22 அக்டோபர், 2011

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

அத்தியாயம்-4
தற்போதுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் குறித்துக் கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு
                                                          http://marxism.sivalingam.in/marxengelsbooks/manifesto/manifesto-chap-4.htmதமிழாக்கம்: மு.சிவலிங்கம் இங்கிலாந்திலுள்ள சாசனவாதிகள், அமெரிக்காவிலுள்ள விவசாயச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் இயக்கங்களையொத்த, தற்போது நிலவும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை குறித்து [இந்நூலின்] இரண்டாவது பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.
கம்யூனிஸ்டுகள், தொழிலாளி வர்க்கத்தின் உடனடி லட்சியங்களை எய்திடவும், அவ்வப்போதைய நலன்களை நிறைவேற்றிக் கொள்ளவும் போராடுகிறார்கள். ஆனாலும், நிகழ்கால இயக்கத்திலேயே அந்த இயக்கத்தின் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்; இயக்கத்தின் எதிர்காலம் குறித்து அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். ஃபிரான்சில் கம்யூனிஸ்டுகள் பழமைவாத, தீவிரவாத முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிராகச் சமூக-ஜனநாயகவாதிகளுடன்[ஏ12] கூட்டுச் சேர்ந்துகொள்கின்றனர். என்றாலும், மாபெரும் புரட்சியிலிருந்து பாரம்பரியமாகப் பெறப்பட்டு வந்துள்ள சொற்கோவைகள், பிரமைகள் குறித்து ஒரு விமர்சன நிலைபாட்டை மேற்கொள்ளும் உரிமையை விட்டுவிடாமல் தம் கையில் வைத்துள்ளனர்.

[ஏ12] அக்காலத்தில் பாராளுமன்றத்தில் லெத்ரு-ரொலேனும்[48], இலக்கிய உலகில் லூயீ பிளாங்க்கும்[49], தினசரிப் பத்திரிக்கை ஊடகத்தில் சீர்திருத்தம் (Reforme) என்னும் பத்திரிகையும் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சி இது. சமூக-ஜனநாயகம் என்ற பெயரைப் பொறுத்தவரை அப்பெயரைக் கண்டுபிடித்தவர்களுக்கு, ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியின், கூடக்குறைய சோஷலிச சாயம் பூசப்பட்ட ஒரு பிரிவு என்பதையே குறித்தது. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
ஃபிரான்சில் அக்காலத்தில் தன்னைத்தானே சமூக-ஜனநாயகக் கட்சி என்று அழைத்துக் கொண்ட இக்கட்சியை, அரசியல் வாழ்வில் லெத்ரு-ரொலேனும், இலக்கியத்தில் லுயீ பிளாங்க்கும் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவ்வாறு, அக்கட்சி இந்நாளைய ஜெர்மன் சமூக-ஜனநாயகத்திலிருந்து அளவிட முடியாத அளவுக்கு வேறுபட்டிருந்தது. [1890-ஆம் ஆண்டின் ஜெர்மானியப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

சுவிட்ஸர்லாந்தில், தீவிரக் கொள்கையினரைக் (Radicals) கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றனர். ஆனால், அதே வேளையில், தீவிரக் கொள்கையினரின் கட்சி, ஒருபாதி ஃபிரெஞ்சு நாட்டில் உள்ளது போன்ற ஜனநாயக சோஷலிஸ்டுகளையும், மறுபாதி தீவிரக் கொள்கையுடைய முதலாளித்துவ வர்க்கத்தாரையும் கொண்ட, ஒன்றுக்கொன்று பகைமை பாராட்டும் கூறுகளால் ஆனது என்பதைக் கம்யூனிஸ்டுகள் காணத் தவறவில்லை.
போலந்தில், தேச விடுதலைக்கு விவசாயப் புரட்சியே தலையாய நிபந்தனை என்பதை வலியுறுத்தும் கட்சியைக் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றனர். 1846-இல் கிராக்கவ் (Cracow) எழுச்சிக்குத்[50] தூண்டுகோலாக இருந்த கட்சி அது.
ஜெர்மனியில், எதேச்சாதிகார முடியாட்சியையும், நிலப்பிரபுத்துவப் பண்ணை உடைமையாளர்களையும் (feudal squirearchy), [நகர்ப்புறப் பிற்போக்குவாதக்] குட்டி முதலாளித்துவப் பிரிவினரையும் (petty bourgeoisie)[51] எதிர்த்து முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகரமான முறையில் செயல்படும் போதெல்லாம், கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்துடன் சேர்ந்துநின்று போராடுகின்றனர். ஆனால், முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான தீராப் பகைமையைச் சாத்தியமான அளவுக்குத் தெளிவாக உணரும்படி, தொழிலாளி வர்க்கத்துக்கு அறிவு புகட்டுவதைக் கம்யூனிஸ்டுகள் எந்தவொரு சூழலிலும் ஒருபோதும் நிறுத்தவில்லை. காரணம், முதலாளித்துவ வர்க்கம் தன் மேலாதிக்கத்துடன்கூடவே தவிர்க்க முடியாதபடி புகுத்த வேண்டியிருக்கும் சமூக, அரசியல் நிலைமைகளை, ஜெர்மானியத் தொழிலாளர்கள் அப்படியே முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடும். மேலும், ஜெர்மனியில் பிற்போக்கு வர்க்கங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதே முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் உடனடியாகத் தொடங்கக்கூடும்.
கம்யூனிஸ்டுகள் முதன்மையாக ஜெர்மனியிடம் தங்கள் கவனத்தைத் திருப்புகின்றனர். காரணம், ஜெர்மனியில் ஒரு முதலாளித்துவப் புரட்சி நடைபெறும் தறுவாயில் உள்ளது. ஐரோப்பிய நாகரிகம் மிகவும் முன்னேறியுள்ள நிலைமைகளின் சூழலில் அது நடத்தப்பட வேண்டியுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும், பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்சிலும் இருந்த பாட்டாளி வர்க்கத்தையெல்லாம்விட மிக அதிக வளர்ச்சிபெற்ற ஒரு பாட்டாளி வர்க்கம் அதை நடத்தவுள்ளது. மேலும், ஜெர்மனியில் நடைபெறப்போகும் முதலாளித்துவப் புரட்சி, உடனடியாக அதனைப் பின்தொடரப்போகும் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னோடியாகவே இருக்கப் போகிறது என்பதும் காரணமாகும்.
சுருங்கக் கூறின், கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாய பிரச்சினையாகச் சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொருட்படுத்துவதில்லை.
முடிவாக, அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.
கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்![52]
(அத்தியாயம்-4 முற்றும்)
(நூல் முற்றும்)


அடிக் குறிப்புகள்
[அடிக்குறிப்பைப் படித்து முடித்தபின், அடிக்குறிப்பு எண்மீது சொடுக்கி, நூலின் உரைப்பகுதியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.]
[48] லெத்ரூ-ரொலேன் (Ledru Rollen, 1807-1874): அலெக்ஸாந்தர் ஓகுஸ்ட் லெத்ரூ-ரொலேன் என்பது இவரது முழுப்பெயர். ஃபிரஞ்சுக் கட்டுரையாளர். அரசியல்வாதி. குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் தலைவர்களுள் ஒருவர். சீர்திருத்தம் (La Reforme) செய்தித்தாளின் ஆசிரியர். 1848-இல் அரசாங்கத்தின் உறுப்பினராக இருந்தார்.
[49] லூயி பிளாங்க் (Louis Plank, 1811-1882): ஃபிரெஞ்சுக் குட்டி முதலாளித்துவ சோஷலிஸ்டு. வரலாற்று ஆசிரியர். 1848-49 புரட்சியில் தீவிரப் பங்காற்றியவர். முதலாளித்துவ வர்க்கத்தினருடன் சமரசம் செய்துகொள்வதை ஆதரித்தார்.
[50] கிராக்கவ் எழுச்சி: போலந்துப் பிரதேசங்களில் தேச சுதந்திரம் பெறுவதற்காக 1846 பிப்ரவரியில் ஆயுதமேந்திய எழுச்சி நடைபெற்றது. போலந்தின் புரட்சிகர ஜனநாயகவாதிகள் இந்த எழுச்சியை முன்னின்று நடத்தினர். உயர்குடியினரின் ஒரு பகுதியினர் புரிந்த துரோகத்தால் இந்தப் புரட்சி எழுச்சி பொதுவாகத் தோல்வியுற்ற போதிலும், 1815-ஆம் ஆண்டுதொட்டு ஆஸ்திரியா, ருஷ்யா, பிரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டு ஆதிக்கத்தில் இருந்துவந்த கிராக்கவ்வில் மட்டும் 1846 பிப்ரவரி 22-இல் புரட்சியாளர்கள் வெற்றியடைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவினர். நிலப்பிரபுக்களுக்கு கட்டாயமாகச் செய்யப்பட்டுவந்த சேவைகளை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டனர். ஆனால், கிராக்கவ் எழுச்சி 1846 மார்ச் தொடக்கத்தில் நசுக்கப்பட்டது. 1846 நவம்பரில் ஆஸ்திரியா, பிரஷ்யா, ருஷ்யா ஆகிய நாடுகள் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டன. இதன்படி கிராக்கவ் ஆஸ்திரியப் பேரரசில் இணைக்கப்பட்டது.
[51] குட்டி முதலாளித்துவப் பிரிவினர்: ஆங்கிலப் பதிப்பில் petty bourgeoisie என்று குறிப்பிடப்பட்டாலும், ஜெர்மன் மூலத்தில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பயன்படுத்திய சொல் Kleinburgerei என்பதாகும். நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்குப் பிரிவினரைக் குறிக்கவே இச்சொல்லைப் பயன்படுத்தினர்.
[52] கம்யூனிஸ்டு அறிக்கையின் முத்தாய்ப்பான இந்தப் புகழ்பெற்ற முழக்கம், ஜெர்மானிய மூலத்தில், “Proletarier aller Länder, vereinigt euch!” என்று காணப்படுகிறது. இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு, “Proletarians of all countries, Unite!” என அமையும். எனவே, தமிழில், “அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே, ஒன்றுசேருங்கள்!” என்று கூறுவதே சரியாக இருக்கும். ஆனால், ஏங்கெல்ஸின் மேற்பார்வையில் வெளியான ஆங்கிலப் பதிப்பில், “Working men of all countries, Unite!” என்று இடம்பெற்றுள்ளது. இதனைத் தமிழில், “அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” என்று கூறலாம். எனினும், “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” என்னும் முழக்கமே அன்றுமுதல் இன்றுவரை நிலைபெற்றுவிட்டது என்பதால், இம்மொழியாக்கத்திலும் அவ்வாறே இடம்பெற்றுள்ளது.
(அத்தியாயம்-4 அடிக்குறிப்புகள் முற்றும்)
(நூல் முற்றும்)

கருத்துகள் இல்லை: