05 மார்ச், 2012

கார்ட்டூன்களின் மரணம்-கார்ட்டூனிஸ்ட் பாலா

தோராயமாக 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸின் அடர்ந்த வனப்பகுதியிலிருந்த குகை ஒன்றுக்குள் மனிதக்கூட்டம் ஒன்று பதட்டத்தோடு கூடியிருந்தது. அவர்களுக்கு முன் குகையின் சுவரில் ஒருவன்(ள்) கற்களால் எதையோ கிறுக்கி கொண்டிருந்தான்(ள்). அந்த கிறுக்கல் முடிந்திருந்த போது அது ஒரு பயங்கர மிருகத்தின் உருவமாக இருந்தது. தன்னை விரட்டிய ஒரு பயங்கர மிருகத்தைப் பற்றி தன் சகாக்களுக்கு எச்சரிக்கை செய்ய குகையின் சுவரில் முதன் முதலில் கிறுக்கிய அந்த ’மிஸ்டர் எக்ஸ்’ தான் இந்த உலகின் முதல் கார்ட்டூனிஸ்ட். `கார்ட்டூன்களின் அடிப்படையான விசயத்தை எளிமைப்படுத்தி சொல்வது’ என்பதின் மூலமே குகை ஓவியங்கள் தான்.




இந்தியாவுக்குள் நுழைந்த வெள்ளையர்கள் போலவே கார்ட்டூன் கலைவடிவமும் வெளிநாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் உட்பட பலர் இருந்தாலும் பிரிட்டிஷ் கார்ட்டூனிஸ்ட் `டேவிட் லோ’ தான் அரசியல் கார்ட்டூன்களின் தந்தையாக பார்க்கப்படுகிறார். அவரின் கார்ட்டூன்கள் ஹிட்லரை தூங்க விடாமல் செய்தன. டேவிட் லோவை கொலை செய்ய ஹிட்லர் உத்தரவிடும் அளவுக்கு இருந்தன அவரின் கார்ட்டூன்கள். வட இந்திய பத்திரிகைகள் வெளிநாட்டு பத்திரிகைகளில் இருந்த அந்த கார்ட்டூன் வடிவத்தை பயன் படுத்த ஆரம்பித்தன. அப்படித்தான் பாரதியும் தமிழ் இதழியலுக்கு கார்ட்டூனை அறிமுகப்படுத்தினார். ஆனால் சுதந்திரம் வாங்கும் வரை ஒன்று பட்டு வெள்ளையர்களுக்கு எதிராக வீராவேசமாக எழுதிக்கொண்டிருந்த ஊடகங்கள் பிற்பாடு சுதந்திரம் ஜனநாயக மன்னர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டப்பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆனது. அதோடு சேர்ந்து கார்ட்டூன்களும் காணாமல் போனது.



இந்தியாவில் உங்களுக்குத் தெரிந்த கார்ட்டூனிஸ்ட்டுகளின் பெயர்களை சொல்லுங்கள் என்று கேட்டால், சங்கர், ஆர்.கே.லக்ஷ்மண் என்று ஆரம்பித்து நீஙகள் சொல்லப்போகும் பெயர்களின் எண்ணிக்கையை பத்து விரல்களுக்குள் அடக்கி விட முடியும். நூற்றிப் பத்துகோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில் கண்ணில் விளக்கெண்ணையை விட்டு எண்ணினால் கூட மொத்த கார்ட்டூனிஸ்ட்டுகளின் எண்ணிக்கை வெறும் 250க்குள் முடிந்து விடும். ஏன் இந்த தொழிலில் மட்டும் இவ்வளவு குறைவானவர்கள் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தால், முடிவில் ஜனநாயக மன்னர்களின் அடாவடி அரசியலும், நான்காவது தூண்களின் களவாணித்தனமும் பல்லிளித்துக் கொண்டிருப்பதைக் காண முடியும்.



இந்தியாவின் நான்காவது தூணாக பத்திரிகைத் துறை வர்ணிக்கப்படுவது என்பதே பயங்கர காமெடியானது. இந்திய ஊடகங்கள் ஒன்றும் பெரிய புரட்சிகரமான சிந்தனையோடு செயல்பட்டதில்லை. இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான சாதி என்ற அசிங்கத்தின் அடிப்படையில், கல்வி அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே சொந்தம் என்று பிரம்மன் எழுதித் தொலைத்துவிட்டதன் அடிப்படையில் கல்வியறிவு பெற்ற அந்த சாதியினர் மட்டுமே ஊடகத்துறைக்குள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இன்று வரை நிலை அது தான். ஊடகத்தின் பலம் என்ன என்பதை நன்கு அறிந்தவர்களும் அவர்கள் மட்டுமே. அதனால் தான் வெள்ளையர்களுக்கு எதிராக தேசப்பற்றுடன் எழுதியவர்கள் சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்கள் பற்றியோ, இந்து மதவெறியர்களால் வேட்டையாடப்படும் சிறுபான்மையினர் குறித்தோ அக்கறை கொண்டு செய்திகள் வெளியிடுவதில்லை.



முன்பெல்லாம் ஒரு பத்திரிகையை தொடங்குபவர்கள் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டவராகவும், ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் இருப்பார்கள். அவர்களே ஆசிரியராகவும் முதலாளிகளாகவும் இருப்பது அந்த பத்திரிகையின் வெற்றிக்கு கூடுதல் சிறப்பைத் தந்தது. ஆனால் பிற்பாடு பத்திரிகை ஒரு பிஸினஸ் ஆன பிறகு அது ஒரு கம்பெனி போல் செயல் பட ஆரம்பித்தது. விளைவு பத்திரிகையாளர்களின் பணி என்பது எட்டு மணிநேரம் பணிபுரியும் ஒரு கிளார்க் வேலை போல் மாறியது. எல்லாம் வியாபாரமயமானது. விற்பனையும் விளம்பரமும் மட்டுமே பெரிதாக கவனத்தில் கொள்ளப்பட்டது. நேர்மை என்பது காமெடியானது. சமூக அக்கறை கொண்டவர்கள் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு பதிலாக பத்திரிகையாளனாக மாறினால் காசு பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் பத்திரிகையாளர்களானார்கள். இன்று கிராமப்புறங்களில் பத்திரிகை படிக்கும் சாதாரண ஒரு வாசகரிடம் கேட்டால் கூட, பத்திரிகையில் செய்தி வருவதற்கு நிருபருக்கு `கவர்’ கொடுக்க வேண்டும் என்று கூறுவார். அந்தளவுக்கு பத்திரிகைத் துறை கறை பட்டுப்போனது. பத்திரிகையாளனின் நேர்மை காணாமல் போகும் பட்சத்தில் அந்த பத்திரிகையின் வீரியமும் காணாமல் போகும். அந்த வகையில் ஒரு பத்திரிகையின் வீரியங்களில் ஒன்றான தலையங்கமும், கார்ட்டூன்களும் காணாமல் போகும்.



ஒரு நாளிதழில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான எழுத்துகளுக்கு நடுவில் ஒரு கருப்பு கட்டத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு கோடுகள் ஒரு வாசகனை ஈர்த்து விடக்கூடிய வல்லமைக் கொண்டது. வாசகன் தலையங்கத்தையோ, ஏதாவது ஒரு செய்தியை கூட படிக்கத் தவறலாம். ஆனால் ஒரு கார்ட்டூனை பார்க்காமல் இருக்க மாட்டான். அந்தளவுக்கு பலம்வாய்ந்தது . படிக்காத பாமர மக்களுக்கு கூட எளிதாக அரசியலை புரிய வைக்கக் கூடிய எளிமையான ஊடக வடிவம் அது. பக்கம் பக்கமாக தலையங்கத்தில் எழுதி சொல்லும் விசயத்தை ஒரு நான்கு கோடுகளில் ஒரு கார்ட்டூனிஸ்ட் சொல்லிவிட முடியும். அதனாலயே கார்ட்டூனை அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் உன்னிப்பாக கவனிப்பதுண்டு.



ஒரு பத்திரிகையில் தலையங்கம் மன்னர் என்றால் கார்ட்டூன் என்பது அவருக்கு பக்கபலமாக வரும் தளபதி போன்றது. ஒரு வாசகனுக்கு ஒரு விசயத்தை எளிமைப்படுத்தி சொல்ல வேண்டுமானால் சொல்பவருக்கு குறைந்த பட்ச விசயம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும், காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்தாளருக்கும் எப்படி அரசியல் பார்வை இருக்க வேண்டுமோ அதே போல் ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கும் அரசியல் பார்வை இருக்க வேண்டும். அரசியலையும், அதன் ஒவ்வொரு உள்ளரசியல்களையும் தெரிந்து கொள்ள அவர்கள் தொடர்ச்சியாக படிக்க வேண்டும். சித்தாந்தத் தெளிவு வேண்டும். சித்தாந்தமற்றவர்களால் கார்ட்டூனிஸ்ட்டாக முடியாது. வெறும் ஓவியர்களாகலாம். ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பவன் தான் வரைந்த அந்த கருப்பு கட்டத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் தான் மட்டுமே சொந்தக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் முன்பும் இப்போதும் பெருவாரியாக தமிழக பத்திரிகைகளில் கார்ட்டூனுக்கான ஐடியாக்களை அந்த பத்திரிகைகளின் ஆசிரியரும் ஆசிரியர் குழுவினரும் டிஸ்கஷன் செய்து அதை ஓவியரிடம் சொல்லி வரைந்து கார்ட்டூன் என்ற பெயரில் வெளியிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. தனித்துவமான கார்ட்டூனிஸ்ட்டுகள் தமிழ் இதழியல் சூழலில் அதிகம் வராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.



பிரஷை பிடித்து படம் வரைவதால் கார்ட்டூனிஸ்ட்டும் ஓவியர்களும் ஒன்று என பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் `படம் வரைய தெரிந்த ஒரு பத்தி எழுத்தாளர் தான் கார்ட்டூனிஸ்ட்’. வெறும் பத்தி எழுத்தாளர் எழுத்துகளை பக்கங்களில் நிரப்புகிறார். ஆனால் கார்ட்டூனிஸ்ட் தான் எழுத வேண்டிய எழுத்துகளை கோடுகளாக்கி சொல்ல வேண்டிய விசயத்தை இன்னும் எளிமைப்படுத்துகிறார் என்பதே உண்மை.



கலை மக்களுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய பெருவாரியான ஓவியர்களும், நவீன ஓவியர்களும் கலை கலைக்கானது என்ற பெயரில் ’கான்வாஸ் பிசினஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். கார்ட்டூனிஸ்ட்டுகளையும், இந்த வியாபாரிகளையும் ஓவியர்கள் என்ற ஒரு புள்ளியில் இணைப்பதே அபத்தமானது. மக்கள் பிரச்னையைப் பேசாத ஓவியர்கள் கொண்டாடப்படுவார்கள். விருதுகள் குவியும். ஆனால் கார்ட்டூனிஸ்ட்டுகளின் நிலை அப்படி அல்ல. அவர்கள் மக்கள் பிரச்னையை பேசுவதால் அதிகாரவர்க்கத்தினருக்குப் பிடித்தமானவர்களாக இருப்பதில்லை. எல்லோரையும் விமர்சிப்பதால் யாரும் அவர்களை கொண்டாடுவதுமில்லை. ஓவியங்கள் புரியவில்லை என்றாலும் அலங்காரத்திற்காகவும், வியாபாரத்திற்காகவும் வாங்கி வீட்டில் மாட்டி வைப்பார்கள். ஆனால் கார்ட்டூன்களை யாரும் வாங்க மாட்டார்கள். கலை கலைக்காக என்று கூவும் ஓவியர்களுக்கு, கலை மக்களுக்கானது என்று செயல் படும் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்குமான வித்தியாசம் இது தான்.



கார்ட்டூன்களால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எரிச்சலடைவார்கள். முந்தைய தலைமுறை தலைவர்கள் ஓரளவுக்கு அரசியல் நாகரீகம் கொண்டவர்கள் என்பதால் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. அதுவுமில்லாமல் அப்போது பத்திரிகைகளில் புகைப்படங்கள் வருவது என்பது பெரிய விசயம். அந்தச் சூழலில் கார்ட்டூனிலாவது தனது முகம் வருகிறதே என்ற உள்ளூர மகிழ்ச்சியும் அவர்களுக்கு இருந்திருக்க கூடும் என்பதால் கார்ட்டூன்களில் வெளிப்படும் விமர்சனங்களைத் தங்களுக்கான விளம்பரமாக பாவித்திருக்க கூடும். ஆனால் இப்போது அதிகாரத்திலிருப்பவர்கள் விமர்சனங்களைத் தாங்கக் கூடியவர்கள் அல்ல. உடனே பத்திரிகை அலுவலகத்துக்கு டாடா சுமோக்களை (எவ்வளவு நாட்களுக்குத் தான் ஆட்டோ என்று எழுதுவது) அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஒரு ஜோக்குக்குக் கைது செய்யப்பட்டதெல்லாம் இந்த அடிப்படையில் தான். இந்த மாதிரியான அதிகாரத்தின் மிரட்டல்களினால் ஏற்பட்ட அச்சத்தின் அடிப்படையிலேயே கார்ட்டூன்கள் என்பது ஒரு சம்பிரதாயமான பக்கமாக மாற்றப்பட்டது. அதன் வீரியம் காயடிக்கப்பட்டு மொன்னையாக்கப்பட்டது.



அதனால் தான் இன்று ”எதுக்குங்க வம்பு” என்று பெருவாரியான பத்திரிகைகளில் கார்ட்டூன்கள் வருவதில்லை. அதற்கு பதிலாக ஜோக்குகளை அதிகளவில் வெளியிடுகிறார்கள். (விகடனில் மதன் சாரின் `ஜோக்குகள்’ மட்டும் பிரமாதமாக இருந்ததற்குக் காரணமும் இது தான்.) அப்படியே இருந்தாலும், எங்கள் பத்திரிகையிலும் கார்ட்டூன்கள் வருகிறது என்பதைக் காட்டுவதற்காக போனால் போகிறது என்று ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அதிலும் ஒரு மொக்கையான கார்ட்டூனும் இருக்கும். வெறும் சிரிப்பு தான் கார்ட்டூன் என்று ஒரு தப்பான கற்பிதம் இருக்கிறது. கார்ட்டூனில் ரௌத்ரம் இருக்க வேண்டும். அந்த மாதிரியான கோடுகள் மட்டுமே மக்களை மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக தீப்பந்தங்களைத் தூக்க வைக்கும்.



பத்திரிகையில் எழுத்துத் துறை மட்டுமல்லாது ஓவியத்துறையிலும் ஆதிக்கச்சாதியினரே கொடிகட்டிய நிலை இப்போது கொஞ்சம் மாறி இடைநிலை சாதியினரும் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்களின் சிந்தனை ஆதிக்கச்சாதியின் சிந்தனையை ஒத்ததாகவே இருக்கிறது. அதே போல் பத்திரிகையின் தலைமைப் பொறுப்பு என்பது எப்போதும் ஆதிக்கச்சாதியினர் வசமே இருந்து வருகிறது. இவையெல்லாம் ஒரு நேர்மையான ஊடகங்கள் உருவாவதற்கான தடைக்கற்கள்.



ஆர்.கே.லக்ஷ்மனைத் தவிர்த்து இந்திய கார்ட்டூன் வரலாறை எழுத முடியாது. அவரது பொது ஜனத்திற்குப் பூனாவில் சிலை வைத்திருப்பது என்பது மட்டுமே இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட்டுக்குக் கிடைத்த அதிகபட்ச கவுரவம். அதுவும் கூட அவர் ஆங்கில ஊடகத்தில் இருந்ததால் மட்டுமே சாத்தியமானது. தன்னுடன் சக கார்ட்டூனிஸ்ட்டாகக் கார்ட்டூன் வரைந்து கொண்டிருந்த பால்தாக்ரேவை லக்ஷ்மன் கார்ட்டூன் வரைந்து கடுப்பேற்றியிருக்கிறார் என்பதே சுவராஸ்யமானது.



அவர் போட்ட ஒரு பாக்கெட் கார்ட்டூன் தான் இன்று பாரத ரத்னாவுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும் சச்சினை சிக்கலில் மாட்டிவிட்டது. இப்படி லக்ஷ்மன் கார்ட்டூனுக்கானப் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். புதிய கார்ட்டூனிஸ்ட்டுகள் யாரும் லக்ஷ்மன் பாதிப்பில்லாமல் வரமுடியாது. ஆனால் பிற்பாடு தங்களுக்கான ஒரு தனித்தன்மையை உருவாக்குவதில் தான் ஒரு கார்ட்டூனிஸ்ட் முழுமையடைய முடியும்.



தமிழகத்தில் எனது சீனியர்கள் மதன், மதி உள்ளிட்டோரின் கார்ட்டூன்கள் ரசிக்கக் கூடியவைகளாக இருந்தாலும், தமிழகத்தில் கார்ட்டூன் போராளி என்று ஒருவரை குறிப்பிட வேண்டும் என்றால் அது நிச்சயமாக `கார்ட்டூனிஸ்ட் உதயன்’ மட்டுமே. அவரது கோடுகள் சமரசமற்று எல்லோரையும் விமர்சித்தன. அவரின் கோடுகள் அழகற்றவையாக சிலருக்கு தோன்றலாம். ஆனால் அழுத்தமானவை, வீரியமானவை. மக்களுக்கானவை. உதயனின் அகால மறைவு என்பது தமிழ் பத்திரிகை உலகத்திற்குப் பெரும் இழப்பு. அவர் இன்றிருந்திருந்தால் என்னைப்போன்ற ஜூனியர்களுக்குப் பெரும் உற்சாகமாக இருந்திருக்கும்.



கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கான மாநிலம் என கேரளாவைச் சொல்லலாம். புதிய தலைமுறையும் பழைய தலைமுறையும் அவ்வளவு ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். இந்தியா முழுக்க ஆங்கில இதழ்களில் அந்த மாநில பத்திரிகையாளர்கள் போலவே கார்ட்டூனிஸ்ட்டுகளும் பரவலாக பரவிக்கிடக்கிறார்கள்.



கார்ட்டூன்களின் நிலை இந்தியாவின் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மிக மோசமாக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணமாக அரசியல்வாதிகள் கட்சி தொடங்கிய கையுடன் ஒரு பத்திரிகையும் டிவி சேனலையும் ஆரம்பித்து விடுவது, அல்லது பத்திரிகைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவது. அப்புறம் எங்கிருந்து பத்திரிகையாளர்கள் உருப்படுவது? அரசியல்வாதிகள் ஆரம்பிக்கும் பத்திரிகையில் எப்படி ஒரு நேர்மையான கார்ட்டூனிஸ்ட்டுக்கு வேலை கிடைக்கும்? தமிழகத்தில் தினமணியைத் தவிர்த்து தலையங்கமும், கார்ட்டூனும் வெளிவரும் நாளிதழ் வேறு எதுவும் இல்லை.



தமிழகத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கான பத்திரிகையாக மாறிக்கொள்ளும், எவரைக்கண்டும் பயப்பட வேண்டிய அவசியமில்லாத, பெரும்பான்மையான மக்கள் படிக்கும் தினத்தந்தியில் கார்ட்டூன் வராமலிருப்பதே கார்ட்டூன்களைக் கண்டு அதிகாரத்திலிருப்பவர்கள் எவ்வளவு எரிச்சலடைகிறார்கள் என்பதற்கு உதாரணம். முன்பு கருத்துப்படம் என்று போட்டுக்கொண்டிருந்தார்கள். வெறும் செய்திகளை சொல்லும் ஓவியமாக அதைப் பார்க்கலாமே தவிர அது கார்ட்டூனாகாது. கார்ட்டூன்களில் செய்தியைத் தாண்டிய விமர்சனம் இருக்க வேண்டும்.



ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் கோடுகள் என்பது ஒரு வரலாற்றின் பதிவுகளாகும். கார்ட்டூன் வரைவது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. படிப்பறிவற்ற ஓவியத்தொடர்பு அற்ற ஒரு குடும்பத்திலிருந்து வெளிவந்த முதல் தலைமுறையான நானே கார்ட்டூனிஸ்ட் ஆகும் போது மற்றவர்கள் ஆக முடியாதா என்ன?



பத்திரிகைகளின் அழிவிலிருந்தே கார்ட்டூன்களின் அழிவும் தொடங்குகிறது என்பதால் அடுத்த தலைமுறையினருக்குக் கார்ட்டூன்களைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்த பெயரை எடுக்க வேண்டுமா என்று யோசிக்கிற நிலையில் தான் இன்றைய கார்ட்டூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். ஏதோவொரு கார்ட்டூனிஸிட்டுகளின் மரணம் போலன்று கார்ட்டூன்களின் மரணம். அது வரலாற்றின் கருத்துச் சுதந்திரத்திற்கான மரணமாக பார்க்கப்படவேண்டும்.



கருத்துகள் இல்லை: