சில வரலாற்று நூல்கள் 4 தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
[Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974]
தென்னாட்டு பாளையக்காரர்களைப்பற்றி நம்நாட்டினர் யாராவது சுதந்திரத்துக்குப் பின்னர் நல்ல நூல்களை எழுதியிருக்கிறார்களா என வரலாற்றுப் பேராசிரியர்களைக் கேட்டேன். பெரும்பாலானவர்கள் ராஜையன் மட்டும்தான் எழுதியிருக்கிறார் என்றார்கள். பேராசிரியர் ராஜையன் மதுரை பல்கலையில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக விளங்கியவர். இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தில் [ஐ.சி.எச்.ஆர்] உறுப்பினராக இருந்தவர். பொதுவாகவே அவர்மீது கல்வித்துறையில் ஒரு மதிப்பு இருக்கிறது. அவரது தென்னிந்தியப் புரட்சி [The South Indian Rebellion ]முக்கியமான நூலாக கருதப்படுகிறது. அந்நூலை பொன்.முத்துராமலிங்கம் தழுவி தென்னட்டுப்புரட்சி என்று தமிழில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். மு.கருணாநிதியின் தென்பாண்டிச்சிங்கம் என்ற நாவலுக்கு ஆதாரமும் ராஜையனின் நூலே என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜையனின் தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவராலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு வந்திருப்பதாகச் சொன்னார்கள்.பலவாறாகத் தேடியும் அந்நூல் கிடைக்கவில்லை. இந்த நூல் பாளையப்பட்டுக்களைப் பற்றி அறியும் ஆவலுடன் வாசிக்கும் ஒரு பொதுவாசகனுக்கு ஏமாற்றம் அளிப்பது என்பதே என் எண்ணமாகும்.
சிறிய இந்த நூல் பாளையப்பட்டுக்கள் உருவான வரலாறை சுருக்கமாகச் சொல்கிறது. பொதுவாக தென்னாட்டைக் கைப்பற்றி முடிசூடிய விஜயநகரத்தளபதி விஸ்வநாத நாயக்கர் காலத்தில் [1528-1564] அவரது தளவாயாக இருந்த அரியநாத முதலியார் பாளையப்பட்டுகக்ளை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. பேரா சத்தியநாத அய்யர் இதை எடுத்துக் கூறுகிறார்.
ராஜையன் பாளையப்பட்டு என்ற அமைப்பு முன்னரே ஏதோ வடிவில் தமிழ்நாட்டில் இருந்தது என்று ஊகிக்கிறார். தமிழ்நாட்டு அரச அமைப்பு மூன்று அடுக்கு கொண்டது. மேலே மன்னர். அவருக்குக் கீழே அவருக்குக் கட்டுப்பட்டு கப்பம் அளித்து ஆனால் காவல்பொறுப்பும் வரிவசூல் உரிமையும் கொண்டு ஆட்சிசெய்த குறுநில ஆட்சியாளர்கள். அவர்களுக்குக் கீழே கிராமத்து ஆட்சியாளர்கள். இந்த குறுநில ஆட்சியாளர்கள் தொடர்ந்து உருவாகியும் மறைந்தும் வருகிறார்கள். மாலிக் காபூரின் படையெடுப்பால் பாண்டிய குலம் சிதறியபோது பாண்டிய வம்சாவளியைச் சேர்ந்த பலர் பலபகுதிகளில் குடியேறி சிறு நிலப்பகுதிகளை ஆட்சி செய்திருக்கிறார்கள். உதாரணமாக கயத்தாற்றை தலைநகரமாகக் கொண்டு பஞ்ச வழுதிகள் என்ற பேரில் ஐந்து பாண்டியர்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்களை அரியநாத முதலியார் வென்று அழித்தார் என்று வரலாற்றில் தெரிகிறது.
எட்டையபுரம் பாளையக்காரர் உண்மையில் விஜயநகர படையெடுப்புக்கு முன்னரே சந்திரகிரியில் இருந்து பாண்டிய நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னரிடம் இருந்து மண்ணை பெற்றுக் கொண்டு எட்டயபுரத்தை ஆள ஆரம்பித்தவர். போடிநாயக்கனூர் பாளையக்காரரும் இவ்வாறு மலையாள ஜெயத்துங்க நாட்டு மன்னனிடமிருந்தே நிலத்தைப் பெற்றார்.
அரியநாதர் இந்த ஆட்சியாளர்களை பாளையக்காரர்களாக வரைமுறை செய்து ஒரு நிலையான அமைப்பை உருவாக்கி பாளையப்பட்டு என்று பிற்பாடு அழைக்கப்பட்ட ஆட்சிமுறையை உருவாக்கினார். பொதுவாக இப்பாளையப்பட்டு முறை ஒருவகை ‘குத்து மதிப்பான’ கணக்காகவே இருந்தது என்று சொல்லும் ராஜையன் திருவிதாங்கூர் அரசும் ராமநாதபுரம் சேதுபதி நாடும் எல்லாம் மதுரையின் பாளையங்களாக சொல்லப்பட்டாலும் அவை எந்த அளவுக்கு மதுரைநாட்டின் பகுதிகளாக இருந்தன என்பது கேள்விக்குறியே என்பதை விளக்குகிறார். கிழவன் சேதுபதி காலத்தில் சேதுநாடு தனியாகப்பிரிந்து சுதந்திர நாடாகியது. அதை மதுரையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1730க்குப்பின்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்ட திருவிதாங்கூர் வடகேரளத்தை வென்று தனிநாடாகியது. ஆற்காடு நவாப் அன்வாருதீன் கான் இலங்கையிலும் தனக்கு பாளையப்பட்டுக்கள் இருப்பதை குறிப்பிடுவதை எடுத்துக்காட்டும் ராஜையன் அவருக்கு அந்நிலப்பகுதியுடன் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்.
பாளையக்காரர் என்ற அமைப்பின் அடிபப்டை ஊர்களில் விளங்கிய ஊர்க்காவல் என்ற முறையே என்று விளக்குகிறார் ராஜையன். ஊர்க்காவல் தலையாரி என்னும் ஊர்க்காவலர் குழுவால் நிகழ்த்தப்படுகிறது. அதை வழிநடத்துபவர் மணியக்காரர் என்னும் ஊர்த்தலைவரும் கர்ணம் என்னும் கணக்குப்பிள்ளையும். இவர்கள் பாளையப்பட்டுகளுக்கு ஊரில் வசூலாகும் வரியை அளிக்கிறார்கள். பாளையப்பட்டுக்களுக்கும் ஊர்களுக்கும் இடையேயான தொடர்பு இதோடு முடிந்துவிடுகிறது. பாளையப்பட்டுகக்ளின் ஒரே வேலை ஊர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்வதுதான் .
இந்த ஊர்க்காவல் என்பது ‘திருடனைப்பிடிக்க இன்னொரு திருடனை நிறுத்துவது’ என்ற முறையில் அமைந்தது [பக்கம்31] என்று சொல்லும் ராஜையன் இந்த ஊர்க்காவல்படை பிற ஊர்களில் திருடுவதை தொழிலாகக் கொண்டிருந்தது என்கிறார். பாளையக்காரர்- ஊர்க்காவல் என்ற இரு அமைப்புகளும் ஒன்றையொன்று வளர்த்தன என்று சொல்கிறார்.
பாளையக்காரர்கள் போரில் மன்னரின் மைய ராணுவத்துக்கு ஆளும் ஆயுதங்களும் பணமும் அளித்து உதவ வேண்டும். பாளையம் என்றாலே வைப்புராணுவம் [ரிசர்வ் ஆர்மி] என்றுதான் பொருள். ஆனால் மைய அரசு வலுவாக இருந்த நாட்களில் மட்டுமே பாளையக்காரர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் மையராணுவத்தின் வேலையே பாளையக்காரர்களை கட்டுபப்டுத்துவதுதான். திருமலை நாயக்கர் காலத்தில் எட்டையபுரம் நாயக்கர் தலைமையில் பாளையக்காரர்கள் கிளர்ச்சி செய்ய அதை ராயர் ராமநாத புரம் சேதுபதியை அனுப்பி அடக்கினார். அந்த ராமநாதபுரம் சேதுபதியே பின்னர் மங்கம்மாள் காலத்தில் கலகம் செய்தார்.
பாளையக்காரர்கள் பெரும்பாலும் நேர்போர் செய்வதில்லை என்று ராஜையன் சொல்கிறார்.[ பக் 35] போர் என வந்தால் உடனே நாட்டை கைவிட்டுவிட்டு காடுகளில் ஏறிச் செல்வது அவர்களின் வழக்கம். அதாவது அவர்களுக்கு காவல் வரி கட்டிய மக்கள் எதிரியின் கருணைக்கு விடப்படுவார்கள். காரணம் பாளையக்காரர்களில் எட்டையபுரம், போடிநாயக்கனூர், தலைவன் கோட்டை, நெற்கட்டும்செவல் ,பாஞ்சாலங்குறிச்சி போல சில தவிர பிறருக்கு பெரிய ராணுவமோ போர்பலமோ இல்லை.
இந்நூலின் பெரும்பகுதி பாளையக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கும் உள்ள உறவைப்பற்றியதாகும். பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் பிரிட்டிஷார். உண்மையில் அவர்கள் அதை அப்படியே ஜமீந்தாரி முறையாக மாற்றிக் கொண்டனர். எட்டயபுரம், புதுக்கோட்டை, கடம்பூர், சேத்தூர், சிவகிரி, சொக்கம்பட்டி போல அவர்களுக்கு ஆதரவாக நின்ற பாளையக்காரர்களை ஜமீந்தார்களாக ஆக்கினார்கள். அவர்களை எதிர்த்த பாஞ்சாலங்குறிச்சி [வீரபாண்டிய கட்டபொம்மன்] நெற்கட்டும் செவல்[புலித்தேவன்], சிவகங்கை [மருதுபாண்டியர்]போன்றவற்றை முற்றாக அழித்தனர். சிவகங்கையின் பெரும்பகுதி புதுக்கோட்டை ஜமீனுக்கு அளிக்கப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியும் நெற்கட்டும் செவலும் பெரும்பாலும் எட்டையபுரத்துடன் சேர்க்கப்பட்டு அது ஒரு குட்டி சம்ஸ்தானம்போல விரிந்தது.
வெள்ளையர் பாளையக்காரர்களுடன் நடத்திய போர்களை குறிப்பிட்டு பாளையக்காரர்களின் ராணுவபலத்தை முற்றிலும் இல்லாமல்செய்ததை விவரிக்கிறார் ராஜையன். அவர்கள் பிற்பாடு வெறும் வரிவசூல் முகவர்களாக ஆனார்கள். சுதந்திர இந்தியாவில் முற்றாக ஒழிக்கப்பட்டார்கள். இந்நூலின் பிற்பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் வெள்ளை ஆட்சிக்கும் நடந்த பூசலும் பின்னர் மருது சகோதரர்களின் கலகமும் பிரிட்டிஷ் குறிப்புகளை அடியொற்றி கூறப்படுகின்றன.
*
ராஜையனின் நூலை இந்திய வரலாற்றாய்வில் இருக்கும் ஒரு சமகாலப்போக்கின் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். ஆங்கிலத்தில் வாசிக்கவும் எழுதவும் உள்ள திறனையே முதன்மைத்தகுதியாகக் கொண்டு இயங்கும் ஓருவகை ‘குமாஸ்தா’ ஆய்வு இது. [சமகாலத்தில் இதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்] ஆங்கில நூல்களை மட்டுமே நம்பி தமிழக ஆய்வைச் செய்வதும் தமிழ் தெரிவதனால் கிடைக்கும் சர்வ சாதாரணமான தகவல்களை அரிய ஆய்வுத்தகவல்களாக ஊடே தெளித்து விடுவதும் இவர்களின் வழிமுறை. இந்த நூல்களுக்கு மேலை ஆய்வாளர் மத்தியில் வரவேற்பு இருப்பது இவர்கள் அடையும் பதவிகள் அங்கீகாரங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது. ஆனால் வரலாற்றை அறிய ஆவலுடன் படிக்கும் தமிழ் வாசகனுக்கு இந்நூல்கள் அளிப்பது ஆழமான ஏமாற்றமே.
ராஜையன் பிரிட்டிஷ் ஆவணங்களை மட்டுமே நம்பி இந்நூலை எழுதியிருக்கிறார். பாளையப்பட்டுக்களின் தோற்றம் அவற்றுக்கிடையே உள்ள உறவுச்சிக்கல்கள் குறித்து இந்நூலில் எதுவுமே இல்லை. சாதாரணமாக தமிழ் வாசகர்களுக்குத் தெரிந்த தகவல்கள் கூட இல்லை. எட்டையபுரம்,சொக்கம்பட்டி முதலிய பெரும்பாலான பாளையப்பட்டுக்கள் அவர்களுடைய தோற்றுவாய் வம்சவரலாறு முதலியவற்றை பேணி சிறு நூல்களாகக்கூட வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. பல்லாயிரம் ரூபாய் செலவில் லண்டன் நூலகத்துக்குச் செல்லத்துணியும் ராஜையன் நூறு ரூபாய் செலவிட்டிருந்தால் மதுரையில் இருந்து எட்டையபுரத்துக்கும் தெற்கேயும் வந்து பலமடங்கு தகவல்களைச் சேர்த்திருக்கலாம்.
எட்டையபுரத்துக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் எப்போதுமே பூசல்தான். எட்டையபுரம் நாயக்கர்கள் தொட்டியருக்குள் சில்லவார் குலம். பாஞ்சாலங்குறிச்சி நாயக்கர்கள் அதே சாதியில் தொக்லவார் குலம். இந்த வேறுபாடு உருவாக்கிய சிக்கலை நாம் ‘பேட்’டின் ஆவணப்பதிவில் காண்கிறோம். சமகால வரலாற்றை அறிய முயலும் வாசகனுக்கு இம்மாதிரி தகவல்கள் மிக முக்கியம். ராஜையன் இந்த விஷயங்களுக்குள் நுழைவதே இல்லை.
பாளையப்பட்டுக்களைப் பற்றி ஆங்காங்கே தமிழில் எழுதப்பட்டுள்ளது. அவை அறிவியல் சார்ந்தவையாக இல்லாமல் குலவரலாறாகவே உள்ளன. இவற்றை விரிவாகத்தொகுத்து அறிவியலடிபப்டையில் நோக்கினாலே நல்ல வரலாறுகளை எழுத முடியும். ஜகவீர பாண்டியனார் தன் பாஞ்சலங்குறிச்சி வீரவரலாறு நூலில் 72 பாளையப்பட்டுக்களைக் குறிப்பிடுவதை அ.கி.பரந்தாமனார் அவரது ‘மதுரை நாயக்க வரலாறு’ நூலில் சொல்கிறார்.
அவை, பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை,காடல்குடி, குளத்தூர்,மேல்மாந்தை, ஆற்றங்கரை,கொல்லம்பட்டி, கோலார்பட்டி, கடம்பூர், மணியாச்சி,தலைவன் கோட்டை, நெற்கட்டுச்செவல், சொக்கம்பட்டி, ஊத்துமலை,சேற்றூர், சிவகிரி,சிங்கம்பட்டி,அழகாபுரி,ஊர்காடு, சுரண்டை,சந்தியூர், ஏழுமலை,இராசாக்கநாயக்கனூர்,கோட்டையூர், மருங்காபுரி,மன்னார் கோட்டை, பாவாலி,இலக்கையனூர், முல்லையூர்,கடவூர், இடையகோட்டை,நிலக்கோட்டை, தேவாரம்,இராமகிரி, கல்போது, கன்னிவாடி, தொட்டப்பநாயக்கனூர், கம்பம்,காசையூர், வாராப்பூர்,தோகைமலை, படத்தூர், ஆய்குடி, சமுத்தூர்,விருப்பாட்சி, படமாத்தூர்,கண்டவநாயக்கனூர், காமயநாயக்கனூர், தும்பிச்சி நாயக்கனூர், நத்தம் வெள்ளியக்குன்றம்,மலையப்பட்டி, வடகரை, அம்மையநாயக்கனூர், போடி நாயக்கனூர்,சக்கந்தி, பதவல நாயக்கனூர்,ரோசலப்பட்டி, வீரமலை,பெரியகுளம், குருவிக்குளம், ஆத்திப்பட்டி, இளசைபட்டி, மதுவார்பட்டி,கோம்பை, கூடலூர்,கவுண்டன்பட்டி,குமாரவாடி, உத்தப்ப நாயக்கனூர், கொல்லக் கொண்டான்– என்று சொல்லபப்டுகிறது. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு பாளையப்பட்டுக்களின் வாரிசுகள் இன்றும் உள்ளன. இவர்களை அணுகி ஆய்வு செய்வதன் மூலமே இவ்வரலாற்றை எழுத இயலும். மாறாக ராஜையன் பிரிட்டிஷ் நூல்களைப் பார்த்து பாளையப்பட்டுக்களை எண்ண முயல்கிறார்
ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் ஆகியோரின் பழைய ஆவணப்பதிவுகளை வாசித்த பின் இந்நூலை வாசிக்கும் ஒருவர் இதில் மேலதிகமாக என்ன இருக்கிறது என்ற ஆச்சரியத்தையே அடைவார். சில சிறு தகவல்கள் சிற்சில ஊகங்கள் அவ்வளவுதான். ஆனால் முன்னர் சொன்ன பிரிட்டிஷ் எழுத்துக்கள் மிகமிக விரிவானவை. அவற்றின் தகவல்கள் ஒரு நவீன வாசகனுக்கு பெரும் களஞ்சியம் போன்றவை. உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை குமாரகிரி பாளையம் போன்றவை கற்குரிச்சி மறவர்கள். சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னிக்குட்டி மறவர்கள். இவர்கள் வன்னியர்கள் அல்ல என்ற துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார்.
ராஜையன் எழுதிய நூலில் இத்தகைய விவரங்கள் எதுவுமே இல்லை. கிட்டத்தட்ட கோனார் நோட் போடுவதுபோல இவ்வரலாறு எழுதப்பட்டுள்ளது. நம் கல்விதுறை அறிவுஜீவிகள் படிப்பவற்றைக் குறிப்பெடுத்து மீண்டும் எழுதுவதில் மட்டுமே தேர்ச்சி உடையவர்கள்.
இந்நூலின் பின்னடைவில் ஏறத்தாழ நூற்றைம்பது நூல்கள் மற்றும் ஆவணங்களை ராஜையன் பட்டியலிட்டுச் சொல்கிறார். அவற்றை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்தார் என்பதை எவ்வளவு தேடியும் நூலுக்குள் கண்டடைய இயலவில்லை.
எவ்வளவோ கேள்விகள் உள்ளன. பாளையக்காரர் என்ற முறையின் வேர்கள் எங்குள்ளன? முற்கால சோழ பாண்டிய ஆட்சிகளில் இருந்த வேளிர்கள், கடல்சேர்ப்பர்கள், குறவ மன்னர்கள் போன்றவர்கள் அடங்கிய அமைப்புக்கும் இதற்கும் ஏதேனும் தொடப்புச்சரடு உண்டா? பிற்கால சோழ பாண்டிய அரசுகளில் இருந்த குறுநில அரசர்களின் வம்சங்களுக்கும் இதற்குமான உறவு என்ன? பாளையக்காரர் முறை எவ்வகையிலேனும் அதிகாரப்பரவலுக்கும் பலவகை சாதிகள் உரிய பங்கைப்பெறும் ஒரு ஜனநாயக அமைப்புக்கு அவை உதவினவா?
அதற்கெல்லாம் பதில் தேட மீண்டும் நெல்சன்,பேட் போல ஏதேனும் வெள்ளையர்கள் வந்துதான் ஆய்வுசெய்யவேண்டும் என்று படுகிறது.இந்திய அரசும் பல்கலை மானியக்குழுவும் அதற்காக ஏதேனும் நிதியுதவிகள் செய்யலாம்.இவ்வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு அளிக்கும் பலகோடிகளில் சிறுபகுதியை ஒதுக்கினாலே போதுமானதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக