08 ஜூலை, 2011

எழுதப்படாத சரித்திரம்





இந்திய வரலாற்றாசிரியர் பலரும், இந்தியச் சுதந்திர யுத்தம் 1857 ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றே இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சாவர்க்கர் எழுதிய ‘1857 இந்திய சுதந்திர யுத்தம்’ என்கிற நூலையே ஆதாரமாகக் கொண்டு இந்தத் தவறான கருத்தைச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அந்த 1857க்கு முன்பே, நூறு ஆண்டுகளுக்கு முன்பே புலித்தேவர் ஆங்கிலேயருக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார் என்பதும், சுதந்திர யுத்தத்தின் முதல் பலியே அவர்தான் என்பதும், இன்றும் வடநாட்டு வரலாறு எழுதுபவர்கள் ஏற்காத உண்மையாக இருக்கிறது. புலித்தேவரைப் பின்பற்றி வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கு மேடை ஏறுகிறார். அதற்கு அடுத்தபடியாகத் தங்கள் உயிர்த் தியாகத்தைச் செய்தவர்கள் மருதுபாண்டியர்கள். பெரிய மருது, சின்ன மருது மட்டுமல்லாமல், அவர்கள் பரம்பரையையே கொன்று தீர்த்தார்கள் வெள்ளையர்கள். வீரமும் தியாகமும் செறிந்த அந்த வரலாற்றிலிருந்து ஒரு மாபெரும் பகுதியை அறிந்துகொள்வோம்.

ஆற்காடு நவாப்புகள், வெள்ளையரிடம் பட்ட கடனுக்காகவும், பணத்தேவைக்காகவும், பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை வெள்ளையருக்குத் தாரைவார்க்கிறார்கள். இந்தியாவைக் கொத்தடிமை செய்து கொள்ளும் உரிமையை இதன் மூலம் நவாபு, ஆங்கில வியாபாரிகளுக்குக் கொடுத்தார். வெள்ளையர், மனம்போன போக்கில் வரித் தொகையை நிர்ணயித்ததும் அல்லாமல், அதை வசூலிக்கும் முறையில் பாளையக்காரர்களின் மானத்தையும் மரியாதையையும் சவாலுக்கு அழைத்தனர். பல பாளையங்கள், ஆங்கிலேயருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன. வெள்ளையர்களை நேருக்கு நேராகப் போர்க்களங்களில் சந்தித்துக் கணக்கைத் தீர்த்துக்கொள்ளும் நேரடி நடவடிக்கைகளையே பெரும்பாலான பாளையக்காரர்கள் விரும்பினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் சின்ன மருது, ஒரு மிகப்பெரும் அரசியல் யுக்தியை வகுத்தார். ஆங்கிலேயரை எதிர்த்த பாளையங்களின் எதிர்ப்புணர்வை ஓர் எதிர்ப்பணியாக மாற்றும் பெருமுயற்சியில் ஈடுபட்டார். 1790களில் அவர் இதைச் செய்தார். அவர் மூன்று திட்டங்களை வகுத்தார்.

1.ஆங்கிலேயருக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைப்பது. 2. தமிழகக் காடுகள், மலைப்பகுதிகள் பற்றி ஆங்கிலேயர்கள் அறியாதவர்கள். ஆகையால், காடு மலைகளைப் போருக்கான இடமாக மாற்றி, மறைந்திருந்து, ‘கெரில்லா’ பாணி யுத்தம் செய்வது. 3. ஆங்கிலேயர் மையம் கொள்ளும் போர்க்களங்களில் பாளையக்காரர்கள் தம் படைகளை போர் செய்யும் இடங்களுக்கு அனுப்பி உதவிக் கொள்ளுதல். பெரிய மருதுவும், சின்ன மருதுக்கு ஆதரவாக இருந்தார்.

இதன் முதல் செயல்பாடாக எல்லாப் பாளையங்களுக்கும், சிற்றூர்த் தலைவர்களுக்கும் செய்திகள் அனுப்பி, அவர்களிடம் இந்தச் சிந்தனை பற்றிய கருத்தொற்றுமை ஏற்படுத்த முயன்றார். இதன் பயனாக, இராமநாதபுரம் சீமையின் தலைசிறந்த கிளர்ச்சிக்காரர் என்று ஆங்கிலேயரால் வர்ணிக்கப்பட்ட மயிலப்பன் மற்றும் சிங்கம் செட்டி, முத்துக்கருப்பத் தேவர் ஆகியோர் கூட்டிணைவுக்கு உடன்பட்டனர். தஞ்சாவூரின் ஞானமுத்து சோலை, மருதிருவரின் இந்த முயற்சியை ஏற்றார். சிவகிரிப் பாளையக்காரர் மாப்பிள்ளை வன்னியன், உட்பட பலரும் இணைந்தார்கள். ஒருபகுதி கூட்டிணைவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், திண்டுக்கல் பகுதிக்கு கோபால நாயக்கர், கன்னட நாட்டின் துக்காஜி, மலபாரில் கேரளவர்மன், கோவையில் ஜானிஜகானும், கூட்டிணை என்று வரலாற்றில் பெயர் பெற்றது.

தென்னிந்திய அளவில் இது முதலாவது கூட்டணி என்றாலும் செயல்படுத்தப்பட சாத்தியம் இல்லாமல் போய்விட்டது என்பது அதன் அவலம். தொடர்பு கொண்டு விஷயம் பரிமாறிக் கொள்ளுதல், படைப்பிரிவினை அனுப்புதல் போன்றவற்றில் இருந்த இடர்பாடு அவர்களை யோசிக்க வைத்தது. 1799ம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு அமரரானார். இதன் எதிரொலியாக மலபார் கூட்டிணைவு, பின்வாங்கி, கேரளவர்மன் உதவித் தொகை பெற்றுக்கொண்டு ஒதுங்கிக்கொண்டார். திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.

ஆனாலும், மனம் தளரவில்லை மருதுபாண்டியர். ஆங்கிலேய எதிர்ப்புணர்வைத் தட்டி எழுப்ப, ஓர் அறிக்கையைப் பாளையக்காரர் அறியவும், மக்கள் உணர்ந்துகொள்ளவும் வெளியிட்டார் சின்ன மருது. 18&ம் நூற்றாண்டில் இந்திய அரசியல் வானில், இதுபோன்ற ஒரு விளைவு நிகழ்ந்ததே இல்லை என்கிறார் வரலாற்றறிஞர் ராசையா. அந்த அறிக்கையை நாமும் வாசிப்போம். இந்த அறிக்கை வெளியிடப்பட்டது 1801&ம் ஆண்டு ஜூன் 16&ம் நாள் என்பதை மனதில் கொண்டு இதை வாசிக்க வேண்டும்.

‘ஜம்புத் த்வீப பிரகடனம்’

இதை யார் பார்த்தாலும் கவனமுடன் படிக்கவும்.

ஜம்பு(நாவலந்) தீவிலும் ஜம்பு தீபகற்பத்திலும் வாழ்கிற சகல சாதியினருக்கும் நாடுகளுக்கும் பிராமணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் முசல்மான்களுக்கும் இந்த அறிவிப்புத் தரப்படுகிறது.

மேன்மை தங்கிய நவாப் முகமதலி முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடம் கொடுத்து விதவை போலாகிவிட்டார். ஐரோப்பியர்கள் அவர்களது நம்பிக்கைகளுக்கு மாறாக அவற்றைப் புறக்கணித்து, அந்த நாட்டை ஏமாற்றித் தமதாக்கிக் கொண்டதுடன், மக்களை நாய்களாகக் கருதி அதிகாரம் செலுத்துகின்றனர். உங்களிடையே ஒற்றுமை இல்லை. நட்பு இல்லை. ஐரோப்பியரின் போலி வேடத்தை அறியாமல் முன்யோசனை இன்றி உங்கள் அரசை அவர்களின் காலடியில் வைத்தீர்கள். இந்த இழி பிறவிகளால், ஆளப்படும் இந்த நாடுகளின் மக்கள் ஏழைகளானார்கள். அவர்கள் உணவு, வெள்ளம் (நீர் ஆதாராம்)தான் என்றாயிற்று. அவர்கள் இல்லாது இன்னல் உறுவது வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவு இல்லாதவர்கள் ஆனார்கள். இப்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதிலும் இதைப் போக்கச் சாவது எவ்வளவோ மேலானது என்பது உறுதி...

அந்த (ஐரோப்பியரின்) இழிபிறவிகளின் பெயர்கூட இல்லாதவாறு ஒழிக்க வேண்டி, அங்கங்கு பாளையங்களிலும், ஊர்களிலும் உள்ள ஒவ்வொருவரும் உங்களுக்குள் ஒன்றுபட்டு ஆயுதமேந்திப் புறப்படுமாறு வேண்டப்படுகிறது. அப்போதுதான் ஏழைகளும் இல்லாதோனும் விமோசனம் பெறுவார்கள். எச்சில் வாழ்க்கையை விரும்பும் நாய்களைப்போல, ஈனப் பிறவிகளின் வார்த்தைகளுக்கு அடிபணிகிற எவரேனும் இருப்பின் அவர்கள் கருவறுக்கப்பட வேண்டும்...

எனவே, வயல்களிலோ அல்லது வேறு துறைகளிலோ, அரசின் (சிவில்) பொது அலுவலகங்களிலோ இராணுவத்திலோ எங்கு வேலை பார்ப்பவராயினும்... இந்த இழிபிறவிகளின் இராணுவ சேவையில் உள்ள சுமேதார்கள், ஜமேதார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் எவராக இருப்பினும் ஆயுதம் ஏந்தத் தெரிந்த எவரும் தங்கள் துணிச்சலைக் காட்ட இதோ உங்களுக்கு முதல் வாய்ப்பு வந்துவிட்டது...

எங்கெல்லாம் அந்த இழி பிறவிகளைப் பார்க்க நேர்கிறதோ அங்கேயே அவர்களை அழித் தொழியுங்கள். வேருடன் களையப்படும் வரை அவ்வாறு செயல்படுங்கள். இதனைக் கருத்தூன்றுங்கள். நிதானமாக யோசியுங்கள். இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளாதவன் மீசை, அர்த்தமற்ற ரோமத்திற்குச் சமம். அவன் உண்ணும் உணவு சத்தொழித்து களையற்றுப்-போகட்டும். அவனது மனைவியும் குழந்தைகளும் இன்னொருத்தனுக்காகட்டும். அவை அந்த இழிபிறவிகளுக்குப் பிறந்தவைகளாகக் கருதப்படட்டும். எனவே, ஐரோப்பியரால் இன்னும் இரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர்...

இங்ஙனம்

பேரரசர்களின் ஊழியன்

ஐரோப்பிய இழிபிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத மருதுபாண்டியர்கள்.

பெறுவோர்:

சீரங்கத்தில் வாழும் அர்ச்சகர்கள், ஆன்றோர், அனைத்துப் பொதுமக்கள்.

இந்த மாபெரும் ஆவணத்தை வெளியிட்ட சின்னமருதும், பெரிய மருதும் வஞ்சகத்தாலும், காட்டிக் கொடுக்கப்பட்டும் கைது செய்யப்படுகின்றனர். 1801 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் நாள் வெள்ளை மருதென்னும் மூத்த மருதும், சின்ன மருதும் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதே திருப்பத்தூரில் பெரிய மருதின் மகன் கருத்தம்பி, முல்லிக்குட்டி தம்பி, சின்ன மருதின் மகன்கள் செவத்த தம்பி, முத்துசாமி உட்பட பலரும் தூக்கு மரம் ஏற்கிறார்கள்.

சின்ன மருதின் கடைசிமகன் துரைசாமி மதுரைப் பக்கத்து ஒரு கிராமத்தில் கைது செய்யப்படுகிறான். அப்போது அவன் வயது 15.

இளவரசன் துரைசாமி, 73 போர்க்கைதிகளோடு சேர்ந்து, கை கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு, மிருகத்தனமாக நடத்தப்பட்டு, பினாங்கில் உள்ள பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தீவுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்படுகிறார். வழியில் பலபேர் குடிக்கத் தண்ணீர் இன்றிச் செத்துப் போகிறார்கள். அங்கே சுமார் இருபது ஆண்டுகள் அடிமையாக, தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக வாழ்கிறார் துரைசாமி.

அவனைக் கைதுசெய்து கப்பலில் ஏற்றிய அதிகாரி வெல்ஷ், பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வில் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தீவுக்கு ஒரு விடுமுறையைக் கழிக்கச் செல்கிறான். ஒரு நாள் காலை. அவன் முன்னால் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க, முகத்தில் சுருக்கமும், உடல் வளைந்தும் நோயால் இளைத்தும் காணப்பட்ட ஒருவர் அவன் முன் வந்து நிற்கிறார்.

‘யார் நீ?’ என்கிறான் வெல்ஷ்.

அந்த முதியவர் பதில் சொல்ல முடியாமல், தலைகுனிந்து கண்ணீர் அரும்ப நிற்கிறார். பிறகு ‘துரைசாமி’ என்கிறார். திகைத்துப் போகிறான் வெல்ஷ். 33 வயதில் 60 வயது முதுமை துரைசாமிக்கு. அவனுக்கு முன் நின்ற துரைசாமியின் தந்தை சின்ன மருதின் நண்பன்தான் வெல்ஷ். பலமுறை சின்ன மருதின் அரண்மனைக்குச் சென்று விருந்துண்டவன். சின்ன மருதுடன் வேட்டைக்குச் சென்றவன். சின்ன மருதுவிடம் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டவன். நண்பனின் மகனைப் பார்த்து ‘நீயா?!’ என்கிறான் அந்த அதிகாரி. அவன் மனம் துன்பத்தில் ஆழ்கிறது. 15 வயதுச் சிறுவனாகக் கப்பல் ஏற்றிய அதிகாரி அவன்தான். ‘‘உனக்கு நான் என்ன செய்ய முடியும்?’’

‘‘ஒரு கடிதம். அதை ஊரில் உள்ள என் உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். நான் உயிரோடு இருக்கும் சமாச்சாரத்தை அவர்கள் அறிய வேண்டும்’’

‘‘அது முடியாது. அது என் உத்தியோக வரம்புக்கு அப்பாற்பட்டது. சட்டப்படி அது தவறு’’

வெல்ஷ், துரைசாமிக்கு உதவி செய்யவில்லை. 1821 ம் ஆண்டு வாக்கில் விடுதலை பெற்று துரைசாமி மதுரைக்கு வருகிறார். மதுரையைச் சுற்றிய கிராமங்களில் தன் குடும்பத்தை, உறவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, மனம் உடைந்து சில ஆண்டுகளில் இறந்தும் போகிறார். வெல்ஷ், மிக வருத்தமுடன் துரைசாமியின் சந்திப்பைத் தன் டைரிக் குறிப்பில் எழுதி இருக்கிறார். மாவீரன் மருதுபாண்டியனின் கடைசி மகனின் கதை இது.

சின்ன மருதுவின் அறிக்கை, பல முனைகளில் இன்றைக்கும் நமக்கு உதவக் கூடியவை. அந்நிய ஆதிக்கம், நவீன உருவில் வந்து ஊடுருவிக் கொண்டிருக்கும் காலம் இது. மறுகாலனியாதிக்கத்துக்கும் எதிராக தமிழர் சிந்தனைகளைக் கட்டமைக்க மருதின் அறிக்கை உதவும்.

உதவிய நூல்கள்: மீ.மனோகரனின் ‘மருதுபாண்டிய மன்னர்கள்’ முனைவர் கு.மங்கையர்க்கரசி எழுதிய ‘மருதுபாண்டியர் வரலாறும், வழிமுறையும்’.







பிரபஞ்சன்

கருத்துகள் இல்லை: