05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா -கொலை

கொலை




எனது எல்லாத் திட்டங்களும் தோல்வில் முடிந்தது குறித்து கவலையாக இருந்தது. சரி, கொலைத் திட்டங்களால் காரியம் சாதிக்க முடியவில்லை. அவளை எப்படியாவது கழற்றி விட்டு விடுவது என்று முடிவு செய்தேன். பலமுறை கொலைத் திட்டங்களை தீட்டிய நான் அவைகளில் தோல்விகளைத் தழுவியிருந்த போதிலும் திட்டமிடும் கலையில் தேர்ந்து விட்டிருந்தேன்.





நான் அவளுடனான உறவில் திருப்தியாக இல்லை என்றும் இத்துடன் உறவை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் குறுஞ்செய்தி ஒன்று தட்டி விட்டேன். உண்மையில் நான் அவளை விட்டு முற்றிலுமாக விலகுவதில் தீர்மானமாக இருந்தேன்.



அடித்துப் பிடித்து என் தொலைபேசியில் அழைத்தாள், நான் எடுத்துப் பேசவில்லை. தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பினாள், நான் கண்டுகொள்ளவில்லை. அழைப்புக்கும், குறுஞ்செய்திக்கும் பதிலளிக்காமல் இருந்தேன். நண்பர்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றாள். எல்லாவற்றையும் தட்டிக் கழித்தேன். முழுதாக ஒருநாள் கூட கடக்கவில்லை. பார்க்கலாம் என்னதான் செய்கிறாளென்று என்று கல்லாக இருந்து விட்டேன்.



’நீ இப்ப போன எடுக்கலைன்னா நான் செத்துடுவேன்’ என்று செய்தி அனுப்பினாள். இந்த செத்துப் போகும் வசனம் எல்லாரும் சொல்வதுதான் என்று போனை கொஞ்ச நேரம் ஆஃப் செய்து வைத்து விட்டு நண்பர்களுடன் பொழுதைப் போக்கினேன். இடையில் போனை எடுத்துப் பார்க்கவும் இல்லை. எதாவது கெஞ்சல் செய்திகளையும், அவளுடைய அழைப்புகளின் எண்ணிக்கையையும் வைத்து நான் மனமிறங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.



மறுநாள். காலையில் போனை ஆன் செய்தேன். போனில் செய்திகள் அடுக்கிக் கொண்டிருந்தன. போன் ஒலித்தது. நண்பனின் அழைப்பு. போனை எடுத்து என்னடா? என்றேன்.



டேய்.. என்னடா ஆச்சு உன் போனுக்கு..எத்தனை தடவை கால் பண்றது மெசேஜ் பண்றது..? மெசேஜ் பாத்தியா? என்றான். ‘ டேய் போன் ஆஃப்பா இருந்துச்சு, என்ன விஷயம்?’ என்றேன்



’’உன் ஆளு தற்கொலை பண்ணிக்கிட்டாடா... ‘’ நாங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். நீ வரியா? அவளுக்கு என்ன புராப்ளம்டா? உங்கிட்ட எதாவது சொன்னாளா? அவன் பேசிக் கொண்டே போனான். இடையிடையே ஹலோ.. ஹலோ என்றும் கத்திக் கொண்டிருந்தான். நான் அமைதியாக இருந்தேன். போனை துண்டித்து விட்டு அவள் பிணத்தைப் பார்க்கக் கிளம்பினேன். காகிதத்தில் விட்ட துளி எண்ணெய் போல் ஏதோ ஒரு திருப்தி என்னுள் படர்ந்து கொண்டிருந்தது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 10

பத்து




ஒரு கொலை செய்வது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா? தினம் செய்தித் தாளில் வாசிப்பது எரிச்சலை உண்டு பண்ணியது. எப்படி இவ்வளவு சுலபமாக கொலைகளைச் செய்கிறார்கள் என்று வியப்புக்கு மேல் வியப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் மாட்டிக் கொள்ளும் கதை பயத்தையும் உண்டு பண்ணத் தவறவில்லை.





எனது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த வருத்தமாகவும் அவமானமாகவும் இருந்த்து. ஒருவேளை திட்டங்கள் சரியில்லாமல் இருக்கலாம். அல்லது தடயங்கள் ஏதுமில்லாமல் நான் கொலை செய்ய திட்டமிடுவதால் இப்படி ஆகிறதோ என்னவோ. இல்லை அவளுக்கு ஆயுசு கெட்டியாக இருக்கலாம் இல்லையா? அப்படியெல்லாம் ஒன்றுமிருக்காது. இந்தக் கொலைத் திட்டம் நிறைவேறும் வரை கண்டிப்பாக நாத்திகனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.



இந்த முறை நிச்சயம் கொலை நடக்கும். நான் வழக்கமாக போகும் மருத்துவர் ஊசிப் போடும் ஊசியோடு இணைந்த மருந்து குப்பியை ஆட்காட்டி விரலால் தட்டி விடுவார் பின் கொஞ்சம் மருந்தை பீய்ச்சி அடிப்பார். சிறு வயது முதல் மருத்துவரின் இந்த செயலைப் கவனித்து வருகிறேன். அதற்கான காரணம் கேட்ட போது. நரம்புக்குள் செலுத்தும் மருந்தில் காற்றுத் துளிகள் இருந்தால் அது மனிதனைக் கொன்று விடும் என்று விளக்கம் சொன்னார். எனக்கு வியப்பாக இந்தாலும் சந்தேகமாகவும் இருந்தது. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் அனுபவமிக்க ஒரு மருத்துவர் சொல்வது சரியாகத்தானே இருக்கும். அதுவுமில்லாமல் இது எளிய வழியும் கூட. சாட்சி, தடையம் இல்லாமல் கொலை செய்து விடலாம்.



இப்படியான அற்பக் காரணங்களால் மரணம் சம்பவிக்கும் வேறு செயல்கள் எவை என்று கேட்டேன். தலைக்குப் பின் புறம் கழுத்துப் பகுதி வழியாக மூளைக்கு போகும் நரம்புகளில் ஒன்றின் மீது கூர்மையான ஊசியால் குத்தி விட்டால் கூட மரணம் சம்பவிக்கும்.. ஆனால் ஊசி கண்டிப்பாக நரம்புகளில் ஒன்றில் தான் குத்தப் பட வேண்டும் என்றார் அழுத்தமாக.



என் தலைக்கு மேல் பல்ப் எரிந்தது. கண்டிப்பாக இந்த முறையில் அவளைக் கொலை செய்யலாம் என்று முடிவு செய்தேன். இது மிகவும் எளிமையான முறை மற்றும் தடயங்கள் குறித்து அக்கரைப் பட வேண்டியதில்லை.



மருத்துவரின் ஊசிப் போடும் முறைக்கு அவள் நோய்ப்பட வேண்டும். ஊசி போட்டுக் கொள்ளும் படி நோய் தீவிரமாக இருக்க வேண்டும். இதை ஏற்படுத்த முடியாது மேலும் இதில் மருத்துவரின் ஒத்துழைப்பும் தேவையாயிருக்கிறது. அதனால் இந்த வழி வேண்டாமென ஒதுக்கி விட்டேன். ஆனால் அவள் கழுத்து நரம்புகளில் ஒன்றில் ஊசியால் குத்திக் கொல்ல முடியுமே.



இதோ ஊசி தயார். அவளை சந்திக்க வேண்டும் கழுத்தில் ஊசி குத்தும் நிலையில் அவளை உட்கார வைத்துக் கொள்ள வேண்டும். ஆள் அரவமில்லாத இடமும் நேரமும் குறித்துக் கொண்டு ஆயத்தமானேன்.



ஆக்‌ஷா பீச். சரியான இடத்தேர்வு. ஆக்‌ஷா பீச்சில் மதிய நேரம் ஆள் நடமாட்டம் குறைவு. அதுவும் அந்த குன்றுப் பகுதியில் அடர்ந்தசெடிகளுக்கிடையில் யார் வரப் போகிறார்கள். காதலர்கள் அங்கே பல நிலைகளில் இருப்பதை பள்ளிப் பருவம் முதல் கண்டு வந்திருக்கிறேன்.



பீச்சுக்கு கூட்டிப் போவதாக சொன்னதும். அவள் கண்டிப்பாய் துள்ளியிருப்பாள். மிகுந்த உற்சாகத்துடன் பேசினாள். அவள் இப்படி பேசும்போதெல்லாம் வருத்தமாக இருக்கும். மனதை மாற்றிக் கொள்ளலாம் என்று கூட தோன்றும். ஆனால் இல்லை. இப்படி எவ்வளவோ முறை எப்படியெப்படியோ மனதை மாற்றிக் கொண்டாயிற்று.



மால்வானி சர்ச் பகுதியில் சந்திக்க திட்டம். பின் பைக்கில் ஆக்‌ஷா பீச் செல்ல முடிவு. இன்று புடவையில் வந்திருந்தாள். மெல்லிய அலங்காரம் தான் ஆனால் அப்படியொரு அழகு. பெண்களை மிக அழகாகக் காட்டும் ஆடைகளில் புடவைக்கு முதலிடம் கொடுக்கலாம். ரிக்‌ஷாவில் வந்து இறங்கியவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு பறந்தேன்.



ஆக்‌ஷா பீச்சை நெருங்கியதும் மெல்லிய காற்று இதமாக இருந்தது. பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை செடிகளுக்குள் இழுத்துச் சென்றேன். அவளுக்கு அங்கே வேண்டாம் என்று இருந்தது. அலைகளைப் பார்த்தபடி பாறை மேல் உட்கார விருப்பம் தெரிவித்தாள். எனது திட்டம் என்னவாவது. கட்டாயப் படுத்தி கூட்டிச் சென்றேன். கண்டிப்பாய் உள்ளே போனால் கசமுசா செய்வான் என்று அவளும் ஆவலாய் வந்தாள்.



குறித்த இடம் காலியாகவே இருந்தது. ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை. குறிப்பாக நாங்கள் புதர் பகுதிக்குள் நுழைவதை ஒரு காக்கா குருவி கூட பார்த்திருக்காது என்பதில் உறுதியாக இருந்தேன்.



முதலில் நான் உட்கார்ந்து கொண்டேன். அவள் முதுகைக் காட்டி உட்காரச் சொன்னேன். வேண்டாமென மறுத்தவள், கட்டாயப் படுத்தியதும் உட்கார்ந்து கொண்டாள். அவள் கழுத்தின் கீழ் பகுதியிலும் முதுகின் மேல் பகுதியிலும் இதழ்களால் உழுதேன். அவள் சருமத்தின் வாசனை மூளையின் செயலற்ற பகுதிகளை சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருந்தது. விஷம் போல அவள் வாசம் என்னுள் ஏறிக் கொண்டிருந்தது.



என் பெயரை சொல்லி முனகியபடி என்மீது சாய்ந்தாள். சுதாரித்துக் கொண்ட நான் அவள் முதுகைப் பற்றி முன்னுக்குத் தள்ளினேன். ஊசியை மெல்ல எடுத்தேன். விரல்களில் குத்தி விடுமோ என்று பயந்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை.



இன்று எல்லாமும் நலமாக நடந்து கொண்டிருக்கிறது. கொலை கண்டிப்பாய் நடந்தேறும் என்று மனதுள் மகிழ்ச்சி. முத்தங்களைப் பதித்துக் கொண்டே ஊசியை கழுத்தின் புடைத்த நரம்பொன்றின் மேல் வைத்து அழுத்தினேன். ‘’ ஸ்ஸ் அஆஆ’ என்று கைகளால் பின்னால் தடவப் பார்த்தாள். நான் ஊசியை விலக்கிக் கொண்டு அவ்விடத்தில் அழுந்த முத்தமிட்டேன்.



’எவ்வளவு மென்மையானவள் இவள். ஆனால் சருமம் ஏன் இப்படி தடித்துக் கிடக்கிறது. ஒருவேளை ஊசி முனையில் கூர்மை குறைவாக இருக்குமோ’ இப்படி பல கேள்விகள். அடுத்த முயற்சிக்கு ஆயத்தமாகி விட்டேன். இந்த முறை இன்னொரு நரம்பு. ஊசியால் அழுந்த குத்தினேன். மீண்டும் ‘ஸ்ஸ்ஸ அ ஆ ஆ’ என்று என்னை விலகி கைகளால் குத்து பட்ட இடத்தை தேய்த்தாள். நான் மீண்டும் அவளை பழைய நிலையில் இழுத்தி இருத்தினேன்.



‘ என்னமோ கடிக்குடா? ரொம்ப வலிக்கு’ என்று முகத்தில் வலி காட்டினாள். ஊசியை இதை விட வேகமா, ஆழமாக குத்த முடியாது என்றாகி விட்டது. மீண்டும் முத்தங்களை விதைக்கும் பணியில் மூழ்கினான். அவள் சொக்கிப் போய் என் மேல் கனமானாள். ஊசி குத்தப் பட்ட இடத்தில் கடுகு அளவில் ரத்தம் காய்ந்து இருந்தது.



தனது ஈரமான கைகளை சேலையை விலக்கி பாவாடையில் துடைத்துக் கொண்டாள். இளநீர் குடித்துவிட்டு பைக்கில் திரும்பினோம். புறப்பட்ட இடம் வந்து சேர்ந்தோம். ஏனோ இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 9

ஒன்பது




விபத்துக்குள்ளாக்கிக் கொல்வது ஒன்றும் பெரிய காரியமில்லைதான். ஆனால் இதில் எனது உயிரையும் பணயம் வைக்க வேண்டும். விபத்துக்கான சூழலில் நான் தப்பித்து அவளை மட்டும் சிக்க வைக்க வேண்டும். இதற்கு அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.



அதே நேரம் அவள் முழுமையாக செத்துப் போகாமல் கை, கால் ஊனத்துடன் தப்பித்துக் கொண்டால் சிரமமாகி விடும். பின் காதலித்த பாவத்திற்காய் அவளை ஆயுசு முழுக்க கவனிக்கும்படியாகி விடும். இந்த திட்டத்தில் நானும் கூட செத்துப் போக வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.



ஆனாலும் சில முயற்சிகளுக்குப் பின் இந்த திட்டத்தை கை விட்டேன்

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 8

எட்டு




மின்சாரம் பாய்ச்சிக் கொள்வது மிகவும் எளிய முறை கொலைத் திட்டமாகும். இயற்கையான மரணம் என்று நிறுபித்தும் விடலாம். இந்த முறை நம்பிக்கை கூடி விட்டிருந்தது. இந்த திட்டம் சரியாக முடியுமென்று நம்பிக்கை கூடிக் கொண்டிருந்தது.





மீண்டும் என் வீடு. பிரிட்ஜில் நேரடியாக மின்சாரத்தை இணைத்தேன். வீட்டிற்கு வந்த அவளிடம் பிரிட்ஜில் அவளுக்காக கேக் மற்றும் சாக்கலேட் வைத்திருப்பதாகச் சொன்னேன்.



கிட்சனுக்கு அவள் போனதுதான் தாமதம் மின்சாரம் போய் விட்டது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 7

ஏழு




இந்த முறை பாம்பை ஏவி விட்டு கொலை செய்வது என்று முடிவு செய்தேன். பாம்பை ஏவி விடுதல் என்பது சரியான வாக்கியமாக இருக்காது பாம்பை பயன் படுத்தி என்று சொல்லலாம். இப்படி சொல்வது கூட மிகச் சரியாக இருக்காது. ஏனென்றால் பாம்பு போன்ற ஜீவன்களை நாம் பயன்படுத்தி விட முடியுமா என்ன?





பாம்பு என்றால் எனக்கும் பெரும் பயம் தான். ஆனால் என்ன செய்ய என் கொலைத் திட்டங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விக் கொண்டிருக்கும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் இந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பசுமைகளைத் தேடி மக்கள் அலைந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இவ்வாறான ஜந்துகளை எங்கே பிடிப்பது.



மீராரோடு பகுதியில் பாம்புகளை வைத்து வித்தை காட்டும் ஒருவனை நண்பன் ஒருவன் மூலம் தேடிப் பிடித்தேன். அவன் காட்டிய பாம்பின் அளவுகளைக் கண்டதும் அவற்றை எப்படி கொண்டு வந்து அவள் மீது ஏவி விட்டுக் கொல்வது என்று தெரியவில்லை.



எதாவது சிறிய அளவிலான பூச்சி கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது கொடிய விஷமுள்ளதாக இருத்தல் வேண்டும். அளவில் சிறியதான ஆனால் விஷமிகு பூச்சிகள் கிடைத்தால் நன்று என்றிருந்தேன்.



நீண்ட இடைவேளைக்குப் பின் அப்படியொரு பூச்சி கிடைத்தது. இது கொலை செய்யுமா என்று தெரியவில்லை. அதை சோதித்துப் பார்க்கவும் முடியாது. இணையத்தில் அது பற்றி வாசிக்கலாம் ஆனால் அதன் பெயர் தெரியாது. அதைக் கொடுத்த அந்த நண்பன் சொன்ன பெயரை வைத்து தேடிப் பார்த்தால் தகவல் இல்லை. அதன் அடையாளங்களைச் சொன்ன போது அதன் ஆங்கிலப் பெயரைச் சொன்னான் பூச்சிகள் மீது பிரியமான ஒரு நண்பன். அவன் சொன்ன ஆங்கிலப் பெயரை வைத்து அகராதியில் தேடிய போது ‘ அது ஒரு வகை விஷமிக்க பூச்சி’ என்று சொல்லப் பட்டிருந்தது. அதன் பெயர் குறிப்பிடப் படவில்லை.



அதற்கு உணவாக என்னக் கொடுப்பது என்று தெரியவில்லை. மேய்வதற்கு விடவும் பயம். அது கடித்து நான் போய்ச் சேர்ந்து விட்டால், என்னவாவது. அதன் ஜீவன் முடிந்து போகும் முன் அதை பயன் படுத்தி இன்னொரு ஜீவனை கொல்ல வேண்டும். பத்திரமாக எடுத்துக் கொண்டு போனேன்.



இந்தமுறை பார்க்கில் சந்திப்பு. திட்டமிட்டபடி எல்லாமும் நடந்து கொண்டிருந்தது. டப்பாவிலிருந்த அந்த விஷ ஜந்துவை எடுத்து அவள் ஆடைக்குள் விட தயாரானேன். நான் நெளிவதைக் கண்ட அவள் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தால். வேகமாகத் திரும்பியவளின் தோள் பட்டு அந்த ஜந்து கீழே தவறி விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமலும் போய் விட்டது.



எனது கொலைத்திட்டம் தோல்வியானது குறித்து கவலையில்லை ஆனால் காணமல் போன அந்த ஜந்து பூங்காவில் மயக்க நிலையில் காதல் செய்து கொண்டிருக்கும் யாரையாவது கடித்து விடக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.



‘ஓஹோ’ இப்ப புரியுது என்று எதையோ கண்டு பிடித்தவளைப் போல் என் இதழ்களின் வழி உயிரை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். நான் விட்ட ஆழமான மூச்சுக்காற்றால் பூச்சித் திட்டம் பொசுங்கிப் போச்சு.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 6

ஆறு




எந்த தீக்குச்சியை கொழுத்தினாலும் உடனே ஒரு பங்கு வாயு சுவாசத்தில் கலக்கும். இது இயல்பு. பெரும்பாலும் இதை கட்டுப் படுத்த முடியாது. மிக கவனமாக இதைத் தவிர்க்க திட்டமிட்டால் மட்டுமே தடுத்துக் கொள்ள முடியும்.





சைனைடு தடவிய தீக்குச்சியை பயன் படுத்திக் கொல்ல திட்டமிட்டேன். விஷ தீக்குச்சி ரெடி. சமீபமாக நானே அவளை அழைத்துக் கொண்டிருந்த படியால். இந்த முறை அவளாக வீட்டுக்கு வரும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன். விடுமுறையொன்றில் வருவதாக தொலைப்பேசினாள். சொன்னபடி வந்தும் சேர்ந்தாள். தேனீர் போட்டுத் தாவெனக் கேட்டேன். வாயு அடுப்பின் லைட்டரை மறைத்து வைத்து விட்டு தீப்பெட்டியை அடுப்பருகில் வைத்திருந்தேன்.



பாத்திரத்தில் பாலை எடுத்துக் கொண்ட அவள் லைட்டரைக் காணாது தீப்பெட்டியிலிருந்து குச்சியை எடுத்து உரசினாள். தீப்பெட்டி கையிலிருந்து விடுபட்டு பாலில் விழுந்தது. ’ஐய்யோ’ என்று பதரியபடி எடுத்து உதரினால். தீப்பெட்டி பாலில் விழுந்து விட்டதாகவும் அதனை வெயிலில் காய வைக்கும் படியும் என்னை அழைத்துக் கேட்டுக் கொண்டாள்.



மேலும் லைட்டரைத் தேடித்தா அல்லது வேறு தீப்பெட்டி வாங்கி வா என்று விரட்டினாள். எனது கொலைத்திட்டங்கள் இப்படி வேடிக்கையாய் தோல்வியடைந்து கொண்டிருப்பதை நினைத்து அழுகையாய் வந்தது. வேறு வழியில்லாமல் வேறு தீப்பெட்டி வாங்கி வந்தேன்.



தீப்பெட்டி விழுந்த பாலை சாக்கடையில் ஊற்றிவிட்டு பாத்திரத்தை நன்கு தேய்த்து கழுவிய பின் புதுப் பாலில் மணக்கும் தேனீர் தயாரித்துக் கொடுத்தாள். கோப்பையை ஏந்தியபடி ஒரு மாதப் பத்திரிக்கையை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள்.



ஐரோப்பாவின் அந்த கால ஓவியப் பெண்ணைப் போல் உடலை சோபாவில் கிடத்தியிருந்தாள். அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். தேனீரின் ஒவ்வொரு மிடரும் எனக்குள் திடப் பொருளாய் இறங்கிக் கொண்டிருந்தது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 5

ஐந்து




விரைவாக கார் ஓட்டும் பந்தையத்தில் ஜெயிப்பதற்கு, திறமையாக கார் ஒட்டும் தகுதி மட்டும் இருந்தால் போதாது கோளாறு செய்யாத காரும் அவசியம். அதேப்போல் கொலைத்திட்டத்திற்கும் சரியான கொலைக் கருவியை தேர்வது மிக அவசியமாகிறது.





துப்பாக்கி மிகச் சிறப்பான கருவியாக இருக்குமெனப் பட்டது. யாரிடம் போய் துப்பாகி வாங்கிக் கொள்வது. பீட்டர், ஆமாம் அவன் தான் சரியான ஆள். கோவான்ஸ் காரன். எவர்ஸைன் நகர் பகுதியில் அவன் பெயரைக் கேட்டால் பீதி. பீட்டரைப் பிடித்து துப்பாக்கி வேண்டுமென்றேன். விலைக்கு வேண்டாம் வாடகைக்கு கிடைத்தால் போதுமென்றேன். விஷயம் கேட்டான். ஒன்றுமில்லை பயன் படுத்திப் பார்க்கத்தான் என்று சமாளித்தேன்.



அவன் பெரிதாய் கேள்விகள் கேட்கவில்லை. மறுநாள் தருவதாக சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பேண்டிலிருந்து பிதுங்கி வெளியே தெரியும் புட்டத்தைக் காட்டிக் கொண்டு போய் விட்டான். அவன் ஏன் எதற்கு என்று கேட்காதது வியப்பாக இருந்தது.



அவளைச் சந்திக்க அழைப்பு விடுதாயிற்று. எந்த தடையுமில்லாமல் வருவதாக வாக்களித்தாள். ஏன் வரமாட்டாள். வந்துதான் ஆக வேண்டும். அவள் அழைத்த போதெல்லாம் நான் ஓடியிருக்கிறேனே.



துப்பாக்கியை ஒரு துணியில் பொதிந்து கொடுத்தான். ‘ புல்லட்ஸ்’ என்று கேட்டேன். லோட் செய்திருப்பதாக சொன்னான். ஆகா, எவ்வளவு அற்புதமான நண்பன் கிளம்பினேன். ‘ ஜாக்கிரதை/ எஞ்ஜாய்’ இந்த இரண்டு வார்த்தைகளையும் சிறிய இடைவெளியில் சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பிதுங்கிய புட்டத்துடன் போய் விட்டான்.



துப்பாக்கி பயன் படுத்த சரியான இடம் போரிவலி நேஷனல் பார்க். அடர்த்தியான காட்டுப் பகுதி. பல கொலை செய்திகளை பத்திரிக்கைகளில் வாசித்திருக்கிறேன். மும்பையில் பரந்த பசுமைப் பகுதி இது. எங்கும் குளுமையும், பறவைகளின் கீறிச்சிடும் சத்தங்களும் மட்டுமே இருந்தன.



சில முத்தங்களையும் தழுவல்களையும் பரிமாறிக் கொண்ட பின் அவளை நான் ஷுட் செய்யப் போவதாச் சொன்னேன். ‘ அப்படின்னா.. பண்ணு’ என்று மூன்றடி விலகி நின்று இடுக்கில் கைகளை ஊன்றி போஸ் கொடுத்தாள். குறி தப்பி விடக் கூடாது என்று அருகில் நின்றபடியே துப்பாக்கியை எடுத்து அவளை நோக்கிப் பிடித்தேன்.



‘’ ஹேய், என்ன இது? மொபைல் போன்ல ஷுட் பண்ணுவன்னு பார்த்த துப்பாக்கிய எடுக்கிற?’ என்றாள். இடுப்பிலிருந்து கைகளை அகலமாகப் பரப்பி சாவதற்கு சவுகரியமாக நின்றாள். ‘ஹா..ஹா’ வென வில்லன் சிரிப்பு சிரித்து விட்டு ‘டிஸ்கியாவ்’ என்று சுட்டேன். ‘’ஆ..ஆ..ஆ’’ என்று கத்தி கொண்டு வயிற்றை இரண்டு கைகளாலும் பொத்திக் கொண்டு கத்தினாள்.



’சக்ஸஸ்’ என்று வெற்றிக் களிப்பு கொண்டேன். ஆனால் மார்பை நோக்கி வைத்த குறி வயிற்றில் பாய்ந்தது கொஞ்சம் அவமானமாக இருந்தது. ‘ ஒரு தோட்டாத்தான் இருந்துச்சா?’ என்று கேட்டபடி மீண்டும் கைகளை அகட்டி நின்றாள். ‘ டிஸ்கியாவ்... டிஸ்கியாவ்’’ பெரிய சத்தம் மட்டுமே வந்து கொண்டிருந்தது. தோட்டாக்கள் வெடித்தன. ஆனால் பாயவில்லை. சதையைக் கிழித்துக் கொண்டு அவளைக் கொல்ல வில்லை. தோட்ட வெடித்த சத்தம் கேட்கு வெகு தூரத்தில் கூட ஒரு பறவைகள் படபடவென பறந்தோடுவதை உணர முடிந்தது.



’குடு நான் சுடுறேன்’ என்று வாங்கி வானத்தை நோக்கி சுட்டாள். பின் என்னை நோக்கி. நானும் செத்துப் போவது போல் நடித்தேன். நிஜமாகவே செத்துப் போய் விடலாம் போல் இருந்தது. பீட்டர் சொதப்பி விட்டான். அவள் சாகாதது கடுப்பாக இருந்தது. அவள் துப்பாக்கியை அப்படி இப்படி பிடித்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். சினிமா வில்லன்களைப் போல் அபிநயித்துக் கொண்டிருந்தாள்.



அன்று மாலையே பீட்டரை சந்தித்தேன். கடுமையான கோபத்துடன் ‘இதில் இருந்த தோட்டாக்கள் போலியானதா?’ என்று கேட்ட கேள்விக்கு. ஆமாம். ரொம்ப கஷ்டப் பட்டு அதனை வாங்கி வந்தாகச் சொன்னான். எஞ்ஜாய் பண்ணினாயா என்று கேட்டான். துப்பாக்கியை வாங்கி இன்னொருவனிடம் கொடுத்து பத்திரப் படுத்த சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பிதுங்கிய புட்டம் காட்டிச் சென்றும் விட்டான்.



போலி குண்டுகளை ஏன் கொடுத்திருப்பான் என்று விளங்கவில்லை. அவளைக் கொலை செய்யக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் நழுவிப் போனது குறித்து வருத்தமாக இருந்தது. தொலைபேசியில் ‘மிஸ் யூ’ என்ற குறுஞ்செய்திக்கு.. ‘ ஐ ரியலி மிஸ்ட்’ என்று ரிப்ளை எழுதினேன்.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 4

நான்கு




கத்தியால் குத்திக் கொலை செய்தல் பாரம்பரிய கொலை யுக்திகளில் ஒன்றாகும். ஆனால் இது மிக எளிய முறை. மேலும் இது ஆபத்தானதும் கூட. அதாவது கொலை செய்பவருக்கு ஆபத்தானது. காரணம் கத்தி ஒரு தடையமாகி விடக் கூடும். கொல்லப் பட்டவர் குத்திக் கொல்லப் பட்டால் காவல் துறையினருக்கு கொலையாளியைக் கண்டு பிடிப்பதில் அத்தனை சிரமம் இருக்காது.



கத்தியால் ஒருவரின் உடல் பாகத்தைக் கிழித்து ரத்தமிழக்கச் செய்து கொல்வது கொடூரமானதும் கூட. அதுவும் வயிறு இதயம் போன்ற பகுதியில் குத்தினால் மரணம் சம்பவிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. கத்தியை ஆழமாக குத்தி பின் திருகி இழுத்தால் உள்ளுருப்புகள் அறுந்து காப்பாற்ற முடியாது என்றும் படித்திருக்கிறேன். ஆனால் வேறு பாகங்களில் குத்தினால் கொல்லப் படுபவர் தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கழுத்தை அறுத்து விடலாம். மரணம் நிச்சயம் ஆனால் அதற்கு கொலை அனுபவம் அவசியம்.



இவள் என் காதலி. அவளது கழுத்தை எத்தனை முறை முகர்ந்திருப்பேன். இன்னும் அவளது கழுத்தின் பிரத்யேக வாசனை என் மூளையின் முடிச்சுகளில் சுருண்டு கிடக்கிறது. மார்பு பகுதி பற்றி என்ன சொல்ல. அது சொர்க்கத்தின் வாசல். வயிற்றுப் பகுதியில் ஒரு பூனையைப் போல் எத்தனை நாள் என் தலை வைத்து இதம் கண்டிருக்கிறேன்.



அவள் சருமம் பற்றி சொல்லச் சொல்லித் தீராது. இப்படியிருக்கையில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் எப்படி கொல்ல முடியும். அதுவும் இதற்கு முன்னான முயற்சிகளில் நான் அவளைக் கொலை செய்யப் போவது அவளுக்குத் தெரியாது. நான் தோல்வி கண்டது குறித்து அவளுக்கு கிஞ்சித்தும் அறிவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தில் தவறினால் பின் அவள் சுதாரித்துக் கொள்ளக் கூடும். எனினும் முயற்சித்துப் பார்த்து விடுவது என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன்.



மும்பையின் புறநகர்ப் பகுதியில் வைத்து அவளைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ள காரணத்தால் அங்கிருந்து சுமார் இரண்டு மணி நேர பயணத் தொலைவிலுள்ள நவிமும்பைக்குச் சென்று அங்குள்ள ஹைபர் சிட்டி மாலிலிருந்து கூர்மையான கத்தி ஒன்றை வாங்கினேன். கத்தியில் கடுமையான கூர்மை இருந்த போதிலும் மீண்டும் அதனை சைக்கிளில் வந்த கத்தி தீட்டுபவனிடம் கொடுத்து இன்னும் கூர்மையாக்கி கொண்டேன். கத்தியின் கூர்மை பகுதி கொஞ்சம் இளைத்துப் போய் கடுமையான கூர்மை பெற்றிருந்தது. இதனை கத்தி என்று தமிழில் சொல்லிக் கொண்டாலும் இது பிளேடு வகையைச் சேர்ந்தது. அதாவது இதில் அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சவரம் செய்யும் பிளேடுக்கு நிகரான கூர்மையைக் கொண்டது.



கத்தியில் கைரேகைப் படக் கூடாது என்பதற்காக அதன் பிடியில் பிளாஸ்டிக் காகிதம் சுத்தினேன். அதனை மறைவாக படுக்கையில் மறைத்து வைத்தேன். ஆமாம் இந்த முறையும் என் வீட்டார் இல்லாத ஒரு நல்ல வாய்ப்பு.



வழக்கம்போல் வந்தாள். நான் வழக்கத்திற்கு மாறாக அவளை தொட்டுப் பேசினேன். சற்றே வியந்தாள். அதிகமாகவே பிகு செய்தாள். அவளாகத் துவங்கியிருந்தால் இப்படி செய்திருக்க மாட்டாள். எல்லாப் பெண்களும் இப்படித்தானாம். நண்பர்கள் அனுபவம் பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு முத்தம் கொடுக்கக் கூட நிறைய பிரயத்தனப் பட வேண்டியதிருக்கிறது.



அப்படியிப்படி அவளை மூடுக்கு கொண்டு வந்து விட்டேன். இடுப்போடு அணைத்தபடி படுக்கைக்கு கொண்டு சென்றேன். உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சில நொடிகளில் அவள் பிணமாகி விடக் கூடும். அவள் உடலை அப்புறப் படுத்துவது குறித்து பெரிதாய் யோசித்திருக்கவில்லை. ஆனால் அவளைக் கொன்று விடும்பட்சத்தில் இதற்கெல்லாம் வழி கிடைக்காமலா போய் விடும் என்று சமாதானமானேன்.



நாற்பத்தாறு கிலோ எடை முழுவதும் காதலாகி என்னைப் பார்த்தாள். அத்தனைக் காதலும் கண்களில் தேக்கி எனக்குக் காண்பித்தாள். அங்கே வெறும் காதல் மட்டுமே இருந்தது. இன்றையத் தழுவலில் அவள் கண்டிப்பாய் காம உணர்வை எட்டவில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் உடலில் காதலுமில்லாமல் காமமுமில்லாமல் கொலைவெறியும் அச்செயலுக்கான தயக்கமும் தான் இருந்தது. அவள் உடலையும் உணர்வையும் நான் புரிந்து கொண்டது போல் என்னையும் அவள் புரிந்து கொண்டிருப்பாலோ என்ற ஐயம் வேறு.



அவளது மென்மையான தொடுகை உடல், மனம் இரண்டிருலும் மாற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. முழுமையான மாற்றம் கண்டுவிடும் முன் அவள் கதையை முடித்து விட வேண்டும்.



அவள் மேல் படர்ந்த நிலையில் படுக்கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுக்க முயன்றேன். கத்தியின் கூர்மையானப் பகுதி என் நான்கு விரல்களையும் பதம் பார்த்தது. மேலும் கத்தியில் கைபட்ட இடமெல்லாம் குருதி கொட்டிக் கொண்டிருந்தது. ‘ஆ’ வென்ற அலரலுடன் துள்ளினேன். கையிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.



பதற்றத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தவள் சத்தமிட்டு அழுதாள். ’எப்படியாச்சு? எங்க கைய வச்ச?’ என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தன் இடுப்புக்குக் கீழேப் பார்த்தாள். பின் என் கைகளை அழுந்த பிடித்துக் கொண்டு முதலுதவிக்காக பொருட்களைத் தேடினாள். படுக்கைக்கு அடியிலிருந்து கவனமாக கத்தியை எடுத்தாள். ‘ இத யாரு இங்க வச்சது?’ ‘ அதையேன் நீ இந்த நேரத்தில எடுத்த?’ என்பது போன்ற விடை வேண்டா கேள்விகளைக் கேட்டபடி கத்தியை கவனமாக மேசையின் மேல் வைத்தாள். அவள் குரல் மெலிந்து போயிருந்தது. எனக்கு உண்டான காயத்திற்காய் அவள் அழுது கொண்டிருந்தாள்.



அருகிலிருந்த டாக்டர் ஷர்மாவிடம் கூட்டிப் போனாள். தையல் போடும் அளவுக்கு காயம் பெரியதாயும் ஆழமாயும் இல்லையென மருந்திட்டு கட்டுப் போட்டு அனுப்பி வைத்தார். காயம் பட்ட கையை குழந்தை போல் ஏந்திக் கொண்டு தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து சூடான கண்ணீர்த் தாரை வழிந்து கொண்டிருந்தது.



என் உடலும் காதலால் பெருகி அவளை அனைத்துக் கொண்டது. தனது கூர்மை முழுமையாய் பயன் படுத்த படாத நிலையில் வெறித்துக் கொண்டிருந்தது மேசையின் மேல் கத்தி.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 3

மூன்று




பள்ளித் தோழன் ராஜன், கராஜ் வைத்திருக்கிறான். அவனிடம் வரும் வண்டிகளை எடுத்துக் கொண்டு நாங்கள் பல சாகசங்களைக் கற்று வைத்திருந்தோம். பழுதுபார்க்க வந்திருக்கும் வண்டிகளை எங்கள் ஆசை தீர ஓட்டி விளையாடி விட்டுத்தான் உரிமையாளரிடம் கொடுப்பது வழக்கம்.





ராஜனிடம் நல்ல வண்டி ஒன்றைக் கேட்டேன். சந்தையில் புதிதாக வந்த வண்டியொன்று கிரிசிங் பணிக்கு வந்திருப்பதாக சொல்லி காட்டினான். நான் எடுத்துப் போகக் கேட்டேன். உரிமையாளரை எப்படியாவது அவன் சமாளித்து விடுவான். ஆனால் அவன் யாரையோ வெளியில் கூட்டிப் போவதாய் செய்திருந்த திட்டம் நடக்காது. வேறு பிரச்சனை இல்லை. வெள்ளிக் கிழமை இரவு எடுத்துக் கொண்டு போன வாகனத்தை என் அடுத்த திட்டதிற்கு தயார் படுத்தினேன். சனிக் கிழமை மாலை அவளை அழைத்துப்போய், சொர்க்கலோகம் அனுப்பி வைக்க திட்டம். அவள்தான் சொர்க்கத்திற்குப் போக வேண்டி வாரம் தவறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறாளே.



மூன்று முறை ஐ லவ் யூக்கள் சொல்லி அவள் அழகை வர்ணித்த பின்னர் அன்று மாலை மரண பயணத்திற்கு சரி சொன்னாள். கார் என்றதும் அலுவலகத்துக்கே மட்டம் போட்டு விடுவதாய் துள்ளினாள். வேண்டாம் மாலை வந்தால் போதுமென சமாதானப் படுத்தினேன்.



நீண்டதொரு ரப்பர் குழாய் வாங்கி வாகனம் வெளியேற்றும் கார்பனை வண்டிக்குள் விட்டு அவளை கார்பன் மோனாக்சைடு மூலம் கொல்லத் திட்டம் போட்டேன். காந்திவிலி சார்கோப்பைத் தாண்டி அடர்ந்திருக்கும் புதர் பகுதிக்கு காரைச் செலுத்தினேன். சில கேக் துண்டுகளும் சாக்கலேட் கட்டிகளும் கடிக்கக் கொடுத்தேன். குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி சுற்றுமுற்றும் நோட்டமிட்டேன். பார்வை எட்டும் தூரம் வரை ஆளில்லை. கார் இல்லை. கருப்பு கண்ணாடி ஏற்றிய காருக்குள் என்னை கட்டிக்கொண்டாள். வண்டியை ஆப் செய்யாமல் இருந்தேன். பெட்ரோல் டங்கி நிரம்ப மரணம் சூடாகிக் கொண்டிருந்தது.



காரிலிருந்து இறங்கி ரப்பர் பைப்பை கார்பன் குழாயுடன் சைலன்சர் குழாயை இணைத்தேன். தண்ணீர் வாங்கச் செல்வதாக சொல்லிக் கிளம்பினேன். காரின் அத்தனை கதவுகளின் ஒயர்களையும் அறுத்து விட்டிருந்தபடியால் உள்ளிருந்து திறக்க இயலாதபடி செய்து விட்டேன். இன்னும் ஐந்தாறு நிமிடங்களில் அவள் மூச்சுத் திணறி செத்து விடுவாள் என்று மனதுக்குள் ஒரு வில்லத்தனமான சிரிப்பு சிரித்துக் கொண்டேன்.



புகை கார் முழுவதும் பரவ காருக்கு ஆக்சிலேட்டர் இயங்கிக் கொண்டிருந்தது. புகை காருக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நிரம்பிக் கொண்டிருக்கும் என்று முழுமையாய் நம்பினேன். ரப்பர் பைப்பை இணைத்தப் பின் புகை வருவது குறித்து எனக்குத் தெரியவில்லை. கண்ணாடி வழி காருக்குள் பார்க்கவும் முடியாது. ஆனால் என் திட்டம் புகையாய் பொசுங்கிப் போயிருக்கலாம் என்பது மட்டும் உணர முடிந்தது.



நான் காரிலிருந்து இறங்கிய மாத்திரத்தில் அவள் வீணாக இயங்கிக் கொண்டிருக்கும் காரை ஆஃப் செய்ய காரின் கீயை உருவி காரை நிறுத்தியிருக்கிறாள். காரின் கீ உருவப் பட்டு இஞ்ஜின் ஆஃப் ஆனதால் காருக்குள் புகை நிரம்பியிருக்கவில்லை.



என் திட்டம் புஷ்வானமாகி விட்டது என்பது உறுதியாகிப் போனாது. காரின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். கண்களில் பயத்தை நிரப்பிக் கொண்டு என்னைக் கட்டிக் கொண்டாள். காருக்குள் கார்பன் வாசனை தூக்கலாக இருந்தது.



காரை அப்படியே விட்டுப் போனதாலும் காருக்குள் புகை கசிந்த காரணத்தாலும் அவள் செய்வதரியாது காரின் சாவியை எடுத்ததாக பயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். இனிமேல் எப்பொழுதும் இப்படி தனியாக விட்டுப் போக வேண்டாமென இருக்கமாக கட்டிக் கொண்டு சொன்னாள்.



கார் கண்ணாடிகளை இறக்கி விட்டேன். உள்ளே மாலை நேர மெல்லிய காற்று நிரம்பிக் கொண்டிருந்தது. அவளும் நானும் ஆழமாக சுவாசித்துக் கொண்டோம்.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 2

இரண்டு




மும்பையில் தற்சமயம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. காலியிடங்கள், சாக்கடைகள், பழையக் கட்டிடங்கள், குடிசை வீடுகள் என எல்லாப் பகுதிகளும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாய் மாறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான கட்டிடங்களை கட்டி முடிப்பதற்குள் பல உயிர் பலிகள் ஆகி விடுவது சகஜமாகிப் போனது. அது கட்டிடப் பணியின் போது ஏற்படும் விபத்துக்களால் மட்டுமல்ல, நில அனுமதி, அபகரிப்பு என பல ஆரம்பகட்ட பணிகளின் போது இந்த சாவுகள் சகஜமாகி விட்டன.





எனது வீட்டிற்கு எதிர்த்தார்போல் பிரபல பில்டர், பிள்ளைகள் விளையாட இருந்த மைதானத்தை வளைத்துப் போட்டு கட்டிட வேலையை ஆரம்பித்து விட்டிருந்தான். கடந்த ஆறு மாத காலமாக எப்பொழுதும் மண்ணும் சிமெண்டும் காற்றில் கலந்து சுவாசக் காற்றோடு கொஞ்சம் மண்ணையும் சிமெண்டையும் நாங்கள் சுவாசித்துக் கொண்டிருந்தோம்.



தினமும் குளித்தபின் மூக்கை துடைத்தால் ஒரு கண் மை டப்பாவை நிரப்பும் அளவுக்கும் மண் - சிமெண்ட் கலவையை மூக்கிலிருந்து துடைத்து எடுக்க முடியும். எனது அடுத்த திட்டம் இங்குதான். உயர்ந்த கட்டிடங்களுக்காக எழுப்பப் பட்டிருக்கும் எதாவதொரு தூண்களுக்குள் ஒன்றில் அவளை மயக்கமடையச் செய்து தள்ளி விட்டு சிமெண்ட் போட்டு விடுவது என்று.



திட்டத்தின் படி என் வீட்டார் இல்லாத ஒரு பொழுதில் அவளை வீட்டுக்கு அழைத்தேன். என் அழைப்பைத்தான் அவள் தட்டுவதில்லையே. வாழ்க்கை காலத்தால் ஆனது என்பதால் கிடைக்கும் பெரும்பாலான வாய்ப்புகளை அவள் தவற விடுவதில்லை. அவளிடம் பிடித்த குணம் இதுதான். அதே சமயம் பிடிக்காத குணமும் இதுவே. அவளுக்கு கிடைக்கும் அத்தனை அழைப்புகளையும் அவள் எப்படியாவது சமாளித்து அட்டண்ட் செய்து விடுவது எனக்கு கடும் துன்பத்தைக் கொடுத்தது.



அன்றும் வழக்கம் போல் அழகு தேவதையாக வந்திருந்தாள். அலுவகலத்திலேயே மெல்லிய அலங்காரமும் உதடுகள் மின்னச் சாயமும் மெல்லிய வாசனையுடனும் வந்தாள். கதவைத் திறந்ததும் வீட்டில் யாருமில்லாததை புரிந்து கொண்ட அவள் என் மேல் படர்ந்தாள். அப்படியே சில நிமிடங்கள் பேசாமல் இருந்தோம்.



எனக்கும் மனம் மாறி விடும் போல் இருந்தது. ஆனால் நான் எனது கற்பனையை கிண்டி விட்டேன். இதற்கு முன் நடந்ததைப் பற்றியெல்லாம் அசை போட்டேன். இதோ மூளையின் ஏதோ ஒரு பகுதியில் முடங்கிக் கொண்டிருந்த கொலை வெறி அவிழ்ந்து கொண்டது. ஆயத்தமாகி விட்டேன்.



இனிப்பு பண்டங்கள் என்றால் அவளுக்கும் என்னைப் போல் அலாதி பிரியம். மயக்க மருந்து கலந்து வைத்திருந்த கேரட் அல்வாவை கொடுத்தேன். பெண்களுக்கு அல்வா என்றால் என்ன ப்ரியமோ தெரியவில்லை. கோழி விழுங்குவதைப் போல் விழுங்கினாள். எனக்கும் ஊட்ட முயன்றவளைத் தடுத்து தப்பித்தேன்.



வீட்டிற்கு எதிரே நடக்கும் கட்டுமானப் பணியிடத்தை நோட்டமிட்டேன். வேலை முடித்து ஆட்கள் கிளம்பி விட்டிருந்தார்கள். நடமாட்டமும் குறைந்திருந்தது. அவள் முழுவதும் மயங்கிப் போகுமுன் கட்டித்தின் முதல் தளத்துக்கு கூட்டிப் போக முடிவு செய்தேன். அவளும் இசைந்தாள்.



என் வீட்டுக்கு வருவது அவளுக்கு பெரும் பிரச்சனை. அவள் அண்ணன்களும் மாமாக்களும் இங்கு உலவுவதுண்டு. ஆனால் ஒரு முறை எங்கள் காம்பவுண்டுக்குள் நுழைந்து விட்டால் நிம்மதியாகி விடுவாள். யாருக்கும் தெரியாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவள் என்னை வீட்டில் வைத்து சந்தித்துக் கொண்டிருப்பது வியப்பானதுதான். எனக்கு இதுவும் பிரச்சனையே. என் காதலுக்கு சாட்சியே இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அதுவே சாதகமாகவும் ஆகிப் போனது.



இப்பொழுது உடம்பிலிருந்த பய அதிர்வுகள் அடங்கிப் போயிருந்தன. இருள் படர்ந்த கட்டிடத்தின் முதல் தளத்துக்கு அவளை அழைத்துப் போனேன். எதையெதையோ காட்டிக் கொண்டிருந்த என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு முழுமையான மயக்கம் வரக் காத்திருந்தேன்.



ஒரு மாதிரி வயிற்றில் பிசைவது போல் உணர்வதாகச் சொன்னால். முகம் முழுவதும் வியர்த்து விட்டிருந்தது. திடிரென வாந்தி எடுத்தாள். அவள் கால்கள் தடுமாறின அவளாகவே கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். நான் அவளை எப்படியாவது முதல் தளத்தில் மரச் சட்டங்கள் அடித்து தயார் நிலையில் இருக்கும் பெரிய தூணுக்குள் தள்ளிவிட கடுமையாய் போராடினேன். நான் அவளைக் கட்டிப் பிடிக்க முயல்வதாகவும், தூணில் சாய்த்துக் கொண்டு சல்லாபம்செய்ய இருப்பதாகவும் அவள் நினைத்திருக்கலாம். மயக்க மருந்து அவளுக்கு இன்னும் தெம்பை கொடுத்ததோ என்னவோ. வேண்டாம்.. போகலாமென கட்டிடத்தின் வாசல் வரை வந்து மயங்கிப் போனாள்.



எதிரே இருந்த இரண்டு பெண்கள் ஓடி வந்து அவளுக்கு உதவினார்கள். என் வீட்டிற்குள் தூக்கிப் போயாயிற்று. அருகிலிருந்த டாக்டர் ஷர்மா வந்து விட்டார். வாந்தி தான் நல்ல மருந்தாக செயல் பட்டிருக்கிறது, பயப்பட ஒன்றுமில்லை புட் பாய்சன் என்று ஊசியும் மருந்து கொடுத்து விட்டு அரை மணி நேரத்தில் சரியாகி விடுமென்றார். இருநூறு ரூபாயுடன் என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டி விட்டு போய்விட்டார்.



ஒரு மணி நேரத்தில் எழுந்தும் விட்டாள். அவள் தோழியை அழைத்து அவளுடன் வீட்டிற்கு கிளம்பினாள். ஆழமான ஒரு முத்தம் கொடுத்தாள். அரை மயக்கத்தில் வீட்டுக்கு கிளம்பினாள்.



கட்டிடத்தின் அந்த நிரப்பப் படாத தூணையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 1

ஒன்று




கோரேகான் கிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல் ஃபேண்டசி லேண்ட் என்னும் கேளிகைப் பூங்கா உள்ளது. வார நாட்களில் இங்கு கூட்டம் குறைவாகவே இருக்கும். மார்வே கடலிலிருந்து முக்கால் மணி நேர படகு பயண தூரத்தில் குட்டித் தீவு ஒன்றில் இருக்கும் எஸ்சல் வொர்ல்டு சரி பட்டு வராது. அங்கே வாரம் முழுவதும் கூட்டமிருக்கும். வார இறுதி பற்றிச் சொல்லவே வேண்டாம்.



ராட்சத ராட்டினமும் ரோலர் கோஸ்டர் என்னும் உயர்ந்து தாழ்ந்து இருக்கும் ஒருவகை சறுக்கு விளையாட்டும் ஃபேண்டஸி லேண்டில் சிறப்பானவைகள். நான் தேர்ந்துள்ளது ரோலர் கோஸ்டரை. அதில் ஒரு திறந்த சதுரப் பெட்டிக்குள் இரண்டு பேர் மட்டுமே பாதுகாப்புக்கு இடுப்பு வார் அணிந்து கொண்டு பறக்க முடியும். சுமார் பத்து அடுக்கு கட்டிட உயரத்திற்குப் போய் தலைகீழாக சுழன்று கீழிறங்கும் அப்பெட்டிகள்.



இரண்டு நாட்கள் போய் உட்கார்ந்து சரியாகத் திட்டமிட்டு விட்டேன். வயிற்றிலிருக்கும் குடல் வகையாறக்கள் வாய்க்கு வந்து விடுவது போலிருந்தது. வரும் புதன் கிழமை அவளைக் கூட்டிப் போகத் திட்டம். அலுவலகத்திற்கு அல்வா கொடுத்து விட்டு அவள் வந்து விடுவாள். இப்படியான சமாளிப்புகளில் அவள் கில்லாடி.



புதன்கிழமை. ஷாம்பு போட்டு குளிப்பாட்டிய கூந்தல் காற்றில் அசைந்து அவளைச் சுற்றி ஒரு சிறிய சுற்றளவுக்கு வாசனை பரப்பிக் கொண்டிருந்தது. இதழ்களில் அழியாப் புன்னகை. கண்களில் பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கு அர்த்தம் எழுதிவிடும் அளவுக்கு செய்திகள். அவளைக் கண்டவர்கள், நின்று பார்த்தார்கள், நடந்து கொண்டே பார்த்தார்கள், பலர் அவளது உருவத்தை மனதுக்குள் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பிற சந்தர்ப்பங்களில் பயன் படுத்திக் கொள்ளக் கூடும்.



அவள் என்னருகில் வந்து நின்றதும் அவள் மீது பாய்ந்து கொண்டிருந்த பார்வை வெள்ளம் என்னையும் நனைத்தது. நான் அவளைக் கொலை செய்யும் காரணங்களில் இதுவும் ஒன்று. இவ்வளவு அழகாய், வடிவாய் அவள் பிறந்திருக்கக் கூடாது தான்.



”போகலாமா?’’ என்றாள். சரி என்னும் பாவனையில் அகலப் புன்னகை ஒன்றை உதிர்த்துக் கிளம்பினேன். என் தோளில் ஒரு கையை மட்டும் இறகு போல் ஊன்றிக் கொண்டு பைக்கின் பின்னிருக்கையில் உட்கார்ந்தாள். மலாடு ரயில்வே பாலம் தாண்டி, நெடுஞ்சாலை வழியாய் திண்டோஷி வந்து சேர்ந்தோம்.



அருகில் அவள் இருந்த காரணத்தால் ஏனோ மதியம் பனிரெண்டு மணிக்கான உஷ்ணத்தை உணர முடியவில்லை. பேண்டஷி லேண்டில் கூட்டமில்லை. எண்ணிவிடும் அளவுக்கே ஆட்கள். பெரும்பாலும் ஜோடிகள். எங்களைப் போல் என்று சொல்ல முடியாது. ஆனால் இன்றையத் தினம் கண்டிப்பாய் யாரும் எங்களைப் போல் இருக்கவே முடியாது. நான் அவளைக் கொலை செய்ய அல்லவா கூட்டி வந்திருக்கிறேன். ஜோடிகளில் பலரின் கண்களில் ஒருவருக்காக ஒருவர் உயிரைக் கொடுக்க தயாராய் இருக்கும் உணர்வே காணக் கிடைத்தது. என் கண்ணிலும் இந்த உணர்வு எக்கச்சக்கமாக இருந்திருக்கிறது. அதுவொரு காதல் காலம். இது கொலைக் காலம். உடலின் அத்தனை அனுக்களும் அவளைக் கொல்லத் துடித்துக் கொண்டிருந்தன.



டிக்கெட் எடுத்து விட்டு ஒரு பழச்சாறு குடித்தோம். அதுவும் அவளுக்குப் பிடித்த அன்னாசி பழச்சாறு. இரண்டு மூன்று விளையாட்டுகளில் மகிழ்ந்தாயிற்று. அடுத்து லோலர் கோஸ்டர். அவள் வர மறுத்தாள். பயப் படுவதாய் சொன்னாள். நான் விடுவதாயில்லை. என் திட்டம் என்னாவது. ‘ நான் தான் பக்கத்தில இருக்கேன்ல’ என்று இழுத்துப் போனேன்.



பெட்டியில் உட்கார்ந்தாயிற்று. இடுப்பு வார் கட்டியாயிற்று. பெட்டி புரப்பட்டது. அவள் கண்களை மூடிக் கொண்டாள். என் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். மிகுந்த சிரமத்திற்குப் பின் அவளது கைகளை விலக்கி அவளைத் தனிமை படுத்தினேன். அவள் கொஞ்சம் பயம் தெளிந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள். இதுதான் சமயமென அவளது இடுப்பு வாரை கையில் வைத்திருந்த பிளேடால் வெட்டி விட்டேன். அவளுக்குத் தெரியவில்லை. திட்டம் மிகச் சரியாக ஒவ்வொரு கட்டமாய் நகர்ந்து கொண்டிருந்தது.



குறிப்பிட்ட இடத்தில் தலைகீழாக ஏறி இறங்கியது பெட்டி. அவள் எம்பினாள். அவளைப் பிடித்து தள்ளப் பார்த்தேன். நான் வேடிக்கை செய்வதாக எண்ணி என்னை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். எத்தனை முயன்றும் அவளை பெட்டியிலிருந்து தள்ளி விட முடியவில்லை. புரப்பட்ட இடத்துக்கே பெட்டி வந்து சேர்ந்தது. இடுப்பு வாரைப் பார்த்தவள் திடுக்கிட்டாள். ’நல்லவேளை ஒன்னும் ஆகலை’ என்றும் நான் கூட இருந்ததால் எல்லாம் நலமாக இருந்தது என்றாள்.



பெட்டியிலிருந்து விழாமல் இருக்க அவள் பிடித்த இடங்கள் அப்படியே அச்சு பதிந்து விட்டிருந்தன. அவள் ஒரு பெரும் சாதனையைச் செய்து விட்டு வந்தவளைப் போல் பெட்டியிலிந்து இறங்கினாள். நான் படு தோல்வியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தேன்.



மீண்டும் பழச்சாறு பருகினோம். இம்முறை நான் எனக்குப் பிடித்த ஆரஞ்சு பழச் சாறும், அவளுக்கு அன்னாசி பழச்சாறும் வாங்கிக் கொண்டோம். அவள் கைப்பேசியில் தனது தோழி ஒருத்தியிடம் ( அது தோழனாகக் கூட இருக்கலாம்) செத்துப் பிழைத்தவளைப் போல் அனுபவம் பகிர்ந்தாள். உண்மையாகவே சாகப் போனவள் பிழைத்தாள் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை.



ஒரு தழுவலுடனும் நான்கு முத்தங்களுடன் முதல் திட்டம் தவிடு பொடியானது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா

அவளைக் கொல்ல பத்து வழிகள்


(கண்டிப்பாய் யாரும் பின்பற்றக் கூடாதவைகள்)



பூஜ்யம்



ஒரு குண்டூசிக்கு உயிரை ஊட்ட முடிவதில்லை, ஆனால் ஒரு எறும்பை கொன்று விட முடிகிறது. ஒரு பசுவை ஒரு ஆட்டை ஏன் ஒரு மனிதனைக் கூட கொன்று விட முடியும். பிற உயிர்களைக் கொல்லும் போதும் அவைகளைக் கொன்ற பின்னும் உண்டாகும் பதட்டத்தை, தவிப்பை விடவும் ஒரு மனிதனைக் கொல்லும் போது பதட்டமும் தவிப்பும் குற்றவுணர்வும் மிகுதியாகி விடுகிறது.



உயிர் என்றால் எல்லாம் உயிர் தானே. எறும்போ கொசுவோ அல்லது இவ்வகை பூச்சிகளோ பார்க்க உருவத்தில் சிறியதாக இருப்பினும் அதிலுள்ள உயிர் ஒன்றுதானே. உயிரை பரித்தப்பின் எந்தவொரு அறிவியலாலும் மரித்துப் போனவைகளை உயிர்ப்பிக்க முடியாது இல்லையா?. ஒரு உயிரியின் பாகங்களை செயலிழக்கச் செய்யலாம். செயற்கை பாகம் கொண்டு அதனை சீர் படுத்தியும் விடலாம், ஆனால் உயிருக்கு இந்த சீர்படுத்தும் சூத்திரங்கள் எந்த ஆய்விலும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்.



நானொரு கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். எறும்பை அல்ல கொசுவை அல்ல பூச்சியை அல்ல விலங்கை அல்ல. ஒரு மனுஷியை. நான் காதலித்த, என்னை காதலிப்பதாய் சொன்ன ஒரு தேவதையை. அவளை தேவதை என்று குறிப்பிட்டுள்ளதால் அவள் கொலை செய்ய முடியாதவளாகி விடப் போவதில்லை. தேவதைகளும் தேவைப் பட்டால் கொல்லப் படலாம். தேவதைகளை முழுமையாகக் கொல்ல முடியாது என்று நினைக்க வேண்டாம். தேவதை என்ற நாமகரணம் நான் சூட்டியதுதான். அவளிடம் தேவதைக்கான லட்சணங்கள் தென்பட்டதால் அப்படி அழைத்திருக்கிறேன். ஆனால் அவளைக் கொள்வதென முடிவாகி விட்டது. இனி யார் தடுப்பினும் முடிவில் மாற்றமில்லை. அவள் கொல்லப் படும் முறையை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளக் கூடும். கொடூரத்தை வேண்டுமானால் குறைத்துக் கொள்ள முடியும். கொலை செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாது.



நான் செய்திருக்கும் கொலைத் திட்டங்களில் எதாவது ஒன்றின் மூலம் அவளைக் கொன்று விட முடிவு செய்துள்ளேன். என்னுடன் உரையாடிய பல பொழுதுகளில் அவள் செத்துவிட்டதாகச் சொல்லி என்னைச் சாகடித்திருக்கிறாள். இனி அவளை நிஜமாகவே கொல்லப் போகிறேன். அவளுக்கு சாவின் முகத்தைக் காட்டி சாகடிக்கப் போகிறேன்.



நமக்கு விருப்பமானவர்களைக் கொல்ல நிறைய சிரமப் பட வேண்டியதிருக்கும் என்று நினைக்கிறேன். பலப்பல திட்டங்களை தீட்ட வேண்டிய நிலையும் வரலாம். காரணம் கொலைத் திட்டத்தை நிறைவேற்றுகையில் அன்பு மிகுதியால் நாமே கூட அவர்களைக் காப்பாற்றி விடக் கூடும். அதனால் ஒன்றல்ல இரண்டல்ல பல திட்டங்களும் முயற்சிகளும் செய்யதாக வேண்டும். திட்டங்களைத் தீட்டி விட்டேன். இனி செயல் படுத்த வேண்டியதுதான்.



பத்து திட்டங்கள் வைத்துள்ளேன். ஒன்றில் தப்பினால் மற்றொன்று. மற்றொன்றில் தப்பினால் பிரிதொன்று. எப்படியும் கொன்று விடுவேன். ஒரு திட்டத்தை ஒரு முறைக்கு மேல் பயன் படுத்த மாட்டேன். தோற்றுப் போன கொலைத் திட்டம் அவளுக்கு புரிந்து விடக் கூடும். எனவே தான் இத்தனை மாற்றுத் திட்டங்கள். பாரம்பரிய கொலைத் திட்டங்களைக் கொண்டுதான் கொல்லப் போகிறேன். நானும் பாரம்பரியமானவன் தானே. நவீன கொலைத்திட்டங்கள் குறித்து தெரியாது. நவீனம் குறித்து பெரிய புரிதலும் இல்லை.



அவளைக் கொல்லும் திட்டங்களை நாவல்களிலிருந்தும், திரைப்படங்களிலிருந்து, பத்திரிக்கை செய்திகளிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் கேட்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்துள்ளேன். எனது திட்டங்களில் தோல்வியடைந்தால் நீங்கள் எனக்கு உதவலாம். கண்டிப்பாய் உங்கள் கணக்கில் பாவத்தின் சிறிதொரு பாகமும் சேராது. என்னை நடை பிணமாக்கி விட்ட அவளைக் கொல்வது, என் அறிவிற்கு சரியெனவே படுகிறது. என்னை தவறாக நினைப்பவர்கள், எனக்கு அறிவுரை சொல்ல துடிப்பவர்கள். கண்டிப்பாய் இதற்குமேல் வாசிக்க வேண்டாம்.



அவள் உயிரோடு இருந்தால் நான் தினமும் அவளைப் பேசிப் பேசியே கொன்று விடக் கூடும். தினம் என் வார்த்தைகளால் காயப் பட்டு அவள் தவனை முறையில் சாவதை விட என் கொலைத் திட்டங்களில் ஒன்றின் மூலம் செத்துப் போவது நல்லதெனப் படுகிறது. பல அவலங்களை கண்டு அனுபவித்த நான் இப்படிச் செய்வதை ஆகச் சரியென நினைக்கிறேன். எனக்கு யாரும் உதவ வேண்டாம். அதே நேரம் அவளை யாரும் காப்பாற்ற நினைக்க வேண்டாம். அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு அவளைக் காப்பாற்ற பரிந்துரைக்க வேண்டாம். நான் கொலைக் கடவுளிடம் அனுமதியும் பெற்றாகி விட்டது.



அதிர்ந்து பேசுவதைக் கூட தவிர்க்கும் நான் கொலை செய்யப் போவது என்னைத் தெரிந்த சகலருக்கும் வியப்பாகவே இருக்கும். வியந்து விட்டுப் போகட்டும். என் கவலையை, கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ள யார் வந்தார்கள். ஒருவருமில்லையே. இப்படியானவர்களைப் பற்றி எனக்கும் அக்கரையில்லை. இப்படி அற்பக் காரணங்களுக்கு கொலைதான் முடிவா? என்று மீண்டும் அறிவுரைக்கு தயாராக வேண்டாம். நான் கேட்கப் போவதில்லை.



நான் கொலை செய்யும் அளவுக்கு கொடூரமாக மாறியதற்கான காரணங்களை வேண்டுமானால் கண்டுபிடித்து புரிந்து கொள்ள முயலுங்கள். கண்டிப்பாய் சரியெனவேப் படும். நடக்கப் போகும் கொலையை முன்கூட்டியே அறிவித்து விட்டு கொல்லும் சாமர்த்திய சாலி என எனக்கு புகழாரம் வேண்டாம். நான் கொலை செய்யப் போகிறேன். நீங்கள் சாட்சியாக இருங்கள். அவ்வளவுதான்.



செக்கோவின் பந்தயம்-தருமி

பந்தயம்






அது ஒரு பனிக்காலத்தின் பின்னிரவு. அந்த வயதான வங்கியாளர் தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாகக் குழப்பத்தோடு நடந்து கொண்டிருந்தார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு பனிக்காலத்தில் அவர் அளித்த விருந்து ஒன்று அவர் மனதில் நிழலாடிக்கொண்டிருந்தது. நிறைய அறிவு ஜீவிகள் கலந்து கொண்ட விருந்து அது. எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு இறுதியில் தூக்குத் தண்டனை பற்றி வந்து நின்றது. ஒரு சில இதழியல் நண்பர்களும், இன்னும் சில அறிவாளிகளையும் தவிர மற்ற எல்லோருமே ஒட்டு மொத்தமாக தூக்குத் தண்டனையை எதிர்த்தார்கள். பழங்காலத்து முரட்டுப் பழக்கம் அது; ஒரு கிறித்துவ நாட்டில் இப்படி ஒரு தண்டனையா?; மனிதப் பண்பாட்டிற்கு எதிரானது ... இப்படிப் பல எதிர்ப்புகள். அதிலும், சிலர் உலகம் முழுமைக்குமே தூக்குத் தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை மட்டுமே செல்லும் என்று ஒரு வழக்கம், சட்டம் வரவேண்டும் என்று வற்புறுத்தினர்.



விருந்து கொடுத்த வங்கியாளரோ இதற்கு மறுப்பு கூறினார்: "தூக்குத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ ... எந்த அனுபவமும் எனக்கில்லை. இருந்தும் என்னுடைய மதிப்பீட்டில் தூக்குத் தண்டனையே மிகவும் சரியான தீர்ப்பாகத் தெரிகிறது. ஆயுள் தண்டனையை விட எல்லா விதத்திலும் மேலானது; உயர்வானது. தூக்குத் தண்டனை குற்றவாளிக்கு மரணம் உடனே நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் ஆயுள் தண்டனை கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளியைக் கொல்கிறது. சில வினாடிகளில் உங்களைக் கொல்வது நல்லதா? .. இல்லை அணு அணுவாக உங்களை மெல்லக் கொல்வது சரியா? எதில் மனிதத் தன்மை அதிகம்?"



"இரண்டுமே எனக்குப் பண்பாடானதாகத் தோன்றவில்லை" என்றார் ஒரு விருந்தினர். "ஏனெனில், இரண்டிலுமே உங்கள் வாழ்க்கை உங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அரசு என்ன பெரிய கடவுளா? வாழ்க்கையை எடுக்க முடியும். ஆனால் அந்த அரசினால் அதைத் திருப்பித் தரமுடியுமா? அப்படித் திருப்பித் தர முடியாததை எப்படி அவர்கள் இஷ்டத்திற்கு பிடுங்கலாம்?"



அந்தக் குழுவில் ஒரு இளம் வழக்கறிஞரும் இருந்தார். வயது இருபத்தி ஐந்திற்குள் தானிருக்கும். அவரது கருத்தைக் கேட்டதும், அவர் "தூக்குத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ ... இரண்டுமே என்னைப் பொறுத்தவரை தவறானவை. ஆனால் இந்த இரண்டில் ஒன்று என்று என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் இரண்டாவதைத்தான் தேர்ந்தெடுப்பேன். வாழாமலே மாய்ந்து போவதை விடவும், ஏதோ ஒரு வகையில் எப்படியோ வாழ்வது பெரிதுதானே..!"



வங்கியாளருக்கு தன் கருத்துக்கு எதிர்கருத்தாக வந்த விவாதம் மிகக் கோபத்தைத் தந்தது. முன்னால் இருந்த மேசை மேல் ஓங்கித் தட்டியவராக அந்த இளம் வழக்கறிஞரைப் பார்த்துக் கத்தினார்: "நீங்கள் சொல்வது சுத்தப் பொய்; இருபது லட்சம் தருகிறேன்... வெறும் ஐந்தே ஐந்து வருஷம் ... ஒரு தனிமைச் சிறையில் உங்களால் இருக்க முடியுமா?"



"நீங்கள் இத்தனை தீவிரமாக இதைப் பேசுவதால் அதே தீவிரத்தோடு நானும் சொல்வேன். இருபது லட்சம் கொடுத்தால் ஐந்து என்ன ..பதினைந்து வருஷம் தனிமைச் சிறையில் இருக்க நான் தயார்" என்றார் அந்த இளம் வழக்கறிஞர்.



"பதினைந்து வருஷம்! சரி .. நானும் ஒத்துக் கொள்கிறேன். நண்பர்களே! நான் இருபது லட்சம் பணயமாக வைக்கிறேன்" என்று வங்கியாளர் கத்தினார்.



"நானும் இந்த ஒப்பந்தத்தை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் பணயமாக வைப்பது இருபது லட்சம்; நான் பணயமாக வைப்பது என் “சுதந்திரம்".



மூர்க்கத்தனமான இந்த பந்தயம் உறுதியாயிற்று. வங்கியாளருக்கு இந்த இருபது லட்சம் என்பது பெரிய விஷயமல்ல; பணத்தில் புரள்பவர்; நினைத்ததைச் செய்பவர்; பல லட்சங்களை உருட்டி விளையாடுபவர். விருந்து தொடர்ந்து நடக்கும்போது பக்கத்திலிருந்த இளைய வழக்கறிஞரிடம் சிரித்துக் கொண்டே, "இளைஞனே! கொஞ்சம் புத்திசாலியாயிருங்கள். காலந்தாழ்த்தியாவது திருந்திக்கொள்ளுங்கள்.இருபது லட்சம் எனக்குப் பெரிதல்ல. ஆனால் உங்கள் வாழ்க்கையில் நல்ல நாலைந்து ஆண்டுகளை இழக்கப் போகிறீர்கள். ஏன் நாலைந்து ஆண்டுகள் என்று மட்டும் சொல்கிறேனென்றால் அந்த நாலைந்து ஆண்டுகளுக்கு மேல் உங்களால் இந்தப் போட்டியில் நிலைத்து நிற்க முடியாது. அதோடு இன்னொன்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - தானாக வலிந்து நீங்கள் ஏற்றுக்கொள்ளும் இந்த தண்டனை பிறரால் உங்கள் மேல் ஏற்றப்படுவதை விடவும் மிகக் கடினமானதாக, கசப்பானதாக இருக்கும். எந்த நிமிஷத்திலும் வெளியே வந்து இந்தப் பந்தயத்தை முறித்துக் கொள்ளலாம் என்பதாலேயே இந்தச் சிறை வாழ்க்கை மிக மிகக் கடினமானதாக இருக்கும். வாழ்க்கையே கசப்பான ஒரு சிறைக்குள் நீங்கள் அடைத்துக் கொள்வதைப் பார்க்கும்போது உங்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது".



வங்கியாளர் பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்று நடந்த நிகழ்வு ஒவ்வொன்றையும் நினைவு படுத்திக் கொண்டார். கால்கள் அவரது அறையை அங்குமிங்குமாய் அளந்து கொண்டிருந்தன. ஆனால், அவரது நினைவுகள் அன்றைய நிகழ்வுகளை ஆழமாக அசை போட்டுக் கொண்டிருந்தன.



"எதற்காக இப்படி ஒரு பந்தயத்திற்குள் தலையை விட்டேன்! இதனால் எனக்கு என்ன லாபம்? அந்த பந்தயத்தால் ஆயுள் தண்டனை சிறந்ததா தூக்குத் தண்டனை சிறந்ததா என்று மக்களை உணர வைக்கப் போகிறதா? இல்லை .. இல்லவே இல்லை .. எல்லாம் சுத்த வெட்டித் தனம். பந்தயம் வைத்த அந்த நாள் என்னைப் பொறுத்த வரை ஒரு வீம்பு பிடித்த, மனம்போல் நடக்கும் ஒரு பணக்காரனின் வெட்டிப்பந்தயம், அந்த வழக்கறிஞனுக்கோ என் காசு மேல் கண்!"



மீண்டும் பழைய நினைவுகளுக்குள் மூழ்கிப் போனார் வங்கியாளர். அந்தப் பந்தயம் உறுதியானதும் மற்றைய அனைத்து ஏற்பாடுகளும் உறுதியாக்கப்பட்டன. வழக்கறிஞருக்கு மிகக் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்ட சிறை. வங்கியாளரின் வீட்டில் இருந்த தோட்டத்து அறையே கடுஞ்சிறையாகும். பந்தயக் காலமான பதினைந்து ஆண்டுகளும் வழக்கறிஞர் அந்த வீட்டின் வாசலைத் தாண்டவோ வேறு மனிதக் குரலைக் கேட்கவோ, கடிதங்கள், செய்தியிதழ்கள் வாசிக்கவோ முடியாது. ஏதாவது ஒரு இசைக் கருவி வாசிக்க, நூல்கள் வாசிக்க, கடிதங்கள் எழுத, மதுபானம் அருந்த, புகை பிடிக்க அனுமதியுண்டு. வெளியுலகோடான தொடர்பு கொள்ள ஒரு சின்ன ஜன்னலிருக்கும். அது வழியே எழுத்து மூலமாகத் தன் தேவைகளை வெளியுலகிற்கு அனுப்பலாம். புத்தகம், இசை, மது - இவைகள் எவ்வளவு வேண்டுமானாலும் ஜன்னல் வழியே சிறு குறிப்புகள் மூலம் அவர் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு சின்ன விஷயமும் கூட மிகத் திருத்தமாக முதலிலேயே திட்டமிடப்பட்டது. பதினைந்து ஆண்டுகள் அவர் தனிமைப்படுத்தப் படுவார். 1870-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் இந்தப் பந்தயம் 1885-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். சரியாக இந்த நேரத்திற்கு இரு நிமிடங்களுக்கு முன்பே வெளியே வழக்கறிஞர் வந்தாலும், வங்கியாளர் பணம் எதுவும் தரவேண்டியதில்லை. இருபது லட்சம் வங்கியாளருக்கே என்று ஒப்பந்தமிடப்பட்டது.



பந்தயம் ஆரம்பித்தது. முதல் ஆண்டில் வழக்கறிஞர் அனுப்பிய சீட்டுகளிலிருந்து அவர் தனிமையின் தீவிரமும், அதனாலான தவிப்பும் தெரிந்தன. இரவும் பகலும் அவரது அறையிலிருந்து பியானோவின் இசை வெளியே கசிந்தது. மது, புகை இரண்டும் அவரால் கேட்கப்படவேயில்லை. சீட்டு ஒன்றில், "மது ஆசையை வளர்க்கிறது; ஆசைகள் ஒரு சிறைக் கைதியின் முதல் எதிரி; அதுவும் நல்ல ஒயினை தனியாக அமர்ந்து அருந்துவது அயர்ச்சியை மட்டுமே தரும். புகையோ அறையின் மூச்சுக் காற்றையே அசுத்தமாக்கி விடும்" என்று எழுதியிருந்தார். முதல் ஆண்டு முழுவதும் வழக்கறிஞர் கேட்ட நூல்கள் மிக எளிதானவைகளே - காதல், மர்மங்கள், கற்பனைகள், நகைச் சுவைகள் - இப்படிப்பட்ட கதைகளே அவரால் கேட்கப்பட்டன.



இரண்டாவது ஆண்டு - பியானோ அமைதியாகி விட்டிருந்தது. வழக்கறிஞர் இப்போது கேட்ட நூல்கள் யாவும் பெரும் இலக்கியங்கள் தான். ஐந்தாவது வருடம் மறுபடியும் பியானோ ஒலிக்க ஆரம்பித்தது. மதுவும் கேட்கப்பட்டது. அவரது வாழ்க்கையை உன்னிப்பாகப் பார்த்தவர்களுக்கு வழக்கறிஞர் இந்த ஆண்டு முழுவதும் குடிக்க, உண்ண, தூங்க மட்டுமே செய்கிறார் எனப் புரிந்தது. தொடர்ந்த கொட்டாவிகள் .. தனக்குத் தானே கோபமாகப் பேசிக்கொள்ளுதல் .. என்று காலம் போனது. வாசிப்பு அறவே இல்லாது போயிற்று. சில நாட்களில் இரவு முழுக்க முனைந்து எழுதிக் கொண்டிருந்தார். இரவு முழுக்க எழுதியதைக் காலையில் எழுந்ததும் கிழித்துப் போட்டார். பல நேரங்களில் அவரின் அழுகைக் குரல் வெளியே வரை கேட்டது.



ஆறுவது ஆண்டின் இரண்டாம் பகுதியில், பல மொழிகள் கற்கும் ஆவலுண்டானது. அதனோடு வரலாறு, தத்துவம் இவைகளையும் கற்க ஆரம்பித்தார். இவைகளைக் கற்க ஆரம்பித்த போது, அவரது ஆர்வத்தை நிறைவேற்ற வங்கியாளர் மிகுந்த சிரமப்பட்டார். அத்தனை நூல்கள் ... அத்தனை வேகம் ...! நான்கு ஆண்டுகளில் மட்டும் 600 புத்தகங்களை வங்கியாளர் வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தத் தீவிரம் உயர் நிலையிலிருந்த போது வழக்கறிஞரிடமிருந்து ஒரு சீட்டு வங்கியாளருக்கு வந்தது.



"எனதருமை சிறையதிகாரியே! இந்தக் கடிதத்தை நான் ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன். இவைகளை மொழி வல்லுனர்களிடம் கொடுங்கள். அவர்கள் அதை வாசிக்கட்டும். அவர்கள் தவறு ஏதும் அவைகளில் கண்டுபிடிக்காவிட்டால், தோட்டத்தில் ஒரு துப்பாக்கி வெடிச் சத்தம் எழுப்புங்கள். நான் என் முயற்சியில் முழு வெற்றி பெற்று விட்டேன் என்பதைப் புரிந்து கொள்வேன்".



"வித்தகர்கள் பலரும் பல மொழிகளில் எழுதுகிறார்கள். மொழிகள் வேறாக இருந்தாலும் கருத்துக்கள் ஒன்றே. இப்போதைய எனது மிக்க உன்னதமான மகிழ்ச்சிகரமான நிமிடங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்".



வழக்கறிஞரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது .. ஒன்றல்ல .. இரண்டு குண்டுகள் தோட்டத்திலிருந்து சுடப்பட்டன!



பத்து ஆண்டுகள் கழிந்தன.



இப்போது வழக்கறிஞர் தன் மேசையருகே அமர்ந்து அமைதியாக பைபிளின் புதிய ஏற்பாட்டை வாசித்துக் கொண்டிருந்தார். வங்கியாளருக்கு இது மிக ஆச்சரியத்தைக் கொடுத்தது. நான்கு ஆண்டுகளில் 600 நூல்களைக் கற்றறிந்தவர். ஆனால் இப்போது ஒரு வருடம் முழுமைக்கும் மிக எளிமையான, சின்னதான ஒரு நூலை எப்படி தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார் என் வியந்தார். இந்த நூலை வாசித்த பின் மதங்களின் வரலாறு, இறையியல் என வாசிக்க ஆரம்பித்தார்.



கடைசி இரு ஆண்டுகளில் அவரின் வாசிப்பு மிகவும் வேறுபட்டு இருந்தது. நிறைய வாசித்தார் ... வாசித்தவையும் பல்வேறு துறை தொடர்பானவை. முதலில் உயிரியல் .. பின் பைரனும் ஷேக்ஸ்பியரும் ... அவரிடமிருந்து வரும் சீட்டில் வேதியல் நூலும் இருக்கும்; அதோடு மருத்துவ நூல், மர்மக்கதைத் தொகுப்புகள், தத்துவம், இறையியல் தொடர்பானவை என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஏதோ ஒரு பெருங்கடலுக்குள் - பல்வேறு உடைந்த பாகங்கள் மிதக்கும் நீருக்குள் - ஏதாவது ஒன்றைப் பற்றி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிலிருந்தது.



வங்கியாரின் சிந்தனைகள் தொடர்ந்து, அந்த முழு பதினைந்து ஆண்டு கால நிகழ்வுகளை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தன. "நாளை பந்தயம் முடிவிற்கு வருகிறது. நாளை 12 மணிக்கு வழக்கறிஞர் சுதந்திரமாகி விடுவார். நான் இருபது லட்சம் கொடுக்க வேண்டும். அப்படி பணத்தை எப்படியாவது பிரட்டிப் போட்டுக் கொடுத்தால் அதோடு என் வாழ்க்கையே அவ்வளவு தான் ... முழுவதுமாக அழிந்தே போய்விடுவேன்...".



பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கை நிறைய பணம் .. எத்தனையோ லட்சங்கள் .. கோடிகள் ... ஆனால் இப்போதோ கடன் மயம்தான். பங்குச் சந்தையின் சூதாட்டங்கள், கண்மூடித்தனமான கணிப்புகள், கவனமின்மை, முதுமை ... எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவரது தொழிலை முழுவதுமாக ஆட்டியெடுத்து விட்டன. கவலையற்று, தன்னமிபிக்கையோடுமிருந்த அந்த மனிதர் இப்போது ஒரு வெகு சாதாரண வங்கியாளராக, பங்குச் சந்தையின் ஒவ்வொரு சின்ன அசைவிற்கும் ஆடிப் போகுமளவிற்கு மாறி விட்டார்.



"முட்டாள்தனமான பந்தயம்.." தன் தலையைப் பிடித்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டார். "இந்த மனுஷன் ஏன் செத்துத் தொலக்கவில்லை? வெறும் நாற்பது வயதுதான் இந்த மனிதனுக்கு. வெளியே வந்ததும் என் கடைசிப் பைசாவும் அவரிடம் போய்விடும். இனி இந்த மனிதன் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து, பங்குச் சந்தைகளின் சூதாட்டத்தில் திளைத்து விடுவான். நான் அவனைப் பார்த்து ஏங்கும் பிச்சைக்காரன் போல் நிற்க வேண்டும். யார் கண்டது .. நாளையே அவன் என்னிடம், "எனது இந்த இனிய வாழ்க்கைக்கு நீதான் காரணம். உனக்கு நான் கட்டாயம் ஏதாவது உதவி செய்ய வேண்டும்" என்றும் சொல்லலாம்! ம்ம் .. ம்.. இது அதிகம் .. அப்படியெல்லாம் நடக்கக் கூடாது. நான் ஓட்டாண்டியாவது, மரியாதையை இழப்பது .. இவைகளிலிருந்து தப்பிக்க ஒரே வழி - இந்த மனிதன் சாக வேண்டும்.



இருண்ட இரவு. கடிகாரம் மூன்று மணியடித்தது.



வங்கியாளர் மிக உன்னிப்பாகக் கவனித்தார். வீட்டில் அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தார்கள். ஜன்னல் வழியே உறைந்து நின்றிருந்த மரங்களின் அசைவுச் சத்தம் மிக மெல்லியதாகக் கேட்டது. எந்த விதச் சத்தமும் இன்றி 15 ஆண்டுகளாகத் திறக்காமலிருந்த தோட்ட வீட்டின் சாவியை இருப்புப் பெட்டியிலிருந்து பத்திரமாக வெளியே எடுத்தார். மேல் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு வீட்டு விட்டு வெளியே வந்தார். தோட்டம் மிகவும் இருளடர்ந்திருந்தது. மெல்லியதாக மழை பெய்து கொண்டிருந்தது. குளிர்ந்து ஊடுருவும் காற்று மரங்களை வெறுமனே இருக்க விடாது அசைத்துக் கொண்டிருந்தன. வங்கியாளரின் கண்களுக்குத் தோட்டமோ, அங்கங்கே இருந்த வெண்ணிறச் சிலைகளோ, மரங்களோ .. எதுவுமே தெரியவில்லை. தோட்ட வீட்டின் அருகே வந்து தோட்டக்காரன் பெயரைச் சொல்லி இரு முறை மெல்ல அழைத்தார். பதிலேதுமில்லை. குளிருக்கும், மழைக்கும் பயந்து அவன் சமையலறையிலோ வேறெங்கோ படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பான். நான் செய்ய நினைப்பதைச் செய்து முடித்து விட்டால், எல்லோருக்கும் முதல் சந்தேகம் தோட்டக்காரன் மேல்தான் வரும் என்று நினைத்துக் கொண்டார்.



இரவில் தட்டுத் தடுமாறி நடந்து, தோட்ட வீட்டிற்குப் போய் இருகி மூடிப்போயிருந்த கதவைக் கஷ்டப்பட்டுத் திறந்து மெல்ல உள்ளே நுழைந்தார். குறுகிய பாதை .. நல்ல இருட்டு .. ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்தார். எங்கும் அரவம் ஏதுமில்லை. நிசப்தம் .. ஒரு படுக்கை .. காலியாகக் கிடந்தது. உடைகள் எல்லாம் அந்தக் கட்டிலின் மீது கிடந்தன. இரும்பு அடுப்பு ஒன்று அங்கு ஓர் ஓரத்தில் இருந்தது. அங்கிருந்து பார்த்த போது 'கைதி'யின் அறை மூடி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வைத்த சீல் உடைக்கப்படாமல் இருந்தது தெரிந்தது.



பற்ற வைத்த தீக்குச்சி அணைந்தது. வயதான வங்கியாளருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. மெல்ல 'கைதி'யின் அறைப்பக்கம் சென்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். கைதியின் அறைக்குள் பெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளி மங்கலாகப் பரவியிருந்தது. கைதி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார். தலை, முதுகு, கைகள் இவைகள் மட்டுமே வங்கியாளருக்குத் தெரிந்தன. விரிந்து கிடந்த பல புத்தகங்கள் மேசை, நாற்காலி, கம்பளம் என்று எல்லாவிடத்திலும் விரவிக் கிடந்தன. வங்கியாளர் ஜன்னல் வழியே தன் கைதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடங்களாயிற்று. ஆனால் கைதியின் உடம்பில் எந்த மாற்றமுமில்லை. 15 ஆண்டின் தனிமைச் சிறை எந்த வித அசைவுமின்றி அவரை அப்படியே இருக்கக் கற்றுக் கொடுத்திருந்தது போலும்!



வங்கியாளர் மெல்ல ஜன்னலின் கண்ணாடி மேல் மெல்லத் தட்டினார். கைதியிடமிருந்து எந்த மாற்றமுமில்லை. வங்கியாளர் மெல்ல பூட்டின் மேலிருந்த சீல்களை மெல்லப் பிரிந்து, சாவியை கதவினுள் நுழைத்தார். இப்போதும் கைதியிடம் எந்த மாற்றமுமில்லை. மெல்லக் கதவைத் திறந்தார்.



பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பூட்டிய கதவின் பூட்டு ... கடிதாயிருந்தது. திறந்த கதவு கிறீச்சிட்டது. வங்கியாளர் ஆச்சரியமான ஒரு கத்தலையும், தன்னை நோக்கி ஓடிவரும் கைதியின் காலடி ஓசையையும் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மூன்று நீண்ட நிமிடங்கள் .. மெளனமாகக் கழிந்தன. முன்பு போலவே இப்போதும் மெளனம் தொடர்ந்தது. வங்கியாளர் துணிந்து அறைக்குள் நுழைந்தார்.



மேசையின் முன்னால் அந்த மனிதன். ஆனாலும் பின்னாலிலிருந்து அவனைப் பார்க்க சாதாரண மனிதனாகத் தெரியவில்லை. வெறும் எலும்புக் கூடு; தோல்கள் வற்றி ஒட்டிப் போயிருந்தது. பெண்ணின் முடி போல் முடி நீண்டு வளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. நீண்ட, கரடு முரடான தாடி. முகமெல்லாம் ஓளி படராது மஞ்சள் பூத்துக் காய்ந்திருந்தது. கன்னங்கள் ஒட்டிக் குழிந்து போயிருந்தன. தன் தலையைக் கைகளில் தாங்கிப் பிடித்தவாறு இருந்ததைப் பார்க்கும்போதே வேதனையே மீதியாயிருந்தது. முடியெல்லாம் கருமையிழந்து வெளிறிப் போய் கிடந்தது. முதுமையடைந்து சோர்ந்திருந்த அந்த மனிதனைப் பார்க்கும் யாரும் அவருக்கு வயது வெறும் நாற்பதுதான் என்றால் நம்பவே மாட்டார்கள். மேசையில், குனிந்திருந்த முகத்திற்கு எதிர்த்தாற்போல், கைகளுக்கருகே ஒரு தாள் மெலிதாக ஆடிக் கொண்டிருந்தது. மெல்லிய சின்ன எழுத்துகளால் நிறைந்திருந்தது. 'பாவப்பட்ட மனுஷன்'. நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். எத்தனை .. எத்தனை கனவுகளோ? இவனை இப்படியே தூக்கிக் கொண்டு போய், கட்டிலில் கிடத்தி, தலையணையை வைத்து அழித்துக் கொன்றால் யாருக்கு என்ன வித்தியாசம் தெரியும்? இயற்கையான சாவு என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். எதற்கும் அதற்கு முன்பு அவன் எழுதியுள்ள கடிதத்தைப் படித்துப் பார்ப்போம் என்று வங்கியாளர் கடிதத்தை மெல்ல எடுத்தார். கைதியிடமிருந்து எந்த அசைவும் இல்லை. வங்கியாளர் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தார்.



நாளை ... இரவு 12 மணி .. எனக்கு என் விடுதலை கிடைத்து விடும். மக்களோடு மக்களாய் பழக முடியும். ஆனாலும் இந்த அறையை விட்டு வெளியேறி, உதயமாகும் சூரியனைப் பார்ப்பதற்கு முன் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசை. என் முழு மனதோடும், உணர்வோடும் என்னைத் தொடர்ந்து கண்காணித்து வரும் கடவுளின் சாட்சியோடு நான் சொல்ல விரும்புவது ... நல்லூழ் என்றெல்லாம் உங்கள் புத்தகங்கள் எல்லாம் விளிக்கும் சுதந்திரம், வாழ்க்கை, உடல் நலம் போன்ற எதுவும் இப்போது எனக்குப் பெரிதில்லை.



பதினைந்து ஆண்டுகள் வாழ்க்கையை, உலக வாழ்வை ஆழ்ந்து படித்து விட்டேன். நான் பதினைந்து ஆண்டுகளும் உலகத்தைப் பார்க்கவில்லை; மக்களுடன் பழகவில்லை. ஆனால் நீங்கள் கொடுத்த புத்தகங்கள் மூலம் இனிமையான ஒயினை ருசித்தேன்; பாடல்களைப் பாடினேன்; காட்டில் திரியும் மானையும் மாட்டையும் வேட்டையாடினேன்; பெண்களைக் காதலித்தேன் ... அதுவும், மிக அழகான பெண்கள் .. தெய்வீகப் பெண்கள் ..உங்கள் கவிஞர்களின் உன்னதக் கற்பனையில் படைக்கப்பட்ட பெண்கள் ... என்னிடம் இரவில் வந்து என் காதுகளில் அழகானவைகளை உச்சரிக்க, நானோ அதன் இன்பத் தலைச் சுற்றலில் மகிழ்ந்தேன். உங்கள் நூல்களின் வழியே நான் எல்ப்ரஸ், வெள்ளை மலை (Elbruz, Mount Blanc) போன்ற உயர்ந்த மலைகளின் சிகரங்களுக்கு ஏறிப் போனேன்; அங்கிருந்து உதயமாகும் சூரியனையும், மாலையில் மயங்கும் சூரியனையும் பார்த்துக் களித்தேன்; கடலும் மலைகளும் ஒளியில் சிலிர்த்துத் தெரிந்தன. அந்த மலை உச்சிகளில் என் தலைக்கு மேல் ஒளிர்ந்த மின்னல்களையும், விலகிப் போகும் மேகக்கூட்டங்களையும் ஆசைதீரப் பார்த்தேன்; பச்சைப் பசும் வயல், தோட்டங்கள், நதிகள், ஏரிகள், விரிந்து பரந்த நகரங்கள் எல்லாம் என் கண்முன் விரிந்தன. எங்கு எதிலும் இசை பொங்கிப் பெருகி வருவதைக் கேட்டேன். அழகான சைத்தான்கள் கடவுளுக்கு எதிராக என்னிடம் முணு முணுத்ததைக் கேட்டேன் ... உங்கள் நூல்கள் மூலம் அளவில்லாத ஆழத்தையும் பார்த்தேன்; விநோதங்கள் தெரிந்தன; எரிந்த நகரங்கள் .. புதிய மதங்கள் புதிய நிலங்களை வெல்வது .. இவைகளையும் கண்ணுற்றேன்."



"உங்கள் நூல்கள் எனக்கு அறிவை அளித்தன. அலைக்கழியும் மனித மனது ஆண்டாண்டு காலமாய் உருவாக்கி வைத்துள்ள அனைத்தும் என் மூளையில் பொதிந்து விட்டன. உங்கள் எல்லோரையும் விட இன்று நானே புத்திசாலி ..."



"உங்கள் நூல்களை நான் வெறுக்க ஆரம்பித்து விட்டேன். அதோடன்றி உங்கள் உலக அறிவு, ஆசாபாசங்கள் அனைத்தையும் வெறுக்கிறேன். எல்லாமே மாயை; அநித்தியம்; கண்ணில் விழுந்து மண்ணில் மறையும் விழல்கள்! நீங்கள் அறிவோடும் அழகோடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் எல்லாம் ஒரு சுண்டெலி எளிதாகச் சாகடிக்கப்படுமே, அதேபோல் நீங்களும் அழிக்கப்படுவீர்கள். உங்களின் வலிமை, வரலாறு, உங்கள் அறிவின் அழிவின்மை ... எல்லாமே உறைந்து போய், உலர்ந்து போய், எரிந்து விடும்; உலகிலிருந்து மறைந்து விடும்."



"நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள். தவறான வழியில் செல்கிறீர்கள். பொய்யை மெய்யெனக் கருதி, அவலத்தை அழகென்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆப்பிள் மரங்களும் ஆரஞ்சு மரங்களும் பழங்களுக்குப் பதில் வெறும் தவளைகளையும், ஓணான்களையும் காய்க்க ஆரம்பித்தால் ... ரோஜாப் பூக்களிடமிருந்து குதிரையின் அழுகிய வியர்வை நாற்றம் வந்தால் ... நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இதைப் போலவே நானும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இதைப் போலவே, மோட்சத்திற்காக இந்த உலக வாழ்வைப் பணயம் வைத்த நான் உங்களைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை.



எனது இந்த எண்ணத்தை என் செயலிலும் காண்பிக்க விரும்புகிறேன். கையில் கிடைத்தால் பரவசம் என்று நான் நினைத்த இருபது லட்சத்தை இப்போது நான் விஷமென்று வெறுக்கிறேன். எந்தப் பணமும் எனக்கு வேண்டியதில்லை. அதற்கான என் உரிமையை நான் ரத்து செய்கிறேன். அதுவும் என் விடுதலைக்கான நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக நான் இந்த இடத்தை விட்டு வெளியேறி என் ஒப்பந்தத்தை முறித்து விடுவேன்”



வழக்கறிஞரின் கடிதத்தை வாசித்ததும், வங்கியாளர் அந்தக் கடிதத்தை மேசை மேல் வைத்து விட்டு, வழக்கறிஞரின் தலையில் குனிந்து முத்தமிட்டு ... விசும்பத் தொடங்கினார். அவருக்கு ஏதும் புரியவில்லை. வணிகச் சந்தையில் தன் தவறுகளால் பல முறை பணத்தை இழந்தபோதும் கூட அவர் தன்னை இந்த அளவு வெறுத்ததில்லை.



வங்கியாளர் வீட்டிற்குத் திரும்பினார். தன் படுக்கையில் சாய்ந்தார். அவரின் அழுகையில் பல மணி நேரங்கள் கழிந்து கரைந்தன.



அடுத்த நாள் காலை .. பொழுது விடிந்தது. தோட்டக்காரன் ஓடோடி வந்தான். ‘வீட்டிற்குள் இருந்த கைதி ஜன்னல் வழியே ஏறிக் குதித்து தப்பித்து விட்டான்’ என்றான். வங்கியாளர் தன் வேலையாட்களுடன் தோட்ட வீட்டிற்கு விரைந்து சென்று, கைதி தப்பியதை உறுதி செய்து கொண்டார். தேவையில்லாத குழப்பம் வரும் என்பதற்காக “கைதி” எழுதிய கடிதத்தைப் பத்திரமாக எடுத்து வந்து, தன் சேமிப்பறைக்குள் வைத்து பாதுகாப்பாகப் பூட்டினார்.



நபும்சகங்கள் - மாதவிக்குட்டி

மும்பையின் சயோன் கோலிவாட என்ற சேரிப்பகுதியானது நபும்சகங்கள் மட்டும் நிறைந்துள்ள ஒரு காலனி. அது தகரத்தகடுகள் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகளும், கயிற்றுக்கட்டில்களும், அழுகிய நாற்றமடிக்கும் காய்கறிகளின் தோல்களும், குப்பைக்கூளங்களும், பெண்கள் போல் உடையணிந்திருந்தாலும் தினமும் முகச்சவரம் செய்யவேண்டியவர்களான மனிதர்களும் நிறைந்து ததும்பும் கிராமம்.


nabumsakan-2

எங்காவது ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் மேளங்களும், சலங்கைகளும் முழங்க நபும்சகங்கள்கள் அங்கு விரைவதுண்டு. அந்தக் குழந்தை நீண்ட ஆயுளும், ஆரோக்கியமாகவும் வளர அவர்கள் அங்கு நடனம் புரிவர். அந்த வீட்டின் உரிமையாளர், அந்த நடனத்திற்கான பரிசாக கோதுமை, சர்க்கரை மற்றும் தேங்காய் வழங்குவர். இப்பரிசுகள் நபும்சகங்கள்களுக்கு வழக்கமாக கொடுக்கப்பட வேண்டியவை. இப்பரிசுகள் கொடுக்கப்படுகையில் ஏதாவது குறை இருந்தாலோ, பரிசு கொடுக்காதவரையோ தகாத வார்த்தைகளால் இவர்கள் திட்டுவர். இவர்களின் முன்னால் கண்களால் வெறுப்பு காட்டி யாராவது ஒதுங்கினால் தங்களின் பாவாடையை தூக்கிக் காட்டி சாதாரணமாய் மறைக்கப்பட்டிருக்கும் தன் சாபத்தை வெளிக்காட்டுவர். அந்தக் காட்சி ஒரு பயங்கரமான தண்டனையாகவே பெரும்பாலோனோர் கருதுவார்கள்.



எல்லா வெள்ளிக்கிழமையும் புள்ளிகள் நிறைந்த பாவடையும், சேலையும் அணிந்து சலங்கையும் மேளமும் அதிர அவர்கள் நகரத்தில் உலா வருவதுண்டு. பயந்த சுபாவமுடைய பெண்கள் அவசர அவசரமாய் சில்லரைக்காசுகளை அவர்களிடம் எறிந்து விட்டு நடப்பதுண்டு. அவர்களின் அந்தப் பயம் நபும்சகங்களை எக்காளமிட்டு சிரிக்கத் தூண்டும். அதுமட்டுமல்லாது, நபும்சகங்கள் கொச்சையான வார்த்தைகளால் அந்தப் பெண்களின் உடல் உறுப்புகளையும் வர்ணிப்பதுண்டு.

சிறிய குழந்தைகளை திருடி அவர்களின் அந்தரங்க உறுப்புகளை கத்தி மூலம் வெட்டி அகற்றி அவர்களை பால் மாற்றுபவர்கள் நபும்சகங்கள் என்று மும்பைவாசிகள் தீர்மானமாக நம்புகிறார்கள். ஆனால் அதற்கு ஆதாரமில்லை. அப்படியே சாட்சிகள் இருந்தாலும் அவர்களுக்கு அதைப்பற்றி வெளியில் சொல்ல தைரியமில்லை. இல்லையென்றால் அந்தக் குப்பைக்கூளமான ஹிஜ்டா காலனியில் மீண்டும் மீண்டும் புதுமுகங்கள் தோன்றுவதெப்படி? அப்பகுதியானது எண்ணிலடங்கா நபும்சகங்களின் கூடாராமாகும். அனாயசமாக மேளங்களை ஒலிக்கச் செய்து கொண்டு சலங்கைகள் அதிர, உரத்த சப்தத்தில் பாடிக் கொண்டு அவர்கள் ஓய்வெடுப்பார்கள். பகல் முழுக்க எங்கேயோ சுற்றிக் கொண்டிருப்பார்கள்.





அங்கேயும் உண்டு ஒரு சங்கமும் அதன் தலைவரும். அவள் ராம் கிங்கரி என்னும் நபும்சகன். ராமு பாவு என்று அழைக்கப்படும் அவள் கருத்த உருவம் கொண்டவள். ஆறடி உயரமுள்ள ராமு பாவு எப்போதும் வெள்ளை நிற சேலை அணிபவள். வெற்றிலை சுவைத்து சுவைத்து குவிந்து போன உதடுகளுக்கிடையில் மைல்கல் போன்று காணப்படும் பற்களை எப்போதும் பார்க்கலாம். தகாத வார்த்தைகளின் பண்டிதை அவள்.



மாலைகளில் ராம் கிங்கரிக்கு எண்ணைய் தேய்த்து குளித்தல் என்பது வழக்கமான ஒன்று. அதற்கு நாலு அவுன்ஸ் பிரம்மி எண்ணையும், உதவியாளாய் அவளின் அருமைத் தோழி சக்குபாயும் மிகவும் அவசியம். கயிற்றுக் கட்டிலில் மல்லாந்து படுத்து, சக்குபாயின் பிடித்துவிடல்களை அனுபவிப்பது வழக்கம். அது முடிந்தவுடன் அரைமணி நேரம் நிலவின் ஒளியில் அங்குமிங்கும் உலாவுவதும் எப்போதும் நடக்கும் செயல். அந்த சமயத்தில் அங்கிருப்பவர்களின் நலன்களையும் தகவல்களையும் கேட்டறிந்து கொள்வதும் வழக்கம்.



ஒரு மாலை நேரத்தில் ராம் கிங்கரி கயிற்றுக்கட்டிலில் இருந்தபோதுதான் வித்யா அங்கு வந்தாள். குஜராத்திப் பெண் போல சேலை உடுத்தியிருந்த சேட்டாணி. கழுத்திலும் காதுகளிலும் ஆபரணங்கள் இல்லை. ராம் கிங்கரிக்கு அவள் கண்களின் அசாமான்யமான ஒரு தெளிவை பார்த்தவுடனே தெரிந்து விட்டது அவள் ஒரு மனநோயாளி என்பது.

‘ஒரு கிழவி வந்திருக்கிறாள்’ சக்கு தகவல் சொன்னாள்; ‘ஒரு குஜராத்தி சேட்டாணி’. ராம் கிங்கரி எழுந்திருக்கக்கூட முயற்சிக்காமல் படுத்துக்கொண்டே கேட்டாள்.



‘என்ன வேண்டும் கிழவி? இது எங்கள் ஹிஜ்டாக்களின் காலனி என்பது உங்களுக்கு தெரியாதா? இங்கே உங்களைப் போன்றவர்கள் யாருக்கும் நுழைய அனுமதியில்லை’



வித்யா மண்ணில் அமர்ந்து தன்னுடைய கால்களை நீட்டிக்கொண்டாள். ‘நான் மதியம் முதல் நடக்கத் துவங்கினேன்’ என்றவள்; ‘என்னுடைய சுந்தரிக்குட்டியை கண்டுபிடிக்காமல் வீட்டிற்கு திரும்பப்போவதில்லை என சபதம் செய்திருக்கிறேன்’ என்றாள்.



‘உங்களின் சுந்தரிக்குட்டியா? அவளை நீங்கள் இங்கு வந்து தேடினால் என்ன பயன்? இங்கே நபும்சகங்கள் மட்டும்தானே இருக்கிறோம்’ ராம் கிங்கரி கேட்டாள்.



‘அவள் நபும்சகனாகத்தான் பிறந்தாள். அவள், திருமணத்துக்குப்பின் பதினேழு ஆண்டுகள் காத்திருந்து, பல நேர்த்திக்கடன்களை செலுத்தியதால் எனக்கு கிடைத்த குழந்தை. உதித்துக் கிளம்பும் பௌர்ணமி நிலவை போன்ற முகம், உதட்டுக்கு மேல் ஒரு அழகிய மச்சம் உண்டு. அவளை தொட்டிலில் இருந்து திருடிக்கொண்டு போனது உங்களின் ஆட்கள்தான். அவள் கிடைக்காமல் நான் திரும்பப் போவதில்லை’ ’ என்றாள் வித்யா.



‘நாங்கள் குழந்தைகளை திருடுபவர்கள் அல்ல. குழந்தைகளை சில குடும்பத்தினர் எங்களுக்கு விற்பதுண்டு. நல்ல விலை கொடுத்து வாங்குவோமே தவிர திருடும் பண்பு எங்களுக்கில்லை. நபும்சகங்கள் உங்களை விட நேர்மையும் நெறியும் மிக்கவர்கள். நாங்கள் பூமித்தாயின் பிள்ளைகள்’ என்றாள் ராம் கிங்கிரி.



‘எப்போதிருந்து உங்கள் குழந்தையை காணவில்லை?’ சக்கு கேட்டாள்.



‘வரும் தீபாவளிக்கு பத்தொன்பது வருடமாகிறது. தீபாவளியன்றுதான் அவள் காணாமல் போனாள். நான் அதிகாலையில் குளிக்கச் சென்றபோதுதான் திருடன் அவளை கடத்தினான். நான் வேலைக்காரியின் அறையில் குழந்தையை கிடத்தியிருந்தேன். என் கணவருக்கும், அவரின் அம்மாவுக்கும் நான் நபும்சகனைப் பெற்றெடுத்தது பிடிக்கவில்லை. அவர்கள் குழந்தையின் கழுத்தை நெறித்து கொல்வதற்கும் தயாராயிருந்தனர். என்னுடைய அழுகையின் காரணமாக அவர்கள் குழந்தையை உயிருடன் விட்டனர். ஆனால் குழந்தையை வேலைக்காரியின் அறையில் வைத்து ரகசியமாகத்தான் வளர்க்க வேண்டும் என்று நிர்பந்தித்தனர். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் குழந்தை இறந்துவிட்டதாக அவர்கள் சொன்னார்கள். மேலும், இதனால் மனம் நொந்த நான் எனது சகோதரனின் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள அவரின் வீட்டிற்கு சென்றிருப்பதாகவும் சொன்னார்கள்’. ராம் கிங்கரி கட்டிலிலிருந்து எழுந்தாள். வித்யாவின் கண்கள் இருளிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.



‘அப்படியென்றால் உங்களின் குழந்தைக்கு தற்போது பத்தொன்பது வயதிருக்கும். பௌர்ணமி நிலவைப்போல முகம் கொண்ட அழகிய பெண். எங்களில் இப்படிப்பட்ட யாருமில்லையே’ என்றாள் ராம் கிங்கரி.



‘ நான் என் மகளை அழைத்துச் செல்லாமல் வீட்டிற்கு திரும்புவதாயில்லை’ வித்யா சொன்னாள்.



அந்த சமயத்தில் ஒரு நபும்சகங்கள் கூட்டம் வாத்தியங்களை இசைத்துக்கொண்டு அங்கே வந்தனர். அவர்களின் சிலர் வித்யாவை கவனித்தனர். அவர்கள் பார்க்க பல விதமாயிருந்தனர். தாடியில் சிறு ரோமங்களுடன் ஆண்முகம் மாறாதவர்கள், அழகும் உடல்மொழியும் கொண்டவர்கள், சேலை அணிந்தவர்கள், சிவப்பு பாவடை அணிந்தவர்கள், நெற்றியிலும் கைகளில் பச்சை குத்தியவர்கள், அழகில்லாதவர்கள்….



‘இவர் யார்?’ ஒரு நபும்சகன் வித்யாவைக்காட்டிக் கேட்டாள். ராம் கிங்கரி சிரித்தாள். ‘அவருடைய அழகிய பெண் இங்கேயிருப்பதாக சொல்கிறாள் இந்தக் கிழவி. பத்தொன்பது வருடங்களுக்கு முன் திருடு போன குழந்தை. நிலவைப் போல முகமும், உதட்டுக்கு மேல் மச்சம் கொண்ட பெண்’.





‘அது நம்முடைய ருக்மாவாயிருக்குமோ?’ ஒருவள் சொன்னாள். அவள் அழகிதான். அவளின் உதட்டுக்கு மேல் மச்சமும் உள்ளது.



‘முட்டாள்தனமாக பேசாதே’ ராம் கத்தினாள். ‘இங்கே அப்படி யாருமில்லை. ருக்மாவிற்கு மச்சமில்லை’.



அந்த நபும்சகங்கள் இயலாமையினால் முணுமுணுத்தனர்.



‘இன்று தாதர் சென்று நடனமாடியதற்கு என்ன பரிசு கிடைத்தது. குழந்தையின் அம்மா சர்க்கரையும் கோதுமையும் கொடுத்தார்களா?’ கேட்டபடியே ராம் கிங்கரி அவர்களுடைய உடமைகளை பரிசோதித்தாள். ‘காட் கோப்பரில் ஞாயிறன்று பிறந்த குழந்தை ஆண்குழந்தை’. ஒருவள் சொன்னாள். ‘நாம் வரும் திங்கள்கிழமை அங்கு சென்று நடனம் செய்யலாம். அவர்கள் பணக்காரர்கள். பிஸினெஸ் செய்பவர்கள்….’



‘கிழவி எழுந்திருங்க.. விரைவாக வீட்டிற்கு திரும்ப போய் சேருங்கள். இருட்டியது தெரியவில்லையா? உங்களை தேடிக்கொண்டு உறவினர்களும் போலீசும் இங்கே வருவது எங்களுக்கு பிடிக்காது. இது எங்களுக்கேயான காலனி’. சக்குபாய் வித்யாவிடம் சொன்னாள்.



‘என் மகளில்லாமல் நான் வீட்டிற்கு திரும்பப் போவதாயில்லை’. வித்யா சொல்லியபடி மண்ணில் சரிந்து கிடந்து கண்களை மூடிக்கொண்டாள்.



‘உறங்க உத்தேசமா?’ ராம் கேட்டாள். ‘நாங்கள் உங்களை அப்படியே ரயில்நிலையத்திற்கு தூக்கிப் போவோம். உங்களுக்கு இங்கு அனுமதியில்லை’.



‘இங்கே எனது மகளால் வாழ முடியுமென்றால் என்னாலும் வாழ முடியும். நான் உங்களுக்காக சமையல் செய்யவும் தயாராயிருக்கிறேன். சுவையான ‘டோக்லா’வும் ‘காண்ட்யா’வும் செய்து தருகிறேன். என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீர்கள்’ என்றாள் வித்யா.



‘நீங்கள் பெரிய வீட்டின் சேட்டாணி. நாங்கள் சாதாரணமானவர்கள். எங்களுக்காக நீங்கள் சமையல் செய்வதையறிந்தால் உங்கள் வீட்டினர் கோபப்படுவார்கள்’ என்றாள் சக்கு.



‘அவர்கள் யாருக்கும் நான் தேவைப்படவில்லை. என்னை பைத்தியம் என்றேதான் அவர்கள் அழைக்கிறார்கள். என்னை சனியன் என்றே பாவிக்கிற எனது மாமியார், எப்போது என்னை பார்த்தாலும் மறுபடியும் குளிக்கச் செல்வாள்’ என்று வித்யா சொன்னாள்.



‘ராம்பாவூ, யார் இவர்?’ சிவப்பு பாவடையணிந்த அழகி வித்யாவைப் கைநீட்டி கேட்டாள். ‘ ஒரு குஜராத்திக்காரி வந்திருப்பதாக இப்போது தான் உள்ளே சுலு சொல்ல நான் கேட்டறிந்தேன்’.



‘ருக்மா, நீ உள்ளே போ’ ராம் சொன்னாள்; ‘இந்த நிமிஷமே நீ உள்ளே போக வேண்டும்’



நிலவொளி ருக்மாவின் முகத்தில் பிரதிபலித்தது. அவளின் உதட்டுக்குமேல் ஒரு அழகிய மச்சம் எல்லாவருக்கும் தெரியும் விதத்தில் இருந்தது. வித்யா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.



‘நான் ஐந்து நிமிடங்கள் இந்த நிலவொளியில் இளைப்பாறட்டுமா?’ ருக்மா கேட்டாள்; ‘எனது கால்கள் வலிக்கின்றன. சூடுபிடித்த கான்கிரிட் தளத்தில் எவ்வளவு மணிநேரம் நடனமாடினேன் தெரியுமா? இனியும் இதுபோல இளைப்பாறுதல் இல்லாமல் தொடர்ந்து நடனமாடினால் வரும் தீபாவளிக்குள்ளாகவே நான் இறந்து போய்விடுவேன்’.



‘அமங்கல வார்த்தைகளை பேசாதே’ ராம் சொன்னாள். ‘நீ இறந்து போனால் நான் எப்படி உயிர்வாழ முடியும். நீ எனது பச்சைக்கிளியல்லவா?’



வித்யா எழுந்து கயிற்று கட்டிலினருகில் வந்து நின்றாள். அவள் ருக்மாவின் முகத்தை கூர்ந்து பார்த்தபடியே கேட்டாள்:

‘இந்தப் பெண்ணுக்கு என்ன வயது?’



‘அவளுக்கு இருபத்தி நாலு வயதாகிறது’. சக்கு சொன்னாள்; ‘அவள் மைசூரைச் சேர்ந்தவள். இங்கு வந்து நான்கு வருடங்கள் தான் ஆகிறது. அவள் உங்களின் அழகான பெண்ணல்ல’.



‘அந்த மச்சம்..’ வித்யா முணுமுணுத்தாள்.



‘அது மச்சமில்லை. நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்துக்கொள்ளும் போது தெறித்தது.’ என்ற ராம் ருக்மாவிடம் கேட்டாள்; ‘உனக்கு மச்சம் இல்லைதானே’.



‘பார்க்கமுடியாத இடத்தில்தான் எனக்கு மச்சம் இருக்கிறது’. ருக்மா பெரிதாக சிரித்தபடியே சொன்னாள்; ‘அப்படித்தானே ராமுபாவு?’



‘உண்மை’ ராம் தன் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டு சிரித்துக்கொண்டே சொன்னாள்; ‘ஹா…ஹா…ஹா… அந்த அழகிய மச்சத்தையும் உனக்கு காட்ட முடியாது பாட்டி’.



கட்டிலின் நுனியில் வலது காலை விரைப்பாக வைத்தும் கணுக்காலின் அழகை வெளிப்படுத்தியும் மகாராணியைப் போல நின்றிருந்த ருக்மாவின் முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்திக்கொண்டு வித்யா கேட்டாள்;



‘சொல் மகளே… நீ என்னுடைய அழகிய மகள்தானே.. என்னுடைய முலைப்பாலைக் குடித்துக்கொண்டு என்னுடைய உடலினை பற்றிக்கொண்டு தூங்கிய குழந்தை நீதானே.. உன்னுடைய தாய் நான்தானே?’.



‘இல்லை’ ருக்மா தனது சுருள்முடியை அள்ளி முடிந்துகொண்டு தெளிவாய் சொன்னாள். ‘இல்லை. என்னுடைய தாய் பூமிதேவிதான்’.



அவள் அவசரமாக எழுந்து தன் சிவப்பு நிற பாவடையின் சுருக்கங்களை சரி செய்து நடனமாடத் துவங்கினாள். அவள் பாவடையின் அடிப்பாகத்தில் இருந்த வெள்ளி சரிகை, நிலா வெளிச்சத்தில் ஜொலிக்கும் கடலின் அலைகள் போல தெரிந்தது வித்யாவிற்கு. அவள் ஏதோ மிக முக்கியமான ரகசியத்தை நினைவுபடுத்தியதைப் போல புன்னகை செய்து கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் புறாக்களின் படபடக்கும் இறகுகள் போல மாறின. அவளின் கொலுசு குலுங்கிக் கொண்டிருந்தது.



ராம்பாவு மத்தளத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு வாசித்தாள். அதீத தலைவலியைப் போல அந்த மத்தள ஒலி வித்யாவை மிரட்டியது. நிலவின் ஒளி அதிகமாகிக்கொண்டே போனது. பித்தளை தங்கமானதாகவும், மரக்கிளைகளில் மரகதங்கள் தொங்கிக்கொண்டிருப்பது போலவும் அவளுக்கு தோன்றியது.



‘ஓ தாயே, எல்லையம்மா, என்னை காப்பாற்று’ ருக்மா பாடினாள்; ‘என் உடல் தீப்பற்றி எரிகிறது. என் கால்களுக்கு இடையில் இரண்டு கற்களுடைய அடுப்புக்கு தீ வைத்தது யார். என் ரத்தத்தின் கூறுகளில் அணைக்கட்டுகளை நிர்மாணித்தது யார்? ஓ தாயே, எல்லையம்மா, என்னைக் காப்பாற்று’.



தகரத் தகடுகள் கொண்டு செய்யப்பட்ட கதவுகளின் பின்னால் நிறைய நபும்சகங்கள் கருநிழல் போல நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒரு வறட்சி தென்பட்டது. கண்மையினால் கருமையாக்கப்பட்ட கண்களின் மூலம் அவ்வறட்சி உலகை உற்றுப்பார்த்தது. நடனமாடும் அந்த கால்களைச் சுற்றி சிவந்த மண்துகள்கள் படிமங்களாய் உயர்ந்தன. திடீரென மழை பெய்தது. ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் மட்டுமே நீடித்த அந்த மழைக்கு எலியின் சிறுநீர் மணம் இருந்தது போல தோன்றியது வித்யாவிற்கு. அவள் தலை குலுக்கினாள்.



‘சரிதான்... நீ எனது குழந்தை அல்ல... எனது குழந்தை நல்ல வெள்ளை நிறத்தில் இருந்த குழந்தை...’ அவள் சொன்னார்.

‘உன் தோலுக்கு மண்ணின் சிவப்பு நிறமிருக்கிறது. நீ நிச்சயமாய் பூமியின் மகளாய்த்தான் இருப்பாய்.’



மேளச்சத்தம் கனக்கத் துவங்கியதும் வித்யா அந்த காலனியை விட்டு ரயில்நிலையம் நோக்கி நடக்கத் துவங்கியிருந்தாள். அந்த இருட்டிலும் ஸ்டேஷனின் சிவப்பு விளக்குககளை நன்றாகவே அவளால் பார்க்க முடிந்தது. நபும்சகங்களின் மேளச்சத்தம் அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்தது.



(1983)

கார்ட்டூன்களின் மரணம்-கார்ட்டூனிஸ்ட் பாலா

தோராயமாக 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸின் அடர்ந்த வனப்பகுதியிலிருந்த குகை ஒன்றுக்குள் மனிதக்கூட்டம் ஒன்று பதட்டத்தோடு கூடியிருந்தது. அவர்களுக்கு முன் குகையின் சுவரில் ஒருவன்(ள்) கற்களால் எதையோ கிறுக்கி கொண்டிருந்தான்(ள்). அந்த கிறுக்கல் முடிந்திருந்த போது அது ஒரு பயங்கர மிருகத்தின் உருவமாக இருந்தது. தன்னை விரட்டிய ஒரு பயங்கர மிருகத்தைப் பற்றி தன் சகாக்களுக்கு எச்சரிக்கை செய்ய குகையின் சுவரில் முதன் முதலில் கிறுக்கிய அந்த ’மிஸ்டர் எக்ஸ்’ தான் இந்த உலகின் முதல் கார்ட்டூனிஸ்ட். `கார்ட்டூன்களின் அடிப்படையான விசயத்தை எளிமைப்படுத்தி சொல்வது’ என்பதின் மூலமே குகை ஓவியங்கள் தான்.




இந்தியாவுக்குள் நுழைந்த வெள்ளையர்கள் போலவே கார்ட்டூன் கலைவடிவமும் வெளிநாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் உட்பட பலர் இருந்தாலும் பிரிட்டிஷ் கார்ட்டூனிஸ்ட் `டேவிட் லோ’ தான் அரசியல் கார்ட்டூன்களின் தந்தையாக பார்க்கப்படுகிறார். அவரின் கார்ட்டூன்கள் ஹிட்லரை தூங்க விடாமல் செய்தன. டேவிட் லோவை கொலை செய்ய ஹிட்லர் உத்தரவிடும் அளவுக்கு இருந்தன அவரின் கார்ட்டூன்கள். வட இந்திய பத்திரிகைகள் வெளிநாட்டு பத்திரிகைகளில் இருந்த அந்த கார்ட்டூன் வடிவத்தை பயன் படுத்த ஆரம்பித்தன. அப்படித்தான் பாரதியும் தமிழ் இதழியலுக்கு கார்ட்டூனை அறிமுகப்படுத்தினார். ஆனால் சுதந்திரம் வாங்கும் வரை ஒன்று பட்டு வெள்ளையர்களுக்கு எதிராக வீராவேசமாக எழுதிக்கொண்டிருந்த ஊடகங்கள் பிற்பாடு சுதந்திரம் ஜனநாயக மன்னர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டப்பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆனது. அதோடு சேர்ந்து கார்ட்டூன்களும் காணாமல் போனது.



இந்தியாவில் உங்களுக்குத் தெரிந்த கார்ட்டூனிஸ்ட்டுகளின் பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்டால், சங்கர், ஆர்.கே.லக்ஷ்மண் என்று ஆரம்பித்து நீஙகள் சொல்லப்போகும் பெயர்களின் எண்ணிக்கையை பத்து விரல்களுக்குள் அடக்கி விட முடியும். நூற்றிப் பத்துகோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில் கண்ணில் விளக்கெண்ணையை விட்டு எண்ணினால் கூட மொத்த கார்ட்டூனிஸ்ட்டுகளின் எண்ணிக்கை வெறும் 250க்குள் முடிந்து விடும். ஏன் இந்த தொழிலில் மட்டும் இவ்வளவு குறைவானவர்கள் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தால், முடிவில் ஜனநாயக மன்னர்களின் அடாவடி அரசியலும், நான்காவது தூண்களின் களவாணித்தனமும் பல்லிளித்துக் கொண்டிருப்பதைக் காண முடியும்.



இந்தியாவின் நான்காவது தூணாக பத்திரிகைத் துறை வர்ணிக்கப்படுவது என்பதே பயங்கர காமெடியானது. இந்திய ஊடகங்கள் ஒன்றும் பெரிய புரட்சிகரமான சிந்தனையோடு செயல்பட்டதில்லை. இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான சாதி என்ற அசிங்கத்தின் அடிப்படையில், கல்வி அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே சொந்தம் என்று பிரம்மன் எழுதித் தொலைத்துவிட்டதன் அடிப்படையில் கல்வியறிவு பெற்ற அந்த சாதியினர் மட்டுமே ஊடகத்துறைக்குள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இன்று வரை நிலை அது தான். ஊடகத்தின் பலம் என்ன என்பதை நன்கு அறிந்தவர்களும் அவர்கள் மட்டுமே. அதனால் தான் வெள்ளையர்களுக்கு எதிராக தேசப்பற்றுடன் எழுதியவர்கள் சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்கள் பற்றியோ, இந்து மதவெறியர்களால் வேட்டையாடப்படும் சிறுபான்மையினர் குறித்தோ அக்கறை கொண்டு செய்திகள் வெளியிடுவதில்லை.



முன்பெல்லாம் ஒரு பத்திரிகையை தொடங்குபவர்கள் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவராகவும், ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் இருப்பார்கள். அவர்களே ஆசிரியராகவும் முதலாளிகளாகவும் இருப்பது அந்த பத்திரிகையின் வெற்றிக்கு கூடுதல் சிறப்பைத் தந்தது. ஆனால் பிற்பாடு பத்திரிகை ஒரு பிஸினஸ் ஆன பிறகு அது ஒரு கம்பெனி போல் செயல் பட ஆரம்பித்தது. விளைவு பத்திரிகையாளர்களின் பணி என்பது எட்டு மணிநேரம் பணிபுரியும் ஒரு கிளார்க் வேலை போல் மாறியது. எல்லாம் வியாபாரமயமானது. விற்பனையும் விளம்பரமும் மட்டுமே பெரிதாக கவனத்தில் கொள்ளப்பட்டது. நேர்மை என்பது காமெடியானது. சமூக அக்கறை கொண்டவர்கள் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு பதிலாக பத்திரிகையாளனாக மாறினால் காசு பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் பத்திரிகையாளர்களானார்கள். இன்று கிராமப்புறங்களில் பத்திரிகை படிக்கும் சாதாரண ஒரு வாசகரிடம் கேட்டால் கூட, பத்திரிகையில் செய்தி வருவதற்கு நிருபருக்கு `கவர்’ கொடுக்க வேண்டும் என்று கூறுவார். அந்தளவுக்கு பத்திரிகைத் துறை கறை பட்டுப்போனது. பத்திரிகையாளனின் நேர்மை காணாமல் போகும் பட்சத்தில் அந்த பத்திரிகையின் வீரியமும் காணாமல் போகும். அந்த வகையில் ஒரு பத்திரிகையின் வீரியங்களில் ஒன்றான தலையங்கமும், கார்ட்டூன்களும் காணாமல் போகும்.



ஒரு நாளிதழில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான எழுத்துகளுக்கு நடுவில் ஒரு கருப்பு கட்டத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு கோடுகள் ஒரு வாசகனை ஈர்த்து விடக்கூடிய வல்லமைக் கொண்டது. வாசகன் தலையங்கத்தையோ, ஏதாவது ஒரு செய்தியை கூட படிக்கத் தவறலாம். ஆனால் ஒரு கார்ட்டூனை பார்க்காமல் இருக்க மாட்டான். அந்தளவுக்கு பலம்வாய்ந்தது . படிக்காத பாமர மக்களுக்கு கூட எளிதாக அரசியலை புரிய வைக்கக் கூடிய எளிமையான ஊடக வடிவம் அது. பக்கம் பக்கமாக தலையங்கத்தில் எழுதி சொல்லும் விசயத்தை ஒரு நான்கு கோடுகளில் ஒரு கார்ட்டூனிஸ்ட் சொல்லிவிட முடியும். அதனாலயே கார்ட்டூனை அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் உன்னிப்பாக கவனிப்பதுண்டு.



ஒரு பத்திரிகையில் தலையங்கம் மன்னர் என்றால் கார்ட்டூன் என்பது அவருக்கு பக்கபலமாக வரும் தளபதி போன்றது. ஒரு வாசகனுக்கு ஒரு விசயத்தை எளிமைப்படுத்தி சொல்ல வேண்டுமானால் சொல்பவருக்கு குறைந்த பட்ச விசயம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும், காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்தாளருக்கும் எப்படி அரசியல் பார்வை இருக்க வேண்டுமோ அதே போல் ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கும் அரசியல் பார்வை இருக்க வேண்டும். அரசியலையும், அதன் ஒவ்வொரு உள்ளரசியல்களையும் தெரிந்து கொள்ள அவர்கள் தொடர்ச்சியாக படிக்க வேண்டும். சித்தாந்தத் தெளிவு வேண்டும். சித்தாந்தமற்றவர்களால் கார்ட்டூனிஸ்ட்டாக முடியாது. வெறும் ஓவியர்களாகலாம். ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பவன் தான் வரைந்த அந்த கருப்பு கட்டத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் தான் மட்டுமே சொந்தக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் முன்பும் இப்போதும் பெருவாரியாக தமிழக பத்திரிகைகளில் கார்ட்டூனுக்கான ஐடியாக்களை அந்த பத்திரிகைகளின் ஆசிரியரும் ஆசிரியர் குழுவினரும் டிஸ்கஷன் செய்து அதை ஓவியரிடம் சொல்லி வரைந்து கார்ட்டூன் என்ற பெயரில் வெளியிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. தனித்துவமான கார்ட்டூனிஸ்ட்டுகள் தமிழ் இதழியல் சூழலில் அதிகம் வராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.



பிரஷை பிடித்து படம் வரைவதால் கார்ட்டூனிஸ்ட்டும் ஓவியர்களும் ஒன்று என பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் `படம் வரைய தெரிந்த ஒரு பத்தி எழுத்தாளர் தான் கார்ட்டூனிஸ்ட்’. வெறும் பத்தி எழுத்தாளர் எழுத்துகளை பக்கங்களில் நிரப்புகிறார். ஆனால் கார்ட்டூனிஸ்ட் தான் எழுத வேண்டிய எழுத்துகளை கோடுகளாக்கி சொல்ல வேண்டிய விசயத்தை இன்னும் எளிமைப்படுத்துகிறார் என்பதே உண்மை.



கலை மக்களுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய பெருவாரியான ஓவியர்களும், நவீன ஓவியர்களும் கலை கலைக்கானது என்ற பெயரில் ’கான்வாஸ் பிசினஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். கார்ட்டூனிஸ்ட்டுகளையும், இந்த வியாபாரிகளையும் ஓவியர்கள் என்ற ஒரு புள்ளியில் இணைப்பதே அபத்தமானது. மக்கள் பிரச்னையைப் பேசாத ஓவியர்கள் கொண்டாடப்படுவார்கள். விருதுகள் குவியும். ஆனால் கார்ட்டூனிஸ்ட்டுகளின் நிலை அப்படி அல்ல. அவர்கள் மக்கள் பிரச்னையை பேசுவதால் அதிகாரவர்க்கத்தினருக்குப் பிடித்தமானவர்களாக இருப்பதில்லை. எல்லோரையும் விமர்சிப்பதால் யாரும் அவர்களை கொண்டாடுவதுமில்லை. ஓவியங்கள் புரியவில்லை என்றாலும் அலங்காரத்திற்காகவும், வியாபாரத்திற்காகவும் வாங்கி வீட்டில் மாட்டி வைப்பார்கள். ஆனால் கார்ட்டூன்களை யாரும் வாங்க மாட்டார்கள். கலை கலைக்காக என்று கூவும் ஓவியர்களுக்கு, கலை மக்களுக்கானது என்று செயல் படும் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்குமான வித்தியாசம் இது தான்.



கார்ட்டூன்களால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எரிச்சலடைவார்கள். முந்தைய தலைமுறை தலைவர்கள் ஓரளவுக்கு அரசியல் நாகரீகம் கொண்டவர்கள் என்பதால் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. அதுவுமில்லாமல் அப்போது பத்திரிகைகளில் புகைப்படங்கள் வருவது என்பது பெரிய விசயம். அந்தச் சூழலில் கார்ட்டூனிலாவது தனது முகம் வருகிறதே என்ற உள்ளூர மகிழ்ச்சியும் அவர்களுக்கு இருந்திருக்க கூடும் என்பதால் கார்ட்டூன்களில் வெளிப்படும் விமர்சனங்களைத் தங்களுக்கான விளம்பரமாக பாவித்திருக்க கூடும். ஆனால் இப்போது அதிகாரத்திலிருப்பவர்கள் விமர்சனங்களைத் தாங்கக் கூடியவர்கள் அல்ல. உடனே பத்திரிகை அலுவலகத்துக்கு டாடா சுமோக்களை (எவ்வளவு நாட்களுக்குத் தான் ஆட்டோ என்று எழுதுவது) அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஒரு ஜோக்குக்குக் கைது செய்யப்பட்டதெல்லாம் இந்த அடிப்படையில் தான். இந்த மாதிரியான அதிகாரத்தின் மிரட்டல்களினால் ஏற்பட்ட அச்சத்தின் அடிப்படையிலேயே கார்ட்டூன்கள் என்பது ஒரு சம்பிரதாயமான பக்கமாக மாற்றப்பட்டது. அதன் வீரியம் காயடிக்கப்பட்டு மொன்னையாக்கப்பட்டது.



அதனால் தான் இன்று ”எதுக்குங்க வம்பு” என்று பெருவாரியான பத்திரிகைகளில் கார்ட்டூன்கள் வருவதில்லை. அதற்கு பதிலாக ஜோக்குகளை அதிகளவில் வெளியிடுகிறார்கள். (விகடனில் மதன் சாரின் `ஜோக்குகள்’ மட்டும் பிரமாதமாக இருந்ததற்குக் காரணமும் இது தான்.) அப்படியே இருந்தாலும், எங்கள் பத்திரிகையிலும் கார்ட்டூன்கள் வருகிறது என்பதைக் காட்டுவதற்காக போனால் போகிறது என்று ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அதிலும் ஒரு மொக்கையான கார்ட்டூனும் இருக்கும். வெறும் சிரிப்பு தான் கார்ட்டூன் என்று ஒரு தப்பான கற்பிதம் இருக்கிறது. கார்ட்டூனில் ரௌத்ரம் இருக்க வேண்டும். அந்த மாதிரியான கோடுகள் மட்டுமே மக்களை மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக தீப்பந்தங்களைத் தூக்க வைக்கும்.



பத்திரிகையில் எழுத்துத் துறை மட்டுமல்லாது ஓவியத்துறையிலும் ஆதிக்கச்சாதியினரே கொடிகட்டிய நிலை இப்போது கொஞ்சம் மாறி இடைநிலை சாதியினரும் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்களின் சிந்தனை ஆதிக்கச்சாதியின் சிந்தனையை ஒத்ததாகவே இருக்கிறது. அதே போல் பத்திரிகையின் தலைமைப் பொறுப்பு என்பது எப்போதும் ஆதிக்கச்சாதியினர் வசமே இருந்து வருகிறது. இவையெல்லாம் ஒரு நேர்மையான ஊடகங்கள் உருவாவதற்கான தடைக்கற்கள்.



ஆர்.கே.லக்ஷ்மனைத் தவிர்த்து இந்திய கார்ட்டூன் வரலாறை எழுத முடியாது. அவரது பொது ஜனத்திற்குப் பூனாவில் சிலை வைத்திருப்பது என்பது மட்டுமே இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட்டுக்குக் கிடைத்த அதிகபட்ச கவுரவம். அதுவும் கூட அவர் ஆங்கில ஊடகத்தில் இருந்ததால் மட்டுமே சாத்தியமானது. தன்னுடன் சக கார்ட்டூனிஸ்ட்டாகக் கார்ட்டூன் வரைந்து கொண்டிருந்த பால்தாக்ரேவை லக்ஷ்மன் கார்ட்டூன் வரைந்து கடுப்பேற்றியிருக்கிறார் என்பதே சுவராஸ்யமானது.



அவர் போட்ட ஒரு பாக்கெட் கார்ட்டூன் தான் இன்று பாரத ரத்னாவுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும் சச்சினை சிக்கலில் மாட்டிவிட்டது. இப்படி லக்ஷ்மன் கார்ட்டூனுக்கானப் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். புதிய கார்ட்டூனிஸ்ட்டுகள் யாரும் லக்ஷ்மன் பாதிப்பில்லாமல் வரமுடியாது. ஆனால் பிற்பாடு தங்களுக்கான ஒரு தனித்தன்மையை உருவாக்குவதில் தான் ஒரு கார்ட்டூனிஸ்ட் முழுமையடைய முடியும்.



தமிழகத்தில் எனது சீனியர்கள் மதன், மதி உள்ளிட்டோரின் கார்ட்டூன்கள் ரசிக்கக் கூடியவைகளாக இருந்தாலும், தமிழகத்தில் கார்ட்டூன் போராளி என்று ஒருவரை குறிப்பிட வேண்டும் என்றால் அது நிச்சயமாக `கார்ட்டூனிஸ்ட் உதயன்’ மட்டுமே. அவரது கோடுகள் சமரசமற்று எல்லோரையும் விமர்சித்தன. அவரின் கோடுகள் அழகற்றவையாக சிலருக்கு தோன்றலாம். ஆனால் அழுத்தமானவை, வீரியமானவை. மக்களுக்கானவை. உதயனின் அகால மறைவு என்பது தமிழ் பத்திரிகை உலகத்திற்குப் பெரும் இழப்பு. அவர் இன்றிருந்திருந்தால் என்னைப்போன்ற ஜூனியர்களுக்குப் பெரும் உற்சாகமாக இருந்திருக்கும்.



கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கான மாநிலம் என கேரளாவைச் சொல்லலாம். புதிய தலைமுறையும் பழைய தலைமுறையும் அவ்வளவு ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். இந்தியா முழுக்க ஆங்கில இதழ்களில் அந்த மாநில பத்திரிகையாளர்கள் போலவே கார்ட்டூனிஸ்ட்டுகளும் பரவலாக பரவிக்கிடக்கிறார்கள்.



கார்ட்டூன்களின் நிலை இந்தியாவின் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மிக மோசமாக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணமாக அரசியல்வாதிகள் கட்சி தொடங்கிய கையுடன் ஒரு பத்திரிகையும் டிவி சேனலையும் ஆரம்பித்து விடுவது, அல்லது பத்திரிகைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவது. அப்புறம் எங்கிருந்து பத்திரிகையாளர்கள் உருப்படுவது? அரசியல்வாதிகள் ஆரம்பிக்கும் பத்திரிகையில் எப்படி ஒரு நேர்மையான கார்ட்டூனிஸ்ட்டுக்கு வேலை கிடைக்கும்? தமிழகத்தில் தினமணியைத் தவிர்த்து தலையங்கமும், கார்ட்டூனும் வெளிவரும் நாளிதழ் வேறு எதுவும் இல்லை.



தமிழகத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கான பத்திரிகையாக மாறிக்கொள்ளும், எவரைக்கண்டும் பயப்பட வேண்டிய அவசியமில்லாத, பெரும்பான்மையான மக்கள் படிக்கும் தினத்தந்தியில் கார்ட்டூன் வராமலிருப்பதே கார்ட்டூன்களைக் கண்டு அதிகாரத்திலிருப்பவர்கள் எவ்வளவு எரிச்சலடைகிறார்கள் என்பதற்கு உதாரணம். முன்பு கருத்துப்படம் என்று போட்டுக்கொண்டிருந்தார்கள். வெறும் செய்திகளை சொல்லும் ஓவியமாக அதைப் பார்க்கலாமே தவிர அது கார்ட்டூனாகாது. கார்ட்டூன்களில் செய்தியைத் தாண்டிய விமர்சனம் இருக்க வேண்டும்.



ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் கோடுகள் என்பது ஒரு வரலாற்றின் பதிவுகளாகும். கார்ட்டூன் வரைவது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. படிப்பறிவற்ற ஓவியத்தொடர்பு அற்ற ஒரு குடும்பத்திலிருந்து வெளிவந்த முதல் தலைமுறையான நானே கார்ட்டூனிஸ்ட் ஆகும் போது மற்றவர்கள் ஆக முடியாதா என்ன?



பத்திரிகைகளின் அழிவிலிருந்தே கார்ட்டூன்களின் அழிவும் தொடங்குகிறது என்பதால் அடுத்த தலைமுறையினருக்குக் கார்ட்டூன்களைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்த பெயரை எடுக்க வேண்டுமா என்று யோசிக்கிற நிலையில் தான் இன்றைய கார்ட்டூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். ஏதோவொரு கார்ட்டூனிஸிட்டுகளின் மரணம் போலன்று கார்ட்டூன்களின் மரணம். அது வரலாற்றின் கருத்துச் சுதந்திரத்திற்கான மரணமாக பார்க்கப்படவேண்டும்.