08 ஜூலை, 2011

பாளையக்காரரின் விடுதலைப் புரட்சி

பாளையக்காரரின் விடுதலைப் புரட்சி

18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் ஆதிக்கத்தை நிலை நாட்டிய ஆங்கிலேயர், பாளையக்காரர்களை நசுக்கியும், குடிமக்கள்மீது வரிச்சுமையை ஏற்றியும் பெரும் அதிருப்தியைச் சம்பாதித்தனர். இதன் பின்னணியில் ஏற்பட்டதே பாளையக்காரரின் விடுதலைப் புரட்சி ஆகும்.

வரலாற்றுப் பின்னணி
1736 ஆம் ஆண்டில் கர்நாடகத்தை ஆண்டுவந்த நவாபான சாந்தாசாகிபு, மதுரை நாயக்க அரசில் ஏற்பட்ட அரசுரிமைப் போட்டியைப் பயன்படுத்திக்கொண்டு, மதுரை நாயக்கர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் தமிழ்நாட்டின் தென்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். இதனால் இப்பகுதிகளுள் அடங்கியிருந்த பாளையப்பட்டுகள் அனைத்தும் கர்நாடக நவாபின் மேலாண்மைக்குள் அடங்கின.

பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னரையில் கர்நாடக, தஞ்சை அரசுகளுக்கு உதவியாளர்களாகவும், மத்தியஸ்தர்களாகவும் ஆங்கிலேயர் தமிழக அரசியலில் தலையிட்டு வந்தனர். மன்னர்களைக் கைக்குள் போட்டுக்கொண்ட அவர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்த பாளையக்காரர்கள் தங்கள் நோக்கங்களுக்குத் தடையாக இருக்ககூடும் எனக் கருதியதால், அவர்களை அடிபணியச் செய்வதில் முனைப்புக்காட்டி வந்தனர். பலர் அடிபணிந்தாலும், வேறுசிலர் இம்முயற்சிகளுக்கு எதிர்ப்புக் காட்டியே வந்தனர். நெற்கட்டுச் செவல் பாளையக்காரன் புலித்தேவனை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதெல்லாம் பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயற்பட்டு வந்ததை வரலாறு காட்டுகின்றது.

1792 இல், தஞ்சை, கர்நாடக அரசுகளிடையே இருந்த பகைமையையும், கர்நாடக நவாபின் வலிமை இன்மையையும் பயன்படுத்திக்கொண்டு, கர்நாடக நவாபுடன் செய்துகொண்ட உடன்படிக்கைப்படி தமிழ்நாட்டின் தென்பகுதி மீது ஆங்கியேயர் ஆதிக்கம் ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலேயர் பாளையக்காரர்களைப் பழிவாங்கினர். அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுப் பாளையங்களை ஒடுக்கினர். இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து ஆங்கிலேயரைத் துரத்துவதற்குச் சில பாளையக்காரர்கள் திட்டமிட்டனர்.

புரட்சிக் கூட்டிணைப்புகள்


ஆங்கிலேயர் ஆட்சி மக்கள்மீதும் அடக்குமுறைகளை ஏவிவிட்டது. தங்களுடைய வணிக நோக்கங்களுக்காக, உள்நாட்டுத் தொழில்களை ஆங்கிலேயர் முடக்கினர் இதனால் மக்கள் வறுமையில் வாடினர். ஆனாலும் இதுபற்றிக் கவனியாது வரிகள் உயர்த்தப்பட்டு, ஈவிரக்கமற்ற முறையில் மக்களிடமிருந்து அவை வசூலிக்கப்பட்டன. இச்சூழ்நிலை ஆங்கிலேய எதிர்ப்புணர்வு கொண்ட பாளையக்காரர்களை ஒன்றுபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. இக்காலத்தில் சில கூட்டிணைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை,

மருதுபாண்டியனின் கூட்டமைப்பு

திண்டுக்கல் கூட்டமைப்பு

தீபகற்பக் கூட்டமைப்பு


மருது பாண்டியர் கூட்டமைப்பு:
மருதுபாண்டியர் கூட்டமைப்பு என்பது சின்ன மருது தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய போராளிகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.

வரலாறு
வணிக நோக்கோடு தென்னிந்தியாவில் காலூன்றிய பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியார் தென்னிந்தியாவில் பாளயக்காரர்களுக்கு இடையே பிரித்தாளும் சூழ்ச்சியினைக் கையாண்டனர்.

முதல் பலிக்காடாவாக ஆனவர் ஆற்காடு நவாப். நவாபுக்கு இதுகாறும் கப்பம் செலுத்திவந்த தமிழக பாளையப்பட்டுக்கள் ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சுரண்டலுக்கு இரையாகின. பிரித்தானிய எதிர்ப்பு, ஓர் இயக்கமாக இல்லாவிடிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேர் விட்டுக்கொண்டிருந்த நேரம்.

1799 ஆம் ஆண்டு பிரித்தானியர் எதிர்ப்புப் புரட்சியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. திருநெல்வேலியும் மைசூரும் அன்னிய ஆதிக்கத்திற்கு இரையாயின. ஆங்கிலேயர்கள் பெற்ற இவ்வெற்றி தேசியப் போராட்டத்திற்கு மரண அடியாக அமையவில்லை. பிரித்தானிய எதிர்ப்பு அமைப்புகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்தது. தென்னிந்தியாவின் வட பகுதியில் திப்பு சுல்த்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர மரணம் எய்திய செய்தியும், கட்டபொம்மனுடைய வீர மரணமும் ஒருங்கிணைந்த தேசிய உணர்ச்சியைத் தென்னிந்தியா முழுமையும் பரவக் காரணமாக அமைந்தன.

கூட்டமைப்பு


பாஞ்சாலங்குறிச்சியின் அழிவுக்குப்பின்னால் பிரித்தானிய எதிர்ப்புப் போராளிகள் ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனைகளுக்கு அஞ்சி சிவகங்கைச்சீமையின் அடர்ந்தக் காட்டுப் பகுதியான காளையார்கோவில் காடுகளில் தஞ்சமடைந்ததுடன் அங்கு ஏற்கனவே இருந்த புரட்சிக் கூட்டமைப்போடு இணைந்து கொண்டனர். மைசூரின் வீழ்ச்சியை அடுத்து மேற்குப் பகுதியிலிருந்த போராளிகளும் இப்பாதுகாப்பான காளையார் கோவில் காட்டுப் பகுதிக்கே வந்து தஞ்சமடைந்தனர்.



காளையார்கோவில் காட்டுப் பகுதியானது மானாமதுரை, சாக்கோட்டை, சிங்கம்புணரி ஆகிய இடங்கள் வரையில் சுமார் 50 மைல் சுற்றளவுக்குப் பரவியிருந்தது. அடர்ந்த காட்டுப் பகுதி இது. தற்போது பேசப்படும் கெரில்லாப் போர் தந்திரங்களுக்குத் தகுதியான வனப்பகுதி. இதனிடையே கிராமங்களோ, விவசாய நிலங்களோ இல்லை. இங்குள்ள மரங்கள் எல்லாம் வலுவானவை, தரையோடு படர்ந்துள்ள மரங்களும் அதிகம். மருதிருவரின் படைவீரர்களால் காக்கப்பட்டு மாற்றார் அணுகா வண்ணம் அமைந்திட்ட இப்பகுதி மைசூர் திருநெல்வேலி வீழ்ச்சிக்குப் பின்னால் போராளிக் குழுக்களின் நடவடிக்கைக்கு மையமாக அமைந்தது.



பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிரான சக்திகள் ஓர் இயற்கை இயக்கமாக உருமாற்றம் அடையக் காரண கர்த்தா சின்ன மருதுபாண்டியர் ஆவார். மருதுபாண்டியரின் அருகாமை, போராளிக் குழுக்களுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் இயக்க எதிர்ப்பானது உன்னதமான உயிர்த் தியாகங்களுக்கு தயாராக இருந்த வீரர் படையைப் பெற்றிருக்கமுடியாது.



சின்ன மருதுபாண்டியர் ஆங்க்கிலேயரின் பலவீனத்தை நன்கு அறிந்த ராஜ தந்திரியாவார். ஒரு பாளையத்திற்குமேல் இரண்டு பாளையங்கள் சரியானபடி முழுமூச்சாக எதிர்த்தாற்கூட ஆங்கிலேயர் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். இதை உணர்ந்துதான் சின்ன மருது கூட்டமைப்பைக் கூட்டத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேயர் தம் நோக்கம் நிறைவேறப் பாளையங்களை ஒன்று சேரவிடாமல் அவர்களுக்குள் சிண்டு முடிந்தனர்.



வெல்லற்கரிய அவ்வீரர் அடுத்துச் செய்தது, போராளிக் குழுமங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளச் செய்த்தாகும். கிராமங்களின் நாட்டாமைகளுக்கும் பாளையங்களின் தலைவர்களுக்கும் தூதுவர்களை அனுப்பி புரட்சி இயக்கச் செய்தியைக் கொண்டு செல்லவைத்தார். அக்கூட்டமைப்புக்கள் மிகத்திறமையான தலைவர்களின் கீழ் திரைமறைவில் இரகசியமாக இயங்கத்தொடங்கின.

தென்னகத்தின் விடுதலைப் போராளிகளின் கழகங்கள் அல்லது கூட்டமைப்புக்கள் எவ்வாறு ஒரு கட்டுக்கோப்புக்குள், ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறந்த தலைமையின் கீழ் இயங்கின என்பதைக் காட்டும்.


தஞ்சைப்பகுதி:- ஞானமுத்து

இராமநாதபுரம் பகுதி :- மயிலப்பன், சிங்கம் செட்டி,முத்துகருப்பர்

மதுரை மற்றும் சிவகங்கைப் பகுதி :- மருதிருவர்

திண்டுக்கல் மற்றும் திருச்சிப் பகுதி :- விருப்பாட்சி கோபால நாயக்கர்

கோவை மற்றும் சேலம் பகுதி :- கானிஜா கான்

வட கேரளம் ( மலபார் ):- கேரள வர்மன் ( பழசி ராஜா )

மேற்கு மைசூர் :- கிருஷ்ணப்ப நாயக்கர்

வட கன்னடம் மற்றும் அதன் வடபாலுள்ள பகுதிகள் :- தூண்டாஜி வாக்

இவற்றில் இராமநாதப் போராளிகள், தஞ்சைப் போராளிகள், சிவகிரிப் பாளையக்காரரின் மைந்தன் மாப்பிள்ளை வன்னியன் தலைமையிலான மேற்கு நெல்லைப் போராளிகளின் கூட்டுக் குழுக்கள் சின்ன மருதுவின் தலைமையை ஏற்றன. கிழக்கு நெல்லைப் போராளிகளின் கழகத் தலைவரான கட்டபொம்மனுக்கு உந்து சக்தியாக விளங்கியவரே சின்ன மருதுதான்.

உசாத்துணை

1) South Indian Rebellion by Dr.K.Rajayyan (1971), பக்கங்கள்: 66, 67, 70, 79, 82, 83, 86, 89, 94, 138, 141, 266, 269, 271

2) A History of Freedom Struggle in India by Dr.K.Rajayyan, பக். 45

கருத்துகள் இல்லை: