12 அக்டோபர், 2012

அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்

வலிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.

காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.

அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென பிரிகிறேன்; பலமுறை சின்னச் சின்ன விடைபெறல்கள்.

நீலவானத்திற்கு அப்பாலிருந்து வெள்ளி நுரைகளை நான் சட்டென திருடி வந்து, அவனது பொன்மணல் மேல் பரப்பி வைக்கிறேன்.

ஒளிமயமாய் நாங்கள் கூடிக் கலக்கிறோம்.

நான் அவனது தாகத்தைத் தணிக்கிறேன். அவனது இதயத்திற்குள் செல்கிறேன்.

அவன் என் குரலை மென்மையாக்குகிறான்; என் சினத்தை அடக்குகிறான்.

விடியற்காலையில் நான் அவன் காதில் காதலின் விதிகளை ஓதுகிறேன். அவன் ஆசையோடு என்னைத் தழுவிக் கொள்கிறான்.

ஏற்றவற்ற அலைகளின்போது நான் நம்பிக்கையின் பாடல் பாடுகிறேன். அவன் முகத்தின்மேல் இனிய முத்தங்கள் பதிக்கிறேன்.

எனக்கு பயம். எனக்கு வேகம்.

ஆனால் அவன் அமைதி; பொறுமை;சிந்தனை.

அவனது நிம்மதியின்மையை அவனது பரந்த மார்பு அமைதிப்படுத்துகின்றது.

அலையடிக்க நாங்கள் தொட்டுக் கொள்கிறோம். அலை பின்வாங்க நான் அவனது காலடியில் விழுந்து வணங்குகிறேன்.

கடற்கன்னிகளைச் சுற்றி பல முறை நான் நடனமாடியிருக்கிறேன். அவர்கள் என் அடியாழத்திலிருந்து எழுந்து அலை நுனியில் நின்று விண்மீன் பார்ப்பார்கள்.

காதலர்கள் பலமுறை என்னிடம் வந்து முறையிடுவது வழக்கம். நான் அவர்கள் பெருமூச்சு விட உதவுவேன்.

பலமுறை நான் பாறைகளை சீண்டிவிட்டு பார்த்திருக்கிறேன். அவற்றை கிச்சுகிச்சு மூட்டியும் பார்த்திருக்கிறேன். அவை ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.

என்னில் மூழ்கிப் போகிற உயிர்களை மென்மையாய் ஏந்தி கரை சேர்த்திருக்கிறேன்.

கரைக்காதலன் என் வலிமை எடுத்தது போல அவர்களுக்கு வலிமை தந்திருக்கிறான்.

பலமுறை நான் அடியாழத்திலிருந்து வைரமணிகளைத் திருடி வந்து என் காதலனுக்குப் பரிசளித்திருக்கிறேன். அவன் மெளனமாய் அவற்றை ஏற்றான். என்னை அவன் வரவேற்பான் என்று இன்னமும் தந்து கொண்டிருக்கிறேன்.

கனத்த இரவில் எல்லாம் உறங்க நான் அமர்ந்து ஒரு்முறை பாடுகிறேன். ஒரு முறை பெருமூச்சு விடுகிறேன். நான் என்றும் விழித்திருக்கிறேன்.

அந்தோ! உறக்கமின்மை என்னை பலவீனப்படுத்திவிட்டது. என்றாலும் நான் காதலியாயிற்றே? காதலின் உண்மை கனத்தது அல்லவா?

நான் களைத்துப் போனாலும் எனக்கு மரணமில்லை!

கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன்


நான் எப்படி பைத்தியமானேன் என்று கேட்கிறீர்களா?

பல கடவுள்கள் பிறப்பதற்கு, நீண்ட நாட்களுக்கு முன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஒருநாள் எழுந்தபோது, என்னுடைய முகமூடிகள் திருட்டுப் போயிருந்ததைக் கண்டேன். என்னுடைய ஏழு பிறப்புகளில் என்னை அலங்கரித்த ஏழு முகமூடிகள் அவை.

‘திருடர்கள், சபிக்கப்பட்ட திருடர்கள்’ என்று கத்திக்கொண்டே தெருவில் இறங்கி ஓடினேன்.

ஆண்களும், பெண்களும் என்னைக் கண்டு சிரித்தனர். சிலர் என்னைக் கண்டு பயந்து வீட்டுக்குள் ஓடினர்.

நான் கடைவீதியை அடைந்தபோது, கூரையில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன், ‘இதோ ஒரு பைத்தியக்காரன்’ என்று என்னைப் பார்த்துக் கத்தினான். அவன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்தபோது, முகமூடியற்ற என் முகத்தை சூரியன், முதல் முறையாக முத்தமிட்டது. என் ஆன்மா ஆழமான காதலில் விழுந்தது. அதுமுதல் எனக்கு முகமூடிகள் தேவைப்படவில்லை. ஆழ்ந்த அமைதியிலிருந்தபடி, ‘திருடர்கள், ஆசிர்வதிக்கப்பட்ட திருடர்கள்’ என்று அழுதேன்.

இப்படித்தான் நான் பைத்தியமானேன்.

என்னுடைய பைத்தியக்காரத்தனத்தில், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் கண்டுகொண்டேன்; தனிமையின் சுதந்திரம் மற்றும் புரிந்துகொள்ளப் படுவதிலிருந்து பாதுகாப்பு; நம்மைப் புரிந்து கொள்வதன்மூலம், நம்மில் எதையோ அடிமையாக்குபவர்களிடம் இருந்து.

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கர்வப்படாமல் இருக்கட்டும். சிறையிலிருக்கும் திருடன்கூட, இன்னொரு திருடனிடமிருந்து பாதுகாப்பாகவே இருக்கிறான்.
*
சூரிய உதயத்தின்போது ஒரு நரி தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக் கொண்டது, ‘இன்று உணவாக ஒரு ஒட்டகத்தை சாப்பிடுவேன்’.

பிறகு, பகல் முழுவதும் ஒட்டகத்தைத் தேடி அலைந்தது.

மதியத்தில் தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக்கொண்டது, ‘ஒரு எலியே போதும்’.
*

நேற்று இரவு ஒரு புதிய சந்தோஷத்தைக் கண்டுபிடித்தேன். அதை முயன்றுகொண்டிருந்தபோது, ஒரு தேவனும், அசுரனும் வேகமாக வந்தார்கள். என் வீட்டுக் கதவருகே சந்தித்துக் கொண்ட அவர்கள், என்னுடைய சந்தோஷத்தைக் கண்டு, சண்டையிடத் தொடங்கினார்கள்; ‘அது மிகவும் புனிதமானது’, ‘இல்லை அது பாவச் செயல்’ என்று.

*

கலீல் ஜிப்ரான் கவிதைகள்.

○ நீ இறக்கும் வரையில் உன் மதிப்பை எங்களால் புரிந்துகொள்ள முடியாது என்று 


ஒரு கவிஞனிடம் கூறினேன்… அதற்கு அவன்,

“ஆம்…. மரணம் உண்மையை உரைக்கக் கூடியது. அப்போது, நான் சொன்னதைவிட செய்தது அதிகம் என்றும், செய்ததைவிட செய்யவிரும்பியது அதிகம் என்றும் தெரியவரும் என்றான்.


○ நினைவு கூர்தலும் ஒருவகை சந்திப்புதான்.


○ மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை… 
அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது..!


○ நான் பேசுவதில் பாதி அர்த்தமற்றவை….
நான் அப்படிப் பேசுவதற்குக் காரணம்….
“மீதிப் பாதியாவது உங்களைச் சென்று அடையவேண்டும்..! என்ற ஆதங்கத்தில் தான்.

○ நேற்றைகளின் கடன்களை அடைக்க நாளைகளிடம் நாம் கடன் வாங்குகிறோம்!

கடவுள் - கலீல் ஜிப்ரான்

ஆதியில், முதல் வார்த்தையின் சுவடு என் உதடுகளை அடைந்தபோது, நான் புனிதமான மலையில் ஏறி கடவுளைப் பார்த்து சொன்னேன் ‘கடவுளே, நான் உங்களின் அடிமை. தங்களின் விருப்பமே என்னுடைய விதி, நான் உங்களிடம் இன்னும் அதிகப் பணிவுடன் இருப்பேன்’.

அவர் எதுவும் பேசாமல், ஒரு புயலைப் போல வேகமாக அங்கிருந்து மறைந்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மலைக்குச் சென்று கடவுளிடம் பேசினேன். ‘என்னை உருவாக்கியவரே, நான் உங்கள் படைப்பு. ஒரு களிமண்ணிலிருந்து என்னைப் படைத்தீர்கள், நான் என்னுடைய எல்லாவற்றின் மூலமும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்’’.

அவர் எதுவும் பேசாமல், ஓராயிரம் சிறகுகள் கொண்டு பறப்பதைப் போல, அங்கிருந்து சென்றார்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புனித மலையில் ஏறி அவரிடம் சொன்னேன். ‘கடவுளே, நான் உங்கள் குழந்தை. அன்பினாலும், கருணையினாலும் நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தீர்கள். அன்பினாலும், பிரார்த்தனையினாலும் உங்கள் ராஜாங்கத்தை அடைவேன்’.

அவர் எதுவும் பேசவில்லை, தூரத்து மலையைப் பனி சூழ்வதைப்போல மெல்ல என்னைவிட்டு நகர்ந்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மலைக்குச் சென்று கடவுளிடம் சொன்னேன். ‘கடவுளே, என்னுடைய இலட்சியமே, நிறைவே! நானே உங்கள் இறந்தகாலம், நீங்களே என் எதிர்காலம். பூமிக்குள்ளிருக்கும் உங்கள் வேர் நான், வானத்திலிருக்கும் என்னுடைய மலர் நீங்கள். சூரியனுக்கு முன் நாம் இருவரும் சேர்ந்து வளர்வோம்’.

கடவுள் என்னை நோக்கிக் குனிந்து இனிமையான வார்த்தைகளை என் காதில் சொன்னார். சொல்லும்போதே நதியை அணைத்துத் தன்னுள்ளே ஓட விடும் கடலைப்போல, என்னை அணைத்துக் கொண்டார்.

நான், மலையிலிருந்து இறங்கி சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும்  அடைந்தபோது, கடவுளையும் அங்கு கண்டேன்.

- கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன் என்ற நூலிலிருந்து

25 செப்டம்பர், 2012

“The Appeasement of Radhika”

தஞ்சை மாவட்டம் நாகேஸ்வரத்தில் ஒரு தேவதாசிக் குடும்பத்தில் பிறந்த முத்துப்பழ‌னி என்ற‌ பெண் க‌விஞ‌ர்.தெலுங்கில் எழுதிய‌வ‌ர்.காம‌த்தின் ஆண்கள் பார்வையில் மேல்நோக்கிய‌ பார்வையில் வெளிவந்த 12ஆம் நூற்றாண்டில் ஜெயதேவர் இயற்றிய “கீதகோவிந்தத்தைத்” தழுவி தெலுங்கில் “ராதிகா சாந்தவனத்தை” வேறு கோணத்தில் இயற்றினார். ஆங்கிலேய‌ர‌ ஆட்ச
ியில் த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌ நூல். தெலுங்கிலிருந்து ஆங்கில‌‌த்தில் மொழிபெய‌ர்ப்பின் நூல் பெய‌ர் “The Appeasement of Radhika” (Penguin Publications).
இதிலும் இத‌ழ் சுவை உண்டு. ஆனால் கவனிக்கவேண்டியது பெண்ணின் பார்வையில் க‌ண்ண‌னின் இத‌ழ் முறைய‌ற்ற‌ பாலிய‌ல் தொட‌ர்பில். (Incest).
ராதை க‌ண்ண‌னுக்கு அத்தை முறை.ராதை க‌ண்ண்னை நினைத்து வேட்கையின் வார்த்தை வெளிவ‌ருகிற‌து முத்துப்ப‌ழ‌னியின் பிர‌தியில்

“உன் உதடுகளால் என் உதடுகளை ரொம்ப அழுத்தாதே

வலிக்கிறது” என்பேன்

அவன் இன்னும் இன்னும் அழுத்துவான்

“என் கூந்தலை இழுக்காதே நமது ரகசியம் வெளிப்பட்டுவிடும்”

கூந்தலை மேலும் இழுத்து எரிச்சலூட்டுவான்

“முலைகளை அழுத்தாதே வெட்கமாக இருக்கிறது”……

ஓ..சொல்ல மறந்து விட்டேன்..இக்க‌ட்டுரையை எழுதிய‌வர் மீனா.. (Cimi Meena) தமிழின் இள‌ம் ப‌டைப்பாளி பெண்ணிய‌வாதி, க‌விஞ்ர். திருவ‌ண்ணாம‌லையில் ஆசிரிய‌யாக‌ பணியாற்றுகிறார். அபார‌மாக‌ எழுதியுள்ளார். மூல‌நூல் என‌க்கு கிடைக்க‌வில்லையால் மொழியாக்க‌த்தை ச‌ரிபார்க்க‌முடிய‌வில்லை. ஆனால் முக்கிய‌ அரிய‌/ஆளுமையையும்/வேறு கோண‌த்தையும் த‌மிழுக்கு அறிமுகப்ப‌டுத்தியுள்ளார். ஹென்றி மில்லர் வாசிப்பனுவம் எனக்கு கிட்டியது.
வாசிக்க‌லாம் மீனாவின் க‌ட்டுரையை ….
———————————————-

ராதிகா சாந்தவனம் : பெண்ணுடலும் பாலியல் வேட்கையும் – முத்துப்பழனி ஒரு முன்மாதிரி —மீனா

தஞ்சை மாவட்டம் நாகேஸ்வரத்தில் ஒரு தேவதாசிக் குடும்பத்தில் பிறந்த முத்துப்பழனியால் இயற்றப்பட்டது, புகழ்பெற்ற சிருங்காரக் காப்பியமான “ராதிகா சாந்தவனம்”. 12ஆம் நூற்றாண்டில் ஜெயதேவர் இயற்றிய “கீதகோவிந்தத்தைத்” தழுவி தெலுங்கில் “ராதிகா சாந்தவனத்தை” அவர் இயற்றினார். ஆனால் கண்ணனின் காதலையும் ராஸலீலைகளையும் முக்கியத்துவப்படுத்திய ‘கீதகோவிந்தம்’ முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனத்தில்” தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. உண்மையில் ‘கீதகோவிந்தம்’ மட்டுமல்ல, காலங்காலமாய் கட்டமைக்கப்பட்டுவந்த ஆணாதிக்கப் பாலியல் மையவாதங்கள் அனைத்துமே தலைகீழாய்ப் புரட்டிப்
போடப்பட்டன ,சுக்குநூறாய் உடைக்கப்பட்டன.
ஆணுடலை முதன்மைப்படுத்திய ஜெயதேவருக்கும் பெண்ணுடலை முதன்மைப்படுத்திய முத்துப்பழனிக்குமான இந்த வேறுபாடு ஒரு ஆண் மொழிக்கும் பெண் மொழிக்குமான வேறுபாடு மட்டுமன்று. ஒரு ஆண் மொழிக்கும் தேவதாசியின் மொழிக்குமான வேறுபாடும்கூட. சங்க இலக்கியங்கள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என நமது பெண்கவிகளின் பாலியல் வெளிப்பாடுகள் பல நூறாண்டுகளுக்கு முன்பே இலக்கியத் தோற்றம் கண்டிருக்கின்றன என்றாலும் அவற்றின் மொழிக்கு ஒரு வரம்பு இருந்தது ; அவர்களின் தாபத்திற்கு வகுக்கப்பட்ட ஒரு வரையறை இருந்தது. ஆனால் – நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டிருந்தாலும் – கல்வி, சொத்துரிமை ஆகியவற்றினூடாய் ஓரளவு பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற்றிருந்த தேவதாசிப் பாரம்பரியம் ஒப்பீட்டளவில் விடுதலை பெற்றிருந்தது. அந்த அடிப்படையில்தான் முத்துப்பழனியின் இந்தக்காதல் காவியம் தனக்கு முந்தைய பெண்கவிகள் எல்லாம் எட்டமுடியாத எல்லையைத் தொட்டுப்பார்த்தது.
“ராதிகா சாந்தவனத்தின்” கதைப்போக்கு, கண்ணன் – ராதை குறித்து வெகுமக்களிடம் படிந்துபோயிருக்கிற பிம்பங்களுக்கு முற்றிலும் நேரெதிரானது. கண்ணன் – ராதைக்கு இடையிலான உறவு என்பது கலாச்சாரசமூகம் அங்கீகரிக்கக்கூடிய – அனுமதிக்கக்கூடிய முறையான திருமண உறவு அன்று ; அது புனிதக்கட்டிற்குள் அடங்கமறுக்கும் இச்சைகளின் உறவு ; கலாச்சாரத்தைக் கொட்டிக் கவிழ்த்த காதலின் பிணைப்பு ; பொதுப்புத்தியின் மொழியில் சொல்வதானால் அது ஒரு “கள்ளத்தொடர்பு”. முறையற்ற (incestuous) தொடர்பும் கூட. ராதை ஏற்கனவே திருமணமானவள். கண்ணனைவிட வயதில் மூத்தவள். கண்ணனைத் தூக்கி எடுத்து வளர்த்தவள். எல்லாவற்றிற்கும் மேலாக, - கண்ணனின் வளர்ப்புத் தந்தை – நந்தகோபனுக்குத் தங்கை ; கண்ணனுக்கு அத்தை முறை. நமது இலக்கியங்கள், மரபு, மதம் ஆகியவற்றில் இத்தகைய முறையற்ற பாலியல் உறவுகளுக்கு ஒரு இடம் இருந்தது கவனிக்கத்தக்கது.
இந்த மரபை இழைபிரித்துக் காட்டுகிற வகையிலும் ஒரு முன்னோடி இலக்கியமாக “ராதிகா சாந்தவனம்” தன்னை நிறுவிக்கொள்கிறது. ஆணாதிக்கச் சமூகத்தின் இலக்கணம், கற்பு, ஒழுக்கவாதம் எல்லாவற்றையும் அத்துமீறிய இந்தக் காதலையும் அச்சம், மடம், நாணங்களை உதறித்தள்ளிய பெண்ணுடலையும் படைத்துக்காட்டிய முத்துப்பழனியின் ‘வன்மை’ உள்ளபடியே வியக்கத்தக்கது. பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தக் காவியத்தின் கவிதை வெளிப்பாடும், சொற்செட்டும் பாலியல் விவரணைகளும் – இன்றைய பெண்ணிய உடல்மொழிகளுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழும் பாங்கை அவசியம் படித்தறிய வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்மனின் அரசவை நர்த்தகியாக இருந்த முத்துப்பழனி இயற்றிய இக்காவியத்தை தேவதாசி மரபில் உதித்த இன்னொரு அறிஞரும் கலைஞருமான புட்டலஷ்மி நாகரத்தினம்மாள் 1911 இல் முழுமையாக மறுபதிப்புச் செய்தார். அன்றைய தேசியவாதியும் தெலுங்கின் பெருங்கவியுமான கந்துகூரி வீரேசலிங்கம் போன்றோர் அச்செம்பதிப்பைக் கடுமையாக எதிர்த்ததும், அதன் பொருட்டு அன்றைய ஆங்கில அரசு அந்நூலுக்குத் தடை விதித்ததுமான வரலாறு ஏற்கனவே பலராலும் சொல்லப்பட்டுள்ளது.
வாவில்லா ராமசாமி சாஸ்திரலுவின் பதிப்பகத்தின் மூலம் ஆறணா விலையில் வெளியிடப்பட்ட (1911) இப்புத்தகத்தைப் பற்றி, தெலுங்கு இலக்கிய இதழான ‘சசிலேகா’ இவ்வாறு விமர்சித்தது : “ ஒரு விபச்சாரி இயற்றிய நூலை இன்னொரு விபச்சாரி வெளியிடுகிறாள்”.ஆனால் இத்தகைய எதிர்ப்புகளுக்கு மாறாக இந்நூலுக்கான ஆதரவும் இலக்கியவாதிகளிடம் இருந்து வெளிப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்பு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த – ஆந்திர கேசரி என்று பரவலாக அழைக்கப்பட்ட – தங்குதுரி பிரகாசம் அவர்கள் இந்நூலின் மீதான தடையை நீக்கினார். தடையை நீக்கிய பின்பு அவர் பெருமிதத்தோடு சொன்னார் : “தெலுங்கு இலக்கியத்தின் அணிகலனில் சில முத்துக்களை மீண்டும் பதித்திருக்கிறேன்”.
நான்கு பெரும் பிரிவுகளின் கீழ் 584 பாடல்களாகத் தெலுங்கில் இயற்றப்பட்ட “ராதிகா சாந்தவனம்” தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Appeasement of Radhika” என்னும் நூலாக வெளிவந்திருக்கிறது. சந்தியா முல்சந்தானி மொழிபெயர்த்த இந்நூலை ‘Penguin Books’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. (விலை. 250).
மங்கல வாழ்த்து, நூல் எழுந்த வரலாறு, புரவலர் புகழ்ச்சி, கவிஞரின் குலப்பெருமை என வழமையான இலக்கிய மரபோடு எழுதப்பட்ட இந்நூல், மகரிஷி சுகமுனி, ஜனக மன்னனுக்கு இக்காதல் காவியத்தை விவரிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ராதை, கண்ணனோடு இக்காவியத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு முக்கிய பாத்திரம் இலாதேவி. இவள் நந்தகோபனின் மைத்துனன் கும்பகாவின் மகள். கண்ணனைப் போலவே இலாவையும் ராதை தான் வளர்த்தாள். இலா ரொம்பவும் வெகுளித்தனமானவள். ராதை, கண்ணனோடு பூஞ்சோலைகளில் மட்டுமல்ல. அவர்களின் படுக்கை அறைகளிலும் நுழைந்து விளையாடுபவள். பருவமடைந்த சில நாட்களிலேயே கண்ணனுக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரையும் வளர்த்தெடுத்த ராதைதான் திருமணத்தை முன்னின்று நடத்தினாள். இலாவிற்குச் சில அந்தரங்க அறிவுரைகளைச் சொல்லிக்கொடுத்ததோடு கண்ணனிடமும் அறிவுறுத்தினாள் : “இலா ரொம்பவும் சின்னப்பெண், பார்த்து நடந்துகொள்”.
ராதையின் இந்தப் பெருந்தன்மையும் முதிர்ச்சியும் தாமரைக்கண்ணனை – தன் காதலனைப் பிரிந்த ‘முதலிரவிலேயே’ அற்றுப்போனது. ராதை இப்படிக் கண்ணனைப் பிரிந்ததேயில்லை. தன் கணவன், மாமனார், மாமியார், சகோதரர்கள், உற்றார், உறவினர் எல்லோரது ஏச்சுக்கும் பேச்சுக்கும் அப்பால் அவள் கண்ணனைக் கூடினாள் ; ஊடினாள் ; புணர்ந்து களித்திருந்தாள். இந்த ‘முதலிரவின்’ பிரிவு அவளை வாட்டி வதைத்தது. பொம்மை பறிக்கப்பட்ட ஒரு குழந்தையைப் போல் இரவெல்லாம் அரற்றினாள். பொழுது புலர்ந்த மறுகணம் – இரவெல்லாம் இலாதேவியோடு முயங்கிக்கிடந்த – கண்ணனைத் தேடி ஓடினாள். புணர்ந்து அணைத்து ஆற்றாமை தீர்ந்தாள். இப்படியான சந்திப்பும் நீண்டநாள் நிலைக்கவில்லை. கண்ணன் தனது மாமியார் வீட்டிற்கு – இலாவின் தாய்வீட்டிற்கு – மறுவீடு சென்றான். இலாவின் மீதான புதுமோகத்தில் மூழ்கித்திளைத்தான். மெய் மறந்துகிடந்தான். அதேவேளை பசலை படிந்த ராதையின் உடல் இளைத்துத் துரும்பானது. மன்மதன் வைத்த நெருப்பில் தேகம் பற்றி எரிந்தது. கண்ணனின் நினைவுகளைச் சுமந்த இரவுகளை அவளால் தாளமுடியவில்லை. பணிப்பெண்கள் குழைத்துத் தேய்க்கும் சந்தனம், சவ்வாது, வாசனை மலர்கள் அனைத்திற்கும் அப்பால் அவள் தணியாது கொதித்தாள். பொறுக்கமாட்டாது தான் வளர்த்துவந்த அன்புக்கிளியைக் கண்ணனிடம் தூது அனுப்பினாள்.மஞ்சத்தில் கிடந்த கண்ணன் இலாதேவியோடு ஆயகலைகளையும் அரங்கேற்றுவதைக் கண்ட கிளி வாயடைத்துத் திரும்பியது. தன்னிலை மறந்து தன்னையும் மறந்துகிடக்கும் கண்ணனின் நிலை அறிந்த ராதை கொதித்தாள் ; வெகுண்டாள் ; காமனைத் தூற்றினாள். கண்ணனைப் பழித்துரைத்தாள். தன் விதியை நொந்து புலம்பினாள்.
அவ்வேளை ராதையின் நினைவுகள் கண்ணனை உசுப்பத்தொடங்கின. ஆசை அறுபது நாளும் மோகம் முப்பது நாளும் கடந்தபிறகு கண்ணனின் மனம் இயல்பாகவே ராதையை நோக்கிப் பாய்ந்தது. ஆம். ராதையின் மேல் அவன் கொண்டது பழகப்பழகப் புளித்துப்போகும் வெறும் மோகமன்று, அள்ள அள்ளப் பெருக்கெடுக்கும் காதலின் ஊற்று ; நேசத்தின் வற்றாத ஜீவநதி ; அன்பாகி அகன்றதொரு ஆழிப்பெருங்கடல். கண்ணன் தன்நிலை உணர்ந்தான். ராதையை மறந்து கிடந்த நாட்களை எண்ணித் துடித்தான் ; புலம்பினான் ; இழைத்த துரோகத்திற்காய் கூனிக்குறுகினான். கண்ணனின் தவிப்புகளைக் கண்ட இலாவின் சகோதரன் ஶ்ரீதமன் எள்ளிநகையாடினான். “ அந்த அடங்காப்பிடாரி என் தங்கையை விட உயர்ந்தவளா? இருவருக்குமான வயதை ஒப்பிட்டுப் பார்த்தாயா? இப்படியான ஒழுக்கக் கேடான உறவுகள் இறுதியில் உனக்குத் துன்பத்தைத்தான் தரும்” என்று எச்சரித்தான். ஶ்ரீதமனின் வார்த்தைகளைக் கொஞ்சமேனும் பொருட்படுத்தாத கண்ணன் அவனுக்குப் பதிலுரைத்தான் : “ தன் மகளைத் – தான் படைத்த பெண்ணை- மணந்த பிரம்மன் ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்லப்படுகிறானா? தன் குருவின் மனைவி தாராவை கடத்திச்சென்ற சந்திரன் நெறிபிறழ்ந்தவன் என்று கருதப்படுகிறானா? தனது நண்பனின் மனைவியைப் புணர்ந்த சூரியன் ஏமாற்றுக்காரனா? பூமாதேவி ஹரியின் அத்தை இல்லையா? கங்கை சிவனின் அத்தை இல்லையா? அகல்யா இந்திரனின் அத்தை இல்லையா? சீதை ராமனைவிட மூத்தவள் தானே? ரேவதி பலராமனைவிட மூத்தவள் தானே? ரதிதேவியும் கூட மன்மதனைவிட மூத்தவள் தானே?” இப்படியெல்லாம் காலங்காலமாய் காதல் கட்டற்றுக்கிடக்க என்னைப்பற்றி சொல்லவந்துவிட்டாய் என்று திருப்பி அடித்தான்.
ராதை சாதாரணப் பெண் இல்லை. அவள் மன்மதனால் எய்யப்பட்ட அம்பு. மணம் நாறும் சம்பங்கிப் பூ, இந்தப் பூலோகத்தில் ஒப்பிடவேமுடியாத சுவை மிகுந்த பண்டம். அவளோடு வாழ்ந்து களித்த ஒருவன்தான் இவ்வுலகின் எல்லாப் பேறுகளையும் பெற்றவனாக இருக்கமுடியும் என்றெல்லாம் சொல்லி ராதையின் நினைவுகளில் ஏங்கினான்.
அதற்குமேல் பொறுக்க முடியாமல், இலாவை சில நாட்கள் கழித்து வரச்சொல்லிவிட்டு, பிருந்தாவனத்திற்குத் திரும்புகிறான்.அவன் காத்துக்கொண்டிருந்த இரவுப்பொழுது நெருங்கியது. பிச்சைக்குக் கையேந்தும் ஒரு யாசகனைப் போல் ராதையின் வாயிலுக்கு முன் தவம்கிடக்கிறான். கோபக்கனலில் கொந்தளிக்கும் ராதை தனது பணிப்பெண்களிடம் சொல்லி கண்ணனை – அந்த நயவஞ்சகக்காரனை - வீட்டு வாசலைக்கூட நெருங்கவிடாமல் காவல் இருக்கப் பணிக்கிறாள். ராதையின் விசுவாசிகளான அந்தப்பணிப்பெண்களிடமும் – தூது வந்த அதே கிளியிடமும் மன்றாடிக் கெஞ்சிக்கதறி, கண்ணன் அனுமதி பெற்றதெல்லாம் பெருங்கதை. வரம்பெற்ற பக்தனாக ராதையின் அறைக்குள் நுழைந்த கண்ணன், அங்கே கண்ட காட்சியால் அதிர்ந்து போகிறான். ராதை அலங்காரங்களின்றி, அணிகலன்களின்றி, நறுமண திரவியங்கள், அன்றலர்ந்த வாசனைப்பூக்கள் எதுவுமின்றி சோர்ந்து கிடக்கிறாள். கண்ணனை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறாள். “ராதே நான் இழைத்த குற்றம் என்ன? நீதான் என்னை வளர்த்தாய்.. நீதான் எனக்குத் திருமணமும் செய்வித்தாய்.. இப்போது நீயே கோபம் கொள்வது சரியா? உன் இனிய குரலால் ஒரு வார்த்தை பேசமாட்டாயா? உன் உள்ளத்தை எனக்கு அளிக்கமாட்டாயா? நம் உறவை மறந்தாயா? ராதே! கெஞ்சிக்கேட்கிறேன் இரக்கம் காட்டு, அன்பைக்கொடு, கருணை செய்..” அவனின் கதறல்களுக்குக் கடைக்கண் பார்வையைக் கூடக் காட்டாத ராதை இறுதியாகக் கேட்கிறாள் :
“சுயமரியாதை ஒரு பெருஞ்செல்வம், அருட்பேற
சுயமரியாதை பெண்ணின் பெருமைக்கு அணிகலன
ஒருமுறை அதை இழந்துவிட்டால
பிறகு ஏன் உயிரோடு வாழ வேண்டும், தாமரைக் கண்ணா?”
ராதையின் இந்தச் சுயமரியாதைக்கு முன்பு மண்டியிட்டு, மன்றாடிக் கசிந்து கண்ணீர் மல்கிய கண்ணன், ஏதொன்றுக்கும் அசைந்து கொடுக்காத ராதிகாவைச் சாந்தப்படுத்த (“ராதிகா சாந்தவனம்”) ஆகக்கடைசியாய் அவளின் அடிபணிந்து, பாதக்கமலங்கள் தொட்டு, மெய்வணங்கிச் சரணாகதி அடையும் அந்தக் காட்சியைத் தரிசிக்க உண்மையில் ஒரு இலக்கியப்பேறு பெற்றிருக்கவேண்டும். ஆனபோதும் ராதை மனமிரங்கவில்லை. கண்ணன் பணிந்து சரணடைந்தபோது…
“அவன் அவள் பாதங்களில் பணிந்து வீழ்ந்தபோத
காற் சிலம்புகள் பேரொலி எழுப்
அவள் தன் இடது காலை உயர்த்தினாள
பிரம்மனும் சிவனும் முனிவர்களும் வணங்கி
பீலி சூடிய அந்தச் சிரச
மிருக பலத்துடன
எட்டி உதைத்தாள
எதிர்காலத்தில் சத்யபாமாவின் கோபங்கள
எதிர்கொள்ள அவனுக்குப் பயிற்சி அளிப்பதுபோ
அது இருந்தது”
(“ஊடுதல் காமத்திற்கு இன்பம்” என்பதாக இந்தப் பாடுகளையெல்லாம் பெரும்பேறுகளாக எண்ணி மகிழ்ந்து திளைத்த கண்ணன் இறுதியில் ராதிகாவைச் சாந்தப்படுத்திக் கூடி முயங்கிய காட்சிகள் படித்து அறியத்தக்கவை.) “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்று மீசை முறுக்கும் வழமையான பாலியல் ஆண்மையவாதங்களை புரட்டிப்போட்ட இந்தக் கவிதைகளின் கலகங்களுக்காக மட்டுமல்ல… இவற்றிற்கும் அப்பால் இத்தொகுப்பில் உள்ள, விரல்விட்டு எண்ணக்கூடிய பாலியல் கவிதைகளுக்காகவே இந்நூல் பலத்த எதிர்ப்பையும் அடக்குமுறைகளையும் அன்று எதிர்கொண்டது. கலாச்சாரவாதிகளைக் கொந்தளிக்கச் செய்த அந்தப் பாலியல் கவிதைகளுள் சில இங்கே :

கவிதை 1 : கிருஷ்ணனின் புதிய துணையான இலாதேவிக்கு ராதிகா சொன்னது
உன் காதலன் உன்னைக் கட்டித் தழுவும்போத
முலைகளால் அவனை மென்மையாக அழுத்து.
உன் கன்னத்தில் அவன் முத்தமிடும் போத
வெட்கத்தோடு மெல்லத் திரும்ப
உன் உதடுகளால் அவன் உதடுகளைத் தீண்ட
உனக்குள் நுழையும் போத
வேட்கையோடு இயங்கி அவனைக் கிளர்ந்தெழச் செய்.
கூடிய களிப்பில் அவன் சோர்ந்து போனால
மேல் ஏற
விரைந்து கைப்பற்ற
சோர்வைக் கள
செயலுக்குத் தூண்ட
மறவாதே, காதலில் அவனை விஞ்ச ஆளில்ல
சகல கலா வல்லவன
அவனை மென்மையாகக் காதல
உண்மையாகக் காதல
அவனையும் உன்னைக் காதலிக்கச் செய
என் அறிவுரை இதுவ
உனக்கா சொல்லித் தரவேண்டும்?

கவிதை 2 : இலாதேவி - கிருஷ்ணன் முதலிரவுக் கொண்டாட்டம்
நீண்ட நேரத்திற்குப் பிறகு மலர்கள் பொலிவிழந்த
முத்துக்கள் நெகிழ்ந்த
கழுத்தணிகள் சரிந்தபோத
அவனைக் புணர்வதற்க
அவள் மேலெழுந்தாள
தனது கலைகளை அரங்கேற்றினாள
காதற் களத்தில் அவனுக்குத
தான் நிகர் என நிறுவினாள்.

கவிதை 3 : முதலிரவுக்குப் பின் கிருஷ்ணனிடம் ராதை வினவியது
“ம்ம்ம்… அவளை முத்தமிட்டாயா கிருஷ்ணா?
ஓ! இல்லை, அவள் உதடுகள் கசக்கின்றன ராதா!
அவளுடைய முலைகளைப் பற்றிக் கசக்கினாயா?
இல்லை, அவை ரொம்பச் சிறியவை!
அவளின் தொடைகளைச் சுவைத்தாயா?
அவை மெல்லியவை ராதிகா!
அவளின் அழகிய உடலைத் தழுவி அணைத்தாயா?
அவள் ஒரு கொடியைப் போல துவள்கிறாளே!
ஓ! அவளுடன் கூடலை எப்படித்தான் கொண்டாடினாய்?
‘புதிய உறவு மகிழ்ச்சியை அளிக்காத
கலவிக்கு முந்திய அவளின் விளையாட்டுகள
உன்னைக் கட்டிப் போட்டு விட்டனவோ?
கலவி விளையாட்டுகள் பற்றி முன்பின் தெரியா
ஒருத்தியிடம் எப்படி ராதே!

கவிதை 4: கிருஷ்ணனைப் பிரிந்த ராதையின் நிலை
“உன் உதடுகளால் என் உதடுகளை ரொம்ப அழுத்தாத
வலிக்கிறது” என்பேன
அவன் இன்னும் இன்னும் அழுத்துவான
“என் கூந்தலை இழுக்காதே நமது ரகசியம் வெளிப்பட்டுவிடும்”
கூந்தலை மேலும் இழுத்து எரிச்சலூட்டுவான
“முலைகளை அழுத்தாதே வெட்கமாக இருக்கிறது”
நகங்களால் கீறி விளையாடத் தொடங்குவான
“சீக்கிரம், குரல் கேட்கிறது, வேகமாக முடி”
இரவு முழுக்க ஓயமாட்டான
“அமைதியாக இரு”
மேலும் உளறுவான
“உன் சிரிப்பை நிறுத்து”
மேலும் மேலும் குரலெடுத்துச் சிரிப்பான
அவனது குறும்புகள் என் இதயத்தை வாட்டுகின்ற
அவன் ஏன் என்னை வதைக்கிறான்?

கவிதை 5 : உளவு பார்த்துத் திரும்பி வந்த கிளி கிருஷ்ணனின் படுக்கை அறையில் நடந்ததை ராதையிடம் சொல்கிறது
ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்த
எல்லாவற்றையும் மறந்து கிடக்கிறார்கள
ஆரத்தழுவுகிறார்கள
உதடுகள் ஒட்டிக்கொண்டுள்ள
களித்துத் திகட்டிக் கிடக்கிறார்கள
ஒருவரை ஒருவர் பார்த்தபட
ஒருவர் மற்றவரின் உதட்டிலிருந்து தாம்பூலம் தரிக்கிறார்கள
கன்னங்கள் ஒளிர்கின்ற
தீண்டுகிறார்கள் சரிசெய்கிறார்கள
உடைகளை நகைகள
கட்டிலைச் சுற்றிய திர
சரியாக மறைத்திருக்கிறத
என உறுதி செய்துகொள்கிறார்கள
84 காமக் கலைகளையும
பரிசோதித்துப் பார்க்கிறார்கள
நான் எப்படிக் குறுக்கிட முடியும்?
அழகிய பெண்ணே!
கிருஷ்ணனை எப்படி உன்னிடம் இழுத்து வர முடியும்?

கவிதை 6 : ராதிகாவைப் பற்றி கிருஷ்ணன் தன் நெஞ்சொடு கிளத்தல்
கட்டற்ற வேகத்தோடும் காமத்தோடும
அவளை மீண்டும் மீண்டும் புணரும்போத
பாதியளவு மூடிய தாமரைக் கண்களோட
புன்னகைப்பாள் ஊக்குவிப்பாள
“அற்புதம்…………. அப்படித்தான்………….
நல்லாருக்கு….. அட்டகாசம்… இன்னும் இன்னும் கொஞ்சம்….” முனகுவாள
சுண்டி இழுப்பாள்.
என்னைக் கவர்ந்து மயக்கி
அந்தக் குரலை எப்படி மறப்பேன்?

கவிதை 7: ராதையுடனான உறவை எண்ணி கிருஷ்ணன் உரைப்பவை
உணர்ச்சிகள் கொப்பளிக்க அணைப்பாள
எனது இடையின் ஆடைகளுக்குள் அவள் கை நெகிழும
என் தொடைகள் அவள் தொடைகளை அழுத்தும்போத
மேலுயர்த்திக் காமத்தைப் பகிர்வாள
பெருகும் வேட்கையோடு கட்டிஅணைப்பாள
ஆசை ஊற்றெடுக்க மேலேறுவாள
இறுக்கித் தழுவுவாள
என் ஆண்மை திருப்தியுறும
மரத்தைக் கொடி படர்வது போ
எங்களின் உடலை இணைத்திருப்பாள
உணர்ச்சிப் பெருக்கெடுக்க என்மீத
பாம்பென ஊர்வாள
அவளைத் தவிர யாரேனும் இதைச் செய்யக் கூடுமா?
யாருமில்லை, அவளைத் தவிர யாருமில்ல

கவிதை 8 : ராதிகாவுடனான கிருஷ்ணனின் நினைவுகள்
“முத்தமிடாதே அழுக்காகி விடுவேன்” நான் சொன்னால
வேண்டுமென்றே என்னை அழுத்தி முத்தமிடுவாள
“தொடாதே, நீராடி வந்துள்ளேன்”
அவள் தன் முலைகளால் உணர்ச்சி பொங்க அழுத்துவாள
“என்மேல் விழாதே, அது முறையல்ல” நான் சீறும்போத
வேகமாக என்மேல் குதித்துச் சரிவாள
“இன்று நான் விரதம், இன்றைக்கு முடியாது…
“உன்னோடு உறங்க முடியாது எனக்கு வேண்டாம்” நான் சொன்னால
அவள் இன்னும் தீவிரமாய் என்னைச் சேர முயல்வாள

கவிதை 12: ராதை தன் கால்களால் எட்டி உதைத்த பின்பு கண்ணன் கூறியவை
அவள் அழுதபோத
ஹரி மீண்டும் பணிந்தான
அவள் பாதங்களைப் பற்றி,
“அன்பே, ஏன் அழுகிறாய்?
நான் உன்னைவிட உயர்ந்தவனா?
நீ இன்னமும் கோபமாக இருந்தால்…..
நான் உன்னுடையவன
உன் விருப்பம்போல நடப்பவன்… எல்லாவற்றிலும்”
அவன் எழுந்தான
அவளை மார்போடு இறுக அணைத்துக் கொண்டான்.
கிட்டத்தட்ட இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய இவ்விலக்கியம் அது எழுதப்பட்ட காலத்தில் பெரும் எதிர்ப்புகளைப் பெறவில்லை. ஒரு இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் புதிதாகத் தோன்றிய தேசிய எழுச்சிக்காலகட்டத்தில் இந்நூல் மறுபதிப்பு (1911) செய்யப்பட்டபோது, கொச்சை அவதூறுகளோடும் கடும் எதிர்ப்புகளோடும் தடைசெய்யப்பட்டது. இந்தத் தடை ஒரு தற்செயல் நிகழ்வல்ல என்பதை தேசியவாத அரசியலைக் கூர்ந்து கவனிப்போர் அறியலாம்.

12 மே, 2012

நெஞ்சில் இட்ட கோலம் - "இன்னொருவனின் கனவு"

.- குமரகுருபரன்








அனைத்திற்கும் உலகில் இன்னொரு அதீத பக்கம் இருக்கிறது. இயற்கையில், மனித மனங்களில், அவர்கள் வாழ்க்கையில்.







பதின்மத்துக்கும் அப்படியே.







அப்படி ஒரு அதீதம் சிலி(celie)என்கிற பதினான்கு வயதுப் பெண்ணின் கடிதங்கள் மூலம் ஆரம்பிக்கிறது, நாம் நேசிக்கும் அமெரிக்க இயக்குனரிடம் இருந்து. சிலி கடவுளுக்கு எழுதிய கடிதங்கள் அவை. அதீதம். பதின்மத்தின் எண்ணவெல்லா அவஸ்தை.







அதிகம் நேசிக்கப் படும்,அதிகம் விமர்சிக்கப் பட்ட,அதிகம் புறக்கணிக்கப் பட்ட படம் சிலியின் கதை. பதினோரு அகடமி விருதுகள் வெல்லும் என எதிர்பார்க்கப் பட்டு ஒன்று கூட இல்லாமல் போன அவமானம் அதன் வரலாறு.







எனினும், கதையாக, சினிமாவாக, இசை வடிவமாக, ஒலிச் சித்திரமாக தன்னை வெளிப் படுத்திக் கொண்டே இருந்த கறுப்பு அனுபவம் அது.யாரும் தொடத் துணியாத துயர் சினிமா. யாரும் எதிர்பார்த்திராத தன்னம்பிக்கை கவிதை.







உலக சினிமா என்பது அமெரிக்கர்களின் சினிமா அல்ல.ஆனால் உலகம் என்பது அமெரிக்காதான் இன்றைய நுகர்வுப் பொருளாதார, அரசியல், தொழில்நுட்பக் கலாசாரத்தில். அதனாலேயே அவர்களுடைய சினிமா நம்மை ஆளுகிறது, ஈர்க்கிறது, விருதுகள் பெறுகிறது.







அமெரிக்க சினிமா என்பது, அதன் கலைஞனுக்கு உலகளாவிய படைப்புச் சுதந்திரத்தை அளிக்கிறது. அமெரிக்க சினிமா ஈரானைப் பற்றி, கீழை நாடுகளின் மத அடிப்படை வாதங்களைப் பற்றி, வியட்நாம் பற்றி, திபெத் பற்றி, தலாய் லாமா பற்றி, மும்பையின் சேரிகள் பற்றி, கோன் பனேகா க்ரோர்பதி பற்றி, ஆப்ரிக்க மக்கள் பற்றி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பற்றி தன் சினிமாவாக தன் கண்ணோட்டத்தில் வெளிக் கொணர்ந்திருக்கிறது. கொணர்கிறது,அது தவறோ,சரியோ.







அலைஸ் வாக்கர் ( Alice Walker)என்கிற அமெரிக்கர் சிலியின் கதையை எழுதினார்.1983-ல் புலிட்சர் விருது வென்ற அந்த நாவல் பதினோரு முறை தணிக்கை செய்யப் பட்டது, அதன் வன்மொழி காரணமாக. சுரங்களில், வேற்று கிரகவாசிகளில், யுத்த களங்களில், மனித நேயத்தை உணர்த்திய ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் அதை, சிலியின் கதையை, சினிமா ஆக்கியவர். தான் ஒரு கவிஞன் என்று அதன் மூலம் நிரூபித்தவர்.







ஸ்பீல் பெர்க் மற்றும் பதின்மம்....யோசிக்க இயலாத சொப்பனம். தி கலர் பர்பிள்(the colour purple-1985).







ஒரு வெற்றி பெற்ற இயக்குனர் ஏன், தனக்கு, தன் பாணிக்கு சம்பந்தம் இல்லாத சினிமா ஒன்றை செய்ய வேண்டும்? ஸ்பீல் பெர்கின் இந்தத் துணிச்சல் நிறைய பதில்களையும், புரிதல்களையும் அளித்திருக்கிறது சிலியின் கதை மூலமாக,சினிமா பற்றி,அமெரிக்க சினிமா பற்றி, விருதுகள் பற்றி, கலைஞனின் ஆன்மத்தேடல் பற்றி.







பதின்ம, பால்ய சினிமாவில் அமெரிக்க சினிமாவின் பங்கெடுப்பு புறக்கணிக்க இயலாதது. மிக அண்மைய உதாரணம் ட்விலைட் (twilight)வரிசைப் படங்கள். ஹாரி பார்ட்டர் படங்கள் குழந்தைகளுக்கான படங்கள் என்பதால் அவை தவிர்க்கப் பட்டிருக்கின்றன. இல்லையெனில் சின்ன ஒரு இழையில் அவையும் அமெரிக்க பால்ய படங்கள் தான். ட்விலைட் வரிசை இங்கே பதின்மத்தின் இன்னொரு பிரிவில் இடம் பெறும். நாம் பதின்ம,பால்ய சினிமா ஆக எடுத்துக் கொண்டிருக்கும் சினிமா வரிசையில் பிரான்சிஸ் போர்ட் கொப்பலாவில் ஆரம்பித்து அமெரிக்கன் பை(american pie-1999) இயக்கிய வீட்ஸ் சகோதரர்கள் வரை ஏகப்பட்ட படங்கள் காணக் கிடைக்கின்றன. இவற்றில் இப்போது வெளி வந்திருக்கும் american reunion,20o4-ல் வெளிவந்த the girl next door,little manhattan-2005 என்று நிறைய நகைச்சுவை இழையோடும் பதின்ம குறும்புப் படங்கள் தான் ஜாஸ்தி.







பதின்மத்தின் இருண்ட அனுபவங்கள் குறித்து அவை கண்டு கொள்வதில்லை. அதே நேரத்தில் பதின்ம இருண்மை அனுபவங்கள் தனியாக அமெரிக்காவின் மயிர்க் கூச்செறியும் த்ரில்லர்களை,வன்மன வெளிப்பாடு மிக்க பதின்ம(elephent-2003-gusvansant)சினிமாக்களை அளித்திருக்கின்றன. அமெரிக்கர்களின் நேர்த்தியான நிஜ பதின்ம சினிமாவாக “தி கலர் பர்பிள்” எனும் அமெரிக்க-ஆப்ரிக்க படம் இந்த பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் அது எழுப்பும் கேள்விகளும், தொடும் வாழ்க்கையும். அவை, இன்றைக்கும் மிக முக்கியமானவை தான்.







விரிந்து பரந்த அம்மலர்த் தோட்டத்தில் அந்த சகோதரிகளின் களி நடனத்தில் ஆரம்பிக்கிறது “தி கலர் பர்பிள்”. ஊதா வயலட் பூக்கள் நிறைந்த தோட்டம் அது...அவர்கள் ஏதோ பாடிக் கொண்டே சாட் பூட் த்ரீ விளையாடுகிறார்கள். அந்தப் பாடலின் சில வரிகள் இப்படி இருக்கின்றன....'கடவுளே என் தங்கையை என்னிடம் இருந்து விலக்கி வை'.







சிரித்தபடி தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கும் சிலி,நெட்டி சகோதரிகளைக் கனத்த அந்தக் குரல் உறைய வைக்கிறது. 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இருவரும்...உங்கள் அம்மா பகல் உணவுடன் காத்துக் கொண்டிருக்கிறாள்'. அவரை அப்பா ஆக அறிமுகப்படுத்தலாம்தான். அதற்கான பிற தகுதிகள் அதை நம் மனசாட்சியிடம் முறையிட்டு தடுக்கின்றன. அவர் மேலும் சொல்கிறார் 'சிலி, இந்த வட்டாரத்திலேயே மிக அவலட்சணமான புன்னகை உன்னது' என்று.







காட்சி 1909, பனிக் காலம் என்கிறது நமக்கு,சிலியின் பிரசவ அலறலுடன்.நெட்டி,பதை பதைப்புடன் குழந்தை வெளி வரக் காத்திருக்கிறாள்.அது நிகழ்கிறது.பெண் குழந்தை என்ற படியே நெட்டி அதை சிலியின் கைகளில் கொடுக்கிறாள். சிலி பார்த்துப் பரவசம் அடையும் முன், அந்த கரங்கள் அக்குழந்தையைத் தட்டிப் பறிக்கின்றன. 'மவளே,கடவுளைத் தவிர, இதைப் பற்றி யாரிடமாவது முறையிட்டால் பார்த்துக் கொள்' என்ற மிரட்டலுடன் அவர் வெளியேறுகிறார். சகோதரிகள் கண்ணீரால் காட்சியைக் குளமாக்குகிறார்கள்.







14 வயதில் சிலிக்கு இரண்டு குழந்தைகள். இரண்டுமே அவளிடம் இல்லை.அவளின் அப்பாதான் அவள் குழந்தைகளின் அப்பாவும். 'உன் அம்மாவால் எது முடிய வில்லையோ ,அதை நீ செய்' என்று சொல்லி அந்த ஆண் நிகழ்த்திய வன் புணர்ச்சியின் அடையாளங்கள் அவை.பால்யம்,பதின்மம் இதெல்லாம் என்ன என்பதை கடவுள் தான் அவளுக்குச் சொல்ல வேண்டும். அவர் எங்கே இருக்கிறார்?அவர் கறுப்பா?வெள்ளையா?







'கடவுளே ,நான் நல்ல பெண்தான் இல்லையா' என்ற தன் குரலுடன் சிலி தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள்.







தென் அமெரிக்கா,குறிப்பாக ஜார்ஜியா( Georgia)வின் பாவப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்க கறுப்பின மக்களின் கதையையும்(1900),அமெரிக்காவின் இருண்ட நாகரீகத்தையும்.சிலியின் இரண்டு குழந்தைகளையும் அவள் அப்பா கொன்றிருப்பார் என்று அவள் நம்ப வில்லை. இப்போது பிறந்த பெண்குழந்தையை அவர் போதகர் ஒருவரின் குடும்பத்துக்கு விற்று இருக்கக் கூடும். இப்போது அவளது அப்பாவின் பார்வை சகோதரி நெட்டி மேலும் விழ ஆரம்பித்திருக்கிறது.







“அவளை பாதுகாக்க வேண்டும், நெட்டியை சர்ச்சில் அடிக்கடி அந்த மிஸ்டர்(mr)நோட்டம் விடுகிறார். அப்பாவிடம் இருந்து தப்பிக்கவாவது, நெட்டியை எங்காவது அனுப்பி வைத்து விட வேண்டும்...அந்த மிஸ்டர் நல்லவரா அவளுக்கு?” இப்படியெல்லாம் அலை பாய்கிறது சிலியின் சிந்தனை.







தன்னைப் பற்றி 'தான் மிக அவலட்சணமான பெண்'என்பதைத் தாண்டி அந்த பதினான்கு வயதில் சிலிக்கு வேறெதுவும் நினைக்க இல்லை. ஒலிவியா என்று பெயரிட்டு வைத்திருக்கும் தன் பெண் குழந்தை எங்கே வளர்கிறது என்றும் தெரியவில்லை.இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் கடவுளே?







ஆனால்,ஆண்கள் அவள் எதிர்பார்க்காத விஷயங்களைச் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் எதிர்பாராத தருணங்களில் சுய லாபத்திற்காக.







சிலியால் "மிஸ்டர் ' என்று அறியும் ஆல்பர்ட்(danny glover),அவளுடைய வீட்டின் முன் குதிரையில் அமர்ந்தபடி,அவள் அப்பா(!)விடம், அவள் தங்கை நெட்டியை திருமணம் செய்ய விரும்புவதாக கேட்கிறார். ஜன்னலுக்குள் நின்றபடி பார்த்துக் கொண்டிருக்கும் சகோதிரிகள் குறிப்பாக நெற்றியின் முகம் பயத்தால் உறைகிறது. அவர்கள் அப்பாவின் குரல் கேட்கிறது... “இல்லை மிஸ்டர், நெட்டி மிகவும் சிறிய பெண், அவளை இப்போது மணம் முடித்துத் தர இயலாது”.இப்போது இருவரின் முகமும் மலர்கிறது.







அடுத்த நொடி, அவர் மேலும் சொல்கிறார், “ஆனால் மிஸ்டர் நீங்கள் சிலியைத் திருமணம் செய்து கொள்ளலாம். என்ன கொஞ்சம் அவலட்ச் சணமானவள், கெட்டுப்போனவள், ஆனால் அருமையான வேலைக்காரி, உங்கள் வீட்டை, உங்கள் நான்கு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வாள்...என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர்?” சிலியின் கண்கள் வழக்கம் போல குளமாகின்றன. நெட்டி அவளை ஆசுவாசப் படுத்திகிறாள்.சிறிது நேரம் யோசித்து விட்டு மிஸ்டர் சொல்கிறார் “நல்லது,நான் அவளை ஒருமுறைப் பார்க்க வேண்டுமே”.







அப்பாவின் அழைப்புக்கு சிலி அந்த மிஸ்டரின் முன் நிற்கிறாள். அவளுடைய வாழ்க்கையின் அடுத்த பயணம் ஆரம்பிக்கிறது. ஆண்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள்?







ரத்தக் காயத்துடன் ஆரம்பிக்கிறது சிலியின் வாழ்க்கை மிஸ்டரின் மனைவி அல்லது பணிப்பெண் ஆக. மிஸ்டரின் பையன் ஹார்போ வேகமாக கூக்குரலிட்டபடி ஓடி வந்து அவள் மேல் மோதி தடுக்கி விழ வைக்கிறான். அடுத்தடுத்து தடுக்கி விழல்கள் தான் அவளுக்கு காத்திருக்கிறது அந்த வீட்டிற்குள். அலங்கோலமாய்க் கிடக்கிறது அன்பு சிறிதும் அற்ற அவ்வீடு.மிருகம் போல் அவள் மேலே விழுந்து இயங்கி, கடவுளே என்றபடி களைத்துச் சாய்கிறான் மிஸ்டர். அவளுக்கு அழுகை பொங்குகிறது. கடவுள் எங்கிருக்கிறார்? நீர் நிச்சயமாக கறுப்பாக இருக்க மாட்டீர்....!







சிக்கெடுத்து வருடங்கள் ஆன மிஸ்டரின் பெண் குழந்தையின் தலை மயிருடன் போராடிக் கொண்டிருக்கும் போது, சிலி 'இவளுக்கு முடி வெட்டலாமே'என்கிறாள்.







'பெண் குழந்தையின் முடியை வெட்டுவது அபசகுனம்'என்கிறான் மிஸ்டர்.







ஆனால் இப்படி முடி இருப்பது சரி இல்லை என்ற அவளின் பதிலுக்கு அறை விழுகிறது, கன்னத்தில். எதிர்த்துப் பேசுவது என்பது இவ்வீட்டில் கூடாது என்ற கட்டளையுடன். ஆண்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள்?







அறுபத்தெட்டு வயதாகும் அலைஸ் வாக்கர் சாதாரண எழுத்தாளர் அல்ல.பெண் போராளி. 1944-ல் பிறந்த அவரின் வாழ்க்கை அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக ஒடுக்கப் பட்ட, அமெரிக்க கறுப்பின மக்களுக்காக, அப்பெண்களுக்காக, நிறவெறி,பாலியல் வன்முறை,வன்கொடுமை ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப் பட்ட ஒன்று. அவரின் குரல், அவரின் எழுத்து அமெரிக்காவின் மிகவும் கவனிக்கப் படும், மதிக்கப்படும், மாற்றங்களை உருவாக்கும் கறுப்பு மந்திரம் இன்றும்.



அவரின் தைரியத்திற்கும், நேர்மைக்கும் போன வருடம்(2011),நேர்காணல் ஒன்றில்,அவர் சொன்ன ஒரு கருத்து போதும்.







“அமெரிக்காவும் இஸ்ரேலும் உலகின் மிகக் கொடூரமான தீவிரவாத அமைப்புகள்” என்பதே அது. அவர் 1983-ல் தி கலர் பர்பிள் நாவலுக்கு புலிட்சர்(pulitzer)இலக்கிய விருது வென்றது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒட்டு மொத்த கறுப்பின மக்களின், ஒடுக்கப்பட்ட பெண்களின் ஆன்மா சற்று கர்வமும் சாந்தியும் அடைந்த தருணங்கள் அவை.







தன் நாவலை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சினிமாவாக எடுக்க விரும்புவதாக தகவல் அறிந்ததும் அவர் சொன்னது, “வேண்டாம்,அது சரி வராது'. ஹாலிவுட் வசூல் பாக்ஸ் ஆபீஸின் ஹீரோவாக ஸ்பீல்பெர்க் கொண்டாடப்பட்ட (ET,jaws)ஆரம்ப வருடங்கள் அப்போது.







அலைஸ் வாக்கரை யார் மீற இயலும்? எனினும் கடைசி முயற்சியாக,அவரை ஸ்பீல் பெர்கின் சினிமாக்களைப் பார்க்க சம்மதிக்க வைத்தார்கள். et படத்தைப் பார்த்து விட்டு அலைஸ் வாக்கர் சொன்னார், “'வேற்றுக் கிரக உயிருக்கும் மனதும், வாழ்கையும் இருக்கிறது என்று சொன்ன அவரது நேயம் எனக்குப் பிடித்திருக்கிறது”.காலம் எப்போதும் தனக்குத் தேவையான விசயங்களைத் தனக்கு தேவையானவர்களிடம் இருந்து பெறத் தயங்கியதில்லை. அலைஸ் வாக்கர் என்கிற ஆளுமையின் அந்த ஒற்றை அங்கீகாரத்தில், ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் என்கிற கலைஞன், மகா கலைஞன் ஆகும் தருணம் பிறந்தது.







அவரின் முதல், சீரியஸ், அவரது பாணியற்ற திரைப்படம் 'தி கலர் பர்பிள்'.







தன் மீது விழுந்திருக்கும் புகழ் வெளிச்சம், தான் வெள்ளையர் என்ற பேதம், இரண்டையும் சுமந்து அமெரிக்க கறுப்பின மக்களின் இருண்ட வாழ்க்கைக்குள் எப்படி பயணம் செய்யப் போகிறார் ஸ்பீல் பெர்க்? அதற்கான அவசியம் என்ன? என்பது ஹாலிவுட்டின் கேள்வியாக இருந்தது.







“எனக்கு அந்த நாவலின் வலி,அதன் ஆன்மா,கனவு,சிலியின் உலகம் அனைத்தும், கண்டிப்பாக அதைச் சினிமாவாகத் தரிசிக்க வேண்டும் என்கிற ஆசையை, உந்துதலை ஏற்படுத்தியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது” என்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.











முழுக் கறுப்பினக் கதையான “தி கலர் பர்பிள்” படத்தின் நடிகர்கள் தேர்வே அவரின் முதல் சவால் ஆக இருந்தது. அவ்வளவு பெரிய இடத்தை, வாய்ப்பை ஹாலிவுட் அமெரிக்க கறுப்பின சகோதரர்களுக்கு அதுவரை வழங்கி இருக்க வில்லை, அவர்களுக்கான சினிமா ஒன்றை அது யோசித்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.







இன்றைக்கு நாம் அறியும் மிகச் சிறந்த நம்பர் ஒன் ஹாலிவுட் நடிகர்கள் ஆன வில்ஸ்மித்(wilsmith), எடி மர்பி(eddimurphy),(ஹாலி பெரி)haliperi,சாமுவெல் ஜாக்சன் அனைவரும் “தி கலர் பர்பிள்” படத்தின் தேவையை,அது ஏற்படுத்திய புதிய பாதையை கண்டிப்பாக நினைவு கூறக்கூடும்.







Danny Glover(மிஸ்டர்), Whoopi Goldberg(சிலி), Margaret Avery(மிஸ்டரின் காதலி ஷக்), Oprah Winfrey(ஹார்ப்போவின் மனைவி சோபியா),என்று அற்புதமான கறுப்பின கலைஞர்கள் ஸ்பீல்பெர்க்கால் “தி கலர் பர்பிள்” படத்துக்கு அடையாளம் காணப்பட்டார்கள். மிக மிக அற்புதமான ஒளிப்பதிவும், இசையும் வாய்த்தது அப்படத்திற்கு.







ஸ்பீல்பெர்க்கின் எண்ணற்ற மினி கிரேன் ஷாட்கள், க்ளோஸ் அப்கள், வைட் ஆங்கிள் ஷாட்கள் எல்லாம் அலைஸ் வாக்கரின் எழுத்தை உயிர் கொண்டு எழச் செய்தன திரையில்.







மிஸ்டரின் வீட்டில் சிலியின் வாழ்க்கை மெல்ல மெல்ல புதிய மனிதர்களையும், புதிய அனுபவங்களையும், புதிய சிந்தனைகளையும் சேர்க்க ஆரம்பிக்கிறது காலத்தின் ஓட்டத்தின் ஊடே. நெட்டி அவளுடன் மறுபடி வந்து சேர்கிறாள். இரை, சமையல் அடுப்புக்கு மேலே தானே ஏறி உட்கார்ந்த திருப்தி மிஸ்டருக்கு. அதன் பதைபதைப்பு வழக்கம் போல் சிலிக்கு.ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்?.







நெட்டி அவளுக்கு கடிதம் எழுத,வாசிக்கச் சொல்லித் தருகிறாள். அக் குறைவான ரம்யமான காலத்தில் சகோதிரிகள் தங்கள் சந்தோஷ ஆன்மாவை மறுபடி தரிசிக்கிறார்கள். ஆனால்,மிஸ்டர் நெட்டியை ஒரு பக்கம் பாலியல் ரீதியாக நெருக்கிக் கொண்டே தான் இருக்கிறார்.







முடிந்து, முயலாமல், நெட்டி விரட்டப்படுகிறாள் வீட்டில் இருந்து, இனிமேல் நீங்கள் இருவரும் சந்திக்கவே முடியாது என்ற மிஸ்டரின் துர்க்கோபத்துடன். “தன் வயதை விட ஐந்தாறு வயதே சிறிதான அவரின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது தவிர வேறெதும் இல்லை இனி சிலிக்கு. இச் சமயத்தில் அவருடைய காதலி என்று இன்னொரு பெண்ணை(ஷக்-பாப் பாடகி)அழைத்து வருகிறார் மிஸ்டர்.







அவள் சிலியைப் பார்த்த முதல் கணம் சொல்லுவது, “இவ்வளவு அவலட்சணமான பிறவியா?” என்பது தான். சிலி நினைப்பது “கடவுளே, நீ எங்கிருக்கிறாய், நீ கறுப்பா, வெள்ளையா, அழகா?. ஷக் அவ்வளவு அழகாய் இருக்கிறாள்!







ஷக் மெல்ல மெல்ல சிலியை நேசிக்க ஆரம்பிக்கிறாள். அவளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறாள். அவளுக்கும் சிலிக்கும் இடையே மிக நெருக்கமான (lesbian)தன் பால் ஈர்ப்பும் உருவாகிறது. இந்த ஈர்ப்பு அலைஸ்வாக்கரால் கட்டுடைந்த நதியைப் போல் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கும் நாவலில்.







x ரேட்டிங்குக்குப் பயந்து ஸ்பீல் பெர்க் அதைத் தொட்டும் தொடாமல், ஒரே காட்சியில் தாண்டி இருப்பார். தன் அந்த முடிவைக் குறித்து ஸ்பீல் பெர்க் பின்னாளில் நொந்து கொண்டிருக்கிறார். ஏனெனில் சிலியின் சிதைந்த ஆன்மா, தன்னம்பிக்கை பெறும் மிக முக்கியமான உறவு அது. அவளுக்கு எந்த ஆணிடம் இருந்தும் இதயப் பூர்வமாக, கிடைக்காதது.







“தி கலர் பர்பிள்” என்னும் தலைப்பே, சிலியின் அந்தரங்க உறுப்பு சார்ந்த,அதன் பாலியல் ஏக்கங்கள். ஏமாற்றங்கள். சந்தித்த வலிகள் குறித்துதான். இன்னொரு குறியீடும் அலைஸ் வாக்கரால் நாவலில் அழுத்தமாக அமைக்கப் பட்டிருக்கும்.அது சிலி கடவுளுடன் நிகழ்த்தும் உரையாடல் குறித்து. ஷக், சிலிக்கு கடவுளைப் பற்றியும் சொல்கிறாள்.







“கடவுள், கருப்பு, வெள்ளை, அல்ல.எந்த நிறமும் அல்ல. எந்த உருவமும் அல்ல.அது ஒரு இருப்பு, கடைசி நம்பிக்கை அவ்வளவே”. இதற்கிடையில் இன்னொரு துணிச்சலான பெண் சோபியா(ஒபரா வின்பிரே)வை, மிஸ்டரின் மகன் ஹார்ப்பரின் மனைவி ஆகச் சந்திக்கிறாள் சிலி.







சிலிக்கும், ஹார்ப்பர், சோபியாவுக்கும் இடையேயான,காட்சிகள் தனிக் கவிதை.சிலியின் ஆழ்மனம் அவளின் சகோதரி நெட்டியை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. திடிரென்று தன் புது கணவனுடன் வருகிறாள் ஷக்.வாசலில் அவர்களை வரவேற்க வந்து நிற்கும் சிலிக்கு, மிஸ்டரின் வெளிறிப் போன முகமும்,ஷக்கின் உற்சாகமும் மறுபடி கிடைக்கின்றன.







ஆண்கள் இருவரும் விருந்துக்குத் தயார் ஆகிறார்கள். குடித்துக் களிக்கும் அக் கணத்தின் இன்னொரு களிப்பு தபால் கொடுப்பவரின் அழைப்பு மூலம் சிலியை,ஷக்கை எட்டுகிறது.







“ஆல்பர்டுக்குக் காத்திரு(மிஸ்டர்), அவர் வந்து தபாலை எடுத்துக் கொடுப்பார்” என்கிறாள் சிலி. “அவனுக்கு காத்திருந்தால் கிறிஸ்துமஸ் வந்துவிடும்” என்று சொல்லியபடியே ஷக், அந்த தபால் பெட்டியை நோக்கித் தானே செல்கிறாள். கடிதங்களை எடுக்கிறாள். படிக்கிறாள்.அந்த அடிவான மேக முட்டத்தின்,கீழ் இறுகி நிற்கும் அந்த வீட்டிற்குள் செல்கிறாள். அவர்களின் குடி அதிகமாகி,இப்போது உளறல் ஆகியிருக்கிறது.







மெதுவாக,சிலியின் கை பிடித்து, மேலே மாடிக்கு வா என்று இழுத்துச் செல்கிறாள். மெல்ல அவளை கட்டிலில் அமரவைத்து, அந்தக் கடிதத்தைக் கொடுக்கிறாள். அதன் முகவரி, நெட்டி, ஆப்ரிக்கா, என்று சொல்கிறது.... நடுங்கும் விரல்களுடன் அதைப் பிரிக்கிறாள் சிலி.







உள்ளிருந்து காய்ந்த பூவிதழ் ஒன்று விழுகிறது.அதை முத்தமிடுகிறாள்.ஜன்னலின் வழியே, வெளிச்சம் நிறையும் அக்காட்சியின் இசை நம்மிடம் இருந்து கண்ணீரைக் கேட்கத் தொடங்குகிறது...







ஏப்ரல்,18,1935...வாசிக்கத் தொடங்குகிறாள், 'சிலி,நான் இறந்து போனதாய் நினைத்திருப்பாய், இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்,நீ நகரத்தில் சந்தித்த பெண், அவளுடைய கணவர் சாமுவேல் இருவரிடமும் கடவுள் அனுப்பிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றன, ஒலிவியா, ஆடம் ...ஆம்,கடவுள் அனுப்பி வைத்த உன் குழந்தைகள், இப்போது அவர்களைக் கவனிக்க என்னையும் அனுப்பி இருக்கிறார் இங்கே. இங்கே ஒரு குடும்பமாக நாங்கள் சந்தோஷம் கொண்டிருக்கிறோம்...நெட்டி”.







சிலி நிறுத்தி, நிதானமாக சொல்கிறாள் 'ஷக், தெரியுமா உனக்கு, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன எனக்கு, ஒலிவியா,ஆடம்,உயிருடன்'.







தேடத் தேட அறையின் மறைவிடம் ஒன்றிலிருந்து,மேலும் கடிதங்கள் கிடைக்கின்றன, நெட்டி அனுப்பி மிஸ்டர் மறைத்து வைத்த கடிதங்கள். அவளுடைய ஒரு கடிதம்,தன் முதல் ஆபிரிக்க அனுபவத்தை பரவசத்துடன் விவரிக்கின்றன....







அவளுடைய குரல், சிலியின் வாசிக்கும் குரல், நெட்டியின் அந்த அனுபவம் காட்சியாக விரியும் போது...நம் முன் விரியும் ஒட்டகச் சிவிங்கிகளின் ஓட்டம்,அச்சிறு பெண்ணின் நடனம், மரங்கள் , யானை....வாவ்.







yes mister speilberg here you are...என்று நம்மை உணர்ச்சிப் பெருக்கில் குலுங்க வைக்கும், சந்தோசம், துக்கம்,வியப்பு இன்னும் எண்ணற்ற உணர்ச்சிகளுடன் தன் நிலை இழக்கச் செய்யும்,இப்போதும் நாம் காணும் ஸ்பீல் பெர்க் என்னும் மகா கலைஞனின் தரிசனம்,அலைஸ் வாக்கரையும் தன்னிலை இழக்க வைத்த விஷயம்....!







அமெரிக்க கறுப்பின மக்களின் ஒடுக்கப்பட்ட, வலிகளின் ரணம் வழியும் ஆன்மாவை அந்த மகாகலைஞன் வருடிக் கொடுத்த தருணம்,அவர்கள் மனதில், நேயமுள்ள எவர் மனதிலும் அந்த மகா கலைஞன் சிம்மாசனமிட்டு அமர்ந்த தருணம்...







இரண்டு ஆளுமைகள் இணைந்தால் உலகின் காலத்தால் அழியா படைப்பு ஒன்று வெளிப் படும் தருணம், அதை உணர நம் கண்களின் இரண்டு சொட்டுக் கண்ணீர் சாட்சியாக இருக்கும். சினிமா என்பது, நாம் பார்ப்பது எல்லாம் அல்ல, அது வேறேதோ,என்று நம்மைப் பிரமிக்க வைக்கும் இடம்.







தன் வாழ்க்கையில் முதன் முறையாக,தன் மிஸ்டரைப் புறக்கணிக்கத் தயார் ஆகிறாள் சிலி. அதற்குப் பின் நடக்கும் சம்பவங்கள்,காட்சிகள் நாம் பார்க்கும் தலைசிறந்த பெண்ணிய சினிமா.







“தி கலர் பர்பிள்” படத்தின் க்ளைமாக்ஸ், சிலி, தன் சகோதரி நெட்டி யை, தன் குழந்தைகளை மீண்டும் காணும் தருணங்கள், உங்களை படம் பார்த்த இரவு முழுவதும் தூங்க விடாமல் புரள வைக்கும் மனித நேயத்தின் அற்புத தருணங்கள். இளமையைத் தரிக்காமலேயே, தொலைத்த சிலி (Whoopi Goldberg)என்ற எண்ணற்ற கறுப்பினப் பெண்களின் ஆன்ம சாட்சியின் மீள் தருணங்கள்!



காலம் சில சினிமாக்களை தனக்காக, தன் ஆவணத்திற்காக,மிகச் சிறந்த மனங்கள் மூலம் சாதித்துக் கொள்ளும். “தி கலர் பர்பிள்” அதில் ஒன்று.







அலைஸ் வாக்கரும், ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கும் அச்சிறந்த மனங்களில் சில. பின்னாளில்,மிகவும் மதிக்கப்பட்ட சினிமாவின் நாயகர் இங்க்மர் பெர்க்மன் இப்படிச் சொன்னார்,'ஸ்டீவன் என்னைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறார்'







மகா கலைஞர்களின் படைப்பும்,வாழ்வும் அப்படித்தானே!







இன்னொருவனின் கனவு – தொடரும்


05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா -கொலை

கொலை




எனது எல்லாத் திட்டங்களும் தோல்வில் முடிந்தது குறித்து கவலையாக இருந்தது. சரி, கொலைத் திட்டங்களால் காரியம் சாதிக்க முடியவில்லை. அவளை எப்படியாவது கழற்றி விட்டு விடுவது என்று முடிவு செய்தேன். பலமுறை கொலைத் திட்டங்களை தீட்டிய நான் அவைகளில் தோல்விகளைத் தழுவியிருந்த போதிலும் திட்டமிடும் கலையில் தேர்ந்து விட்டிருந்தேன்.





நான் அவளுடனான உறவில் திருப்தியாக இல்லை என்றும் இத்துடன் உறவை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் குறுஞ்செய்தி ஒன்று தட்டி விட்டேன். உண்மையில் நான் அவளை விட்டு முற்றிலுமாக விலகுவதில் தீர்மானமாக இருந்தேன்.



அடித்துப் பிடித்து என் தொலைபேசியில் அழைத்தாள், நான் எடுத்துப் பேசவில்லை. தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பினாள், நான் கண்டுகொள்ளவில்லை. அழைப்புக்கும், குறுஞ்செய்திக்கும் பதிலளிக்காமல் இருந்தேன். நண்பர்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றாள். எல்லாவற்றையும் தட்டிக் கழித்தேன். முழுதாக ஒருநாள் கூட கடக்கவில்லை. பார்க்கலாம் என்னதான் செய்கிறாளென்று என்று கல்லாக இருந்து விட்டேன்.



’நீ இப்ப போன எடுக்கலைன்னா நான் செத்துடுவேன்’ என்று செய்தி அனுப்பினாள். இந்த செத்துப் போகும் வசனம் எல்லாரும் சொல்வதுதான் என்று போனை கொஞ்ச நேரம் ஆஃப் செய்து வைத்து விட்டு நண்பர்களுடன் பொழுதைப் போக்கினேன். இடையில் போனை எடுத்துப் பார்க்கவும் இல்லை. எதாவது கெஞ்சல் செய்திகளையும், அவளுடைய அழைப்புகளின் எண்ணிக்கையையும் வைத்து நான் மனமிறங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.



மறுநாள். காலையில் போனை ஆன் செய்தேன். போனில் செய்திகள் அடுக்கிக் கொண்டிருந்தன. போன் ஒலித்தது. நண்பனின் அழைப்பு. போனை எடுத்து என்னடா? என்றேன்.



டேய்.. என்னடா ஆச்சு உன் போனுக்கு..எத்தனை தடவை கால் பண்றது மெசேஜ் பண்றது..? மெசேஜ் பாத்தியா? என்றான். ‘ டேய் போன் ஆஃப்பா இருந்துச்சு, என்ன விஷயம்?’ என்றேன்



’’உன் ஆளு தற்கொலை பண்ணிக்கிட்டாடா... ‘’ நாங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். நீ வரியா? அவளுக்கு என்ன புராப்ளம்டா? உங்கிட்ட எதாவது சொன்னாளா? அவன் பேசிக் கொண்டே போனான். இடையிடையே ஹலோ.. ஹலோ என்றும் கத்திக் கொண்டிருந்தான். நான் அமைதியாக இருந்தேன். போனை துண்டித்து விட்டு அவள் பிணத்தைப் பார்க்கக் கிளம்பினேன். காகிதத்தில் விட்ட துளி எண்ணெய் போல் ஏதோ ஒரு திருப்தி என்னுள் படர்ந்து கொண்டிருந்தது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 10

பத்து




ஒரு கொலை செய்வது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா? தினம் செய்தித் தாளில் வாசிப்பது எரிச்சலை உண்டு பண்ணியது. எப்படி இவ்வளவு சுலபமாக கொலைகளைச் செய்கிறார்கள் என்று வியப்புக்கு மேல் வியப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் மாட்டிக் கொள்ளும் கதை பயத்தையும் உண்டு பண்ணத் தவறவில்லை.





எனது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த வருத்தமாகவும் அவமானமாகவும் இருந்த்து. ஒருவேளை திட்டங்கள் சரியில்லாமல் இருக்கலாம். அல்லது தடயங்கள் ஏதுமில்லாமல் நான் கொலை செய்ய திட்டமிடுவதால் இப்படி ஆகிறதோ என்னவோ. இல்லை அவளுக்கு ஆயுசு கெட்டியாக இருக்கலாம் இல்லையா? அப்படியெல்லாம் ஒன்றுமிருக்காது. இந்தக் கொலைத் திட்டம் நிறைவேறும் வரை கண்டிப்பாக நாத்திகனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.



இந்த முறை நிச்சயம் கொலை நடக்கும். நான் வழக்கமாக போகும் மருத்துவர் ஊசிப் போடும் ஊசியோடு இணைந்த மருந்து குப்பியை ஆட்காட்டி விரலால் தட்டி விடுவார் பின் கொஞ்சம் மருந்தை பீய்ச்சி அடிப்பார். சிறு வயது முதல் மருத்துவரின் இந்த செயலைப் கவனித்து வருகிறேன். அதற்கான காரணம் கேட்ட போது. நரம்புக்குள் செலுத்தும் மருந்தில் காற்றுத் துளிகள் இருந்தால் அது மனிதனைக் கொன்று விடும் என்று விளக்கம் சொன்னார். எனக்கு வியப்பாக இந்தாலும் சந்தேகமாகவும் இருந்தது. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் அனுபவமிக்க ஒரு மருத்துவர் சொல்வது சரியாகத்தானே இருக்கும். அதுவுமில்லாமல் இது எளிய வழியும் கூட. சாட்சி, தடையம் இல்லாமல் கொலை செய்து விடலாம்.



இப்படியான அற்பக் காரணங்களால் மரணம் சம்பவிக்கும் வேறு செயல்கள் எவை என்று கேட்டேன். தலைக்குப் பின் புறம் கழுத்துப் பகுதி வழியாக மூளைக்கு போகும் நரம்புகளில் ஒன்றின் மீது கூர்மையான ஊசியால் குத்தி விட்டால் கூட மரணம் சம்பவிக்கும்.. ஆனால் ஊசி கண்டிப்பாக நரம்புகளில் ஒன்றில் தான் குத்தப் பட வேண்டும் என்றார் அழுத்தமாக.



என் தலைக்கு மேல் பல்ப் எரிந்தது. கண்டிப்பாக இந்த முறையில் அவளைக் கொலை செய்யலாம் என்று முடிவு செய்தேன். இது மிகவும் எளிமையான முறை மற்றும் தடயங்கள் குறித்து அக்கரைப் பட வேண்டியதில்லை.



மருத்துவரின் ஊசிப் போடும் முறைக்கு அவள் நோய்ப்பட வேண்டும். ஊசி போட்டுக் கொள்ளும் படி நோய் தீவிரமாக இருக்க வேண்டும். இதை ஏற்படுத்த முடியாது மேலும் இதில் மருத்துவரின் ஒத்துழைப்பும் தேவையாயிருக்கிறது. அதனால் இந்த வழி வேண்டாமென ஒதுக்கி விட்டேன். ஆனால் அவள் கழுத்து நரம்புகளில் ஒன்றில் ஊசியால் குத்திக் கொல்ல முடியுமே.



இதோ ஊசி தயார். அவளை சந்திக்க வேண்டும் கழுத்தில் ஊசி குத்தும் நிலையில் அவளை உட்கார வைத்துக் கொள்ள வேண்டும். ஆள் அரவமில்லாத இடமும் நேரமும் குறித்துக் கொண்டு ஆயத்தமானேன்.



ஆக்‌ஷா பீச். சரியான இடத்தேர்வு. ஆக்‌ஷா பீச்சில் மதிய நேரம் ஆள் நடமாட்டம் குறைவு. அதுவும் அந்த குன்றுப் பகுதியில் அடர்ந்தசெடிகளுக்கிடையில் யார் வரப் போகிறார்கள். காதலர்கள் அங்கே பல நிலைகளில் இருப்பதை பள்ளிப் பருவம் முதல் கண்டு வந்திருக்கிறேன்.



பீச்சுக்கு கூட்டிப் போவதாக சொன்னதும். அவள் கண்டிப்பாய் துள்ளியிருப்பாள். மிகுந்த உற்சாகத்துடன் பேசினாள். அவள் இப்படி பேசும்போதெல்லாம் வருத்தமாக இருக்கும். மனதை மாற்றிக் கொள்ளலாம் என்று கூட தோன்றும். ஆனால் இல்லை. இப்படி எவ்வளவோ முறை எப்படியெப்படியோ மனதை மாற்றிக் கொண்டாயிற்று.



மால்வானி சர்ச் பகுதியில் சந்திக்க திட்டம். பின் பைக்கில் ஆக்‌ஷா பீச் செல்ல முடிவு. இன்று புடவையில் வந்திருந்தாள். மெல்லிய அலங்காரம் தான் ஆனால் அப்படியொரு அழகு. பெண்களை மிக அழகாகக் காட்டும் ஆடைகளில் புடவைக்கு முதலிடம் கொடுக்கலாம். ரிக்‌ஷாவில் வந்து இறங்கியவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு பறந்தேன்.



ஆக்‌ஷா பீச்சை நெருங்கியதும் மெல்லிய காற்று இதமாக இருந்தது. பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை செடிகளுக்குள் இழுத்துச் சென்றேன். அவளுக்கு அங்கே வேண்டாம் என்று இருந்தது. அலைகளைப் பார்த்தபடி பாறை மேல் உட்கார விருப்பம் தெரிவித்தாள். எனது திட்டம் என்னவாவது. கட்டாயப் படுத்தி கூட்டிச் சென்றேன். கண்டிப்பாய் உள்ளே போனால் கசமுசா செய்வான் என்று அவளும் ஆவலாய் வந்தாள்.



குறித்த இடம் காலியாகவே இருந்தது. ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை. குறிப்பாக நாங்கள் புதர் பகுதிக்குள் நுழைவதை ஒரு காக்கா குருவி கூட பார்த்திருக்காது என்பதில் உறுதியாக இருந்தேன்.



முதலில் நான் உட்கார்ந்து கொண்டேன். அவள் முதுகைக் காட்டி உட்காரச் சொன்னேன். வேண்டாமென மறுத்தவள், கட்டாயப் படுத்தியதும் உட்கார்ந்து கொண்டாள். அவள் கழுத்தின் கீழ் பகுதியிலும் முதுகின் மேல் பகுதியிலும் இதழ்களால் உழுதேன். அவள் சருமத்தின் வாசனை மூளையின் செயலற்ற பகுதிகளை சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருந்தது. விஷம் போல அவள் வாசம் என்னுள் ஏறிக் கொண்டிருந்தது.



என் பெயரை சொல்லி முனகியபடி என்மீது சாய்ந்தாள். சுதாரித்துக் கொண்ட நான் அவள் முதுகைப் பற்றி முன்னுக்குத் தள்ளினேன். ஊசியை மெல்ல எடுத்தேன். விரல்களில் குத்தி விடுமோ என்று பயந்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை.



இன்று எல்லாமும் நலமாக நடந்து கொண்டிருக்கிறது. கொலை கண்டிப்பாய் நடந்தேறும் என்று மனதுள் மகிழ்ச்சி. முத்தங்களைப் பதித்துக் கொண்டே ஊசியை கழுத்தின் புடைத்த நரம்பொன்றின் மேல் வைத்து அழுத்தினேன். ‘’ ஸ்ஸ் அஆஆ’ என்று கைகளால் பின்னால் தடவப் பார்த்தாள். நான் ஊசியை விலக்கிக் கொண்டு அவ்விடத்தில் அழுந்த முத்தமிட்டேன்.



’எவ்வளவு மென்மையானவள் இவள். ஆனால் சருமம் ஏன் இப்படி தடித்துக் கிடக்கிறது. ஒருவேளை ஊசி முனையில் கூர்மை குறைவாக இருக்குமோ’ இப்படி பல கேள்விகள். அடுத்த முயற்சிக்கு ஆயத்தமாகி விட்டேன். இந்த முறை இன்னொரு நரம்பு. ஊசியால் அழுந்த குத்தினேன். மீண்டும் ‘ஸ்ஸ்ஸ அ ஆ ஆ’ என்று என்னை விலகி கைகளால் குத்து பட்ட இடத்தை தேய்த்தாள். நான் மீண்டும் அவளை பழைய நிலையில் இழுத்தி இருத்தினேன்.



‘ என்னமோ கடிக்குடா? ரொம்ப வலிக்கு’ என்று முகத்தில் வலி காட்டினாள். ஊசியை இதை விட வேகமா, ஆழமாக குத்த முடியாது என்றாகி விட்டது. மீண்டும் முத்தங்களை விதைக்கும் பணியில் மூழ்கினான். அவள் சொக்கிப் போய் என் மேல் கனமானாள். ஊசி குத்தப் பட்ட இடத்தில் கடுகு அளவில் ரத்தம் காய்ந்து இருந்தது.



தனது ஈரமான கைகளை சேலையை விலக்கி பாவாடையில் துடைத்துக் கொண்டாள். இளநீர் குடித்துவிட்டு பைக்கில் திரும்பினோம். புறப்பட்ட இடம் வந்து சேர்ந்தோம். ஏனோ இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 9

ஒன்பது




விபத்துக்குள்ளாக்கிக் கொல்வது ஒன்றும் பெரிய காரியமில்லைதான். ஆனால் இதில் எனது உயிரையும் பணயம் வைக்க வேண்டும். விபத்துக்கான சூழலில் நான் தப்பித்து அவளை மட்டும் சிக்க வைக்க வேண்டும். இதற்கு அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.



அதே நேரம் அவள் முழுமையாக செத்துப் போகாமல் கை, கால் ஊனத்துடன் தப்பித்துக் கொண்டால் சிரமமாகி விடும். பின் காதலித்த பாவத்திற்காய் அவளை ஆயுசு முழுக்க கவனிக்கும்படியாகி விடும். இந்த திட்டத்தில் நானும் கூட செத்துப் போக வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.



ஆனாலும் சில முயற்சிகளுக்குப் பின் இந்த திட்டத்தை கை விட்டேன்

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 8

எட்டு




மின்சாரம் பாய்ச்சிக் கொள்வது மிகவும் எளிய முறை கொலைத் திட்டமாகும். இயற்கையான மரணம் என்று நிறுபித்தும் விடலாம். இந்த முறை நம்பிக்கை கூடி விட்டிருந்தது. இந்த திட்டம் சரியாக முடியுமென்று நம்பிக்கை கூடிக் கொண்டிருந்தது.





மீண்டும் என் வீடு. பிரிட்ஜில் நேரடியாக மின்சாரத்தை இணைத்தேன். வீட்டிற்கு வந்த அவளிடம் பிரிட்ஜில் அவளுக்காக கேக் மற்றும் சாக்கலேட் வைத்திருப்பதாகச் சொன்னேன்.



கிட்சனுக்கு அவள் போனதுதான் தாமதம் மின்சாரம் போய் விட்டது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 7

ஏழு




இந்த முறை பாம்பை ஏவி விட்டு கொலை செய்வது என்று முடிவு செய்தேன். பாம்பை ஏவி விடுதல் என்பது சரியான வாக்கியமாக இருக்காது பாம்பை பயன் படுத்தி என்று சொல்லலாம். இப்படி சொல்வது கூட மிகச் சரியாக இருக்காது. ஏனென்றால் பாம்பு போன்ற ஜீவன்களை நாம் பயன்படுத்தி விட முடியுமா என்ன?





பாம்பு என்றால் எனக்கும் பெரும் பயம் தான். ஆனால் என்ன செய்ய என் கொலைத் திட்டங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விக் கொண்டிருக்கும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் இந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பசுமைகளைத் தேடி மக்கள் அலைந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இவ்வாறான ஜந்துகளை எங்கே பிடிப்பது.



மீராரோடு பகுதியில் பாம்புகளை வைத்து வித்தை காட்டும் ஒருவனை நண்பன் ஒருவன் மூலம் தேடிப் பிடித்தேன். அவன் காட்டிய பாம்பின் அளவுகளைக் கண்டதும் அவற்றை எப்படி கொண்டு வந்து அவள் மீது ஏவி விட்டுக் கொல்வது என்று தெரியவில்லை.



எதாவது சிறிய அளவிலான பூச்சி கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது கொடிய விஷமுள்ளதாக இருத்தல் வேண்டும். அளவில் சிறியதான ஆனால் விஷமிகு பூச்சிகள் கிடைத்தால் நன்று என்றிருந்தேன்.



நீண்ட இடைவேளைக்குப் பின் அப்படியொரு பூச்சி கிடைத்தது. இது கொலை செய்யுமா என்று தெரியவில்லை. அதை சோதித்துப் பார்க்கவும் முடியாது. இணையத்தில் அது பற்றி வாசிக்கலாம் ஆனால் அதன் பெயர் தெரியாது. அதைக் கொடுத்த அந்த நண்பன் சொன்ன பெயரை வைத்து தேடிப் பார்த்தால் தகவல் இல்லை. அதன் அடையாளங்களைச் சொன்ன போது அதன் ஆங்கிலப் பெயரைச் சொன்னான் பூச்சிகள் மீது பிரியமான ஒரு நண்பன். அவன் சொன்ன ஆங்கிலப் பெயரை வைத்து அகராதியில் தேடிய போது ‘ அது ஒரு வகை விஷமிக்க பூச்சி’ என்று சொல்லப் பட்டிருந்தது. அதன் பெயர் குறிப்பிடப் படவில்லை.



அதற்கு உணவாக என்னக் கொடுப்பது என்று தெரியவில்லை. மேய்வதற்கு விடவும் பயம். அது கடித்து நான் போய்ச் சேர்ந்து விட்டால், என்னவாவது. அதன் ஜீவன் முடிந்து போகும் முன் அதை பயன் படுத்தி இன்னொரு ஜீவனை கொல்ல வேண்டும். பத்திரமாக எடுத்துக் கொண்டு போனேன்.



இந்தமுறை பார்க்கில் சந்திப்பு. திட்டமிட்டபடி எல்லாமும் நடந்து கொண்டிருந்தது. டப்பாவிலிருந்த அந்த விஷ ஜந்துவை எடுத்து அவள் ஆடைக்குள் விட தயாரானேன். நான் நெளிவதைக் கண்ட அவள் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தால். வேகமாகத் திரும்பியவளின் தோள் பட்டு அந்த ஜந்து கீழே தவறி விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமலும் போய் விட்டது.



எனது கொலைத்திட்டம் தோல்வியானது குறித்து கவலையில்லை ஆனால் காணமல் போன அந்த ஜந்து பூங்காவில் மயக்க நிலையில் காதல் செய்து கொண்டிருக்கும் யாரையாவது கடித்து விடக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.



‘ஓஹோ’ இப்ப புரியுது என்று எதையோ கண்டு பிடித்தவளைப் போல் என் இதழ்களின் வழி உயிரை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். நான் விட்ட ஆழமான மூச்சுக்காற்றால் பூச்சித் திட்டம் பொசுங்கிப் போச்சு.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 6

ஆறு




எந்த தீக்குச்சியை கொழுத்தினாலும் உடனே ஒரு பங்கு வாயு சுவாசத்தில் கலக்கும். இது இயல்பு. பெரும்பாலும் இதை கட்டுப் படுத்த முடியாது. மிக கவனமாக இதைத் தவிர்க்க திட்டமிட்டால் மட்டுமே தடுத்துக் கொள்ள முடியும்.





சைனைடு தடவிய தீக்குச்சியை பயன் படுத்திக் கொல்ல திட்டமிட்டேன். விஷ தீக்குச்சி ரெடி. சமீபமாக நானே அவளை அழைத்துக் கொண்டிருந்த படியால். இந்த முறை அவளாக வீட்டுக்கு வரும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன். விடுமுறையொன்றில் வருவதாக தொலைப்பேசினாள். சொன்னபடி வந்தும் சேர்ந்தாள். தேனீர் போட்டுத் தாவெனக் கேட்டேன். வாயு அடுப்பின் லைட்டரை மறைத்து வைத்து விட்டு தீப்பெட்டியை அடுப்பருகில் வைத்திருந்தேன்.



பாத்திரத்தில் பாலை எடுத்துக் கொண்ட அவள் லைட்டரைக் காணாது தீப்பெட்டியிலிருந்து குச்சியை எடுத்து உரசினாள். தீப்பெட்டி கையிலிருந்து விடுபட்டு பாலில் விழுந்தது. ’ஐய்யோ’ என்று பதரியபடி எடுத்து உதரினால். தீப்பெட்டி பாலில் விழுந்து விட்டதாகவும் அதனை வெயிலில் காய வைக்கும் படியும் என்னை அழைத்துக் கேட்டுக் கொண்டாள்.



மேலும் லைட்டரைத் தேடித்தா அல்லது வேறு தீப்பெட்டி வாங்கி வா என்று விரட்டினாள். எனது கொலைத்திட்டங்கள் இப்படி வேடிக்கையாய் தோல்வியடைந்து கொண்டிருப்பதை நினைத்து அழுகையாய் வந்தது. வேறு வழியில்லாமல் வேறு தீப்பெட்டி வாங்கி வந்தேன்.



தீப்பெட்டி விழுந்த பாலை சாக்கடையில் ஊற்றிவிட்டு பாத்திரத்தை நன்கு தேய்த்து கழுவிய பின் புதுப் பாலில் மணக்கும் தேனீர் தயாரித்துக் கொடுத்தாள். கோப்பையை ஏந்தியபடி ஒரு மாதப் பத்திரிக்கையை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள்.



ஐரோப்பாவின் அந்த கால ஓவியப் பெண்ணைப் போல் உடலை சோபாவில் கிடத்தியிருந்தாள். அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். தேனீரின் ஒவ்வொரு மிடரும் எனக்குள் திடப் பொருளாய் இறங்கிக் கொண்டிருந்தது.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 5

ஐந்து




விரைவாக கார் ஓட்டும் பந்தையத்தில் ஜெயிப்பதற்கு, திறமையாக கார் ஒட்டும் தகுதி மட்டும் இருந்தால் போதாது கோளாறு செய்யாத காரும் அவசியம். அதேப்போல் கொலைத்திட்டத்திற்கும் சரியான கொலைக் கருவியை தேர்வது மிக அவசியமாகிறது.





துப்பாக்கி மிகச் சிறப்பான கருவியாக இருக்குமெனப் பட்டது. யாரிடம் போய் துப்பாகி வாங்கிக் கொள்வது. பீட்டர், ஆமாம் அவன் தான் சரியான ஆள். கோவான்ஸ் காரன். எவர்ஸைன் நகர் பகுதியில் அவன் பெயரைக் கேட்டால் பீதி. பீட்டரைப் பிடித்து துப்பாக்கி வேண்டுமென்றேன். விலைக்கு வேண்டாம் வாடகைக்கு கிடைத்தால் போதுமென்றேன். விஷயம் கேட்டான். ஒன்றுமில்லை பயன் படுத்திப் பார்க்கத்தான் என்று சமாளித்தேன்.



அவன் பெரிதாய் கேள்விகள் கேட்கவில்லை. மறுநாள் தருவதாக சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பேண்டிலிருந்து பிதுங்கி வெளியே தெரியும் புட்டத்தைக் காட்டிக் கொண்டு போய் விட்டான். அவன் ஏன் எதற்கு என்று கேட்காதது வியப்பாக இருந்தது.



அவளைச் சந்திக்க அழைப்பு விடுதாயிற்று. எந்த தடையுமில்லாமல் வருவதாக வாக்களித்தாள். ஏன் வரமாட்டாள். வந்துதான் ஆக வேண்டும். அவள் அழைத்த போதெல்லாம் நான் ஓடியிருக்கிறேனே.



துப்பாக்கியை ஒரு துணியில் பொதிந்து கொடுத்தான். ‘ புல்லட்ஸ்’ என்று கேட்டேன். லோட் செய்திருப்பதாக சொன்னான். ஆகா, எவ்வளவு அற்புதமான நண்பன் கிளம்பினேன். ‘ ஜாக்கிரதை/ எஞ்ஜாய்’ இந்த இரண்டு வார்த்தைகளையும் சிறிய இடைவெளியில் சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பிதுங்கிய புட்டத்துடன் போய் விட்டான்.



துப்பாக்கி பயன் படுத்த சரியான இடம் போரிவலி நேஷனல் பார்க். அடர்த்தியான காட்டுப் பகுதி. பல கொலை செய்திகளை பத்திரிக்கைகளில் வாசித்திருக்கிறேன். மும்பையில் பரந்த பசுமைப் பகுதி இது. எங்கும் குளுமையும், பறவைகளின் கீறிச்சிடும் சத்தங்களும் மட்டுமே இருந்தன.



சில முத்தங்களையும் தழுவல்களையும் பரிமாறிக் கொண்ட பின் அவளை நான் ஷுட் செய்யப் போவதாச் சொன்னேன். ‘ அப்படின்னா.. பண்ணு’ என்று மூன்றடி விலகி நின்று இடுக்கில் கைகளை ஊன்றி போஸ் கொடுத்தாள். குறி தப்பி விடக் கூடாது என்று அருகில் நின்றபடியே துப்பாக்கியை எடுத்து அவளை நோக்கிப் பிடித்தேன்.



‘’ ஹேய், என்ன இது? மொபைல் போன்ல ஷுட் பண்ணுவன்னு பார்த்த துப்பாக்கிய எடுக்கிற?’ என்றாள். இடுப்பிலிருந்து கைகளை அகலமாகப் பரப்பி சாவதற்கு சவுகரியமாக நின்றாள். ‘ஹா..ஹா’ வென வில்லன் சிரிப்பு சிரித்து விட்டு ‘டிஸ்கியாவ்’ என்று சுட்டேன். ‘’ஆ..ஆ..ஆ’’ என்று கத்தி கொண்டு வயிற்றை இரண்டு கைகளாலும் பொத்திக் கொண்டு கத்தினாள்.



’சக்ஸஸ்’ என்று வெற்றிக் களிப்பு கொண்டேன். ஆனால் மார்பை நோக்கி வைத்த குறி வயிற்றில் பாய்ந்தது கொஞ்சம் அவமானமாக இருந்தது. ‘ ஒரு தோட்டாத்தான் இருந்துச்சா?’ என்று கேட்டபடி மீண்டும் கைகளை அகட்டி நின்றாள். ‘ டிஸ்கியாவ்... டிஸ்கியாவ்’’ பெரிய சத்தம் மட்டுமே வந்து கொண்டிருந்தது. தோட்டாக்கள் வெடித்தன. ஆனால் பாயவில்லை. சதையைக் கிழித்துக் கொண்டு அவளைக் கொல்ல வில்லை. தோட்ட வெடித்த சத்தம் கேட்கு வெகு தூரத்தில் கூட ஒரு பறவைகள் படபடவென பறந்தோடுவதை உணர முடிந்தது.



’குடு நான் சுடுறேன்’ என்று வாங்கி வானத்தை நோக்கி சுட்டாள். பின் என்னை நோக்கி. நானும் செத்துப் போவது போல் நடித்தேன். நிஜமாகவே செத்துப் போய் விடலாம் போல் இருந்தது. பீட்டர் சொதப்பி விட்டான். அவள் சாகாதது கடுப்பாக இருந்தது. அவள் துப்பாக்கியை அப்படி இப்படி பிடித்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். சினிமா வில்லன்களைப் போல் அபிநயித்துக் கொண்டிருந்தாள்.



அன்று மாலையே பீட்டரை சந்தித்தேன். கடுமையான கோபத்துடன் ‘இதில் இருந்த தோட்டாக்கள் போலியானதா?’ என்று கேட்ட கேள்விக்கு. ஆமாம். ரொம்ப கஷ்டப் பட்டு அதனை வாங்கி வந்தாகச் சொன்னான். எஞ்ஜாய் பண்ணினாயா என்று கேட்டான். துப்பாக்கியை வாங்கி இன்னொருவனிடம் கொடுத்து பத்திரப் படுத்த சொல்லி விட்டு மொபைலில் பேசியபடி பிதுங்கிய புட்டம் காட்டிச் சென்றும் விட்டான்.



போலி குண்டுகளை ஏன் கொடுத்திருப்பான் என்று விளங்கவில்லை. அவளைக் கொலை செய்யக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் நழுவிப் போனது குறித்து வருத்தமாக இருந்தது. தொலைபேசியில் ‘மிஸ் யூ’ என்ற குறுஞ்செய்திக்கு.. ‘ ஐ ரியலி மிஸ்ட்’ என்று ரிப்ளை எழுதினேன்.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 4

நான்கு




கத்தியால் குத்திக் கொலை செய்தல் பாரம்பரிய கொலை யுக்திகளில் ஒன்றாகும். ஆனால் இது மிக எளிய முறை. மேலும் இது ஆபத்தானதும் கூட. அதாவது கொலை செய்பவருக்கு ஆபத்தானது. காரணம் கத்தி ஒரு தடையமாகி விடக் கூடும். கொல்லப் பட்டவர் குத்திக் கொல்லப் பட்டால் காவல் துறையினருக்கு கொலையாளியைக் கண்டு பிடிப்பதில் அத்தனை சிரமம் இருக்காது.



கத்தியால் ஒருவரின் உடல் பாகத்தைக் கிழித்து ரத்தமிழக்கச் செய்து கொல்வது கொடூரமானதும் கூட. அதுவும் வயிறு இதயம் போன்ற பகுதியில் குத்தினால் மரணம் சம்பவிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. கத்தியை ஆழமாக குத்தி பின் திருகி இழுத்தால் உள்ளுருப்புகள் அறுந்து காப்பாற்ற முடியாது என்றும் படித்திருக்கிறேன். ஆனால் வேறு பாகங்களில் குத்தினால் கொல்லப் படுபவர் தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கழுத்தை அறுத்து விடலாம். மரணம் நிச்சயம் ஆனால் அதற்கு கொலை அனுபவம் அவசியம்.



இவள் என் காதலி. அவளது கழுத்தை எத்தனை முறை முகர்ந்திருப்பேன். இன்னும் அவளது கழுத்தின் பிரத்யேக வாசனை என் மூளையின் முடிச்சுகளில் சுருண்டு கிடக்கிறது. மார்பு பகுதி பற்றி என்ன சொல்ல. அது சொர்க்கத்தின் வாசல். வயிற்றுப் பகுதியில் ஒரு பூனையைப் போல் எத்தனை நாள் என் தலை வைத்து இதம் கண்டிருக்கிறேன்.



அவள் சருமம் பற்றி சொல்லச் சொல்லித் தீராது. இப்படியிருக்கையில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் எப்படி கொல்ல முடியும். அதுவும் இதற்கு முன்னான முயற்சிகளில் நான் அவளைக் கொலை செய்யப் போவது அவளுக்குத் தெரியாது. நான் தோல்வி கண்டது குறித்து அவளுக்கு கிஞ்சித்தும் அறிவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தில் தவறினால் பின் அவள் சுதாரித்துக் கொள்ளக் கூடும். எனினும் முயற்சித்துப் பார்த்து விடுவது என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன்.



மும்பையின் புறநகர்ப் பகுதியில் வைத்து அவளைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ள காரணத்தால் அங்கிருந்து சுமார் இரண்டு மணி நேர பயணத் தொலைவிலுள்ள நவிமும்பைக்குச் சென்று அங்குள்ள ஹைபர் சிட்டி மாலிலிருந்து கூர்மையான கத்தி ஒன்றை வாங்கினேன். கத்தியில் கடுமையான கூர்மை இருந்த போதிலும் மீண்டும் அதனை சைக்கிளில் வந்த கத்தி தீட்டுபவனிடம் கொடுத்து இன்னும் கூர்மையாக்கி கொண்டேன். கத்தியின் கூர்மை பகுதி கொஞ்சம் இளைத்துப் போய் கடுமையான கூர்மை பெற்றிருந்தது. இதனை கத்தி என்று தமிழில் சொல்லிக் கொண்டாலும் இது பிளேடு வகையைச் சேர்ந்தது. அதாவது இதில் அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சவரம் செய்யும் பிளேடுக்கு நிகரான கூர்மையைக் கொண்டது.



கத்தியில் கைரேகைப் படக் கூடாது என்பதற்காக அதன் பிடியில் பிளாஸ்டிக் காகிதம் சுத்தினேன். அதனை மறைவாக படுக்கையில் மறைத்து வைத்தேன். ஆமாம் இந்த முறையும் என் வீட்டார் இல்லாத ஒரு நல்ல வாய்ப்பு.



வழக்கம்போல் வந்தாள். நான் வழக்கத்திற்கு மாறாக அவளை தொட்டுப் பேசினேன். சற்றே வியந்தாள். அதிகமாகவே பிகு செய்தாள். அவளாகத் துவங்கியிருந்தால் இப்படி செய்திருக்க மாட்டாள். எல்லாப் பெண்களும் இப்படித்தானாம். நண்பர்கள் அனுபவம் பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு முத்தம் கொடுக்கக் கூட நிறைய பிரயத்தனப் பட வேண்டியதிருக்கிறது.



அப்படியிப்படி அவளை மூடுக்கு கொண்டு வந்து விட்டேன். இடுப்போடு அணைத்தபடி படுக்கைக்கு கொண்டு சென்றேன். உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சில நொடிகளில் அவள் பிணமாகி விடக் கூடும். அவள் உடலை அப்புறப் படுத்துவது குறித்து பெரிதாய் யோசித்திருக்கவில்லை. ஆனால் அவளைக் கொன்று விடும்பட்சத்தில் இதற்கெல்லாம் வழி கிடைக்காமலா போய் விடும் என்று சமாதானமானேன்.



நாற்பத்தாறு கிலோ எடை முழுவதும் காதலாகி என்னைப் பார்த்தாள். அத்தனைக் காதலும் கண்களில் தேக்கி எனக்குக் காண்பித்தாள். அங்கே வெறும் காதல் மட்டுமே இருந்தது. இன்றையத் தழுவலில் அவள் கண்டிப்பாய் காம உணர்வை எட்டவில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் உடலில் காதலுமில்லாமல் காமமுமில்லாமல் கொலைவெறியும் அச்செயலுக்கான தயக்கமும் தான் இருந்தது. அவள் உடலையும் உணர்வையும் நான் புரிந்து கொண்டது போல் என்னையும் அவள் புரிந்து கொண்டிருப்பாலோ என்ற ஐயம் வேறு.



அவளது மென்மையான தொடுகை உடல், மனம் இரண்டிருலும் மாற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. முழுமையான மாற்றம் கண்டுவிடும் முன் அவள் கதையை முடித்து விட வேண்டும்.



அவள் மேல் படர்ந்த நிலையில் படுக்கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுக்க முயன்றேன். கத்தியின் கூர்மையானப் பகுதி என் நான்கு விரல்களையும் பதம் பார்த்தது. மேலும் கத்தியில் கைபட்ட இடமெல்லாம் குருதி கொட்டிக் கொண்டிருந்தது. ‘ஆ’ வென்ற அலரலுடன் துள்ளினேன். கையிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.



பதற்றத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தவள் சத்தமிட்டு அழுதாள். ’எப்படியாச்சு? எங்க கைய வச்ச?’ என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தன் இடுப்புக்குக் கீழேப் பார்த்தாள். பின் என் கைகளை அழுந்த பிடித்துக் கொண்டு முதலுதவிக்காக பொருட்களைத் தேடினாள். படுக்கைக்கு அடியிலிருந்து கவனமாக கத்தியை எடுத்தாள். ‘ இத யாரு இங்க வச்சது?’ ‘ அதையேன் நீ இந்த நேரத்தில எடுத்த?’ என்பது போன்ற விடை வேண்டா கேள்விகளைக் கேட்டபடி கத்தியை கவனமாக மேசையின் மேல் வைத்தாள். அவள் குரல் மெலிந்து போயிருந்தது. எனக்கு உண்டான காயத்திற்காய் அவள் அழுது கொண்டிருந்தாள்.



அருகிலிருந்த டாக்டர் ஷர்மாவிடம் கூட்டிப் போனாள். தையல் போடும் அளவுக்கு காயம் பெரியதாயும் ஆழமாயும் இல்லையென மருந்திட்டு கட்டுப் போட்டு அனுப்பி வைத்தார். காயம் பட்ட கையை குழந்தை போல் ஏந்திக் கொண்டு தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து சூடான கண்ணீர்த் தாரை வழிந்து கொண்டிருந்தது.



என் உடலும் காதலால் பெருகி அவளை அனைத்துக் கொண்டது. தனது கூர்மை முழுமையாய் பயன் படுத்த படாத நிலையில் வெறித்துக் கொண்டிருந்தது மேசையின் மேல் கத்தி.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 3

மூன்று




பள்ளித் தோழன் ராஜன், கராஜ் வைத்திருக்கிறான். அவனிடம் வரும் வண்டிகளை எடுத்துக் கொண்டு நாங்கள் பல சாகசங்களைக் கற்று வைத்திருந்தோம். பழுதுபார்க்க வந்திருக்கும் வண்டிகளை எங்கள் ஆசை தீர ஓட்டி விளையாடி விட்டுத்தான் உரிமையாளரிடம் கொடுப்பது வழக்கம்.





ராஜனிடம் நல்ல வண்டி ஒன்றைக் கேட்டேன். சந்தையில் புதிதாக வந்த வண்டியொன்று கிரிசிங் பணிக்கு வந்திருப்பதாக சொல்லி காட்டினான். நான் எடுத்துப் போகக் கேட்டேன். உரிமையாளரை எப்படியாவது அவன் சமாளித்து விடுவான். ஆனால் அவன் யாரையோ வெளியில் கூட்டிப் போவதாய் செய்திருந்த திட்டம் நடக்காது. வேறு பிரச்சனை இல்லை. வெள்ளிக் கிழமை இரவு எடுத்துக் கொண்டு போன வாகனத்தை என் அடுத்த திட்டதிற்கு தயார் படுத்தினேன். சனிக் கிழமை மாலை அவளை அழைத்துப்போய், சொர்க்கலோகம் அனுப்பி வைக்க திட்டம். அவள்தான் சொர்க்கத்திற்குப் போக வேண்டி வாரம் தவறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறாளே.



மூன்று முறை ஐ லவ் யூக்கள் சொல்லி அவள் அழகை வர்ணித்த பின்னர் அன்று மாலை மரண பயணத்திற்கு சரி சொன்னாள். கார் என்றதும் அலுவலகத்துக்கே மட்டம் போட்டு விடுவதாய் துள்ளினாள். வேண்டாம் மாலை வந்தால் போதுமென சமாதானப் படுத்தினேன்.



நீண்டதொரு ரப்பர் குழாய் வாங்கி வாகனம் வெளியேற்றும் கார்பனை வண்டிக்குள் விட்டு அவளை கார்பன் மோனாக்சைடு மூலம் கொல்லத் திட்டம் போட்டேன். காந்திவிலி சார்கோப்பைத் தாண்டி அடர்ந்திருக்கும் புதர் பகுதிக்கு காரைச் செலுத்தினேன். சில கேக் துண்டுகளும் சாக்கலேட் கட்டிகளும் கடிக்கக் கொடுத்தேன். குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி சுற்றுமுற்றும் நோட்டமிட்டேன். பார்வை எட்டும் தூரம் வரை ஆளில்லை. கார் இல்லை. கருப்பு கண்ணாடி ஏற்றிய காருக்குள் என்னை கட்டிக்கொண்டாள். வண்டியை ஆப் செய்யாமல் இருந்தேன். பெட்ரோல் டங்கி நிரம்ப மரணம் சூடாகிக் கொண்டிருந்தது.



காரிலிருந்து இறங்கி ரப்பர் பைப்பை கார்பன் குழாயுடன் சைலன்சர் குழாயை இணைத்தேன். தண்ணீர் வாங்கச் செல்வதாக சொல்லிக் கிளம்பினேன். காரின் அத்தனை கதவுகளின் ஒயர்களையும் அறுத்து விட்டிருந்தபடியால் உள்ளிருந்து திறக்க இயலாதபடி செய்து விட்டேன். இன்னும் ஐந்தாறு நிமிடங்களில் அவள் மூச்சுத் திணறி செத்து விடுவாள் என்று மனதுக்குள் ஒரு வில்லத்தனமான சிரிப்பு சிரித்துக் கொண்டேன்.



புகை கார் முழுவதும் பரவ காருக்கு ஆக்சிலேட்டர் இயங்கிக் கொண்டிருந்தது. புகை காருக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நிரம்பிக் கொண்டிருக்கும் என்று முழுமையாய் நம்பினேன். ரப்பர் பைப்பை இணைத்தப் பின் புகை வருவது குறித்து எனக்குத் தெரியவில்லை. கண்ணாடி வழி காருக்குள் பார்க்கவும் முடியாது. ஆனால் என் திட்டம் புகையாய் பொசுங்கிப் போயிருக்கலாம் என்பது மட்டும் உணர முடிந்தது.



நான் காரிலிருந்து இறங்கிய மாத்திரத்தில் அவள் வீணாக இயங்கிக் கொண்டிருக்கும் காரை ஆஃப் செய்ய காரின் கீயை உருவி காரை நிறுத்தியிருக்கிறாள். காரின் கீ உருவப் பட்டு இஞ்ஜின் ஆஃப் ஆனதால் காருக்குள் புகை நிரம்பியிருக்கவில்லை.



என் திட்டம் புஷ்வானமாகி விட்டது என்பது உறுதியாகிப் போனாது. காரின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். கண்களில் பயத்தை நிரப்பிக் கொண்டு என்னைக் கட்டிக் கொண்டாள். காருக்குள் கார்பன் வாசனை தூக்கலாக இருந்தது.



காரை அப்படியே விட்டுப் போனதாலும் காருக்குள் புகை கசிந்த காரணத்தாலும் அவள் செய்வதரியாது காரின் சாவியை எடுத்ததாக பயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள். இனிமேல் எப்பொழுதும் இப்படி தனியாக விட்டுப் போக வேண்டாமென இருக்கமாக கட்டிக் கொண்டு சொன்னாள்.



கார் கண்ணாடிகளை இறக்கி விட்டேன். உள்ளே மாலை நேர மெல்லிய காற்று நிரம்பிக் கொண்டிருந்தது. அவளும் நானும் ஆழமாக சுவாசித்துக் கொண்டோம்.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 2

இரண்டு




மும்பையில் தற்சமயம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. காலியிடங்கள், சாக்கடைகள், பழையக் கட்டிடங்கள், குடிசை வீடுகள் என எல்லாப் பகுதிகளும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாய் மாறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான கட்டிடங்களை கட்டி முடிப்பதற்குள் பல உயிர் பலிகள் ஆகி விடுவது சகஜமாகிப் போனது. அது கட்டிடப் பணியின் போது ஏற்படும் விபத்துக்களால் மட்டுமல்ல, நில அனுமதி, அபகரிப்பு என பல ஆரம்பகட்ட பணிகளின் போது இந்த சாவுகள் சகஜமாகி விட்டன.





எனது வீட்டிற்கு எதிர்த்தார்போல் பிரபல பில்டர், பிள்ளைகள் விளையாட இருந்த மைதானத்தை வளைத்துப் போட்டு கட்டிட வேலையை ஆரம்பித்து விட்டிருந்தான். கடந்த ஆறு மாத காலமாக எப்பொழுதும் மண்ணும் சிமெண்டும் காற்றில் கலந்து சுவாசக் காற்றோடு கொஞ்சம் மண்ணையும் சிமெண்டையும் நாங்கள் சுவாசித்துக் கொண்டிருந்தோம்.



தினமும் குளித்தபின் மூக்கை துடைத்தால் ஒரு கண் மை டப்பாவை நிரப்பும் அளவுக்கும் மண் - சிமெண்ட் கலவையை மூக்கிலிருந்து துடைத்து எடுக்க முடியும். எனது அடுத்த திட்டம் இங்குதான். உயர்ந்த கட்டிடங்களுக்காக எழுப்பப் பட்டிருக்கும் எதாவதொரு தூண்களுக்குள் ஒன்றில் அவளை மயக்கமடையச் செய்து தள்ளி விட்டு சிமெண்ட் போட்டு விடுவது என்று.



திட்டத்தின் படி என் வீட்டார் இல்லாத ஒரு பொழுதில் அவளை வீட்டுக்கு அழைத்தேன். என் அழைப்பைத்தான் அவள் தட்டுவதில்லையே. வாழ்க்கை காலத்தால் ஆனது என்பதால் கிடைக்கும் பெரும்பாலான வாய்ப்புகளை அவள் தவற விடுவதில்லை. அவளிடம் பிடித்த குணம் இதுதான். அதே சமயம் பிடிக்காத குணமும் இதுவே. அவளுக்கு கிடைக்கும் அத்தனை அழைப்புகளையும் அவள் எப்படியாவது சமாளித்து அட்டண்ட் செய்து விடுவது எனக்கு கடும் துன்பத்தைக் கொடுத்தது.



அன்றும் வழக்கம் போல் அழகு தேவதையாக வந்திருந்தாள். அலுவகலத்திலேயே மெல்லிய அலங்காரமும் உதடுகள் மின்னச் சாயமும் மெல்லிய வாசனையுடனும் வந்தாள். கதவைத் திறந்ததும் வீட்டில் யாருமில்லாததை புரிந்து கொண்ட அவள் என் மேல் படர்ந்தாள். அப்படியே சில நிமிடங்கள் பேசாமல் இருந்தோம்.



எனக்கும் மனம் மாறி விடும் போல் இருந்தது. ஆனால் நான் எனது கற்பனையை கிண்டி விட்டேன். இதற்கு முன் நடந்ததைப் பற்றியெல்லாம் அசை போட்டேன். இதோ மூளையின் ஏதோ ஒரு பகுதியில் முடங்கிக் கொண்டிருந்த கொலை வெறி அவிழ்ந்து கொண்டது. ஆயத்தமாகி விட்டேன்.



இனிப்பு பண்டங்கள் என்றால் அவளுக்கும் என்னைப் போல் அலாதி பிரியம். மயக்க மருந்து கலந்து வைத்திருந்த கேரட் அல்வாவை கொடுத்தேன். பெண்களுக்கு அல்வா என்றால் என்ன ப்ரியமோ தெரியவில்லை. கோழி விழுங்குவதைப் போல் விழுங்கினாள். எனக்கும் ஊட்ட முயன்றவளைத் தடுத்து தப்பித்தேன்.



வீட்டிற்கு எதிரே நடக்கும் கட்டுமானப் பணியிடத்தை நோட்டமிட்டேன். வேலை முடித்து ஆட்கள் கிளம்பி விட்டிருந்தார்கள். நடமாட்டமும் குறைந்திருந்தது. அவள் முழுவதும் மயங்கிப் போகுமுன் கட்டித்தின் முதல் தளத்துக்கு கூட்டிப் போக முடிவு செய்தேன். அவளும் இசைந்தாள்.



என் வீட்டுக்கு வருவது அவளுக்கு பெரும் பிரச்சனை. அவள் அண்ணன்களும் மாமாக்களும் இங்கு உலவுவதுண்டு. ஆனால் ஒரு முறை எங்கள் காம்பவுண்டுக்குள் நுழைந்து விட்டால் நிம்மதியாகி விடுவாள். யாருக்கும் தெரியாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவள் என்னை வீட்டில் வைத்து சந்தித்துக் கொண்டிருப்பது வியப்பானதுதான். எனக்கு இதுவும் பிரச்சனையே. என் காதலுக்கு சாட்சியே இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அதுவே சாதகமாகவும் ஆகிப் போனது.



இப்பொழுது உடம்பிலிருந்த பய அதிர்வுகள் அடங்கிப் போயிருந்தன. இருள் படர்ந்த கட்டிடத்தின் முதல் தளத்துக்கு அவளை அழைத்துப் போனேன். எதையெதையோ காட்டிக் கொண்டிருந்த என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு முழுமையான மயக்கம் வரக் காத்திருந்தேன்.



ஒரு மாதிரி வயிற்றில் பிசைவது போல் உணர்வதாகச் சொன்னால். முகம் முழுவதும் வியர்த்து விட்டிருந்தது. திடிரென வாந்தி எடுத்தாள். அவள் கால்கள் தடுமாறின அவளாகவே கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். நான் அவளை எப்படியாவது முதல் தளத்தில் மரச் சட்டங்கள் அடித்து தயார் நிலையில் இருக்கும் பெரிய தூணுக்குள் தள்ளிவிட கடுமையாய் போராடினேன். நான் அவளைக் கட்டிப் பிடிக்க முயல்வதாகவும், தூணில் சாய்த்துக் கொண்டு சல்லாபம்செய்ய இருப்பதாகவும் அவள் நினைத்திருக்கலாம். மயக்க மருந்து அவளுக்கு இன்னும் தெம்பை கொடுத்ததோ என்னவோ. வேண்டாம்.. போகலாமென கட்டிடத்தின் வாசல் வரை வந்து மயங்கிப் போனாள்.



எதிரே இருந்த இரண்டு பெண்கள் ஓடி வந்து அவளுக்கு உதவினார்கள். என் வீட்டிற்குள் தூக்கிப் போயாயிற்று. அருகிலிருந்த டாக்டர் ஷர்மா வந்து விட்டார். வாந்தி தான் நல்ல மருந்தாக செயல் பட்டிருக்கிறது, பயப்பட ஒன்றுமில்லை புட் பாய்சன் என்று ஊசியும் மருந்து கொடுத்து விட்டு அரை மணி நேரத்தில் சரியாகி விடுமென்றார். இருநூறு ரூபாயுடன் என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டி விட்டு போய்விட்டார்.



ஒரு மணி நேரத்தில் எழுந்தும் விட்டாள். அவள் தோழியை அழைத்து அவளுடன் வீட்டிற்கு கிளம்பினாள். ஆழமான ஒரு முத்தம் கொடுத்தாள். அரை மயக்கத்தில் வீட்டுக்கு கிளம்பினாள்.



கட்டிடத்தின் அந்த நிரப்பப் படாத தூணையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 1

ஒன்று




கோரேகான் கிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல் ஃபேண்டசி லேண்ட் என்னும் கேளிகைப் பூங்கா உள்ளது. வார நாட்களில் இங்கு கூட்டம் குறைவாகவே இருக்கும். மார்வே கடலிலிருந்து முக்கால் மணி நேர படகு பயண தூரத்தில் குட்டித் தீவு ஒன்றில் இருக்கும் எஸ்சல் வொர்ல்டு சரி பட்டு வராது. அங்கே வாரம் முழுவதும் கூட்டமிருக்கும். வார இறுதி பற்றிச் சொல்லவே வேண்டாம்.



ராட்சத ராட்டினமும் ரோலர் கோஸ்டர் என்னும் உயர்ந்து தாழ்ந்து இருக்கும் ஒருவகை சறுக்கு விளையாட்டும் ஃபேண்டஸி லேண்டில் சிறப்பானவைகள். நான் தேர்ந்துள்ளது ரோலர் கோஸ்டரை. அதில் ஒரு திறந்த சதுரப் பெட்டிக்குள் இரண்டு பேர் மட்டுமே பாதுகாப்புக்கு இடுப்பு வார் அணிந்து கொண்டு பறக்க முடியும். சுமார் பத்து அடுக்கு கட்டிட உயரத்திற்குப் போய் தலைகீழாக சுழன்று கீழிறங்கும் அப்பெட்டிகள்.



இரண்டு நாட்கள் போய் உட்கார்ந்து சரியாகத் திட்டமிட்டு விட்டேன். வயிற்றிலிருக்கும் குடல் வகையாறக்கள் வாய்க்கு வந்து விடுவது போலிருந்தது. வரும் புதன் கிழமை அவளைக் கூட்டிப் போகத் திட்டம். அலுவலகத்திற்கு அல்வா கொடுத்து விட்டு அவள் வந்து விடுவாள். இப்படியான சமாளிப்புகளில் அவள் கில்லாடி.



புதன்கிழமை. ஷாம்பு போட்டு குளிப்பாட்டிய கூந்தல் காற்றில் அசைந்து அவளைச் சுற்றி ஒரு சிறிய சுற்றளவுக்கு வாசனை பரப்பிக் கொண்டிருந்தது. இதழ்களில் அழியாப் புன்னகை. கண்களில் பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கு அர்த்தம் எழுதிவிடும் அளவுக்கு செய்திகள். அவளைக் கண்டவர்கள், நின்று பார்த்தார்கள், நடந்து கொண்டே பார்த்தார்கள், பலர் அவளது உருவத்தை மனதுக்குள் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பிற சந்தர்ப்பங்களில் பயன் படுத்திக் கொள்ளக் கூடும்.



அவள் என்னருகில் வந்து நின்றதும் அவள் மீது பாய்ந்து கொண்டிருந்த பார்வை வெள்ளம் என்னையும் நனைத்தது. நான் அவளைக் கொலை செய்யும் காரணங்களில் இதுவும் ஒன்று. இவ்வளவு அழகாய், வடிவாய் அவள் பிறந்திருக்கக் கூடாது தான்.



”போகலாமா?’’ என்றாள். சரி என்னும் பாவனையில் அகலப் புன்னகை ஒன்றை உதிர்த்துக் கிளம்பினேன். என் தோளில் ஒரு கையை மட்டும் இறகு போல் ஊன்றிக் கொண்டு பைக்கின் பின்னிருக்கையில் உட்கார்ந்தாள். மலாடு ரயில்வே பாலம் தாண்டி, நெடுஞ்சாலை வழியாய் திண்டோஷி வந்து சேர்ந்தோம்.



அருகில் அவள் இருந்த காரணத்தால் ஏனோ மதியம் பனிரெண்டு மணிக்கான உஷ்ணத்தை உணர முடியவில்லை. பேண்டஷி லேண்டில் கூட்டமில்லை. எண்ணிவிடும் அளவுக்கே ஆட்கள். பெரும்பாலும் ஜோடிகள். எங்களைப் போல் என்று சொல்ல முடியாது. ஆனால் இன்றையத் தினம் கண்டிப்பாய் யாரும் எங்களைப் போல் இருக்கவே முடியாது. நான் அவளைக் கொலை செய்ய அல்லவா கூட்டி வந்திருக்கிறேன். ஜோடிகளில் பலரின் கண்களில் ஒருவருக்காக ஒருவர் உயிரைக் கொடுக்க தயாராய் இருக்கும் உணர்வே காணக் கிடைத்தது. என் கண்ணிலும் இந்த உணர்வு எக்கச்சக்கமாக இருந்திருக்கிறது. அதுவொரு காதல் காலம். இது கொலைக் காலம். உடலின் அத்தனை அனுக்களும் அவளைக் கொல்லத் துடித்துக் கொண்டிருந்தன.



டிக்கெட் எடுத்து விட்டு ஒரு பழச்சாறு குடித்தோம். அதுவும் அவளுக்குப் பிடித்த அன்னாசி பழச்சாறு. இரண்டு மூன்று விளையாட்டுகளில் மகிழ்ந்தாயிற்று. அடுத்து லோலர் கோஸ்டர். அவள் வர மறுத்தாள். பயப் படுவதாய் சொன்னாள். நான் விடுவதாயில்லை. என் திட்டம் என்னாவது. ‘ நான் தான் பக்கத்தில இருக்கேன்ல’ என்று இழுத்துப் போனேன்.



பெட்டியில் உட்கார்ந்தாயிற்று. இடுப்பு வார் கட்டியாயிற்று. பெட்டி புரப்பட்டது. அவள் கண்களை மூடிக் கொண்டாள். என் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். மிகுந்த சிரமத்திற்குப் பின் அவளது கைகளை விலக்கி அவளைத் தனிமை படுத்தினேன். அவள் கொஞ்சம் பயம் தெளிந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள். இதுதான் சமயமென அவளது இடுப்பு வாரை கையில் வைத்திருந்த பிளேடால் வெட்டி விட்டேன். அவளுக்குத் தெரியவில்லை. திட்டம் மிகச் சரியாக ஒவ்வொரு கட்டமாய் நகர்ந்து கொண்டிருந்தது.



குறிப்பிட்ட இடத்தில் தலைகீழாக ஏறி இறங்கியது பெட்டி. அவள் எம்பினாள். அவளைப் பிடித்து தள்ளப் பார்த்தேன். நான் வேடிக்கை செய்வதாக எண்ணி என்னை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். எத்தனை முயன்றும் அவளை பெட்டியிலிருந்து தள்ளி விட முடியவில்லை. புரப்பட்ட இடத்துக்கே பெட்டி வந்து சேர்ந்தது. இடுப்பு வாரைப் பார்த்தவள் திடுக்கிட்டாள். ’நல்லவேளை ஒன்னும் ஆகலை’ என்றும் நான் கூட இருந்ததால் எல்லாம் நலமாக இருந்தது என்றாள்.



பெட்டியிலிருந்து விழாமல் இருக்க அவள் பிடித்த இடங்கள் அப்படியே அச்சு பதிந்து விட்டிருந்தன. அவள் ஒரு பெரும் சாதனையைச் செய்து விட்டு வந்தவளைப் போல் பெட்டியிலிந்து இறங்கினாள். நான் படு தோல்வியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தேன்.



மீண்டும் பழச்சாறு பருகினோம். இம்முறை நான் எனக்குப் பிடித்த ஆரஞ்சு பழச் சாறும், அவளுக்கு அன்னாசி பழச்சாறும் வாங்கிக் கொண்டோம். அவள் கைப்பேசியில் தனது தோழி ஒருத்தியிடம் ( அது தோழனாகக் கூட இருக்கலாம்) செத்துப் பிழைத்தவளைப் போல் அனுபவம் பகிர்ந்தாள். உண்மையாகவே சாகப் போனவள் பிழைத்தாள் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை.



ஒரு தழுவலுடனும் நான்கு முத்தங்களுடன் முதல் திட்டம் தவிடு பொடியானது.