இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழகத்தில் இருந்து முதலில் குரல் கொடுத்தது பாளையக்காரர்கள் என்றால் அது மிகையல்ல. வீரம் நிறைந்த மண்ணில் பிறந்த பாளையக்காரர்களின் இரத்தத்தில் வீரம் என்ற எதிர்ப்பு சக்தி 'வெள்ளை அணு' சற்று அதிகமாகவே இருந்தது எனலாம். அடக்குமுறையைப் பயன்படுத்தி தங்களிடம் திறை (கப்பம்) வசூலிக்க நினைத்த ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலில் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதுவே சுதந்திரப் போராட்டத்துக்கான முதல் வித்தாக அமைந்தது.
கர்நாடக உடன்படிக்கை மூலம் பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற ஆங்கிலேயர்கள் வரி வசூலிக்க ஆட்சியாளர்களை நியமித்தனர். ஆனால் பாளையக்காரர்கள் ஆங்கிலேயருக்கு அடிபணிந்து பணிபுரிய விரும்பவில்லை. ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்கள் வசம் இருந்த பல்வேறு இடங்களை ஆக்கிரமித்தனர். இதனால் ஆங்கிலேயர்களை தமிழகத்திலிருந்து விரட்டுவதற்கு தக்க தருணத்தை எதிர்பார்த்து பாளையக்காரர்கள் காத்துக் கொண்டிருந்தனர். நாம் இக்கட்டுரையில் புகழ்வாய்ந்த பாளையக்காரர்களான புலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செய்த புரட்சியை நினைவு கூர்வோம்.
புலித்தேவர்: வீரமும், தீரமும் நிறைந்த புலித்தேவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் மிரண்டனர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை தமிழகத்தில் இருந்து முதலில் எதிர்த்தவர் என்ற சிறப்பு பெற்றவர் புலித்தேவர். இவர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நெற்கட்டுச் செவ்வல் என்ற பாளையத்தில் ஆதிக்கம் செய்து வந்தார். இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க் கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
இவர் ஆங்கிலேயருக்கும், ஆற்காடு நவாப்புக்கும் கட்டுப்பாட்டு கப்பம் கட்ட மறுத்ததோடு அவர்களை கடுமையாக எதிர்க்கவும் செய்தார். இதனால் ஆங்கிலேயப் படைகளும், நவாப்பின் படைகளும் புலித்தேவரை முற்றுகையிட்டு தாக்கினர். ஆனால் புலித்தேவர் இதனைக் கண்டு அஞ்சாமல் அவர்களை எதிர்த்து போரிட்டார். வீரம் நிறைந்த புலித்தேவர் இரண்டு படைகளையும் திருநெல்வேலியில் இருந்து ஓட, ஓட விரட்டி அடித்தார்.
1755ஆம் ஆண்டு கர்னல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை ஆங்கிலேயர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு ஆங்கிலேயர்களை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டுச் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதேபோல் திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1760ஆம் ஆண்டு யூசுப்கான் நெற்கட்டுச் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பெளட்சன் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். உயர் அதிகாரத்திற்கு எதிராக போராடிய வீரனுக்கு உதாரணமாக புலித்தேவரின் வாழ்க்கையும், போராட்டமும் சிறப்புற அமைந்துள்ளது.- ச. முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக