விமர்சனத்துக்கு அடியில், ”பொதுமை என்னும் வகையினத்தின் ஆட்சி இறக்கம்” (Dethronement of the Category of General) என்று எழுதினர். இன்னும் இதுபோல.
ஃபிரெஞ்சின் வரலாற்று ரீதியான விமர்சனங்களுக்குப் பின்னால் இத்தகைய தத்துவவியல் சொல்தொடர்களைப் புகுத்தும் பணிக்கு அவர்கள், ”செயல்பாடு பற்றிய தத்துவம்” (Philosophy of Action), ”மெய்யான சோஷலிசம்” (True Socialism), ”ஜெர்மானிய சோஷலிச விஞ்ஞானம்” (German Science of Socialism), ”சோஷலிசத்தின் தத்துவ அடிப்படை” (Philosophical Fountation of Socialism), இன்னும் இதுபோலப் பலவாறாகப் பெயர்சூட்டிக் கொண்டனர்.
இவ்வாறாக, ஃபிரெஞ்சு சோஷலிச, கம்யூனிச இலக்கியத்தை முழுமையாக ஆண்மையிழக்கச் செய்தனர். அந்த இலக்கியம் ஜெர்மானியன் கைக்கு வந்தபின், ஒரு வர்க்கத்துக்கு எதிராக இன்னொரு வர்க்கம் நடத்தும் போராட்டத்தை வெளிப்படுத்தும் தன்மையை இழந்துவிட்டது. அதனாலேயே அவன் [ஜெர்மானியன்] ”ஃபிரெஞ்சுக்காரரின் ஒருதலைப்பட்சப் பார்வையிலிருந்து” தான் மீண்டுவிட்டதாகக் கருதிக் கொண்டான். உண்மையான தேவைகளை அல்ல, உண்மையின் தேவைகளை எடுத்துரைப்பதாகவும், பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அல்ல, மனித இயல்பின் நலன்களை, பொதுவாக மனிதனின் நலன்களை எடுத்துரைப்பதாகவும் கருதிக் கொண்டான். அவன் கருதும் மனிதனோ எந்த வர்க்கத்தையும் சேராதவன், எதார்த்த இயல்பு இல்லாதவன், தத்துவார்த்தக் கற்பனையின் பனிமூடிய சாம்ராஜ்யத்தில் மட்டுமே நிலவக் கூடியவன்.
இந்த ஜெர்மானிய சோஷலிசம், ஒரு பள்ளிக்கூட மாணவன் செய்யக்கூடிய வேலையை அவ்வளவு தீவிரத்துடனும் பயபக்தியுடனும் எடுத்துக்கொண்டது. பிறரை நம்பவைத்து ஏமாற்றும் பாணியில், தன்னுடைய அற்பமான கருத்துகளை வானளாவப் புகழ்ந்துகொண்டது. இதற்கிடையே அதன் பகட்டுப் புலமை வாய்ந்த அப்பாவித்தனத்தைப் படிப்படியாக இழந்துவிட்டது.
ஜெர்மானிய முதலாளித்துவ வர்க்கம், குறிப்பாகப் பிரஷ்ய முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுத்துவச் சீமான்களையும் எதேச்சதிகார முடியாட்சியையும் எதிர்த்து நடத்திய போராட்டம், அதாவது மிதவாத இயக்கம், மேலும் ஊக்கம் பெற்றது.
இதன்மூலம், [ஜெர்மானிய] ”மெய்யான” சோஷலிசத்துக்கு, நீண்ட நாட்களாக விரும்பிக் காத்திருந்த வாய்ப்புக் கிட்டியது; சோஷலிஸ்டுக் கோரிக்கைகளுடன் அரசியல் இயக்கத்தை எதிர்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது; மிதவாதத்துக்கு எதிராகவும், பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கு எதிராகவும், முதலாளித்துவப் போட்டி, முதலாளித்துவப் பத்திரிக்கை சுதந்திரம், முதலாளித்துவ சட்டநெறி, முதலாளித்துவச் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்கமான சாபங்களை அள்ளி வீசவும் வாய்ப்புக் கிடைத்தது. மக்கள் கூட்டத்துக்கு இந்த முதலாளித்துவ இயக்கத்தின் மூலம் அடைவதற்கு எதுவுமில்லை, அனைத்தும் இழப்பதற்கே என்று அவர்களுக்கு உபதேசிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. ஃபிரெஞ்சு விமர்சனத்தின் அசட்டுத்தனமான எதிரொலியாக இருந்த ஜெர்மானிய சோஷலிசம், சரியான தருணத்தில் ஒன்றை மறந்துவிட்டது. [ஃபிரான்சில்] நவீன முதலாளித்துவ சமுதாயம் அதற்கே உரிய பொருளாதார வாழ்க்கை நிலைமைகளோடும், அதற்கென ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்போடும், ஏற்கெனவே நிலவி வந்ததை அடிப்படையாகக் கொண்டே ஃபிரெஞ்சு விமர்சனம் அமைந்திருந்தது. ஆனால் ஜெர்மனியில் அத்தகைய நிலையை எய்தும் நோக்கத்துக்கான போராட்டம் இனிமேல்தான் நடக்க இருந்தது என்பதை ஜெர்மானிய சோஷலிசம் மறந்துவிட்டது.
பாதிரியார்கள், பேராசிரியர்கள், நாட்டுப்புறக் கனவான்கள் [நிலப்பிரபுக்கள்], அதிகாரிகள் ஆகியோர் புடைசூழும் ஏதேச்சாதிகார அரசாங்கங்கள் தம்மை அச்சுறுத்தும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகக் காட்டி மிரட்டுவதற்கான ஒரு பயனுள்ள பூச்சாண்டியாக இந்த ஜெர்மானிய சோஷலிசம் பயன்பட்டது.
இதே அரசாங்கங்கள் அதே காலகட்டத்தில் ஜெர்மன் தொழிலாளி வர்க்க எழுச்சிகளை அடக்குவதற்கு வழங்கிய கசையடிகள், துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவற்றின் வடிவிலான கசப்பு மாத்திரைகளுக்குப் பிறகு, கசப்பு நீக்கும் கடைசி இனிப்பாக இந்த ஜெர்மானிய சோஷலிசம் பயன்பட்டது.
இவ்வாறாக, இந்த [ஜெர்மானிய] ”மெய்யான” சோஷலிசம், ஜெர்மானிய முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஆயுதமாக இந்த அரசாங்கங்களுக்குப் பயன்பட்ட அதே நேரத்தில், ஒரு பிற்போக்கான நலனை, ஜெர்மானிய போலிப் பண்புவாதிகளின் (Philistines) நலனை, நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஜெர்மனியில் [போலிப் பண்புவாதக்] குட்டி முதலாளித்துவ வர்க்கம், பதினாறாம் நூற்றாண்டின் மிச்சமீதமாக இருந்து, அக்காலம்தொட்டுப் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தலைகாட்டி வருகிறது. இந்தக் குட்டி முதலாளித்துவ வர்க்கம்தான் ஜெர்மனியில் தற்போதுள்ள நிலவரங்களுக்கு உண்மையான சமூக அடித்தளம் ஆகும்.
இந்த வர்க்கத்தை அழியவிடாமல் பாதுகாக்க வேண்டுமாயின், ஜெர்மனியின் தற்போதைய நிலவரங்களை மாற்றமின்றிப் பாதுகாத்தாக வேண்டும். தொழில்துறையிலும் அரசியல்துறையிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கம், இந்த வர்க்கத்தின் அழிவு நிச்சயம் என்னும் அபாயத்தை உணர்த்துகிறது. ஒருபுறம் மூலதனக் குவிப்பின்மூலமும், மறுபுறம் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க எழுச்சிமூலமும் இந்த அபாயம் உருவாகிறது. [ஜெர்மானிய] ”மெய்யான” சோஷலிசம் ஒரே கல்லில் இந்த இரண்டு மாங்காய்களையும் அடித்து வீழ்த்தக் கூடியதாகத் தோன்றியது. உடனே அது கொள்ளைநோய்போலப் பரவியது.
ஊக வணிகச் சிலந்தி வலையால் ஆன மேலங்கி, அலங்காரச் சொற்களெனும் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டு, குமட்டுகின்ற பசப்பு உணர்ச்சியெனும் பனித் திவலைகளில் தோய்த்தெடுக்கப்பட்டது. அறிவுக்கு அகப்படாத (transcendental) இந்த மேலங்கியால்தான் ஜெர்மானிய சோஷலிஸ்டுகள், எலும்பும் தோலுமாக இருந்த, பரிதாபத்துக்குரிய தங்களின் ”நிரந்தர உண்மைகளை” மூடிப் போர்த்தியிருந்தனர். இந்த மேலங்கி, அவர்களுடைய சரக்குகளின் விற்பனையை இத்தகைய மக்களிடையே [குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரிடையே] வியப்பூட்டும் அளவுக்கு அதிகரிக்க உதவியது. மேலும், ஜெர்மானிய சோஷலிசம் தன்னைப் பொறுத்தமட்டில், குட்டி முதலாளித்துவப் போலிப் பண்புவாதிகளின் படாடோபமான பிரதிநிதியாக விளங்குவதே தனக்குரிய பணி என்பதை மென்மேலும் உணர்ந்தது.
ஜெர்மன் தேசமே முன்மாதிரியான தேசம் என்றும், ஜெர்மானிய அற்பப் போலிப் பண்புவாதியே முன்னுதாரணமான மனிதன் என்றும் ஜெர்மானிய சோஷலிசம் பறைசாற்றியது. இந்த முன்மாதிரியான மனிதனின் வில்லத்தனமான இழிகுணம் ஒவ்வொன்றுக்கும், அதன் உண்மைத் தன்மைக்கு நேர்மாறாக, மறைந்து கிடக்கும் ஓர் உயர்ந்த சோஷலிசப் பொருள்விளக்கத்தை அளித்தது. கம்யூனிசத்தின் ”முரட்டுத்தனமான நாசகரப்” போக்கை நேரடியாக எதிர்க்கும் அளவுக்கும், அனைத்து வர்க்கப் போராட்டங்களையும் பாகுபாடின்றி அடியோடு வெறுப்பதாகப் பறைசாற்றும் அளவுக்கும் எல்லைமீறிச் சென்றது. தற்போது (1847) ஜெர்மனியில் வினியோகிக்கப்படுகின்ற சோஷலிச, கம்யூனிச வெளியீடுகள் என்று சொல்லப்படும் அனைத்து வெளியீடுகளும், மிகச்சில விதிவிலக்குகள் நீங்கலாக, இந்த அருவருப்பான, சலிப்பூட்டும் இலக்கிய வகையைச் சேர்ந்தவையே.[ஏ10]
[ஏ10] 1848-ஆம் ஆண்டின் புரட்சிப் புயல் இந்த இழிவுப் போக்கினை முழுவதுமாகத் துடைத்தெறிந்தது. இந்தப் போக்கின் ஆதரவாளர்களுக்கு, மேற்கொண்டு சோஷலிசத்தின் பக்கம் தலைகாட்டும் விருப்பமே ஏற்படாதவாறு பாடம் புகட்டியது. இந்தப் போக்கின் முதன்மைப் பிரதிநிதியாகவும், மிகச் சரியான முன்மாதிரியாளராகவும் விளங்கியவர் ஹெர் கார்ல் குரூன் (Herr Karl Grun)[41] ஆவார். [1890-ஆம் ஆண்டின் ஜெர்மானியப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
2. பழமைவாத சோஷலிசம் அல்லது முதலாளித்துவ சோஷலிசம்
முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி, முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து
நிலவுவதை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, சமூகக் குறைபாடுகளை அகற்ற
விழைகிறது.
[முதலாளித்துவ வர்க்கத்தின்] இந்தப் பிரிவில், பொருளாதார வல்லுனர்கள், கொடை வள்ளல்கள், மனிதாபிமானிகள், தொழிலாளி வர்க்கத்தின் நிலையை மேம்படுத்துவோர், கருணை இல்லம் நடத்துவோர், விலங்குகளுக்குக் கொடுமை விளைவிப்பதைத் தடுக்க விழையும் சங்கங்களின் உறுப்பினர்கள், குடிவெறிக்கு எதிரான கொள்கை வீரர்கள், கற்பனைக்கு எட்டும் அனைத்து வகையான மூலை முடுக்கச் சீர்திருத்தப் பேர்வழிகள் ஆகியோர் அனைவரும் அடங்குவர். மேலும், இந்த வகைப்பட்ட சோஷலிசம் முழுமையான [தத்துவ] அமைப்புகளாக முறைப்படுத்தப்பட்டுள்ளது.
புரூதோன் எழுதிய வறுமையின் தத்துவம் (Philosophie de la Misere) என்னும் நூலை இந்த வகைப்பட்ட சோஷலிசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
சோஷலிசவாத முதலாளித்துவப் பிரிவினர், நவீன சமூக நிலைமைகளின் அனுகூலங்கள் அனைத்தும் வேண்டும், ஆனால் அந்த நிலைமைகளின் தவிர்க்கவியலா விளைவுகளாகிய போராட்டங்களும் அபாயங்களும் இருக்கக் கூடாது என விரும்புகின்றனர். தற்போது நிலவும் சமூக அமைப்பு, அதன் புரட்சிகரக் கூறுகளும் சிதைவுபடுத்தும் கூறுகளும் இன்றி, அப்படியே நீடிப்பதையே இவர்கள் விரும்புகின்றனர். பாட்டாளி வர்க்கம் இல்லாமல் முதலாளித்துவ வர்க்கம் மட்டும் இருக்க ஆசைப்படுகின்றனர். முதலாளித்துவ வர்க்கம், தான் மேலாதிக்கம் வகிக்கும் உலகே தலைசிறந்ததென இயல்பாகவே கருதுகின்றது. இந்த வசதியான கருத்தோட்டத்தை முதலாளித்துவ சோஷலிசம், ஏறக்குறைய முழுமைபெற்ற பல்வேறு [தத்துவ] அமைப்புகளாக வளர்த்தெடுக்கிறது. பாட்டாளி வர்க்கம் இத்தகையதோர் அமைப்பைச் செயல்படுத்த வேண்டும், அதன்வழியே நேரே ஒரு புதிய சமூக ஜெரூசலத்தை நோக்கி நடைபோட வேண்டுமெனக் கோருகிறது. அவ்வாறு கோருவதன்மூலம் நடைமுறையில் அது கேட்பது என்னவெனில், பாட்டாளி வர்க்கம், தற்போது நிலவும் சமுதாயத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாக நீடிக்க வேண்டும்; அதே வேளையில், முதலாளித்துவ வர்க்கம் பற்றி அதற்குள்ள வெறுக்கத்தக்க கருத்துகள் அனைத்தையும் விட்டொழிக்க வேண்டும் என்பதுதான்.
இந்த சோஷலிசத்தின் இரண்டாவது வடிவம் அதிக நடைமுறை சாத்தியமானது, ஆனால் [தத்துவ ரீதியில்] குறைவாக முறைப்படுத்தப்பட்டது. தொழிலாளி வர்க்கத்துக்கு வெறும் அரசியல் சீர்திருத்தத்தால் எவ்வித அனுகூலமுமில்லை; பொருளாயத வாழ்க்கை நிலைமைகளில், பொருளாதார உறவுகளில் ஏற்படும் மாறுதல் மட்டுமே அனுகூலமாக இருக்கும் என்று அது எடுத்துக் கூறியது. அவ்வாறு கூறுவதன் மூலம், தொழிலாளி வர்க்கத்தின் பார்வையில் ஒவ்வொரு புரட்சிகர இயக்கத்தையும் மதிப்பிழக்கச் செய்ய முயன்றது. என்றபோதிலும், இந்த வகைப்பட்ட சோஷலிசம், பொருளாயத வாழ்க்கை நிலைமைகளில் மாற்றங்கள் என்று கூறியதன் மூலம், ஒரு புரட்சியால் மட்டுமே சாதிக்கப்படக் கூடிய முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் ஒழிப்பை ஒருபோதும் குறிக்கவில்லை; முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் தொடர்ந்து நீடிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகச் சீர்திருத்தங்களையே குறிக்கிறது. எனவே, இவ்வகை சீர்திருத்தங்கள் மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான உறவுகளை எந்த விதத்திலும் பாதிக்காதவை. ஆனால், அதிகப்பட்சமாக முதலாளித்துவ அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்கும், நிர்வாகப் பணியை எளிமையாக்கும், அவ்வளவே.
முதலாளித்துவ சோஷலிசம் வெறும் சொல் அலங்காரமாக ஆகும்போது – அவ்வாறு ஆகும்போது மட்டுமே – அது தன்னைச் சரியானபடி வெளிப்படுத்திக் கொள்கிறது.
சுதந்திரமான வணிகம்: தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. காப்புச் சுங்க வரிகள்: தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. சிறைச்சாலைச் சீர்திருத்தம்: தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. இதுதான் முதலாளித்துவ சோஷலிசத்தின் முத்தாய்ப்பான சொல், கருத்தார்ந்த பொருளுணர்த்தும் ஒரே சொல்.
முதலாளித்துவ சோஷலிசத்தைக் கீழ்க்காணும் வாக்கியத்தில் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்: முதலாளி முதலாளியாக இருப்பது – தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே.
3. விமர்சன-கற்பனாவாத சோஷலிசமும், விமர்சன-கற்பனாவாத கம்யூனிசமும்
பாபியோவும்[42]
[அவரையொத்த] பிறரும் எழுதிய எழுத்துகளைப் போன்று, மகத்தான நவீனப் புரட்சி
ஒவ்வொன்றிலும் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்குக்
குரல்கொடுத்திருக்கும் இலக்கியத்தை இங்கு நாம் குறிப்பிடவில்லை.
நிலப்பிரபுத்துவ சமுதாயம் வீழ்த்தப்படுகையில் உலகெங்கும் பரபரப்பு நிலவிய அந்தக் காலங்களில் பாட்டாளி வர்க்கம் தன் சொந்த லட்சியங்களை எட்டுவதற்காக மேற்கொண்ட முதல் நேரடி முயற்சிகள் தவிர்க்க முடியாதவாறு தோல்வியடைந்தன. காரணம், பாட்டாளி வர்க்கத்தின் அப்போதைய வளர்ச்சியுறாத நிலை. அத்துடன், அது விடுதலை பெறுவதற்கான பொருளாதார நிலைமைகள் அப்போது நிலவவில்லை. அத்தகைய நிலைமைகள் இனிமேல்தான் தோற்றுவிக்கப்படவிருந்தன. வரவிருந்த முதலாளித்துவ சகாப்தம் மட்டுமே அந்த நிலைமைகளைத் தோற்றுவிக்க முடியும். பாட்டாளி வர்க்கத்தின் இந்தத் தொடக்க கால இயக்கங்களுடன் கூடவே தோன்றிய புரட்சிகர இலக்கியம், தவிர்க்க முடியாதவாறு ஒருவித பிற்போக்குத் தன்மையைக் கொண்டிருந்தது. உலகளாவிய துறவுவாதத்தையும், மிகவும் முரட்டு வடிவிலான சமூகச் சமமாக்கத்தையும் அது போதித்தது.
சரியான சோஷலிச, கம்யூனிசக் கருத்தமைப்புகள் என்று சொல்லப்பட்ட, சான் சிமோன்[43], ஃபூரியே[44], ஓவன்[45] மற்றும் பிறரின் கருத்துகள், மேலே விவரிக்கப்பட்ட, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டத்தின் வளர்ச்சியுறாத தொடக்கக் காலகட்டத்தில் தோன்றி நிலவியவையே. (அத்தியாயம்-1, 'முதலாளிகளும் பாட்டாளிகளும்' என்பதைப் பார்க்கவும்). இந்தக் கருத்தமைப்புகளைத் தோற்றுவித்தவர்கள், நடப்பிலிருந்த சமுதாய அமைப்புமுறையில் நிலவிய வர்க்கப் பகைமைகளையும், அதோடுகூட, சிதைந்து கொண்டிருந்த கூறுகளின் செயல்பாட்டையும் கண்டனர் என்பது உண்மையே. ஆனால் இன்னமும் மழலைப் பருவத்தில் இருந்த பாட்டாளி வர்க்கம், எந்தவொரு வரலாறு படைக்கும் முன்முயற்சியோ, எந்தவொரு சுயேச்சையான அரசியல் இயக்கமோ இல்லாத ஒரு வர்க்கமாகவே அவர்களுக்குக் காட்சி தந்தது.
வர்க்கப் பகைமையின் வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடைபோடுவதால், அவர்கள் [சான் சிமோன் முதலியோர்] காணும் பொருளாதாரச் சூழ்நிலை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்குகந்த பொருளாயத நிலைமைகளை இன்னும் அவர்களுக்குப் புலப்படுத்தவில்லை. எனவே, அவர்கள் அத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்கான ஒரு புதிய சமூக விஞ்ஞானத்தை, புதிய சமூக விதிகளைத் தேடிச் செல்கின்றனர்.
வரலாற்று ரீதியான செயல்பாடு, அவர்களுடைய சொந்தமுறையிலான கண்டுபிடிப்புச் செயலுக்கு உட்பட வேண்டும்; வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்ட விடுதலைக்கான நிலைமைகள், [அவர்களின்] கற்பனையில் உருவான நிலைமைகளுக்கு உட்பட வேண்டும்; பாட்டாளி வர்க்கத்தின் படிப்படியான, தன்னியல்பான வர்க்க ஒழுங்கமைப்பு, இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் இதற்கெனப் பிரத்தியேகமாகப் புனைந்தளிக்கும் சமூக ஒழுங்கமைப்புக்கு உட்பட வேண்டும் [என்றாகியது]. அவர்தம் சமூகத் திட்டங்களுக்கான பிரசாரத்தையும், அத்திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்துவதையும் சுற்றியே வருங்கால வரலாறு அமையும் என அவர்களின் பார்வைக்குத் தோன்றுகிறது.
அவர்கள் தம் திட்டங்களை வகுத்தமைக்கும்போது, மிக அதிகமாகத் துன்புறும் வர்க்கம் என்ற வகையில் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களில்தான் முதன்மையாக அக்கறை செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தே உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரையில் பாட்டாளி வர்க்கம் என ஒன்று இருக்கிறதெனில், மிக அதிகமாகத் துன்புறும் வர்க்கம் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே.
இந்த வகைப்பட்ட சோஷலிஸ்டுகள், வர்க்கப் பகைமைகள் அனைத்துக்கும் மிகமிக மேலானோராகத் தம்மைத்தாமே கருதிக்கொள்வதற்கு, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பெறாத நிலையும், அதோடுகூட அவர்களின் சொந்தச் சுற்றுச்சார்புகளும் காரணமாயின. சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரின் நிலையையும், மிகவும் சலுகை படைத்தவரின் நிலையையுங்கூட, மேம்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். எனவே, வர்க்க வேறுபாடு கருதாமல் சமுதாயம் முழுமைக்கும் வேண்டுகோள் விடுப்பதை, சரியாகச் சொல்வதெனில், முன்னுரிமை தந்து ஆளும் வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுப்பதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில், அவர்கள் எடுத்துரைக்கும் அமைப்பினை ஒருவர் புரிந்துகொண்டபின், சமுதாயத்தின் சாத்தியமான நிலைகளுள் மிகச்சிறந்த நிலையை எய்துவதற்குரிய, சாத்தியமான திட்டங்களிலேயே மிகச்சிறந்த திட்டம் அது என்பதை அவர் காணத் தவற முடியுமோ?
எனவே, அவர்கள் அனைத்து அரசியல் செயல்பாடுகளையும், குறிப்பாக அனைத்து புரட்சிகரச் செயல்பாடுகளையும் நிராகரிக்கின்றனர்; சமாதான வழிகளில் தம் லட்சியங்களை அடைந்திட விரும்புகின்றனர்; நிச்சயமாகத் தவிர்க்க முடியாத தோல்வியில் முடிகிற சிறு பரிசோதனைகள் மூலமும், முன்மாதிரி [அமைப்புமுறை]யின் சக்தியைக் கொண்டும், புதிய சமூக வேதத்துக்குப் பாதை வகுத்திட அவர்கள் பெருமுயற்சி செய்கின்றனர்.
வருங்கால சமுதாயத்தைப் பற்றிய இத்தகைய கற்பனைச் சித்திரங்கள், பாட்டாளி வர்க்கம் இன்னமும் வளர்ச்சி பெறாத நிலையில், ஆனால் அதனுடைய சொந்த நிலைகுறித்துக் கற்பனையான கருத்தோட்டம் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தீட்டப்பட்டவையாகும். சமுதாயத்தின் பொதுவான மறுசீரமைப்புகுறித்து, அந்த வர்க்கத்துக்கு உள்ளுணர்வு ரீதியாக எழும் ஆசைகளுக்கு ஏற்பவே அச்சித்திரங்கள் அமைந்துள்ளன.
ஆனால், இந்த சோஷலிச, கம்யூனிச வெளியீடுகளில் ஒரு விமர்சனக் கூறும் அடங்கியுள்ளது. தற்போது நிலவும் சமுதாயத்தின் ஒவ்வொரு கோட்பாட்டையும் அவை தாக்குகின்றன. எனவே, தொழிலாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கான மிகவும் மதிப்புவாய்ந்த விவரக் குறிப்புகள் அவற்றில் நிறைந்துள்ளன. நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான பாகுபாட்டை ஒழித்தல், குடும்ப அமைப்புமுறையை ஒழித்தல், தனிப்பட்ட நபர்களின் நலனுக்காகத் தொழில்கள் நடத்துவதை ஒழித்தல், கூலிமுறையை ஒழித்தல், சமுதாயத்தின் ஒருங்கிசைவைப் பிரகடனம் செய்தல், அரசின் பணிகளை வெறுமனே உற்பத்தியை மேற்பார்வை செய்யும் பணியாக மாற்றிவிடல் - இவைபோன்ற நடைமுறை நடவடிக்கைகள் அந்த வெளியீடுகளில் முன்மொழியப்படுகின்றன. இத்தகைய முன்மொழிவுகள் அனைத்தும், வர்க்கப் பகைமைகள் மறைந்துபோவது ஒன்றை மட்டுமே சுட்டுவதாக உள்ளன. இந்த வர்க்கப் பகைமைகள் அந்தக் காலகட்டத்தில் அப்போதுதான் முளைவிடத் தொடங்கியிருந்தன. வர்க்கப் பகைமைகள் அவற்றின் தொடக்க காலத்தே நிலவிய தெளிவற்ற, வரையறுக்கப்படாத வடிவங்களில் மட்டுமே இந்த வெளியீடுகளில் அடையாளம் காணப்படுகின்றன. எனவே, இந்த முன்மொழிவுகள் கலப்பற்ற கற்பனாவாதத் தன்மை கொண்டவையாகவே உள்ளன.
விமர்சன-கற்பனாவாத சோஷலிசம், விமர்சன-கற்பனாவாத கம்யூனிசம் ஆகியவற்றின் முக்கியத்துவம் வரலாற்று வளர்ச்சியுடன் எதிர்விகித உறவைக் கொண்டுள்ளது. நவீன வர்க்கப் போராட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சிபெற்று திட்டவட்டமான வடிவம் பெறுகிறதோ, அந்த அளவுக்குப் போராட்டத்திலிருந்து இவ்வாறு கற்பனையாக விலகி நிற்றலும், அதன்மீது தொடுக்கப்படும் கற்பனையான தாக்குதல்களும் நடைமுறை மதிப்பனைத்தையும், தத்துவ நியாயம் அனைத்தையும் இழந்து விடுகின்றன. எனவே, இந்த [தத்துவ] அமைப்புகளின் மூலவர்கள், பலவிதத்தில் புரட்சிகரமாக விளங்கியபோதும், இவர்களின் சீடர்கள் ஒவ்வொரு சூழலிலும் வெறும் பிற்போக்குக் குறுங்குழுக்களாகவே அமையப் பெற்றுள்ளனர். பாட்டாளி வர்க்கத்தின் முற்போக்கான வரலாற்றுபூர்வ வளர்ச்சிக்கு எதிராகத் தங்கள் குருநாதர்களின் மூலக் கருத்துகளை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். எனவே, வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கவும், வர்க்கப் பகைமைகளைச் சமரசப்படுத்தவும் விடாமல் தொடர்ந்து முயலுகின்றனர். தங்களின் கற்பனாவாத சமூகத் திட்டங்களைச் சோதனை பூர்வமாக நடைமுறைப்படுத்தி விடலாமென இன்னமும் கனவு காண்கின்றனர். ஆங்காங்கே தனித்தனியான சில ”வேலைக் கூட்டமைவுகளைத்” (Phalansteries) தோற்றுவித்தல், ”உள்நாட்டுக் குடியிருப்புகளை” (Home Colonies) நிறுவுதல், ஒரு ”குட்டி ஐகேரியாவை” (Little Icaria) அதாவது புது ஜெரூசலத்தின் குட்டி மாதிரிகளை அமைத்தல்[ஏ11] ஆகியவை இவர்களின் கற்பனாவாத சமூகத் திட்டங்கள். இந்த ஆகாயக் கோட்டைகளையெல்லாம் கட்டிமுடிக்க, இவர்கள் முதலாளிமார்களின் பரிவுணர்வுக்கும் பணத்துக்கும் வேண்டுகோள் விடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். படிப்படியாக இவர்கள் மேலே விவரிக்கப்பட்ட பிற்போக்குப் பழமைவாத சோஷலிஸ்டு வகையினராகத் தாழ்ந்துவிடுகின்றனர். அவர்களிடமிருந்து இவர்கள் வேறுபடுவது, மிகவும் முறைப்படுத்தப்பட்ட பகட்டுப் புலமையிலும், இவர்தம் சமூக விஞ்ஞானத்தின் அதிசயப் பலன்களின்பால் இவர்கள் கொண்டுள்ள வெறித்தனமான மூட நம்பிக்கையிலும் மட்டுமே.
[ஏ11] வேலைக் கூட்டமைவுகள் (Phalansteries) என்பவை ஷார்ல் பூரியே (Charles Fourier) திட்டத்தின்படி அமைந்த சோஷலிசக் குடியிருப்புகள் ஆகும். ஐகேரியா (Icaria) என்பது காபே (Cabet) அவருடைய கற்பனை உலகத்துக்கு இட்ட பெயராகும். பின்னாளில் அவருடைய அமெரிக்கக் கம்யூனிசக் குடியிருப்புக்கு அப்பெயரைச் சூட்டினார். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
“உள்நாட்டுக் குடியிருப்புகள்” (Home Colonies) என்பது, ஓவன் (Owen) அவருடைய கம்யூனிச முன்மாதிரிச் சமுதாயங்களுக்கு இட்டழைத்த பெயராகும். வேலைக் கூட்டமைவுகள் (Phalansteries) என்பது, பூரியே திட்டமிட்டிருந்த பொது மாளிகைகளுக்கு இட்ட பெயராகும். ஐகேரியா என்பது [காபேயின்] கற்பனை தேசத்துக்குச் சூட்டப்பட்ட பெயராகும். காபே அந்தக் கற்பனை தேசத்தின் கம்யூனிச நிறுவனங்களைச் சித்தரித்துள்ளார். [1890-ஆம் ஆண்டின் ஜெர்மானியப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
எனவே, இவர்கள் தொழிலாளி வர்க்கம் சார்பிலான அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் வன்மையாக எதிர்க்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை, புதிய வேதாகமத்தில் (New Gospel) கொண்டுள்ள குருட்டுத்தனமான அவநம்பிக்கையின் விளைவாக மட்டுமே அத்தகைய நடவடிக்கை இருக்க முடியும் எனக் கருதுகின்றனர்.
இங்கிலாந்தில் ஓவனியர்கள் (Owenites) சாசனவாதிகளையும் (Chartists)[46], ஃபிரான்சில் ஃபூரியேயர்கள் (Fourierists) ’சீர்திருத்தம்’வாதிகளையும் (Reformistes)[47] எதிர்க்கின்றனர்.
(அத்தியாயம்-3 முற்றும்)
அடிக் குறிப்புகள்
[அடிக்குறிப்பைப் படித்து முடித்தபின், அடிக்குறிப்பு எண்மீது சொடுக்கி,
நூலின் உரைப்பகுதியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.]
[37]
இங்கிலாந்து சீர்திருத்தக் கிளர்ச்சி: இங்குக் குறிப்பிடப்படுவது
இங்கிலாந்து பாராளுமன்றத் தேர்தல் சீர்திருத்தத்துக்காக நடைபெற்ற
கிளர்ச்சியாகும். இந்தக் கிளர்ச்சியின் பலனாகத் தேர்தல் சீர்திருத்தச்
சட்டம் 1931-இல் காமன்ஸ் சபையில் நிறைவேற்றப்பட்டது. 1832 ஜூனில்
பிரபுக்களின் சபையால் ஏற்கப்பட்டது. இச்சட்டம் நிலவுடைமை பெற்ற பிரபுக்
குலத்தார் அதுவரை வகித்துவந்த அரசியல் ஏகபோகத்துக்கு எதிரானதாகும்.
இச்சட்டம், தொழில்துறை முதலாளிகள் பாராளுமன்றத்தில் இடம்பெற வகைசெய்தது.
இந்தச் சீர்திருத்தத்துக்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தினரும்,
குட்டி முதலாளித்துவப் பகுதியோரும் உந்து சக்தியாகச் செயல்பட்டனர். ஆனால்
மிதவாத முதலாளித்துவ வர்க்கம் இவர்களை ஏமாற்றிவிட்டது. இவர்கள் எவ்விதத்
தேர்தல் உரிமைகளும் பெற முடியாதபடி தடுத்துவிட்டது.
[38] ஃபிரெஞ்சு மரபுவழி முடியாட்சிவாதிகள் (French Legitimists): 1830-இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட புர்போன் அரச வம்சத்தின் ஆதரவாளர்களைக் குறிக்கிறது. புர்போன் அரச வம்சம் உயர்குடி நிலப்பிரபுக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. நிதிப்பிரபுக்கள், பெருமுதலாளிகள் ஆகியோரின் ஆதரவுடன் ஃபிரெஞ்சு மரபுவழி முடியாட்சிவாதிகள், ஆட்சியிலிருந்த ஆர்லியன்ஸ் அரச வம்சத்துக்கு எதிராகப் போராடினர். அப்போராட்டத்தின்போது, அவர்களில் சிலர், சுரண்டும் முதலாளிகளிடமிருந்து பாட்டாளி மக்களைப் பாதுகாப்பவர்கள் நாங்கள் எனக் கூறிக்கொண்டு சோஷலிச முழக்கங்களால் மக்களைத் தூண்டிவிடுவதில் ஈடுபட்டனர்.
[39] இளம் இங்கிலாந்து அமைப்பு: இங்கிலாந்து நாட்டின் பழமைவாதக் கட்சியைச் (டோரிகள் கட்சி) சேர்ந்த இலக்கிய ஆசிரியர்களின் குழு. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ந்துவந்த அரசியல், பொருளாதார வலிமைக்கு எதிரான நிலப்பிரபுக்களின் அதிருப்தியை இக்குழு வெளியிட்டது. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தங்களின் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெறும்பொருட்டு, அவர்களை ஈர்க்கும் விதமான கிளர்ச்சியூட்டும் மேடைப் பிரச்சாரங்களை இக்குழுவினர் மேற்கொண்டனர்.
[40] சிஸ்மோண்டி (Sismondi, 1817-1887): ஜான் ஷார்ல் லேஓனார் சிஸ்மோண்ட் டே என்பது இவரது முழுப்பெயர். சுவிஸ் நாட்டுப் பொருளாதார வல்லுனர். வரலாற்று அறிஞர். குட்டி முதலாளித்துவ சோஷலிசத்தின் பிரதிநிதி. முதலாளித்துவத்தைக் குட்டி முதலாளித்துவ நோக்கில் விமர்சித்தவர். பெருவீத முதலாளித்துவ உற்பத்தி முறையின் முற்போக்குத் தன்மைகொண்ட போக்குகளை இவர் உணர்ந்துகொள்ளவில்லை. பழைய சமூக அமைப்புகளிலும், மரபுகளிலும் அதாவது புதிய பொருளாதார நிலைமைகளுக்கு ஒவ்வாத கைவினைக் குழும உற்பத்தி முறைகளிலும், தந்தைவழிச் சமுதாய முறையிலான விவசாயத்திலும் தீர்வுகளைத் தேடிவந்தார்.
[41] ஹெர் கார்ல் குரூன் (Herr Karl Grun, 1817-1887): ஜெர்மானிய குட்டி முதலாளித்துவக் கட்டுரையாளர்.
[42] பாபியோவ் (Babeuf, 1760-1797): இவரது உண்மைப் பெயர் ஃபிரான்சுவா நோயேல். ஃபிரெஞ்சுப் புரட்சியில் பங்கு பெற்றவர். கற்பனாவாதக் கம்யூனிசத்தின் மிகச் செல்வாக்குப் பெற்ற பிரதிநிதி. இரகசிய சங்கம் ஒன்றை அமைத்து, ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கான ஆயத்தங்களை மேற்கொண்டார். பொதுமக்களின் நலன்காக்கும் புரட்சிகர சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதே இவரின் நோக்கமாக இருந்தது. ஆயுத எழுச்சிக்கான சதி ஆலோசனை வெளிப்பட்டு, 1797-ஆம் மே 27-இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
[43] சான் சிமோன் (Saint Simon, 1760-1825): அன்ரீ கிளோத் சான் சிமோன் என்பது இவரது முழுப்பெயர். ஃபிரான்சு நாட்டின் கற்பனாவாத சோஷலிஸ்டு. முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரானவர். கைவினைக் குழுமக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்துக்கான வேலைத்திட்டத்தை முன்வைத்துச் செயல்பட்டார். ஆனால் தனியார் சொத்துடைமையை எதிர்க்கவில்லை. விஞ்ஞானத்தைத் தொழில்துறையுடன் இணைத்தல், உற்பத்தியை மையப்படுத்தல், திட்டமுறைப்படி உற்பத்தியைப் பெருக்குதல் ஆகிய கருத்துகளை முன்வைத்தார். ஆனால் அரசியல் போராட்டம் குறித்தும், புரட்சி குறித்தும் எதிர்மறை நிலையை மேற்கொண்டார். அரசாங்கச் சீர்திருத்தங்கள்மூலமும், ஒரு புதிய மதத்தின் வழியில் சமுதாயத்துக்கு அறநெறிப் பயிற்சி அளிப்பதன்மூலமும் வர்க்க முரண்பாடுகளை ஒழிக்க முடியும் என நம்பினார்.
[44] ஃபூரியே (Fourier, 1772-1837): ஷார்ல் ஃபூரியே என்பது இவரது முழுப்பெயர். இவர் முதலாளித்துவ அமைப்பைக் கடுமையாகச் சாடினார். வருங்கால ’இசைவான’ சமுதாயம் மனிதனின் உள்ளத்து உணர்ச்சிகளை அறிந்து கொள்வதன் அடிப்படையில் அமையும் என்றார். எல்லோரும் தானே மனமுவந்து வேலை செய்யும் ‘வேலைக் கூட்டமைப்புகளை’ உருவாக்கி, சோஷலிச சமுதாயத்தைச் சமாதான முறையில் நிறுவ முடியும் என நம்பினார். பலாத்காரப் புரட்சியை எதிர்த்தார். ஃபூரியே தனியார் சொத்துடைமையை எதிர்க்கவில்லை.
[45] ஓவன் (Owen, 1771-1858): ராபர்ட் ஓவன் என்பது இவரது முழுப்பெயர். இவர் முதலாளித்துவ அமைப்பைக் கடுமையாகக் கண்டித்தார். ஆனால் முதலாளித்துவ முரண்பாடுகளின் மூல காரணங்களை அவரால் விளக்கிக் காட்ட முடியவில்லை. கல்வி, சமூக சீர்திருத்தம் மூலமாகச் சமூக ஏற்றதாழ்வுகளை அகற்ற முடியும் என நம்பினார். அதற்குரிய ஒரு விரிவான வேலைத்திட்டத்தை முன்வைத்தார். தம் வேலைத்திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டன. ‘கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்’ என்னும் நூலில் ஏங்கெல்ஸ், சான் சிமோன், ஷார்ல் ஃபூரியே, ராபர்ட் ஓவன் ஆகியோரின் கோட்பாடுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
[46] சாசனவாதிகள் (Chartists): சாசனம் என்று பொருள்படும் Charter என்ற சொல்லிலிருந்து உருவான சொல். இங்கிலாந்து தொழிலாளர்களின் புரட்சிகரமான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். தொழிலாளர்களின் கடினமான பொருளாதார நிலைமைகள், அரசியல் உரிமையின்மை ஆகியவற்றின் காரணமாகத் தோன்றிய இயக்கம். 1830-களின் கடைசியில் பெரிய பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுடன் தொடங்கிய இந்த இயக்கம் இடையிடையே தொய்வுற்று, 1850-களின் தொடக்கம்வரை தொடர்ந்தது. ஒரு பக்குவமான புரட்சிகரத் தலைமையும், தெளிவான வேலைத்திட்டமும் இல்லாததே இந்த இயக்கத்தின் தோல்விக்குக் காரணம்.
[47] சீர்திருத்தம்வாதிகள் (Reformistes): பாரிசில் 1843 முதல் 1850 வரை வெளிவந்த சீர்திருத்தம் (La Reforme) என்னும் செய்தித்தாளின் ஆதரவாளர்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளனர். குடியரசை நிறுவ வேண்டும், ஜனநாயக சமுதாயச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
(அத்தியாயம்-3 அடிக்குறிப்புகள் முற்றும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக